எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

1 நேத்திரனை ஆளும் பௌர்ணமி!

priya pandees

Moderator
அத்தியாயம் 1

"அடி மீது அடி வைத்து, அழகான நடை வைத்து, விளையாட ஓடி வா முருகா! என்னோடு சேர வா முருகா!"

பாடல் கையிலிருந்த அலைபேசியில் அழைப்பு மணியாக திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. அதை எடுத்து யாரென பார்ப்பதும், "ஆத்தி முருகா! ரெண்டு பக்கமும் வலைவீசி தேடுதாங்க போலயே. என்ன ஏன்டா தேடுறீங்க? நம்ம எடுக்கலன்னா கூட அடுத்து அவருக்கு ஃபோன் அடிப்போம்னு அடிக்க மாட்டேங்குறாங்களே! திரும்பத் திரும்ப எனக்கே அடிச்சா ஆச்சா? பதில் தெரிஞ்சா எடுத்து பேச மாட்டேனா நானு. பதில் தெரிஞ்சவங்க ரெண்டு பேரு அதுல ஒருத்தரப் புடிங்களேன்டாப்பா" என உஷ்ணப் பெருமூச்சு விட, மறுபடியும் அழைப்பு, "இப்ப எடுத்து என்ன பதில் சொல்லன்னு தெரியலயே, இன்னைக்கு பொழுத எப்படியாவது எனக்குக் கடத்திக் குடுத்துரு முருகா ப்ளீஸ்" எனப் போனை சட்டைப் பையில் போட்டு விட்டு அந்த உயர்தர தங்கும் விடுதியின் நடைபாதையில் இங்கும் அங்கும் நடப்பதும், நிற்பதும், புலம்புவதும் மீண்டும் அழைப்பு வரவும் எடுத்துப் பார்ப்பதும் வைத்துவிட்டு நடப்பதும் என மணிநேரங்களை விரட்டிக் கொண்டிருந்தான் அஞ்சாநம்பி.

மறுபடியும் அழைப்பு, இந்த முறை தயாரிப்பாளர் பெயரைத் தாங்கியே வந்தது, இவ்வளவு நேரமும் அவன் மற்ற அழைப்புகளுடன் படப்பிடிப்பு குழுவினர் அழைப்பையும் ஏற்காமல் கடத்தியதால் தான் இந்த நேரடி அழைப்பு என புரிந்தது. நிச்சயமாக இதைத் தவிர்க்க முடியாது. இதை எடுத்து பதில் சொல்லவில்லை எனில் அவரிடம் வாங்கும் வசையை விட அறைக்குள் இருப்பவனிடம் வாங்கும் வசையை காதால் கேட்க முடியாது. அதற்காகவே அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

"விலாங்கு மீன்!" படத்தின் தயாரிப்பாளர் ஜெயராமன் அவர்.

"என்ன நம்பி? ட்ரைக்டர எங்க? அங்க என்ன சிட்யுவேஷன்?" என நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தார். அவருக்கும் புரிந்தது அங்கிருப்பவன் நிலைமை, அதனால் பொறுமையாகவே கேட்டார்.

"சார் ரூம்ல தான் இருக்காங்க சார்"

"சரி இந்தியாக்கு டிக்கெட் நீதான போடுவ? போட்டுட்டியா? எத்தனை நாள் கேப் எடுக்கப் போறதா ப்ளான்? தீபாவளிக்கு படத்த ரிலீஸ் பண்ணணும் தெரியும்ல?"

"டிக்கெட்லாம் போடல சார். ஷுட்டிங் ட்ராப் பத்தியும் சார் சொல்லவே இல்லையே?" என்றான் அஞ்சாநம்பி.

"ம்ச் இது அவர் பெர்சனல் பிரச்சினை தான். அதுக்காகனாலும் எப்படியும் அவர் இங்க வரணும்ல நம்பி?"

"அது அவரு தானே சார் டிசைட் பண்ணணும்? இந்தியா வர்றத பத்தி இந்த செகென்ட் வர சார் எந்த டிசிஷெனும் எடுக்கல. எனக்கும் சொல்லல"

"சொல்லிருந்தாலும் நீ மூச்சு‌ விட்ருவ பாரு! நம்பி எதுனாலும் ப்ளான் இதான்னு எனக்கு சொல்லிடுங்க நா ரெடி ஆகிக்குவேன். திடீர்னு அங்க எல்லாத்தையும் போட்டுட்டு நீங்க பாட்டுக்கு கிளம்பிட்டா எனக்கு டே எக்ஸ்டென்ட் ஆகும். லாஸ் அதிகம்"

"சார் அப்படி செய்வாங்களா?"

"செய்யமாட்டார் தான். ஆனாலும் ப்ளான் இருந்தா சொல்லிடு"

"ப்ளான்லாம் இல்ல சார்"

"அப்றம் ஏன்டா இன்னும் ஸ்பாட்டுக்குப் போகல? அங்க இருக்க நீ ஃபோனும் எடுக்க மாட்டேங்குறன்னு எனக்கு ஃபோன போட்டு பேக்கப் பண்ணவா என்ன செய்யன்னு என் உசுர எடுக்குறான்?" என்றார் கொஞ்சம் குரலை உயர்த்தி.

