எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

களவறியா காதலன் நான்

Status
Not open for further replies.
அத்தியாயம் - 1

மாரிக்காலத்தின் முன் இரவு. சூரியன் தன் வேலையை முடிக்க முனைந்து கொண்டிருந்தான். எனினும் குளுமை தன் வேலையை ஆரம்பித்து விட்டிருந்தது.
ஏற்கனவே பெய்த மழையில் குளித்த மரங்கள், தங்கள் இளமையைப் பசுமையாகப் பறை சாற்றிக் கொண்டிருக்க, தென்றல் காதலனுக்குத் தள்ளி நிற்க மனமில்லை போலும், உலர்த்தி விடுகிறேன் என்ற சாக்கில், இயற்கை காதலியவளை, தீண்டி, சீண்டி உறவாடிக் கொண்டிருந்தான். சிலிர்த்துப் போனவள், நீர்த்துளிகளாய் சிதறி, மயிர் கூச்செறிந்தாள்.
அங்கே! கார் மேகங்கள், இப்போது தரை இறங்குவோமா? அல்லது இன்னும் சற்று நேரம் கழித்தா? என அங்கும் இங்குமாக அலைந்தபடி இருந்தன. மீண்டும் ஒரு முறை நீர் தெளிப்பதா? இல்லை... ஊற்றுவதா? எனக் கலந்து, கலைந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தன.
நிழற்குடையின் கீழ் நின்றிருந்தாள், அவள். உயிர் பெற்று வந்த ரவிவர்மனின் சகுந்தலை என! ஓவியப் பெண்ணவளின் கருநிறக் கூந்தல், இருள் நதியாய்! இடைதாண்டி பாய்ந்திருக்க, இருள் நதியில் மிதக்கும் பொன் நிலவென, ஒளி சிந்தும் முகத்துடன், வான்பெற்ற இளநீலத்தைத் தான் பெற்று, அதில் வெண் புள்ளிகள் யாவும் நாங்களும் நட்சத்திரமென மினுக்கிக் கொள்ளும் வண்ணம் இருந்த அந்த வான் நீலத்தில், வெண் சிறு கல் பதித்த அந்த நீலச் சிற்றாடை அணிந்து நின்றவள், வானை உடுக்குமோ, வெண்நிலவு? எனும் ஐயத்திற்கு விடையாக நின்றாள், அந்தப் பெண்ணிலவு!
'அவள்...' என்கிறேனே... ‘நிலவுக்குப் பெயர் எதற்கு?’ 'மதி, சந்திரன் ... ' எனப் பல பெயரிருக்க, அவை வேண்டாம், அவள் பெயரான "ஆராத்தியா"வை, தன் பெயராக மாற்ற, கவிகளிடம் பெளர்ணமி இரவுகளில் கோரிக்கை வைக்கிறான், மதியவன் தன்மதி இழந்து. கவிகள் அவன் கோரிக்கையை ஏற்காததால் தானோ என்னவோ, தண்ணொளி இழந்து தேய்கிறான்.
மதியவன் மயங்கிய அத்திருமுகம், அப்போது சற்றே கலங்கி இருந்ததை, விழியோர பளபளப்பு காட்டித் தர முனைந்தாலும், கண்ணீர் முத்துக்கள் திரளாமல் திரண்டாலும், சிதறாமல் கவனித்துக் கொண்டாள், பாவையவள்!
அங்கிருந்த அனைத்து கண்களும் ஆராத்தியாவை நோக்கி நிற்க, அவர்களின் நோக்கம் அவளானாலும், அவளது நோக்கம் அவர்கள் மேல் திரும்பவில்லை.
காளையர் பலர் ஆராத்தியா எனும் ஆராதனைக்குரிய பெண்ணவளின் கண்ணொளி தன் மீது பட ஏங்கி நிற்க, அவளோ யாரையும் நிமிர்ந்து பார்க்க வில்லை.
சற்று நேரத்திற்கு ஒரு முறை, தன் கை கடிகாரத்தையும், அலை பேசியையும் பார்த்த வண்ணம் இருந்தாள்.
இனியும் காத்திருந்தால், வருணபகவானின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என அஞ்சிய மேகங்கள், ஆலோசனையை விடுத்துத் தங்கள் வேலையைத் துவங்குவதற்கான ஆயத்தங்களில் இறங்கி விட்டிருந்தன.
ஆராவின் அருகில் வந்து நின்றது, அடர் வனங்களில் காணும் கருஞ்சிறுத்தையின் பளபளப்பையும் வேகத்தையும் தன்னில் கொண்ட, அந்த ஜாக்குவார் எனும் வகை வாகனம். அதிலிருந்து இறங்கியவன், அவளது பையை வாங்கிப் பின்னே வைத்து விட்டு வந்தான். அவள் ஏற, கதவை திறந்து வைத்துக் காத்திருந்து, பின் கதவடைத்து முன்பக்கம் சென்று, தானும் ஏறி ஒட்டிச் சென்றான்.
புதிதாக வாங்கிய அலைபேசியில், அழகான எதையாவது என மரங்கள், வானம், சுற்றுபுறம், சுய படம், கண்ணில் கண்டதை எல்லாம் நிழலாக்கிக் கொண்டிருந்த அவன் கண்ணில் விழுந்த ஆராத்தியாவை, விட அவனுக்கு மனமில்லை. ஏனெனில் அவன் அப்படி ஒரு சவால் ஏற்றிருந்தான்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் அனைவரின் கனவுகளிலும் நினைவுகளிலும் நிறைந்திருப்பவள் ஆராத்தியா. அமைதியானவள். யாரிடமும் தேவையின்றிப் பேசுவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவள். எந்தத் தேவையற்ற விஷயத்திற்கும் போவதில்லை. பின்னால் சுற்றுபவர்களைப் பார்வையிலேயே எட்டி நிற்க வைத்து விடுவாள்.
அவளை யாரும் நெருங்க முயன்றதில்லை. முடிந்ததும் இல்லை. பின் எங்கே பேச, பழக? எனவே, பலருக்கு அவள் கனவே. இன்று கடைசி தேர்வு முடிந்து, அனைவரும் விடை பெற்றுச் செல்லும் நாள் என்பதால், ஆராவை செல்பி எனும் சுயமிக்கு அழைக்க, அவள் மறுத்து விட்டாள். இதுவே, குமார் அவளைப் பின்தொடர காரணமாயிற்று.
எந்த விஷயம் பற்றி நமக்குத் தெரியவில்லையோ... மறைக்கப் படுகிறதோ... அதைப் பற்றி நமது ஆர்வம் பெருகிவிடும். அந்த நிலையில், சரி தவறு என்பதைத் தாண்டி விடுகிறது மனம்.
காலையில் கல்லூரிக்கு வந்த குமார், தான், புது அலைபேசி வாங்கியதைக் காட்டி மகிழ, அவனைச் சீண்டிய அவனது நண்பர்கள்,
"டேய்! எல்லாரும் தான் போன் வைச்சிருக்கோம். போஸ்ட் போடறோம்."
"ஆமா டா"
"நம்ம ராஜேஷுக்கு எவ்வளவு லைக்ஸ் நேத்திக்கு மட்டும், ஏன் தெரியும்ல?"
மற்றோருவன், "ஆமா, செம வீடியோடா அது"
"என்னா த்ரில்"
"ஆமா, சூப்பர் டா! மச்சி!" என ராஜேஷை சில நிமிட ஹீரோவாக்க, அதற்கு அந்த முட்டாள் செய்த காரியம் நெஞ்சைப் பதற வைக்கும்.
‘ஆம், வேகமாகச் செல்லும் மின்சார ரயில் கிளம்பி சற்று வேகமெடுத்ததும், ஒடி சென்று ஏறியது மட்டுமன்றி, வெளியே சன்னல் கம்பியை பிடித்தபடி அவன் தொங்கிக் கொண்டும், மின்சாரக் கம்பங்களை தொட்ட படியும், முடி கோதியும், நகர்ந்தும் சாகசம் என சாவுக்கு அருகில் செல்லும் வேலையைச் செய்து பதிவிட்டு, சில நூறு லைக்ஸ் வாங்கியிருக்க.’
இந்தச் சில ‘லைக்ஸ்’காகவும், இந்த நண்பர்களின் சில நிமிட நாயகன் பதவிக்கும் ஆசைப்பட்டு, அதிர்ஷ்டத்தால் பிழைத்த அந்த முட்டாள், இவனைப் பார்த்துச் சிரிக்க, சிலிர்த்த குமாரோ…
"நானும் அது மாதிரி எடுத்து, நாளைக்குப் போடறேன் பாருடா!"
"அது யாருக்கு வேணும்?"
"அதான், ராஜேஷ் ஏற்கனவே போட்டுட்டானே!"
"என்ன செய்யலாம்?" என்பதாய் கண்களைச் சுழற்ற, அதில் விழுந்தாள், படம் எடுக்க மறுத்து ஒதுங்கிய, ஆராத்தியா!
"டேய்! இவள எடுத்துப் போடுறா?" என குமார் கண் சென்ற பாதையைக் கண்ட ராஜேஷ் கூற,
அதை அப்படியே போடுவதில் என்ன தில், நல்ல வித்தியாசமான நிமிடத்திற்குக் காத்திருந்து பின் தொடர்ந்தான்.
ஆராத்தியாவை படம் எடுத்து பதிவேற்றி சாதனையாளனாக முடிவு செய்த குமார், அவளை வெகுநேரமாகப் பின் தொடர்கிறான், அவள் அறியாமல்.
இப்போதும் அவள் நின்றிருந்த நிழற்குடைக்கு எதிர்புறம், சற்று ஒதுக்கமாக நின்று, அனைத்தையும் படமாக்கிக் கொண்டிருந்தவன், ஆராவின் கண்களில் படவில்லை.
விதி மறைத்ததோ? இல்லை…
வினை மறந்ததோ? விளைவிக்கப் போவது என்னவோ?
படம் எடுத்தவன் அறியவில்லையோ? இல்லை, அவனுக்கு அறிவில்லை. ஒருவரை படம் எடுக்க, அவரது அனுமதி பெற வேண்டும் எனும் உணர்வற்றவன், அந்தக் குமார். இவனை விடத் தரம் இறங்கிய மக்களும் இச்சமூகத்தில் மலிந்து கிடக்கின்றனர்.
தங்கள் விருப்பம் போல், விருப்பமற்ற பெண்களை, அவர்களது அங்கங்களைத் தவறாக எடுத்து, இஷ்டம் போல் பதிவு செய்கின்றனர். மாடலிங் எனும் தொழிற்துறையிலேயே மாடலாக வருபவர்களை, அவர்கள் விருப்பமின்றிப் படம் எடுப்பதும், அவர்களுடைய உடல் பாகங்களைத் தவறாகச் சித்தரிப்பதும் குற்றம்.
இயற்கையின் தனிப்பட்ட எழில்களையும், விலங்குகளையும் அவற்றுக்கு உரியவர் அனுமதி இன்றி படம் எடுப்பது, தண்டனைக்கு உரியது. எனில்… உயிரும் மனமும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உள்ள ஒரு பெண்ணை, அனுமதியும் பெறாது, அவளும் அறியாது படம் எடுக்க, அவள் அவன் வளர்க்கும் தாவரமோ, செல்லப் பிராணியோ அல்ல, உயிருள்ள உணர்வுள்ள பெண்.
அந்த உணர்வின்றி..., ஆராத்தியா சற்று படபடப்புடன் இருந்ததையும், அவள் கண்களின் பளபளப்பையும், பதிவு செய்தான், அவன்.
அந்த முன் இரவு, பின்னிரவு போல், மழைக் காலமானதால் இருண்டிருந்தது.
ஆராத்தியா மட்டும் அந்த காரில், கறுப்பு நிற சொகுசு வாகனத்தில் ஒருவன் கதவு திறக்க புன்னகையுடன் ஏறுவதையும், அந்த நெடியவன் இவள் தோள் பிடித்து உள்ளே அமர்த்துவதையும், குனிந்து சீட் பெல்ட் போடுவதையும்… அவளது உடைமைகளை வாங்கி உள்ளே வைத்ததையும், தன் மனதின் வக்கிர கற்பனைகளின் சாயம் பூசி, இஷ்டம் போல் கதை புணைந்து, அதை பதிவேற்றினான். தன் பெருமையை பறையறைந்து அறிவிக்க எண்ணி...!

கயல் கொண்ட விழியின்
வீச்சலையில் தத்தளிக்கிறேன்!
இமையெனும் கரை கொண்டு நீ மூட
முழ்கினேன், முத்தெடுக்க!
மூச்சடக்கத் தேவையில்லை
உன்னில் வீழ்ந்து விட்ட
நாளிகை முதல் மூச்செடுக்கவில்லை
சுவாசப் பைகள்...!
வாழ்ந்திருக்க விழைகிறேன்
கடல் வாழ்வனவாக...!
என் திரைகடல் திரவியம் நீ
காத்திருக்கிறேன்…!
என் காத்திருப்புகளின் பலன்
உன் வார்த்தைகளில்…!













அத்தியாயம் - 2
இளம் பச்சையும் நீலமுமாய் அமைதியாய் சிறு அலைகளுடன் தூரத்தில் தெரிந்த கடல் அனுப்பிய குளிர் காற்றில், கழுத்தில் புரண்ட அந்தப் பொன் வண்ணக் கூந்தல் காற்றில் அசைந்தாட, மார்பில் ஆரத்தையும், கை கங்கணங்களையும், அதன் மஞ்சள் ஒளி பட்டு மின்ன வைத்தான், கதிரவன். கால்சராய் அணிந்திருந்த அவன் பாதங்கள் சேனத்தின் மீது பதிந்திருந்தன.
செம்மண்ணின் நிறத்தை உடலிலும், கால்களின் ஆரம்பத்தில் கரிசல் மண்ணின் நிறத்தையும் கொண்டு, தன் வாலினை இலேசாக அசைத்து நின்ற புரவியின் மீது அமர்திருந்தவனின் பார்வை, சிறிதும் அசையவில்லை.
மலை முகட்டிலிருந்து தன் கழுகுக் கண்களால் கடலும் வானும் இணைவதையும், அதிலிருந்து எழும் மேகப் பொதிகள் வானெங்கும் நிறைவதையும், மேலெழுந்த வெண்பொதிகள் கதிரவனின் தூரிகை பட்டு, பொன்வண்ணமாய் மின்ன... கடலுக்கும் அவன் நின்றிருந்த மலைக்கும் இடையே, விரிந்த இலையுதிர் காட்டுமரங்களின் பின் பகுதி, மஞ்சள் நிறமெனவும் முற்பாதி பச்சையைத் தேக்கி வைத்திருப்பதையும் கண்டனவோ அக்கண்கள். அதில் எந்த உணர்வுமில்லை. எதையும் பிரதிபலிக்கவும் இல்லை அவன் முகம். அது இறுகி இருந்தது.
அவன் தாங்கிய மார்பு கவசங்கள் அவன் நிலையின் உயர்வினைக் காட்டும். அவன் கை வாள், பிரத்தியேகமாக... அரிதான உலோகங்கள் கொண்டு அவனுக்கென உருவாக்கப்பட்டது. அது உறைக்குள் இருந்தாலும், கைப்பிடியும் உறையும் அதன் மதிப்பையும், அதை இடையில் அணிந்திருப்பவன் உயரத்தையும் சொல்லும்.
அவன் போருக்கு என்றே படைக்கப்பட்டவன். பிறந்தவுடன் தாயின் முகமறியும் முன் பிரிக்கப்பட்டு, அழுகையை மறந்து, ஓநாய்களுடன் காட்டில் உயிர் ஜீவிக்கும் முறையறிந்து, தன்னைக் காத்து, பயிற்சியில் எதிர்க்கும் எவனையும் எரித்து, கசையடிகளில் வலி மறந்து, அன்பு தொலைத்து, உறவுகளைத் துறந்து, போரிடும் முறை கற்றவன்.
"போர் எனில் வெற்றி!" அதைத் தவிர வேறு அறியா வீரன் அவன்.
தன் புரவியை வானுயர்ந்த அந்த மலை முகட்டிலிருந்தும் கீழே இறக்கி, நெடிதுயர்ந்த மரங்களடர்ந்த வனம் வழியே, நிதானமாக அப்புரவியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
அவன் உணர் புலன்கள் கூர் பெற, சுற்றும் பார்த்துக் கொண்டு சென்றவன் முன், வின்னிலிருந்து இறங்கியது போலத் தோன்றினான், அவ்வரக்கன்.
குதிரையிலிருந்து மேலெழும்பி, அரக்கனை வாள் கொண்டு தாக்கி இருந்தான். அவ்வரக்கனே திடீரெனத் தோன்றியிருக்க, அப்புரவி வீரன், அவனையும் விட வேகமாகச் செயல்பட்டுத் தாக்க, இதை எதிர் பாராத அரக்கன், தாக்கப்பட்ட வேகத்தில் “ஆ…” என மல்லாந்து விமுந்தான்.
கீழே விழுந்ததில் ஆத்திரம் மிக “ஆ......” என அலறியபடி மீண்டும் தாக்க ஓடி வர, புரவி வீரனோ சற்றே நகர, இப்போது கீழே வீழ வேண்டிய அரக்கன், முயன்று தன்னை நிலைநிறுத்த, மரத்தைப் பற்றினான்.
இப்போது கண்கள் ஆத்திரத்தில் செந்தணலெனமாற, அம்மரத்தை வேருடன் பிடுங்கி இவன் மீது வீச…, அதில் தப்பி ஒதுங்கி அருகில் இருந்த பாலத்தின் மீதேறி நின்றிருந்தான், புரவியோன்.
அரக்கன் தன் ஆத்திரம் எல்லையைக் கடக்க... தன் நிலை மறந்து, தன் ஆயுதத்தால் புரவி வீரனை தாக்க முற்பட்டான். காலம் தாழ்த்தாது, தன் வாளில் நெருப்பின் சக்தியேற்றி, தானும் நெருப்புச் சூறாவளியென மேலெழும்பி, அரக்கனை துண்டுகளென மாற்றியிருந்தான் அப்புரவி வீரன்.
சொய்ங்… எனும் ஓசையில், அவ்வரக்கனின் உடல் மறைய, "YOU WON" என ஒளிர்ந்தது, புரவி வீரன் அருகில்.
தனக்கு இன்று இணைய விளையாட்டில் அளிக்கப்பட்ட பணியை முடித்து எழுந்தான், அவன். கணினித் திரையை அணைத்து விட்டு, மின் இணைப்பை நிறுத்தியவன், மீண்டும் நாற்காலியை சரியாக அதனிடத்தில் வைத்தவன், திரும்ப அனைத்தையும் சரி செய்தவன், அவன் அறைக்கதவை திறந்து வரவும், அன்னை அலர்மேல் மங்கை அழைக்கவும் சரியாக இருந்தது.
அதீந்திரன், தமிழகத்திற்கும் யவனத்திற்கும் உள்ள தொடர்பினைக் கூறும் நடமாடும் ஆதாரம் அவன். வெண்கலச் சிலைகளில் கிரேக்க சிற்பிகள் வடித்த காளை பருவ ஆண் உயிர் பெற்று வந்தது போல் இருந்தான்.
(காளை பருவம் என்பது 24 முதல் 36 வயது வரையான ஆண்களைக் குறிக்கும் ஆண்களின் ஏழு நிலை பருவங்களில் ஒன்றாகும். இதைக் காதற் பருவம் என்றும் கூறுவர்)
ஏதேனும் ஒரு யவன இளவரசியும், சோழ அரசனும் இவனின் முன்னோராக இருக்க வேண்டும், என கட்டியம் கூறும், அவனின் இளம்பச்சை நிறக் கண்களும், முறுக்கேறிய உடலும், தினவெடுத்த தோள்களும், காணும் எவரையும் சுயம் இழக்கச் செய்யும் வனப்பினைப் பெற்றவன். வீட்டில் இருப்பதால், இலகுவான ஆடையான அடர் ஆலிவ் பச்சை நிற டீ சர்ட், கருமை நிற சார்ட்ஸ் எனும் அரைக்காற் சட்டையும் அணிந்திருந்தான்.
"அதீப் வாடா…! உன்னைக் கூப்பிடத்தான் வந்தேன். நீயே வந்துட்ட" என்ற தாய்க்கு பதில் கூறாமல் கீழே இறங்கி வந்தவன்,
"செந்தில் அண்ணன் இப்ப வந்துடுவாருல்ல?" எனும் கேள்வியைக் கேட்டபடி, தன் தட்டையும், குவளையில் தண்ணீரையும் நிரப்பிக் கொண்டு, தான் வழக்கமாக அமரும் உணவு மேசையின் இடது புற கடைசி நாற்காலியில் அமர்ந்தான். ரகுநந்தன், அலர் மேல் மங்கை தம்பதியரின் இரண்டாவது மகன், அதீந்திரன்.
மூத்தவன், அதீப்பைவிட ஏழு வயது பெரியவன் புருஷோத்தமன், அவன் மனைவி வைஜெயந்தி! இவர்களின் மகன் ஐந்து வயது அத்வைவ், கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர்.
அப்பா, அண்ணன் இருவரும் குடும்பத் தொழில்களை பார்த்துக் கொள்ள….
அதீப், கணினி விளையாட்டின் மேல் ஆர்வம் கொண்டதால், ஒரு கேம் டெவலப்பராகி இருந்தான். தன் நண்பர்களுடன் இணைந்து X Y எனும் பெயரில், புதிதாக ஒரு கம்பெனியை ஆரம்பித்து, ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி வருகிறான்.
மங்கை, அவன் தனக்கு பதில் கூறாவிட்டாலும், உணவு மேசையில் அமர்ந்திருப்பதைக் கண்டவர், அதீப்பிற்கு இட்டிலியை வைத்தவாறே…
"இப்ப சாப்பிட்டுட்டு கிளம்பினா சரியா இருக்கும். கிளம்புடா!" என்றார்.
அவனோ, "செந்தில் வருவாரா?" என மீண்டும் அதே கேள்வியைக் கேட்க.
"அவரப் பத்தி இப்ப என்னடா கவலை? யாரோ ஒருத்தர், யாரா இருந்தா என்ன? நீ சாப்பிட்டுக் கிளம்பு!"
“தோசை”
“இப்ப நேரம் இல்லை. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா" என்றார்.
கையைத் தட்டிலிருந்து எடுத்தவன், திரும்பி அமர்ந்து கொண்டு, “எனக்கு வேண்டாம்!" எனவும், அவன் அருகில் வந்து முடியைக் கோதியவர்,
"டேய் கோபப்படாதப்பா, அம்மா பாவம்ல. அவசரமா கிளம்பறதால இன்னிக்கு மட்டும் சாப்பிடு. நாளைக்கு தக்காளி சட்னி பண்ணித் தரேன்."
"தோசை" என, திரும்பக் கூறிய அவனைப் பார்த்ததும், இனி அவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை எனப் புரிய, தோசைக்குக் கல்லைக் காய வைத்தவர்,
"இந்தத் தோசைல அப்படி என்னதான் இருக்கோ, இதைத் தவிர ஒன்னும் பிடிக்க மாட்டிக்குது. மத்த நாளைக்குப் பரவாயில்லை. இது மாதிரி அவசரத்துக்குக் கூடவா…!" எனப் புலம்பியபடி மாவை குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுக்க, பின்னால் வந்து நின்றவன், அவள் கையில் இருந்து மாவுப் பாத்திரத்தை வாங்கிக் கொண்டான்.
"நீங்க போங்க!" என்றவன், தானே அழகாகத் தோசையை ஊற்றிக் கொள்ள, மனம் தாங்காமல்…
"கொடு! நான் ஊத்தி தந்துட்டுப் போறேன்." எனக் கரண்டியை வாங்க முயல,
"நோ நீட் மாம்!" என்றவன், தனது வேலைகளில் கவனமாகிட, அலர்மேல் மங்கை தனது வேலையை கவனிக்கச் சென்றார்.
தனக்கான தோசைகளை வார்த்து எடுத்துக் கொண்டு, தனது இடத்தில் அமர்ந்து கொண்டவன், ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருக்க,
மங்கை "டேய், அதீப்... நேரமாயிடுச்சி கிளம்புடா!" என்றார் பத்தாவது முறையாக.
"சரிம்மா!" என்றவன் நிதானமாகச் சாப்பிட்டு நேரத்திற்குக் கிளம்பினான்.
விவரனைகளின் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவன்
உன் கற்பனைகளின் காட்சிப்படுத்துலுக்குக் கட்டுபடுவேனோ?
காட்சிகள் என்பன யாவையோ?
காணப்படுவனவோ? இல்லை…
காட்டப்படுவனவோ?
யாவும் நீயே!
காணப்படுவன, காட்டப்படுவன, எவையும்
உனையே காட்சிப்படுத்துதல் கண்டனையோ?
 
Last edited:
அத்தியாயம் - 3

சுற்றிலும் இருட்டு நெடிது வளர்ந்த நிழல் மரங்களிடையே அறியமுடியா பாதை வழியே ஒடிக் கொண்டிருந்தாள், ஆரா. முதலில் தப்பிக்க எண்ணி மெதுவே வந்தவள், கோட்டைச் சுவரென நீண்டிருந்த அந்தச் சுவற்றின் மீதேறி, மெல்ல மறுபுறும் கீழே குதித்தாள். குதித்ததும், எழுந்து ஒடத் துவங்கினாள். அப்போதும் சுற்றும் பார்த்து அந்த இருளிலும், பாதை தேடி ஓடின அவள் கண்கள். அதைப் பின்பற்றின கால்கள் .
சற்று தொலைவினில் கேட்ட அந்தக் குரைப்பின் ஓசை, இப்போது மிக நெருக்கத்தில் கேட்கத் துவங்க, ஓடியதில் வலு குறைந்தவள், மேலும் ஒட இயலாமல் கீழே விழுந்து விட, அவளைச் சுற்றி வலம் வந்தன அவை.

அதன் உயரமும் இருளிலும் இருளாக இருக்கும் கருநிறமும், ஆராவை அச்சுருத்த வியர்வை வழியப் பார்த்திருந்தாள். அதன் பளபளக்கும் விழிகளும், எச்சில் வழிய நாக்கை வெளியே தொங்கவிட்டு நின்றிருந்த விதத்தில், இதயம் துடிப்பதை நிறுத்தி விடுமோ, எனும் பயத்தில் கண்களை இறுக மூடி, நெஞ்சில் கை வைத்துப் பிடித்துக் கொள்ள, அதில் ஒன்று அவள் மீது பாய, அதன் கால் நகங்கள், அவள் மீது பட, அதைத் தள்ளி விட்டாள்.

"ஆ.... அம்மா!" எனும் அலறல் சத்தத்தில் விழித்தெழுந்தாள். சுற்றும் முற்றும் பார்த்துச் சுயம் பெற்றாள், ஆரா. அலறிய சத்தம் கேட்டு எதிரில் மீனா அவள் கீழே கிடந்தாள். அவளின் கூக்குரலில் பேருந்து நின்றிருக்க, அனைவரும் விழித்திருந்தனர். என்னவாயிற்று என்று பார்க்க, தூக்கம் கலைந்த எரிச்சலில், பயணி ஒருவர்,
"ஏம்மா பார்த்து, சொல்லிட்டு கத்துமா. வீட்டுல தூங்கிட்டு இருக்க என் பொண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் கூட இன்னேரம் முழிச்சிருக்கும்." என்றார்.
முன்னிருக்கைப் பயணிகள் சிலர் அவளைத் தூக்கி விட, மெதுவே எழுந்த மீனா, ஆராவை முறைத்தாள்.

பிறகு அவரிடம் திரும்பி "அரசாங்த்தில் இப்படி ஒரு ஆணை கொடுத்துருக்கறது, இப்பத்தானுங்க தெரியும். விழும் போது உங்ககிட்ட அறிவிப்பு கொடுத்து தான் விழனும்னு. அடுத்த வாட்டி விழும் போது, உங்க பொண்டாட்டிட்ட சொல்லிட்டு விழறேன்." என்றவளை அவர் எரிப்பதைப் போல் பார்த்தவரை, பதில் பார்வை பார்த்தாள்.

இவ்வளவு பிரச்சனையில் குதுகலமான இரு இளைஞர்கள் ஆராவிடம், "உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே?" என விசாரிக்க,
மீனா "ஏலேய்! விழுந்தது நான், விசாரிப்பு அங்கயா?" எனும் மைன்ட் வாய்ஸூடன் முறைத்தாள்.
ஓட்டுநரின் பாசப் பார்வையில், பொம்ளப் புள்ள என்ற பரிதாபம் இன்றி, இவர்களை இறக்கிவிடும் உத்தேசம் தெரிய, சுதாரித்த ஆரா அனைவரிடமும்,

"மன்னித்துக் கொள்ளுங்கள். தூக்கத்தில் தெரியாமல் விழுந்த பயத்தில் தவறு நேர்ந்துவிட்டது." என மன்னிப்பு கோரினாள். அனைவரும் கலைந்து சென்ற பின், மீனா அருகில் அமர்ந்த ஆரா,
"எங்கேயாவது பலமா அடிபட்ருச்சாடி?" எனக் கேட்டாள், அவளை ஆராய்ந்தபடி.

"ரொம்ப விரசா கேட்டுட்ட. இன்னும் அஞ்சாறு நாள் சென்னு (சென்று) கேட்கது தான?" என நொடித்துக் கொண்டவள், இருக்கையின் உள் பகுதிக்கு நகர்ந்தாள். அவர்கள் அமர்ந்திருந்த படுக்கை வசதி கொண்ட பேருந்து, அதன் கீழ்தளத்தில் உள்ள இருவர் படுக்கும் வகையிலான இருக்கையின் சன்னலோரம் அமர்ந்தவள்,

"எரும… நீ திடீர்னு தள்ளிவிட்டதுல பயந்து தான் கத்திட்டேன். பக்கி இப்படியா தள்ளி விடுவ? கேவலமாப் போச்சு!" என்று ஆராவிடம் பொரிய, அவளோ…
"உன்னை எவன்டி என் மேல கையப் போடச் சொன்னது. நானே கனவுல நாயைப் பார்த்து, பயந்து போயிருந்தேன். அந்நேரம் பார்த்து நீ பேய் மாதிரி கைய மேல போடவும், பயத்தில் தள்ளி விட்டுட்டேன்டி." என்ற ஆரா, சில அடிகளைப் பரிசாகப் பெற்றாள்.

இவர்களது விளையாட்டுகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்த அந்த இளைஞர்களைக் கண்காட்டிய மீனா, ஆராவிடம்,
"இவனுகளுக்கு இருக்கக் குசும்பப் பார்த்தியா? இங்க நான் விழுந்து கிடக்க, உன்கிட்ட வந்து விசாரிக்கானுக." என்றாள்.
"சரி, சரி, விடுடி. பாவம், யாரு பெத்த புள்ளைகளோ? பொழைச்சி போகட்டும். விடிஞ்சிருச்சி பாரு...!" என்றுரைத்த ஆரா, சன்னலை திறந்து வாகாகக் கால் நீட்டி அமர்ந்தாள்.

