"எப்படி.. ?" என்றவளின் முகம் பிரகாசமாக, " என் செல்லக் குட்டி டி நீ" என்று வருவின் கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தமிட்டவள். பிறகு கலகலத்து பேசியபடி வேலையை தொடர்ந்தாள்.
குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் போதே, குத்து விளக்கு ஏற்ற முடிவெடுத்தனர்.
"ஏன் விஷ்ணு?. பெரிய ஆளுங்களை எல்லாம் இன்வைட் பண்ணியிறிக்கீங்கன்னு கோபால் சொன்னான். அவங்க யாரும் வர வேணாமா?" என்றார் ராஜூ
"அவங்க விழாவுக்கு வருவாங்க மாமா. அவங்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வோம். ஆனால் நம்ம குடும்பத்துக்கு ஆட்கள் வைச்சு மட்டும் தான் மாமா திறப்பு விழா. அவங்களை எல்லாம் கூப்பிட்டால்! நான் பெரியவனா? நீ பெரியவனானு ஈகோ பார்ப்பாங்க. விவசாயத்தையும் விவசாயிகளையும் நம்பி தொழில் பண்ண போறோம். யாரிடமும் சின்னதாக கூட மனக்குறை வைச்சிக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.
என்னதான் சிலர் அரசியலில் பெரிய ஆளாக இருந்தாலும்! அவங்க அடிப்படையில் விவசாயிகள் தான். அதனால் எல்லாரையும் ஒரே மாதிரியே பார்த்திடலாம்னு இந்த முடிவு. விசயம் கேள்வி பட்டாலும் வேறு யாரையும், தன்னை விட முக்கியமா கருதலை என்கிறதே அவங்கஅவங்களுக்கு போதுமானதா இருக்கும் மாமா " என்று நீண்ட விளக்கத்தை கொடுத்தான் விஷ்ணு.
"தொழில் நெளிவு சுளிவெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்க! நிச்சயம் நீ மிகப் பெரிய ஆளா வருவ. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா " என்றார் நெகிழ்ந்து
"என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா " என்று டக்கென்று ராஜூவின் காலில் விழுந்து விட்டான். அவன் எதையும் சிந்திக்கவில்லை. அவரது உளமார்ந்த ஆசிர்வாதத்தில், " காலில் விழுந்து வணங்கு ' என்று உள்ளுணர்வு உணர்த்த காலில் விழுந்து விட்டான்.
"நல்லாயிருப்பா.. நல்லாயிருப்பா" என்றவர். அவன் தலையில் மற்றொரு முறை ஆசிர்வதித்து கன்னத்தில் தட்டி அனுப்பி வைத்தார்.
மூன்று குடும்பங்களும் , வேலைக்கு வந்த ஆட்கள் மட்டுமே இருக்க, குத்து விளக்கு ஏற்ற வருணாவை அழைத்தான் விஷ்ணு.
"வருணா வா டா " என்றான் விஷ்ணு கனிவாக
"நீயும் வா அண்ண " என்றவள். " லாவி நீயும் வா " என்று இருவரையும் அருகில் நிற்க வைத்துக் கொண்டு, குத்து விளக்கை ஏற்றிம் போது, லாவியின் கையையும் சேர்த்து பிடித்துக் கொண்டாள். பெரியவர்கள் கை தட்டி, தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
லாவண்யா உண்மையிலேயே நெகிழ்ந்திருந்தாள். ' கடவுளே, என்னுடைய விஷ்ணுவுக்கு தொழிலும் வாழ்க்கையும் என்னென்னைக்கும் ஏறுமுகமாகத்தான் இருக்கனும். நீ தான் கூடவே இருந்து எங்களை வாழ்க்கையில் கணவன் மனைவியாக சேர்த்து வைக்கனும். எங்க மூன்று குடும்பமும் சீக்கிரமே உறவால் ஒரே குடும்பமாக மாறனும்" என்று வேண்டுதலை வைத்தவள்.