"டைரக்டர் பேக்கப் சொல்லாம அவங்க யாரும் அங்கிருந்து நகர மாட்டாங்கன்னு உங்களுக்கே நல்லா தெரியும். ஷுட்டிங் டைம் த்ரி தான். அதுக்குள்ள எதுக்கு சார் வரலைன்னு ஃபோன் மேல் ஃபோன் பண்றாங்க?" என்றான் இவனும் கொஞ்சம் பொறுமையை இழந்து. அவனுக்கு இந்தியாவிலிருந்து வரும் அழைப்புகளை எவ்வாறு தவிர்ப்பது என திண்டாடி நிற்கும் நிலையில் இவர்கள் வேறு வாயைப் பிடுங்கவென அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தால் என்ன செய்ய முடியும் என்ற கடுப்பைக் கொஞ்சம் அவரிடம் காட்டியிருந்தான்.

"இத அவன் சொல்லவே இல்ல பாரு. வரல வரலன்னு மட்டும் பாட்டா பாடுனான். சரி நியூஸ் அப்படி, அதான் அடுத்து என்னன்னு தெரியணுமேன்னு ஃபோனடிச்சுருப்பான். அவனுக்கு ஒரு பதிலச் சொல்லிக் கட் பண்ணிடு" என்றார் ஜெயராமன்.

"அதுசரி என் கஷ்டம் எனக்கு"

"சரிடா பாத்துக்கோ. உன் ட்ரைக்டரு இந்தியா கிளம்பி வந்துட்டு போறதுனாலும் பாத்துக்கலாம் பேசிட்டு சொல்லு"

"சரி சார்" என வைத்த அடுத்த நொடி அவனுக்கு அழைப்பு மறுபடியும் வரத் தொடங்கியது. அவ்வளவு நேரமும், 'வெயிட்டிங்'கில் காட்டியதற்கும் சேர்த்து இப்போது விழி பிதுங்கி நின்றான் அஞ்சாநம்பி.

ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்டிர்லிங் கேசில் என்ற இடத்தில் தான் விலாங்கு மீன் குழுவினர் கூடியிருந்தனர். மூன்று மணிக்கு படப்பிடிப்பு துவங்கிவிட வேண்டும் என முந்தைய தினமே முடிவு செய்யப்பட்டிருந்தது. உதவி இயக்குனர்கள் எட்டு பேரும் இரண்டு மணிநேரத்திற்கு முன்பிருந்தே படப்பிடிப்புத் தளத்தை தயார் செய்யும் முனைப்பில் இருக்க, கதாநாயகன், கதாநாயகி, நடன இயக்குனர் என அவர்களும் ஒரு மணிநேரத்திற்கு முன்பே ஒவ்வொருவராக வந்திருக்க, மொத்தக் குழுவும் இயக்குனருக்கு காத்திருக்கத் துவங்கினர்.

தயாரிப்பாளர் குழுவிலிருந்து வந்திருந்தவர்கள் தான், இந்தியாவில் இன்று காலையிலிருந்து பரவலாக வந்த செய்தியில் குழம்பி, உதவி இயக்குனர்களைக் கேள்வியில் துளைத்துவிட்டு, அவர்களும் தெரியாமல் விழிக்கவும் அஞ்சாநம்பிக்கு அழைத்துப் பார்த்து அவன் எடுக்கவில்லை என்கவும் ஜெயராமனுக்கு அழைத்துக் கூறியிருந்தனர். அவரும் அப்போது தான் செய்தியை அறிந்திருந்தவர் வேறுசிலரிடமும்‌ பேசி செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டு நம்பிக்கு அழைத்திருந்தார். அவன் இயக்குனருக்கு தற்போதைக்கு இந்தியா வரும் திட்டம் இல்லை என்று கூறிவிட்டதில் குழப்பம் தான் என்றாலும் பகிரப்படும் செய்தி இயக்குனரின் தனிப்பட்ட விஷயம் என்பதாலும் மேற்கொண்டு வாதாடாமல் சரியென்று வைத்துவிட்டார்.

இதோ இப்போது அந்த எல்லோரும் தேடும் இயக்குனராகப்பட்டவன் இன்றைய படப்பிடிப்பிற்கு வருவானா மாட்டானா எனதான் மொத்தப் படக்குழுவும் அவர்களுக்குள்‌ கிசுகிசுத்துக் காத்திருந்தது.

அங்கு, கையில் கைப்பேசியை வைத்து விழித்துக் கொண்டிருந்தவனை, "நம்பி!" என்ற அதட்டலான குரல் சட்டென்று திரும்பிப் பார்த்து ஓட வைத்தது. அறையின் வெளிக் கதவைத் திறந்து இவன் உள்ளே செல்லவும்,

"கேப் புக் பண்ணிட்டியா?" என்றவாறு உள்ளறையை மெதுவாக திறந்துப் பார்த்துவிட்டு மூடினான் குஹநேத்திரன்.