"ஏய் ஆரா, ஊர் வந்த பிறகு என்னைய எழுப்புடி!" எனக் கூறிவிட்டு, உறக்க தேவதையிடம் மீண்டும் சரண் புகுந்தாள், மீனா.
முதல் நாளிரவு வானக் காதலியவளை நாடி வந்த நிலவுக் காதலன், அவளின் நட்சத்திர ஆடைகளை, விடியலின் கூவலில் தன் இருப்பிடம் நோக்கி விரைகையில், தன்னுடன் எடுத்துச் சென்றதை அறிந்து, அவன் நினைவில் முதலில் கன்னம் சிவந்தாள். சந்திரனவன் செய்கையை எண்ணி முழுவதும் சிவந்து போனாள். தாளாத நாணத்தில், மேகப் போர்வையில் தனை மறைக்க முயல, அது போதாதென உணர்ந்த ஆதவன், அவளுக்கு ஊதா வண்ண ஆடையைத் தன் கிரணக் கையால் வழங்கினான்.

“தெரியுமா?" எனக் குழல் கலைத்து ஆடிய குளிர் காற்றவள், ஆராவின் காதுகளில் இந்தச் செய்தியைக் கூறிவிட்டு, அனைவருக்கும் கூறி அவர்களின் உறவை உலகறியச் செய்யும் எண்ணத்துடன் விரைந்தாள். ஆரா தென்றலவளுக்கு, செவி சாய்க்காமல், ஆதவனை ரசித்திருந்தாள்.

கடலினின்று எழுந்தாலும், மலையிடை வந்தாலும், எதுவும் அற்ற சமவெளியில் தோன்றினாலும், நான் உற்சாகத்தையும், இன்பத்தையும் வழங்குவேன் என மேலெழுந்த கதிரவனை, தகத்தாயம், என அவனை வர்ணித்த பாரதிதாசனின் கவிதையை நினைவுபடுத்திக் கூறியபடி அமர்ந்திருந்தாள்.

மேக்கரை
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் மிக அழகிய ஊர். பசுமையது முதலில் வயல் பரவி, பின் தென்னை மரங்களில் தாவி, மலை முழுவதும் விரவி, விண்ணேற வழி உண்டோ? என மேகங்களிடம் உரையாடிக் கொண்டிருக்க, அந்த நவீன ரதம் உள் நுழைந்தது.

அதீந்திரன், அவனை வரவேற்க மிதிலையின் கொடிகள் போல் பசு நெல் சூழ் வயல்கள், பொதிகைத் தென்றலவள் பாட்டிற்கு இசைந்தாடி, இனிய வரவேற்பினை அளித்துக் கொண்டிருந்தன. அதீந்திரன் தன் தேர் நிறுத்தி இறங்கி அதைப் பார்க்க, மங்கை தானும் இறங்கி ரசித்து, தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

மேக்கரை அவர்களின் பூர்வீக பூமி. பல வருடங்களுக்கு முன் அவர்கள் தாத்தாவின் காலத்திலேயே, சென்னைக்கு மாறி விட்டிருந்தனர். வருடம் ஒரு முறை, அவர்கள் குல தெய்வம் உச்சினி மகா காளி கோவில் கொடை விழாவிற்கு மட்டுமே வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். தங்கள் நிலங்கள் தோப்பு அனைத்தும் குத்தகைக்கு விட்டு விட்டு, வீட்டைப் பாராமரிக்கவும் ஆள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதீந்திரன் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் வருகிறான். அவனுக்கு, தன் நடைமுறைகளை மாற்றிக் கொள்ளப் பிடிக்காது,
இது போல் நிகழ்வுகளில் பங்கேற்கவும் விருப்பம் கிடையாது.

இந்த முறை பலவிதமாகக் கூறி, தானும் இருந்து அவனை அழைத்து வந்துள்ளார். எல்லாக் குடும்பங்களிலும் குலதெய்வம் ஒன்று இருக்கும். குலதெய்வம் என்பது பெரும்பாலும் வீரம் நிறைந்த ஆண் அல்லது பெண் தெய்வங்களாகவே இருக்கும்.
உண்மையில் அவர்கள் தெய்வங்களாக மாற்றப்பட்டவர்கள்.

தங்கள் குலத்திற்கு அல்லது அந்த கிராமத்திற்கு வந்த தீமையை வீரம் மற்றும் தங்கள் தியாகத்தால் விரட்டியவர்கள். அவர்கள் இல்லை எனில், தாங்களும் தங்கள் குலமும் இல்லை என்பதை அறிந்தே,

முன்னோர்கள் அவர்களுக்குக் கோயில் எழுப்பி விழா எடுத்து வழிபட்டு, தங்கள் நன்றியை தெரிவித்து, அருளை நாடினர்.
பழங்காலப் பண்ணையார் வீடு அது. முன்புறம் பெரிய வாயிற் கதவுகள் இரும்புக் கம்பிகளால் ஆனவை. அதில் தாமரை வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது.

செம்பருத்தி, நந்தியாவட்டை மரங்கள் நிற்க, இடது ஒரமாக மகிழுந்து நிறுத்துமிடம் இருந்தது. முன்புறத் தாழ்வாரம், அதன் பின் பெரிய கூடம், இருபுறமும் அறைகள் இருந்தன. அவ்வறைகளில் வெளிப்புறம் மற்றும் பின்புறம் செல்ல இயலும். அதைத் தாண்டி, சிறு கூடமும் அரங்கு, பூஜை அறை, மாடியின் பின்புற வாயிலுக்குச் செல்லும் வழி, இதைத் தொடர்ந்து அடுக்களையும் கொட்டிலும் இருந்தன. பின்புறம் துளசி மாடம் எனப் பெரிய வீடு.

அலர்மேல் மங்கையைத் தொடர்ந்து வந்த அதீந்திரன், "என்னம்மா, இங்க நாட்டாமைகளா இருக்காங்க? அப்பாவையும், அண்ணனையும் காணும், எதுக்கும் நீங்க இந்த நாட்டாமைக்கிட்ட பிராது கொடுத்து தேடச் சொல்லுங்க!" எனக் கூறி, அவர் பதில் கூறும் முன், வைஜெயந்தியைக் காணச் சென்றிருந்தான்.

அலர்மேல் மங்கையும், ரகுநந்தன், புருஷோத்தமன், மற்றும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்றார். அனைவரிடமும் வணக்கம் கூறி, சில நல விசாரிப்புகளுக்குப் பின், கோயிலுக்குச் செல்ல, தயாராகச் சென்றார். பின் அனைவரும் கிளம்பி, அன்னையின் ஆலயத்திற்குச் சென்றனர்.

காலை வேளை என்பதால் அதிகக் கூட்டமில்லை என்றாலும், புதிதாகச் சிலர் அவனுடன் பேச முயல, அதீந்திரன் அங்கே இருப்புக் கொள்ளாமல் வெளியே வந்தவன், செந்திலையும் கூட்டிக் கொண்டு, அருகிருந்த அணைக்கட்டிற்குச் சென்றான்.

அங்குச் செல்வது அவன் வழக்கம், அணையிலிருந்து அருவியாய் பரந்து வெளியேறும் நீரினை, நேரம் போவதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் சில குழந்தைகளும் ஆண்களும் குளிப்பதைப் பார்த்தவன், சட்டென்று தன் டீ சர்ட்டை களைந்து, அவர்களைப் போல் உயரமான பகுதியில் இருந்து நீரில் பாய்ந்தான். ஆழம் சென்று மேலெழுந்தவன், குழந்தைகளுக்கு இணையாக நீந்திக் களித்ததில் சத்தமாகச் சிரிக்க, ஏற்கனவே இவனைக் கண்டதில் மயங்கியவர்கள், இப்போது இவன் உடற்கட்டையும், சிரித்து மகிழும் அழகையும், அப்போது தனி ஒளி சிந்தும் முகவடிவையும் கண்ட ஆண்கள்,
ஆணாகப் பிறந்ததையெண்ணி வெறுப்பையும், “எங்கே தம் மனைவியர் தன்னை இனி வேண்டாம் என்றுரைப்பரோ?" எனும் அச்சத்தையும் ஒருங்கே பெற்றனர்.

கன்னியர் நிலையோ கவலைக்கிடமாயிற்று. முதலில் கள்ள விழிப் பார்வையிலும் ஓரவிழிப் பார்வையிலும் அவனைப் பார்த்தவர்கள், அவன் நீராடும் அழகிலும், அவன் சிரிப்பிலும் தன்னைத் தொலைத்து, அவன் ஒற்றை விழியசைவில் பின் செல்லத் தயாராகி நின்றிருந்தும், அதீந்திரன் அவர்கள் புறம் திரும்பவும் இல்லை, ஏறெடுத்துப் பார்க்கவும் இல்லை.

தன் போக்கில் நீந்தி குளித்துக் கொண்டிருந்தவனை நெருங்கிய செந்தில், "தம்பி நேரமாகிடிச்சி…" எனவும், எழுந்து வந்து அவரிடம் இருந்து துண்டை வாங்கித் தலை துவட்டியவன், வீட்டிற்கு வரவும், அனைவரும் மதிய உணவுக்கு வரவும், சரியாக இருந்தது.
உணவு முடிந்ததும், தன் தமையனிடம் தொழில் சம்மந்தமாகப் பேசிக் கொண்டிருந்தவனின் அருகில் ரகுநந்தனும், எதிரில் அலர்மேல் மங்கையும், வைஜெயந்தியும் அமர்ந்தனர்.

ரகுநந்தன் "அதீப்" எனவும்
"என்னப்பா?" என்றவன் பார்வை, ஊஞ்சலின் பின் இருந்த சுவரில் இருந்தது. அவரை நோக்கி இல்லை.

“என்னைப் பாருடா!" என்றதும், ஒரு நொடி அவர் முகம் நோக்கியவன், பின் மீண்டும் பார்வையைச் சுவற்றில் பதித்தான்.

"அதீப், நாளைக்கு என் நண்பன் மாதேஷ்வரனோட பொண்ணுக்குக் கல்யாணம். அதுக்கு நம்ம எல்லாரையும் அழைச்சிருக்கான், இன்னிக்கு கோவில்ல. நீ அங்க இல்லாததால, உன்னைப் பார்க்க முடியவில்லை." எனக் கூறிக்கொண்டிருக்க,

அதீந்திரனோ, "அம்மா, இந்தப் பால் குடம், முளைப்பாரி எல்லாம் இனிதான வரும்?" என்றான்.
"அதீப்" என்ற தந்தையை நோக்கித் திரும்பி,
"7 மணிக்கு தயாரா இருந்தாப் போதுமில்ல?” என்றவனிடம்,
புருஷோத்தமன் "போதும்டா." எனவும்,

“சித்தப்பா... பால்குடம் வருது…" எனத் துள்ளிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. வீட்டு மாடியில் நின்று, அதை அகலாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். தள்ளி வரும் போது பார்த்தவன், ஊர்வலம் நெருங்கவும் அறைக்குள் சென்று விட்டான்.


எனை சூழந்தவர்களையும்
சூழ்நிலைகளையும்
நிர்ணயித்து நிர்வகிப்பவன்
உனை சூழ்ச்சிகளின் சுழலில்
சிக்க விடுவேனோ ?
தடுத்தாட்கொள்வாயோ
தகர்ந்து போகும் முன்னே…?

******************
 
அத்தியாயம் - 4

பேருந்தில் இருந்து இறங்கிய ஆராவை அழைத்துச் செல்ல, தயாராக இருந்தார், மாதேஷ்வரன் ஆராத்யாவின் தந்தை.

மாதேஷ்வரனைக் கண்டதும் முகம் மலர அவரிடம் வந்த மீனா, “என்ன பெரியப்பா, நல்லாயிருக்கீங்களா?" என்றதும் ஏதோ யோசனையில் இருந்தவர், மீனாவின் குரலில் தன்னை மீட்டு சிறு புன்னகையுடன்,
“வாம்மா மீனா! நல்லா இருக்கோம். நீ எப்படிமா இருக்க? பரிட்சை எல்லாம் நல்லபடியா எழுதி இருக்கியா?" என்றார்.

“அருமையா எழுதியிருக்கேன், பெரியப்பா!" என்றாள்.
ஆராவும், இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டே பேருந்தில் இருந்து உடைமைகளை இறக்கி சரிபார்க்க, மாதேஷ்வரன் ஆராவின் அருகில் இருந்த இரு பெட்டிகளைத் தூக்கியவாறு மீனாவிடம்,

"நீயும் வா தாயி, உங்க வீட்ல வுட்டுருதேன்." என்றவரிடம்,
"பெரியப்பா, அம்மா அப்பா இரண்டு பேரும் ஊர்ல இல்ல... நாளைக்கி தான் வருவாக. இன்னிக்கு ஆரா கூடத் தான்." என்றவள் மீதம் இருந்த பைகளைத் தூக்கி வர, வாகனத்தின் பின்புறத்தில் அனைத்தையும் அடுக்கிய பின், முன்புறம் மாதேஷ்வரனும், பின்புறம் இவர்களும் ஏறிக் கொள்ள, கார் புறப்பட்டது.

தந்தை சற்று கோபமாக இருப்பதாகத் தோன்றியது ஆராவிற்கு, சாதாரணமாக ஒரு விசாரிப்பு கூட இல்லாதது, என்னவோ? ஏதோ? என்ற உள்ளுணர்வை உற்பத்தி செய்து வைத்தது.

ஆராத்தியா, மீனா இருவரும் இளவயது தோழிகள் இருவரும் வெவ்வேறு கல்லூரியில் படிப்பவர்கள், ஒரே ஊர் என்பதால் விடுமுறைகளில் சந்தித்துக் கொள்பவர்கள். இன்று ஒரே பேருந்தில் ஒன்றாக வந்தனர்.
வழியெங்கும் ஆரா மீனாவின் பேச்சிற்கு காதைக் கொடுத்தாலும், ‘தந்தை ஏன் பேசவில்லை. அவரது கோபத்திற்கு என்ன காரணம்?’ என யோசித்தபடி, காரணங்களை மனம் தேடிக் கொண்டிருந்தது.

வீட்டுத் தெருமுனையின் முன் கார் திரும்பவுமே, அன்னை பத்மா, தங்கை வசுதாரிணி இருவரும் வாயிலில் நிற்பதைப் பார்த்து விட்டாள், ஆரா. வாகனம் கேட்டின் முன் நிற்கவும், அவர்கள் இவளிடம் வரவும் சரியாக இருந்தது. இறங்கிய உடன் தாயை அணைத்துக் கொண்டவள், பின் சுற்றும் பார்த்தவள் ஏதோ கேட்க வாய் திறக்கும் முன்,

மாதேஷ்வரன் "எதுவாயிருந்தாலும் வீட்டுக்குள்ள போய்ப் பேசிக்கலாம்." என்ற படி வீட்டுக்குள் போய் விட, அவரைத் தொடர்ந்திருந்தினர் பெண்கள்.

முன் வரவேற்பு அறை தாண்டி கூடத்திற்குள் வந்தவர், அதற்காகவே காத்திருத்தார் போல், உடைமைகளைத் தூக்கி ஒரு பக்கம் போட்டவர், ஆராவின் முகம் நோக்கி,
"இன்னிக்கு உனக்குக் கல்யாணம். அம்மா சொல்றதக் கேட்டு நட!" என்றவர் தனது அறைக்குள் விறுவிறுவெனச் சென்று விட்டார்.

அதிர்ச்சியில் திகைத்து விழித்தவாறு நின்றிருந்தவளைப் பார்த்த தங்கையும் தாயும் வார்த்தைகள் இன்றி, தாங்களும் அவளை வெறித்தபடி பார்த்திருந்தனர். மீனா தான்…
"ஆரா, ஆரா!" என உலுக்கி, அவளைச் சுய நினைவுக்குக் கொண்டு வந்தாள்.

திடீரெனக் கேட்ட செய்தியில் மூளை மரத்துப் போனவள், ‘என்ன கேட்க வேண்டும்? எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பதையும் மறந்திருந்தாள்.’ சற்று நேரம் கழித்து எதைக் கேட்க எனப் புரியாமல்,

"என்னமா இது?" என்று கண்களில் நீர் மல்கக் கேட்டவளை…
"என் ராசாத்தி, ஒன்னுமில்ல தாயி! எல்லாம் நம்ம விதி. இதையெல்லாம் அனுபவிக்கனும்னு தலைல எழுதிட்டியே ஆண்டவா!" எனக் கதறியபடி இறுக அணைத்து கொண்டவர், நிகழ்ந்தவற்றைக் கூறினாள்.

………………….

"ஏய்! பத்மா! அங்க சாமி படத்துக்கு முன்ன ஐயாயிரம் இருக்கு. அறுப்பு மிஷினுக்கு வைச்சிருக்கேன்.

அந்தப் பையன் வந்தாக் குடு, நான் மேலகாட்டுல களை பறிக்க ஆளுகள வரச் சொல்லி இருக்கேன், நேரமாயிட்டு நா வாரேன்." என்றவர் வாசலுக்கு விரையவும், சட்டைப் பையைச் சரிபார்த்தவர், அதில் அலைபேசி இல்லாதது கண்டு,
"ஏ…. பத்மா! அந்தப் போன எடுத்தா, சார்ஜர்ல கிடக்கு!" என்றபடி தனது இரு சக்கர வாகனத்தை இயக்க…

"அப்பா! என்னைய பள்ளிக் கூடத்தில் இறக்கி விட்டுருங்க." என இரட்டை பின்னல் துள்ள, தந்தையின் பின் ஏறிக் கொண்டாள், தாரிணி.

"ஏன்டி பக்கத்துலதான இருக்கு, நடந்து போனா ஆவாதோ?" என்றபடி வந்த பத்மாவிடம் இருந்து போனை வாங்கித் தந்தையின் சட்டை பையில் வைத்தவள்,

"சும்மா சும்மா நடந்தா, கால் கட்டையாகிப் போயிடும்மா. அதான் சேமிச்சு வைக்கறேன்."

"இந்தா வாரேன். உனக்கு வாய் நீளுது!" என்றபடி கையை ஓங்கினார்.

"சீக்கரம் போங்கப்பா, அம்மா அடிக்கவர்றதுக்குள்ள…" என்றவள் பத்மாவிற்குக் கை அசைத்தபடி விடை கூற, மாதேஷ்வரனும் சிரித்த முகமாகவே வண்டியை ஓட்டிச் சென்றார்.

வீட்டுக்குள் நுழையும் போதே "அம்மா… காபி!" என்றபடி வந்த இளைய மகளை,

"வீட்டுக்குள்ள வரும் போதே, அம்மா காபி, அம்மா காபின்னு ஏலம் போடாதடி! போ! போயி கை, கால் முகம் கழுவி ட்ரஸ மாத்து!"

பீடித் தட்டை தள்ளி வைத்துவிட்டு எழுந்தவர், "பொம்பள புள்ளைக ஒன்னுக்கு இரண்டு இருக்குன்னுதான் பேரு, வெந்நீ வைக்கக் கூடத் தெரியாது!"
உடை மாற்றிக் கொண்டே வந்தவள், ஜிப்பைப் போட்டபடி அடுப்படியில் நுழைந்தவள், "சும்மா சொல்லாத! உன் மூத்த மகளுக்குத் தான் தெரியுமே!" எனவும்,

''ஆமா, உங்கக்காதான, கல்யாணத்துக்குச் சொன்னா வளைகாப்புக்கு வருவா, அம்புட்டு வேகம்!" என நொடித்துக் கொண்டவரின் முகம், பெருமிதத்தில் இருந்தது.

"மவளப் பத்தி பேசிறப்படாது, முகமெல்லாம் டாலடிக்குமே!" என்றாள் காபியை குடித்துக் கொண்டே…

"ஆமாடி, போ! போய்ப் படிக்கிற வழியப் பாரு! அந்த உள்ளாற இரண்டாந்தட்ல சேவு இருக்கு எடுத்துக்க." என்றபடி வெளியே வர,
கணவனைப் பார்த்த உடன், மீண்டும் காபி எடுத்து வர உள்ளே சென்றாள்.
தாரிணியோ "ம்மா நானும் NSS ல சேரப் போறேன்." என்றபடி காபியை உறிஞ்சினாள். மகளின் கூற்றைக் கேட்டபடி உள்ளே வந்தார் மாதேஷ்வரன். போகும் போது மலர்ந்து இருந்தவர் முகம், வீடு திரும்பிய போது கறுத்துப் போய்க் கிடந்தது.

இளைய மகளிடம் "ஒன்னும் வேண்டாம். ஒருத்தி சேவை செய்யப் போய் வாங்கிக் குடுத்துருக்க, சிறப்பு போதும்! நீ ஒரு செப்பும் எடுக்க வேண்டாம்." என்றவரின் அருகில் வந்த பத்மா, கையில் காபியை கொடுத்த படி,

"ஏன் எம்மவ சிறப்புக்கு என்ன? நாலு வயசானவுகளுக்கு உதவிதான செய்யப் போயிருக்கா? அதுக்கு எதுக்கு இந்தக் குதி குதிக்கீக?" என்றது தான் தாமதம், காப்பி டம்ளரை விசிறியடித்தவர்,

அவரையும் அரைந்திருந்தார்.
இத்தனை வருடக் காலத்தில், கணவனிடம் சுடு சொல் கூட கேட்டிராதவர், அடி வாங்கியதில் விழிகள் கலங்க நின்று விட்டார். தாரிணியோ, சிலையெனச் சமைந்து போனாள்.

புயலின் சீற்றத்துடன் இருந்தவர், “பொம்பளப் புள்ளைக்குப் படிப்பெல்லாம் வேண்டாம், கட்டி குடுத்துடுவோம்னு அப்பவே சொன்னேனே கேட்டியளா? ஆத்தாளும், மகளுமா சேர்ந்து ஆடினியல்ல!" என்றவர்,
“எம் மக படிக்கா, சமூக சேவை செய்தான்னு பவுசு கொழிச்சல்ல, இல்லயாம், நிதம் ஒருத்தன் கூட ஊர் மேயப் போறான்னு படம் புடிச்சி போட்டுருக்கான்." என்றபடி அலைபேசியில் ஆராவைத் தவறாகச் சித்தரித்து, குமாரால் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த படங்களைக் காண்பித்தார்.

உண்மையில் ஆராவும், அவளது சில தோழிகளும் சில முதியோர் இல்லங்களுக்கு உதவச் செல்ல, ஆசிரம நிர்வாகி ஒரு முறை நல்ல பொருளாதார வசதியுள்ள சில முதியவர்கள் மருத்துவனை, சில பொது இடம், கரண்ட் பில் கட்ட, தனிமையைக் குறைக்க ஆள் இன்றித் தவிக்க, அவர்களுக்கு இவர்கள் சத்தமின்றி உதவி செய்ய ஆரம்பித்தனர்.

பின்பு அவர்களை ஒரு குழுவாக மாற்றி, கணினி இயக்க, அதன் மூலம் பணிகளைச் செய்ய, தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளச் சொல்லி தருவது, வேறு பொழுதுபோக்கு என உதவினர். அப்படி அறிமுகமானவர் சதாசிவம், சிவகாமி தம்பதியர்.

இவர்கள் பத்மாவிற்கு, சுற்று வழிச் சொந்தம். அவர்களின் ஒரே மகன் வெளிநாட்டில் இருக்க, ஆராவைத் தங்கள் பேத்தியாக நினைத்தனர். கல்லூரியின் கடைசி நாள் அன்று பரிட்சை முடிந்து பையுடன் ஊருக்குக் கிளம்ப, தோழிகள் வேறு ஊர் என்பதால் இவளுக்கு முன் சென்றிருக்க, அவளுக்கு சதாசிவத்தின் மகனிடம் இருந்து திடீரென போன் வந்தது.

சதாசிவம் ஏற்கனவே படுக்கையில் இருக்க, தற்போது சிவகாமி கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், தான் வரும் வரை அவர்களைப் பார்த்துக் கொள்ளும் படி கூறியவன், நண்பன் ஒருவனை அனுப்பி வைத்தான். அவனுடன் தான் ஆரா அன்று காரில் போனது. இதைப் பெற்றோர்களிடம் கூறி, அனுமதி பெற்றுத் தான் போனாள்.
"எவனாச்சும் எதையாவது போட்டா, அதை அப்படியே நம்ப முடியுமா? அந்தப் புள்ள, நம்ம கிட்ட சொல்லிட்டுத்தான போச்சி?" என்றார் பத்மா அழுகையினூடே…
மாதேஷ்வரனோ... "ஊர்ல எல்லாப் புள்ளைகளையுமா படம் புடிச்சி போடுதான்? உம் மக ஊர் சுத்தப் போய் தான இவ்வளவும், இவளும் பேசாம வீட்டோட கிடந்திருந்தா, இந்த இம்சையெல்லாம் வருமா? என்னமோ இரண்டெழுத்துத் தெரிஞ்சா போதும்னு வீட்டோட வைச்சிருந்தா, இப்படி கண்ட கண்ட நாயெல்லாம் பேசறத கேட்க வேண்டி இருக்காதுல்ல…"

இதில் ஆவேசம் கொண்டவராய், அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்தபடி, "பொம்பள புள்ளைக வெளிய தெருவுல போனா இவுனுக இஷ்டத்துக்குப் பேசுவானுவளோ! பேசுற அந்த நாக்க இழுத்து வைச்சி அறுக்கனும்! பேசுவானுகளோ மானாங்கனையா, வாங்க போயி போலீசு ப்ராது கொடுத்து, இவனுகளத் தூக்கி உள்ள வைச்சிட்டுதேன், மறுசோலி!" காளியென நின்றிருக்க,

மாதேஷ்வரனோ முகம் இறுக, “எதுக்கு இப்ப நாலு பேர் பேசரத, பொறவு பேப்பர பார்த்து நாலாயிரம் பேர் பேசுவானுவோ, விசாரிக்கேன்னு நேரம் கெட்ட நேரம் வந்து இம்ச பண்ணுவானுவ! வயசுப் புள்ளைய, அங்க வா! இங்க வான்னு இஷ்டத்துக்குக் கேள்வி கேட்டு திரிக்கவா ? நாளப் பின்ன கல்யாணம் காட்சின்னு வரும் போது, அவனுக்குப் பதில் சொல்லனும். இவுனுக கோர்ட்டு கேஸுன்னு இழுத்தடிக்கறதப் பார்த்தா, கடைசில காசு செலவு பண்ணி, நாமளே கேஸ வாபஸ் வாங்க வேண்டி இருக்கும்."

இது போன்ற சில காரணங்கள் பல கொடுமைகளை வெளியே வர விடாமல் வைத்து இருக்கிறது. சட்டமும் இருக்கிறது, காவலும் இருக்கிறது, நீதியும் இருக்கிறது, பெண்களும் இருக்கின்றனர். கயைமையும் இருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, வலுவின்றி,

“இல்லங்க! நம்ம புள்ள மேல தப்பில்லைன்னு ஊர்ஜிதமாயிடும். அந்தப் பொறுக்கிப் பயலுக்குத் தண்டனை கிடைச்சிடும்." என்றார்.

"அது அப்புறம், ஆனா, ஏற்கனவே பார்த்தவங்க பேசுற பேச்ச, என்ன செய்ய? ஒவ்வொருத்தரையா பார்த்து, எம்மக மேல குத்தமில்லன்னு சொல்ல முடியுமா? இல்ல, போஸ்டர் அடிச்சி ஒட்ட முடியுமா?" என்றவரிடம்,

“எது எப்படின்னாலும், பேசுறவங்க பேசத்தேன் செய்வாக! அதுக்குப் பயந்தா முடியுமா? அவன் செஞ்ச தப்புக்கு என்ன பரிகாரம்?" என்ற பத்மாவை உறுத்தவர்,

"உன் சோலி எதுவோ, அத மட்டும் பாரு! என் மரியாதையை எப்படிக் காப்பாத்திக்கனும், என்ன செய்யனும், என்ன செய்யப்படாதுன்னு நீ ஒன்னும் எனக்கு ரோசனை சொல்லத் தேவையில்லை!" என்றவர்,

“இதைப்பத்தி ஆராவிடம் யாரும் பேசக்கூடாது! ஏன்னா, அவ போன அமத்தி (ஸ்விட்ச் ஆப்) வைச்சிருக்கா! எனக்குத் தெரியாம ஆத்தாளும் மகளும் அவளுக்குச் சொன்னீக!" என எச்சரித்திருத்தவர் உள்ளறைக்குச் சென்று விட,
ஆராவோ ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்தவள், அணைத்து வைத்த போனை நாடவில்லை. அதற்கு நேரமும் இல்லை. பேருந்திலும் களைப்பு மிகுதியில், ஏறிய உடன் உறங்கி விட்டாள்.

அனைவரும் இருந்த இடத்தை விட்டு நகராமல், அங்கேயே வெகு நேரம் அமர்ந்து விட, விடியும் தருணத்தில் தாயை அணைத்தபடி உறங்க ஆரம்பிக்க,

அறையில் இருந்து வெளியே வந்த மாதேஷ்வரனைக் கண்டதும் விழுந்தடித்து எழுந்து உட்கார, இருவரையும் பார்த்தவர், குளித்து கிளம்பி, ஒரு வார்த்தை பேசாமல் வெளியே சென்றார்.

ராஜேஷை மணமகனாகப் பேசி முடித்தவர், பத்திரிக்கையுடன் வீடு திரும்பினார்.

சாமி அறையில் விளக்கு முன் பத்திரிக்கையை வைத்தவர், பின் வந்து நின்ற மனைவியைப் பார்த்து,
“நாளைக்குக் குல தெய்வம் கோயிலுக்குப் போகனும். வரும் போது உன் அண்ணன் தம்பிக்குப் பத்திரிக்கை வைச்சிடலாம்.” என்றவரிடம், எதைக் கொண்டு பேச்சைத் தொடங்க என எண்ணியவர்,

"என்னங்க இது? ஆராக்கு பையன் யாருன்னு கூடச் சொல்லல?" என பத்மா ஆரம்பிக்க,

"ஏன்? உம் மக நான் பார்த்த பையனக் கட்ட மாட்டாளோ? இந்த விஷயம் ஆராக்கு தெரியக் கூடாது, மீறி தெரிஞ்சாலோ? இந்தக் கல்யாணம் நின்னாலோ? நான் உயிரோட இருக்க மாட்டேன்?" என்றவரிடம், எதுவும் கூற இயலாதவராய் நின்றிருந்தார் பத்மா. மேற்கொண்டு நடக்கும் காரியங்களைக் கவனிக்க அவருக்கு நேரமில்லை, தடுக்க அதிகாரம் இல்லை. அவகாசமும் இல்லை.

இன்று காலை ஆராவை அழைத்து வரக் கிளம்பிய மாதேஷ்வரன், "ஏற்கனவே நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல. நீ என்ன செய்வியோ? ஏது செய்வியோ? அவ கழுத்துல இன்னிக்கி தாலி ஏறணும். இல்ல, உன் கழுத்துலருந்து இறங்கிரும்." என்று கங்குகளை இறைத்து விட்டுப் போயிருந்தார்.

