priya pandees
Moderator
அத்தியாயம் 12
குஹன், பௌர்ணமி சென்ற திசையை திரும்பி பார்த்து விட்டு, கையிலிருந்த விவாகரத்து படிவத்தை எரிச்சலோடு கட்டிலில் தூக்கி போட்டவன், "ரையிடுக்கு ரெடியா வா சித்து!" என அறை கதவை இழுத்து சாற்றி வெளியேறி விட, உள்ளே நின்றவள் அதைவிட அழுத்தமாக நின்றாள்.
அவன் அந்த ஆடியோ பதிவில் பேசிருப்பதை விட, 'இதெல்லாம் ஒரு விஷயம்னு டிவோர்ஸ் கேட்டியா நீ?' என சற்று முன் அலட்சியமாக கேட்டது அவளுக்கு இன்னும் எரிச்சலை தந்தது.
அவ்வளவு எளிதில் விவாகரத்து அவனிடம் வாங்கிவிட முடியும் என்றும் தோன்றவில்லை, ஆனால் அவனை அவன் பேசியதற்காக கொஞ்சமேனும் வருந்த செய்தே ஆகவேண்டும் என மட்டும் உள்ளுக்குள் வைராக்கியம் ஸ்திரம் பெற்றது. மறுபடியும் அவன் முன் அழுது கொண்டு நிற்க கூடாது என தன்னை தானே நிந்தித்து தீர்மானம் எடுத்தவள் வேகமாக குளித்து உடைமாற்றி வந்தாள்.
ஏற்கனவே அவள் அப்படித்தான், அவளுக்கு என கிடைக்கும் வெற்றி மற்றும் சந்தோஷங்களை கூட நிதானமாக ஆர்ப்பாட்டம் இன்றி பகிர்ந்து கொள்பவள், ஏதாவது பிரச்சினை என வரும்போது தானே சமாளிக்க வேண்டும் என அவனிடம் மூச்சு விடமாட்டாள். யார் மூலமாகவாவது அவனாக அறிந்து கொண்டால் மட்டுமே அவனுக்கு விஷயம் தெரியவரும்.
குறிப்பிட்ட அந்த பிரச்சினை குறித்து, "அது சால்வ் ஆகிடுச்சா சித்து?" என மட்டும் கேட்டுக் கொள்வான். அப்போது மட்டுமே, "உங்களுக்கு எப்படி தெரியும்?" என கேட்டு பிரச்சினை வந்த விதம் அதை தீர்த்த விதம் என பகிர்ந்து கொள்வாள், நேரமிருந்தால் நின்று கேட்பான், இல்லையானால், "சால்வ்ட் தானே? ஓகே சித்து" என அவன் வேலையை பார்க்கச் சென்று விடுவான். அவ்வாறு பாதி பேச்சில் செல்வது ஆரம்பத்தில் இருந்தே அவனிடம் அவளுக்கு பிடிக்காத விஷயங்களில் ஒன்று. ஆனால் இன்று வரை அதை அவனுக்கு அவள் தெரியப்படுத்தியதில்லை.
அவளாக சொல்லவில்லை தானே என்ற அலட்சியம் அவனுக்கு, இதற்கு இவர் கேட்காமலே இருக்கலாமே என்ற கடுப்பு அவளுக்கும் இருக்கும். ஆனால் அதை வெளிப்படுத்தாமல் அப்படியே கடந்து அடுத்த ஓட்டத்தை பிடிக்க சென்று விடுவர்.
பௌர்ணமி கிளம்பி வெளியே வந்தபோது, குஹனும், நம்பியும் அவர்கள் கோப்புகளை சரிபார்த்து எடுத்து வைத்து கொண்டிருந்தனர். அஞ்சாநம்பி விமான நிலையத்தில் இருந்து நேராக அவன் தங்கியிருந்த வீடு சென்று குளித்து கிளம்பி தயாராக வந்திருந்தான். அவனுக்கு விசாலாட்சி அங்கிருப்பது கண்டு நெஞ்சுவலி தான், அதற்காகவே அவரிடம் சிக்காமல் இருக்க எவ்வளவு சிக்கலான வேலையை கொடுத்தாலும் செய்து முடிக்கும் உத்வேகத்தில் நிமிராமல் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
விசாலாட்சி பிள்ளைகளோடும் உணவு தயாரிப்பதிலும் மும்மரமாக இருந்தார். தான் உள்ளே சென்று எதையாவது உளறி வைத்தால் இரண்டு பேரும் கண்டு கொள்வர் என தெரிந்ததால் அவர் ரைடு முடியும் வரை எதையும் கண்டு கொள்ளாதது போல இருக்கும் முடிவில் இருப்பது நம்பிக்கு தெரியாது பாவம்!
