எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை‌ 09

வான்மழை‌ 09

“மண்டபத்துக்கு போக நல்ல நேரம் பாத்துட்டீங்களா அத்தை?” என்றவாறு மல்லிகா வர,

“ம்ம் பாத்துட்டேன் மல்லி, பத்தரை மணிக்கு நல்ல நேரம் இருக்கு. அப்போ கிளம்புனா‌ சரியா இருக்கும்.”

“சரி‌த்தை அப்போ வருணாவ மட்டும் கூட்டிட்டு அந்த நேரத்துக்கு நம்ம கிளம்பிடலாம். மத்தவங்களை இப்பவே அனுப்பி விட்டுடலாமா?”

“சரி மல்லி அப்படியே பண்ணிடு, குரு எங்க ஆளைக் காணோம்?”

“வெளிய சமையல்காரர் கிட்ட பேசிட்டு இருக்குறாரு அத்தை”.

“செத்த நேரம் அவனை வந்துட்டு போகச் சொல்லும்மா” என்க,

சரி என்றவர் வெளியே நின்றிருந்த குருசாமியிடம் சென்றவர்,
“ஏங்க!” என அழைக்க,

இவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு பேசிக் கொண்டிருந்தவரிடம்,
“சரி நீங்க போயி சமையல் வேலைய ஆரம்பிங்க, நேரமாகிடாம பாத்து” என அவரை வழியனுப்பி விட்டு மல்லிகாவிடம் வந்தவர்,

“என்ன மல்லி?”

“அத்தை உங்களை வரச் சொன்னாங்க. அப்பறம் நம்ம சொந்தக்காரங்களை‌ எல்லாம் இப்பவே வேன்ல இரண்டு டிரிப் அடிக்க சொல்லுங்க, பத்தரைக்கு நல்ல நேராமாம், அப்போ நாம வருணாவை கூட்டிட்டு கிளம்பலாம்.”

“அப்புடியா? அப்போ சரி நான் அந்த டிரைவர் கிட்ட சொல்லிடுவேன். நீ போய்‌ எல்லார்கிட்டயும் சொல்லு வேன் கிளம்ப போகுதுன்னு, நான் அந்த டிரைவர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு, அம்மாவ பாத்துட்டு வரேன்” என்றுவிட்டு, நேராக டிரைவரிடம் சென்று இரண்டு‌ டிரிப்புகள் அடிக்குமாறு கூறியவர், நேரே முனிஸ்வரியை பார்க்க சென்றுவிட்டார்.

“அம்மா, கூப்பிட்டீங்களா?” என்றவாறு அவர் அறையினுள்‌ நுழைய,

“ஆமா, குரு இங்க வா இதை எல்லாம் பாரு” என்றவர் கட்டிலில் பரப்பி வைத்திருந்த அவரது நகைகளைக் காட்டினர்.

அனைத்தும் அவரின் பழங்காலத்து நகைகள். அவர் திருமணம் செய்து வரும் போது அவரது புகுந்த வீட்டாள்களால் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது.

“என்னம்மா, இப்போ எதுக்கு இதை எடுத்து வச்சிருக்கீங்க?”

“எல்லாம் வருணாவுக்கு வரிசை தட்டுல வைக்கத்தான்.”

“ஏம்மா, அதான் வருவுக்கு வாங்கி வச்சதே இருக்கேம்மா, இன்னும் மல்லியோட அண்ணன் வேற தாய்மாமான் சீரு கொண்டு வருவாரு, இதுல உங்களோட நகை வேற எதுக்கும்மா?”

“சபையில நம்ம வரிசை தட்டை வச்சுத்தான், நம்மளை எடைப்போடுவாங்க, நம்ம கெளரவமே இதுல தான் இருக்கு. அதுவும் இல்லாம மாப்பிள்ளை வீட்டு‌ல அவுங்க பொண்ணுக்கு கிட்டதட்ட நிச்சயத்துக்கு அம்பது வரிசை தட்டு‌ வச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். நம்ம‌ அதை விட ரெண்டு தட்டாவது அதிகம் வைக்க வேண்டாமா?

அப்போ தான் நம்ம பிள்ளைக்கு அந்த வீட்டுல மதிப்பு இருக்கும். அதுவும் போக இது வருவுக்கான பங்குதானே, அதைக் கொடுத்தா என்ன?”