"இதோ பண்ணிட்டேன் சார்" என வேகமாக அவனை நோக்கி நடந்தவாறு கைப்பேசியில், வண்டியை பதிவு செய்ய முயன்றான் அஞ்சாநம்பி.

"பாப்பாக்கு ஈவ்னிங் டிஃபன் அரேஞ் பண்ணிட்டியா?" என அவன் அவனது கைப்பேசி, மேக்புக் அனைத்தையும் எடுத்து டீபாயில் தயாராக வைத்துக் கொண்டே கேட்க,

"இப்ப பண்ணிடுறேன்‌ சார்" என்றான் அவன் அடுத்ததாக.

"ம்ச் இவ்வளவு நேரமு என்ன பண்ண நீ? ஸ்பாட்ல எல்லாம் ரெடியான்னு கேட்டியா?" என்றவன் கைப்பேசியில் ஏதோ தட்டிவிட்டு, ஜர்கினையும் தயாராக எடுத்து அருகில் போட்டுவிட்டு நீள்விருக்கையில் அமர்ந்து ஷுவை எடுத்து மாட்டத் துவங்கினான்.

"எல்லாம் ரெடி தான் சார்" என வேகமாக சொன்னவன், 'வருவாருன்னு நினைச்சிருக்கானுங்களா இல்ல வரமாட்டாருன்னு அவனுங்களா முடிவு பண்ணி தேமேன்னு இருந்துட்டானுங்களான்னு வேற தெரியல. இவரு என்ன முடிவுல இருக்காருன்னு தெரியாம கூடவே இருக்க நானே இவ்வளவு நேரமு உலாத்திருக்கேன், அவனுங்கல சொல்லி என்ன‌‌ செய்ய? மொத்த குழப்பத்துல அவனுங்கட்டயிருந்து வந்த காலையும் எடுக்காம இருந்துட்டேன்' என மனதினுள் புலம்பினாலும் இருவரும் செல்வதற்கு வண்டியை ஏற்பாடு செய்துவிட்டிருந்தான்.

"அடுத்து எதையும் கேட்பாரோ?" என வாய்க்குள் முனங்கிக் கொண்டே நிமிர, அவனைத் தான் பார்த்தவாறு அந்த மூவர் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான் குஹநேத்திரன்.

"என்ன யோசனைல இருக்க நீ?" என ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி அவன் கேட்ட விதத்தில்,

"நானா? இல்லையே? யோசிக்கலாம் இல்ல சார்" என்றான் வேகமாக, "இவருதானே யோசனைல இருக்கணும்! நானா ஏன் இருக்கேன்?" என்றும் அவன் கேட்டுக் கொள்ள,

"டேய்!" என அதட்டியிருந்தான் குஹன்.

"பாப்பாக்கு என்ன சார் ஃபுட் புக் பண்ணட்டும்?"

"நூடுல்ஸ் தான் கேட்டா. சிக்கன் நூடுல்ஸ் போடு. சிக்ஸ்கு பாப்பாக்கு கேப் புக் பண்ணிடு. மறுபடியும் சொல்ற மாதிரி வச்சுக்காத நம்பி" என எழுந்தவன், ஜர்கினை எடுத்து மாட்டிக் கொண்டான். பின் சென்று மறுபடியும் உள்ளறையைத் திறந்து பார்த்தான், அவனது பத்து வயது மகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி படுத்திக் கொண்டு வெளியே நடந்து விட்டான்.

சாப்பாட்டை முன்பதிவு செய்து கொண்டே, அவன் பின் ஓடிய அஞ்சாநம்பி, அந்த அறையின் வெளிக் கதவைப் பூட்டியவன், அவசரத்திலும் ஒருமுறை நன்றாக பூட்டிவிட்டோமா என சரிபார்க்கவும் மறக்கவில்லை.

குஹநேத்திரன் விடுதி வாயிலுக்கு செல்லவும், அவர்களுக்கான வண்டி வரவும் சரியாக இருந்தது, ஆனாலும் உறுதிப் படுத்திக் கொள்ள பின்னால் ஓடிவந்த அஞ்சாநம்பியை திரும்பிப் பார்த்தான்.

"நமக்கு புக் பண்ணது தான் சார்" என்றான் அவனும் வண்டி எண்ணை வேகமாக சரிபார்த்துவிட்டு. இருவரும் பின்னால் ஏறிக்கொள்ள வண்டி படப்பிடிப்புத் தளத்தை நோக்கிக் கிளம்பி இருந்தது.