அனைத்தையும் கூறி முடித்தவர், "நான் எதைக் கேட்க ? யாரை நோக? என்ன செய்ய? எதைப் பேச? எனக்கு ஒன்னும் புரியலையே, முருகா!" என்றவர்,

சட்டென எழுந்து, "ஆரா, நான் கும்புடுத என் குல தெய்வம் மகமாயி அம்மனா, உன்ன நினைச்சி கேட்கேன். தயவு செய்து இந்தக் கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லிருமா, தாயி!" எனக் கரம் குவித்து மடியேந்தி நின்றவரை,
"அம்மா...." எனக் கூவலுடன் அணைத்துக் கொண்டாள்.

"உங்களுக்காக யாரை வேணும்னாலும் கட்டிகிறேன்." என்றவளின் கண்ணீர், பத்மாவை நனைத்தது.
மகளைச் சமாதானப்படுத்தியவர், தன்னையும் திடப்படுத்திக் கொண்டு, "இரு, நான் போயி உனக்கு காப்பித் தண்ணி எடுத்தாறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல, நம்ம பக்கத்து ஆளுக, மாப்பிள்ளை வீட்டுலர்ந்து பொண்ணழைக்கவும் வந்துருவாக!"
"சரிம்மா…" எனச் சோகையாய் சிரித்தவளைக் கண்ட மீனாவும், வசுதாவும் கண்ணீர் வழிய நின்றிருந்தனர்.

சற்று பொறுத்து, “மாப்பிள்ளை யாருடி? ஆள் எப்படி?” என்று சூழ்நிலையை மாற்றிய மீனாவிடம்,
“எல்லாம் அந்த காளியாத்தா மவன்தான், விளக்கு மாத்துக்குப் பேரு பட்டுக் குஞ்சலமாம், அதை மாறி இந்தத் தெருப் பொறுக்கிக்கு, பேரு ரா... சே... சூ....” என நொடித்தாள்.

"ஏய் நம்ம மேலத் தெரு காளியாத்தா மவனா? அவ சின்னத்த முறையில்ல வரும் உங்களுக்கு? அ...வ...னா…" என்ற மீனாவின் இழுவையில், அவனைப் பற்றி அவளுக்கும் தெரியும் என்பது புரிபட,
தாரிணி, "ஆமா, மீனாக்கா! அம்புட்டும் நடிப்பு! எங்களப் பார்த்தா ஒரு வழிசல், ஒரு பேச்சு! யாராச்சும் வந்தா, அப்படியே மாத்தி இன்னோரு சீனப் போட்டுருவான்." எனப் பொரிந்தாள்.

அப்போதுதான் மாப்பிள்ளை யார் என அறிந்தவள், மனம் இற்றுப் போனது. ஊரில் நடந்த பொதுக் கூட்டத்தில், காற்றாலைக்கு நிலம் விற்பது குறித்துப் பேசித் தீர்மானம் எடுத்திருந்தனர். அதன் படி விவசாய நிலங்களை காற்றாலைக்கு விற்கக் கூடாது எனத் தீர்மானம் எடுத்திருந்தனர்.
காற்றாலைகள் விவசாய நிலங்களில் அமைந்தால், அந்த இடம் கான்கீரிட் காடாகும். மீண்டும் எப்போதும் விவசாயம் செய்ய முடியாது. ஏனெனில் அத்தனை உயரம், அதற்கு ஏற்ப கீழே அஸ்திவாரம் எழுப்ப வேண்டும். பின் அந்தக் காற்றாலை ஒப்பந்ததின் படி அமைந்திருந்தாலும், அவை கான்கீரிட் பாலையே அன்றி, மீண்டும் விவசாய பூமி ஆகாது. எனவே தான் அதனைக் கடுமையாக எதிர்த்த மாதேஷ்வரன், மற்றவர்களுக்குப் புரிய வைத்து, தரகர் மற்றும் வேறு சில விவசாயிகளின் எதிர்ப்பினை மீறி அவர்களை ஒன்றிணைத்து, நிலம் காற்றாலைக்கு விற்பதில்லை எனும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அந்தத் தரகர் வேலையைப் பார்த்து விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் என இருபுறமும் பணத்தைக் கொள்ளை அடிப்பவர்களில் ஒருவன் இந்த ராஜேஷ். இவரைப் பழிவாங்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவனது திருவிளை ஆடல்கள் பல ஊருக்குள் பலருக்குத் தெரியாது.

ஆனால்... அதை அவன் வாய்மொழியாகவே ஒரு முறை கேட்க நேர்ந்தது அவளுக்கு.
ஆராத்தியா கண்ணீரோடு அன்னையின் முகம் பார்த்து, "பேசாம, செத்துறட்டுமாம்மா?" என்றவளை தாய் அதிர்ந்து நோக்க, உள்ளேயிருந்து வந்த மாதேஷ்வரன்…
"இப்ப அது முடியாது. என் கௌரவம் பாழாப் போயிரும். கல்யாணம் முடிஞ்ச அப்புறம் சாவு!" என்றிருந்தார்.

அதற்கு பிறகு இயங்கும் சிலை என மாறிப் போனாள், ஆரா. பெண்ணழைக்க ஆட்கள் வந்ததோ, மண்டபத்தில் நுழைந்தது மணவறைக்கு அழைத்து வரப்பட்டதோ, எதுவும் அவள் மனதில் இல்லை.

பட்டு வேட்டி சட்டை பளபளக்க மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தவன், திருமணத்திற்கு சில நிமிடங்கள் இருக்கையில் மணவறையில் இருந்து எழுந்த ராஜேஷ்,
“இவ கழுத்தில் தாலி கட்ட முடியாது, இவ கூட வாழ முடியாது!" எனக் கூறியிருந்தான். இவரைப் பழிவாங்கும் நேரத்திற்குக் காத்திருந்தவன், தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, அனைவரும் அதிர்ந்து நோக்க, மாதேஷ்வரன் அருகில் ஓடி வந்து,

“என்ன தம்பி இது? நான் அன்னிக்கே உங்க கிட்ட எல்லா விசயத்தையும் சொல்லித் தான கல்யாணம் பேசினேன்." என வினவ,

"அப்ப அது சரியாப் பட்டது. ஆனா, இப்ப யோசிச்சிப் பார்க்கும் போது அது உண்மையா இருக்குமோன்னு தோனுது. நாளைக்கி நாங்க இரண்டு பேரும் போகும் போது, உன் பொண்டாட்டி எவன் கூடயோ போனவளாமேன்னு கேட்டா, நான் என்ன பதில் சொல்ல?" என்றவன்,

“அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லனும்னா... உங்க நிலத்தை…" எனப் பத்திரங்களை நீட்டியவன், விடையாக அவரது அனைத்து நிலங்களையும் அதற்கு ஈடாக்கி தரக் கேட்டிருந்தான்.

எதை நம்பக் கூடாதோ அதை நம்பினார். யார் உரைப்பதை செவிமடுக்க வேண்டுமோ? அதைத் தான் எனும் நினைவில் தூர நிறுத்தினார். எதையோ கெளரவம் என்றெண்ணி, இப்போது அனைத்தும் இழந்து செய்வதறியாது நின்றிருந்தார்.


சமூக இந்திரர்களின்
தீண்டலில் கல்லாகிப்
போன அகலிகை நான்!
இந்திரர்களின் தலைவன்
உன் வருகையில்
என் விமோசனமோ?
 

அத்தியாயம் - 5


திருமணத்திற்கு வந்த ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றியதை பேசத் தொடங்க, நாக்குகள், அவை தீயின் நாவுகள் எனச் சுழன்றடித்தன. எனவே தான், வள்ளுவன் நாவடக்கம் பற்றி முன்பே எழுதிவிட்டான்.

நமக்குத்தான் யார் உரைத்தாலும் உணர்ச்சி இல்லையே, அடுத்தவரைக் கீறி, அந்தக் காயத்தின் குரூரத்தை ஆழப்படுத்தி ரசிப்பதில் நமக்கு நிகர் நாமே! எந்த விலங்கினமும் அதைச் செய்வதில்லை.

தனக்கு வேண்டியதை வேளை பார்த்து சாதித்துக் கொள்ளும் குள்ள நரியை மணமகனாய் வரித்துவிட்ட துக்கத்தில் நின்றிருந்தார், மாதேஷ்வரன்.
தவமிருந்து தன் தாயின் மறுபிறப்பாய் வந்துதித்த தன் மகளை ஆராதிக்க வேண்டும் என்றே ஆராத்யா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

தன் மகளைப் பற்றிய தவறான பதிவில், ‘முதலில் இப்படி ஆகிவிட்டதே எனக் கோபப்பட்டு வார்த்தைகளை வீசினாலும், தன் மகள் மீது சுமத்திய வீண் பழி போக்க, அவருக்குத் தெரிந்த வழி திருமணம்…

ஏனெனில் போலீஸ், கேஸ் என அலைவதானாலும், அது அவளின் பின் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடாது. தன் மகளாய் அன்றி மணவாளனுடன் அவளது இனிய வாழ்க்கையே அவனுக்குத் தண்டனை. அதன் மூலம் பதிவேற்றியவனின் நோக்கம் நீர்த்துப் போகும், எனவே தன் மகள் ஊரில் கால் பதிக்கும் நாள், அவளின் திருமண நாளாக இருக்க வேண்டும்.’ என எண்ணியவர்,
‘ராஜேஷுக்கு ஆராவின் மேல் விருப்பம் என அறிந்துகொண்டார். அவனிடம் உண்மையைக் கூறி மணம் பேசி இருந்தார்.

தன் மகள் தான் கூறுபவனை மணப்பாள் எனும் நம்பிக்கையிலும், இந்த விஷயம் மகளுக்குத் தெரிந்து, அவள் விபரீத முடிவெடுத்து விட்டால் என்ன செய்வது? எனும் அச்சத்திலும், அவளிடம் கூற தடை விதித்திருந்தார். அவளது அமைதி, அடக்கம் மற்றும் மென்மையான சுபாவம் பற்றி அவர் சிந்தித்துச் செயல் பட்டிருந்தார்.’

அவள் எங்கே சென்றாள் என அவர் அறிவார். அப்போது அவள் இருந்த சூழ்நிலையில், நண்பர்கள் யாரும் அவளைத் தொடர்பு கொள்ள முடியாது. எனவே ஆராவிற்குத் தெரியும் முன், அவளது துயர் நீக்க முயன்றிருந்தார், தனக்குத் தெரிந்த வகையில்.

ஆனால், ராஜேஷின் புறமுதுகிடலையும், பேராசையையும், அவர் எதிர் பார்க்கவில்லை. இப்போதும், அவர் சொத்துக்களை இழக்கத் தயார் தான், என்றாலும் மகளின் நிம்மதி பறி போய்விடுமோ என்றெண்ணிக் குமைந்தார்.
………………………

பிற்காலச் சோழப் பேரசு,

விஜயாதித்த சோழன். அவனே பிற்காலச் சோழர்களில் முதல் அரசனாகக் கருதப்படுகிறான். அவன் பல்லவ ராஜ்ஜியத்தைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததைப் பற்றி விவரித்திருந்தை மிக சிரத்தையுடன் படித்துக் கொண்டிருந்தவனை, அதை விடச் சிரத்தையாக எதிரிலிருந்தவள் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளும் ஒரு நூறு முறை தன் ஆடையைத் திருத்தி, சுற்றியுள்ள நாற்காலிகளைத் தேய்த்து, புரியாத புத்தகங்களைப் படிப்பதாக பாவனைகள், உடல் மொழிகளில் எனைப் பாரேன்? என முயன்று கொண்டிருந்தாள். பலன் என்னவோ பூஜ்ஜியமே, அவன் நிமிரவே இல்லை.

அடேய்! உன்னை எல்லாம் பெத்தாங்களா? இல்ல, செஞ்சாங்களா...? இம்ச புடிச்சவன், திரும்பிப் பார்க்கறானா பாரு? என வைது கொண்டிருந்தாள். அலைபேசி அதிர்ந்து தன் இருப்பை உணர்த்தியது.

அதை எடுத்தவன், "அதீப், இங்க வாடா!" எனும் அன்னையின் அழைப்பில்,

நூலகத்திலிருந்து வெளியேறி, எதிரிலிருந்த மண்டபத்திற்குள் நுழைந்தான். அங்கு மண்டப வாயிலில் ஏதோ பாடல் அலற, அனைவரும் அமர்ந்திருக்க…
அதீந்திரன் அவன் உள் நுழைந்த விதம், ஜனகனின் அரசவைக்குள் நுழைந்த ராமன் போன்றிருக்க, அவனைப் பார்த்த அனைவரும், “தாள் கண்டார் தாளே கண்டார், தோள் கண்டார் தோளே கண்டார்.” என மெய் மறந்து தாங்கள் பேசிய விஷயம் மறந்து, செய்த செயல் மறந்து நின்றனர்.

அலர்மேல் மங்கை, ரகுநந்தன் இருவரும், "அதீப், இங்க வந்து இந்தத் தாலிய, பொண்ணு கழுத்துல கட்டு" எனவும் அவன் ஏதோ கூற வர,

"எதுவா இருந்தாலும், வீட்டில் போய்ப் பேசிக்கலாம்."
என்றவர்களை எதிர்த்து ஒன்றும் பேசாமல், தன் அருகில் மின்னல்களின் அரசி என அமர்ந்திருந்தவளை கண்ணெடுத்தும் பாராமல், திருமாங்கல்யத்தை அணிவித்திருந்தான்.

ஆராத்தியாவோ என்னவென்று பிரித்தறிய இயலாமல், அவனை மட்டுமே பார்த்திருந்தாள்.

உற்றாரும், உறவினரும் தேவரும் மூவரும் வாழ்த்த, அவளை மணந்திருந்தான்.
அடுத்த நொடி, மணவறையினின்றும் எழுந்தவன், வெளியே சென்றிருந்தான்.

அவனை அறிந்த அவன் குடும்பத்தினர் அனைவரும் விடை பெற்று விரைந்திருந்தனர். அந்த மகிழ்வுந்தின் முன்னிருக்கையில் அவன் அமர, பின் இருக்கையில் அலர்மேல் மங்கையுடன், ஆராவும் அமர்ந்திருந்தாள். சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது அந்த வாகனம்.

நடந்தவற்றை நினைவுப் படுத்திப் பார்த்தாள், ஆரா.
ரகுநந்தன் "மாதவா என்னடா இது?" எனவும்,

தன் நண்பனை கட்டிக் கொண்டவர் அனைத்தையும், கூறி இருந்தார்.
“எங்கிட்ட சொல்லறதுக்கு என்னடா?” என்றவர் பணம் தர முயல,

“வேண்டாம் ரகு. இனி இந்தக் கல்யாணம் நடந்தாலும், அது அவளுக்கு நிம்மதியைத் தராது.”
அலர்மேல் மங்கை, ரகுநந்தனிடம், "நம்ம அதீப்புக்குக் கல்யாணம் பண்ணிக்கலாமா?" எனவும்,

அவரைத் திகைத்து பார்த்த புருஷோத்தமனையும், ரகு நந்தனையும் ஒரு சேரப் பார்த்த வைஜெயந்தி,

“பண்ணிக்கலாம், நல்லாருக்கும்." என தன் கருத்தைக் கூற…
“இது சரியா வருமா?" என்ற கணவன்மார்களுக்கு,
"எல்லாம் சரியாக வரும்." என நம்பிக்கையுடன் மொழிந்திருந்தார்கள் மனைவிகள்.

‘தன் வாழ்வில் காலையிலிருந்து நிகழ்ந்தனவற்றையும்... இனி?’ என்ற கேள்வியுடனும் அமர்ந்திருந்தாள். ஆராத்தியா

மலைப்பாதையின் வளைவுகளாய் வாழ்க்கை இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்? மூடிய பனி போல் எதிர்வரும் மனங்களில் முகமூடி மறைக்கும் உண்மையைக் காண, நம்பிக்கை எனும் சூரியன் வேண்டும்.

தலைகுப்புற கவிழ்க்கும் பள்ளத்தாக்குகளில் வீழாமல் மீள தைரியமும் தேவை. அடுத்தடுத்த திருப்பங்களில் என்ன இருக்கிறது? பூ சொரியும் இனிய மரங்களும் இருக்கலாம். இல்லையெனில் மலைக் குகைகளும் இருக்கலாம். நிலச்சரிவுகள் போல் மனச்சரிவுகளும் நேரலாம்.

ஆனாலும், இனியவை நிகழும் எனும் நம்பிக்கையும், இது கடந்துவிடும் என்ற ஒட்டுநரின் உறுதியையும், மனதில் கொண்டு வர முயன்றிருந்தாள்.

இடையில் ஒரு உணவகத்தின் முன் நிறுத்தியவன், தன் போக்கில் இறங்கிச் சென்றிருக்க, “வாம்மா!" என ஆராவையும் அழைத்துச் சென்றார்,

அலர்மேல் மங்கை.
அந்த உணவகத்தின் குளிரூட்டப்பட்ட ஹாலின் உள் நுழைந்தவன், தான் எப்போதும் அமரும் இடம் காலியாக இருக்க, நிம்மதியெனத் தான் உண்ணும் உணவு வகையையும், தன் தாய் மற்றும் தனது ஒட்டுநர் செல்வத்துக்கு ஆர்டர் செய்தவன், மெனு கார்டை கீழே வைக்க, ஆரா விழித்துக் கொண்டிருந்தாள்.

“டேய்! ஆராவும், நம்ம வீட்டு பொண்ணு! இனிமே அவளுக்கும் என்ன வேணும்னு கேட்டு, அவளுக்கும் சேர்த்து ஆர்டர் தரனும்?”

அலர்மேல் மங்கை, “உனக்கு என்ன வேணும்மா?” எனவும் அவரிடம்,

"யார் இது? இவங்களுக்கு ஏன் நான் பண்ணணும்? எனக்கு மட்டும் தான், நான் ஆர்டர் பண்ணுவேன்? அப்பலாம், என்னையே செஞ்சிக்கச் சொன்னீங்க? இப்ப இவளுக்கு மட்டும் என்னவாம்?"
"டேய்! அவ உன் பொண்டாட்டிடா இன்னிலர்ந்து!"

"நீங்க என்னம்மா, திடீர்னு ஏதோ ஒன்ன இவ கழுத்துல கட்டச் சொன்னீங்க, இப்ப பொண்டாட்டி அவளுக்கு நீ ஆர்டர் பண்ணுன்னு சொல்லறீங்க! வாட் இஸ் திஸ்?" எனப் பொரிய,

ஆராவின் முகத்தைப் பார்த்து பதறிப் போனவர், "டேய் ஹோட்டலுக்குத் தனியா வந்துருக்க மாட்டாடா..... அதான்!" என்றவர் அவளுக்கான உணவைத் தருவித்து உண்ணச் செய்தவர், மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர்.
இரவு வீட்டினை அடைந்தனர்.

மற்ற அனைவரும் விமானத்தின் உதவியில் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

விதித்ததை வாழ்வதில்லை
அதை எனக்காய்
வகுத்ததில் வாழ்பவன்
உன் விதியை
என்னிடத்தில் அளித்தவன்
அறிவானோ
உனக்கென வகுப்பதில்
நீயல்ல, நானும்
உளேன் என....

 




அத்தியாயம் - 6



வீடு வந்து சேர்ந்தவுடன், அதீந்திரன் தன் தளத்திற்குச் சென்று விட, அலர்மேல்மங்கை, ஆராவை தன் அறைக்கு அருகிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அவளை ஓய்வெடுக்கக் கூறியவர் அவளும் உடை மாற்றி வந்து படுத்தவள், எண்ணம் எதிலும் இல்லை. நித்திரை வந்து அவளை ஆட்கொண்டது. ஏற்கனவே பல அதிர்வுகளைத் தொடர்ந்து எதிர்கொண்டதில் அயர்ந்து போயிருந்தாள்.

மறுநாள் நன்றாகப் பொழுது புலர்ந்ததும், எழுந்தவளை எதிர் கொண்ட புருஷோத்தமன்,
"குட் மார்னிங் ஆரா!" எனவும்,
"குட் மார்னிங் மாமா!" என்றவளுக்கு, வைஜெயந்தி காபி கொணர்ந்து தந்தாள்.

"வெரி குட் வைஜெயந்தி! நான் சொல்லறதுக்குள்ள நீயே கொண்டு வந்துட்ட!” என்றவர், கடிகாரத்தைப் பார்த்து

“ஒ ஆடிட்டர வரச் சொல்லி இருக்கேன். நேரமாயிடிச்சி" என ஆராவை விட்டு விட்டுச் சென்று விட்டார்.
மீண்டும் காய்கறிகளுடன் வந்த வைஜெயந்தி, ஆரா முழிப்பதைப் பார்த்து, டைனிங் டேபிளில் அமர்ந்தபடி…

"ஆரா, இங்க வந்து உட்காரு." என்றாள். தயங்கியபடி வந்து அமர்ந்தவளிடம்
"இங்க வேலைக்கு ஆட்கள் இருந்தாலும், சமையல் நாமதான். அதுக்கும் ஆட்கள் இருக்காங்க. அவங்க மற்ற வேலைக்குத் தான்."
இலகுவாகப் பேச, அவளும் கொஞ்சம் தயக்கம் மறைந்து பேசினாள். வைஜெயந்தியிடம் உம் கொட்டிக் கொண்டிருந்த ஆராவின் கண்கள், கணவனைத் தேடி, படிகளை அடிக்கடி பார்த்தபடி இருந்தன.

"ஆரா, இது அவசரமா எந்தவித முன்னேற்பாடும் இல்லாம நடந்த கல்யாணம். அதனால், எல்லாரும் அவங்கவங்க தொழில பார்க்கப் போகனும். அதீப் ஆபீஸ் இங்க இருந்து தள்ளி இருக்கறதால, அங்க பக்கத்திலயே வீடு வாங்கித் தங்கி இருக்காங்க. வாரம் ஒரு தடவை வருவாங்க. இல்ல, அத்தை போய்ப் பார்த்துட்டு வருவாங்க." எனப் பேசியபடி, தான் நறுக்கிய காய்கறிகளை எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைய, அவளைத் தொடர்ந்து ஆராவும் உள் நுழைந்தாள். ஏதோ சிறு உதவிகள் செய்தபடி இருக்க, அலர்மேல் மங்கை, தனது பூஜைகளை முடித்துக் கொண்டு அடுக்களையின் உள்ளே வந்தவர்,

"ஓ ஆரா, நீ எழுந்தாச்சா. வா! வீட்ட சுற்றிக் காட்டறேன்." என கையைப் பிடித்து அழைத்துச் செல்ல, அடுப்படி அதன் அருகில் உணவு அருந்தும் அறை, அதன் மறுபுறம் சேமிப்பு அறை ஒரு பக்கம் எனவும் மையத்தில் கூடம், அதன் மறுபுறம் பூஜை அறை, அலர்மேல் மங்கையின் அறை, விருந்தினர் அறையும், மேல் தளத்தின் ஒரு புறம் மூத்த மகனுக்கு எனவும், மறுபுறம் அதீந்திரனுக்கு எனவும் அமைந்திருந்தது.

மொட்டை மாடி முழுவதும் தோட்டம் அமைத்து, அதைப் பராமரித்து வரும் விதத்தையும் பகிர... தோட்டத்தைப் பார்த்தவளுக்கு அனைத்தும் மறந்து விட்டது. காய்கறிகள் பூக்கள் எனப் பல வகையிருக்க... அலர்மேல் மங்கை மெல்ல கீழே இறங்கி விட்டார். நீண்ட நேரம் ஆகி விட்டதை உணர்ந்தவள், தன் தாயிடம் பேச வேண்டும் எனும் எண்ணம் உந்த, மங்கையிடம் வந்தாள்.

"அத்த, அம்மா கிட்ட பேசனும்..." எனவும், பேசிக் கொள் என அலைபேசியைத் தந்து, வெளியே சென்று விட்டார்.

பத்மா மகளின் குரல் கேட்டதும், "எப்படி இருக்க ஆரா? மாப்பிள்ளை வீட்டில எல்லாரும் நல்ல மாதிரி தான தெரியுதாக." என்றவள், எந்தச் சீதனமும் வேண்டாம் என்றிருந்தையும், திருமணம் நிற்க காரணமான அந்தப் பதிவை பற்றிக் கவலை வேண்டாம் என மங்கை கூறியதையும் சொன்னவர், மேலும் சில செய்திகளையும், அறிவுரைகளையும் கூறியவர், போனை வைத்தார்.

இதோ... நாட்கள் ஆகி இருந்தது. ஆரா அதீப்பைப் பார்த்து, இன்று அவனிடம் பேச வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டாள்.
அலர்மேல் மங்கை அதீப்பிடம் அன்று பேசிக்கொண்டிருந்ததை ஆராத்தியா கேட்டிருந்தாள்.

மாற்றுடை இன்றி, அவனை மணம் முடிந்தவுடன் வந்தவளுக்கு, அவள் வந்து சேரும் முன் அனைத்தையும் புதிதாகத் தருவித்து இருந்தான். நன்றி உரைக்க அலர்மேல் மங்கையைப் பார்க்க வந்தாள்.

அங்கே அதீப், “எவன் கண்டுபுடிச்சான் இந்த கல்யாணம்னா இம்புட்டுக் கூட்டம் சேக்கனுங்கறத?”

"அம்மா உங்களுக்குத் தெரியும்ல, எனக்குக் கூட்டம்னா, அதுவும் இந்த கல்யாணம், பார்ட்டி இதெல்லாம் எனக்கு ஆகாதுங்கறது."

‘கண் முன் எல்லாம் மங்கலாக ஆரம்பிக்க, இதயம் படு வேகமாகத் துடிக்க, உடல் வெப்பம் ஏற, கை கால் சில்லிட்டுப் போக, எங்கும் இருள் சூழ, நாவறள, தொண்டை உலர, இருக்கும் இடம் பொருள் அனைத்தும் சுழல, தன்னை யாரோ வேறு உலகிற்கு? அனுமதியின்றி இழுத்து செல்ல முற்படுவது போல் தோன்ற, இதயம் நின்று விடுவது போல உணர, தன்னை மீறிய நிலையில், செய்வதறியாமல் திகைத்து நின்று விட்டவன்…’ அந்த நிலையை நினைத்து.

"இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்தா, என்னவாயிருப்பேன்னு எனக்கே தெரியல?" என்றவனிடம்,

"அங்க இருந்த சூழ்நிலை அப்படிடா?" என்ற அலர்மேல் மங்கையிடம்,

"என்ன பெரிய சூழ்நிலை? எனக்கு என்ன நடந்திச்சின்னே தெரியல, யோசிக்கக் கூட முடியல? நீங்க என்னோட மெலட்டவுன் ஸ்டேஜ உபயோகப் படுத்திக்கிட்டீங்க. இப்பவாச்சும் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க!" என்றான்.

நடந்தவற்றை மங்கை கூறக் கேட்டவன், "எவனோ ஒருத்தன் பொய்யா போட்ட பதிவுல, மானம் போச்சின்னு அவசரமா கல்யாணம் பண்ணி வைச்ச அவங்க அப்பாக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்? என்னைப் பத்தி எதுவும் அவளுக்குச் சொல்லாம, கல்யாணம் பண்ணி வைச்சிருக்கீங்க...! நான் நல்லவனா? கெட்டவனா? என் பிரச்சனை என்ன? ஏது? எதுவும் தெரியாது…! அவளோ? நானோ? வேற யாரையாவது விரும்பியிருந்தா? எங்க கல்யாணம் என்னவாகும்? ஒரு மஞ்சள் கயிறு கட்டிட்டா, அவ ஒருத்தன் பொண்டாட்டியா? நான் எப்படிபட்டவனா இருந்தாலும் மனசார ஏத்துக்கனும், அப்படின்னு கட்டாயப்படுத்துறீங்க?

அப்ப காதல் என்கிறதுக்கு என்ன அர்த்தம்? இப்ப நீங்க செஞ்சி வைச்சிருக்கறது சரியென்றால், எல்லாக் கல்யாணத்திலும் சந்தோஷம் தான இருக்கனும். ஏன் பிரிவு? துரோகம் எல்லாம் வருது?” என்றான்.

"டேய்! உன்னோட நல்லதுக்காகத் தான்?”

“என்னோட நல்லதுக்குக்காக அப்படின்னாலும், நீங்க செஞ்சது தப்புமா. திருமணத்திற்கு யாரையும் வற்புறுத்தக் கூடாது!" என்றிருந்தான்.

"அண்ணனுக்கு மட்டும் இப்படியா கல்யாணம் பண்ணி வைச்சீங்க! எனக்குன்னு புதுசா பட்டு வேட்டி சட்டை, பேன்ட் சர்ட் கூட வாங்கல.." எனக் குழந்தையாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

அதைப் பார்த்த ஆராவிற்கு, அவனது அந்த அழகும், முதிராத குழந்தை மனமும், அதில் தனக்காகக் கலந்திருந்த இரக்கமும் பிடித்திருந்தது. இப்போது கூட அதை நினைக்கையில், அவள் முகம் சிறு முறுவல் சிந்தியது.
"டேய்! இப்ப என்னதான்டா சொல்ல வர? நான் என்னதான்டா செய்யனும்?" என்ற அலர்மேல் மங்கை, தன் மகனைப் பற்றி நன்கு அறிவார்.

அவனுக்கு அனைத்தும் அவரே, தன் மகனை புரிந்து கொண்ட அலர்மேல் மங்கை, அவன் அருகில் சென்று, அவன் தலைகோதி, "இனி, ஆரா தான் உன் மனைவி! அதை மாற்ற முடியாது. அவ உன் பொறுப்பு! அம்மாவ எப்படிப் பார்த்துப்பியோ, அப்படிப் பார்த்துக்கோ!"
அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டவன், கண்ணத்தில் வைத்துக் கொண்டு, "நான் எதுக்கு அவளப் பார்ததுக்கனும். எப்ப பார்த்தாலும் என்னைச் சொல்லுறீங்க! இதை அவகிட்ட சொல்லுங்கம்மா, நானும் பாவம்!" எனக் கொஞ்ச, அலர் மேல் மங்கை அவனைத் தவறு செய்து விட்டோமோ எனக் கவலையாகப் பார்த்த நொடி,

கம்பீரமாக, "நான் பார்த்துக்கறேன்?" எனக் கூறிச் சென்ற அதீந்திரனை எண்ணி மகிழ்வுடன் புன்னகைத்தார். இதற்கு அவர் பட்ட துயரங்கள்? வெளியே வர, ஆரா அவ்விடம் நீங்கியிருந்தாள்.
இதில், ‘அவள் எப்போது வந்தாள்? எதைக் கேட்டாள்?’ என அவளுக்கு மட்டுமே தெரியும். அதை நினைந்த வண்ணம் இருந்தவள், அவனைச் சந்திக்கும் வழியைச் சிந்தித்திருந்தாள்.

அந்நேரம், “11 மணிக்கு வெளியே செல்ல வேண்டும்." எனக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான், அதீப்.