“வேண்டாமே அம்மா, ரொம்ப பகுமானம் காட்டுற மாதிரி நெனைச்சிடப் போறாங்க” என்றவர் தயங்க,

“இதுல பகுமானம் என்ன இருக்கு குரு? நம்மக்கிட்ட இருக்கு நம்ம செய்யுறோம். இது நம்ம சனத்துல வழக்கம் தானே”

“இருந்தாலும் அளவா பண்ணுவோம் அம்மா”

“நீயி என்னத்துக்கு இப்போ, இப்புடி பேசிட்டுருக்கன்னு தெரியலை. சரிப் போ, உன் மனசு திருப்திக்காக இதுல பாதி மட்டும் நான் வரிசை தட்டுல வைக்கிறேன். இதுக்கு மேல எதுவும் பண்ண சொல்லாத” என்றிட,

‘தாய் இவ்வளவு இரங்கி வந்ததே பெரியது’ என‌ நினைத்தவர் அமைதியாக சென்று விட்டார்.

*********

இங்கே மாப்பிள்ளை வீட்டில் அன்று பெண் பார்க்க சென்றது போல் இன்றும் அதனை விட இரண்டு மடங்கு உறவுகள் கூடியிருந்தனர்.

அன்று ஒற்றை வேன், இன்று மூன்றாக மாறியிருந்தது. நிச்சயம் பெண் வீட்டார் ஏற்பாடு என்பதால், அங்கே ஒட்டன்சத்திரத்திலயே ஒரு மண்டபத்தினை பிடித்திருந்தனர்.
இந்த விசயம் எல்லாம் அவர்கள் ஆட்களிற்கு வழக்கம் என்பதால், யாரும் அதனை‌ பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.

ஆனால் சுபாவிற்கு தான் இது அத்தனையும் எரிச்சலை கொடுத்தது. எப்படியும் திருமணத்தை நிறுத்த முடியாதென தெளிவாக தெரிந்துவிட்ட பின், முடிந்த அளவு திருமணத்தையாவது சிம்பிளாக செய்ய வைத்து திருப்தி பட்டுக் கொள்ளலாம் என‌ அவள் நினைத்திருக்க,

அவள்‌ எண்ணத்திற்கு மாறாக தான் அனைத்தும்‌ அங்கே நடந்துக் கொண்டிருந்தது.‌ அவளது ஆதங்கத்தினை எதார்த்தமாக கணவனிடம் கூட கேட்டுப் பார்த்து விட்டாள்,

“ஏங்க, நிச்சயத்துக்கு இவ்வளவு ஆடம்பரமா செய்யணுமா என்ன? பொண்ணு வீட்டாளுங்க, கொஞ்சம் பெருமை பேசுற‌ மாதிரி இல்லை” என்றிருக்க,

“இல்லை!” என்ற பதில் வந்தது உடனடியாக அவனிடம் இருந்து.

“என்ன இல்லை?”

“பொண்ணு வீட்டாளுங்க பெருமை பேசலைன்னு சொல்றேன். இது எங்க ஆளுங்கள்ள வழக்கமா செய்யுறது தான். ஏன் மேகலாவுக்கே நாங்க மண்டபத்துல தான் வச்சு நிச்சயம் பண்ணோம்” என்றவன்‌ எதார்த்தமாக சொல்ல,

அவனின் “எங்க ஆளுங்க” என்ற வார்த்தை பலமாக அவளைத் தாக்கியது.

‘நான் அவுங்க ஆளுங்க இல்லைன்னு குத்திக் காட்டுறாரோ’ என நினைத்தவள் அதனை வெளியில் சொல்லாது,

“உங்களுக்கு வருத்தமா இல்லையாங்க? உங்க அக்காவுக்கும், தம்பிக்கும் எல்லாம் க்ராண்டா நடக்குது. நமக்கு அப்புடி நடக்கலையேன்னு” என்க,

“எனக்கு அப்புடி எந்த வருத்தமும் இல்லை”

“இருந்தாலும், அத்தை, மாமாவும் உங்களை கொஞ்சம் யோசிச்சு, முகில் தம்பியோட நிச்சயத்தை வீட்டோட செஞ்சிருக்கலாம்” என,

