எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 03

தன்முன் நீட்டபட்ட காபி டம்ளரை எடுத்துக் கொண்ட, சுபலட்சுமியின் பார்வை முழுவதும் வருணாக்ஷியையே கூறுப் போட்டது.

சிவப்பு நிற சல்வாரில் ஒற்றைக் கல் வைத்த பெரிய செயினும், அதற்கு தோதாக போட்டிருந்த தோடும் என அம்சமாக நின்றிருந்தாள்.

அவளையும் அவள் அணிந்திருந்த உடையையும், நகையையும் கவனித்த சுபா தன்னைக் குனிந்துப் பார்க்க,
பட்டுச்சேலை சரசரக்க, கழுத்தை ஒட்டிய ஆரம், அதன் கீழே அடுக்கடுக்காக சிறியதில் இருந்து பெரியது வரை‌ என பதக்கம் வைத்த நகைகள், காதில் பெரிய ஜிமிக்கி அதற்கேற்ற மாட்டல் என ஜம்மென்று இருந்தவளிற்கு, தன்னை மீறி கர்வம் வெளிப்பட,
சட்டென நிமிர்ந்து ஒரு மகாராணி தோரணையில் அமர்ந்துக் கொண்டவளின் முகத்தில், சிறு அலட்சியம் குடியேறி இருந்தது. வருணாக்ஷியின் தோற்றத்தை பார்த்து.

“என்ன மதினி இது? பொண்ணு பாக்க வந்துருக்கிறோம். ஆனா அந்த பொண்ணு பாத்தா அப்புடி தெரியலையே? தழையதழைய புடவைக்கட்டி நிக்காம இது என்ன? தலையில இத்துணூண்டுப் பூவாக் கூடக் காணோம்” என ஒருவர் அங்கலாய்க்க,

கார்முகிலனின் வீட்டார் அனைவருக்கும் அந்த எண்ணமே!

ஏற்கனவே இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்த்திராத வருவின் குடும்பம் பதட்டத்தில் இருக்க, இதில் உறவுக்கார பெண்மணியின் பேச்சு மல்லிகாவிற்கு மேலும் பதட்டத்தைக் கொடுத்தது.

“அதில்லைங்க, சும்மா பொண்ணு பாக்குறது தானே, மாப்பிள்ளை குடும்பம் மட்டும் தான் வருவாங்கன்னு நெனைச்சோம். இவ்வளவு உறவுகளை எதிர்பாக்கலைங்க.” என‌ மல்லிகா வார்த்தைகளை பார்த்து பார்த்துக் கோர்த்துப் பேசிட,

வந்திருந்த மக்கள் தங்களை உறவுகள் என்பதில் அகமகிழ்ந்துப் போயின.

பெண்வீட்டாரின் முகம் இன்னும் பதட்டத்தில் இருந்து மீளாததைக் கண்டுக் கொண்ட மகாலிங்கம்,

“ஒன்னும் சங்கடப்படாதீங்க குருசாமி, வீட்டுக்கே கடைசிப் பையன் விசேசம் நெருங்குன அக்காமார்களை விட்டுட்டு எதுவும் செய்ய முடியாதில்லையா? நாளைப்பின்ன இதுவே உறவுக்குள்ள விரிசலுக்கு வழி விட்டுடும். நாங்களாச்சும் உங்களுக்கு முன்கூட்டியே தகவலைக் கொடுத்திருக்கனும். இருந்த பரபரப்புல மறந்துட்டோம், மன்னிச்சுடுங்க” என்க,

“அய்யோ, மன்னிப்பு எல்லாம் எதுக்குங்க, சட்டென எதிர்பாக்காததால ஒரு டென்ஷன் அவ்ளோ தான், வேற‌ ஒன்னும் இல்லை, விடுங்க மகாலிங்கம்” என‌ குருசாமி பேசிட,

மகாலிங்கம் தனது குடும்பத்தினரை அறிமுகம் படுத்தலானார்.

