எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்வை (01)

IsaiKavi

Moderator
நீ பார்த்த ஒரு கணம்….!



“ தமயந்தி ” அப் பெரிய வீட்டில் அவர் குரல் அதிர கத்தினார் நாதவேணி..

ஒரே காது கடித்துக் கொண்டு இருப்பதால் காதிலிருந்த தோட்டை கழட்டி, அதில் ஒட்டி இருந்த அழுக்கை சிறிய தூரிகையால் சவர்க்காரத்தை தேய்த்து அவள் சுத்தம் செய்துக் கொண்டு இருந்தாள்..

அப்போது நாதவேணி தொண்டையை கதற விட்டதால்,‘ திக் ’ என்ற போதே கையில் இருந்த தோட்டை கீழே தவறவிட்டு இருந்தாள்..

‘ ச்சே , இந்த அப்பம்மா ( தந்தையின் சித்தி ) வேற கத்தி கிட்டு , போச்சு என் தோடு எங்க உருண்டு போச்சோ தெரியாது ? அத தேடணுமே ’ தரையில் முட்டி போட்டு தோட்டை தேடிக் கொண்டிருந்தாள் தமயந்தி..

“ தமயந்தி உன்ன கூப்பிட்டு எவ்ளோ நேரம் கெதியா கீழ வா ? ” மீண்டும் அவர் கனத்த குரலில் சத்தமாக அழைத்தார் நாதவேணி..

“ அவசரத்துக்கு கண்ணுல மாட்ட மாடேங்குதே! ” கைகளால் தடவி தேடினாலும், தோடு எங்கு தெறித்து உருண்டோடியது என்று தெரியவில்லை..

அந் நேரத்தில் அவள் தரையில் தோட்டை தேடிக் கொண்டு இருந்தபோது, நீண்ட நக விரல்கள் கொண்ட வெண்ணிற பாதம் அவள் முன் மண்டியிட்டது..

யார் என்று அவள் அண்ணார்ந்து நோக்கினாள்..

அவள் முன் தன் நீண்ட விரல்களுக்குள் அடங்கிய தோட்டை காட்டி “ இதயா தேடிட்டு இருக்க மயு? ” பெளர்ணமி நிலவினை போல் பளிச் என்ற புன்னகை முகத்துடன் கேட்டான் அவன்.. அவளின் அத்தை நந்திதாவின் மகன் சித்ரன்..

“ ம்..இவ்வளோ நேரமா இத தான் தேடிட்டு இருந்தன் மச்சான்..” அவன் கையில் இருந்த தோட்டை வாங்கிக் கொண்டு சொன்னாள்..,

“ நீ தோடு கழுவிட்டு இருந்தத கவனிக்கல்ல நல்ல வேள..தோடு கீழ விழுந்த நேரம் , அப்பத்தான் நான் வந்துட்டு இருந்தனா சரியா என் கால் பாதத்துக்கு கீழ மாட்டிட்டு, மிதிச்சிருந்த இன்டைக்கு நீ காதுல தோடு இல்லாம தான் இருந்து இருக்கணும்..உன் நேரம் தோடு மிதி படாம என் கண்ணுல பட்டு தப்பிச்சிட்டு..” விழிகளில் தெரிந்த கனிவும் , முகத்தில் இருந்த புன்னகையும் மாறாது பேசிக் கொண்டு இருந்தான் சித்ரன்..

“ உங்க கண்ணுல பட்டதால சரி மச்சான்..இல்ல எண்டா வேற யாராவது கால் பாதத்துக்கு கீழ மாட்டி இருந்தா? எனக்கு தோடும் இல்லாம மொட்டை காதோட சுத்திட்டு இருந்து இருப்பேன்..” கேலியாக சிரித்துக் கொண்டு சொன்னாள் தமயந்தி..

கருப்பு நிற டெனிம் ஃபேன்ட், காலர் வைத்த இளம் நீல நிற ஷர்ட்டில் நெஞ்சு பகுதியோடு வெள்ளை நிற கோடு வைத்து வெளியே செல்வதற்கு கிளம்பி நின்றவனை நோக்கினாள்..

“ வெளியே போறீங்களா மச்சான் ? ”

“ ம்ம்.. பாஸ்போர்ட் எடுக்க வர சொல்லி பத்ரமுல்ல ஆஃபிஸ்ல இருந்து ஃபோன்க்கு மெசேஜ் வந்து இருக்கு..அதான் கொழும்புக்கு போக வெளிக்கிட்டு , அப்படியே உன்கிட்ட சொல்லிட்டு போகலாம் எண்டு வந்தன்..”

“ ஓ..அப்படியா? சரி அப்பம்மா கூப்பிடுறாங்க போய் என்ன எண்டு கேட்கல ? எண்டா தொண்டை கிழிய கத்துவாங்க..நீங்க கவனமா போயிட்டு வாங்க மச்சான்..” என்றவள் இரண்டு காதிலும் தோட்டை மாட்டிக் கொண்டு மாடிப்படியில் இறங்கிச் சென்றாள்...

