எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 18

வான்மழை 18:

வருணாவிற்கு தாலி பிரித்துக் கோர்த்து இரண்டொரு நாள் கழிந்திருக்கு, மிச்சமிருந்த சொந்தங்கள் அனைத்தும், மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு கிளம்பியிருந்தனர். அதில் சுபாவின் தாயும் அடக்கம்.

மேகலாவும், இன்று கிளம்புவதாக இருந்தாள்.

“ஏன் அண்ணி, சேந்தாப்புல ஞாயித்துக்கிழமை போக கூடாதா?. இன்னும் இரண்டு நாளு தானே இடையில இருக்கு.” மேகலா துணியை பேக் செய்துக் கொண்டிருக்க, அவளிற்கு உதவியபடியே, வருணா கேட்க,

“இதுவே, ரொம்ப அதிகம் வருணா, இதுக்கு மேலேயும் பாரதிக்கு ஸ்கூல்ல லீவ் சொல்ல முடியாது. அதோடு அங்க என் அத்தை இவ்வளவு நாள் எதுவும் சொல்லாம இருந்ததே அதிசயம் தான். அவுங்க அமைதியா இருக்காங்கன்றதுக்காக, நானும் ரொம்ப பண்ணக் கூடாதில்லையா?

இப்போ என்ன? நல்லபடியா விசேசம் முடிஞ்சிடுச்சு, உனக்கு தாலி பிரிச்சும் கோர்த்தாச்சு, இனி அடுத்த லீவுக்கு வரோம் அவ்வளவுதான!”

“சரி அண்ணி, அடுத்த லீவ் விட்ட பாரதிய கூட்டிட்டு வந்திடுங்க.”

“இதை நீ சொல்லனும்மா என்ன? சரி நீ உங்கம்மா வீட்டுக்கு எப்போ கிளம்புற?”

“நாளைக்கு காலையில உங்க தம்பி காலேஜ்ஜூக்கு போறப்ப கொண்டுப் போய் விடுறேன்னு சொல்லிருக்காருண்ணி!”

“அதுசரி வெளியூர் ஏதும் போக ப்ளான் பண்ணிருக்கீங்களா?”

“இப்போதைக்கு இல்லைண்ணி, அவருக்கு எக்ஸாம்ஸ் ஆரம்பிக்கிறாதால,‌லீவ்ல போகலாம்னு விட்டுடோம்.”

“சரி வருணா, தோது பாத்துக்கோங்க, தம்பிக்கிட்ட சொல்லிருக்கேன் விருந்துக்கு வர்றதுக்கு, ரெண்டுபேருக்கும் நேரம் பாத்துட்டு சொல்லுங்க, எங்கத்தை விருந்துக்கு அழைப்பாங்க.” என பேசிக் கொண்டிருக்கும் போதே,

“மேகலா எல்லாம் ரெடியா, அப்பா வந்துட்டாரு.” என்றபடி முத்துப்பேச்சி வர,

“ரெடிம்மா, கிளம்பிட்டேன்.” என்றபடி பைகளை எடுத்துக் கொண்டு அவள் வர, அவள் பின்னேயே வருணாவும் இரண்டு கைப்பைகளை தூக்கிக் கொண்டு வந்தாள்.

“போகலாமாடா மேகலா, பாரதி” என்றபடி மகாலிங்கம் வர,

“ம்ம் இதோ ப்பா, பரணி வரலையா ப்பா?”

“கடையில‌ கூட்டம் அதிகமாக இருக்குடா, அதான் பரணி போன்ல பேசுவேன் சொல்லுச்சு.”

“சரிப்பா, நான் பரணிகிட்டயும், முகில்கிட்டயும் போன்ல பேசிக்கிறேன்.”
என்றபடி அனைவரிடமும் விடைபெற்று சென்றாள் மேகலா.

அவளை‌ வழியனுப்பி விட்டு பெண்கள் மூவரும் உள்ளே வர,

“வருணா, முகிலன் வந்ததும் உன் நகையெல்லாம கொண்டுப் போய் பேங்ல வச்சிட்டு வந்திடுங்க.” என முத்துப்பேச்சி கூற,

“சரிங்கத்தை, அவரு இன்னைக்கு மத்தியத்துக்கு மேல வந்திடுவேன்னு சொன்னாரு.போய்ட்டு வந்திடுறோம்.” என்றாள்,

அடுத்து பெண்கள் மூவரும் சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு, மதிய சமையலுக்கு ஆயுத்தமாயினர். வருணா அவர்களுக்கு தேவையான சிறுசிறு உதவிகளை செய்துவிட்டு தங்களறைக்கு சென்றவள், நகைகளை பிரிந்து அடுக்கலானாள்.