“இது என் வீட்டம்மா முத்துப்பேச்சி, இது என் பெரிய பொண்ணு மேகலா பொள்ளாச்சில கட்டிக்கொடுத்துருக்கோம். அவரு நம்ம வீட்டு மாப்பிள்ளை அசோக் கவர்மெண்ட் உத்தியோககாரரு, இது பாரதி என் மக வயித்துப் பேத்தி.

பரணி என் இரண்டாவது பையன். சுப்பலட்சுமி வீட்டு மூத்த மருகம, சாத்விகா என் மகன் வயித்துப் பேத்தி, இது சின்னம்மா, அவுங்க பொண்ணு மாப்பிள்ளை, அங்க இருக்குறவரு பெரிய மச்சான்” என அனைவரையும் அறிமுகப்படுத்தியவர், கடைசியாக கார்முகிலனிடம் வந்தார்.

“இது தான் கடைசிப் பையன் கார்முகில், காலேஜ்ல வாத்தியாரா‌ இருக்கான்.‌இவுனுக்கு தான் உங்க வீட்டுப் பொண்ணைப் பாக்க வந்திருக்கோம்” என் அவர் கூற,

அவரின்‌ அறிமுகப்படலத்தில்
‘ஆத்தி, மினி மாயாண்டி குடும்பத்தாரா இருக்கும் போலயே!’ என நினைத்து அரண்டு போயிருந்த வருணாக்ஷி கார்முகிலனின் பெயர் வந்ததும் சட்டென அவனை நிமிர்ந்துப் பார்க்க,

அதுவரை அவளின் முகபாவனைகளை கவனித்துக் கொண்டிருந்த முகிலன், பாவையவளின் விழி அவனை தீண்டியதும், இன்னும் அவளின் மேல் தனது பார்வையை கூர்மைத் தீட்டிட,

அவனின் குத்தீட்டியாய் குத்திய விழிப்பார்வையில் படபடத்து, பட்டென பார்வையை தழைத்துக் கொண்டவளின் விரல்கள், வியர்வையில் பிசுபிசுத்துப் போயின.

‘ஏன்? இப்புடி பாக்குறாரு?’ என தனக்குள்ளே கேட்டுக் கொண்டவளுக்கு படபடப்பு இன்னும் நீங்கியப்பாடில்லை.

மகாலிங்கத்தின் அறிமுகப்படலம் முடிந்ததும், குருசாமி தனது குடும்பத்தினை அறிமுகப்படுத்தலானார்.

“இது என் வீட்டம்மா மல்லிகா, **** ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க, இது என் பெரிய பையன் கிருஷ்ணக்குமார் ஆடிட்டரா இருக்கான்” என அவர் கூறிக் கொண்டிருக்க இடையிட்ட மாப்பிள்ளை வீட்டுச் சொந்தம்,

“ஏன் மதினி? பொண்ணு வீட்டுக்காராங்க நம்மளவு வசதிதான்னு சொன்னீங்க, ஆனா பாத்த அப்புடி தெரியலையே! காதுல கழுத்துல பேருக்கு கூட குண்டுமணி தங்கம் இல்லாம கவரிங்க போட்டு விட்டுருக்காங்க.

இதேது நம்ம சுபாவ பாருங்க, நம்மாளுகளா இல்லைன்னாலும், நம்ம பக்க பழக்க வழக்கம்‌ எல்லாம் தெரிஞ்சு மகாலட்சுமியாட்டம் நின்னு எப்புடி கெளரவபடுத்தியிருக்கா பாருங்க சபையில” என்க,

அதனை கேட்ட சுபாவின் செருக்கு சற்றே மேலேறிட, அலட்டலாய் வருணாக்ஷியின் மீது பார்வையை செலுத்தினாள்.

“ஏனுங்க மாப்பிள்ளை வீட்டுக்காரவுகளே” என்றபடி சமையலறையில் இருந்து வெளிவந்தாள் கெளரி.