“ஏன்? உனக்கு இப்புடி நடக்கலையேன்னு வருத்தமா இருக்கா?” என்றவன் கேட்க,

“என்னங்க, இப்புடி கேட்குறீங்க? நான் இந்த மாதிரி ஆடம்பரத்துக்கு எல்லாம் ஆசைப்படுறவளா என்ன? நீங்க மட்டும் போதும்னுதானேங்க நான் வந்தது”

“அப்போ? எனக்கு மட்டும் எப்புடி வருத்தமா இருக்கும்? எங்க வீட்டாளுங்களை பத்தி யோசிக்காம நானும் தானே நீ மட்டும் போதும்னு வந்தேன். அப்பறம்‌ எப்புடி எனக்கு வருத்தமா இருக்கும். அதுவும் என் தம்பி விசேசத்துல” என்று விட்டிருக்க, அதற்கு மேல் அவனிடம் வார்த்தையாடவில்லை அவள்.

பெண், மண்டபத்திற்கு செல்லும் முன் மாப்பிள்ளை சென்றிருக்க வேண்டும் என்ற ஐதீகம் அங்கே நிலவுவதால், முகிலனின் குடும்பம் காரில் ஏற, உறவுகள் வேனில் ஏறியிருக்க‌ ஒட்டன்சத்திரத்தை நோக்கி பயணப்பட்டனர்.

**********
வருணாவின் வீட்டில் அனைத்து உறவுகளும் மண்டபத்திற்கு சென்றிருந்தனர்.

“வருணா, கெளரி, வாங்க கிளம்பலாம், நல்ல நேரம் ஆரம்பமாகிடுச்சு” என்றவாறு கெளரியின் அம்மா மற்றும் வருணாவின் அத்தையாகிய பார்வதி அவர்களை அழைக்க,

வெளியே வந்தனர் இருவரும்.

இவர்களுக்கு முன் அனைவரும் காரில் ஏறியுருக்க, வருணாவிற்கென தனிக் காரில் காரில் கிருஷ்ணா காத்திருக்க, அதில் இருவரும் ஏறிக் கொள்ள கார் மண்டபத்தினை நோக்கி சென்றது.

“கிருஷ்ணா!” டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவனை பின்னிருந்து வருணா சுரண்ட,

“என்ன?”

“அவுங்க மண்டபத்துக்கு வந்துட்டாங்களா?” முகிலனை அவள் கேட்க,

“எவுங்க!” சிரிப்புடன் அவன் கேட்க,

“ப்ச்..உன் மாமா தான்டா!”

“ஏன்? நீ தான் போன் வச்சிருக்கியே, நீயேக் கேட்டு தெரிஞ்சுக்கோ?” என அவன் பிகு செய்ய‌ கடுப்பாகினாள் அவள்.

அன்று பழனிக்கு சென்று வந்த நாளே‌ கிருஷ்ணாவிடம் அவள்‌ போன் செய்ததை சொல்லிவிட்டிருந்தாள்.‌ முதலில் கடுப்பாகி கத்தியவன் பின் தங்கையின் மனமறிந்து ஒரு எச்சரிக்கையுடன் விட்டிருந்தான்.

“போடா! நான் இரண்டு நாளா பேச டிரைப் பண்றேன், வாத்தி பிடி கொடுக்கவே மாட்டுறாருடா அண்ணா,

நேத்து அவர் காலேஜ்ல இருக்கும் போது லன்ச் டைம்ஸ் தான்டா பேசுனேன். இத்தனைக்கும் மெசேஜ் தான் போட்டேன். அதுக்கே வாத்தி கடுப்பாகிட்டாரு போல, மதியம் அனுப்புன‌ மெசேஜ்ஜீக்கு ஈவ்னிங் ஆறு‌ மணிக்கு வீட்டுக்கு வந்தப்பறம் ரிப்ளே‌ போடுறாரு. இதுல வேலை நேரத்துல மெசேஜ் போடாதன்னு பின்குறிப்பு வேற! ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான வாத்தியா இருக்காரு” என‌ அவள் சோகம் போல தனது ஆதங்கத்தினை தெரிவிக்க,

கிருஷ்ணாவிற்கும், கெளரிக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை!

வருணாவின் சிறு சிறு ஆசைகள்‌ எல்லாம் முகிலனிற்கு அர்த்தமில்லாததாகவே தெரிந்ததுப்‌ போல!