வருணா நகர்ந்ததும். தள்ளி நின்றிருந்த விஷ்ணுவிடம், " இது உங்களுக்கான கிப்ட் " என்று சிறிய கவர் செய்த பெட்டி ஒன்றை அனைவர் முன்னிலையிலேயும் கொடுத்தாள்.
"எனக்கா? எனக்கெதுக்கு?" என்றான் விஷ்ணு திகைத்து
"நீங்க வர்றவங்களுக்கு நினைவு பரிசு கொடுக்கிறதில்லையா?அது போலத்தான் இது " என்றாள்.
விஷ்ணு அப்போதும் தயங்க, " வாங்கு அண்ணா" என்றாள் வரு அதட்டலாக
அவளது அதட்டலை கண்டு, ஈஸ்வரின் புருவம் ஏறி இறங்கியது. விஷ்ணு, அதன் பிறகு வாங்கிக் கொள்ள!
"அதில என்ன இருக்குன்னு பாருண்ண" என்றாள் வரு ஆர்வமாக
இதை கேட்டு, விஷ்ணுவின் இதயம் ஏகத்துக்கும் எகிறியது. 'என்ன தான் அவள் காதலை மறுத்திருந்தாலும்! இதில் பரிசாக, காதல் சின்னம் எதுவும் இருந்து விடுமோ என்று பயந்தான். ஏனென்றால்! வேணியிடமும் அவன் தந்தை கோபாலிடமும் அவர்களது மில் சம்மந்தமான விசயங்களை கேட்டு தெரிந்து கொள்வதை அவன் அடிக்கடி கேட்டிருக்கானே!. இது! அவன் மீது அவள் வைத்துள்ள நேசத்தை இன்னும் மறக்கவில்லை என்பதற்கான அறிகுறி தானே! அதனால் தான் விஷ்ணு பயந்ததும்.
"பிறகு பார்த்துக்களாம் வருணா" என்று விஷ்ணு நேரத்தை தள்ளிப்போட
"சின்ன பாக்ஸ் தானே ணா. பிரி. நானும் பார்க்கிறேன்" என்றாள் ஆவலாக
வரு, விஷ்ணுவுடனான சிறு பிள்ளைத்தனம் அங்கே பழக்கமான ஒன்று என்பதால்! யாரும் அவளை கண்டிக்கவில்லை. மறுக்க முடியாமல் விஷ்ணு அதை பிரிக்க,
சிறிய பெட்டியினுள், வெள்ளியிலான சிறிய கைகாப்பு இருந்தது.
"ஐ! காப்பு! " என்றாள் வருணா சந்தோஷமாக
"இது சாதாரண வெள்ளி காப்பு மட்டுமில்லை. இதுல முருகளோட வேல் பதிந்திருக்கு! விரதமிருந்து பூஜையில வைச்சு, வேல் பதிச்சு கொடுத்தாங்க. ரொம்பவும் விசேஷமானது. தொழில் செய்றவங்களுக்கு, கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை இருக்காது. வருமானமும் பெருகும்" என்றாள் லாவி
தன் மேல் கொண்டிருந்த அக்கறையில் மனம் கனிய, " ரொம்ப தேங்க்ஸ் " என்றான் மனமாற
"இப்போதே போட்டுக்கோ விஷ்ணு" என்றார் ராஜூ
கைகளில் போட உள்ளே நுழைக்க, சற்று சிரமம்பட, லாவி எந்த தயக்கமுமில்லாமல் அவனது கைகளை சற்றே அழுத்தி போட்டு விட்டவள். "மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றாள் சந்தோஷமாக
சின்ன புன்னகை சிந்தியபடி, ஆமோதிப்பாக தலையசைத்தான். அடுத்தடுத்து பெரியவர்களும் விளக்கேற்றி, விஷ்ணுவுக்கு பரிசளித்தனர்.
ஈஸ்வர், புதிய லேப்டாப் ஒன்றை பரிசளித்தான். ராஜூ ஐ போன் பரிசளித்தார். " எதுக்கு இவ்வளவு காஸ்டிலியா?" என்று விஷ்ணு தயங்க!
