priya pandees
Moderator
அத்தியாயம் 11
அதிகாலை நான்கு மணி, தன் கைபேசியில் வந்த அழைப்பு சத்தத்தில் எழுந்த அஞ்சாநம்பி, தூக்க கலக்கத்தோடே யாரென்று பார்க்க, அவன் மனைவி தான் அழைத்து கொண்டிருந்தாள்.
"என்னடி இந்நேரம்?" என மறுபடியும் கண்ணை மூடி படுத்தவாறே தான் கேட்டான்.
"என்னங்க ஏன் குஹன் அண்ணா இப்படி பண்றாரு. இப்ப அண்ணிக்கு என்ன குறையாம்? மனசே ஆறல போங்க. ஆம்பளைங்க இப்படிலாம் பண்ணாதீங்க, சிமி அண்ணி தைரியமான தன்னம்பிக்கையான ஆளுதான். ஆனாலும் மனசுக்குள்ள அழாம இருக்க மாட்டாங்க. அந்த அழுகையே அண்ணன வாழவிடாது. உங்களுக்கும் இப்படிலாம் எண்ணம் வர கூடாது. வந்தா அண்ணிய மாதிரி டிவோர்ஸ்லாம் கேட்டு நிக்க மாட்டேன் நானு. ஒரே போடு தான். கேட்குதா?" என அவள் பேசியதில் இவனுக்கு ஒன்றும் புரியும்படி இல்லை.
"ஹலோ நா பேசிட்டே இருக்கேன். நீங்க அங்க என்ன செய்றீங்க?"
"ம்ச் காலங்காத்தால ஆபிஸ் போற முன்ன அவசரமா கூப்பிட்ருக்கியே பிள்ள எதுவும் உண்டாகிட்டியோன்னு ஒரு நிமிஷம் நா பிள்ளைய தொட்டுல்ல போட்டு ஆட்ற மாதிரிலாம் கனவு கண்டுட்டேன். வைடி போன" என தூக்கம் கெட்ட கடுப்பில் வைத்துவிட்டு மீண்டும் படுத்துவிட்டான்.
ஆனால் மறுபடியும் ஒரு மணிநேரத்திற்கு பிறகு அழைப்பு வந்தது, இந்த முறை விசாலாட்சி அழைத்திருந்தார். நிலன் வீட்டில் தான் இருந்தார். அவனிடம் ஒரு போரை முடித்து விட்டு, இவனிடம் வந்திருந்தார். மணியை பார்த்து கணக்கிட்டே அழைத்திருந்தார்.
தூக்கத்தில் இருந்த அஞ்சாநம்பிக்கு ஒரு மணிநேரம் ஐந்து நிமிடங்களாகவே தெரிய, மறுபடியும் மனைவி தான் அழைக்கிறாள் என்றெண்ணி எடுத்து, "உனக்கு ஆபிஸ் இல்லையா இன்னைக்கு? டிவோர்ஸ் அவங்க வாங்குறதுக்கு என்னைய ஏன்டி படுத்துற. ஒருத்திய கட்டிட்டே கூட இருந்து குடும்ப நடத்த முடியலயாம் இதுல எனக்கு இன்னொரு ஆசைலாம் வருது பாரு. நீ என்னைய இப்படி பேசுறதுக்கே உன்ன டிவோர்ஸ் பண்ணிருவேன் பாத்துக்கோ" என பேச,
"பண்ணுவடா. நீ ஏன் பண்ண மாட்ட? நாடு நாடா அலைஞ்சு திண்ணுற சோறு செரிக்க மாட்டேங்துல்ல? அதனால எல்லாவனுக்கும் டிவோர்ஸ் பண்ணுறது ஈசியா வரும். எங்க பண்ணேன் பாப்போம். உன் முகரைக்கு ஒரு கல்யாணம் நடந்ததே பெருசு அதையும் டிவோர்ஸ் பண்ணிட்டு காவி கட்டி சுத்த போறியாக்கும்?" என விசாலாட்சி குரல் கேட்டதில் அடித்து பிடித்து எழுந்தமர்ந்தான்.
ஃபோன் திரையில் மீண்டும் ஒருமுறை பெயரை சரிபார்க்க, 'விசாலாட்சி அம்மையார்' தான் என் அடித்து சொன்னது அது.