அடுத்த ஒரு மணி நேரத்தில் வருமான வரித்துறை ஆட்கள் நான்கு பேர் வந்துவிட, வேலை வேகமாக நடந்தது. பௌர்ணமியும் நந்தினியை அவள் உதவிக்கு வரவழைத்துக் கொண்டாள். குஹனோடதை இருவர் பார்க்க, பௌர்ணமியின் கணக்கு வழக்குகளை மற்ற இருவர் பார்த்தனர். வாங்கி வைத்திருந்த சொத்துகள், நகைகள், சேமிப்பு கணக்குகள் என அனைத்தும் கடை பரப்பப்பட விசாலாட்சி வாயை பிளந்து விட்டார். எல்லாவற்றையும் பொதுவாக இருவரின் பெயரில் தான் வாங்கியிருந்தனர்.
'என்னோட வருமானத்தில் வாங்கியவை, உன்னோட வருமானத்தில் வாங்கியவை' என இல்லாமல் பொதுவாக வாங்கியிருந்தனர்.
நிலனுக்கு அழைத்தவர், "டேய் நிலா. உன் அக்கா துணி தானடா தைக்குறதா சொன்னா? தையகூலி நிறைய வாங்குவாளாட்டம் இருக்குடா லட்சம் கோடின்னு கணக்கு காமிச்சுட்ருக்கா. அவனாவது பொம்பள பிள்ளைகளையும் ஆம்பள பிள்ளைகளையும் கட்டிபிடிக்க விட்டு படமெடுக்கான் அதனால நிறைய வாங்குதாம்னு சொல்லலாம். இவ துணி தைக்க இம்புட்டு வரும்னா நானும் ஒரு மிஷின வாங்கி போட்டு மிதிமிதின்னு மிதிச்சு தள்ளிருவேன்ல?" என்றார் குசும்பாக.
"அவங்க ரெண்டு பேரு வேலையையும் அசிங்க படுத்த வெளிய இருந்து யாரும் வரவேண்டாம் நீங்க ஒருத்தரே போதும். அவங்க அந்த வேலை எவ்வளவு விரும்பி செய்றாங்க நீங்க இப்படி பேசுறீங்க அத்த? அதான் ரெண்டு பேரும் உங்கட்ட மல்லுக்கு நிக்றாங்க"
"இல்லனா மட்டும் ரெண்டு பேருக்கும் வாயில விரல வச்சாலும் சப்ப தெரியாது. போடா"
"ம்ச் அத்த. மாமா அவர் வேலைலயும் அக்கா அவ வேலைலயும் சாதிச்சு அதிகம். எவ்வளவு அவார்ட்ஸ் வாங்கிருக்காங்க? பத்து வருஷத்துல அவங்க இந்த நிலைக்கு வந்ததுக்கு நாம சந்தோஷம் தான் படணும். திறமை இல்லாமலாம் இது சாத்தியம் இல்லை. நீங்க மிஷின எத்தன மிதி மிதிச்சாலும் எங்க அக்காவ மாதிரி ஒரு டிசைன வரஞ்சு உங்க பிள்ளைய ஓகே சொல்ல வைக்க முடியாது பாத்துக்கோங்க" என்றான் நிலனும் விட்டுக் கொடுக்காமல்.
"ரெண்டு பேரும் ஓடி ஓடி பணத்த தான் சேர்த்துருக்காங்கன்னு இப்பத்தான தெரியுது. உன் அக்கா ஹரிணியயும், கிருத்தியையும் கூட எப்படித்தான் உண்டானாளோ தெரியல"
"உங்கள வச்சுகிட்டு" என முனங்கியவன், "ஏன் அத்த எங்கிட்ட டிஸ்கஸ் பண்ற விஷயமா இது?"
"வேற யாருட்ட சொல்ல சொல்லுத?" என்றார் அவர் அதற்கும் சலிப்பாக.