"இதெல்லாம் உன் தொழிலுக்கு உபயோகமா இருக்கும் விஷ்ணும். மறுக்காமல் வாங்கிக்கணும்" என்றார் ராதா அன்பான கண்டிப்புடன்.
அடுத்தடுத்து ஆட்கள் வர ஆரம்பித்து விட கோசலை, வருணா மற்றும் லாவண்யாவை வீட்டுக்கு போக சொல்லி விட்டார். இருவரையும், ஈஸ்வர் தான் காரில் அழைத்து சென்றார். வீடு வரும் வரை இருவரும் வழவழத்துக் கொண்டிருந்த போது,
"ஏன் வரு? மேற்கொண்டு என்ன செய்யப் போற படிக்கப் போறியா? இல்லை வெர்க் பண்ண போறியா?" என்றாள் லாவி.
"ரிசல்ட் வரட்டும் லாவி. அதுவரை இங்கே ஆடிட்டர் ஒருத்தரிடம் வேலைக்கு போன்னு அண்ண சேர்த்து விட்டிருக்கு தானே!. அதையே கன்டினியூ பண்ணிப்பேன். நீ என்ன செய்யப் போற?"
"வேர்ல்ட் டூர் போகப் போறேன்" என்றான் லாவி கிண்டலாக
"நிஜமாவா!" என்றாள் வரு உண்மையென நம்பி
இதை கண்ணாடி வழியே கண்ட ஈஸ்வருக்கு, ' எதை சொன்னாலும் நம்பிடுவியா?' என்று அவள் தலையில் கொட்டனும் போல கை பரபரப்பது.
"ஆமாம்"
"அப்போ நானும் வரேன் டி "
"சரி. நீயும் நானும் மட்டும் போகலாம்"
"வீட்டில நம்மை தனியா விடுவாங்களா?"
"மாட்டாங்கள்ள! அப்போ என்ன பண்ணலாம்?"
"வேணி பெரியம்மாவை கூட சேர்த்துக்கலாம்!"
"அவங்க உங்கம்மா வராமல் வர மாட்டாங்க. அதனால, நீ, நான் இரண்டு அத்தைங்க மட்டும் போகலாம்"
"கூடவே பெரியப்பாவை சேர்த்துக்கலாம் லாவி. அவங்க பிளைட்ல எல்லாம் போனதே இல்லை தெரியுமா?" என்றாள் பாவமாக
"அப்போ! உங்க அப்பா போயிருக்காரா? இல்லை தானே. ராமன் மாமாவையும் சேர்த்துக்கலாம்!'
"சரி. அப்போ ராதா அத்தையும் வரட்டும். எங்கம்மா பெரியம்மா எல்லாரும் இருக்கும் போது, நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணுவாங்க"
"எங்கம்மாவை விட்டுட்டு எங்கப்பா இருக்க மாட்டாரே?"
"அப்போ மாமாவும் வரட்டும். மாமா என்ன கேட்டாலும் எனக்கு வாங்கி தருவாங்க!" என்றாள் சந்தோஷமாக
இதையெல்லாம் கேட்டபடி வந்து கொண்டிருந்த ஈஸ்வருக்கு, தன்னை தானே கொட்டிக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது. நிஜமாக போவது போலவே இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சு மேலும் தொடர,
"விஷ்ணு அண்ணாவும் வரட்டும் லாவி"
"வேணாம் வரு. அவங்க பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. வேலை அதிகமா இருக்கும். அதனால என் அண்ணனும் உன் அண்ணணும் வேணாம்!" என்றாள் லாவண்யா முடிவாக
இதை கேட்டு, சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன். திரும்பி இருவரையும் முறைத்தான்.
"நீங்க எல்லாரும் ஊர் சுத்த போவீங்க? . நாங்க மட்டும் இங்கே இருக்கனும்?" என்றான் காண்டாகி
"ஐ! நான் ஜெயிச்சுட்டேன். எடு ஐநூறு" என்ற வரு. லாவியின் பேக்கிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்துக் கொண்டாள்.