"அத்த!"
"ம்ம் அம்புட்டு மப்பு. ஆரு பேரு வருதுன்னு கூட தெரியாதளவுக்கு நைட்டு குடிச்சுருக்க?"
"குடிச்சனா? ஐயையோ இல்லவே இல்ல அத்த. கொஞ்ச முன்ன லதா தான் ஃபோன போட்டு என்னத்தையோ உளறிட்டு வச்சா. அதான் மறுபடியும் அவ தானோன்னு பேசிட்டேன்"
"பொண்டாட்டி பேச்செல்லாம் உளறலா தெரியுதோ? ஏன் வேற யாரு பேச்ச சார் கேட்கலாம்னு இருக்கீங்க? உங்களுக்கும் அடுத்த செட்டப் ரெடியா இருக்கு அப்ப?"
"நா அப்படி சொல்லவே இல்லையே அத்த?" என்றான் முகத்தை அழுந்த தேய்த்து கொண்டு.
"கொஞ்சம் முன்ன என்ட்ட தானடா சொன்ன லதாவ டிவோர்ஸ் பண்ண போறேன்னு?"
"அது சும்மா அவள பேசனும்னு சொன்னது அத்த" என்றான் பாவமாக.
"நீயி உன் சாரு மேடம்லாம் சும்மா சும்மா தான் டிவோர்ஸ் பண்ணுவீங்களோ?"
"அத்த!"
"என்னடா அத்த சொத்தன்னு இழுக்குற? அவேன் என்ன நெனப்புல எல்லாம் செய்றான்?"
"யாரு என்ன செஞ்சாங்க அத்த?"
"ஏன் சொன்னா மட்டும் கேட்டுகிட்டு உனக்கு எதுவுமே தெரியலன்னு தான சொல்ல போற?"
தலையை பரபரவென்று சொரிந்தவன், "குஹன் சார்ட்ட பேசணுமா அத்த?" என்றான் அழு குரலில்.
"அவன் மட்டும் பதில் சொல்லிருவானா? அவன் சரியில்லன்னு தான உன்ன அவன் கூட இருந்து பார்த்து எனக்கு எல்லாம் சொல்லுன்னு வேலைக்கு சேர்ந்தேன். இன்னைக்கு வர உருப்படியா ஒரு தகவல் அப்படி இப்படி குடுத்துருப்பியாடா நீ?"
"இப்ப என்னாச்சுங்கத்த?"
"இன்னும் என்னடா ஆவணும்? அந்த நடிகையோட என் பேரன் பேத்திகள கூட்டிட்டு போய் உட்கார்ந்து வட்ட மாநாடு போட்ருக்கான். நீ அதை தடுக்காம எங்க புல்லு பிடுங்க போன?"
"அவங்க போனதே தெரியாதே அத்த. சாரும் ஹரிணியும், கிருத்தியும் தான் சாப்பிட போனாங்க. மேடம் ஒரு ஆல்ட்ரேஷன் வொர்க்குன்னு இங்க தான் இருந்தாங்க, நா அவங்க கூட இருந்துட்டேன்"
"ஆமா நாடு விட்டு நாடு வந்தும் அவளுக்கு கிழிஞ்சத தைக்குறது தான் வேலை. இங்க அவ வாழ்க்கையே கிழிஞ்சு தொங்குது, ஆனா கிழிஞ்ச துணி மட்டுந்தான் அவ கண்ணுக்கு தெரியுமாடா?"
"தெரியல அத்த"
"உனக்கு ஒரு எழவும் தெரியவே வேணாம். ஒழுங்கா எல்லாருக்கும் டிக்கெட் போட்டு ஊருக்கு கிளப்பி கூட்டிட்டு வந்து சேரு. நீங்க அங்க ஜிங்குஜிங்குன்னு ஆடுனதெல்லாம் போதும்" நறநறவென பல்லை கடித்து அவர் பேசியதில் இவனுக்கு காதில் ரத்தமே வரவிருந்தது.