தங்கையின் சோக முகம் தாங்காது,
“அடேங்கப்பா, போதும் ரொம்ப வயலின் வாசிக்காத, முகிலன் மண்டபத்துக்கு வந்து ஒருமணி நேரம் ஆகுதாம்” என அவள் கேலி செய்ய,

“உனக்கு எப்புடி தெரியும், நான் கேட்டதுக்கு அவர் ரிப்ளையே பண்ணலை” என அவள் முகத்தை சுருக்க,

“அம்மா! தாயே எனக்கு ஒண்ணும் அவர் சொல்லலை, அப்பா பேசிட்டுருந்தப்போ நான் கேட்டேன். உன்னவர் உன்னை தவிர யாருக்கிட்டயும் பேசலை போதுமா!” என்றிட அசடு வழிந்தால் வருணா.

பேச்சு சுவரஸ்யத்தில் மண்டபத்தினை அடைந்திருந்தனர்.

மாப்பிள்ளை வீட்டாள்கள் இவருக்கு முன் வந்திருக்க, இவர்கள் வரும்‌ தகவல் அறிந்து மேகலா மண்டபத்தின் வாயிலில் நிற்க, அவளருகே சுபாவும்‌ நின்றிருந்தாள்.

மண்டப வாயிலில் கார் நிற்க, அதன் ஜன்னலின் வழியே தெரிந்த வருணாவின் சிரித்த முகம், பெளர்ணமி நிலவாய் ஜொலித்தது.

சில்வர் கலர் பட்டு சேலையில் வெள்ளி ஜரிகை வைத்து, அதற்கேற்ற கல் வைத்த நகைகளை அணிந்து, காரில் இருந்து இறங்கியவளை, கண்டு மேகலா அவளின் ஜொலித்த தோற்றத்தில் அதிசயிக்க, அதே நேரம் அவளது தோற்றத்தை கண்டு மெல்லிய பொறாமை எழுந்தது சுபாவின் மனதில்.

இத்தனைக்கும் சுபாவின் தோற்றமும் கோயில் சிலை போல் அம்சமாக இருக்கு, அதனை அவளை உணர விடாது தடுத்தது அவள்‌ மனதில் எழுந்த காழ்ப்புணர்ச்சி.

தன் எதிரே நின்றிருந்த நாத்தியையும், ஓரகத்தியையும் கண்டு அவள் அழகாய் புன்னைக்க,

“அழகா இருக்க வருணா, இந்த கலர் உனக்கு எடுப்பா இருக்கு” என மேகலா பாராட்ட,

“தேங்க்ஸ் அண்ணி!” என்றவள் சுபாவை காண, வலுக்கட்டாயமாக ஒரு சிரிப்பினை சுபா உதிர்க்க, அவள் சிரிப்பினை கண்டு புருவம் சுருக்கியவள், அதனை ஆராயாது மண்டபத்தின் உள் சென்றாள்.

வருணாவின் இருப்பக்கமும், கெளரியும், மேகலாவும், அவளுக்கு பின்னே சுபா என மூவர் படை சூழ உள்ளே வந்தவளை கண்ட முகிலனின் விழிகளில் பளீச்சிட்டன.

வருணா வரும்போதே முகிலனை தேடிக் கொண்டு வர, மண்டபத்தின் வலப்பக்கம் தனது அண்ணனுடன் நின்றிருந்தவனுக்கு, அவளது தேடல் அவனது நெஞ்சத்தை‌ நிறைக்க, அவளை தேட வைத்து ரசித்தான் வாத்தி.

வருணாவை நேராக மண்டபத்தில் இருந்த அறைக்குள்‌ அழைத்து சென்று விட்டிருந்தனர்.

அடுத்தடுத்து பெண் வீட்டுச் சார்பாக வரிசைத் தட்டுகள் அடுக்கப்பட, கிட்டதட்ட அறுபது வரிசை தட்டுக்கள் மேடையினை அலங்கரித்தன.