போகும் அவளை நினைத்து, அவன் மனதிற்கு பாரமாக இருந்தது. இந்த வீட்டில் இருக்கும் வரைக்கும் அவளுக்கு ஓய்வு நேரம் கிடைக்க போவதில்லை என்று அவன் அறிவான்.

நந்திதாவின் தாய் தான் நாதவேணி. சித்ரனுக்கு அம்மம்மா (பாட்டி) இருந்தாலும், அவர் தமயந்தியிடம் நடந்துக் கொள்ளும் முறை அவனுக்கு பிடிப்பதே இல்லை.

தமயந்தி அவள் தாய் சாமந்தி, தந்தை சிதம்பரம், சகோதரன் தீபக் இங்கிருந்தவர்கள் தான். ஒருவாறு அவர்களுக்கு என்று நிலம் வாங்கி, வீடு கட்டி குடியேறி விட்டார்கள்.

ஆனால் தமயந்தியை சந்தோஷமாக இருக்க விட மாட்டார்கள் என்று கங்கணம் கட்டித் திரியும் அவனின் பெரியம்மா வாணியின் மூன்று மகள்களும்.

அவர்களுக்கு விடுமுறை கிடைத்தால் போதும், தமயந்தியை இங்கு அழைத்து விடுவார்கள்.. அது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வேண்டியதை அவள் மூலம் செய்து கொள்வார்கள்.

இதில் அவள் வாங்காத பேச்சு, திட்டுகளுக்கு குறைவே இல்லை என்றே சொல்லலாம்.

அவளுக்கு என்று துணையாக, பக்க பலமாக இருப்பது என்றால் சித்ரன் தான்.

அவனுக்கு பத்தரமுல்லைக்கு செல்ல அவசியம் என்னவென்றால், அவன் தாய் நந்தகியோடு லண்டன் செல்வதற்கான காலம் நெருங்கிவிட்டது.

அதனால் அவன் தந்தையிடம் இருவரும் லண்டன் செல்ல இருக்கிறார்கள்.

தமயந்தி அவளை விட்டுச் செல்ல வேண்டுமே அவளை தன்னோடு அழைத்துச் செல்வதற்கு எந்தவொரு உரிமையையும் இல்லாத போது, அவளை விட்டு பிரிவது நினைத்தால் தொண்டையை அடைத்தது.

எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டு, தன் வருத்தத்தை உள்ளே வைத்து பூட்டி வைத்திட வேண்டிய நிலை தான் சித்ரனுக்கு.

“சித்ரன், சீக்கிரம் வா பா,” நந்திதா அழைத்தாள்.

அவர் அழைப்பில் நடப்புக்கு வந்தவன், “ஆ… வாறன் ம்மா,” என்றவன் நாதவேணியிடம் கூறிவிட்டு இருவரும் கேப்பில் ஏறி புறப்பட்டுச் சென்றார்கள்.

அவர்கள் இருவரும் சென்றதும், தமயந்தி புறம் திரும்பியவர், “கொழும்புல இருந்து மூன்று பேரும் வராங்க. அதுனால நீ இன்டைக்கு உன் வீட்டுக்கு போகாத?” என்றார்.

அத்தனை கடுப்பாக இருந்தது. அவள் பிறந்ததில் இருந்து இந்த வீட்டில் வளர்ந்தவள் தான், ஆனால் இப்போது சில காலமாக அவளை நாதவேணி, வாணி மற்றும் அவர்களின் மகள்கள் அவளை வேலைக்காரி போல அல்லவா நடத்துகிறார்கள்.

அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை தான் செய்ய வேண்டும் என்ற சட்டம்.

உயர்தரப் பரீட்சை (12th) எழுதியதால் பல்கலைக்கழகம் படிப்பதற்கான வசதி அவளின் குடும்பத்தார்களிடம் இல்லாத போது, துணிக்கடைக்கு வேலைகள் செய்யலாம் என்ற முடிவை தமயந்தி எடுத்திருந்தாலும், அவளுக்கு எமனாக நின்றது நாதவேணியும் வேணியும் இருவரும் தான்.

அவளின் குடும்ப சூழ்நிலையை கவனித்து வேலைக்கு செல்ல நினைத்தாள் எங்கு அவள் வேலைக்குச் சென்று விட்டாள், தங்கள் ஏவும் வேலைகளை செய்வதற்கு அவள் இருக்க மாட்டாளோ என்று பயந்தவர்கள்.

பொய்யான காரணங்களை வாயால் திரித்து அவளிடம் கூறி இருந்தார்கள்.

அதுவே, அவள் வேலைக்கு செல்லாமல் இருப்பதற்கான ஒரு வாய்ப்பாக அவர்களுக்கு அமைந்துவிட்டது.

தமயந்தி பயந்த சுபாவமாக இருந்தாலும், சற்று வாய்துடுக்கான பெண் உடனே வாயை விட்டு விடவும் மாட்டாள். அதே சமயம் பேச வேண்டிய இடத்தில் வாயை திறக்கவும் மாட்டாள். அது அவளின் குணம்.

அதனால் என்னவோ, அவளை இலகுவாக அவர்கள் கைக்குள் வைத்துக் கொள்ள முடித்து வைக்க முடியுமானதாக இருந்தது.