"ஆமா இவன் சொல்லித்தான் அங்க உன் புள்ள எல்லாம் செஞ்சுட்ருக்கான். அவன போட்டு படுத்தாம இங்க வா" என அருகிலிருந்த விஸ்வநாதர் பேச்சும் கேட்க, ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான் அஞ்சாநம்பி.
"பின்ன என்னத்துக்குங்கேன் இவேன்?"
"இங்க குடு நீ" என போனை வாங்கியவர், "நம்பி!" என்க,
"ப்ளீஸ் மாமா திரும்ப அத்தைட்ட மட்டும் போன குடுத்துடாதீங்க. இந்த போன உங்க காலா நினைச்சு பிடிச்சு கேட்கிறேன்" என அவசரமாக அவன் வேண்டுதல் வைக்க,
குழுங்கி சிரித்தவர், "உன்ட்ட மறுபடியும் போன கொடுத்தா அங்கிருந்து அப்படியே காணாம போயிருவானாம்" என விசாலாட்சிட்ட திரும்பி சொல்ல,
இங்கு, "மாமா!" என பல்லை கடித்தான் அஞ்சாநம்பி.
மீண்டும் கடுப்பான விசாலாட்சி, "எங்க இங்க குடுங்க. அப்படி எங்குட்டு ஓடுவாம்னு நானும் கேக்கேன்" என ஃபோனை வாங்க வர, "நா வைக்கேன் மாமா" என வைத்துவிட்டு, ஓரே ஓட்டத்தில் ஃபோனிலிருந்து தப்பிக்க குளியலறை புகுந்து விட்டான், 'இனி எங்க தூங்க? அதான் விடிய வச்சுட்டாங்களே!' என்ற புலம்பலுடன்.
குளித்து கொண்டிருக்கையில் தான் அவனுக்கு பல்பே எரிந்தது, "லதா திடீர்னு ஏன் கால் பண்ணி திட்டுனா? இங்க இவங்க சாப்பிட போனது அதும் பல்லவிய கூட்டிட்டு போனது வர அங்க உள்ளவங்களுக்கு எப்படி தெரியும்? ஆ ஆ!" என அலறி அரைகுறை குளியலோடு வெளியே ஓடி வந்து முதலில் கைபேசியை தான் எடுத்துப் பார்த்தான்.
'ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ்அப்' என அனைத்திலும் ஃபீட்ஸும், இன்பாக்ஸும் நோட்டிஃபிகேஷன்கள் வந்து குவிந்து கொண்டிருந்தது. இவனையும், குஹனையும், பௌர்ணமியையும், பல்லவியையும் டேக் செய்தும், அவர்கள் மூவர் பெயரையும் ஹாஸ்டேக் செய்தும் பரபரப்பாக்கி வைத்திருந்தனர். திறந்து பார்த்தால் குடும்பமாக குஹன், பல்லவி, ஹரிணி, கிருத்தி அமர்ந்திருப்பதாக விமர்சித்திருந்தனர்.
"நாசமா போச்சு!" என அதிர்ந்தவன், கட்டியிருந்த துண்டோடு சென்று, பௌர்ணமி எடுத்திருந்த அறையை தட்டிக் கொண்டு நிற்க, அமர்ந்த நிலையில் தூங்கியிருந்த குஹன் கண்கள் எரிய, விழிக்க முயன்றான்.
இரவு பௌர்ணமி கைபேசியில் பார்த்ததை பற்றி யோசித்திருந்தவன், அவள் அருகில் வந்து அமர்ந்தவாறே தூங்கியிருந்தான். அவன் அதில் பார்த்தவை அவனுக்கு பெரிய விஷயம் இல்லை எனினும் மனைவியாக அவளுக்கு பெரிய விஷயமாக பட்டிருக்கலாம், ஆனால் அவன் அவளை புரிந்திருந்தவரை அவன் காதல் மனைவி பௌர்ணமி இதை தான் தவறாக எடுத்துக் கொண்டாளா? என புரியாமல் குழம்பி தான் தாமதமாக தூங்கியிருந்தான்.
மீண்டும் அது நினைவு வர, அதற்குள் அழைப்பு மணி மீண்டும் மீண்டும் வரவும், எழுந்து வெளியே வந்து கதவை திறந்து விட்டான்.