"இப்ப எதுக்கு அங்க போய் உட்கார்ந்துருக்கீங்க நீங்க?"
"பிள்ளைகள் கூட்டிட்டு வரத்தான். அவங்க ரெண்டு பேரையும் தனியா விடணும்டா அப்பத்தான் ஒரு நல்ல முடிவுக்கு வருவாங்க"
"ம்க்கும் பிள்ளைக தொந்தரவும் இல்லன்னு, ரெண்டு பேரும் அவங்கவங்க வேலைய நிம்மதியா பார்க்க போயிட்டா என்ன பண்ணுவீங்க?"
"ம்கூம் அதுக்கும் விடக்கூடாது. நாலு செவுத்துக்குள்ள போட்டு வேற எந்த மூஞ்சியையும் பாக்க விடாம ரெண்டு நாள் அடச்சு வச்சா போதும். வழிக்கு வந்துரும் ரெண்டும்"
"அம்மாடி அடச்சு வைக்க சின்ன பிள்ளைங்களா அவங்க?"
"பெரிய ஆளுங்க மாதிரி அவங்களும் நடந்துக்கணும்ல?"
"புதுசா புதுசா யோசிக்காம பெரியவங்க எல்லாருமா சேர்ந்து, ரெண்டு பேரையும் பிடிச்சு உட்கார வச்சு பேசுங்க. அவங்களையும் பேசி சமாதானம் ஆக சொல்லுங்க" என நிலன் சொல்ல,
"அப்பத்தா!" என இரு பிள்ளைகளும் அந்நேரம் ஓடி வந்துவிட, "அப்றம் கூப்புடுறேன்டா நிலா!" என வைத்துவிட்டார்.
"மறுபடியுமா!" என அதிர்ந்து தான் அவன் வேலையை பார்க்கச் சென்றான் நிலன்.
அங்கு வருமான வரித்துறையிலிருந்து வந்தவர்கள், கணக்கில் வராமல் இருந்த சிலவற்றை மட்டும் சுட்டி காண்பித்து, அதற்கான காரணத்தை இரண்டு நாட்களில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டு, ஒத்துழைப்பிற்கும் நன்றி கூறி விடைபெற்றனர். அந்த சிலவைகளும் கூட படத்தின் வெற்றிக்கென என அவனது தயாரிப்பாளர்கள் அளித்த பரிசுகள் தான். அதற்கான வரியை குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் தான் செலுத்தியிருக்க வேண்டும் ஆனால் பரிசுகளாக வந்த காரும், நிலங்களும், இவன் பெயரில் இருப்பதால் இவனிடம் தான் வரித்துறையினர் கேள்வி கேட்க முடியும். கேட்டுவிட்டு பதில் தரவும் கெடு கொடுத்து கிளம்பினர்.
"கம்ப்ளைண்ட் பண்ணது யாருன்னு சொல்ல முடியுமா? அஃபிசியலா கூட நீங்க அது யாருன்னு சொன்னா போதும்" என பௌர்ணமி தான் கிளம்பியவர்களை நிறுத்திக் கேட்டாள்.
"இல்ல மேடம் வந்த கம்ப்ளைண்ட் அன்னஃபிசியலா வந்தது தான். எங்களுக்கும் யார் கொடுத்தான்னு தெரியாது. பட் எப்படி வந்தாலும் விசாரிக்க வேண்டியது எங்க வேலை. அதான் நாங்க வந்தோம்" என்றனர்.
"ஓகே சார்" என முடித்து கொண்டாள். அவளுக்கு அந்த புது எதிரி யார் என தெரியவேண்டி இருந்தது. நிலனிடம் அவன் நண்பன் மூலம் விசாரித்து பார்க்கலாம் என அப்போதைக்கு அமைதியாகி போனாள்.
அன்று மாலை வரை இதில் சென்றிருக்க, அத்தோடு இரண்டு நாட்கள் வலுக்கட்டாய விடுமுறை பெற்றுக் கொண்டு மனைவியை பார்க்க விசாலாட்சி கண்ணிலேயே படாமல் கிளம்பி ஓடியிருந்தான் அஞ்சாநம்பி.