“பாத்தியாடி வரிசை தட்டை, இதுலயே தெரிஞ்சுடுச்சு உன் நெலமை, அதுக்குத்தான் நான் சொன்னேன், நம்ம யாதவியையே உன் கொழுந்தனுக்கு பேசி முடின்னு,

அக்காவும், தங்கச்சியும் ஒரே வீட்டுல இருந்து மாதிரி ஆச்சு உன்னோட ராஜ்ஜியம் அங்கே நடந்த மாதிரியும் ஆச்சுன்னு, எங்க நீ தான்‌‌ அதை ஒண்ணுமில்லாம ஆக்கிட்டியே! இப்போ‌ நல்லா அனுபவி?” என சுபாவின் தாய் வள்ளியம்மை வார்த்தைகளை கொட்ட,

தாயின் பேச்சில் எரிச்சலைடந்தவள்,
“ச்சூ போமா அங்கிட்டு, எரிச்சலை கிளம்பாம, உன்னை மொத இங்க கூப்பிட்டிருக்கவே கூடாது. எங்க, என் புருஷன் நான் சொன்னதை கேட்டாதானே, தேவையில்லாத தலைவலியை இழுத்து வச்சிருக்காரு” என‌ வள்ளியம்மைக்கு சலித்தவளில்லை என சுபா பேச,

“இந்த வாய்க்கு தான் டி, நீ இன்னமும் இப்புடி இருக்க, இனி இந்த பொண்ணு வந்ததும் உன்னை மொத்தமா மூலையில உட்கார வச்சிடுவா, என்னை பேசுனதுக்கு நல்லா அனுப்பவிப்ப” என்றவர் முகத்தை வெட்டி விட்டு அங்கிருந்து சென்று விட,

சுபாவிற்கு மேலும் தலைவலி ஆரம்பமாகியது. அவளது தாய் கூறியது போல் ஆரம்பத்தில் அவளது தங்கை யாதவியை முகிலனிற்கு பேசும் எண்ணம் இவளிற்கும் இருந்தது தான்.

ஆனால், அதன் பின்‌‌ யாதவி வந்து போக இருக்க, வேலைகளை இழுத்துப் போட்டு செய்ததில் முத்துப்பேச்சி‌,
“பரவாயில்லை சுபா, உன் தங்கச்சி நல்ல கொணமா இருக்கா, போற வீட்டுல அனுசரிச்சு, பொழைச்சுக்குவா, நல்லப் பொண்ணு” என இருமுறை பேச்சி இவளிடம் பாராட்டி விட அவளிற்கு “திக்” என்றிருந்தது.

எங்கே, தங்கையே‌ அவ்வீட்டிற்கு இரண்டாவது மருமகளாக வந்தால் தன்னை அடக்கி மூலையில் அமர‌ வைத்துவிடுவாளோ என பயந்த சுபா, உப்பு பெறாத விசயத்தை பெரிதாக்கி அம்மா வீட்டினருடன் சண்டையிட்டு, போக்குவரத்தை முழுதாக துண்டித்ததோடு, வள்ளியம்மையின் எண்ணத்திற்கும் சமாதி கட்டியிருந்தாள்.

இதோ, இப்போது கூட முகிலனின் விசேசத்திற்கு இவள்‌ வேண்டாம் என்று கூறியும் பரணிதான் வலுக்கட்டாயமாக அவளது புகுந்த வீட்டினை அழைத்திருந்தான்.

உண்மையிலயே, மேடையில் இருந்த வரிசைத்தட்டுக்களின் எண்ணிக்கையில் சுபா சற்றுப் பயந்து தான் போயிருந்தாள். இவளது திருமணம் காதல் திருமணம் என்பதால் இதோபோலான சீர் வரிசைக்களுக்கு வழி இல்லாமல் போயிற்று.

இவள் இப்போது அணிந்திருக்கும் நகைகள் கூட, பரணியும், முத்துப்பேச்சியும் வாங்கி தந்தது எனும்போது, நிச்சயத்திற்கே இத்தனை பொருட்களுடன் வந்த வருணாவை‌ காணும்போது, பயம் வந்ததில்லை தவறில்லையே.

‘தன்னைப்போல் வேறு‌யாரும் இருக்கிறார்களா?’ என நினைத்து சுபா சுற்றிலும் பார்வையை ஓட விட, அனைவரும் இது இயல்பான ஒன்று‌தான்‌ எனக்கு போல் சாதரணமாக கடந்ததனர்.