குஹநேத்திரன், நாற்பதை தொடவிருக்கும் துடிப்பான நடுத்தர வயதினன். பார்த்தால் நாற்பது என கூறிவிட முடியாது அவ்வளவு நேர்த்தி உண்டு அவனிடம், உடுத்தும் உடையிலும் அதன் உள்ளிருக்கும் உடம்பிலும் அதன் உள்ளிருக்கும் உறுப்புகளிளும் என அனைத்திலும் அதிக கவனம் உண்டு, அதனாலேயே நாற்பதிலும் இளைஞன் அவன், அதில் பெரிய பங்கு அவனில் பங்காக இருக்கும் இன்னொருத்தியையும் சேரும்.

இருபத்தி இரண்டு வயதில் சினிமா துறைக்குள் வந்தவனுக்கு, கடந்த பதினெட்டு வருடங்கள் கற்றுக் கொடுத்தவைகள் ஏராளம். உதவி இயக்குனராக ஐந்து வருடங்கள் இருந்தவன், பின் அவனே இயக்கத் துவங்கி, ஐந்து வருடத்தில் பனிரெண்டு படங்கள் எடுத்திருந்தான். அதில் ஒன்பது படங்கள் வெற்றியைத் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பும் வந்ததில் அதிலும் நுழைந்து இரண்டு மூன்று வருடங்கள் அதிலேயே ஓடியிருக்க. அவனுக்குள் இருக்கும் இயக்குனர் என்பவனை அவனே தேடும் நிலையில் அதன்பின் வருடத்திற்கு இரண்டு படங்கள் எப்படியும் இயக்குவது என்ற முடிவிற்கு வந்து இதோ, 'விலாங்கு மீன்!' அவன் இயக்கும் இருபத்தி மூன்றாவது படம். அஞ்சாநம்பி, அவன் இயக்கிய முதல் படத்திலிருந்து அவனுக்கு உதவியாக இருந்து இப்போது மேனேஜராக இருப்பவன். அவன் அம்மா வழியில் வந்த ஒருவகை சொந்தமும் கூட.

வண்டியில் செல்லும் வழியில், அஞ்சாநம்பி அவனைத் திரும்பிப் பார்ப்பதும் திரும்புவதுமாக இருக்க,

மேக்புக்கில் கவனமாக இருந்தாலும், "என்ன நம்பி?" என அவனே கேட்ட பின்னரே, "பாப்பாக்கு ஃபுட் ஆர்டர் போட்டேன் சார். இங்க பக்கத்துல ஆர்ட் கேலரி ஈவன்ட் ஒன்னு ஈவ்னிங் நடக்குது. நமக்கும் ஷுட்டிங் முடிய எயிட்கு கூடவே ஆகிடும். அதுவரை அவளுக்கும் போரடிக்கும். ட்ராயிங்னா இன்ட்ரெஸ்டிங்கா பாத்துட்ருந்து வருவா" என்றவன் தன் கைப்பேசியில் அதன் விளம்பரத்தை மெதுவாக திருப்பி அவனிடம் காண்பிக்க,

நிமிர்ந்து அஞ்சாநம்பி காண்பித்ததை ஒருமுறை கையில் வாங்காமலே பார்த்து விட்டு, "ஹரிணிட்ட கேட்டுட்டு சரின்னு சொன்னான்னா புக் பண்ணி கொடு" என்றவன் மீண்டும் அவனது மேக் புக்கில் படத்தை பற்றிய சில குறிப்புகளை குறிப்பதில் திரும்பிக் கொண்டான்.

'என்ன இவர்ட்ட பரபரப்பையே காணும். விஷயம் தெரியுமா தெரியாதா? எப்படி தெரியாம இருக்கும்? கைல தான் இத வச்சு நோண்டிட்டே வர்றாரே? இவருக்கு தெரியாம அக்கா அப்படி ஒரு விஷயமு செஞ்சுருக்க மாட்டாங்களே? கேக்காம ட்வீட் பண்ணிருக்கவும் முடியாது. இப்ப நாமளா சொன்னா, உன் வேலைய பாருன்னுவாரா? இல்ல சொல்லாம விட்டா, அப்புறமா, உனக்கு தெரியும்னா எனக்கு நீயா சொல்ல மாட்டியான்னு திட்டுவாரா? இப்ப நா சொல்லணுமா வேணாமா? விஷயம் இவருக்கு தெரியுமா தெரியாதா?' அவன் அவனுக்குள் உலன்றபடி வர, ஸ்டிர்லிங் கேசில் வந்திருந்தது.

குஹநேத்திரன் இறங்கி சென்றபின்னரே, கதவு திறந்து மூடிய சத்தத்தில் திடுக்கிட்டு அஞ்சாநம்பியும் சுதாரித்து, வந்து சேர்ந்ததற்கான கட்டணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கிச் சென்றான்.

குஹநேத்திரன் வந்திறங்குவதை கண்டதும்‌ தான் அங்கும் வேலைகள் வேகமெடுத்தன, அனைவரையும் சுற்றிவர பார்த்தவாறே தான் வேக நடையில் உள்ளே சென்று கொண்டிருந்தான். அவன் அப்படி தான் கவனித்தபடி வருவான் என தெரிந்ததாலேயே அவரவர் வேலையில் அவ்வளவு கவனமாக இருப்பது போல பார்த்துக் கொண்டனர்.