“வருணா!” என்ற‌ பேச்சியின் அழைப்பில்,

“இதோ வரேன்த்தை!” என்றபடி அவள் அடுக்களை செல்ல,

“சாப்பிடலாம் வா!” என்றவர் அழைக்க,

“சரிங்கத்தை!” என்றபடி பாத்திரங்களை எடுத்து ஹாலில் வைக்க உதவினாள்.

பெண்கள் மூவரும் இருந்தாலும், சாப்பாட்டு நேரம் அமைதியாகவே கழிய,

“சாத்வி குட்டி எங்கக்கா?” அமைதியை விரும்பாது அவள் கேட்க,

“தூங்கிட்டுருக்க!” ஒற்றை வரியில் பதிலளித்த மூத்த மருமகளை‌ யோசனையுடன் பார்த்தார் பேச்சி.

அதன் பின் வருணாவுக்கும் பேச‌ தோன்றாதுப் போக, அமைதியாகி விட்டாள்.

அவர்கள் உண்டு முடிக்கும் நேரம், மகாலிங்கத்திற்கும், பரணிக்கும் மதிய உணவை வாங்கி செல்ல, கடைப்பையன் ஒருவன் வர,
அவனிடம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த உணவு‌ கூடையை கொடுத்தனுப்பினர்.

பின் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு, ஒரு குட்டி தூக்கம் போட
முகிலன் வந்திருந்தான்.

“வருணா! ரெடியா போகலாமா!” குரல் கொடுத்தப்படியே அவன் வர,

“ரெடிங்க, சாப்பிட்டிங்களா நீங்க?” தன் முன் சிரிப்புடன் நின்றிருந்த மனையாளைக் கண்டதும் அவனது இதழ்களிலும் புன்னகை பூத்திட,

“வந்து சாப்பிட்டுக்கிறேன். பேங்க் டைம் முடியறதுக்குள்ள போனால்தான் உண்டு.” என்றவன் அவசரப்படுத்த,

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனிற்கான‌‌ உணவினை தட்டில் இட்டு எடுத்தே வந்திருந்தார் பேச்சி.

“ரெண்டு வாய் அள்ளி போட்டு போப்பா, வருணா, அவன் சாப்பிடுறதுக்குள்ள நீ போய் நகை பையை எடுத்துட்டு வந்திடு.” என்ற பேச்சியின் சொல்படி, அவளறைக்கு செல்ல, அதற்குள் இவன் உண்டு முடித்திருந்தான்.

“போகலாமா வருணா, நகை எல்லாம் கரெக்ட்டா எடுத்துக்கிட்டியா?” முகிலன் கேட்டிட,

“எடுத்துட்டேன்ங்க” என்றவள் கிளம்பும் நேரம், சுபாவும் அவளின் அறையில் இருந்து வர, அவளை கண்ட வருணா,

“பேங்க் வரை போய்ட்டு வரோம் அக்கா, நகை எல்லாம் லாக்கர்ல வச்சிட்டு வரோம்.” என்றவள், எதார்த்தமாக

“உங்க நகை ஏதும் வைக்கணுமா அக்கா, கொடுத்தீங்கன்னா சேர்த்து கூட வச்சிட்டு வரோம்.” என்றவள் அறியாமையில் வாய் விட, நொடியில் அவள் முகம் மாறிவிட்டது.

அவளின் முகமாற்றத்தைக் கண்ட பேச்சி,
“சுபாவோடது எல்லாம் பரணியோட லாக்கர்ல இருக்கும்மா, நீங்க சீக்கிரம் கிளம்புங்க பேங்க் மூடிட போறான்.” என்றவர் அவளை அங்கிருந்து கிளப்ப முனைந்தவர், முகிலனிற்கு கண் காட்ட,

“வா வருணாக்ஷி கிளம்பலாம்.” என்றபடி கையோடு இழுத்து சென்றுவிட்டான் அவளை.

“சுபா!” என்றபடி தன் தோள் தொட்ட மாமியாரை கண்டு முகத்தை இயல்பாக்கியவள்,

“என்னத்தை? பாப்பாக்கு ஊட்ட போறேன் ஏதும் வேணுமாத்தை?” என்றவள் கேட்டிட,

அவளின் இயல்பான பேச்சுவார்த்தை கண்டு நிம்மதியுற்றவர்,
“ஒண்ணும் இல்லை சுபா, பால்காரர் வந்தா பால் வாங்கி வச்சிடு, நான் செத்த கண்ணசுருறேன்.” என்றபடி அவர் நகர்ந்து விட,

குழந்தைக்கு உணவு எடுத்தவளின் மனம் எங்கும் வருணா பேசியவையே வலம் வந்து அவளை இம்சித்தது.

‘என்கிட்ட நகை இல்லைன்னு வேணும்னே‌ தெரிஞ்சு கேட்டுருப்பாளோ?’