நிச்சயத்திற்கான நேரம் வந்து விட, முதலில் கார்முகிலனை மேடைக்கு வரவழைத்தனர். மேடைக்கு வந்தவனிற்கு சீர்தட்டுக்களை கண்டு ஒன்றும் பெரிதாக அதிர்ந்திடவில்லை. அவனது அக்காவிற்கே‌ ஐம்பது தட்டுகள் வைத்தவர்களாயிற்றே, இது எல்லாம் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதிகமாக தெரிந்தாலும்,

காலகாலமாய்‌ அவர்கள்‌‌ கடைப்பிடித்து வரும் வழக்கத்தினை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பதை உணர்ந்திருந்த முகிலனும் அவர்கள் இழுப்புக்கே சென்றிருந்தான்.

பெண்களின் சலசலப்பில், வருணாக்ஷி வருவதை அறிந்துக் கொண்டவன், சபை‌ நாகரிகம் கருதி அவள் புறும் திரும்பாது நின்றிருக்க, அவளோ இவனை இவனை மட்டுமே பார்த்திருந்தாள்.

அவளின் வாசனையில், இவனருகே அவள் வந்துவிட்டதை‌ உணர்ந்தவன், ஓரக்கண்ணால் அவளை கண்டுவிட்டு, சபையில் இருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்திட,

அங்கே இருந்தவர்களின் வித்தியாசமான பார்வை முழுவதும், தனக்கருகே விழுவதை பார்த்தவன், வேகமாக திரும்பி அவளை பார்த்திட,

அவன் திரும்புவதற்காகவே காத்திருந்த வருணாக்ஷி, குறும்பு பார்வையுடன் தனது கைகளை குவிந்து, “காலை வணக்கம் வாத்தி!” என‌ கண்ணடித்து கிசுகிசுப்பாக கூறிட,

அங்கிருந்தவர்களிடையே மெல்லிய சிரிப்பலை எழுந்தது.

அவளது சேட்டையில், அவளை கொட்டுவதற்கு, இவன் கைகள் பரபரக்க,

“என்ன சேட்டை இது வருணாக்ஷி? திரும்பு” என,

“ம்ஹீம், பதில் வணக்கம் வைக்கணும்னே தெரியாத வாத்திக்கு”

“ப்ச், எல்லாரும் நம்மையே பாக்குறாங்க திரும்பு” என அவன் லேசாக அதட்ட,

அவன்‌ அதட்டல் எல்லாம் அவளிடம் வேலைக்காகுமா என்ன? வேறுவழியின்றி அவன் தான் இரங்கி வர வேண்டியதாயிற்று.

தானும் பதில் வணக்கம் வைத்தவன்,
“அதான் சொல்லிட்டேன்ல திரும்புடி” என ஸ்ட்ரிக்ட் வாத்தி வெளியே வர, இதற்கு மேல் வேண்டாம் என நினைத்தவள் அமைதியாகினாள்.

நிச்சயபத்திரிக்கை வாசிக்கப்பட்டு, திருமணத்திற்கான தேதியையும் குறித்து விட்டிருந்தனர். அன்றிலிருந்து சரியாக இரண்டு மாதத்தில் வரும் முதல் முகூர்த்தத்தில் திருமணத்தை‌‌ குறித்திருந்தனர்.

பின், மாப்பிள்ளை, பெண் இருவரிடமும் மோதிரம் கொடுக்கப்பட மாற்றிக் கொள்வதற்கு ஆயுத்தமாகினர்.

தன்‌முன் நின்றிருந்தவளை‌ விழிகளால் உள்வாங்கி கொண்டவன், அவளது விரல்களுக்காக தன் கைகளை‌‌ நீட்ட,

வருணாக்ஷி தன்னருகே இருந்த கெளரிக்கு கண்காட்ட, அடுத்த நிமிடம் சரியாக,

காதலிக்க கைடு இல்ல…

சொல்லி தர வா வாத்தி…
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்…
அள்ளி தர வா வாத்தி…
என் உசுர உன் உசுரா…
தாரேன் கை மாத்தி…

அடியாத்தி இது என்ன பீலு…
உன்னால நான் பெயிலு…

புடிக்காம ஓட்டுனேன் ரீலு…
இனிமேல் நான் உன் ஆளு”

என்று பாடல் வரிகள் வருணாவின் மொபைலில் ஒலித்திட, அங்கே நமட்டு சிரிப்பு நிலவியது.