"கல்யாணத்தன்னிக்குப் பார்த்தது. அதுக்கப்புறம் ஒரு தகவல் இல்ல. இப்ப வந்து கூப்பிட்டா, போனுமோ? முடியாது! போடா அதீந்திரா!" என அலைபேசியிடம் முகம் காட்டினாலும், கிளம்பியிருந்தாள்.
அவர்கள் சென்றது சித்தார்த்தைப் பார்க்க, அவன் தான் ஆராவைப் பற்றிக் குமார் கொடுத்த பதிவுகளை வெளியிட்ட தளத்தின் நிர்வாகி மற்றும் உடைமையாளன். அதீந்திரன் அந்தப் பதிவுகளை நீக்கி, அவனது தளத்தையும் முடக்கியிருந்தான்.

சித்தார்த் அந்தக் கல்லூரியில் பத்திரிக்கை துறை பற்றிப் படிப்பவன், தனது தளத்திற்கு அதிகப் பார்வையாளர் வேண்டும் என, முழுதாக விசாரிக்க வேண்டும் எனும் தர்மத்தை மறந்து, குமாரின் அலைபேசியில் தான் பார்த்ததையும், தன் விருப்பம் போல் கதை புணைந்து, குமார் கூறிய செய்தியையும் வைத்துப் பதிவிட்டான்.

மற்றவர்கள், ஆரா மீதிருந்த பொறாமையில், தாங்கள் நினைத்ததை எல்லாம் பதிவேற்றி மகிழ்ந்தனர். என்ன வேண்டுமானலும் யாரைப் பற்றியும் பேசலாம். ஏனெனில் நாம் யார் எனச் சம்பந்தபட்டவர்கள் அறியவா போகிறார்கள்? நமக்குத் தண்டனை தரவா போகின்றனர்? என எப்படியும் பேசும் சில சமூக வக்கிரர்கள் வாழும் சமூகத்தில் நாமும் வாழ்கிறோம்... என நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
தனது வாகனத்தில் அமர்ந்து கொண்டான். நீயே இதை எதிர் கொள் எனும் பாவனையில் அவன் அமர்ந்திருக்க, வேறு வழியின்றி தைரியத்தை துணைக்கழைத்துக் கொண்டு இறங்கிச் சென்றாள்.

சித்தார்த்தோ தன் நண்பன் கூறியதை உண்மை என நம்பி, தவறேதும் செய்யாத பாவனையில் நின்றிருந்தான். இவனைப் போன்றவர்களுக்கு உண்மையைப் புரிய வைத்தால் உணர்ந்து திருந்துவர் என அவனைப் பார்த்தவுடன் அறிந்து கொண்டாள், ஆரா. அவன் முன், அவனை விட நிமிர்வாக நின்றவள்,

அவனிடம் கத்தாமல் சண்டையிடாமல் அழுத்தமான குரலில், "செய்தி போடறதுல தவறு இல்ல. ஆனா ஒருத்தர படம் எடுக்க முன்னாடி, அவங்ககிட்ட அனுமதி வாங்கனும்னு தெரியாதா?" ஆரா கேட்க

“தவறைச் சுட்டிக் காட்ட, யாரோட அனுமதியும் தேவையில்லை!" எனப் பதிலிறுத்தான் சித்தார்த்.
அவன் அறியாமையைப் பார்த்து லேசாகச் சிரித்தவள், "ஒரு செய்தியை பதிவேற்றம் செய்யும் முன், அதன் நம்பகத் தன்மையை அறிந்து பதிவிட வேண்டும் என்ற பத்திரிக்கை தர்மம் உங்களுக்குத் தெரியும் தானே?" என்றபடி ஆரா அவன் கையில் ஒரு முகவரியை அளித்து,

“எனைப் பற்றி நீங்க போட்ட செய்தியின் உண்மையை விசாரிங்க? என்னைப் பத்தி யாரு என்ன பேசுறாங்க... என்ற கவலை எனக்கு இல்லை. ஆனா... சிறந்த பத்திரிக்கையாளனுக்கு உண்மையும், நேர்மையும், முக்கியம்." என்று அவ்விடம் நீங்கியிருந்தாள், அதீந்திரனின் ஆராத்தியா.

வேர்த் தூவிகள்
நீர் தேடி செல்லும் விதமோ
உனை நாடும் என் மனம்
அறிவிப்பின் அவசியம்
நீருக்குத் தேவையில்லை
தூவியின் உணர்வு உந்தனிடமும்
 


அத்தியாயம் - 7


அதீந்திரன், தனக்கென தனி அட்டவணை வைத்திருப்பவன். திடீரென்று ஒன்றை வலுக்கட்டாயமாக யாரேனும் நுழைத்தால், அதை ஏற்க மறுத்து விடுவான். தனது அன்றாடங்களை மாற்றிக் கொள்ள விரும்புபவன் அல்லன். அது எளிதும் அல்ல அவனுக்கு.

ஏதேனும் செய்ய வேண்டும் எனில், முன்கூட்டியே அதைப்பற்றிய புரிதலை பல முறை கூற வேண்டும். அவனது ஐயங்கள் தயக்கம் நீங்கிய பின், மெதுவே அவனுள் அது இறங்கி அவனுலகில் பயணிக்க முடியும்.


அதீந்திரன், தன் நிறுவனத்தின் அருகே வீடு வாங்கியிருந்தான். வார நாட்களில் அங்குத் தங்குபவன், வார இறுதியில் மட்டும் அன்னையின் வீட்டிற்கு வருவான். ஆராவின் கல்லூரியும் அங்கு அருகிலேயே இருக்க, இவர்கள் இருவரையும் அங்கு குடிவைக்க முடிவு செய்த ரகுநந்தன், அலர்மேல் மங்கை இருவரும் அதைப்பற்றி அதீப்பிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

"அதீப் ஆராவோட காலேஜ் உன் ஆபீஸ் கிட்ட தான் இருக்கு. அவளுக்கு இன்னும் படிப்பு முடியவில்லை. அதனால அவ உன்கூட அந்த வீட்டில தங்கிக்கட்டும். இதைப் பத்தி ஆராவிடமும் பேசி முடிவு செய்துக்கோ!" என்றவர்கள் நகர்ந்திருக்க..

ஆராவோ, ‘வந்த உடனே தனிக்குடித்தனம். அதுவும் திருமணத்திற்குப் பிறகு, ஒழுங்காகப் பேசியது கூட இல்லை. ஆமா, அவன் பார்க்கவே இல்லை. இதுல பேசறது எங்க?' என மனம் புலம்ப,

இதனிடையில் அனைவரும் நகர்ந்து போய் இருக்க, இவர்கள் மட்டும் எதிருக்க, அந்தத் தனிமை இப்போது அவளுள் அச்சம் தயக்கம் கலந்து வெட்கத்தில் தலை குனிந்திருக்க, அவளது அலை பேசிக்கு செய்தி ஒன்று வந்தது.

அதீந்திரன் அவள் ஏதோ கூறுவாள் என நினைந்து முகம் பார்க்க,

அவளோ ஓர விழியைக் கூட அவன் புறம் நகர்த்தத் தயங்கி தாழ்த்திய இமைகளை மேலுயர்த்தவில்லை.
ஏனோ, ஏதோ அவனை உந்த, அவள் முகம் நோக்க ஆவல் எழுந்தது, அவனுக்கும். மெல்ல ஈர்ப்பு விழ, அவளை நிதானமாகப் பார்த்தான்.

பிறர் விழி கூர்ந்து நோக்கிப் பேசினால் தடுமாறும் என மற்றவர் விழி நோக்கிப் பேசாதவனுக்கு, இவள் விழிகளை நோக்கிட ஆசை எழ, அலைபேசி வழி அறிவித்தான்
"என்னைப் பார்!" என…
தலை நிமிர்ந்து நோக்கினாள். அவன் அதீந்திரன் அவள் கண்ணோக்கினான்.

ஆரா, அவன் பச்சை நிற விழிக் கடலில் வீழ்ந்தவள், சுற்றிச் சூழன்று எங்கோ இழுத்துச் செல்லப்படுவது போல் மிதந்தாள். சூழல், சுற்றம் அணைத்தும் மறந்தாள். அவன் பார்வையின் சூறாவளி வீச்சில் சுழன்றவளின் மனம் எங்கு சென்றது. அது சிந்தாமல் சிதறாமல் முழுதாக அவன் கண்வழி சென்றது.
'இது என்ன? இவன் பார்வையில் என்ன செய்தான்? இவன் பின்னால் போக எண்ணி எழுந்து விட்டனவே, கால்கள்? இனி, இவன் என்ன கூறினாலும், அதையே செய்யச் சொல்லுகிறதே? மனமும் உடலும், எனக்கு நன்மையை எடுத்துச் சொல்லும் என் உற்ற தோழி மதியை, ஒற்றைப் பார்வையில் இல்லாமல் செய்தானோ? இல்லை, எனைப் போல், அவளும் இவன் வசமாகி விட்டாளோ? அதெப்படி? நான் இருக்கையில், இவன் அவளை வசமாக்கலாம்?' எனக் கோபம் கொண்டவள்,

"அடியே அறிவு! நீ எப்படி என் கணவனைப் பார்க்கலாம்? இனிமேல் உன் பேச்சை கேட்பதில்லை, நான்!" எனச் சபதம் செய்தவளை,

“இல்லை எனினும், என் சொல்படி கேட்டுத்தான், மறுவேலை பார்க்கப் போகிறாயா நீ?’ என நொடித்துக் கொண்டு போனது.

'நல்ல வேளை இவன் எப்பவாது கண் பார்த்து கொஞ்ச நேரம் பேசுகிறான். இன்னும் கொஞ்சம் நேரம் பார்த்தால்? பேசினால்? என் நிலைமை என்னவாகும்?' என்றெண்ணியவளை…

'ஆமா? இப்ப மட்டும் என்னவாம்?' என்ற அறிவுக்கு
'தூரம் போ! உன்னை யாரு கேட்டா?’ என்றாள்.

ஆராவின் அறிவையும், மனத்தையும் அவளுக்குச் சக கிளத்தி ஆக்கியவன், அவள் எதிர் அமர்ந்து, அவளை அழைத்திருந்தான்.

"தியா, தியா" எனும் அவன் தொடர் அழைப்பினில் உணர்வு பெற்றவள், அவன் ஏதும் கூறும் முன், ஒடி மறைந்தாள் வெட்கம் மேலிட,
"என்ன சொன்னீங்க தம்பி? இப்படி வெட்கப்பட்டு ஒடறா?" என்றபடி வந்தாள், வைஜெயந்தி.

"ஒன்றும் இல்லை அண்ணி. அந்த வீட்டுக்குப் போறதப் பத்தி அம்மா பேச சொல்லி இருக்காங்க. அதுக்குதான் கூப்பிட்டேன். சரி, நான் அப்புறம் போன்ல பேசிக்கறேன்." எனவும்,

"அதீப், கொஞ்சம் அவகிட்ட நேர்லயும் பேசு. உனக்குப் பேசக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும், நீதான் பேச ஆரம்பிக்கனும். அப்பதான் அவளும் பேசுவா. அவளுக்கு இன்னும் உங்களைப் பற்றி எதுவும் தெரியாது. மேலும் நீங்களாப் பேசுனா, உங்களுக்கு அவள ஏத்துக்கறது எளிது. உங்க இரண்டு பேருக்கு இடையில் அப்பதான் ஒரு புரிதல் வரும்." என்றார்.

"ஏன் அண்ணி? இப்ப நீங்க பேசுறீங்கதான. அதுமாதிரி பேச வேண்டியது தானே? எனக்கு நேர்ல முகம் பார்த்துப் பேச கஷ்டமா இருக்கு. அதனால தான், போன்ல பேச நினைச்சேன்."

"ஆனா, அது மத்தவங்களுக்குத் தான். ஆனா, ஆரா, அப்படிக் கிடையாதுல்ல. உங்க மனைவி. அதனால, நீங்க அவ கிட்ட முடிந்த வரை முகம் பார்க்க முடியாவிட்டாலும், எங்க கூடப் பேசற மாதிரி நேர்ல பேசிடுங்க. அப்ப தான் உங்களுக்கு அவங்க பாடிலேங்வேஜ் புரியும், மனசு புரியும்."

"ஆனா... வைஜூ அண்ணி மாம், நீங்க எல்லாரும் இப்படி ஓடலையே! என் முன்னாடி நீங்கல்லாம் பேசறீங்க தான, அப்படி அவளும் பேச வேண்டிய தானே! நிமிர்ந்து பார்த்தா, இரண்டு தடவ கூப்பிட்டேன். உள்ள ஓடிப் போய்ட்டாங்க. ஏன்?" என்றவனிடம்.
"டேய்! அது வெட்கம்டா! பொதுவா முதல்ல பெண்கள் அவங்களா பேச மாட்டாங்க. நீதான் போய்ப் பேசனும்." என்றபடி அருகில் அமர்ந்தான், புருஷோத்தமன்.

"வெட்கம்? அப்படின்னா?" என அடுத்த கேள்வி கேட்க, எப்படி விளக்கம் சொல்ல அந்த உணர்வை இவனுக்கு என விழித்தனர்.

"அப்படின்னா என்னன்னு உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்குதான அதீப், அந்தக் கிளாஸ்ல…" என்ற மங்கையை தெய்வமாகப் பார்த்தனர். வைஜயந்தியும் புருஷோத்தமனும்.

"யா மாம்! ஆனா, இது கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. எனக்குக் கண்டு பிடிக்கத் தெரியல."

"கரைக்ட் அதனால, அவ கூட உன்னோட நெருக்கத்த அதிகப் படுத்திக்கனும். அவளோட பேசனும்? அவளுக்கு என்ன வேணுங்கறத கேட்டுச் செய்யனும்? ஆராவ தினமும் கல்லூரிக்கு கூட்டிட்டுப் போகனும்?" மங்கை உரைக்க,

“இதையும் உன்னோட தினப்படி அட்டவணையில் சேர்த்துக்கோ! அதுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் உன் ரொட்டீன மாத்திக்க!" என்றபடி ரகுநந்தனும் அமர,

"ஆரா, கொஞ்சம் இங்க வாம்மா!" என ஆராவையும் அழைத்தவர்,
"அதீந்திரன், அந்த வீட்டில் ஏற்கனவே எல்லாப் பொருட்களும் வைச்சிருக்கான். அதனால, நீ உன்னோட பொருட்கள் மட்டும் எடுத்துக்கோ போதும்." என்றார்.
"அப்புறம் நானும் மங்கையும் கொஞ்ச நாள் வெளிநாட்டுக்குப் போகலாம்னு இருக்கோம்." என்றவரிடம் தனையன்,
"ஓகே டாட்! எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா? ஏதாவது பிரச்சனைன்னா, எங்களுக்குச் சொல்லுங்க!” எனவும்,

“இப்போதைக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஏதாவதுன்னா பார்த்துக்கலாம்." என்று கூற, அனைவரும் எழுந்து சென்றனர்.

இதோ அவர்கள் வசிக்கப் போகும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்திருந்தனர்.

பாதுகாப்பு, தண்ணீர் பிரச்சனை, போன்ற விஷயங்களை ஆராய்ந்து, தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாமல், என அனைத்தையும் ஆராய்ந்து அவ்வீட்டை ரகுநந்தன் வாங்கியிருந்தார்.

அதீப், கதவைத் திறந்தவன் உள்ளே சென்றுவிட, இவன் உள்ளே அழைப்பானோ... எனக் காத்திருக்க, அப்படி ஒரு அறிகுறியும் தெரியவில்லை எனவும், தானே மெல்ல தனது உடைமைகளுடன் உள்ளே நுழைந்தாள்.

முதலில் வலது காலை உள்ளே வைத்து நின்றவள், திகைத்து நின்று விட்டாள்.

ஏதோ கானகத்திற்குள் வந்த உணர்வு அவளுக்கு, தாமரைத் தாடகம் போல், முப்பரிமாண தளக் கற்களின் உபயத்தில், சுவரெங்கும் ஒங்கி வளர்ந்த கானகத்தின் மரங்களாய் இருக்க, ஆங்காங்கே சில விலங்குகள் எட்டிப் பார்க்க, மேலே மரங்கள் ஒன்றாய் கவிந்திருக்க, இடைவெளியில் வானம் தெரிய தொங்கிய சரவிளக்கு நிலவினை நினைவுறுத்தியது. வீற்றிருந்த சொகுசு நாற்காலிகள் தோனியை ஒத்திருந்தது.

தொடர்ந்து படுக்கையறைக்குள் நுழைந்தவள், வீழ்ந்து விடுவோம் என அஞ்சி, பிடிமானம் பற்றத் தேடினாள். ஆம், காலின் கீழ் அருவி வீழ்வது போலும், ஒரு மரப்பாலம் அதன் மூலமே படுக்கையை நெருங்க வேண்டும் என்பது போல் அங்கு தரை அமைந்திருக்க, மற்றோர் அறை, குளத்தில் இருந்து தண்ணீர் வெளியே பாய்வது போலும், நந்தவன நடுவே மேசை போட்டது போல், உணவு உண்ணும் அறையும் பூக்களின் நடுவே நிற்பது போல் தோன்றும் சமையலறையும், மேலும் அங்கிருந்த பொருட்களையும், அவை அடுக்கப்பட்டிருந்த நேர்த்தியும் கண்டவள், ‘இத்தனை ரசனையானவனா... தன் கணவன்’ என வியந்து போனாள்.

அலர்மேமேல் மங்கை விமான நிலையத்தில் அவளிடம், "ஏதாவது வேண்டும் என்றாலோ அல்லது கூற வேண்டும் என்றாலோ நேரடியாகக் கூறிவிடு? அவனாகச் செய்ய வேண்டும் என நினைக்காதே, நீ நினைப்பதை வாய்மொழியாகவே சொல்லிடும்மா? நீ சொன்ன விஷயத்தை அவன் கவனிச்சிருக்கானான்னு உறுதிப் படுத்திக்கோ? ஏதாவது வேணும்னா, இல்ல சொல்லனும்னா பேசு, யோசிக்காத, சரியா? நானும் உனக்கு அடிக்கடி பேசறேன்." என்று கூறுவிட்டுத் தான் சென்றார்.

அதை நினைத்த படி அவன் அறைக்குள் வந்தவள், அங்கேயே நின்றாள். அவள் தன் அறையில் நிற்பதைக் கண்டவன், சிறுது யோசித்துப் பின் சற்றே அவளை நெருங்கி நின்றான். அவன் தன்னருகில் நெருங்கி நிற்கவும், என்னவென்பது போல் பார்க்க, அவன் கூறிய செய்தியில் அதிர்ந்து நின்று விட்டாள், அதீந்திரனவனின் ஆராத்தியா.

கவன ஈர்ப்புத் தீர்மானம்
ஒன்றை தாக்கல் செய்ய
விழைகிறேன்
உன் கவனம் பெற…
வேண்டாமடி!
ஏற்கனவே அவசர நிலை
பிரகடனத்தில் என் இதயம்…
உன்ஆதிக்கத்தில்

 


அத்தியாயம் - 8



அவள் அருகில் நெருங்கி நின்றவன், "என் பொம்மை எதையும் நீ தொடக் கூடாது." என்றிருந்தான். அந்த அலமாரியில் விதவிதமான சிறு குழந்தைகள் விளையாடும் பொருட்கள் இருந்தன.


அதீந்திரனின் சேகரிப்புகள் அவை.
அவன் நெருங்கியதில் அதிர்ந்தவள், அவன் கூறியதில் குறும்பு எதுவும் செய்கிறானோ என நினைத்தவளாக, அவன் முகம் பார்க்க. அவனோ மிகத் தீவிரமாகக் கூறியது கண்டு ஒன்றும் புரியவில்லை என்றாலும், சிலருக்கு இது போன்று சேகரிப்புகளில் ஈடுபாடு உண்டு என்பதை அவள் கண்டிருக்கிறாள். ஆதலால், சரி எனத் தலையசைத்தாள். ஆனாலும், அவனின் பிள்ளைத் தனம் அவளை ஈர்க்கத்தான் செய்தது.


நான் காலமகள் எனக்குக் காத்திருப்புகள் என்றும் பிடிப்பதில்லை. என அவர்களைக் கடந்த நாட்களில், நண்பர்களாக மாற்றி இருந்தாள். அதீந்திரன், அவன் அன்றாடங்களில் அவளும் ஒருவளாக அவன் அட்டவணையில் இருந்தாள்.


காலை மணி 6 வழக்கம் போலக் கண் விழித்த அதீந்திரன், காலைக் கடன் முடித்துப் பல் துலக்கும் முன்பு வந்து சன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது... என்ற தனது தினசரியில் அவன் பார்க்கும் அந்தச் சில வழமையான காட்சிகளைக் கண்டவாறு நின்றான். அந்தப் பால்காரர், செய்தித்தாள் போடுபவர், அந்த எதிர் சாரி மரத்திற்கு வழமையாக வரும் காகம் மைனா போன்றவற்றைப் பார்த்த பின், பல் துலக்கி விட்டு தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க, அதில் அவன் ஐந்தாண்டுகளாகத் தினமும் பார்க்கும் தாமஸ் அன் ஃப்ரண்ட்ஸ் எனும் தொடர் பார்த்துக் கொண்டே, தனது உடற் பயிற்சிகளைச் செய்தான்.

பிறகு சமையலறை சென்றவன். குளிர் சாதனப் பெட்டியை திறந்து பால் கவரை எடுத்தவன், அதனை மிகக் கவனமாக அடைத்தான். இரண்டு டம்பளர் காபி தயாரித்தான். அதே மாறாத அளவுகளில் அவற்றை உணவு மேஜை மீது வைத்தவன், ஆராவின் அறைக் கதவை தட்டினான். கலைந்த முகம், கசங்கிய இரவாடையுடன் வந்து கதவைத் திறந்தாள், ஆரா.

"குட் மார்னிங் ஆரா!" எனக் காலை முகமன் கூறவும்,

"மார்னிங் அதீ! நேத்திக்கு தூங்க லேட் ஆகிடிச்சி. இண்டெர்னல்…” என்ற படி வந்து கோப்பை ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

மணியைப் பார்த்தவள், "அச்சச்சோ! நேரமாயிடுச்சி." என வேகமாகக் குளிக்கச் சென்றாள்.

அவள் சென்று விட்ட பிறகும் கூட, அந்த உணவு மேசையில் தனியாக அமர்ந்திருந்தான். அவனது அட்டவணைப்படி, அடுத்த சில நிமிடங்கள் அவளுக்கானது.

அவளது தேவை அல்லது அன்றைய வேலைகள் பற்றிக் கூறுவாள். விரைவாகச் செல்ல வேண்டும் எனில் அதைக் கூறுவாள். இல்லை, வகுப்புகள் முடியும் நேரம் அவன் அழைக்க வர வேண்டிய நேரம். இல்லை, அவள் வகுப்புகளில் நடந்தது, ஆடு கத்தியது, பஸ்ஸில் ஒலி எழுப்பான் அலறியது என அவள் எதையாவது பேசக் கேட்டிருப்பான்.

இன்று கல்லுரிக்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்றவள், அவனுடன் பேசவில்லை உள்ளே ஓடிவிட்டாள். என்றாலும், அவளுக்கு அவன் ஒதுக்கிய நேரம் முடியும் வரை அமைதியாகக் காத்திருந்தவன், பின் தனது அறைக்கு வந்து, குளித்துத் தயாராகிக் காலை உணவுக்காக வந்தான்.
எதுவும் தயாராக இல்லை என்பதைப் கண்டு கோபம் வந்தது.


அதில் கத்திச் சண்டையிடத் தெரியாதவனாகையால், அமைதியாக ஏப்ரனை எடுத்து கட்டிக் கொண்டு, குளிர் சாதனப் பெட்டியைத் திறந்து, சில காய்கறிகள் எடுத்துக் கழுவியவன், ஒர் ஓழுங்கு முறையில் வெட்டி, அதே நேரம் ரொட்டியை டோஸ்ட்டர் எனும் இயந்திரத்தில் வாட்டி எடுத்தவன், காய்கறிகளை அதில் அழகாக அடுக்கி, எடுத்த பொருட்களை மீண்டும் அழகுற அடுக்கியவன், சாண்ட்விச்சை உண்டவாறு ஆராத்தியாவைப் பார்த்திருந்தான்.

அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கும் அவளைப் பார்ப்பது இப்போது அவனுக்குப் பிடித்த பழக்கம். அப்போது அவளின் பாவனைகளை, உடல் மொழியை உற்றுக் கவனிப்பது அவனது வழக்கமாகி விட்டிருந்தது.
ஆரா, எங்கே இதைக் கவனிக்கும் நிலையில் இருக்கிறாள். அங்கே அதீத அவசரத்தில் அல்லவா இருக்கிறாள். சுடிதாரின் மேல் ஷாலை ஒருபுறம் ஊக்கு குத்தியவள்,

"அய்யோ! என் நோட்டு…" என்று அதைத் தேடியவள், பின்பு ஒருவாறு பேனா நோட்டுப் புத்தகம் பை அனைத்தையும் ஒவ்வொரு இடத்தில் இருந்து கண்டெடுத்தாள். ஆனால், அவள் அறைக்குள் மட்டுமே மற்ற இடங்களில் போடக்கூடாது என்பதால், அவளது அறைக்குளேயே அந்தக் களேபரம். கடைசியாக வெளிவந்தவள்…

"அச்சோ போன்!" என அலைபேசியை மறந்து விட்டதை நினைவு படுத்தி, அதை எடுக்கப் போனவள் ...
திடீரென நின்று திரும்பி அதீந்திரனிடம் வந்தாள். தன்னை அறியாமல் அவன் கன்னங்களைத் தாங்கிப் பிடித்தவள்,

"சாரி அதீப். இன்னைக்கு உங்க கிட்ட பேசல. அப்புறம் டிபன் செய்யல.” என்றவளிடம் எதுவும் கூறாமல் உருவிக் கொண்டவன், கை கழவி விட்டு, தனது பொருட்களைச் சேகரித்தவன், ஹாலின் நாற்காலியில் சென்று அமர்ந்தான்.
தன்னை யாரும் தன் அனுமதியின்றித் தொடுவதை விரும்பாதவன், அவன். அவனுக்கு யாரும் அவனைத் தொட்டுப் பேசுவது பிடிக்காது.

அப்படிப்பட்டவன், அவள் தன்னைத் தீண்ட அனுமதி அளித்ததையும், தன்னைத் தீண்டிய அந்தக் கரங்களில் தாமரை மலர்கள் தன்னைத் தீண்டும் மெல்லிய அழுத்தத்தை உணர்ந்ததையும், அதைத் தன் உடல் மீண்டும் மீண்டும் தேடுவதையும் எண்ணி அயர்ந்திருந்தான்.

மற்றொரு துண்டு சாண்ட்விச்சை உண்டு கொண்டிருந்த ஆராவும், அதையே தான் எண்ணியிருந்தாள். ஏனெனில் இருவரும் தனித் தனி அறைகளில் தீவுகள் போல இருப்பது பிடிக்காமல், அவனிடம் அலைபேசி வாயிலாகச் செய்தி அனுப்பி, பிறகு ஒரிரு வார்த்தை பேசி என நெருங்கியிருந்தன இருவரின் அலைவரிசையும், மனமும். அவளால் அவனுடன் மட்டுமல்ல, யாருடனும் பேசாமல் இருக்க முடியாது. அதிலும் இவனுடன் பேசாமல் இருப்பது என்பது சுத்தமாக ஆகாத காரியம். அறிந்தவர்களிடமாவது கலகலத்துப் பேசுவது தான், அவள் சுபாவம்.


ஆரா அறிந்த வரை, அதீப் யாருடனும் எளிதில் பழகுவதில்லை. அவன் அன்றாட வேலைகளில் சிறு மாற்றம், அவனைக் கோபப்படுத்தி விடும். அதுபோன்ற நேரங்களில் தன்னைக் கட்டுப்படுத்திப் பாடல் கேட்பது அல்லது ஏதேனும் புத்தகம் படிப்பது, கோல்ப் விளையாடுவது, இல்லை எனில், எதுவும் பேசாமல் இருந்து விடுவான். அதையும் தாண்டினால் மிகச் சிரமம். எனவே அவனைக் கோபப்படுத்தாமல் அவன் போக்கில் விட்டு, பின் சற்று நேரம் கழித்து அது பற்றிப் பேசுவாள்.

இந்த வீட்டிற்கு வந்த பின் ஒரு வாரமாக, சாண்ட்விச் மட்டுமே அவனது காலை உணவாக இருக்க,
‘எப்படித் தான் தினமும் இதையே சாப்பிடறாங்களோ?’ என நினைத்தவள்,

“எத்தனை நாளா இதையே சாப்பிடுவீங்க?"

"ஏழு வருஷமா. அமெரிக்கா படிக்கப் போனதுலர்ந்து, இதான் என்னோட ப்ரேக்பாஸ்ட். நானே பண்ணிப்பேன்." என அலட்டிக் கொள்ளாமல் கூறவும், இவளுக்கு என்ன பதில் சொல்ல எனத் தெரியவில்லை.

"மத்த எதுவும் சாப்பிடத் தோனாதா...! இத்தனை நாள் சாப்பிட்டு போர் அடிக்காதா?"

"போர் அடிக்குமா! ஏன்? இது நல்லாத் தான இருக்கு? பச்சை காய்கறிகள், அதனால ஸ்ட்ரென்த். டெய்லி செஞ்சி பழகிட்டது. அதானல டைம் சேவ். மேலும், நானே செஞ்சிறலாம். ஈஸியும் கூட.” என்றவனிடம்,

"ஆனா, எனக்கு இப்படி ஒரே அயிட்டம் சாப்பிட கஷ்டமா இருக்கு.” எனத் தயங்கி உரைக்க,

"ஓகே! உனக்கு நீ செஞ்சிக்கோ! பட், எனக்கு நானே செஞ்சிக்கறேன்." என்றான்.

சில நாட்களுக்கு அவனுக்கு அவனே செய்ய, அவள் தனக்குச் செய்து கொண்டாள். ஆனால், சமையலறையில் எடுத்த பொருட்களை மீண்டும் அழகுற அங்கேயே வைக்க வேண்டும். இல்லை எனில், மீண்டும் அவன் சமைக்கும் போது திணறி கோபம் வந்துவிடும். அவன் கோபத்தில் அமைதியை கைக்கொண்டால், ஒருவாரம் ஆனாலும், கீழே இறங்கி வர மாட்டான். எனவே, அவள் அறைக்குள் மட்டுமே இஷ்டம் போலப் போட்டு வைப்பது, வேறு இடத்தில் கிடையாது.

அவனை இன்னும் நெருங்க, ஒருநாள் "இனி நான் இரண்டு பேருக்கும் சமையல் செய்கிறேன்.” என முன் வந்தாள்.