நம்பி நின்ற நிலையை மேலிருந்து கீழ் பார்த்து, "என்ன நம்பி?" என எரிச்சலாக கேட்க.
"சார் இங்க பாருங்க" என போனை காட்ட, வாங்கி பார்த்தவன், ஒவ்வொன்றாக நிதானமாக பார்த்து நிற்க, "என்ன சார் செய்ய?" என நம்பி தான் படபடத்து கொண்டிருந்தான்.
"இதுக்குலாம் நாம என்ன செய்ய முடியும்? அல்ரெடி சொன்னது தான் அவங்கவங்க யூகத்துக்குலாம் பதில் சொல்லிட்ருக்க முடியாது நம்பி"
"அப்ப மேம் ட்வீட்?"
"அது என் பெர்ஷனல். அதுக்கும் நா யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை"
"சார்!"
"போய் எல்லாரையும் ரெடி ஆக சொல்லுங்க. ஆஃப்டர்நூன் குள்ள ஷுட்ட முடிச்சுட்டு கிளம்ப பாக்கலாம். நமக்கு நம்ம வேலை தான் முக்கியம் நம்பி"
"ஓகே சார்" என சென்று விட்டான். அவனுக்கும் பொடு பொடுவென்று தான் இருந்தது, "நாம பதறி என்ன செய்ய. இந்த மனுஷன் கொஞ்சமும் பதறலையே?" என முனங்கியே தான் வேலையை பார்க்க சென்றான்.
அடுத்த பிரச்சினையாக வருமான வரித்துறை நோட்டீஸ் வந்து சேர்ந்தது.
பௌர்ணமி விழித்தெழுந்த பொழுது, மணி பதினொன்றை கடந்திருந்தது. ஆழ்ந்த உறக்கம் தான், அதீத தூக்கத்தின் வெளிப்பாடாக முகமெல்லாம் கூட ரத்தமென சிவந்து வீங்கிருந்தது. இரவு அவள் படுக்கும் போது இருந்த அறை அப்படியே இருக்க, பல் துலக்கி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு பிள்ளைகள் அறை நோக்கிச் சென்றாள், அதும் வெறிச்சென்று பிள்ளைகள் இன்றி தான் இருந்தது.
நம்பிக்கு அழைத்தாள், "குட் மார்னிங் மேடம்" என்றான் அவன் எடுத்ததும்.
"குட்மார்னிங் நம்பி. ஹரிணி, கிருத்தி எங்க?"
"இங்க தான் ஷுட்டிங் ஸ்பாட்ல மேடம். உங்களுக்கு ட்ராவல் ஒத்துக்கலன்னு சார் சொன்னாங்க. அதான் டீப் ஸ்லீப்ல இருக்க உங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க"
"ஓகே. எனக்கு இன்னைக்கு நைட் இந்தியாக்கு கிளம்ப ஃப்ளைட் டிக்கெட் அவாயிலபில்லான்னு பாருங்க. நா ஒன் அவர்ல அங்க வரேன். லொகேஷன் அனுப்பிடுங்க" என்கவும், அவளிடம் சரி என்றுவிட்டு குஹன் முன் சென்று நின்றான்.
"மேடம் இந்தியா போக டிக்கெட் செக் பண்ண சொல்றாங்க சார்"
"நாந்தான் எல்லாருக்கும் போடுன்னு சொல்லிட்டேனே நம்பி. சித்து இன்னும் ரெயிட் மெயில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நீ டிக்கெட் போடு கிளம்பலாம்"
வருமான வரித்துறையிலிருந்து தகவல் வந்திருந்தது, அவனுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பும் வந்திருந்தது, "கம்ப்ளைண்ட் அடிப்படையில் தான் சார் செக் பண்ண வரோம். நீங்க கோப்ரேட் பண்ணணும்" என்றிருந்தனர். திடீரென வருவது தான் சட்டம் என்றாலும், இதுவரை அவன்மீது எந்த வழக்கும் இருந்ததில்லை, வரியும் சரியாக கட்ட கூடியவன் என்பதாலும் தான் இந்த முன்னறிவிப்பு கூட கொடுத்தனர்.