நேராக கேமராமேனிடம் வந்தவன், "லோடடா கிஷோர்?" என்றான்.

அவன், "எஸ் ஸார் ஆல் செட்" என்றுவிட,

"டேக் போயிடலாமா மாஸ்டர்? பேக்ரௌன்ட் சிசனிங் நல்லாருக்கு. ரிகெர்சல் முடிஞ்சது தானே?" என திரும்பி நடன இயக்குனரிடம் கேட்க,

அவர் திரும்பி நடிகர்களை ஒருமுறை பார்த்துவிட்டு, "போயிடலாம் சார்" என்றார்.

அதன்பின் மொத்த தளமும் தயார் நிலைக்கு வந்துவிட, "ரெடி? ஆக்ஷன்!" என்ற இவன் குரலில் பாட்டு ஒலிக்கப்பட, நடன குழுவினர் பயிற்சி பெற்றதை ஆடினர்.

கையை நாடியில் பதித்து ஒரு குட்டி நாற்காலியில் குனிந்து அமர்ந்து தன் முன்னிருந்த திரையில், கேமரா வழி தெரிவதை உன்னிப்பாக கவனித்திருந்தவன், திடீரென, "கட்!" என்றுவிட்டதில் எல்லோரும் நிற்க, "செகன்ட் ரோ தேர்ட், ஃப்ரன்ட்ல வாங்க, ஹீரோக்கு லெஃப்ட்ல நாலாவது நிக்குற கேர்ள் தேர்ட் ரோ போங்க" என திரையைப் பார்த்தே அவன் கூற அவர்கள் இருவரும் மாறி நின்றனர்.

மீண்டும், அவனது ஆக்ஷனில் அவர்கள் ஆடத்துவங்க, மறுபடியும் திருத்தம், மறுபடியும் ஒத்திகை, மறுபடியும் நடனம் என அடுத்த இரண்டு மணிநேரம் அதில் செல்ல, இவனுக்கு கத்தி கத்தி தொண்டை வலிக்க, குனிந்து பார்த்திருந்ததில் கழுத்தும்‌ வலிக்க, ஜர்கினை கழற்றி அந்த சேரிலேயே போட்டுவிட்டு எழுந்து இரு கையையும் உயர்த்தி முறித்துக் கொடுத்தான்.

அவன் என்ன செய்தாலும் அதை படம்பிடித்து மீம்ஸாக்கிவிட்டு அவர்கள் படத்தை இலவச விளம்பரம் செய்து கொள்ளவே அங்கு இருந்தனர் ஜெயராமனின் உதவியாளர்கள். ஆனாலும் அனைத்தையும் வெளிவிடும் முன்னர் அது குஹன் பார்வைக்குச்‌ சென்றே வரும், அவன் அனுமதித்தது மட்டுமே வெளிவரும். இப்போதும் அவன் செய்கையை அவர்கள் படம்பிடித்துக் கொள்ள, அவர்களை ஒரு பார்வை பார்த்தவனும், திரும்பி அஞ்சாநம்பியை பார்க்க, தூரத்தில் கைப்பேசியோடு மல்லுகட்டியபடி இருந்தவனை, "நம்பி டீ!" என கத்தி கேட்க, தயாரிப்பாளர் குழுவை சார்ந்தவன் வேகமாக டீயுடன் வந்து நின்றான்.

அஞ்சாநம்பியும் வேகமாக வந்து நின்று, "ஹரிணி ரீச்சாகிட்டாளான்னு கேட்டுட்டு இருந்தேன் சார். இப்ப‌ தான் ஆர்ட் கேலரி ரீச் ஆகிருக்கா. அங்க போரடிக்கவும் ஃபோன் பண்ண சொல்லிட்ருந்தேன்" என ஒப்புவிக்க,

தலையை அசைத்து, "மேக்ஸிமம் நைன் அதுக்கு மேல டிலே ஆக வேணாம், பிக்கப் பண்ணிடு" என்றவன் டீயுடன் தள்ளி வந்து நின்று கொண்டான்.

குஹன் நகர்ந்ததும், நம்பியை சூழ்ந்தவர்கள், "சார் இந்தியா போறாரா? என்ன இஷ்யூ ஏன் திடீர்னு அப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்?" என வந்த கிசுகிசுப்பான கேள்விகளுக்கு, "அத சார்ட்ட தான் கேட்டு சொல்லணும். கேட்டே சொல்லட்டா?" என்றான் இவனும் கேள்வியாக.

"எதையும் சொல்ல மாட்டியே நீ" என தான் அவர்களும் முனங்கிச் சென்றனர்.

"எனக்கே அந்த மனுஷன் எதையும் சொல்றதில்லன்னு இவனுங்க என்னைக்கு தான் நம்புவானுங்க" என முறைத்துக் கொண்டு நிற்க, அவனுக்கு மறுபடியும் அழைப்பு வந்து விட்டிருந்தது.