அதுவரை ஒருவித மெல்லிய இறுக்கத்துடன் இருந்த கார்முகிலன்‌ கூட, அவளின் இந்த சேட்டையில் அவனிற்கே வெட்கம் வந்து விட, அழகிய சிரிப்பொன்றை தனது இதழ்களில் தவழ விட்டவன்,

நீட்டியிருந்த அவளது விரல்களை அழுத்தமாக பற்றிட, அதுவரை இருந்த குறும்பு மறைந்து அவனது தொடுகையில், படபடப்பு வந்து ஒட்டிக் கொள்ள, அவளது விரல்கள் நடுக்கத்தை தத்தெடுத்தன.

நடுங்கிய அவளது விரல்களை இறுக்கமாகப் பற்றி மோதிரத்தை அணிவித்தேன்,
‘சேட்டைக்காரி, வெறும் வாய் மட்டும் தான், விரலை பிடிச்சதுக்கே இப்புடி நடுங்குறா’ என நினைத்தப்படி, அவளது விரல்களை விட்டவன், தனது விரல்களை நீட்டிட,

இயல்புக்கு வந்திருந்தவள், அவனிற்கு மோதிரத்தை அணிவித்திருந்தாள். அடுத்து இருவரையும் அமர வைத்து நலங்கு வைத்து முடித்திருக்க,

இருவருக்கும் போட்டோ ஷூட் ஆரம்பமானது. எந்த வித நெருக்கமான புகைப்படங்களிற்கும் அனுமதி இல்லை என முன்னரே புகைப்படக்காரரிடம்‌ இவன் கூறியிருக்க, உறவினர்களுடன் அனைத்தும் எடுக்கப்பட்டது.

கடைசியாக, இருவர் மட்டும் இருக்கும்படி ஒரே ஒரு புகைப்படம்‌ எடுத்திட, வீட்டினர் கூற சரியென்று தலையசைத்தவன் அவளை தனது கைவளைவுக்குக்குள் கொண்டு வந்தவன், மெல்ல அவளிற்கு மட்டும் கேட்கும் விதமாக,

“நாளையிலிருந்து ஈவ்னிங் சிக்ஸ் டூ செவன் க்ளாஸ் ஓகேவா உனக்கு?” என்றிட,

திடீரென அவனது கேள்வியில் அவள் புரியாமல் அவனை பார்க்க, அவளின் பார்வையை உணர்ந்தவன்,
“அதான், கேட்டியே கா
தலிக்க சொல்லித் தர வா வாத்தின்னு! வரவா?” என்றிட,

அவனது இந்த கேள்வியில் அவள் திகைத்து அவனை “ஆஆ..!” எனப் பார்க்க,

“திரும்புடி!” என சிறு சிரிப்புடன், அவள் முகத்தைப் பற்றி அவன் திரும்பி விட, அந்தக் காட்சி அழகாய் புகைப்படமாக்கப்பட்டது.



 

Mathykarthy

Well-known member
ஊருல உலகத்துல காதலிக்க வேற பொண்ணே கிடைக்கலையா பரணிக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
சொந்த தங்கச்சி மேலயே பொறாமை படுறவ வருணாவை விட்டு வைப்பாளா 😖😖😖
எல்லாரும் இவளுக்கு கீழ இருக்கணும்ன்னு நினைப்பு 😬😬😬😬

கேடி வாத்தி 🤪🤪🤪

வருணா இவ்வளவு விளையாட்டுத்தனமா இருக்காளே இதனால பிரச்சனை வராம இருந்தா சரி 😴😴😴
 
ஊருல உலகத்துல காதலிக்க வேற பொண்ணே கிடைக்கலையா பரணிக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
சொந்த தங்கச்சி மேலயே பொறாமை படுறவ வருணாவை விட்டு வைப்பாளா 😖😖😖
எல்லாரும் இவளுக்கு கீழ இருக்கணும்ன்னு நினைப்பு 😬😬😬😬

கேடி வாத்தி 🤪🤪🤪

வருணா இவ்வளவு விளையாட்டுத்தனமா இருக்காளே இதனால பிரச்சனை வராம இருந்தா சரி 😴😴😴
கண்டிப்பா பிரச்சனை வரும் சிஸ்
 
Top