"ஏன்?" என்ற அவன் கேள்விக்கு,
"நான் உங்க பொண்டாட்டிதான, நான்தான் இதெல்லாம் செய்யனும்." எனவும்,

"மனைவின்னா இதெல்லாம் செய்யனுமா? ஏன் உன் வயத்துக்கு உனக்குப் பிடிச்சத, நீ செஞ்சி சாப்பிடற. நீ சாப்பிடறதெல்லாம் எனக்குச் செய்யத் தெரியாது. பிடிக்கவும் செய்யாது. எனக்குப் பிடிச்சத நான் செய்து சாப்பிடறேன். அது உனக்குப் பிடிக்கனும்னு என்ன அவசியம். அதே போல் உனக்கும்…" என்று தெளிவாகப் பேசுபவனிடம் என்ன சொல்ல என யோசித்து,
"நீங்க என்னைக் கல்லூரிக்கு கூட்டிட்டு போறதுக்குப் பதிலாக இருக்கட்டும்.” என ஒப்பந்தம் போட்டாள்.

“சில சமயம் முடியவில்லை என்றால், நீங்கள் செய்யுங்கள்!"
"ஓகே, லீவு நாட்களில் மட்டும்." என ஒற்றை வார்த்தையில் ஒப்புதல் அளித்தான்.

விடுமுறையில் அவள் சமைக்க, அவனும் அவளுக்கு உதவி செய்வான். அவனுக்குப் பிடிக்காத உணவு வகைகளைப் பற்றிக் கூறி இருந்தான். "அப்ப எனக்கு என,.." அவளும் அவளுக்குப் பிடிக்காத உணவு வகைகள் எவை எனக் கூறினாள். பிறகு, வாரத்தில் இரு நாள் அவள் என வந்து நிற்கிறது.
அரக்க பரக்க தயராகி வாகனத்தில் ஏறியவள், பதற்றத்தில் இருந்தாள். இன்று சீக்கரம் செல்ல வேண்டும் என அதீந்திரனிடம் நேற்றே சொல்லாம விட்டு விட. விளைவு...! அவள் என்ன பறந்தும் கல்லூரிக்கு வழக்கமான நேரத்திற்குத் தான் வர முடிந்தது.

'ச்ச நேத்திக்கே சொல்லி இருக்கனும். மறந்து போச்சு! இப்ப சீக்கிரமா போக முடியாது. என்ன ஆகப்போவுதோ...?' எனப் புலம்பியவள்,

'நல்லா வாக்கப்பட்டேன். டைம் டேபிளுக்கு… நமக்கு அது சுத்தமா வராது. இவனுக்கு அதுதான் வாழ்க்கை. இதுல டிபன் செய்யலன்னு கோபமா வேற இருக்கான். எப்படி மலையிறக்க?' என யோசித்தவள், கல்லூரி வந்து விடவும் இறங்கிக் கொண்டாள்.

அதீந்திரன் நிறுவனத்திற்கு வந்தவன், அனைவரையும் கலந்துரை யாடலுக்கு வரும்படி அழைத்திருந்தான். அவன் உடன் பணிபுரிபவர்களில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், அவனது தோழர்களே. அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் சிலரே! அவர்கள் அதீப்பை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் அனைவரும் இணைந்து தான், இந்த நிறுவனம். ஆனால், தலைமையில் அதீந்திரன்.

அவர்கள் தற்போது வெளியிட இருக்கும் இணைய விளையாட்டு, பண்டைய தமிழ் அரசர்களையும், அவர்கள் போர் பற்றியதும். இதில் சேர, சோழர், பாண்டியர், பல்லவர் என நான்கு அரசுகளையும் அவர்களின் போர் கலைகள் அடிப்படையாகக் கொண்டு, உருவாக்க முயன்று கொண்டிருந்தனர்.

அதீப் அவர்களைத் திட்டமிடல், வரைகலை, இசை, கோடிங், டிசைனிங், விளம்பரம் மார்க்கெட்டிங் எனத் தனியாகப் பிரித்தவன், அவர்களின் பொறுப்புகளை ஒப்படைத்தான். டெஸ்டிங் வேலையைத் தானே பார்த்து விடுவான்.

அது மட்டுமின்றி இவர்களில் யார் இல்லை என்றாலும், அவர்கள் பணியையும் அவனே செய்து விடுவான்.

அவர்களது கணிணி விளையாட்டு ப்ரோஜெட் எந்த அளவு வளர்ந்திருக்கிறது. எப்போது வெளி விடலாம் என்றும், வெளியிடப்பட வேண்டிய தேதி குறித்தும், விரிவாகப் பேசிக் கொண்டனர்.
அதீப் தனக்கு நேர் கீழே எந்தப் பெண்ணையும் வேலை செய்ய அனுமதிப்பதில்லை. அதன் காரணம் அவன் நண்பர்கள் அறிவர்.


தளும்பும் இதயம்
தவறும் வார்த்தைகள்
சிதறும் பார்வை
சிதறா காதல்.
உணரா உணர்வுகள்
உள்ளம் முழுதாய் உணர
ஏற்க வா எனும் முன்
ஏந்தி இருந்தேன்
 

அத்தியாயம் - 9


தனது அறையில் அமர்ந்து கணிணிக்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவனைக் கலைத்தது, "மே ஐ கம் இன்" என்ற அந்தக் குரல், யார் என்று நிமிர்ந்து பார்த்தான்.

உள்ளே நுழைந்தவனோ, "நல்லாயிருக்கீங்களா, அதீப்? அம்மா எப்படி இருக்காங்க? அப்புறம் கம்பெனி எப்படி இருக்கு? லைப் எப்படி இருக்கு?" என்ற படி வந்தமர்ந்தார், அவர். அவரை சில விநாடிகள் பார்த்தவன், பிறகு பார்வையை வேறிடத்திற்கு மாற்றிக் கொண்டு,

"நல்லாயில்லை அப்படின்னா, என்ன செய்யப் போறீங்க? நல்லா இருந்தா என்ன செய்யப் போறீங்க? எங்க அம்மா எப்படி இருந்தா உங்களுக்கு என்ன? நீங்க என் அம்மாவை பத்தி இப்ப எதுக்கு விசாரிக்கிறீங்க? ஆங், கம்பெனி எப்படி இருக்கு? அப்படின்னா? என்ன? என் கம்பெனியோட எந்த நிலையைப் பத்தி உங்களுக்குத் தெரியனும்?" எனவும்,

வந்தவர் முதலில் அதிர்ந்தாலும், பிறகு விசாரிக்க கேட்ட கேள்விகளுக்கு இப்படிப் பதில் கூறுகிறானே, எனக் குழம்பி அதீந்திரன் முகத்தை ஆராய...
அவன் முகம் கோபம் நக்கல் எதுவும் அற்ற நிலையில் இருக்க, மீண்டும் ஒரே விதமான குரலில் அதையே கேட்க, அவர் மேலும் திணறிப் போனார்?

'எப்படி இருக்கீங்கன்னு கேட்டது குத்தமாயா?' என அவர் திகைத்து இருக்க, அதீந்திரனோ பதிலுக்காகக் காத்திருந்தான்.

மற்றவர்களுக்கு இது ஒரு எளிய கேள்வி. அதீந்திரனைப் பொறுத்த வரையில், அது ஒரு கடினமான விஷயம், ஏனெனில் இது போன்று பல விசாரிப்புகளின் விவரம் அறியாமல், அனைவரிடமும் மொத்த விவரங்களையும் கூறிக் கொண்டிருப்பான். பின் அவர்களைப் பற்றியும் உண்மையான அக்கறையுடனே விசாரிப்பான்.

ராமனைப் போல், ஆம், ஸ்ரீ ராமனிடம் நீ யார்? என யாரேனும் கேட்டால், தன்னைப் பற்றிய முழு விவரத்தையும், தான் யார், தந்தை யார்? என்ன விவரம்? அனைத்தையும் கூறிய பிறகே, அவர்களைப் பற்றி விசாரிப்பாராம். அது போன்றே அதீந்திரன் அனைவரது விசாரிப்புகளுக்கும் உண்மையாகவே விடையளிப்பான்.

அனைவருக்கும் அது தேவையில்லை. பலருக்கு இது ஒரு சம்பிரதாயம். அளவளாவுவதற்கு ஒரு முன்னோட்டம். சில நேரங்களில், சில இடங்களில் இது பல விவரங்களை உள்ளடக்கிய குரல்களை உடையது. சில நேரம் கடத்த, சில பார்த்து விட்ட குற்றத்திற்கு, சில வேறு விஷயம் பேச, விஷம் தடவிய சில, சில போலியாய், பொறாமையாய், வக்கிரத்திற்கு வழி தேட, என்ற பல வகையில், இவரது எது என இனம் கான, அவனால் இயலவில்லை.

சமூகக் குறிப்புகளைப் புரிந்து கொள்வது கடினம் அதீந்தரனுக்கு. இதனால் அவன் அடைந்த அவமானங்கள், தாண்டி வந்த நக்கல்கள், நையாண்டிகள் அதனைப் புரிந்து கொள்ள இயலா வலிகள், ஏராளம். எனவே உண்மையற்று வெறும் வார்த்தை பொய்களுக்குப் பதில் பொய் உரைக்க மனமில்லை, அதீந்திரனுக்கு.

"ஒரு பார்மாலிட்டிக்கு .......?" என்று வந்தவனிடம் இருந்து தனக்கு வேண்டிய பதில் வந்ததும்,
“நீங்க என்ன விஷயமா வந்தீங்களோ? அதைப்பத்தி மட்டும் பேசுவோம்." என்றான்.

பிறகு அதிந்திரனிடம் தான் வந்த விஷயம் பற்றிக் கூற ஆரம்பித்தான் வந்தவன், அலங்காரங்களை விடுத்து.

பேச்சுவார்த்தை தொடங்கிய சற்று நேரத்திலேயே, தனது தொழிலில் அதீந்திரனுக்கு இருக்கும் ஆர்வத்தையும், அதைப் பற்றிய ஆழ்ந்த அறிவையும் கண்டு பிரம்மித்தவன், அவனுடன் வேலை செய்வது தனக்கு இலாபம் பயக்கும் என உணர்ந்து கொண்டான்.

இவனைப் பாராட்ட நினைத்து வாயை திறக்க…. அதீந்திரனோ இவருக்குமான நேரம் முடிவடைந்து இருக்க, அவரிடம் எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றான். அவன் வெளியே சென்றதும் உள்ளே வந்த பணியில் இருந்த அவன் நண்பர்கள்,

"சாரி சர்! அவருக்கு இந்த மாதிரி பார்மாலிட்டீஸ் வராது. நாங்க தான் வர்றவங்களை ரிசீவ் பண்ணி உபசரிக்கிறது." என வருத்தம் தெரிவிக்க,

"இட்ஸ் ஆல் ரைட். பட் ஹி இஸ் அ ஜினியஸ், இன் திஸ் பீல்டு. அயம் எக்சைட்டு டு வொர்க் வித் ஹிம். பட், எங்க இவ்வளவு வேகமாகப் போறாரு." என்று கேட்க

"அவர் வொய்ஃப்ப கூப்பிட" என்றுதும்
ஆச்சரியம் கொண்டார். பிறகு பேசி உபசரித்து, ப்ரொஜெக்ட்டை ஒப்பந்தம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் ஆராத்தியாவை அழைக்கக் கல்லூரிக்கு நேரத்திற்குச் சென்றவன் அவளைத் தேட, வழக்கமாக அந்த நேரத்திற்கு வருபவள் வரவில்லை என்றதும், பொறுமையாகக் காத்திருந்தான். ஒரு மணி நேரம் கழித்து, அரக்க பறக்க ஓடி வந்தவள்,

"சீனு வந்து சொன்னான். அதுக்கு அப்பறம் ஓடி வந்தேன். ஒரு கால் பண்ணியிருக்கலாம்ல." என்றாள் சிறு பயத்தோடு.

புன்னகையோடு கதவை திறந்து விட்டவன், புத்தகங்களை வாங்கிப் பின்புற இருக்கையில் வைத்தான். சீட் பெல்டை போட்டு விட்டான்.

அப்போதும் மனம் ஆறாமல்...
"புராஜெக்ட் விஷயமா எச்.ஓ.டி (துறைத் தலைவர்) அப்புறம் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் பேசிட்டு இருந்தோம். அதான் நேரமாயிடிச்சி…" என்றவள், தலையை ஆட்டி கண்ணைச் சுருக்கி விரித்து, கைகளை ஆட்டி அன்றைய நிகழ்வுகளைக் கூறும் விதத்தை, பிடித்த நாட்டிய நிகழ்ச்சியைக் காணும் ஆர்வத்தில் கண்டிருந்தான்.

சாதாரணமா வழமையை மாற்றினால் அல்லது முன்னரே கூறாவிட்டால் கோபம் கொள்பவன், ஏனோ அதைத் தளர்த்தி இருந்தான். அவன் அறியாமலேயே அவன் ஆர்வம் கொள்ள ஆரம்பித்திருத்தான், அவன் உணரவில்லை.

எதையோ பேசியபடி வந்தாள், அவனில் ஈர்க்கப்பட்டிருந்தவள், அதை அவள் உணர்ந்து கொண்டாளோ?
வாகனம் ஒரு உணவகம் முன் நின்றது. அவர்கள் எப்போதும் வெளியே செல்வதில்லை, எப்போதாவதுதான். ஏனெனில் இருவருக்கும் தங்களின் இல்லமே பிடித்தமாயிருக்க விடுமுறைகளில் வேலையும் இருக்க, வெளியே செல்வது என்பது கடினம்.

மேலும், அவனுக்குக் கூட்டமான நெரிசல் மிக அதிக இரைச்சல் உள்ள இடங்கள் பிடிப்பதில்லை. அது அவனை உணர்வுச் சிதறலுக்கு, அதாவது குலுக்கி விட்டு, கோக் பாட்டிலைத் திறந்தால் எப்படி நிலை மீறி வழியுமோ, அது போன்று இவன் உணர்வுகளும் நாலாபுறமும் சிந்திச் சிதற, குறுகி அமர்ந்து விடுவான். தன்னிலை திரும்ப நேரமாகும். அவளை ஒரு புதிய உணவகத்திற்கு அழைத்து வந்திருந்தான்.

அதில் ஆச்சரியம் அடைந்தவள் "ஹேய், இன்னிக்கு புது ரெஸ்டாரண்டுக்கு வந்துருக்கோம்." என ஆனந்தத்தில் கத்த.
ஆச்சர்யத்தில் ஆயிரம் விதம் காட்டும் தாமரையை, அவன் புதிதாகப் பார்த்திருந்தான்...!
பிறகு நினைவு வந்தவளாக, "உங்களுக்குத்தான் வேற ஓட்டல் பிடிக்காதே, அதீப்." என்ற ஆராவிடம்,
"ஆமா, பிடிக்காது. ஆனா, நீ வேற ஒட்டலுக்குப் போக ஆசைப் பட்டல்ல. அதான், இங்க வந்தேன்." என்றவன்,
உள்ளே அழைத்துச் சென்றான்.

அது மிக உயர்தர உணவகமாக இருக்க, மற்றவர்களையும் அவர்கள் பார்வையையும் கண்டவள், தனது எளிய ஆடையையும், கலைந்த கூந்தலையும் பார்த்தவள்,
"நீங்க பாட்டுக்கு இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க. தலை கூடச் சீவல. அசல் பிச்சைக்காரி மாறியே இருக்கப் போறேன்." எனக் கூறியவாறு அதீந்திரன் பின் சென்றாள்.

ஆனாலும் ஆராவுக்கு ஒப்பனைகளில் அதிக நாட்டம் கிடையாது. இயல்பாக இருக்கவே பிடிக்கும். அந்த உணவகத்தையும் அதன் பிரம்மாண்டத்தையும் கண்டவள் புலம்பியதைக் கேட்டவன், அவள் புறம் திரும்பி...

"இவங்களுக்காக உன்னைத் தொலைச்சிடாத தியா, எனக்கு, நீ நீயா இருக்கறதுதான் புடிச்சிருக்கு. மேக்கப் பண்ணிகிட்டாலும் அதை உனக்காகப் பண்ணிக்கோ.
அடுத்தவங்களுக்காகப் போட்டுக்காத. அவங்க பண்ணிக்கற மாதிரி உனக்கு செஞ்சிக்காதே! உனக்கு எந்த ஸ்டைல் நல்லா இருக்குமோ, அதைப் போட்டுக்கோ!
நம் செயல்களும் கூட அப்படித்தான் தியா, அடுத்தவங்களுக்காக எதுவும் நீ செய்ய வேண்டாம். ஆனா, உன்னோட செயல்கள் அடுத்தவங்களை வருத்தப்பட வைக்கக் கூடாது. துன்புறுத்தக் கூடாது." என அவன் கூறுவதைக் கேட்டிருந்தவள்,

"நான் உங்கள கட்டிக்க வா!" எனவும்,
"என்னது...." என்றான் அவன்,
அவளோ, "இல்லன்னா வீட்டுக்கு போயி..... உங்கள கட்டிக்கவா?" என... கேட்டவளை, அடுத்த நொடி அங்கேயே அணைத்திருந்தான்.

சற்று முன் பெய்த மழையில் முற்றும் நனைந்த இலைகள், மென் காற்றில் உதிர்த்த நீர் துளிகள், உடை முழுதும் நனைத்த பின், அதே மென்காற்று தீண்டும் தேகம் சிலிர்ப்பது போல் சிலிர்த்திருந்தாள், அதீந்திரனின் ஆராத்தியா.

அவன் பேச்சில் நனைந்து, அவன் தீண்டலில் குளிர்ந்து, அவன் அக அழகில் சிலிர்த்திருந்தாள். அவர்கள் அமர்ந்திருந்தது, இருவர் மட்டும் அமரும் வகையிலான மேஜை. அதன் மங்கிய ஒளியில், அவர்கள் காதலின் பேரெழிலில், அவர்களின் எழில் இன்னும் கூடியிருந்தது.

அவர்களையும், அந்த அணைப்பையும் அழகு என, சில மனம் சிலாகிக்க, நமக்கு இதெல்லாம் பார்க்கத்தான் முடியும், நல்லா இருக்கட்டும் எனும் சில மனங்களின் இடையே, இதை எனக்குச் சொந்தமாக்கி கொள்வேன் என்று அழுக்காறு கொண்டது ஒரு மனம்.

நம்பிக்கை கேட்டு வாங்குவது இல்லை. நம் ஆழ்மனதின் நிலைப்பாடு ஒத்துக் கொள்வதும், மறுப்பதும் கண்காணுவதில் மாறுமோ? அல்லது உணர்வுகளின் பிடியில் இறுகுமோ?


மழையும் வெயிலும்
சேரும் மாலையின்
நிறப்பிரிகை காட்டுவது
ஏழு வண்ணங்களே!
மகிழ்வுடன் மனம்
சேரும் மாலையில்
உன் முகம் காட்டும்
ஆச்சர்யங்களின்
வண்ணங்கள்
நிறப்பிரிகையின்
தொகுப்பில்
இல்லை...


 


அத்தியாயம் - 10


அலுவலகத்தில் அதீந்திரனும் அவனது நண்பனும் அலுவலகத் திற்குப் புதிதாக நியமனம் செய்வது தொடர்பான பேச்சு வார்த்தையில் இருந்தனர். தற்போது தாங்கள் ஏற்று நடத்தப்போகும் ப்ரொஜக்ட், அதனுடைய தற்போதைய நிலை, வெளியாட்கள் யாரேனும் தேவைப்படுமா என்பது போன்ற விவாதங்களில் இருந்தனர்.

"அவன, நம்ம ப்ராஜெக்ட்ல கோடிங்க்கு போடலாமா? கோடங்கி!" என அதீந்திரன் ஆரம்பிக்க,
"எவன?" என்றான். மற்றொருவன் அவனை அழைத்த விதத்தில் எரிச்சலுற்று.

"போன வாரம் புதன் கிழமை 4 மணிக்கு என்னப் பார்க்க வந்தானே?" என்றவன் அவன் முகத்தினைக் கணினியின் திரையில் உயிர்பித்துக் காண்பித்தான், அதீந்திரன்
"டேய்! இவன் யாருன்னு தெரிஞ்சிதான், இந்த வேலை பண்ணப் போறீயா, அதீப்?" எனச் சிறு அச்சத்துடன் வினவ,
"பரிதி மாறன், பெஸ்ட் கோடர்."

"அது மட்டும் இல்ல. இவன் பெஸ்ட் ஹேக்கர்ஸ்ல ஒருத்தன்டா. இவன யாரு இப்ப இங்க அனுப்பிருக்காங்கன்னு உனக்குத் தெரியாது? இவ்வளவு நாளா, அவன யாரும் வெற்றி பெற்றது இல்லை?" என மற்றோருவன் வரிசையாகக் கூற,

"அவனை தனக்கு வேலை செய்ய வைத்திருக்கிறது VJ நிறுவனம். தற்போது நாம் வெளியிட இருக்கும், இணையதள விளையாட்டைப் பற்றி அறிய, அதனை அழிக்க…" என மிக நிதானமாகக் கூறினான்.
பிறகு மெல்ல தனது காப்பிக் கோப்பையிலிருந்த காபியை மிக நிதானமாக உறிஞ்சிக் குடிக்கத் துவங்கினான். ஆனால் மற்றொருவனோ...

"போன தடவை, என்னை இழுக்க ட்ரை பண்ணாங்க. பணத்துக்கு நான் மசியலை என்றதும் எப்படியெல்லாம் மிரட்டினாங்க! நீ மட்டும் என் மேல நம்பிக்கை வைக்கல, இன்னிக்கு நானும் என் பேமலியும் இல்ல" எனத் தழுதழுத்தவனிடம்.

"விடுடா கோடாங்கி!" என்றவனின் வார்த்தையில்


"மன்னிச்சிடுடா! ரொம்பப் பீல் பண்ணிட்டேன், அதீப். ஆனா... தயவு செய்து, இன்னும் அப்படியே கூப்பிடாதடா? நீ பாட்டுக்கு எல்லார் முன்னாலையும் கூப்பிட்டு வைக்கிற?" எனச் சலித்தவனிடம்,
"அதனால என்ன? அது உண்மைதான?" என்றான் அதீப்
"போடா! உனக்கென்ன, நீ சொல்லிட்ட? அங்க போனா, எல்லாவனும் அப்படியே கூப்புடுறாய்ங்க, ப்ளீஸ்டா?" எனக் கெஞ்ச,

அவனிடம், “உண்மை அதானடா!" எனச் சிரித்தபடி கூற, கடுப்பாகிய மற்றொருவன்,

"என்ன பொல்லாத உண்மை? மாறுவேடப் போட்டிக்கு அந்த வேடம் போட்டதைத் தவிர, இந்தக் கோடருக்கும் கோடாங்கிக்கும் என்னடா சம்மந்தம்?" எனப் பொரும,
அதீந்திரனோ, “என்னடா இப்படிக் கேட்டுட்ட? அவங்க உடுக்கை அடிக்கிறாங்க! நீ கீ-போர்டுல அடிக்கிற, அவங்க குறி சொல்லுவாங்க, நீ குறியீடு சொல்லுவ!" என ஆரம்பிக்க,
"போதும், நீ என்னைக் கோடங்கின்னே கூப்பிட்டுக்க? இப்ப வந்த வேலையைச் சொல்லு?" என்றவனிடம்,

“இனி நீயும் பரிதிமாறனும் ஒன்னா வேலை செய்யப் போறீங்க!" என்றான் எதையோ நினைத்து புன்னகை பூத்தவனாக,
"நீ என்னவோ முடிவு பண்ணி வைச்சிருக்க? கேட்டாலும் சொல்ல முடியாதுன்னு சொல்லுவ!" என்றவன் தாமரைக்கண்ணன் (கோடாங்கி).
தாமரைக் கண்ணன், அதீப்பின் நெருங்கிய தோழர்களில் ஒருவன். அதீந்திரனுக்கு தோழர்கள் அதிகம் கிடையாது. இது போன்ற கேலி அதீந்திரனுக்கு மிக அரிது. மேலும், அவனது நண்பர்கள் அவனிடம் கேலி செய்தால் அவனுக்குப் புரியாது. சில நேரம் புரிந்தாலும் பதில் கூற இயலாது நின்றுவிடுவான். அதிலிருந்து இப்போது அவனிடம் வந்திருக்கும் மாற்றத்தைக் கண்டு மகிழ்ந்தபடி சென்றான்.

அன்று விடுமுறை. எனவே, வீடு சுத்தம் செய்ய முடிவெடுத்திருந்தாள் ஆரா. இங்கு வந்ததிலிருந்து இந்த வேலைகளைச் செய்யவில்லை. வெறும் தரையைத் துடைப்பதோடு சரி. சற்று ஓய்வு இருக்க, இன்று ஹாலில் இருந்த பொம்மைகளை எடுத்து துடைத்தாள். அதை மீண்டும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் பின்புறம் வந்து நின்றவன்,
"என்ன பண்ணி வைச்சிருக்க?" என்றான்.
உயர் அழுத்ததில் அதிர்ந்த அவன் குரலில்,

"வந்து வீட்டை சுத்தம் பண்ணலான்னு ...." என்றாள் கொஞ்சம் தயங்கி,

"அதை, எப்பவும் அந்த வலப் பக்க மூலையில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அப்பதான் வரிசையா வரும்." என ஒரு புதிய அவன் வைத்திருக்கும், ஒழுங்கு முறையைப் பற்றிக் கூறியவன், தொடர்ந்து…

"அப்புறம் என்ன தீம் செட் பண்ணியிருக்க?" என்றான்.
'தீமா ? அப்படின்னா? வீடு ஒதுங்க வைக்க என்னத்துக்கு தீம்? கீளீன் பண்ண நினைச்சது தப்போ?' எனத் தாமதமாக யோசித்துக் கொண்டு இருந்தவளிடம்,

"நிறங்களோட அடிப்படையிலா, இல்ல வடிவத்திலா, சின்னது பெரிசா, ஆங்கில எழுத்து படியா, இல்ல நம்பர் படியா, சீனியாரிட்டி படியா? எதுவும் இல்லாம, புதுசா ஏதாவது செய்யப் போறியா?" என்று அவன் வரிசையாகக் கேள்விகளைத் தொடுக்க,

அவளோ, ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தாள். இப்படி மேலும் கேள்விகளுக்கு, என்ன பதில் சொல்ல எனத் தெரியாமல்.

அதீந்திரனோ, அவன் போக்கில், "போன மாசம் அகராதி படி, சோ இந்த மாசம் கலர் படி அடுக்கனும், அது தான் முறை." என்றவனை இவள் முறைக்க,

"போன தடவை வெள்ளை. இப்ப பச்சை." என இவள் முறைப்பை கணக்கில் எடுக்காமல் பேசியவனிடம்,

"ஏன்? இப்படி எல்லாத்தையும் செய்யனும்?"

'அடுக்கிக் வைக்க நினைச்சேன் அவ்வளவுதான டா' எனும் மனதின் ஆற்றாமையில் ஆரா கேட்க,

"இப்படி வரிசைப் படுத்தி வைக்கலன்னா, எனக்குப் பிடிக்காது? எடுக்கக் கஷ்டபடுவேன்? அப்புறம் கோபப்பட்டுக் கத்திருவேன்?" என்றவன் விளக்கம் அவளை நெகிழ்ந்து போகச் செய்ய,
"நாம இரண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்." என்றாள்.

“பச்சை கலர் தீம். ஓகே வா!"
அவனது கருத்தை ஒத்துக் கொண்டாள். பச்சை நிற வாரியாகப் பொம்மைகளை அடுக்கியவர்கள், வெள்ளை நிற பரிசல் நாற்காலிகளை, இளம் பச்சையும் அடர் பச்சையும் கலந்த நிறத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தனர்.
அவன் கண்கள் தான் வாங்கித் தந்திருந்த இலகு ஆடையான டீசர்ட்டையும் பேன்ட்டையும் அணிந்திருந்தவளைப் பார்த்து கொண்டிருந்தவன் நிலையோ.

தெரிந்தும் தெரியாமலும் இவன் கண்பட்ட பாகங்கள் எவை ? எப்படி? என அறிய முனையும் கைகளையும், தீண்ட முனையும் மனமும், தடுக்க முனையும் அறிவும், அவன் மூளையில் சற்று மின்சாரத்தின் அளவினைக் கூட்டியதில், அவன் தான் இதுவரை அறியாத உணர்வில்…

உருகிய மனம் உருப்பெருக்கம் அடையும் வீதத்தை எவ்விதம் கணக்கீடு செய்ய இயலும் எனச் சிந்திக்க, அதில் தொகை நுண் கணிதம் உதவுமா என அதனைப் பயன்படுத்தலானான்.

என் கண்கண்ட இச்சிறு பகுதியின் சார்பில், இவள் மொத்தத்தையும் நான் கண்டால் உருவாகும் விகித மாற்றம், என் ஆசையின் பரப்பினை என் ஆர்வம் ஆக்கரமிக்கும் வேகம் பூஜ்ஜியத்திலிருந்து வரையறுக்க இயலாத எல்லை எனக் கொண்டு கணக்கீடு செய்தால்... என மனதில் தொகையீடலுக்கு எல்லையை வகுத்து, கணக்கு போட்டுக் கொண்டிருந்தவனின் முன் வந்து நின்றவள்,

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க அதீப்?" என்றவளிடம்
“கணக்கு பண்ணிட்டு இருக்கேன்?" என்றிருந்தான் யோசியாது.
"என்னது?" என்ற ஆரா, அவன் பார்வையில் இரண்டு அடி பின் வைக்க, அவளின் மிக அருகில் வந்தவன்,

“மே ஐ ஹோல்டு யு தியா?" என அனுமதி வேண்டியிருந்தான்.
"ஆங்…" என விழித்தவளின் புலன்கள் வேலை நிறுத்தம் செய்ய, இதயம் மட்டும் இரை விரட்டும் சிறுத்தையின் வேகத்தில், அறிவு அது நீரின் அடி ஆழத்தில் காத்திருக்கும் முதலை போல் மிக மெல்லத் துடிக்க,

‘பொண்டாட்டிய கட்டிக்க அனுமதி கேட்டுட்டு இருக்கானே? இது என்ன டிசைனோ? இவனக் கல்யாணம் பண்ணிட்டு, நான் படற பாடு இருக்கே' என நினைத்தவள்,
"ம்" என ஒப்புதலை, தன்னில் செந்தணலின் செவ்வண்ணத்தை வெட்க தீயில் வெந்து தணிந்து பெற்றவள் கூறியிருக்க,...

மறு கணம் கன்னம் தாங்கியிருந்தன கைகள். தாங்கியவன் கைகள், தோள் மூங்கில் என வழுகி, பரந்த முதுகில் படர்ந்த கைகள் இடை தாங்கிட, அவளைத் தன் தோளளவு தூக்கி ரசித்திருந்தான். அவள் கைகள் கைலாயநாதனின் கழுத்தணி என, அவன் கழுத்தை வளைத்திருக்க, தனித்து இருக்கும் நெஞ்சம் ஒன்று கலந்தனவா, இல்லை? இடம் மாறியதோ?