வந்தவள் வருணாவின் அருகே நின்று,
“உங்க வீட்டு மகாலட்சுமி போட்டு இருக்குறது தங்கம்னா, எங்க வீட்டு இளவரசி போட்டுருக்கது அம்புட்டும் வைரம்”!! என்றிட,

“அடியாத்தி!!! வைரமா!!” என வந்த உறவுகள் அதிசயிக்க,

“வைரமே தான், வருணாவுக்கு சின்ன வயசுல எப்பவோ தங்கம் போட்டது சேராமா அலர்ஜி வர, அன்னையில இருந்து என்னோட தாய்மாமா அவரோட செல்ல இளவரசிக்கு வைரத்துல தான் வாங்கிப் போடுறாரு தலையில இருந்து கால் வரைக்கும்” என கெளரி கூறிட,

அதுவரை ஒரு மகாராணி தோரணையில் அலட்டலாய் அமர்ந்திருந்த சுபலட்சுமியின் தலைக்கனம் நொடியில் கீழே சரிந்து, அவளின் முகம் சுருங்கிட, அனைவரும் பார்க்கும் முன் சட்டென அதனை மாற்றி முகத்தினில் சிரிப்பை ஒட்ட வைத்தவளுக்கு, மனதினுள் ஒருவித நெருடல் விழுந்து விட்டது.

“போதும் கெளரி, வருவ பேசணும்னு வந்திடுவியே” என சிறு சிரிப்புடன் அவளை அதட்டிய குருசாமி,

“இது கெளரி என் மூத்த அக்காவோட பொண்ணு,” என அவளைப் அறிமுகப்படுத்தினார்.

ஏனோ கெளரியின் பேச்சு சற்று அதிகபடியாகவே பட்டது கார்முகிலனுக்கு.

அவளை தடுக்காது பேச விட்டு வேடிக்கைப் பார்த்த வருணாக்ஷியின் மீதான அவனின் எண்ணம் சற்றே நிலை மாறியது.


ஏற்கனவே அவளின் உடை விசயத்தில் அவள் மீது சற்றே அதிருப்தி எற்பட்டிருந்த நிலையில் இப்போது கெளரியின் பேச்சிற்கு மறுத்துப் பேசாத நின்றவளைக் கண்டு ‘கொஞ்சம் கர்வம் இருக்கும் போலயே’ என‌ மனத்தோடு நினைத்துக் கொண்டவனுக்கு,

இச்சம்பந்தம் தனக்கு ஒத்து வருமா? என்ற யோசனை வந்திருந்தது.

“டேய் என்னடா, வாத்த!இப்புடி வச்சக் கண்ணு வாங்காமா பாக்குறாரு? கவுத்துட்டாருப் போலடா” என இளசுகள் பேசி சிரிக்க,

அதனை கேட்டு விட்டு கார்முகிலனை கண்ட சுபாவிற்கு, முகிலனின் பார்வை மனதிற்கு ஒப்பவில்லை.

இருக் குடும்ப தலைவர்களுக்கும் இச்சம்பந்தம் திருப்தியாக இருந்ததில் நாட்களை‌ கடத்த வேண்டாம் என்ற எண்ணம் இருந்தது.

“சரி, குருசாமி நம்ம அடுத்தக் கட்டம் போறதுக்கு முன்ன பசங்க‌ பேசிக்கட்டுமே அவுங்க பேசிட்டு சொல்லட்டும் நம்ம அடுத்ததை பத்தி யோசிப்போம்”‌ என்க,

வருணாக்ஷியின் முகம் சட்டென‌ ஆர்வத்தையும், படபடப்பையும்‌ சற்றே வெட்கத்தையும் பூசிக் கொண்டது அவனுடனான சந்திப்பை நினைத்து.