“நான் வீட்டுக்கு போகணும், அப்பம்மா,” என்றாள் தமயந்தி.

“உன் வீட்டுக்கு போய் நீ என்ன கிழிக்கப் போற? வா, நான் சொல்றதை செய்!” என்று அவள் கையை பிடித்து தன்னுடன் அழைத்துச் சென்றார் நாதவேணி.

முடியாதென்று வாயை திறந்து கூற முடியாதவளும் அமைதியாக, அவர் இழுப்பிற்கு சென்று, அவர் சொன்ன வேலைகளை செய்யத் துவங்கினாள்.

இரவு ஏழு மணி போல் சித்ரனும் நந்திதாவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

நாதவேணி பேரனையும் மகளையும் கண்டு, “பாஸ்போர்ட் வேலை முடிஞ்சிதாமா?” என்று கேட்டாள்.

“ஓம் ம்மா… எல்லாம் முடிஞ்சிது. அவர் வெளிநாட்டுல இருந்து வீசா போடுறது மட்டும் தான் மிச்சம்,” என்றான்.

“சரி நந்து, உனக்கு டீ ஊத்த சொல்லவா? சித்ரன் உனக்கும்?”

“எனக்கு வேணாம், அம்மம்மா; அம்மாக்கு வேணும், எண்டா குடுங்க. தமயந்தி வீட்டுக்கு போயிட்டாளா?” என்று கேட்ட பேரனின் வினாவில் உள்ளுக்குள் பற்றி எரிந்தாலும், தன் எரிச்சலை வெளியே காட்டாது அடக்கிக் கொண்டு, “இல்ல பா, இங்க தான் இருக்காள்,” என்றார்.

“ஓ… சரி,” என்றவன் தன் அறைக்குச் சென்று விட்டான்.

அரை மணிநேரத்திற்கு பின்பு, “மயு,” மேலே அறையில் இருந்து சித்ரன் தமயந்தியை அழைத்தான்.

பாத்திரங்களை சுத்தம் செய்து முடித்தவள், சமையலறையை கூட்டலாம் என நினைக்கும் போதே சித்ரன் அழைத்திருந்தான்.

கையில் இருந்த தும்புத்தடியை கதவு இடுக்கில் வைத்து விட்டு, மாடி அறையை நோக்கி விரைந்தாள்.

ப்ரவுன் ஷர்ட், அடர் நீல நிற ஃபேன்ட் என அணிந்து அவன் வெளியே வந்த சமயம், அவனை இடித்து விடுவது போல் ஓடி வந்தவளை கண்டு துணுக்குற்றான்.

“ஹே! ஹே பார்த்து,” என்று பதறிக் கொண்டு அவன் ஓடி அவளிடம் செல்வதற்குள்,

ஓடி வந்து , அவன் அறை வெளியே நிற்க நினைத்தவளால் முடியாமல் போனது.

சரியாக அவள் ஓடி வந்த வேகத்தில் தூண் இடுக்கில் சிறு விரலும், அதன் மேல் நிற்கும் பெரு விரலும் இடுக்கு வழியே நுழைந்து பிளந்து விட்டன.

விழிகளை இறுக்கமாக மூடிக் கொண்டு, வாயைத் திறந்து கத்த முடியாமல் பற்களை கடித்து வலியை பொறுத்துக் கொண்டாள் நின்றாள் தமயந்தி.

ஆனால் எவ்வளவு நேரம் தான் விரல் அடிபட்ட வலியை பொறுத்துக் கொள்ள வேண்டியது?

லேசாக விழிகளும் கலங்கி இருந்தன.

இமை சிமிட்டி கண்ணீரை சரி செய்துக் கொண்டாள்.

அதற்குள் சித்ரன் அவள் நிலையை கண்டு அப்படியே நின்று விடுவானா என்ன?

அறைக்குள் சென்று பாம் குப்பியை எடுத்துக் கொண்டு, அவள் பாதத்தை வலது கையால் ஏந்தி, பாம்மை விரல்களிலும் விரல் இடுக்கிலும் பூசி விட்டான்.

“அறிவில்லையா உனக்கு? இப்படி தான் மேலே பார்த்து லூசு மாதிரி கீழ பார்க்காம ஓடிட்டு வருவியா, மயு?” அவன் திட்டிக் கொண்டே தான் பாம்மை விரலில் தடவினான்.

இவளுக்கு அவன் பாதத்தை பிடித்தது வேறு சங்கடமாக இருந்தது; யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டமும் அவளுள் இருந்தது.

“மச்சான், நான் கவனிக்காம வந்ததால…”

“ஷு… எதுவும் கதைக்காத!” திட்டும் அவனுக்கு விழுந்தது.

“மச்சான், யாராவது பார்த்துட போறாங்க. ப்ளீஸ் கால விடுங்களேன். எனக்குத் தானே அடிபட்டுச்சு, நானே பாத்துக்குறேன்,” என்றவளை ஏறிட்டுப் பார்த்து தீயாய் முறைத்துப் பார்த்தவனை பாவமாக அவனைப் பார்த்தாள் தமயந்தி..
 
Top