இது போன்ற நிலை அவளுக்கு வந்ததில்லை. காணும் அனைவரையும் கண்ணசைவிலேயே எட்டி நிற்க வைத்து விடுபவள். எட்டியிருப்பதும், கட்டியிருப்பதும், இவன் ஒருவனையே. கணவன் என்பதால் வந்த உரிமையிலா…, காதல் வந்ததால் அது தந்த தைரியத்தாலா….! அவள் வாங்கிய அணைப்பின் சுகத்தில்... அகம் புறம் மலர்ந்து காதல் மணம் வீசும் நங்கையவள், இரவில் மலர்ந்து உதிர்ந்த பவள மல்லி என, வெட்கச் சிவப்பும், பொன் வண்ண மேனி மெலிதான அச்சத்தில் வெளுத்தும் நின்றாள்.

அவனோ, ‘என்ன இது? எந்நேரமும் இவளை கைச்சிறையில் வைத்திருக்க விழைகிறதே மனம்? இவளை ஒரு முறை தழுவினால், இது போன்ற எண்ணம் இனி தோன்றாது என நினைத்தால்…
“உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா, உன்மத்தமாகுதடி" என்பது போல் பித்தாகிப் போனேனே….! எனக்கு யாரும் தொட்டால் பிடிக்காதே...? இவள் தீண்டலை மட்டும் உடலும் உள்ளமும் ஏற்றது மட்டும் மின்றி, ஏன் விரும்பவும் செய்கிறது?’ என சிந்தைக்கும் சிந்தனைக்கும் இடையில் போராட,

நினைவுக்கு முதலில் வந்தவள், மிகுந்த வெட்கத்தில் தன் அறைக்குள் சென்று விட, சுயத்திற்கு வந்து தனது வேலைகள் சில மீதம் இருப்பதை முடித்தவன், பிறகு அவளை அழைத்து,

"தியா வீட்டை துடைத்து மட்டும் விடு. பொருட்களைச் சுத்தம் செய்து அடுக்கியாச்சு, எனக்கு வேலை இருக்கு." எனக் கூறி அறைக்குள் சென்றவனை, மறுநாள் காலை அலுவலகம் செல்லத் தயாராகி வந்த போது தான் பார்த்தாள்.
உணவு எதற்கும் வெளியே வரவில்லை. அறைக் கதவைத் திறக்கவில்லை. தான் விலகியது தான் காரணமோ... எனக் குமைந்து உறக்கம் இன்றி நேரத்தை கழித்தவள், இரண்டு முறை காபி தர அவனோ எதுவும் பேசவில்லை.

குழப்பத்தில், மறுநாள் இவள் தயாராக, அவனோ தெளிவாக அலுவலகம் செல்லத் தயராகி வந்தான்.

அவனிடம், "நேத்திக்கு காலைல சாப்பிட்டது. அப்புறம் இரண்டு காபி மட்டும்தான், இனிமே நீங்க ஒழுங்கா சாப்பிடல, நானும் சாப்பிட மாட்டேன், அதீப்." என்றவளுக்கு,
"எனக்கு வேலை பார்க்கும் போது எதுவும் தோணாது.

அதுமட்டுமில்லாம தொந்தரவும் பிடிக்காது. இனிமே நீ கொடுத்ததைச் சாப்பிட்டுட்டு செய்தி அனுப்பறேன்." என்றவன்.
ஒரு நொடி நிதானித்து, "நல்லா இல்லை அப்படின்னா, நல்லா இல்லைன்னு தான் சொல்லுவேன். வருத்தப்படக் கூடாது, சரியா?" எனவும்

"சரி" என்றவளுடன் காலை உணவை முடித்தவன், அவளைக் கல்லூரியில் இறக்கி விட்டு, அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
அலைபேசி அழைப்புவிடுக்க ஏற்றான். அதில் கூறிய செய்திகளைக் கேட்டவன்,

"சாரி. நாட் இன்டெரஸ்ட்" என எதிர்முனை கூறியதை ஒதுக்கியவன், அதன் சொந்தக்காரரை சந்திக்கத் தனக்கு விருப்பம் இல்லாததையும் சேர்த்தே கூறிவிட்டு, அழைப்பை துண்டித்து விட்டு, தனது நிறுவனம் நோக்கிச் சென்றான்.

உண்மை என்பது
உன் விஷயத்தில்
எனக்கு நீ உரைப்பது மட்டுமே!
நம்பிக்கை அது விசாரிப்பில் இல்லை
நம் மனதில் அவர்களை
வைத்திருக்கும் விதத்தில் இருக்கிறது.
 

அத்தியாயம் - 11

அதீந்திரனது GiNi tech, இணைய விளையாட்டுகளை உருவாக்குவது மட்டுமன்றி, வெளியிட்டும் வருபவர்கள். இந்த இணையதள விளையாட்டுகளை உருவாக்குவதிலிருந்து வெளியிடுவது வரை, பல படிகள் உள்ளன.

முதலில் அதற்கான கதை, பின் அந்தக் கதாபாத்திரங்களை முடிவு செய்தல், அதனை மெருகேற்றி அந்தப் பாத்திரங்களின் வேலைகளை முடிவு செய்தல்.
ஓவியம் வரைபவர்கள் அந்தக் கதாபாத்திரங்களின் பின்புலம், அந்தக் காதாபாத்திரம் அதில் வரும் மிருகங்கள், அவர்களின் ஆயுதங்கள் உடைகள் போன்றவற்றை வரைந்து தருவார். கணினி வரையிலாளர்கள் அதை அடிப்படையாக வைத்துக் கதாபாத்திரங்கள், களம் என அனைத்தையும் கணினிமயமாக்கிடுவர்.

கோடிங் எனும் கணினி எழுத்து முறையில், அதைப் பதிவேற்றம் செய்தல், அதன் மூலம் அதன் இயக்க முறைகளுக்கான மற்றும் இயங்கும் விதத்திற்கான உள்ளீட்டுத் தரவுகள் ஏற்றப்பட்ட பின், அவ்விளையாட்டிற்கு எனத் தனி இசையை உருவாக்கி, சேர்க்கும் பணி நடைபெறும்.
பிறகு தயாரான விளையாட்டு வெள்ளோட்டம் பார்க்கப்படும்.

இதைச் சோதனை செய்தல் என்பர். பின்னர் இதனை வெளியிடும் தளத்தினை முடிவு செய்து, அந்த நிறுவனங்களை அணுகுதல் எனப் பல படிநிலைகளை உள்ளடக்கியது.

அதீந்திரன் நிறுவனம் அலைபேசி, கணினி, போன்றவற்றில் விளையாடக் கூடிய விளையாட்டுக்களை மைக்ரோ சாப்ட், ஆப்பிள், போன்ற பல நிறுவனங்களுக்கு உருவாக்கித் தருகிறது. இப்போது உருவாக்கி வரும் ஆன்லைன் விளையாட்டில், ஹேக்கர் எனும் இணைய ஊடுறுவல் மூலம், அதீந்திரனின் விளையாட்டை அதன் செயல்பாட்டைச் சீர்குலைக்கவே, எதிரிகள் பரிதிமாறனை அனுப்பி இருந்தனர்.

அதீந்திரன் பரவலாகவும், சுற்றியும் பார்வையை அலையவிட்ட படியோ இல்லை, தன் கையில் ஸ்பின்னரை சுழற்றிய படியோ, அன்றைய சந்திப்பில் தாங்கள் உருவாக்கி வரும் இணையதள விளையாட்டு பற்றிப் பேசி முடித்தான்.

"ஓகே ஹைஸ்! நம்ம டீம் மெம்பர்ஸ் சிலர் மட்டும் இந்த கேம் எக்ஸிகியூட் பண்ணிக் காட்ட விளக்கம் தர, பரிதி மாறன், தாமரைக் கண்ணன்,

அப்புறம் நான் மூன்று பேர் மட்டும் தான், ஹைதராபாத் போறோம்." என அறிவித்த உடன், எல்லாரும் மகிழ்வுடன் வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டனர். இவ்வளவு நேரம் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்த பரிதிமாறனும், மெல்ல வெளியேறி தன் அலைபேசியை எடுத்து பணி முடிவடைந்ததாய் செய்தி அனுப்பினான்.

வீட்டிற்கு வந்தவன் "தியா, தியா" என அழைத்துக் கொண்டே வர, கல்லூரி விடுமுறையாதலால், வீட்டில் படிப்பதாகக் கூறிக் கொண்டு புத்தகத்தின் மீது தூங்கிக் கொண்டிருந்தாள்.

‘என்ன செய்ய...’ என யோசித்தவன், தான் வாங்கி வந்த பூங்கொத்தில் ஒரு பூ கொண்டு முகம் வருட, இவளோ தூக்க கலக்கத்தில் அதில் பூவை தின்று வைத்தாள். அதில் சிரிப்பு வந்து விட, மீண்டும் பூச்செண்டு கொண்டு வருட,

அப்போது தான் முழித்தவள். இவன் சிரிப்பதைப் பார்த்து, தன் வாயில் இருந்த பூவிதழ்களையும் உணர்ந்தவள், இவனை முறைத்தவள்…

"இதை எதுக்கு எனக்கு ஊட்டுனீங்க, அதீப்?"

"நான் உன்னை எழுப்ப ட்ரை பண்ணேன். நீதான் தூக்கத்துல சாப்பிட்ட."

"சரி, எதுக்கு எழுப்புனிங்க?"
"நான் ஹைதராபாத் போறேன். கம்பெனி விஷயமா…"

"அதீ, நானும் உங்க கூட வரேனே, எக்ஸாம் முடிஞ்சிரும். இங்க தனியா போரடிக்கும்."

"அங்க ரூம்ல சும்மா தான் இருக்கனும், எனக்கு வேலை இருக்கும்."
"பரவாயில்லை"

"சரி வா!" என்று அவளுக்கும் சேர்த்து பயணச்சீட்டு பதிவு செய்தான்.

மறுவாரம் அனைவரும் ஹைதராபாத்தில் இருந்தனர். அவளை ஹோட்டல் அறையில் விட்டவன். அவன் வேலைக்காகச் சென்றிருந்தான்.

ஆராத்தியாவும் அவனைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அன்று, இதே போல் தான் பொழுது போக்காகத் தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அலைபேசி அழைக்க, யாரென்று பார்த்தால் எண் மட்டும் இருக்க, இவனிடம் தர,

அதீந்திரனோ… "பேசு" எனவும், அவள் அலைபேசியை எடுக்கவும்...
"என்ன அதீப்? நீங்க எத்தனை தடவ என் நம்பர்லே இருந்து போட்டாலும் எடுக்கவே மாட்டிக்கிறீங்க." என்றவளின் குரல் வழிந்த விதத்தில் ஏக கடுப்பானவள், அலைபேசியை ஒலி பெருக்கும் முறைக்கு மாற்றினாள்.

"எப்ப உங்க கிட்ட பேச ட்ரை பண்ணாலும், நாட் இன்ட்ரஸ்ட்டடு அப்படின்னு நான் சொல்ல வரதக் கேட்காமலே போன வைச்சிர்றீங்க." என மேலும் சிணுங்கியது,

"நான் ரொம்ப இன்.. ட் ... ர ..ஸ்.... ட்டா இருக்கேன்." என்றாள் ஆரா, அடுத்த நொடி கட், போனை கட் செய்த எதிர்முனையவள், போனை அருகிலிருந்தவளிடம் வீசிவிட்டு,
"சை! இனி இது பயன்படாது. நேரடியாத்தான் சொல்லனும்." என்றாள் கண்களில் வஞ்சத்துடன். ஆராவோ, அதீந்திரனை முறைத்தபடி இருந்தாள்.

அவள் முகம் பார்த்தவன், ‘இது கோப உணர்வாச்சே, இது எதுக்கு இப்ப? எவளோ இவ கூட பேசாததுக்கு, இவ ஏன் என்னைய முறைக்கிறா?

ஆண்டவா…! ஒரு பார்வைக்கு எத்தன அர்த்தம் வைக்கிறாங்க. இத கண்டுபுடிக்கிறத விட.. அல் ஜீப்ரா கணக்குக்கு பதில் கண்டு பிடிக்கிறது ஈஸி டா!' என நினைந்தவனிடம்,

"யார் அவ, அதி?"

“தெரியாது, தியா."

“எப்ப பேசினாலும் எடுக்க மாட்டிக்கறீங்கன்னு கொஞ்சறா..."

“அன்னிக்கு பேசினா, நாட் இன்ட்ரஸ்ட்டடுன்னு சொன்னேன். திரும்பத் திரும்ப பேச முயற்சி பண்ணவும், ப்ளாக் பண்ணிட்டேன். அதான் வேற நம்பர்ல இருந்து முயற்சி பண்றா!" என்று அவன் விளக்கம் அளித்துக் கொண்டு இருக்கையிலேயே, மீண்டும் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வர, பெயர் இல்லாததால் மீண்டும் அவளே எனக் கோபமடைந்தவள், அலைபேசியை எடுத்தவள்,

“ஏய்! யாருடி நீ? சும்மா சும்மா போன் போட்ட பிச்சிருவேன். இன்னோரு தடவ போன் வந்திச்சி…" என ஏகத்துக்கும் வைதவள்,

"கொஞ்சறா போன்ல." என்றவள், போனை மேசை மீது வைத்துவிட்டு, மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க அமர்ந்திருக்க, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.

குடித்துக் கொண்டிருந்தவளிடம், “நீ இவ்வளவு நேரமா பேசினது, எங்க அம்மாட்டயும் அப்பாட்டயும்." என்றான் நிதானமாக.
முதலில் ஓ... என்றவள், அடுத்த நொடி யாரிடம் பேசினோம் என்பது புரிய…

குடித்தநீர் புரையேறி கண், மூக்கு, வாய் வழி வெளியேற அமர்ந்திருந்தவள், அவனைப் பாவமாகப் பார்க்க, அதீந்திரனோ ஒன்றும் அறியாத கண்ணனெனக் குறுஞ்சிரிப்புடன் அமர்ந்திருந்தான். அவனை அடிக்க நினைத்து அருகே வந்தவள், சட்டென அணைத்து முத்தம் பதித்தாள்.

"கன்னத்தில் எச்சி பண்ற, பேட் கேர்ல்." என்றவன் கன்னத்தைத் துடைக்க, மீண்டும் சில முத்தங்களைப் பதித்தவள் கண்ணுக்கு, அழகிய பால கண்ணனாக… அதீந்திரன் தெரிந்தான்.

அவளுக்குத் தெரியும், அவனுக்கு முத்தமிட்டால் பிடிக்காது என்பது.
"ஆமா, நீங்க பண்ணினதுக்குப் பதில்." என அருகில் அமர்ந்தபடி,
"ஆனா, அத்தை பேரு வரலையே?"
அலைபேசியை எடுத்துப் பார்க்க, அதில் எந்த எண்ணிற்கும் பெயர் இல்லை.

"ஏன், எந்த எண்ணையும் பெயர் வைச்சி ஸ்டோர் பண்ணல."
"எனக்கு ஞாபகம் இருக்கும். அதான்." என்றான்.

பிறகு அலர்மேல் மங்கை, ரகுநந்தன் இருவரிடமும் மன்னிப்பு வேண்டியவள், நலம் விசாரிக்க,
அவர்கள் "நாங்க ஊருக்கு வந்துட்டோம்டா! அதைச் சொல்ல தான், போன் பண்ணினோம்." என சொல்ல,

"மன்னிச்சிருங்க அத்தை! வேணும்னு பண்ணல. இவங்க உங்க நம்பர நேம் போட்டு சேவ் பண்ணாததால, யாரோன்னு சத்தம் போட்டுட்டேன். நாங்க நாளைக்கு வரோம்." என அலைபேசியை அணைத்தாள்.

அதீந்திரனும் அவளும் மறுநாள் அலர்மேல் மங்கை வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் கண்டது அவர்களுக்கு முன்பே வந்து நின்ற ஆம்புலன்ஸைத்தான்.

அதில் ஒருவர், “என்னவோ ஏதோன்னு வந்தோம் ஸார். ஒரு பிரச்சனையும் இல்லங்கிறாங்க." ஆம்புலன்ஸ் ஊழியர்களில் ஒருவர் அவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே…
"யாராவது வாங்களேன்." எனும் அலர்மேல் மங்கையின் குரலில் உள்ளே ஓடினர்.

அங்கு ரகுநந்தன் மயங்கிச் சரிந்திருந்தார். அவரை மருத்துவ ஊழியர்கள் விரைந்து ஆம்புலன்ஸில் ஏற்றியிருந்தனர்.
போட்டது போட்டபடி அனைவரும் சென்றிருக்க, அதீந்திரன் மட்டும் அங்கே வீட்டில் அனைத்தையும் சரிபார்த்து கதவடைத்துப் பின் காரில் ஏற, ஆராத்தியாவோ…
"என்னங்க என்னச்சோ? என்னவோ? வாங்க அதீப்!" என அவன் பின் அலைந்தாள்.

பின் கோபத்தில், "யோவ் மனுசனாயா நீ! அப்பனுக்கு உடம்பு முடியாம ஆஸ்பத்தரிக்குக் கொண்டு போயிருக்காங்க. நீ நடை பழகிட்டு இருக்க." எனக் கத்தியிருந்தாள் பொறுமையின்றிப் பதட்டத்தில்.
அதற்கும் அவன் பதில் பேசாமல், காரில் ஏறியவுடன் அலுவலகத்திற்கு போன் செய்தவன், கோப்புகளைத் தனது மடிக்கணினிக்கு அனுப்பச் சொன்னான். பின், மேலும் சில விவரங்களை அலைபேசி வழியாகச் செய்தியாக அனுப்பினான்.

இவளது ஆவேசத்திற்கு அவனிடம் பதில் இல்லை எனவும், அமைதியாகப் பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள். மருத்துவமனை வந்திருக்க, அதற்குள் புருஷோத்தமனும் அங்கு வந்திருந்தான்.

"டாக்டரப் பார்த்தியா உத்தமா?"
"ம் சரியான நேரத்திற்கு கொண்டு வந்திட்டீங்க. இனி எந்தப் பிரச்சனையும் இல்லைன்னுட்டார்." என்றான் புருஷோத்தமன்.

அங்கு வந்த செவிலியர், “எல்லாரும் தனித்தனியா போய்ப் பார்க்கலாம்." என்றதும், ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சென்று பார்த்து வரவும்,

வெளியே வந்தவுடன் புருஷோத்தமன்,
"அதீப், நீ சொன்ன மாதிரி எல்லாத்தையும் உனக்கு அனுப்பிட்டேன்."

"ஓகேண்ணா" என்றவன், அவர்களது கணக்கு வழக்கு அனைத்தும் அடுத்தச் சில மணி நேரத்தில் முடித்தவன்,

“எல்லாம் முடிச்சி, உங்களுக்கு மாத்திட்டேன்." என்றவன் கிளம்பும்போது அறைக்குள் எட்டிப் பார்க்க, ரகுநந்தன் உறக்கத்தின் பிடியிலிருந்தார்.

வெளியே அமர்ந்து இருந்த அலர்மேல் மங்கையிடம் வந்த ஆரா,
"அத்தை உங்களுக்குச் சாப்பாடு..."
"இல்லை ஆரா. இங்க அவங்களே தந்துடுவாங்கமா. வேற யாரும் தங்கவும் முடியாது. ஒருத்தர் மட்டும் தான் தங்கலாம். இது நம்ம சொந்த ஹாஸ்பிட்டல். இதுல நாம ஒரு முக்கிய ஷேர் ஹோல்டர்." என விளக்கிய அலர்மேல் மங்கை.
"உனக்கு எப்படித் தெரிஞ்சது அதீப், உங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்னு எப்படி கரட்டா ஆம்புலன்ஸ் வரச் சொன்ன?" எனக் கேட்க,

"அப்பா வாட்ச்ல நான் பிக்ஸ் பண்ணியிருக்க சிப், சென்சார்ஸ் அவர உடல் நிலையப் பத்தின முழு விவரத்தையும் எனக்கு அனுப்பி வைச்சிடும். அதுல ஏதாவது மாற்றம் இருந்தா அலர்ட் வந்துரும்.
இன்னைக்கு இதயத் துடிப்பு சரியில்லாத மாதிரி தெரிஞ்சது. அதான் வீட்டுக்கு வந்துட்டாங்கலான்னு தெரிஞ்சிக்க, போன் பண்ணிக் கேட்டேன்.
கை வலிக்குது... நெஞ்சு காந்தல் இருக்கு. சாப்பிட்டது செரிமானம் ஆகல... அதான் சுக்கு வெந்நீர் போடப் போறேன்... சொன்னார்.
உடனே டாக்டர்க்கு பேசிட்டுக் கன்பார்ம் பண்ணிட்டு, ஆம்புலன்ஸ அனுப்பி வைச்சிட்டு... அப்புறம் நானும் தியாவும் வந்தோம். நான் வரத விட, ஆம்புலன்ஸ் வரது தான் முக்கியம். உங்க கிட்ட சொன்னா, பதட்டப்படுவீங்க, அதான் சொல்லலை. நான் வந்து கூட்டிப் போறதுக்கு டைம் வேஸ்ட் ஆகும். அதான்..." என்றவன்

ஆராத்தியாவை போதுமா விளக்கம், என்பது போலப் பார்த்தான்.
அனைவர் முன்னிலையிலும் எதுவும் சொல்ல, கேட்க முடியாமல்...

"சரிங்க அத்தை, நாங்க கிளம்பறோம்.” என்றவள், “ஏதாவது வேணும்னா போன் பண்ணுங்க.” என்றவள், அதீந்திரனுடன் சென்றாள்.

வாகனத்தில் அமர்ந்தவள், "ஸாரி, எனக்கு சொல்லி இருக்கலாம்ல."
"எதுக்கு?"
"இப்படிக் கேட்டா என்ன சொல்ல? நானும் வீட்டில ஒருத்தி, அதுக்காகவாவது சொல்லனும்ல…"
"அதான் கூட்டிட்டு வந்தேன்." என்றவன் ‘பதட்டப்படுவன்னு தான் சொல்லல’ எனக் கூறவில்லை.
அதைக் கூறவேண்டும் என்று தெரியவில்லை.

ஆனால், அவளுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது.
அவனை ஆராதிக்க, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

நீ
விரும்பிய உருவங்களை
செய்யும் காகிதமோ நான்!
உன் விருப்பம்
போல் மடித்து மடியில்
வைத்துக் கொள்கிறாய்!
மிக விருப்பமான
வாசனைகாகிதம்
என இழுத்து நுகர்கிறாய்!
வெளியே
இடநெருக்கம் அதிகமென
நெஞ்சில் வைக்கிறாய்!



 


அத்தியாயம் - 12


அழகிய வெள்ளை நிற வண்ணத்துப் பூச்சி, ஒரு பகுதி சிறகு விரிப்பது போன்ற வடிவில் காதணிகள், மோதிரம். சிறு வைர கற்கள் பதிக்கப்பட்டு மின்ன, கழுத்தை ஒட்டிய சிறு செயினின் டாலர் இருபுற இறக்கை விரிகின்ற வடிவில் இருக்க, அதைக் கைகளில் எடுத்துப் பார்த்தவள் அணிந்து கொண்டாள்.

மற்றொரு பையைப் பிரிக்க... வெள்ளை நிறத்தில் கற்கள் பதித்து, அவளை கிரேக்க தேவதையென மாற்றிக் காட்டும், அந்த ஆடையைப் பார்த்து மயங்கித்தான் போனாள். எப்படி அணிய வேண்டும், வழிமுறை தெரியாமல் அவள் திருத் திருவென விழித்து நின்றாள்.

அங்கு வந்த அதீந்திரன், மிக அழகாக விழாவுக்கு ஏற்ற வகையில் கருநிற காற்சட்டை, முழுக்கை சட்டை மற்றும் கழுத்தில் டை அணிந்து இருந்தவன், இவள் விழிப்பதைப் பார்த்து, தனது கையிலிருந்த கோட்டை நாற்காலியின் மேல் போட்டவன்...
அவளிடம் ஆடைக்காக கை நீட்ட, அவளோ உதவிக்கு யாரும் அங்கு இல்லாமல், நேரம் வேறு சென்று கொண்டிருக்க, மறுக்க முடியாத நிலையில், ஆடையை அவன் புறம் நீட்டினாள்.

அவளது முகம் பார்த்தபடி கையிலிருந்து ஆடையை வாங்கியவனின் கண் வசியத்தில் மயங்கியவளை, சற்றும் சலனமில்லா முகத்துடன் நெருங்கியவன், அவள் அணிந்திருந்த சிற்றாடையைக் களைந்தான்.

ஆராவோ, தன் மீது பட்ட அவன் விரல் விதைத்த தீ கங்குகள் உடல் முழுவதும் பரவ, அவன் மூச்சுக் காற்று சிறு புயலென அவளைத் தாக்க, தீப்பற்றிய முதுவேனிற்கால மூங்கில் வனமென மாறி வேண்டி நின்றாள்.

அதீந்திரனவனோ, ஆராவுக்கென வடிவமைத்து வரவழைத்த அந்த வெண்ணிற ஆடையில், அவளைத் தேவதையென மாற்றியிருந்தான்.
கண்ணாடி முன் அவளை நிறுத்தியவன், தானும் சற்று தள்ளி நின்று பார்த்தவன், திருப்தியுடன் தனது மேலாடையைக் கையில் எடுத்துக் கொண்டு,
"போலாம் தியா" எனவும்
"ஆ.. ஆங்..." சற்றே உணர்வுக்கு வந்தவளை, தன்னுடன் அழைத்துச் சென்றான், அந்த ஹோட்டலுக்கு.
அந்தச் சந்திப்புக் கூட்டத்தில், அனைவரும் அமைதியாகக் குழுமியிருந்தனர். மேடையில் தோன்றிய அறிவிப்பாளர்,
"குட் ஈவினிங் லேடிஸ் அன்ட் ஜென்டில்மேன். இதோ நீங்கள் காத்திருந்த போட்டி முடிவுகள். மிஸ்டர்.அதீந்திரன் ப்ரம் Gini வொன் த பெஸ்ட் ஹேக்கர்ஸ் ப்ரைஸ், அன்ட் டிசைடடு டு ஜாய்ன் வித் தெம். அன்ட் ஹீ இஸ் ஆக்டிங் அஸ் சிஇஓ பார் அவர் ஆல் இன்டியன் ப்ரான்ச்சஸ்."
என மேலும் ஏதோ கூற, அனைவரின் கவனமும் இவனை நோக்கிக் குவிய, இவனோ அந்தச் சூழலில், சுழலில் சிக்கியது போல உணர்ந்தான். கண் முன் அனைத்தும் தெளிவின்றித் தெரிய, சிதறலுக்கு முன் அவள் கரம் பற்றிக் கொண்டான்.

அவனது மாறங்களைக் கண்டவள், ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி என நினைத்துக் கொண்டாள்.
அவனை அணைத்துக் கொண்டு, மெல்ல முதுகில் தட்ட, அவனது விழி சில துளிகள் உகுத்தது. உடனே காதில் இயர் போனை மாட்டியவன், கொஞ்சம் தன்னை நிலைப்படுத்தி மேடையேறியவன், எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கும் நிலையில் இல்லை.

தன்னவனின் நிலை உணர்ந்து, அவனின் கரம் பிடித்துக் கொள்ள, ஒரு கையில் விருதை வாங்கியவன், வழங்கியவருக்குத் தலையை மட்டுமே அசைத்தான். நன்றி உரைக்கக் கூட இயலவில்லை. கீழே இறங்கி விட்டான். அவனுக்கே ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருப்பது போல் இருக்க, அவனுள் விவரிக்க இயலாத நிலை…!

அதைத் தொடர்ந்து கொண்டாட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட, மேடையில் இருந்து இறங்கி வந்தவனிடம் தாமரைக் கண்ணனும், பரிதி மாறனும் வந்தனர்.

"நீங்க இங்க இருந்து சமாளிச்சிக்கோங்க. நாங்க கிளம்பறோம்." என்றவள், பார்ட்டி கொண்டாட்டம் துவங்கும் முன்னமே அதீந்திரனுடன் வெளியேறி இருந்தாள்.

அவனது வியர்த்து வடியும் நிலை கண்டு… மெல்ட்டிங் ஸ்டேஜ் எனும் உணர்வுச் சிதறல் தொடங்கியிருக்க, தன்னிலை இழக்கப் போனவன், ஆராவின் அணைப்பில் தன்னை நிலை நிறுத்திய பின் தான், விருது வாங்கும் வரையிலும் தாக்குப் பிடிக்க முடிந்தது. தொடர்ந்து நிலைமையை, ஆரா கையில் எடுத்துக்கொண்டாள்.

அதீந்திரன், இது போன்ற கேளிக்கை விருந்துகளைத் தவிர்த்து விடுவான். இன்றைய விருந்து மிக முக்கியமானது. எனவே, வேறு வழியற்றுப் போனான். உணர்வுச் சிதறலின் ஆரம்ப நிலையிலேயே வெளியே வந்திருந்தாலும், வாகனத்தில் அமர்ந்தவன் முழங்கால்களுள் முகம் புதைத்துக் கொண்டான்.

சிறு குழந்தை தாயைப் பிடித்து வைப்பது போல், அவள் கரம் பற்றியிருந்தான். சற்று கழித்து, ஆராத்தியா அவனைத் தாயென மடிதாங்கி இருந்தாள். உறங்கும் சூரியனவன் வெம்மை தணிந்திருந்தான், எனினும் ஒளிர்ந்திருந்தான்.
"என்னாச்சு அதீப்?"
"இந்தக் கும்பல், இந்த அன்ப்ரிபெர்டு சிட்டுவேஷன், இது எனக்குக் கம்பெர்ட் கிடையாது." என்றவன் இறங்கி அறைக்குப் போனவன், அயர்ச்சியில் உறங்கி விட்டான்.

அவளுக்கு உறக்கம் வரவில்லை. உடை மாற்றக் கூட மனம் இன்றி, அவனையே தான் பார்த்திருந்தாள். இந்த வெற்றிக்கு அதீந்திரன் உழைத்த விதம் அவள் அறிவாள். கடந்த ஒரு மாதமாய், அவன் உறங்கவில்லை, உறங்கினாலும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களே…!

பல நேரம் அவள் வைத்த உணவு சீந்தப் படாமல் இருக்க, கேட்டால் பதில் வராது. எப்போதாவது... இல்லை மறந்துட்டேன் என்பான்.

இதற்காகவே, தினமும் உணவுக்கு முன் இவள் குறுஞ்செய்தி அனுப்ப, பிறகு அவன் உட்கொண்டதாகச் செய்தி, அவன் அனுப்புவான்.
கோடிங் வேலைகளைப் பன்னிரண்டு மணி நேரம் தொடர்ந்து செய்பவன், திடீரென்று கணக்குப் புத்தகங்களைச் சூழ வைத்து சில கணிதப் புதிர்களை நோட்டிலும் கணினியிலும் எழுதி, தீர்வு கண்டு கொண்டிருப்பான்.
பல நாள் கழித்து ஆடாமல் அசையாமல் நிர்மலமாகப் படுத்திருந்தவனை நெருங்கியவள் கன்னத்தில் முத்தம் பதிக்க, அதில் ஈரம் பதிய,
“டோன்ட் கிஸ் மீ!" என்றான்.
ஆராத்தியா மீண்டும் இதழ் மீதே இதழ் பதித்தாள்.

“எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும், ஏன் லிப்ல பண்ண?" என உறக்கத்தில் விழித்த செவ்வரியோடிய விழிகளுடன் ஆராவை உறுத்துப் பார்த்தவன், சட்டென்று போர்வைக்குள் அவளை இழுத்து தன்னுடன் இறுக்கி அணைத்தபடி, மீண்டுமாய் உறங்கிப் போனான்.

அவன் மார்பில் தன் முகம் அழுந்த, 'இப்ப இதுக்குப் பேர் என்னவாம்? கிஸ் மட்டும் பண்ணக் கூடாதாம்.’ என நினைத்தவள், அதீந்திரனின் அயர்ந்த உறக்கத்தைக் கண்டவள், தானும் உறங்கிப் போனாள்.
ராமமூர்த்தியோ அங்கு ஏக கோபத்தில் இருந்தார்.

ராமமூர்த்தியின் மகள் தனுஜனியும், பரிதிமாறனும் அன்று காலை மணம் முடித்தவர்கள், அவருக்கு உண்மைகளைக் கூறிய பின்தான் தெரிய வந்திருந்தது. பரிதிமாறனும், அதீந்திரனும் நண்பர்கள் என்ற உண்மை.

பரிதி மாறன் திறமை உள்ளவன் என்றாலும்… தாய் தந்தையின் தவறுகளால் கூர்நோக்கு இல்லத்தில் வளர்ந்தவன். முறையாக மேலே படிக்க முடியாமல், படிப்பை பாதியில் நிறுத்தி, இரவில் மட்டும் திறந்திருக்கும் நடமாடும் உணவகத்தில் உதவியாளர் வேலைக்கு வந்திருந்தான்.
அதனை நிறுத்தியிருக்கும் இடத்திற்கு அருகிலேயே படுத்துக் கொள்வான். அவனுக்குக் கணினியின் மேல் இருந்த ஆவலில், சிறுக சிறுக சேர்த்து நிறையப் புத்தகங்கள் மூலம் கற்றுக் கொண்டான்.

ஹேக்கர் தொழில் நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் இருக்க, பல முறை அந்தப் போட்டியில் கலந்து கொண்டவன். அதீந்திரனுடன் போட்டியிட்டு இரண்டாம் இடம் கொண்டான்.

இவன் யார் எனத் தெரிந்து கொள்ள, இவனைத் தேடிவந்த அதீந்திரன்,
உதவியாளராக இருக்கும் அவனது கல்வியை முறைப்படி முடிக்க உதவியவன், பரிதியை தனது நண்பனாகவும் ஏற்றுக் கொண்டான். கணினி, கணிதம் பற்றிப் பல மணி நேரம் பேசுவர் இருவரும். தனது நிலையை எள்ளி நகையாடாமல், தன்னுடன் சமமாகப் பழகும் அதீந்திரன், அவனுக்குப் பிரியமானவன்.

ராமமூர்த்திசான் பரிதி மாறனை XY க்கு அனுப்பி வைத்தவர். தன் மகளும் பரிதிமாறனும் காதலிப்பதை அறிந்து கொண்டவர், அவர்களைப் பிரிக்கவும்... அதீந்திரன் நிறுவனத்தை அழிக்கவும்... அதன் மூலம், ஒரே அம்பில் இரு எதிரிகளை வீழ்த்த நினைத்தார்.

‘பரிதியை அங்கு அனுப்பி, அதீப்புடன் சேர்ந்து பின் அவன் விளையாட்டு மற்றும் தளங்களை முடக்கவும், வைரஸ்களைப் பரப்பவும் கூறியிருந்தார். இதனால், அதீந்திரன் நிறுவனம் முடங்கும். பின் பரிதி மாறனை காவல்துறை கைது செய்ய, தன் மகளின் காதலும் காணாமல் போய்விடும்.’ என எண்ணியிருந்தார்.

அதீந்திரன் ஏற்கனவே தன்னுடன் இணைந்து கொள்ள பரிதிமாறனை அழைத்திருந்தான். பரிதி மாறன் தான், போதுமான நிதியில்லாமல் நண்பனின் நிறுவனத்தில் பங்குதாரர் ஆவது, தனது சுயமரியாதைக்கு இழுக்கு எனத் தயங்க, இதை அறியாமல் ராமமூர்த்தி அவனுக்குப் பணம் தர, அதைக் கொண்டே…

அதீந்திரன் நிறுவனத்தில் பங்குதாரராக மாறினான். ஆனாலும், தனது வேலையை ஒழுங்காகச் செய்யப் பலவிதமான ஊடுறுவும் முறைகளைப் பரிதி கையாள, அவற்றை முறியடித்தான், அதீந்திரன்.

இது, இவர்கள் இருவருக்கும் பிடித்தமான வேலையும் என்பது, வேறு யாருக்கும் தெரியாது.
அதீந்திரன் இப்போது இந்திய அளவில் தலைமை செயலதிகாரியாக மாறிவிட்டதால், தனது GiNi நிறுவனத்தின் பங்குதாரரான பரிதிமாறனை, இணைய ஊடுறுவல் துறைக்குத் தலைவராகவும், தாமரைக் கண்ணனை இணைய விளையாட்டு பிரிவிற்குப் பொறுப்பாகவும் நியமித்திருந்தான் என அனைத்தும் கூறியவர்கள்.
அவர் முன், அவர் கொடுத்த பணப் பெட்டியை வைத்தவன்,

"இதோ உங்ககிட்ட வாங்கிய பணம், இதில் வட்டியோட இருக்கு. அதீந்திரன் எப்பவுமே உங்களைப் போட்டியா நினைக்கல. நீங்க தான் நினைச்சிருக்கீங்க. அப்பவும் நேர்மையா நீங்களும் முயற்சி பண்ணியிருக்கனும். எங்க காதல பயன்படுத்தி இருக்கக் கூடாது." என்று தனுஜனியின் முகம் பார்க்க,
அவள் அவனை நெருங்கி வந்து நின்றவள்,

"உங்களுக்குப் பரிதிய பிடிக்கலை அப்படின்னா, அதை நேரடியா சொல்லியிருக்கனும். அதை விட்டு, இப்படி முதுகுல குத்த நினைக்கக் கூடாது.

அதான், நானும் எல்லாம் தெரிஞ்சும், ஒன்றும் தெரியாத மாதிரி நடந்துகிட்டேன். ஏன்னா நான் உங்க பொண்ணு." எனப் பரிதி மாறன் கைகோர்த்துச் சென்றவளை, தடுக்க இயலாது பார்த்திருந்தார்.

வாழ்வின் நீரோட்டம்
என்றும் ஒன்று போல் இல்லை
தன் போக்கில் நம்மை இழுக்கும்.
இழுபடும் போது
நம் போக்கிற்கு அது மாறும்.
நாம் நினைப்பதே நடக்க
வேண்டுமென நினைக்க,
நிலையாதெனக் கூறும்
நடக்காது என்கையில்,
அதையே நடத்திக் காட்டும்
எனவே நல்லதே நினை!








 

அத்தியாயம் - 13


பாவை நோண்பின் படிமுறைகளைச் சொல்லும் கோதை கூறுகிறாள்.
“செய்யாதன செய்யோம்
தீக்குறளை சென்றோதோம்"
என நோண்பிருக்கும் பாவையர் நாங்கள் செய்யக் கூடாத செயல்களைச் செய்ய மாட்டோம். பிறரை பற்றித் தவறாக மற்றவரிடம் புறம் பேச மாட்டோம் என்கிறாள்.
வள்ளுவனும் புறங்கூறாமை எனும் அதிகாரத்தை, இதற்காகவே இட்டு வைத்தான். எனினும், அடுத்தவர்கள் மேல் உள்ள அழுக்காறு, தனக்கு உரிமையில்லாதவற்றின் மீது ஆசை, இவள் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக வாழலாம் எனப் பொறாமையில், பிறர் வாழ்க்கையில் விளையாடிப் பார்ப்பவர்கள் மக்கள் அல்ல மாக்களே...!

அவைகள் எங்கும் பரவி கிடக்கின்றன. சிறு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும், கிடைத்ததும் அட்டை பூச்சி என ஒட்டி, மசிழ்ச்சியை உறிஞ்சி, வாழ்வை அழித்து விடும். அது போன்ற அவைகளில் ஒரு சில அதீந்திரனை அலைபேசியிலும், பின் நேரிலும் பார்த்து விஷம் தோய்க்க முயன்றன. அதீந்திரன் தன்னியல்பில் அதை மறுத்து விட்டான். வஞ்சினம் கொண்ட அவை, ஆராவை வதைக்கும் வழியை எதிர் நோக்கிக் காத்திருந்தன.

அன்று கல்லூரி இறுதி நாள், வகுப்பறையில் இருந்து வெளிவந்த ஆராத்தியா, மழையைக் கண்டதும் எப்படிச் செல்வது? என நின்று விட்டவள், அதீந்திரன் வரக் காத்திருந்தாள். துளிகளாய் தூவியே அனைத்தையும் தன் வசமாக்கும் மாரியவன் போல, மாறனிவனும் தழுவ துளிகளாய் தூவியவளை, தன்னோடு நிறைத்துக் கொள்கிறான் என மழைத்துளிகளில் தன்னவனை ரசித்துக் கொண்டு நின்றாள்.
அவளைச் சூழ்ந்த அவைகளோ விஷம் தோய்ந்த பேச்சுகளைத் தொடங்கின.

"இவளுக்கு வந்த யோகத்தப் பார்த்தியா? ஊர் சுத்த ஒருத்தன்..., நிச்சயம் பண்ணி கல்யாண மேடை வரை ஒருத்தன்... தாலி கட்டினது ஒருத்தன்... இவன் எத்தனை நாளோ?" எனக் கொடுக்கினை பதிக்க,

"எத்தனை நாளோ? இல்லை, எத்தனாவது ஆளோ? அன்னிக்கு அந்தப் போஸ்ட்ல பார்த்தோமே இவ இலட்சணத்த..!. ஆனா அதுலயும் ஏதோ செஞ்சி மயக்கி, அந்த சித்தார்த்தையும் மன்னிப்பு போஸ்ட் போட வைச்சிட்டாளே...!"

"உனக்கும் எனக்கும் அந்தத் திறமை இருக்கா? சொல்லு..! இவளப் பத்தி சொல்ல, இவ புருஷன பார்க்கப் போனா... அந்த அதீந்திரன் இவ என்னவோ பெரிய அழகின்னு, நம்ம சொல்ல வரதக் கூட கேட்க மாட்டேங்கிறான்." என விஷம் ஏற்றின.

வார்த்தைகளை வாளை விடக் கொடுமையாக இவர்களால் எப்படி வீச முடிகிறது. என நெஞ்சம் நடுங்க, கண் கலங்கி நின்றிருந்தாள் ஆராத்தியா.

“போலாமா தியா?" என அவள் தோள் மீது கை போட்டபடி கேட்டவன், அதீந்திரன். மேற்கொண்டு நகரும் முன், மீதி வக்கிரத்தையும் கொட்டிட நினைத்தவை அவைகளில் ஒன்று.
“உங்க பொண்டாட்டி ஒன்னும் பெரிய பத்தினி இல்ல." எனக் கத்தியிருந்தது. கூட்டத்தில் யார் என அறிய முடியாது எனும் தைரியம். அதற்கு மெல்லத் திரும்பி அவைகளைப் பார்த்தவன், அது ஏதோ கோர்ஸ் இல்லை... பட்டம் என நினைத்து கொண்டானோ...!

"நீங்க பத்தினிகளுக்குத் தனியா சங்கம் வைச்சிருக்கீங்களா? இல்ல இங்க பத்தினியாகறதுக்குத் தனியா கோர்ஸ் வைச்சிருக்காங்களா? டெஸ்ட் வைப்பாங்களா? கவர்மென்ட் அப்ரூவ் டா?" என நிதானமாகக் கேள்விகளைக் கோர்க்க… அதில் எரிச்சலடைந்த ஒன்று விளக்க,

"பத்தினின்னா கண்ணகி மாறி ஒருத்தனையே நினைச்சிட்டு அவனுக்காக வாழறது. இவள மாதிரி இல்ல..." என்றது.
பிறகு தான் முகம் இறுக, "அவ கண்ணகியா இல்லையான்னு உங்க கிட்ட வந்து கேட்டேனா...? முதல்ல, நீங்க கண்ணகியா? "
இல்லை ல. சோ மனுஷங்களா மாறுங்க. அப்புறம் மத்தவங்கள பத்தி பேசலாம்." என்றவன் குடையை விரித்துப் பிடித்தான்.

ஆராத்தியாவை தோள் சேர்த்து தன் கைவளைவுக்குக் கொணர்ந்து அழைத்துச் சென்றான். அதுவரை குரைத்தவைகள் எதிர்த்த நொடி ஓடிவிட்டன.

வீட்டிற்கு வந்து சேரும் வரை இருவரும் எதையும் பேசவில்லை. ஆராவின் சிந்தனையில் ‘இவன் எங்கே தன்னைச் சந்தேகப் படுவானோ? இல்லை, என்னிடம் ஏன் கூறவில்லை எனக் கோபப் படுவானோ?’ என எண்ணியிருந்தாள்.

அதீந்திரனிடம் பேச வந்தவள், அவன் நின்றிருந்த நிர்வாண நிலை கண்டு, விழுந்தடித்துக் கொண்டு வெளியே ஒடி வந்திருந்தாள். ஆரா ஓடுவதைப் பார்த்தவன், சற்றும் வெட்கமின்றித் தோளை குலுக்கி கொண்டு, மீண்டும் தனது உடை மாற்றும் வேலையை முடித்து வெளியே வந்தவன்,

"ஏன், ஓடி வந்த ஆரா? என்ன விஷயம்?"

"உன்னைப் பார்த்ததுல தான்." என்பதை எப்படிக் கூற எனச் சிவந்து போய் நின்றாள். பின் தான் கேட்க வேண்டிய விஷயத்தை நினைத்தவள்,

"அதீப், அந்தப் போஸ்ட்ட பத்தி.." எனத் தொடங்கும் முன் இடையிட்டவன்,

“உன்னை பத்தி எந்த விஷயமா இருந்தாலும், நீ மட்டும் தான் என்கிட்ட சொல்லனும். அதுவும் உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் தான், ஒரு விஷயத்தை என்னிடம் சொல்லலாமா? வேண்டாமா? என முடிவெடுக்க வேண்டியவள் நீ. கேட்கலாமா? வேண்டாமா? என முடிவெடுக்க வேண்டியவன் நான்." என்றவன்,

மேலும், "அந்தச் சைட்ட குளோஸ் பண்ணதே நான் தான். அப்பவும் சரி எப்பவும் சரி, அந்த போஸ்ட்ல என்ன இருக்குன்னு நான் தெரிஞ்சிக்க விரும்பல."

“சந்தேகப் படுவீங்களோன்னு....?” என்ற ஆராவின் இழுவைக்கு,
“உன் மேல நான் சந்தேகப்படனும் அப்படின்னா, அது இந்தப் போஸ்ட்ட பார்த்து இல்ல, மத்தவங்க சொல்றதக் கேட்டுச் செய்ய மாட்டேன். அப்படி எனக்குத் தெரியாம எந்த விஷயத்தையும் உன்னால மறைக்க முடியாது." என்றவனின் உறுதியில் திகைத்தவள்,

“இந்தச் சுதந்திரத்தை நான் தப்பா பயன்படுத்தி உங்களுக்குத் துரோகம் பண்ணிட்டா?" என்றவளின் அருகில் சென்ற அதீந்திரன்,
“அனிச்சை செயல் பத்தி உனக்குத் தெரியுமா?"

"ம்ஹூம்" எனத் தலையாட்டியவளிடம்,
"உன்னோட மூளைக்குக் கட்டுப்படாத செயல்களைத் தான், அனிச்சை செயல்கள் அப்படின்னு சொல்வாங்க இருமல், தும்மல் மாதிரி…"

"அந்த மாதிரி நானும் உனக்குள் வந்து விட்டேன், சோ, உன்னால எனக்கு எதிரா எதுவும் செய்ய முடியாது." என்று நிமிர்வு படக் கூறியவன்,

“நான் உன்னைப் புரிஞ்சு வைக்கல. படிச்சி வைச்சிருக்கேன்." என்றவன். அவளை அவனுடைய அறைக்கு அருகில் இருந்த மற்றோர் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அந்த அறைக்குள் நுழைந்தவள் பிரம்மித்துப் போனாள். அறை முழுவதும் அவளது முககுறிப்புகளையும், உடல் மொழிகளையும் வெளிப்படுத்தும் ஒவியங்களாக இருந்தன.

தன்னை ஒவியத்தில் கண்டவள் பேச்சற்றுப் போனாள். அதீந்திரன், ஒவ்வொன்றையும் எப்போது வரைந்தது என்பதையும், அதில் அவளது பாவனைகளையும் விளக்கியபடி வந்தவனுடன் அனைத்தையும் கேட்டபடி ஆர்வமுடன் வந்தவள், அவனது கூறாத காதலை எண்ணி வியந்தாள்.

முத்தமிடுவது போன்ற அந்தச் சித்திரத்தை கண்டவுடன், நாணத்துடன் நகர முற்பட, கை பிடித்துத் தடுத்தவன் கேட்டிருந்தான்.

"சித்திரமே நில்லடி
முத்தமிட்டால் என்னடி?
நித்தம், நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ?
தொட்டு, தொட்டு
நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ?"
என ஏற்கனவே அவள் தன் இதழ் தொட்டதை நினைவுபடுத்த, அதில் சற்று வெட்க கோபம் கொண்டவள்,

"கன்னி இதழ் மீது
தென்றல் படும் போது
அதில் இல்லாத சுவை இருக்கும்,
அந்தச் சுகம் வேறு
சொந்தம் கொள்ளும் போது
அதில்,

பொல்லாத பயம் இருக்கும்…"
என்றவள், அது தென்றல், இது நீ, எனவே எனக்குப் பயம் எனப் பாசாங்கு காட்டினாள், பயம் அறியாதவனிடம் .
"பாலிருக்கும் கின்னம்
மேலிருக்கும் வண்ணம்."
அவளை இழுத்து தன்னுடன் சேர்த்தவன் செய்த கோலத்தில், தனது இதழ் துடிக்க அவள் நின்ற கோலம், அதீந்திரனுக்கு உணர்த்தியது அதன் இன்பம் கோடனு கோடி என்று, அதைக் காணாமல் போவதில்லை என உறுதியுடன் அவள் இதழ் சேர்ந்தான்.

"மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா?"
என அவளனுமதி கேட்டான், அதைத் தந்தவள்…

"அது மாறி விட்டால்
இந்த மேனியிலே
ஒரு தேனாறு ஓடும் இல்லையா?"
எனச் சந்தேகம் கேட்டாள்.
"இடை தானாக வாடும் இல்லையா?"
எனச் செயல் விளக்கத்தில் அவன் இறங்க, திணறிப்போனாள்.
அதீந்திரனவனின் ஆரா.

இத்தனை நாள் அமைதியான ஆறெனும் தோற்றத்தில் இருந்தவன், ஆர்பாட்டமான அருவியென அவளில் வீழவும், மூச்சு திணறியவள், பின்பு அவனில் முழ்கிப் போனாள். அருவியவனின் வேகத்தில், உடல் நோக, விரல்கள் சில்லிட்டுப் போக, வெளியே குளிரும் உடல் உள்ளே சுட நீராடிய நேரம் அதிகரிக்க, கண் சிவந்த போது கீழ் வானும் சிவந்திருந்தது.

என் இயல்பிற்கு
சற்றும் பொருந்தாதவற்றை
என்னுள் பொருத்தி
பொருந்தி போக
செய்யும் இந்த
காதலை நான்
அறியவில்லையோ
நான் அறிவித்த விதம்
நீ உணர வில்லையோ?
 


அத்தியாயம் - 14


வீட்டில் ஹோம் தியேட்டர் உபயத்தில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர், ஆராத்தியாவும் அதீந்திரனும். மிகக் கவனமாய் அவன் பார்க்க, இவள் அவனை அணைத்தபடி அவன் மடி மேல் அமர்ந்து கொண்டு, தோள் மீது முகம் புதைத்து, அவ்வப்போது திரும்பி, பின் மீண்டும் முகம் புதைத்துக் கொள்ள, என இவள் பயந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
இறுதியில் கதையின் பின்புலத்தில் வரும்போது, காரணம் அறிந்து அவள் அழுது கொண்டிருந்தாள். படம் முடிந்த பின், ஒரு வழியாக விலகியவள். சோபாவிலிருந்து சுற்றும் முற்றும் பார்த்து பயந்து கொண்டு இறங்கியவள்,

சமையலறை சென்று தண்ணீர் குடிக்கச் சென்றாள். பயந்து பயந்து மிக மெதுவாகச் சமையலறைக்கு வந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்தவள், அருகில் இருந்த டம்பளர் கீழே விழுந்ததில் பயந்து, ஆ….என அலறி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

பின் மெதுவாகக் கண் திறந்து பார்த்தாள். எதிரில் அதீந்திரன் நின்று கொண்டு இருந்தான். கண்திறக்கும் வரை, அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன்,

"இப்ப எதுக்குக் கத்தற?" எனவும்,

“அது... பயந்துட்டேன் டம்பளர் கீழ விழுந்ததுல" என்றாள் சமாளிப்பதாக நினைத்து,

"டம்பளர் கீழ விழுந்தா, நீ பயப்படுவியா?" என்றதும், மானம் போச்சே மன நிலையில்…

"இல்ல, இல்ல" என வேகமாக மறுத்தவள், “நான் ஏற்கனவே அதைப் பார்த்து பயந்து போயிருந்தேன்." என உளற,
"எதைப் பார்த்து?"

"அந்தப் படத்தைப் பார்த்து, அதுல வந்த பேயைப் பார்த்து" என இன்னும் தெளியாத பயத்தில், ஒன்றரை கண்ணில் பதில் கூறியவள் நிலை புரியாது, அதீந்திரன்…

"அதுக்கு எதுக்குச் சமையலறைல வந்து நின்னு கத்தற? படம் பார்க்கும் போதே சத்தம் போட வேண்டியது தானே?" என அடுத்த கேள்வியை வைக்க,

“அங்க நீங்க இருந்ததால, உங்கள கட்டிப் பிடிச்சிட்டே பார்த்துட்டேன். பயம் தெரியல. ஆனா இங்க தனியா வந்ததும், அது இங்கயும் வந்துடும்னு பயந்துட்டேன்." என்றவள் குரலில் காரம் கூடத் தொடங்கியது.

"இங்க எப்படி வரும்?" இது அவன் ஆர்வம் கோளாறில்…

"இங்க வராது அப்படின்னு எனக்கும் தெரியும்? படம் பார்த்ததுல அப்படியே ஒன்றி, சில தேவையில்லாத கற்பனையால வந்த பயம்.." என்று பற்களைக் கடித்தபடி, பிடித்து வைத்த பொறுமையுடன் கூறிய ஆரா,

‘இவனுக்கு அந்தப் பேயே தேவலை. அதையும் கேள்வி கேட்டு பயங்காட்டி விரட்டி விட்டுருவான்.' எனும் முடிவுக்கு வந்திருந்தாள்.

அதீந்திரனோ… ‘பயந்தா ஒருத்தரக் கட்டிப் பிடிச்சிக்குவா!' என ஆராத்தியாவைப் பற்றி, புதிதாய் ஒரு பதிவை தன் மூளைக்குள் ஏற்றி இருந்தான்.

அதீந்திரன், அவனுக்கு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத, நீண்ட கடற்கரையில் நெடுநேரம் இலக்கின்றி நடப்பது பிடிக்கும். மலை ஏற்றங்கள், மலைப் பயணங்கள் அவன் விருப்பம். பல நேரங்களில் உள் நுழைபவன் வெளியேறும் வழி மறந்து விடுவான். எனவே முறைப்படி மலையேற்ற பயிற்சி பெற்றிருந்தான். காடுகளில் சிக்கிக் கொண்டால் வெளியேறும் முறை, அது வரை உயிர் வாழ்வது, தங்களைக் காத்துக் கொள்வது என அனைத்தையும் பயிற்று வித்திருந்தார் ரகுநந்தன். அவன் திசை கண்டுபிடித்து, மீண்டு வருவதில் சிறு வயதில் சிரமப்படுவது கண்டு.


வண்ணத் தூரிகையைக் கையெடுத்தவன், சற்றே கூடுதல் சிரத்தை எடுத்து வண்ணங்களை மிக கவனமாகக் குழைத்தார் போல், பச்சையும் நீலமும் கலந்து தெளிந்த கடல் ஓரம், வெண் மணல் எல்லை வகுக்க, தொடர்ந்து தென்னை மரங்கள் அணிவகுப்பின் இறுதியில் வரும் அலங்கார ஊர்தியாய், இயற்கை பேரழகியை சுமந்து நிற்கும் மலைகள், வெள்ளியாய் வீழும் வெள்ளை அருவிகள், என இறைவன் பூமியில் சொர்க்கத்தைப் படைக்க எடுத்துக் கொண்ட முயற்சியைப் பறை சாற்றிக் கொண்டிருந்தது.
மொரீஷியஸ் தீவு.

அதீந்திரனும் ஆராத்தியாவும் மொரீஷியஸ் தீவிற்கு விடுமுறைக்கும் தேன்நிலவுக்குமாய் சென்றிருந்தனர். இயற்கையின் அழகைக் கண்ட ஆரா, மதி மயங்கி காணும் யாவையும் கண்ணிலும் மனதிலும் பதிய வைத்தவள், கவனத்தைப் பாதையில் வைக்க மறந்தாள், விழுந்தாள்.

குப்புற விழுந்ததில், முகம் வாயில் மண்ணாக இருக்க, தட்டிக் கொண்டு அமர்ந்தவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தானே தவிர, அவள் விழுந்ததைப் பார்த்து பதைத்து ஓடி வரவில்லை. கவனம் இல்லாமல் நீதானே விழுந்தாய், நீயே எழுந்து வா என அவளாகவே எழுந்து வரக் காத்திருந்தான்.

அவனது அந்த அலட்சியம், அவளுக்கு மனதில் சிறு வலி தர, கூடவே கோபம் வந்தது.
மெல்ல தானே ஆடைகளைத் தட்டிவிட்டு எழுந்து கொண்டவளுக்கு, கால் வலி சுளீரென்று இருக்க, முகத்தைச் சுளித்தாள். அதில் வலி எனப் புரிந்து கொண்டவன், அவள், அவன் அருகில் வரும் வரை கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டு காத்திருந்தான்.

இவன் கையைக் கட்டி கொண்டு நின்றிருந்தைப் பார்த்தவளுக்கு, ‘சை என்ன இவன்? வந்து ஒரு வார்த்தை கேட்க முடியல.

இவன்லாம்…’ அப்படி அவனிடம் என் கையைப் பிடித்துக் கொள் என்று கேட்க சுயம் தடுத்து விட, முயன்று, கெந்தி கெந்தி சற்று நேரம் நடக்கத் துவங்கினாள்.

அதீந்திரன், ‘ஏதோ கூறுவாள் என அவள் முகம் பார்த்தவன், அவள் தானே வலி பொறுத்துக் கொண்டு நடக்கவும்,’ பெரிதாக ஒன்றும் பிரச்சனை இல்லை என முடிவு செய்து கொண்டான். ஆனாலும், என்ன தியா விழுந்துட்டியா? எங்கேயாவது அடிபட்டு இருக்கா? நடக்க முடியுமா? இவையெல்லாம் இவளிடமும் கேட்கலாம் என்று பயிற்றுவிக்கப் படவில்லை. எனவே அவளுக்கு வலிக்கிறது என்பதை உணரத் தெரிந்தவனுக்கு, அதை உரைக்கவும் உணர்த்தவும் தெரியவில்லை.

யாரென்று தெரியாத பெரியவர்கள் சிறுவர்கள் வீட்டில் உள்ளவர்கள் விழுந்து விட்டால், தூக்கி விட்டு உதவி செய்யப் பயின்றவனுக்கு, மனைவியைத் தூக்கி விட யாரேனும் கூறவில்லையே…
ஆனாலும்... ஏதோ மனம் உறுத்த, இவள் முகத்தை நொடிக்கு ஒரு முறை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் வலி கூட, ‘ஆபத்துக்குப் பாவம் இல்லை. ரூமுக்கு போய் இவனப் பார்த்துக்கலாம்’ என நினைத்தவள்.

அதீந்திரன் தோளை பிடித்துக் கொள்ள, அவளை இடையோடு அணைத்துத் தாங்கிக் கொண்டான். இப்போது, பைய பைய நடந்தவள், அறைக்கு வந்ததும் வலி தாளாமல் படுத்து விட்டாள்.

அவர்கள் அன்றே ஊர் திரும்ப வேண்டி இருந்ததால், அனைத்து பொருட்களையும் சேகரித்துப் பயணப் பொதிகளைத் தயார் செய்தவன், அவளை எழுப்ப வந்து போர்வையை விலக்கியவன் கண்களில், அவள் கீழே விழுந்ததில் பிசகி வீங்கி இருந்த பாதம் பட்டது
.
வலி நிவாரணி களிம்பை தேய்த்து விட்டவன், பிசகினை மேலும் பெரிதாகாமல் தடுக்க, சில முதல் உதவிகள் செய்தவன், வெந்நீரை ஒரு துணியில் நனைத்து ஒத்தடம் தந்தான். அதீந்திரன் காலைத் தொட்டதுமே விழித்துக் கொண்டாள், ஆராத்தியா.

‘நம்மைப் பொருட்களை எடுத்து வைக்கச் சொல்லுவான். நேரம் ஆகிவிட்டது என்று விரட்டுவான். தான் கீழே விழுந்தது பற்றிய சிந்தனை அவனுக்கு இல்லை.’ என மனம் முட்டிக் கொண்டு இருக்க, அவன் இத்தனை சிகிச்சைகளும் செய்யவும், இப்போது எப்படி எதிர்வினை ஆற்றுவது எனப் புரியாமல் உட்கார்ந்து இருந்தாள்.