எல்லாம் முடித்து, பௌர்ணமியும், குஹனும் தளர்ந்து அமர்ந்திருக்க, இருவருக்கும் டீயை கொண்டு வைத்துவிட்டு தொண்டையை செருமி காண்பித்தார் விசாலாட்சி.
"சொல்லுங்கத்த!" என பௌர்ணமி கேட்க, சாவகாசமாக டீயை எடுத்துக் கொண்டு ஒரு காலை மடக்கி நிமிர்ந்து அமர்ந்தான் குஹன்.
"பிள்ளைகளுக்கு லீவு தானே? நா ரெண்டு பேரையும் கோயம்புத்தூர் கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்"
"ரெண்டு பேருமே இருந்துக்க மாட்டாங்க அத்த. எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் கூட இருக்கணும். இல்லனா சமாளிக்க கஷ்டம்" என நேரடியாகவே மறுத்தாள் பௌர்ணமி.
"ஏன் பின்ன என்னைக்கு தான் பழகுறது? அங்கன விளையாட பிள்ளைக இருக்கையில விட்டா என்ன? ஒருநா ரெண்டு நா அழுதாலும் பழகிடுங்க. நா கூட்டிட்டு போறேன்" என்றார் அதட்டலுடன்.
"உனக்கே வேலை பாக்க ஒரு ஆள் வேணும். நீ இவங்களையும் கூட்டிட்டு போய் என்ன செய்யலாம்னு இருக்க? அங்க அண்ணிகிட்ட ஏதாவது சண்டை இழுக்கணுமா உனக்கு?" என்றான் குஹன்.
"எவ்வளவு சண்டை போட்டாலும் மறுபடியும் சேர்ந்துக்க எங்களுக்கு தெரியும் வெட்டிகிட்டு போக நினைக்க மாட்டோம்" என்றார் அவரும் முறைப்புடன்.
"என்னால பிள்ளைகள விட்டுட்டு இருக்க முடியாது அத்த. எனக்கு அவங்க கூட இருக்கணும் இப்படி சொன்னா ஓகே தானே உங்களுக்கு?" என்றாள் பௌர்ணமி.
"அம்மாடி தாரகை உனக்கு இந்த பிள்ளைகள விட எதுல நாட்டம் அதிகம்னு நம்ம குடும்பத்துக்கே தெரியும். சும்மா அவங்கூட சேர்ந்து நடிக்குற வேலைய விட்டுட்டு தையல் வேலையவே போய் பாரு. இனி கிடைச்ச இடத்துல வாழ பழகட்டும் அந்த பிள்ளைங்க"
"ஏன் நா நாளைக்கே சாகவா போறேன்? அப்படி போயிட்டேனா கூட சந்தோஷமா கூட்டிட்டு போய் வச்சு பாருங்க" என்றாள் இவளும் வெடுக்கென்று.
"சிலுப்பட்ட. அப்படியே வாயில போட்டேன்னா தெரியும். படிச்ச திமிருலையும் வேலை பாக்குற ஆணவத்துலயும் இந்த மாதிரிலாம் என்ட்ட பேசிட்டு திரியாத சொல்லிட்டேன். ஒட்டா நறுக்க முடி கூட கிடையாது உன்ட்ட. சும்மா என்ன சீண்டிவிட்டு பார்க்காத சொல்லிட்டேன்" என கத்தி விட்டார்.
அருகில் அமர்ந்திருந்த அவர் பெற்ற மகனை திரும்பி பார்க்க, இருவரையும் வேடிக்கைப் பார்த்தவாறு டீயை இன்னும் பருகி கொண்டிருந்தான் அவன்.
பல்லை கடித்தவர், அவன் கையிருந்த டீ டம்ப்ளரை பிடிங்கி கொண்டு, "இந்த சிலுப்பட்ட தான் வேணும்னு நின்னு கட்டுனல்ல? அவ உன்ன பெத்தவட்ட எவ்வளவு திமிரா பேசுறான்னு உட்கார்ந்து ரசிக்கியோ? இப்ப நீ அவள ஏன்டின்னு கேட்கணும். கேளு!" என்றார் அதட்டலுடன்.