"நா இப்ப ஸ்காட்லாண்ட்ல இருக்கேன் சார். எனக்கு டு டேய்ஸ் எப்படியும் ட்ராவல் டைம் வேணும். ஃப்ரைடே மார்னிங் நாங்க அங்க இருப்போம் சார்" என உடனே பதில் கொடுத்து தான் வைத்திருந்தான்.
"யார் கம்ப்ளைண்ட் பண்ணிருப்பாங்க சார்?" என்றான் அஞ்சாநம்பி.
"நோ ஐடியா நம்பி. பல்லவி நேம் எங்க விஷயத்துல அடிபடுறதுனால அவ வெல்விஷ்ஷர்ஸா இருக்கலாம். இல்லனா சித்துக்கு நா பெர்ஃபெக்ட் ஹஸ்பெண்டா இல்லன்னு நினைக்குற அவளோட வெல்விஷ்ஷர்ஸா இருக்கலாம். லெட்ஸீ"
"அப்ப பேரிஸ் டிக்கெட்?" இங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு குடும்பமாக பேரீஸ் சுற்றிப்பார்க்க முன்பதிவு செய்து வைத்திருந்தான் குஹன். ஆனால் இப்போது அவனுக்கு எங்கும் போகும் மனநிலை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பெருமூச்சுடன் திரும்பி நம்பியை ஒரு பார்வை பார்த்தவன், "கேன்ஸல் பண்ணிடு" என்றுவிட்டு மறுபடியும் வேலையில் ஆழ்ந்து விட்டான்.
ஹரிணி, கிருத்தி இருவரும் அங்குதான் அஞ்சாநம்பி மேற்பார்வையில் விளையாடிக் கொண்டிருந்தனர். சொன்னது போல் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் படப்பிடிப்பு தளத்தை அடைந்திருந்தாள் பௌர்ணமி.
அனைவருக்கும் ஆச்சரியம் தான். கிருத்தி எப்படி வந்தான் என இப்போது தான் புரிந்து கொண்டனர். அவர்கள் வந்த நாட்களில் ஹரிணி மட்டுமே அவனுடன் வந்திருப்பது தெரியும், இதில் நேற்று பல்லவியுடன் ஃபோட்டோவிலும், இன்று நேரிலும் வந்து நிற்கும் கிருத்தியை கண்டு அவர்களுக்குள் அவ்வளவு கிசுகிசுப்புகள், அழைத்து வந்ததே பல்லவி என்றளவிற்கு பேசி கொண்டிருந்தனர். இப்போது பௌர்ணமியை நேரில் பார்த்ததும் அனைத்தும் புஸ்ஸென்று போனதில் ஏக வருத்தம் தான்.
"அதானே புருஷன விட்டு கொடுத்தாலும் பிள்ளைய விட்டு கொடுக்க மாட்டாங்களே தமிழ் பெண்கள்" என அதற்கும் மேலோட்டமாக கலாய்த்துக் கொண்டனர்.
பௌர்ணமியிடம் அனைவரும் நன்றாகவே பழகினர், அவர்களின் விவாகரத்து பற்றி குஹனிடம் எவ்வாறு விசாரிக்க வரவில்லையோ அதேபோல் இவளிடமும் கேட்டுவிடும் தைரியம் யாருக்கும் வரவில்லை.
'ஆயுட்காலம்' படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக முடிவிற்கு வந்திருந்தது.
"தேங்க்யு கைஸ்" என்ற மொழியுடன் மானிட்டரிலிருந்து நிமிர்ந்து நின்றான் குஹன். அவன் முகத்தில் தெரிந்த திருப்தியான சிரிப்பில் மற்ற அனைவரும் கூட ஆர்ப்பரித்து கொண்டனர். ஜெயராமன் அடுத்த நொடி அழைப்பில் வந்து நன்றி தெரிவித்து விட்டார்.
மதிய உணவு பெரிய உணவகத்தில் எல்லோருக்கும் ஏற்பாடாகியிருந்தது. அடுத்து எல்லோரும் அங்கே கிளம்ப, அதுவரை குஹன், பௌர்ணமி பக்கம் திரும்பவில்லை. அவளுக்கும் மற்றவர்களிடம் பேசுவதிலேயே நேரம் கழிந்திருந்தது.