'விசாலாட்சி அம்மையார்' என வந்து மின்னியது. காலையில் இருந்து இது எத்தனாவது முறை என எப்படி எண்ணினாலும் கணக்கில் கொள்ள முடியாதளவை தாண்டிச் சென்று கொண்டிருந்தது அதன் எண்ணிக்கை.

தலையை வேகமாக கலைத்து சொரிந்து தன்னை சமாளித்தவன், "ஹலோ அத்த!" என எடுத்து சொல்லி முடிப்பதற்குள்,

"என்ன தான்டா அங்க கிழிச்சு தொங்க விடுதீங்க? கிறுக்கா உனக்கு? போனடிச்சா எடுக்க முடியாதளவுக்கு படுக்கைலயா கெடக்க?" என செவிப்பறை கிழியும் அளவில் அவர் கத்த,

"அத்த போனு சார்ட்ட இருந்தது. நான்னா எடுக்காம இருப்பேனா?" என்றான் இவன் பாவமான குரலில்.

"அவன் எல்லாம் செய்வான்டா. கடக்குட்டின்னு அவன பாத்து பாத்து வளர்த்ததுக்குத்தான் இஷ்டத்துக்கு ஆடுதான். இங்கன என்னனென்னமோ பேசி தாளிக்கானுவ. எனக்கு போன் மேல ஃபோன் வருது. எல்லாருக்கும் என்ன பதில சொல்லுதது? எங்க அவன? இங்க பேசுறதெல்லாம் நெசமா இல்லையான்னு சொல்லு முதல்ல"

"எனக்கும் எதுவும் உறுதியா தெரியாது அத்த"

"மங்குனிடா நீ! தெரிஞ்சா மட்டும் முத்த உதுத்துருவியா நீயி?"

"ம்க்கும்! எனக்கு நெசமாவே எதுவும் தெரியாது அத்த. சார் என்ட்ட எதுவும் இதுவரை சொல்லல. நானா கேட்டாலும் சொல்ல மாட்டாரு"

"அவன் விடாகண்டனுக்கு கொடாகண்டன். ஒன்னுமே நடக்காத மாதிரி பசப்புறதுல அவன மிஞ்ச முடியாது. அதான அவனுக்கு ஏத்த தொழிலாவே பாத்து போய்ட்டான்" அவர் மேலும் வசைபாட,

'அவ்வளவும் நம்மட்டதான். ஏன் அங்க இந்த டயலாக் எல்லாம் பேச வேண்டிய தான?' வாய்க்குள் முனுமுனுத்தான் நம்பி.

"என்ன கம்முனு இருந்துகிட்டா நாங்க என்னன்னு நெனைக்குறது? எல்லாமே விளையாட்டா அவங்க ரெண்டு பேருக்கும்? சரி அவள எங்க?"

"யார அத்த?"

"என் வாய கிளறாத இருக்க விசருக்கு வண்ட வண்டையா கேட்டுவிட்ருவேன்"

"ஹரிணி பாப்பாவா?"

"என் பேத்திய பத்தி உன்ட்ட ஏன்டா கேட்கேன்? அவளே தங்கமா போனெடுத்து பதில் சொல்லுவா. ஆனா நா பெத்தது, அவன் தேடி தேடி கட்டுனது, நீயா வந்து சேர்ந்ததுன்னு, உங்க மூணு பேரால தான் நா பாடா படுதேன்"

"பேச வேண்டியத பேசேன்டி. தொனதொனன்னுட்டே இருந்தா அவன் சொல்றதையும் சொல்லாம முழுங்கிருவான்" என அந்தப் பக்கம் காசிவிஸ்வநாதனின் குரலும் கேட்டது.

"அவந்தான் பதிலே சொல்ல மாட்டேங்குறானே. சரியான ஊமகோட்டானா வந்து வாச்சுருக்கான்" என இவனை விசாலாட்சி அங்கு திட்ட,

"உன் மவன எங்கன்னு கேளுடி மொத" என அவர் அரட்டுவதும் கேட்டது. இவன் திரும்பி குஹநேத்திரனைப் பார்க்க, அவன் டீயை குடித்து விட்டு மறுபடியும் சென்று குட்டித் திரை முன் அமர்ந்துவிட்டிருந்தான்.

"அடேய் உன்னத்தான? எங்க உன் ட்ரைக்டரும் அவன் பொண்டாட்டியும்? ஹரிணிட்ட கேட்டா அவ அம்மா அங்க வரலன்னு சொல்லுதா"

"ஆமா அக்கா இந்த டைம் வரல"

"ஏனாம்? அதுக்குத்தான் சண்டை போட்டு இப்ப இந்தப் பிரச்சினைய இழுத்துவிட்டாளாமா?"