"அவ அல்ரெடி எல்லாம் ப்ளானா தான் இருக்கா. இனி எல்லாம் உன் இஷ்டந்தான். அடுத்த கல்யாணத்துக்கு வேணா நீயே பொண்ணு பாரு. கட்டிக்கிறேன்" என்றவன் இன்னும் சாய்ந்து அமர்ந்து கண்ணை மூடிக்கொள்ள, மூச்சு வாங்க முறைத்தார் விசாலாட்சி.
"யார் பேச்சையும் நா கேட்குற மாதிரி இல்ல அத்த. நா தெளிவா சொல்றேன். எனக்கு உங்க பையன்ட்ட இருந்து டிவோர்ஸ் வேணும். என் பிள்ளைங்கள எனக்கு பார்த்துக்க தெரியும் இவங்களால முடிஞ்சா அவங்க ஆசைபட்டா ஹரிணிக்கும் கிருத்திற்கும் என்ன வேணா செய்யட்டும் நா தடுக்க மாட்டேன்"
பட்டென்று கண்ணை திறந்து எழுந்தவன், "நீ என்னடி தடுக்குறது? டிவோர்ஸ் வேணும் கேட்குற நீ போ தனியா போ எங்க வேணாலும் போ. நா என் பசங்களோட தான் இருப்பேன்" என்றான் குஹன் திமிராக.
"அவங்க வேலைல அது பாஸிபில் இல்லன்னு அவங்களுக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்ல அத்த?" என பௌர்ணமி விசாலாட்சியிடம் பேச,
"ரெண்டு பேர் மண்டைலயும் எதையாவது தூக்கி போட்டுட்டு நா கூட்டிட்டு போறேன் பிள்ளைங்கள" என்றார் விசாலாட்சி.
வெளியில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் இருவரும் இவர்கள் சத்தத்தில் உள்ளே ஓடி வந்திருந்தனர்.
"சண்டை போடுறாங்க" என்ற கிருத்தி, "அப்பத்தா!" என அழைத்து கொண்டு பௌர்ணமியிடம் ஓடி வந்து நின்றவன், "அப்பாவையும் அம்மாவையும் ஏன் திட்றீங்க?" என அவரின் எதிரில் முறைத்துப் பார்த்து நின்றான்.
"அப்பா அம்மா நம்ம எதாவது மிஸ்டேக் பண்ணா நம்மள திட்றாங்க தானே, லைக் தேட் அப்பத்தா, மாம், டாட்ட திட்றாங்க. இத நாம கொஸ்டீன் பண்ண முடியாது கிருத்தி" என தானும் பெரியவர்கள் நடுவில் வந்து நின்றாள் ஹரிணி.
"ஆமாவாம்மா?" என கிருத்தி நிமிர்ந்து பௌர்ணமியை கேட்க, "எஸ்!" என தலையை அசைத்தாள் பௌர்ணமி.
"அப்ப நீங்க ரெண்டு பேரும் என்ன தப்பு செஞ்சீங்க?" என்றான் அடுத்த கேள்வியாக.
"இனிதான் செய்ய போறாங்க. முடிஞ்சா செய்ய விடாம செய்யிடா நீயி" என்றார் விசாலாட்சி.
"செய்ய முன்னவே வார்ன் பண்றீங்களா நீங்க?" என்றாள் ஹரிணி.
"ஆமா உங்க அப்பாவும் அம்மாவும் டிவோர்ஸ் பண்ணிக்க போறாங்களாம். பண்ணிட்டு ஆளுக்கொரு திசைக்கு போயிட்டா உங்க ரெண்டு பேரையும் நாந்தான பார்த்துக்கணும். அப்பத்தாட்ட வர்றீங்களா? கோயம்புத்தூர் போயிடலாம்? இவங்க என்னமு செய்யட்டும்" என்றார் பட்டென்று.
"இல்லன்னு சொன்னீங்களே ப்பா?" என குழப்பமாக ஹரிணி குஹனை பார்த்தாள்.
"நா யாரையும் டிவோர்ஸ் பண்ற ஐடியால இல்லடா ஹரிணி" என்றவன் பௌர்ணமியை தான் உறுத்து விழித்தான்.
"அப்பத்தா, அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கிறாங்களா? அதான் நீங்க திட்றீங்களா? ரெண்டு பேரும் அங்க ஸ்காட்லாண்ட்ல இருக்கும் போதிருந்தே இப்படிதான் எஸ், நோ சொல்லி விளையாடுறாங்க. இவங்க டிவோர்ஸ் பண்றாங்களா இல்லையா?"