உணவகத்திற்கு கிளம்பும் நேரம், "ஃப்யூ செகென்ட்ஸ் படீஸ்!" என அனைவரையும் நிறுத்திய குஹன், "சித்து கம்!" என அவளையும் அருகில் அழைத்து நிறுத்தி கொண்டான்.
இது அவர்கள் வழக்கம் தான், படப்பிடிப்பு முடியும் போது அவன் அவளுடன் நின்று தான் இருவரும் விடை பெற்று கொள்வர்.
"லஞ்ச் முடிச்சுட்டு அப்படியே கிளம்பணும் நாங்க. நைட் ப்ளைட்ல இந்தியா ரிட்டர்ன். நீங்க டூ டேய்ஸ் இங்க இருந்து தான் கிளம்ப ப்ளான்னு தெரியும். என்ஜாய் யுவர் செல்ஃப். நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்ல அகைன் நாம நல்ல சான்ஸ் அமையும் போது மீட் பண்ணலாம். கீப் அப் த குட் வொர்க் ஆல் ஆஃப் யூ" என்றவன் தனிதனியாகவும் ஒவ்வொருவருக்கும் கை குலுக்கி விடை கொடுத்தான்.
பல்லவியிடம் வரும் முறைக்காக அனைவரும் காத்து நின்றனர், "தேங்க்ஸ் பல்லவி, லாஸ்ட் மினிட்ல சொல்லியும் வந்து நடிச்சு கொடுத்தீங்க. பீ ஃப்ராங்க் எங்க இஷ்யூல தேவையில்லாம உங்க நேம் யூஸ் பண்ணிட்டாங்க. அது வொர்க்காவும் சரி பெர்சனலாவும் சரி நத்திங்னு காட்ட வேண்டியிருந்தது. சோ உங்கள கட்டாயமா தான் இந்த சாங்க்ல யூஸ் பண்ண வேண்டியதா போச்சு. நீங்க நேத்து ரொம்ப கில்ட்டியா பேசிட்ருந்தீங்க, அது கண்டிப்பா தேவையில்லாதது. நீங்க இன்னும் நிறைய இதுமாதிரி கடந்து வர வேண்டியிருக்கும் பல்லவி. நெக்ஸ்ட் எதாவது படம் பண்ற மாதிரி இருந்தா மீட் பண்ணலாம். டேக் கேர்" என்றவன், "சொல்லு சித்து!" என அவளிடமும் திரும்பி சொல்ல,
"எஸ் உங்க கில்ட் தேவையே இல்லாதது தான் பல்லவி!" என சிரித்து லேசாக அணைத்து விடுவித்தாள் பௌர்ணமி. அவளுக்கும் அவர்கள் விஷயத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என நாசுக்காக காட்டிவிட்டிருந்தான்.
படப்பிடிப்பு தளத்தில் குஹன் அனைவரிடமும் விடை பெற்று கொள்வதும் ஒரு குறும்படமாக எடுக்கப்பட்டு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்பட்டது. பொதுவாக அவர்கள் இவ்வாறு எடுப்பதை இவ்வளவு சீக்கிரம் வெளியிடுவதில்லை. படம் வெளியாகும் வரை வைத்திருந்து அந்த நேரத்திற்கு வெளியிடுவது தான் வழக்கம், ஆனால் இது குஹனின் ஏற்பாடாக உடனடியாக கடை பரப்ப பட்டிருந்தது.
அதன்பின் அனைவரும் உணவகம் சென்று உணவை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டனர். இரவு பதினோரு மணிக்கு குஹன் குடும்பத்திற்கும், அஞ்சாநம்பிக்கும் விமானம் பதிவு செய்திருக்க, சரியாக அந்நேரம் ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பி விட்டனர்.
இருபது மணிநேர முழு பயணத்திலும், குஹன் பௌர்ணமியிடம் ஒருவார்த்தை பேசவில்லை. அவளும் அதை உணர்ந்து தானிருந்தாள். பிள்ளைகளும், நம்பியும் தான் இருவருக்கும் இடையில் பாலமாக இருந்தனர்.
அவன் பேசாததால் அவளாலும் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை, முந்தைய தின இரவு வரை நன்றாகத்தானே இருந்தான் என அவனை நினைத்து குழப்பி கொண்டிருந்தாள்.