"தெரியல அத்த"
 

priya pandees

Moderator
"என்னதான்டா தெரியும் உனக்கு? இருபத்தி நாலு மணி நேரமு அவங்கூடவே சுத்து ஆனா எத கேட்டாலும் தெரியலன்னு கைய விரி"

"இந்த தடவை கிளம்பும்போதே ஹரிணிக்கும் சாருக்கும் மட்டும் டிக்கெட் போடு. நானும் கிருத்திக்கும் இங்க இருக்கப் போறோம்னு சொல்லிட்டாங்க. அக்கா சொல்லித்தான் நா டிக்கெட்டே போட்டேன்"

"சரி இப்ப அவள எங்க? சென்னைலயும் இல்லாம எங்க போனா?"

"சார்ட்ட தான் கேட்கணும்"

"போய் அதையாவது கேட்டு சொல்லு போ"

"இப்ப போனா திட்டுவாரு. ஷுட்டிங் போயிட்ருக்கு"

"இங்க என்ன பிரச்சினைப் போயிட்ருக்கு அவனுக்கு படமெடுக்குறது தான் இப்ப ரொம்ப முக்கியமாமா?"

"அத்த!" என அவன் திண்டாடிக் கொண்டிருக்கையிலேயே அவனுக்கு இரண்டாம் அழைப்பில் இன்னொரு அழைப்பு வரும் ஓசை கேட்க, "இன்னும் யாருடா?" என சலிப்பாக எடுத்து பார்த்தவனுக்கு, "பௌர்ணமி அக்கா" என வந்ததில் படபடப்பு அதிகமாகியது.

"அத்த இன்னொரு கால் வருது. இருங்க கூப்பிடுறேன்" என்றவன் அவர் அந்தப்பக்கம் கத்தக் கத்த வைத்துவிட்டு, மறு அழைப்பை வேகமாக ஏற்றான்.

"ஹரிணி எங்க நம்பி?" என்றாள் பௌர்ணமி எடுத்ததும்.

"ஆர்ட் கேலரில இருக்காக்கா"

"டைம் என்ன நம்பி? ஒரு சின்னப் பொண்ண புது ப்ளேஸ்ல தனியா இவ்வளவு நேரம் விட்டுட்டு எனக்கென்னன்னு இருக்குறீங்க?" என்றாள். சற்றும் குரலை உயர்த்தவில்லை, ஆனால் அதிலிருந்த அழுத்தம் இவனை எச்சிலை விழுங் வைத்தது.

"இங்க இன்னும் இருட்டாகவே இல்லக்கா. ஆல்மோஸ்ட் நைன் வர வெளிச்சமா தான் இருக்கும். பயமில்ல"

"எனக்கு பயம் தான் நம்பி. உங்களால பாத்துக்க முடியாதுன்னா அவள இங்க கொண்டு விட்டுட்டு போய் உங்க வேலைய பாருங்க"

"நா இப்ப கூட்டிட்டு வந்துடுறேன்க்கா"

"டென் மினிட்ஸ்ல அவ அங்க அவ அப்பாகிட்ட இருக்கணும் நம்பி"

"கண்டிப்பாக்கா. இப்ப‌ நீங்க எங்க இருக்கீங்க?"

"கிருத்திக்கோட சேலம் போயிட்ருக்கேன் நம்பி. நீங்க ஹரிணிய கூப்பிட்டுட்டு எனக்கு ஒரு மெசேஜ் குடுங்க" என்றவள் வைத்து விட்டாள்.

மறுபடியும் அழைப்பு இப்போது காசிவிஸ்வநாதனே அவரது எண்ணில் இருந்து அழைத்தார், "மாமா, நிஜமா எனக்கும் எதுவும் தெரியாது. அக்கா, சார் ரெண்டு பேரும் என்கிட்ட எதுவும் சொல்லிட்டுலாம் செய்ய மாட்டாங்க. நீங்களாவது நம்புங்க"

"நா கேட்டா சொல்ல மாட்டான். நீங்க கேட்டா மட்டும் சொல்லிருவானா?" என விசாலாட்சி குரல் தான் அவர் ஹலோவையும் மீறி அவனுக்கு கேட்டது.

"அவனுக்கு விஷயம் தெரியுமா தெரியாதா? தெரிஞ்சா இங்க கிளம்பி வந்து மருமககிட்ட பேச வேணாமா?" என காசிவிஸ்வநாதன் கேட்க, அவனுக்கும் தானே அதற்கு பதில் தெரியாது. அதனால் பாவமாக திரும்பி குஹநேத்திரனை பார்த்தான்.

அங்கு அவன் மைக்கில், நடனத்தை ஒழுங்கு படுத்துவதில் தான் காரியமாக இருந்தான்.

"இந்த ஷாட் ஓகே. அடுத்த ஷாட் உள்ள காரிடார்ல. லொகேஷன் சேஞ்ச் பண்றதுக்குள்ள நீங்க காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணி வந்திடுங்க" என்றவன், "கிஷோர் டே லைட்டிங்ஸ் செட் பண்ணு குயிக்" என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையைக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் அவனது உதவி இயக்குனரில் ஒருவன், நாயகர்களின் உடையை உறுதி செய்து கொள்ள வேண்டி, "சார் அடுத்த காஸ்ட்யூம்" என மேக்புக்கை அவன் முன் கொண்டு நீட்ட,

"என்ன கண்ட்ராவி இது? நா இதுக்கு நாலு சேரீஸ் தான காஸ்ட்யூம் சொல்லிருந்தேன்? இதென்ன கட்டிங்க்னு இத கொண்டு நீட்ற நீ?" என அதட்டலோடு பட்டென்று எழுந்து விட்டான்.