"விட்டா நீயே பண்ண சொல்லுவ போல கண்ணு? அதெல்லாம் பண்ண கூடாது. அது கெட்ட வார்த்தைன்னு சொல்லி பழகணும்"
"இது பேட் வேர்டா?"
"ஆமா பின்ன? அப்பாவும் அம்மாவும் தனிதனியா போயிட்டா நீயும் கிருத்தியும் ஆரு கூட இருப்பீங்க? நாலு பேரும் சேர்ந்து இருந்தா தானே அது குடும்பம்?" என்றார் அவளிடம்.
"அப்பாவும் அம்மாவும் எங்க போனாலும் வீ ஆர் ஃபேமிலி அப்பத்தா. எங்கட்ட ப்ராப்பர் ரீசன் சொல்லிட்டு அவங்க தனித்தனியா இருக்கலாம். அது அவங்க இஷ்டம் தானே? தனித்தனியா போக என்னப்பா ரீசன்?" ஹரிணி பேச பேச, விசாலாட்சி நெஞ்சில் கைவைத்தார் என்றால், பௌர்ணமியும் குஹனும் அசந்து தான் நின்றனர்.
எவ்வளவு தெளிவாக கூறுகிறாள், இருவரும் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அவர்கள் நால்வரும் தான் குடும்பம் என்பது என்றும் மாறாது. விவாகரத்து என்பது தாளுக்கு தான், வேறொரு வாழ்க்கையை தேடிக்கொள்வதும் அவரவர் உடல் மற்றும் மன தேவைக்குத்தான், ஆனால் இவர்கள் நால்வருக்குள் உருவான பந்தம் என்றும் மாறாது. இவர்களாலும் மாற்ற இயலாது, யாரும் நடுவில் வந்தாலும் மாற்றம் கொள்ளாது.
"அப்பாக்கு வேணாம்னு சொல்றாங்க. அப்ப உங்களுக்கு தான் வேணுமா ம்மா?" என்றாள் நேராக பௌர்ணமியிடம்.
ஆழ்ந்த மூச்செடுத்தாலும், "ஆமா ஹரிணி" என்க,
"வை ம்மா?"
"அப்பாக்கும் அம்மாக்கும் சில டேர்ம்ஸ் சரியா செட்டாகி வரல பாப்பா"
"டேர்ம்ஸ்னா?" யோசித்தவாறு மூவரையும் திரும்பி பார்த்தாள், கிருத்தி அங்கிருந்த ரீமோட் காரில் எதையோ பிரித்தெடுக்கும் முயற்சியில் இறங்கியிருந்தான்.
விசாலாட்சி, "என்ன ரெண்டு பேரும் முழிச்சுட்டு நிக்றீங்க? பதில் சொல்லுங்க. பெத்தவங்க கூட பிறந்தவங்க எல்லாரையும் தான் யாரோ எவரோன்னு மதிக்குறதில்ல, பதில் சொல்லவும் பொறுமை இல்லை. ஆனா இப்ப கேட்டு நிக்றது நீங்க பெத்த பிள்ளை. பத்து வயசு பிள்ளைக்கு மணமுறிவுனா என்ன அதனால என்னலாம் பின்விளைவுகள் வரும்னு புரியுற மாதிரி எடுத்து சொல்லிட்டு டிவோர்ஸ் வாங்கிட்டு போங்க" என்றவர், அவர் வந்தால் தங்கும் அறைக்கு சென்று கைபேசியை எடுத்து கொண்டு வெளியே வந்தவாறு, "நமக்கு தான் பிள்ளைகள் வளர்க்க தெரியல காந்தி. அதுக வளர்க்க பிள்ளைக நல்லாத்தான் வளருதுன்னு நினைக்கேன். மகளே கேள்வி கேட்கா நாம வேற எதுக்கு மூச்ச தொலைக்கணுங்கேன். அவுகளாச்சு அவுக பிள்ளையாச்சு" என பேசிக்கொண்டே அவர் போக்கில் மாடியேறிவிட்டார். காந்திமதியிடம் தான் இவர்களை சாடையாக பேசி செல்கிறார் என குஹன், பௌர்ணமி இருவருக்கும் புரிந்தது.