வீட்டின் தலைமை பொறுப்பும், தான் எடுத்திடும் முடிவுகளும், இறுதியானது என்பதை மறைமுகமாக அவர்களுக்கு உணர்த்திட வேண்டும் என அகங்காரம் நொடிப் பொழுதில் சுபாவை ஆட்கொண்டிட,

“அத்தை, இன்னும் எதுவும் முடிவாகாம, தனியா பேச விடுறது, சரிப்படலைத்தை!
இப்போதைக்கு பொண்ணு மட்டும்‌தான் பாக்க வந்திருக்கோம்.‌ அவுங்களைப் பத்தி விசாரிக்கணும். நம்ம குடும்பத்துக்கும், உறவுகளுக்கும் ஒத்து வருமான்னு பாக்கணும்னு இன்னும் நிறைய நம்ம யோசிக்க வேண்டியிருக்குத்தை.

பொண்ணை செல்லமா வளர்ந்த மாதிரி தெரியுது. அந்தப் பொண்ணு‌ நம்ம உறவு மொறையை அனுசரித்து போகணும், எல்லா வேலையும் எடுத்துக்கட்டி செய்யனும்ல அத்தை” என அவள் மெதுவாக பேச்சியின் காதில் ஓதிக் கொண்டிருக்க இவர்களின் அருகினில் அமர்ந்திருந்த வில்லங்கம் பிடித்த உறவொன்று,

“ஆமா பேச்சிக்கா, சுபா சொல்லுறதும்‌ சரியாத்தான் இருக்கு. நாளாப்பின்னை உங்க வீட்டுக்கு வர்ற உறவுகளை மருமகளுக தானே தாங்கி பிடிக்கனும். ஆனா இந்தப் பொண்ணை பாத்தா, இந்த பிள்ளைக்கு நாலுப் பேரு வேலை செய்யணும் போலயே” என கொளுத்திப் போட்டு பேச்சினை குழப்பி விட,

சுபாவின் முகத்தில் வெற்றிப் புன்னகை, இதைத் தானே அவள் எதிர்பார்த்தது.‌ அந்த வில்லங்கம் பிடித்த உறவு அருகினில் இருப்பதை உணர்ந்து தானே அவள் இப்பேச்சினை‌ அவருக்கும்‌‌ கேட்கும்படிச் செய்தது.

குழப்பத்தில் இருந்த பேச்சினை மேலும் குழப்பம் பொருட்டு,

“ இன்னும்‌ நம்ம யோசிக்க வேண்டியது நிறைய இருக்குத்தை, அப்புடி இருக்கப்போ இவுங்க ரெண்டும் பேரும் பேச போயி இரண்டுப் பேத்துக்குள்ளயும் பிடிச்சுப் போச்சுன்னு வையிங்க, என்ன செய்யிறது?

ஒரு பேச்சுக்கு சொல்றேன், இந்த இடம் ஒத்து வரலை, இல்லை இதைவிட வேற நல்ல இடம் வந்து அது நம்மளுக்கு ஒத்துப் போச்சுன்னு வையிங்க, அப்போ முகிலனுக்கு மனசுக்கு கஷ்டமா இருக்காதா அத்தை? நம்மளே ஏன் அவுங்க மனசுல ஆசையை வளர்க்கனும் சொல்லுங்க?” என்றிட,

“இப்போ என்ன சுபா செய்யிறது?” தானாக அவளின் வலையில் வந்து விழுந்தார் பேச்சி.

“இப்போதைக்கு இவுங்க பேச வேண்டாம் அத்தை, மாமாகிட்ட பேசுங்க” என்க,

“என்ன முகில்‌ போய் பேசிட்டு வர்றீங்களா?” மகாலிங்கம் அவனிடம் கேட்க இடைப்புகுந்த பேச்சி,

“ஏனுங்க, இப்போதைக்கு இவுங்க தனியா பேச வேண்டாம்ங்க, நம்ம எல்லாம் பாத்துட்டு, எல்லாம் முடிவுப் பண்ண அப்பறம் கூட ஒரு நாள் பேச விடுவோம்ங்க” என்றிட,

அதுவரை மலர்ந்திருந்த வருணாக்ஷியின் முகம் சட்டென வருத்தத்தை தத்தெடுத்திட, முகமே வாடி விட்டது.