ஈஸ்வர் புரியாமல் பார்க்க! " போ அண்ண!" என்று சிணுங்கியவள். விசயத்தை கூற ஆரம்பித்தாள். இது வழக்கமாக நடக்கும் ஒன்று!
யாராவது தனியாக இருக்கும் போது, இருவரும் தங்களுக்குள் உண்மை போலவே பேச ஆரம்பிப்பார். இதில் பல விசயம் சாத்தியமில்லாததாக இருக்கும். ஆனால் அதை பற்றி சிந்திக்காமல், உண்மை என நினைத்து கேட்டுக் கொண்டிருந்த நபர் இவர்களின் பேச்சினுள் நுழைந்து விட்டாள். ஜெயித்தவருக்கு தோற்றவர் பணம் தர வேண்டும்.
பேசும் முன்பே! இருவரும் பந்தயம் கட்டிக் கொள்வர். லாவி, தன் அண்ணன் இதை நம்ப மாட்டார் என நினைத்திருக்க! கடைசியில் நம்பியது போலத்தானே பேசி விட்டான். இதை லாவி சொன்னது போல! அடப்பாவிகளா? இதுவரை இப்படி எத்தனை பேரிடம் வம்பு வளர்த்திருங்க?" என்றான் ஆதங்கமாக
"டூ மாமாஸ், டூ அத்தைஸ், அம்மா, அப்பா, இப்போ நீ அண்ட் அவர் ப்ரண்ட்ஸ்" என்ற லாவியின் பட்டியல் நீண்டு கொண்டே போனது.
"போதும்! போதும்!. ரொம்ப லென்த்தா போயிட்டே இருக்கு!" என்று வடிவேலு பாணியில் சொன்னவன். வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்து அவர்களை வீட்டில் இறக்கி விட்டு கிளம்பி விட்டான். இரண்டுதையும் சேர விட்டால்! நம்மை பைத்தியமாக்கி விட்டுடுங்க" என்று புலம்பியபடி ஆலைக்கு கிளம்பி விட்டான்.
சிரித்தபடி உள்ளே வந்த லாவியின் போன் இசைத்தது. ராதா தான் அழைத்திருந்தார். அழைப்பை இணைத்து,
"என்னம்மா?" என்றாள்.
"உன்னை மட்டும் தனியா போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி விடேன்!" என்றார் பரபரப்பாக
மறுப்பு சொல்லாமல், செல்பி எடுத்து அனுப்பி வைத்து விட்டு, " என்ன விசயம்மா? போட்டோவெல்லாம் கேட்கிற?" என்றாள் வரு கொடுத்த காபியை கொடுத்தபடி
"நல்ல சம்மந்தம் வந்திருக்கு லாவி. வெளிநாட்டுல பெரிய கம்பெனியில் நல்ல போஸ்ட்ல இருக்கிறாராம். போட்டோ பார்த்தேன். நல்ல லட்சணமான பையன். உன்னை கேட்கிறாங்க. எங்க எல்லாருக்கும் விருப்பம்" என்றார் சந்தோஷமாக
"இப்போ என்னம்மா என் கல்யாணத்துக்கு அவசரம்?" என்றாள் லாவி அழுகையை அடக்கி,
"கல்யாணம் பண்ற வயசு உனக்கு வந்திடுச்சு லாவண்யா. மாப்பிள்ளை பார்க்கனும்னு தான் அப்பா சொல்லிட்டு இருந்தாங்க!. நல்ல இடம் வரும் போதே முடிச்சிடலாம்னு அப்பா பேசிட்டு இருக்காங்க. உனக்கு பிறகு ஈஸ்வருக்கும் பார்க்கனுமில்ல. எல்லாம் உன் நல்லதுக்கு தான் செய்றோம்" என்றவர். பிறகு பேசுவதாக அழைப்பை துண்டித்தார்.
மனதில் ஒருவன் நிறைந்திருக்க! மணக்கோலத்தில் இன்னொருவருடனும் அமருவாளா?.காலம் ! வைத்து காத்திருப்பது என்னவோ? பொறுத்திருந்து பார்ப்போம்..