"அப்பத்தா நானும் வரேன்" என கிருத்தி பின்னரே ஓடுவதையும், மூவரும் பார்த்து நின்றனர்.
"என்னாச்சு? நா ராங் கொஸ்டீன் எதுவும் கேட்கிறேனா? நீங்க பிரிய போறீங்கனா ஐ நீட் டு நோ ரைட்? என்ட்ட யார் கேட்டாலும், நா என் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி குனிஞ்சு, அழுதுட்டு, ஷையா ஃபீல் பண்ணி நிக்க கூடாது ம்மா. ஐ ஹேட் தேட். அவங்க அப்படி நிக்கும் போது பாக்கவே ஒருமாதிரி இருக்கும். ஏதோ ஃபெயில் ரேங் எடுத்து அவுட் ஆஃப் க்ளாஸ்ல நிக்ற மாதிரி. நீங்க என்ன செஞ்சாலும் நா ஸ்ட்ராங்கா நிக்கணும், என்ட்ட கேட்குறவங்களுக்கு ஆன்ஸர் குடுக்கணும், என்னோட விஷ் அது மட்டுந்தான்" என சாதாரணமாக சொல்லி முடித்து விட்டாள்.
"ம்கூம்!" பௌர்ணமியால் முடியவில்லை. நீள்விருக்கையில் தலையை தாழ்த்தி அமர்ந்துவிட்டாள்.
"ம்மா!" என ஹரிணி பௌர்ணமியை நெருங்க போக, "ஹரிணி!" என அவளை தன்னோடு இழுத்து கொண்டான் குஹன்.
"அம்மா அழுறாங்களா ப்பா?"
"அம்மா ஸ்டராங்க் லேடின்னு உனக்கு தெரியாதா? நம்ம முன்னாடிலாம் அழ மாட்டாங்கடா" என்றான் அதற்கும்.
"அம்மா!" என அவன் கைக்குள் நின்றே பௌர்ணமியை அழைத்தாள்.
"அம்மாக்கு டயர்டா இருக்குடா ஹரிணி. எனக்கு டூ டேய்ஸ் டைம் குடுக்கிறியா நா உனக்கு ரீசன் தரேன்" என்றாள் உண்மையில் அயர்ந்து.
"ஓகேம்மா" என உடனே தலையசைத்து விட்டாள் மகள். பௌர்ணமியும் விறுவிறுவென எழுந்து அறை புகுந்து கொண்டாள்.
இரவு உணவிற்கும் பௌர்ணமி வெளியே வரவில்லை, விசாலாட்சி, "அந்த சிலுப்பியலாம் போய் என்னால தாங்கி தடுக்க முடியாது. எந்துச்சு வந்தாலும், பொங்கல்ல எதுக்கு இவ்வளவு நெய்யி, சட்னில எதுக்கு இவ்வளவு கடுகு, கருவேப்பிலை, சாம்பார்ல எதுக்கு இம்புட்டு உப்புன்னு, அழகு பார்த்தே எல்லாரையும் சாப்பிட விடாம ஆக்குவா. அதனால அவ வரும் முன்ன நாங்க சாப்பிட்டு தூங்க போறோம். உன்னால முடிஞ்சா அவள நீயே சாப்பிட வச்சுக்கோ" என்றவர் பிள்ளைகள் இருவருக்கும் சாப்பாடை ஊட்டி, "அப்பத்தா கூட படுக்க வாங்க கண்ணுகளா!" என தூங்குவதற்கு அவரோடு அழைத்துச் சென்றிருந்தார்.
குஹனும், கூப்பிட்டாலும் நிச்சயம் வரமாட்டாள் என்ற எண்ணத்தோடு, தான் சாப்பிட அமர்ந்து விட்டான், ஆனால் இரண்டு வாய் கூட வைக்க முடியாது போக, கையை கழுவி கொண்டு எழுந்து அவளை தேடிச் சென்றான்.
கட்டிலில் அவன் போட்ட விவாகரத்து பத்திரம் அதே இடத்தில் காற்றில் பறந்து கொண்டு கிடக்க, மறுபக்கத்தில் சுருண்டு படுத்திருந்தாள் பௌர்ணமி.
"சித்து!" என வாசலில் நின்றே அழைத்தான், திரும்பவில்லை அவள்.