ஏற்கனவே நடந்ததுக்குக் கோபப்படறதா இல்ல, இதுக்குச் சந்தோஷப்படறதா எனப் புரியவில்லை, அவளுக்கு. எனவே முறைப்பும், முறுக்கும், கிறுக்கும், கிறக்கமுமாய், இடையே அல்லாடிக் கொண்டிருந்தாள். ஆனால், அப்போதும் அவன் ஆறுதல் மொழிகளை உரைக்கவில்லை என்பதை ஆரா கவனிக்கவில்லை. அவள் கையில் வலி நிவாரணி மாத்திரையும், நீரையும் தந்தவன்.
"ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு ஆரா... இதைப் போட்டுக்க, ஆரா. ஊருக்கு போய்ட்டு ஹாஸ்பிடல்ல காட்டலாம்." என வெளியே அலைபேசியுடன் செல்ல,

இப்போது நீர்த்துப் போன கோபம் காணாமல் போக, மெல்ல குளியல் அறைக்குச் சென்று திரும்பியவள், ஆடை மாற்றிக்கொண்டாள். அதீந்திரனிடம் வர முயல, கால் வலி கூடி விட அமர்ந்து விட்டாள். ‘இவன் உதவி இல்லாமல், இந்தக் கால வைச்சிக்கிட்டு எப்படி ப்ளைட்டில் ஏற...’ என யோசித்துக் கொண்டிருக்கும் போதே கைகளில் ஏந்தியிருந்தான்.
தாமரையைத் தண்ணீர் தாங்குவது போல்!

விமான நிலையத்தில் இருந்து நேராக மருத்துவமனைக்கு வந்தார்கள். இவர்கள் பார்க்க நினைத்த மருத்துவர் ஆபரேஷன் தியேட்டரில் இருந்ததால், மருத்துவமனையில் காத்திருக்க வேண்டியதாயிற்று. காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்ததோ, இல்லை வலி நிவாரணி வேலையை முடித்துக் கொண்டதோ, எதுவோ அவளுக்கு வலி கூட, துடித்துக் கொண்டு ஆறுதலாக பற்றிக் கொள்ளும் இவன் கரம் தேட, அவனோ அலைபேசியில் முழ்கிப் போனான்.
பின் அவள் முறை வரும் வரை, நாற்காலியை பற்றிக் கொண்டாள்.

மருத்துவர் பிசகு கொஞ்சம் பெரிதாக இருப்பதால் கட்டு போட்டிருப்பதாகவும், ஒரு வாரம் ஒய்வு எடுத்துக் கொள்ளும் படி அறிவுருத்தினார். இப்போது செவிலியர் துணையுடன் மெல்ல வாகனம் வரை வந்தவள், அமைதியாக இவனைத் தவிர்த்துக் கோபம் காட்டினாள்.

அவனோ…, இதைப் புரிந்து கொள்ளாமல் மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, செவிலியருக்கு நன்றி கூறியதில், இவளுக்குத் தான் என்னடா இது எனக் கோபம் வந்தது.

வாகனத்தில் வரும் போது கூட, இவள் அவனை நிராகரித்து முகம் திருப்பிக் கொள்ள, அவனோ அதை அறியாமல் ஏதோ கதையைச் சொல்லிக் கொண்டு இருந்தான். இவள் புறகணிப்பு, அவனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை என்பது அவள் மனதை வதைக்க, வீடு வந்து சேர்ந்தனர்.

ஆராத்தியா ஆறுதல் வார்த்தைகளை எதிர்நோக்க, அதைக் கூற வேண்டும் என அறியாதவன், சேவைகளை மட்டும் செய்யக் குழம்பி போனாள். சில நேரம் கோபம் கொள்ள, அவன் அமைதியாகவே பதிலளிக்க... மேலும் திணறிப் போனாள்.
மறுநாள், உணவு புகட்டிக் கொண்டிருந்த அவன் முகம், எந்தச் சலனமும் இன்றி இருந்தது. எப்போதும் போல் அதைக் கண்டவள், இதற்குமேலும் இந்த உணர்வு கண்ணாம்மூச்சி உதவாது எனும் முடிவுக்கு வந்தவள், நேரிடையாக அவன் முகம் பார்த்தவள்,

"அதீப், நான் கீழ விழுந்த போது, நீங்க ஏன் தூக்கி விடல? அங்க ஹாஸ்பிட்டல்ல, நான் வலில உட்கார்ந்துட்டு இருக்கேன், போன் பார்த்துட்டு இருந்தீங்க. ஒத்த வார்த்தை கூட ஆறுதலா, இதுவரைக்கும் பேசல. ஏன் இப்படி இருக்கீங்க?" என்ற ஆராவின் வார்த்தைகளில்,

அவள் கண்களைப் பார்த்தவன், அவள் வாயை துடைத்து பிறகு எழுந்து உணவு கிண்ணத்தை அருகில் இருக்கும் மேசை மீது வைத்துவிட்டு, அவள் சாப்பிட வேண்டிய மாத்திரையையும் தண்ணீரையும் தந்தவன், அவள் அருகில் அமர்ந்து கொண்டவன், அவள் காலை தன் மடிக்கு மாற்றி, அதை இலேசாகப் பிடித்து விட்டபடி, இயல்பாகப் பதில் கூற ஆரம்பித்தான்.

"முதல்ல, நீ கீழ விழவும், பெரிய அடி எதுவும் இல்லை. அதான் நீயே எழுந்துக்குவன்னு விட்டுட்டேன். ஆனா, அறைக்கு வந்து தூங்கிட்டு இருந்தப்ப தான் பார்த்தேன். பிசகி இருக்கறது தெரிஞ்சிது. உடனே முதல் உதவி பண்ணிட்டு, வலி நிவாரணி தந்து விமானத்துக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். ஆனா, உன் கால் நல்லா வீங்கி இருக்குறதப் பார்த்து உன்னால நடக்க முடியாதுன்னு புரிஞ்சிது. அதான், உன்னைத் தூக்கிட்டு வந்தேன்."

"அப்புறம் ஹாஸ்பிட்டல்ல உனக்குத் தான அடிபட்டு இருக்கு. நான் சும்மா உட்கார்ந்து இருந்தேன். அதான், விளையாடிட்டு இருந்தேன்.

" அப்புறம், அது என்ன ஆறுதல் வார்த்தை? வலிக்கு மாத்திரை இருக்கு. உன்னை கவனிச்சிக்க நான் இருக்கேன். அப்புறம், எதுக்கு ஆறுதல் வார்த்தைகள்?" என்றவன் மேலும்,

"உனக்கு ஆறுதல் வார்த்தைகள் வேணும்னா சொல்லு சொல்றேன்." என்றிருந்தான், ஆறுதல் தேடாதவன். மேலும் ஏதோ தோன்ற…
"எது உனக்கு வேண்டும் என்றாலும், அதை நேரடியாகக் கூறிவிடு. உன் பேஸ் ரியாக்ஷன், இல்ல பாடிலாங்வேஜ்லயோ சொல்லாதே, எனக்குப் புரிஞ்சிக்கிறது கஷ்டம்."
இவன் என்ன சொல்கிறான் எனத் தெரியாமல், "ஏன்?" என்ற ஆராவிற்கு,

"பிகாஸ் அயம் அ ஆஸ்பெர்ஜர்(Asperjer)" என்று சில அணுகுண்டுகளை மூளையிலும், அணு உலை வெடிப்பை நெஞ்சத்திற்கும் கொடுத்தவன், அலுவலக அறைக்குள் நுழைந்து கதவடைத்து இருந்தான்.

"அப்படின்னா என்னவாயிருக்கும்?" என விழித்துக் குழம்பியவள்,
‘கொஞ்சமாவது பயம் பதட்டம் இருக்கா? நாம ஏதோ சொல்லறோமே? அது அவளுக்குப் புரிஞ்சிருக்கா? என்ன சொல்லுவா? என்ன நினைப்பா? எந்த கவலையும் கிடையாது?’ என ஆதங்கப்பட்டவள், பின் குழம்பினாள்.

மாத்திரையின் வீரியமோ? வெகு நேரம் விழித்திருந்ததாலோ? என்னவோ? பின் சாமத்தில் கண்ணயர்ந்தாள்.

எளிதில்
நெருங்க இயலா
கானகம் நான்!
தள்ளி நின்றால்
நான் பேரமைதி!
பெரும் பீதி!
எனை விரும்பி
என்னுள் தொலைபவருக்கே
நான் பேசும் மொழி
புரியும், வழி தெரியும்.

 

அத்தியாயம் - 15


ஆரா அலர்மேல் மங்கையிடம் வந்து ஐந்து நாட்கள் ஆகி இருந்தது. அன்று நடந்த உரையாடலுக்குப் பின், அதீந்திரனும் ஆராவும் இன்னும் பேசிக் கொள்ளவில்லை.

அதீந்திரன் தன் மீதான வருத்தத்தில் இருந்தான். என்றாலும் கூட, தனது அன்றாட வேலைகளைச் செய்து கொண்டிருந்தான்.
ஆராவோ குழப்பத்தில் இருந்தாள்.

அவனைப் பற்றிக் கூறிய செய்தியினைக் குறித்தும், அதீந்திரன் மீதான புரிதலைப் பற்றியும், அவளுக்குத் தெளிவும், யோசிக்க அவகாசமும் வேண்டியிருந்தது. எனவே இங்கே வந்தவள். தன்னுடன் வைத்து மறுகுவதை விட, கேட்பது உசிதம் என, இன்று தான் அலர்மேல் மங்கையிடம் கேட்டாள். அதன் பிறகே அவனைப் பற்றிக் கூறினார்.

ஆஸ்பெர்ஜர்ஸ் என்பது ASD எனப்படும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் எனும் வகையைச் சார்ந்த குறைபாடு. ஹை பங்சனிங் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ் ஆர்டர் எனவும் கூறலாம். சமூகக் குறிப்புகளைப் புரிந்து கொள்வது கடினம். முகப் பாவனைகள், உடல் மொழிகளை புரிந்து கொள்ளச் சிரமப்படுவார்கள்.

நகைச்சுவை வரும், எனினும் பழமொழிகள், நக்கல், கேலி, நையாண்டிகள் எளிதில் புரிவதில்லை. தன்னை மற்றவர்கள் இடத்தில் வைத்து நினைத்துப் பார்ப்பது கடினம். கண்ணோடு கண் நோக்குவதைத் தவிர்த்து விடுவர். மீண்டும் மீண்டும் செய்யும் வேலைகள், தினசரி நடைமுறை அவர்களுக்கு என வகுத்து இருப்பதை மாற்ற விரும்ப மாட்டார்கள்.

மற்றவர்களின் உணர்வை புரிந்து கொள்ள இயலும், பிரதிபலிக்கத் தெரியாது. ஏதோ ஒரு துறையில் ஆழமான அறிவு கொண்டு இருப்பார்கள். இதில் நுண்ணறிவு குறைந்தவர்கள் வேறுவிதம்.
இந்தக் குறைபாடு கொண்ட பிரபலங்கள் ஜன்ஸ்டீன், இசை மேதை மொசார்டு, டேன் ஆக்ராய்டு, டெம்பிள் கிராண்ட் இன், நியூட்டன், டெஸ்லா, பாபி பிஷ்ஷர் செஸ் சாம்பியன்.

"அதென்ன சமூகக் குறிப்பு அத்தை?"

"அதாவது, சமூகத்தில் இந்த இடத்தில், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். என சில விதிமுறைகள் உண்டு. அதைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது…"
சின்ன வயசுல ஒருநாள், வீட்டின் நடுவில் நின்று உடை மாற்றிக் கொண்டு இருந்தான், பதின் சிறுவன் அதீந்திரன். அப்போது நண்பர் ஒருவருடன் உள்ளே வர, அதீந்திரன் அடுத்த அறைக்குச் செல்லாமல், ஆடையை மாற்றிக் கொண்டு இருந்தான்.

"அதீப், அடுத்த ரூமுக்குப் போ! எனவும், சரி என்றவன், ஆடை மாற்றிக்கொண்டு அடுத்த அறைக்குப் போனான்."

நண்பர் சென்ற பிறகு அதீந்திரனை அழைத்தவர், "அதீப் இனி இது போல், நடு வீட்டில் நின்று உடை மாற்றக் கூடாது. உன் அறைக்குப் போய், உடை மாற்றிக் கொள். இப்படி எல்லார் முன்னாடியும் வந்து கொண்டிருந்தா சிரிப்பாங்க. கேலி பண்ணுவாங்க!"

"தேங்யு ப்பா"
"எதுக்குக் கண்ணா?"

"பொறுமையா உட்கார வைச்சி, சொன்னதுக்கு டாட்"

'தேங்க்யு சொல்லறானே,
பரவாயில்லை திருந்திவிட்டான்.'
என எண்ணிக் கொண்டார்.

மறுநாள் ஹாலில் ஆடைகள் அனைத்தும் சிதறிக் கிடக்க, வந்த கோவத்தில் விறு விறுவென அவன் அறைக்குச் சென்றவர்,

“டேய்! நான் நேற்றுத் தான சொன்னேன், ரூம்க்குள்ள ட்ரெஸ் மாற்றிக்கோன்னு நீ என்ன பண்ணிட்டு இருக்க? ஏன்டா எப்படி நிக்கற? யாராவது வந்தா சிரிக்கப் போறாங்க… ட்ரஸ்ஸ போடு" எனக் கத்தியிருந்தார்,
வெட்கம் அறியாமல் நின்றவனைப் பார்த்து.
"தேங்க்யுப்பா!" என்றிருந்தான் அதீப். அவன் அவரது கோபத்தில் உயர்ந்த குரலையோ, முக உடல் மொழிகளை அறியவில்லை. எனவே அவரது அறிவுரைக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தான், நிர்வாணமாக.
"அவனுக்கு வெட்கமே கிடையாது." என்ற அலர்மேல் மங்கையின் வார்த்தையில், அவளுடனான அவனின் வெட்கமறியா தருணங்கள் நினைவுக்கு வர, வெட்கத்தில் சிவந்து போனாள், ஆராத்தியா.

"ஆனா, யாரும் தொட்டுப் பேசினா மட்டும் பிடிக்க மாட்டிக்குதே, அது எப்படி?"

ஆரா கேட்க, அலர்மேல்மங்கை ஆதரவாகக் கரத்தை பிடித்து, லேசாக அழுத்தியபடி,

"வெட்கம், அது வேற உணர்வு ஆரா. யாரும் நம்மளப் பார்த்தால் அல்லது பார்க்கக் கூடாது என மறைத்துக் கொள்வது. ஆனா அதீப்புக்கு சென்சரி இஷ்யூஸ். அதனால அவன யாரும் தொட்டுப் பேசறது அவனுக்குப் பிடிக்காது." என்ற மங்கை மீண்டும் ஒரு சம்பவத்தைக் கூறினார்.

அன்று அதீப் தனியாக இலக்கின்றிக் கற்களை வீசி விளையாடிக் கொண்டிருந்தான். மறுபுறம் சிலர் இவனது மட்டைப் பந்து வாங்கி, தாங்கள் கிரிக்கெட் விளையாட்டில் மும்மரமாக இருந்தனர்.

விதிகளுக்கு உட்பட்டு விளையாடத் தெரியாததால், அவனை யாரும் சேர்த்துக் கொள்வதும் இல்லை. அவனுக்கு அதில் விருப்பமும் இல்லை.

தெரு ஒரமாய் நின்று அவன் வீசிய கல், அங்கிருந்த வாகனத்தின் கண்ணாடியைப் பதம் பார்த்திருந்தது. அங்கு இருந்த சிறுவர்கள் சத்தம் கேட்டு ஓடிவிட்டனர். அதில் ஒன்று இரண்டு "வா அதீப் ஓடிறலாம்." என்று இவன் கரம் பிடித்து இழுக்க, ஏன் ஓடவேண்டும் என்று தெரியாதவன், அவன் மட்டும் நின்று கொண்டு இருந்தான்.

உள்ளே இருந்து சத்தம் கேட்டு வெளியே வந்த உரிமையாளரைக் கண்டு, இவனை உடன் அழைத்த சிறுவனும், இவனை விட்டு விட்டு ஓடியிருந்தான். அப்போது காரைப் பார்த்துவிட்டு,

"யாருடா? உடைச்சது கண்ணாடிய?"
கத்தியவரிடம் சிக்கினால் அடி வெளுத்து விடுவார் என்ற பயத்தில் குழந்தைகள் அனைவரும் பயந்து சிட்டுகளாகப் பறந்து இருந்தனர்.

அதீந்திரனோ பயமின்றி அவரிடம் சென்றவன், "ஸாரி. நான் தான் உடைச்சிட்டேன். இனிமே இது மாதிரி செய்ய மாட்டேன்." என்றான். இவன் கூறிய விதம், அவரை இன்னும் எரிச்சல் படுத்தியது. ஆத்திரத்தில் அவனை இரண்டு வைத்தார்.

“ஏன் அன்கில் என்னை அடிச்சிங்க? நான் தான் ஸாரி கேட்டேனே…!” எனவும்

"செய்யறதையும் செஞ்சிட்டு, திமிரா வேற ஸாரி கேட்கற. இது விலை தெரியுமா?"

"தெரியாது எவ்வளவு?"
மீண்டும் ஆத்திரம் பொங்க கைய ஓங்க, அதற்குள் அங்கு வந்த புருஷோத்தமன்,

"ஸாரி அன்கில். அவனுக்குத் தெரியாது. ஏதோ தெரியாம நடந்திருச்சி. அவன் தான் ஸாரி கேட்டானே!"

"இருபதாயிரம் ரூபா கண்ணாடிய உடைச்சிட்டு, ஸாரின்னா ஆச்சா! துட்ட எவன் தருவான்”? எனக் குய்யோ முறையோன்னு சத்தம் போட, அப்புறம் அவங்க அப்பா வந்து பேசி செட்டில் பண்ணாங்க.
தான் செய்தது தவறு எனவே மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரியும். ஆனா அதோட அளவு தெரியாது. இவன் சாதாரணமா வீட்டில் ஒரு பொருள உடைச்சா ஸாரி சொன்னா சரின்னு விட்டுறுவோமே, அத மாதிரி அவர்கிட்ட பேசி வைச்சிட்டான். பயம் தெரியாது. பணிவு தெரியாது. மேலும் அங்க இருந்து ஏன் ஒடிவரனும்னு அவனுக்குத் தெரியலை.

ஆனா, அதீந்திரனோட ஐக்யு 145 அவனுக்குக் கணினி, கணக்கு ஆர்வம் அதிகம். அதனால படிப்பு அவனுக்குப் பிரச்சனையாகல. அதான், அவனோட நிறையப் பிரச்சனைகளை மறைக்கவும் செஞ்சது. நிறைய ட்ரைனிங். யார் கிட்ட எப்படி நடந்துக்கனும், எப்படிப் பேசனும்னு. ஆனா அது ஓரளவுதான், அவங்க இயல்பு முழுசா மாறாது.

வயசு ஆன அப்புறம், எல்லாருடைய பேஸ் ரியாக்ஷனும் புரியாட்டியும், வீட்டில ஃப்ரண்ட்ஸோட உடல் மொழிகளையும், முக உணர்வுகளையும், உளவியல் மற்றும் வரைகலை மூலம் படிச்சி தெரிஞ்சிக் கிட்டான். அப்படியும், அதுக்குத் தான் என்ன விதமா பதில் தரனும்னு தடுமாறுவான்.

'நான் உன்னைப் படித்து வைத்திருக்கிறேன்' என்றதன் பொருளையும். அவளது முக உடல் மொழிகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களை அவன் வரைந்ததன் காரணமும் அறிந்தாள்.

அவளுக்கு காபி கொடுத்த அலர்மேல்மங்கையிடம் ஆரா,
"அவங்களுக்கு... அவங்களுக்கு... என்னைய புரிஞ்சுக்க முடியும்ல…?" என்றவளுக்கு,

‘எந்திரம் போல் நடந்து கொள்ளக் கூடுமோ என்று பயம். ஏனெனில் அவன் பிரிவு அவளைப் பாதிக்க, அவள் பிரிவு அவனைச் சோதிக்காதோ... எனும் ஐயம் அவளுக்கு’

ஆனால்…. ‘அவனுக்குத் தன்னைப் புரியும். தன் சார்ந்தவர்களையும் புரியும். எனவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாதவன், கைவிடப்பட்ட குழந்தையென, இவள் எங்கே எந்த நிலையில் விட்டாளோ...! அங்கேயே நின்று, இவளைத் தேடிக்கொண்டு இருப்பான் என்று தெரியாமல் இருந்தாள்.’

அதீந்திரனோ… ‘உணவு மறக்காது, உடை மறக்காது, அனைத்தும் செய்து கொண்டு இருந்தான் வழக்கம் போல். ஆனாலும் எதுவும் பிடிக்காது போக, மனம் அவளைத் தேட, தன் போக்கில் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அதை முழுமையாக முடிக்காமல் நேராக வீட்டிற்குத் திரும்பி விடுகிறான்.

அதை அவள் இன்மையால் என அறியாமலே…! ஆனால், தன் இந்த நிலைக்குப் பிரிவாற்றாமை எனும் காதல் பெயர் சொல்லத்
தெரியாதவன். உறக்கம் மறந்து கண்கள் சிவக்க, காந்தலில் மேனி கொதிக்க, காய்சசலில் "தியா, தியா" என அரற்றியபடி போர்வைக்குள் முனங்கிக் கொண்டிருந்தான். தன் காதலை உணராமலே, தன் மனைவிக்காக….!”

அதைத்தான் மங்கை கூறிக் கொண்டிருந்தாள். "அதீப்பால மற்றவர்களைப் புரிந்து கொள்ள முடியும். தன் மனதையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், அதை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம், செயல்களின் மூலமே உணர்த்துவான்."

"அவங்களால என்னை விரும்ப முடியுமா?" என்ற ஆராவிற்கு,
'நீ அவன் காதலை உணரவில்லையா?’ எனும் தன் மனதின் கேள்விக்குப் பதில் அறிந்து தான் இருந்தாள்.

‘அவளால் உணர முடிந்ததே, அதீந்திரன் அவன் காதலை!'
அவள் அருகில் வந்து கூந்தலை கோதியவர், "ஆராத்தியா…. அவனால் காதலிக்க முடியும். காதலை புரிந்து கொள்ளவும் முடியும். காதலை காட்டத் தெரியாது."

(He can love. but he don't Know, how to show it)என்ற அலர்மேல் மங்கை, "மகிழ்ச்சி, கோபம், அழுகை, சிரிப்பு, வெறுப்பு, காதல் இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. அதீப்பும் மனுஷன் தான்." எனச் சற்று அழுத்தமாகவே உரைத்தவர்.

"அவனுக்கு பொய் சொல்ல முடியாது. பிடிக்காது. தன் உணர்களுக்கு நேர்மையா இருப்பான்." என்றவரிடம் எதுவும் கூறாமல், தனது கைப்பையை எடுத்தவள்.

"அத்தை நான் கிளம்புகிறேன். அவங்ககிட்ட சொல்லாம வந்துட்டேன்." என்ற ஆராத்தியா கிளம்பிய ஆர்வத்திலும், முகத் தெளிவிலும் கண்டு கொண்டாள் அலர்மேல்மங்கை. இனி இவர்களின் வாழ்வு சீரடைந்து விடும் என்பதை,

வீட்டிற்கு வந்தவள் கண்களில் விழுந்தது, எடுத்து வைக்கப்படாத அவளது பொருட்கள். போகும் போது காபி அருந்ததியவள், அந்தக் கோப்பையை எங்கே எப்படி வைத்திருந்தாளோ அப்படியே இருந்தது. பாதி வாசித்து விட்டு கவிழ்த்து வைத்த புத்தகம், அதன் அருகில் காத்திருந்தது.

அவனும் கூட அப்படியே தான் காத்திருக்கிறான். தியா தியா என அரற்றியபடி…

கோப்பையை எடுத்துக் கழுவியவள், அதனை துடைத்து அதன் இடத்தில் வைத்தாள் சிறு புன்னகையுடன். அவர்கள் அறைக் கதவைத் திறந்தாள். உள்ளே முணங்கல் ஒலியுடன், மூடிய போர்வைக்குள் அவன் படுத்திருந்தான்.

அவன் அலுவலகத்தில் இருப்பான் என அவள் எண்ணிக்கொண்டு இருக்க, இவன் இங்கே அனலாய் காய்ந்து கொண்டிருந்தான்.

"அதீப் அதீப் என்ன செய்யுது ?" என நெற்றியில் கரம் வைத்துப் பார்த்தவள், கழுத்தில் கரம் பதிக்க, அவளது ஆதரவுக்கரங்கள் தந்த அன்பில் கண் திறந்தவன்.

"ஒன்னும் இல்ல தியா. காய்ச்சல் மாதிரி இருந்தது."

"சொல்லி இருக்கலாம்ல. வந்துருப்பேன்ல"

"நீ சொல்ல சொல்லலியே, தியா?" என்றவனை அணைத்துக் கொண்டாள்.

அவள் அருகாமை தனித்தது அவன் காயலை. அதில் ஏதோ இதத்தை மனம் முழுவதும் உணர்ந்தவன், உடல் முழுவதும் அதன் சுகம் பரவ அவளை அணைத்துக் கொண்டான். அவன் வார்த்தைகள் உரைக்க வில்லை, செயல் உரைத்தது

ஆராத்தியாவிற்கு அவன் காதலை.
உணர்ந்த காதல் உரைக்கும் நாள் வரும் எனும் நம்பிக்கை அவளுள்!
ஆராத்தியா மனம் தெளிந்திருந்தது. முதல் காரணம் அதீந்திரனை பற்றிய புரிதல் அவளுக்கு வந்திருந்தது. இரண்டாவது அவள் காதலின் மேலான நம்பிக்கை.

அவன் உரைக்காவிட்டால் என்ன? அவள் உணர்ந்த அவன் அன்பு பொய்யில்லையே? அவள் அறிந்த ஆண்கள் அவள் தந்தை, தாத்தா, சித்தப்பா, மாமா, என யாரும் வார்த்தைகளால் அன்பைக் காட்டியதில்லை. கிராமத்து மனிதர்கள் அவர்கள் அன்பை செயல்களில் உணர்த்துவதைப் பார்த்து வளர்ந்தவளுக்கு, அநீந்திரன் அன்பை புரிந்து கொள்வது, இனி எளிது.

அவன் கூறாவிட்டால் என்ன? நான் கூறிக் கொள்கிறேன்? அவனுக்கு வெளிக்காட்டத் தெரியாவிட்டால் என்ன? நான் வெளிக் கொணர்கிறேன்.

"நீ காதல் சொல்லப் போகிறாயா? அல்லது அதீந்திரனை சொல்லச் சொல்லப் போகிறாயா?" ஆராத்தியா எனும் மனதின் கேள்விக்கு

'கேட்டு வாங்க, காதல் ஒன்றும் பொருள் அல்ல! அது உணர்வு, உணரப்பட்டு வரவேண்டும். அவன் தானே கூறும் வரை,

காத்திருப்பேன். எவ்வளவு நாள் ஆனாலும் சரி! என் ஆயுள் முழுவதும் கழிந்தாலும் கூட, இந்த யாசகத்தை நான் கேட்க மாட்டேன்.' என உறுதி கொண்டவள் அறிந்து இருந்தாள்.

அதீந்திரன், அவன் ஆராத்தியா கேட்டால், நொடிக்கு ஒரு முறை கூட காதல் உரைப்பான் என்பதை அவள் அறிவாள்.

'காலை வணக்கம், எப்படி இருக்கீங்க? போன்ற சம்பிரதாயக் காதல் வார்த்தைகள் எனக்கு வேண்டாம்...'

'உள்ளம் உருகி, வாழ்வில் ஒரு முறை தன் வாயால் அவள் மீதான காதல், அவன் உரைத்துக் கேட்கும் வரம் பெற காத்திருப்பு எனும் தவம் மேற்கொள்ளச் சித்தமானாள்'
பெருங்கானகமான அவனுள் வாழும் வழிமுறைகளை அவனே பயிற்றுவித்தான். கானகமது மலையருவியின் ஆர்ப்பரிப்பு. நீரோடைகளின் சலசலப்பு. பறவைகளின் பரிபாஷை எனப் பல விதங்களில் பேசுவது போல், அதீந்திரன் செயல் உரைக்கும் அவன் காதலை...!

வீசி விளையாடும் குளிர் தென்றல் மரங்களிடமும், தலை சாய்க்கும் கொடிகளிடமும், அன்றலர்ந்த மலர்களின் தேன் சிதற காதல் சொல்வது போல்…

அதீந்திரன், ‘தன் அன்பை தன்னை ஆராத்திப்பவளை ஆராதித்து உரைப்பதை கேட்க, பெரு விருப்பம் கொண்டாள்.’ அதீந்திரன் அவன் ஆராத்தியா.
ஆராத்தியாவின் விருப்பம் நிறைவேறும் என நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

காத்திருப்புகள்
சுகம் என்பவனை
கழுவிலேற்றும்
முடிவெனக்கு
எனினும்
என் காலம்
முழுவதும்
காத்திருக்க
விழைகிறேன்
வீற்றிருக்கிறேன்
களவறியா காதலனே
உனக்காக…
காத்திருக்கிறேன் ...
களவறியா காதலன் நான் ...

…………………………….




பின்னுரை
திறனறிந்து தினம் தேடும்
மானுட வாழ்வில்…
திறனறியா கனம் கொண்ட
மானுட தாழ்வில்...
உயிர்த்தெழுந்த தீரனவன்
காலத்தை வென்ற
கலியுகத்துக் கண்ணனே!
களவறியா காதல் – இது
மனமறியா கூதல்!
உளமறியா காதல் – இது
கணமறியா கூதல்!






எனது படைப்புகளின் தொகுப்பு

1. களவறியா காதலன் நான் - ஆஸ்பெர்ஜர்ஸ் பற்றிய கதை

2. வான்காதல் மலர் நேசம் - விமானப் படை வீராங்கனை மலர், விவசாயி மற்றும் ஹோட்டல் குண்டுவெடிப்பு சம்பவம் என நகரும்

3. நங்கை என் நம்பி - சீரியல் கில்லர் கலந்த சஸ்பென்ஸ் கதை

4. மயங்கொலிபிழைகள் - ஆண் விபச்சாரி மற்றும் தெற்கு சூடான் பிரச்சினை எனும் வகையில் காதல் களம் கொண்டு நகரும்

5. மாமழை போற்றுதும் மாமலை போற்றுதும் – மலேசிய இந்திய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பற்றிய கதை 1930 மற்றும் தற்போதைய என காலங்களில் பயணிக்கும்

6. வேதிக்கூடுகை விதியெனில் நேசப் பொருண்மை அழியுமோ - லிவிங் டு கெதர் அடிப்படையிலான கதை
7. தடாகக்கரை - பல்லவ அரசன் ஒருவரை பற்றிய வரலாற்று நாவல் (ongoing)
8. அணங்குடை முந்நீர் - சீன கடற்கொள்ளையர்கள் பற்றிய கதை(ongoing)
9. பதங்களின் தோரணம் - கவிதை மலர்


ஆசிரியரின் பிற நாவல்கள்
களவறியா காதலன் நான்
வான்காதல் மலர் நேசம்
நங்கைஎன் நம்பி
மயங்கொல்லிபிழைகள்
மாமழை போற்றுதும் மாமலை போற்றுதும்
வேதிக்கூடுகை விதியெனில் நேசப் பொருண்மை அழியுமோ
தடாகக்கரை
அணங்குடை முந்நீர்
பதங்களின் தோரணம் [கவிதை மலர்]

மீண்டும் சந்திப்போம்
 
Status
Not open for further replies.
Top