"சார் பௌர்ணமி மேடம் தான்" என்ற உதவி இயக்குனர் பதிலில்,

"அவங்க சொன்னா? என்ட்ட கன்பார்ம் பண்ண மாட்டியா நீ?"

"சார்!" அவன் திருதிருவென விழித்தான்.

"ப்ரொடக்ஷன் டீம்!" என அவன் போட்ட சத்தத்தில் மொத்த செட்டும் அதிர்ந்து நிற்க, தயாரிப்பாளர் குழு முன் அவன் வந்து நின்றது.

"இந்த படத்தோட காஸ்ட்யூம் டிசைனர் நாளைக்கு இங்க இருக்கணும், வித் நா கேட்ட டிசைனோட. இல்லனா ஷுட்டிங் டிலே ஆகும். அதுக்கு நா பொறுப்பு எடுத்துக்க முடியாது. காஸ்ட்யூம் டிசைனர வர சொல்லுங்க" என்றவன், "பேக்கப்" என நகர்ந்து விட்டான்.

அங்கு காதில் போனுடன் அதிர்ந்து நின்ற அஞ்சாநம்பி, "சாருக்கு மேட்டர் கண்டிப்பா தெரியும் மாமா. நா அப்றம் கூப்பிடுறேன்" என வைத்தவன், குஹநேத்திரனிடம் விரைந்தான்.

"ஹரிணி இருக்குற ஆர்ட் கேலரிக்கு கேப் புக் பண்ணு. நாமளே போய் அவள பிக்கப் பண்ணிக்கலாம்" என்றவன் சொல்லிவிட்டு, பொதுவாக அங்குள்ளவர்கள் உடைமாற்றவென ஏற்பாடாகியிருந்த கேரவனுக்குள் நுழைந்து கொண்டான். அவனையே வாயைப் பிளந்து பார்த்து நின்ற படக்குழுவினர் அதன்பின்னரே தளர்ந்து கிளம்ப ஆயத்தமாகினர்.

"சார் ப்ளானே தனி தான். இவரு இந்தியா போவாரா இல்லையான்னு அத்தனபேரையும் யோசிக்க விட்டுட்டு, அக்காவ இங்க வரவைக்க ப்ளான் பண்ணிட்டாரா?" என நின்றவனுக்கு அன்றைய தினம் முழுவதும் இருந்த பதட்டம் நொடியில் கரைந்திருந்தது.

இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம் அந்த குஹநேத்திரனை ஆளும் அவன் சரிபாதி சித்திரா பௌர்ணமி அன்று காலையில் போட்ட ஒரு 'ட்வீட்!' தான்.

"நானும் எனது காதல் கணவரும் முழுமனதுடன் எங்கள் பிரிவை உறுதி செய்து உள்ளோம். அதிகாரப்பூர்வ விவாகரத்தை நாடியுள்ளோம், இருவரும் முழுமனதுடன் தான் இந்த முடிவை ஏற்க உள்ளோம். அவரின் ரசிகர்களான நீங்களும் எங்கள் சூழ்நிலை புரிந்து ஆதரவாக இருப்பீர்கள் என நம்புகிறோம். நன்றி" என அவள் பதிவிட்டதால் வந்த குழப்பமே இத்தனைக்கும் காரணம்.
 

Mathykarthy

Well-known member
அதிரடியான ஆரம்பம் ❤️❤️❤️❤️

நம்பி 🤣🤣🤣🤣 பாவம் மாட்டிக்கிட்டு முழிக்கிறான் 🤭🤭🤭


குஹன் 🤩 எல்லாரும் ஒன்னு நினைச்சா அவன் ஒன்னு செய்றான் 😂 அவன் ஏன் தேடிப் போகணும் அவளை வரவச்சுட்டான்......😎
பௌர்ணமி இவனுக்கு தெரிஞ்சு தான் செஞ்சாளா 🤔
 

priya pandees

Moderator
அதிரடியான ஆரம்பம் ❤️❤️❤️❤️

நம்பி 🤣🤣🤣🤣 பாவம் மாட்டிக்கிட்டு முழிக்கிறான் 🤭🤭🤭


குஹன் 🤩 எல்லாரும் ஒன்னு நினைச்சா அவன் ஒன்னு செய்றான் 😂 அவன் ஏன் தேடிப் போகணும் அவளை வரவச்சுட்டான்......😎
பௌர்ணமி இவனுக்கு தெரிஞ்சு தான் செஞ்சாளா 🤔
Thanku sis😍🥰🥰🙏
 
Top