அவளின் மீதிருந்த பார்வையினை அகற்றாதிருந்த முகிலனுக்கு அவளின் வாடிய முகம் தவறாது கண்ணில் பட்டு விட, இவனுள் சுருக்கென்று தைத்தது.

இவ்வரன் ஒத்து வருமா? என சற்று முன் யோசித்தவனுக்கு இப்போது அவளின் சிறிய முகவாட்டமே என்னவோ செய்திட சற்றே திடுக்கிட்டுத்தான் போனான்.

‘ஒருவேளை இந்த வரன் ஒத்து வாராவிடில்? அவளின் நிலை!!’

‘ம்ஹும்!!!! அதற்கு மேல் யோசிக்க முடியாது மூச்சடைப்பது போலிருக்க, மெல்ல உதடுகளை பிரித்து மூச்சினை வெளியிட்டு ஆசுவாசப்படுத்தினான்.

முத்துப்பேச்சியின் பேச்சில் அடுத்து என்ன செய்வது என அனைவரும் ஒரு‌நொடி தடுமாறியே நின்றனர். அவர் கூறுவதிலும் நியாயம் இருக்க முயன்று அதனை ஏற்றனர் பெண் வீட்டார்.

“ம்மா என்னம்மா நீ? சும்மா பேசுறதுல என்னாகிடப் போகுது?” மேகலா கேட்டிட,

“இருக்கட்டும் விடு மேகலா, அம்மா சொல்றதும் வாஸ்துவம் தான்” என்ற மகாலிங்கத்திற்கு அடுத்து என்ன பேசுவது என தடுமாறிட,

சட்டென தன்னை சமாளித்துக் கொண்டு,
“அப்போ நாங்க வரோம்ங்க, வீட்டுக்குப் போயிட்டு கலந்துப் பேசிட்டு தாக்கல் சொல்றோம்” என்றபடி அவர் மெல்ல எழுந்துக் கொள்ள,

“ம்ம் சரிங்க” எனறபடி எழுந்து நின்ற‌ குருசாமிக்கு மனதில் சிறு ஏமாற்றம் ஏற்பட்டது.

இவர்களின் பேச்சைக் காதில் வாங்கியபடி முகம் வாட அமர்ந்திருந்த வருணாவின் முகம் அடுத்தடுத்து அவர்களது பேச்சில் முகம் கசங்கி விட்டது.

முதல் முதல் பார்த்த வரன், மாப்பிள்ளையாக வந்தவனை போட்டோவில் கண்டதும் பிடித்துவிட, அவன் மீது ஒரு வித ஈர்ப்புடன் இருந்தவளுக்கு, இந்த சம்பந்தம் எப்படியும் முடிவாகி விடும், என்ற ஆர்வத்தில் இருந்தவளுக்கு, முத்துப்பேச்சியின் பேச்சில் கண்கள் கலங்கி விட, ஒரு துளி கண்ணீர் அவள் இமைகளிலிருந்து கீழிறிங்க, அவசரமாக தலையை குனிந்துக் கொண்டாள்.

அவளின் வருத்தம் தோய்ந்த முகத்தையே தாங்க முடியாதவனுக்கு, அவளது கண்ணீரை கண்டதும் உள்ளம் பிசைய, அதற்கு மேல் முடியாதென பட்டென எழுந்து நின்றவன்,

“நான் பொண்ணுக்கிட்ட கொஞ்சம் பேசணும்!” என்றிட,

அனைவரும் திகைத்துப்

போயி அவனைப் பார்க்க, அவனின் பார்வை முழுவதும் தான் பேசியதும் தன்னை நிமிர்ந்து அதிர்ந்துப் பார்த்த பாவையின் மீதே அழுத்தமாக படிந்தது.
 

Mathykarthy

Well-known member
சுபா தான் வில்லி போல...😤😤😤

வரு முகம் வாடுனா வாத்திக்கு தாங்க முடியல... மாட்டிகிட்டான்... 😜😜🤗🤗
 
Top