இந்தியா வந்து, சென்னையில் அவர்கள் வீட்டில் நுழைகையில் விசாலாட்சி தான் முன் நின்று இருவரையும் வரவேற்றார். அவரையும் இருவரும் பெரிது படுத்தவில்லை, "வாங்க!" என்றதோடு அவர்கள் அறை சென்றுவிட்டனர். அவரும் பிள்ளைகளோடு ஐக்கியமாகி விட்டார்.
"இன்னைக்கு வீட்டுக்கு இன்கம்டாக்ஸ் ரைட் பண்ண ஆள் வர்றாங்க சித்து. உன் சைட் டாகுமெண்ட்ஸ் எல்லாம் க்ளியரா ரெடி பண்ணி வச்சுக்கோ" என அவ்வளவு நேரம் கழித்து அப்போது தான் பேசினான் குஹன்.
"ரைடா? என்ன திடீர்னு?"
"தெரியல. நீ மெயில் பாக்கலன்னு நினைக்கிறேன். டூ டேய்ஸ் முன்னவே வந்துருச்சு. அதான் நாம நேரா இந்தியா வந்துட்டோம்" என பேசினானே தவிர அவள் புறம் திரும்பவே இல்லை. கொண்டு வந்த பெட்டியில் இருந்து அனைத்தையும் அவன் கபோர்டில் எடுத்து அடுக்கி கொண்டும், அடுத்து ரைட் வருபவர்களுக்கு காட்ட தேவையான முக்கிய ஆவணங்களையும் எடுத்து வைப்பதுமாக தான் இருந்தான்.
"ஓ! அதான் நேத்து ஃபுல்லா அவ்வளவு சைலண்ட்டா இருந்தீங்களா? ரைட்ல எதுவும் பிரச்சினை வர்ற மாதிரி இருக்கா உங்க சைட்?" என்றாள் அவனையே பார்த்து நின்று.
"ம்கூம்!" என்றவன் செய்யும் வேலையை நிறுத்தி விட்டு அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான், மறுபடியும் தலையை அசைத்து, "ம்கூம்!" என்றுவிட்டு, பெட்டியிலிருந்து அவன் அன்று வாங்கிய அந்த வரைபடத்தை அவள் கையில் கொண்டு கொடுத்தான்.
அதை வாங்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு அருகில் இருந்த மேசையில் வைத்தாள். அதை தான் முதல் நாளே பார்த்து தேவையான அளவிற்கு யோசித்து விட்டாளே! அதனால் இப்போது தைரியமாக திரும்பி, "நம்ம டிவோர்ஸ் பத்தி என்ன முடிவு பண்ணிருக்கீங்க? கண்டிப்பா ஏதோ டிசைட் பண்ணிட்டீங்கன்னு தெரியுது. சொல்லுங்க நானும் ரெடியாகிக்குறேன்" என்றாள்.
"உன் மொபைல்ல பொக்கிஷமா சேஃப் பண்ணி வச்சுருக்கியே? அதெல்லாம் யார் அனுப்பினாங்க உனக்கு?" என கேட்டான்.
திடுக்கிட்டாலும் சமாளித்து, "என்னது என் ஃபோன்ல பாத்தீங்க? எப்ப எடுத்து பார்த்தீங்க?" என்றாள்.
"இதோ இதெல்லாம்?" என அவள் எண்ணிலிருந்து அவன் எண்ணிற்கு அன்று இரவு அனுப்பி வைத்ததை காட்டினான்.
இரு நொடி அமைதியாக நின்றாள், அவனும் அவளுக்கு நேரம் கொடுப்பவனாக அமைதியாகவே நின்றான்.
"ஏன் இதெல்லாம் எதுவுமே இல்லன்னு சொல்ல போறீங்களா?" என்றாள் வெகு நிதானமாக.
"நிச்சயமாடி. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை நமக்கு. நீ இதுக்காக தான் டிவோர்ஸ் அப்ளை பண்ணேன்னு சொல்லிடாத, நம்ம ஃபீல்டு என்னன்னு உனக்கு நல்லா தெரியும். கொன்றுவேன்" என விரல் நீட்டி மிரட்ட,