‘ஆனா அவளுக்கு தான்‌ என் நகைப் பத்தி எதுவும் தெரியாதே.’

‘ஒருவேளை முகிலன் சொல்லிருப்பாரோ.’

‘இருக்காது, ஒருவேளை இருந்தா, பொண்டாட்டிக்கிட்ட சொல்லியிருந்தா, அதை வச்சு தான் இவ நம்மளை நக்கல் பண்ணிட்டு போறாளே!’ என‌ கண்டபடி அவளின் மனம் யோசிக்க ஆரம்பித்தது.

‘பேசாமா அம்மாக்கிட்ட சொல்லுவோமா, இவ கேட்டதை, இல்லை இல்லை வேண்டாம் இந்தம்மா நம்மளை தான்‌ போட்டு படுத்தும். அன்னைக்கு சாப்பாட்டு விசயத்துல, பேசுனதுக்கே இல்லாத திட்டெல்லாம் வாங்கினேன் வேண்டாம் வேண்டாம்.’ என‌ அவள்‌ அலறும் படி தான் இருந்தது வள்ளியம்மையின் போதனைகள் அனைத்தும்.

அவர் கிளம்புகின்ற வரையிலுமே, அவருடைய வேண்டாத எண்ணங்கள் அனைத்தையும் இவள் தலையில் தான் திணித்திருந்தார்.‌ அவர் பேசிய பேச்சிலே, உணவு விசயத்தில் சுபா பேசியது தவறு என அவளையே நம்ம வைத்திருந்தார்.

அவரின் அந்த போதனைகள் தான் இப்போது சுபா வருணாவை பற்றி சிந்திப்பதற்கு முழுமுதல் காரணமாகும்.

அதற்கு மேல் அவளை சிந்திக்க விடாது குழந்தையின் அழுகுரல் தடுத்திட, வேகமாக‌ குழந்தையிடம் சென்றாள்.

இங்கே, பேங்க் மூடுவதற்குள்‌ வந்துவிட்ட கணவன், மனைவி இருவரும், நகைகளை‌ உரிய லாக்கரில் வைத்திருந்தனர்.

பேங்கை விட்டு வெளியே வந்தவர்கள், அருகிலிருந்த ஐஸ்கீரிம்‌ கடைக்கு சென்றனர்.

“வருணாக்ஷி உனக்கு என்ன ப்ளேவர்?” தன்னருகே அமர்ந்திருந்த மனையாளை கண்டு அவன் கேட்டிட,

“பஃட்டர் ஸ்காச், உங்களுக்கு?”

“ம்ம்ம் வெண்ணிலா” என சிறு சிரிப்புடன் கூறியவன், வெய்டரிடம் தங்களது ஆர்டர்களை கூறினான்.

வேலையாள் அங்கிருந்து நகர்ந்ததும், டேபிளில் மீதுருந்த வருணாக்ஷியின் கரங்களுடன், தனது விரல்களை இறுக்கமாக கோர்த்து அவளை தன்பக்கம் இழுக்க,

அவனது இழுப்புக்கு சென்றவள்,
‘என்ன?’ புருவம் உயர்த்தி வினவ,

“ம்க்கும் நீ ஓகே தானே?” அவன் மெல்லமாய் வினவ,

“என்ன‌ ஓகே தான?”

“இல்லை, அது வந்து என்கூட.. நான்…‌உனக்கு…கஷ்டமில்லையே?” என‌ திக்கி திணறி அவனுடனான வாழ்க்கை ஆரம்பித்ததை அவன்‌ தயங்கி திணறி‌ கேட்டிட,

அவனது திணறலை ரகசியமாய் ரசித்தவளுக்கு விடயம் புரிந்துவிட,
அவன் கரங்களை பதிலுக்கு இறுக்கமாய் பற்றி,
“ஓகே தான், கஷ்டமில்லை.” என மெதுவாய் அவள் கிசுகிசுக்க,

அதில் அவனிற்கு வெட்கம் வர, திணறி அவன் மறைக்க முயன்ற புன்னகை அழகாய் வெளிப்பட்டது அவனது இதழ்களில்.

வெய்டர் வந்ததும், நேராய் நிமிர்ந்து அமர்ந்தவன்‌ தனக்கானதை உண்ண ஆரம்பிக்க,

“ஹலோ மிஸ்டர்.புருசரே! என் கையை விட்டிங்கன்னா நானும் ஐஸ்கீரிம் உருகிடறக்குள்ள சாப்பிட்டுட்டுவேன்.” என அவள்‌ கிண்டலாய் கூற,

அப்போது தான்‌ அவள்‌ கையை பிடித்திருப்பதை உணர்ந்து, பட்டென கையை எடுத்தவன்,
“சரி, சரி சீக்கிரம் சாப்பிடு.” அவள் முகத்தை பாராது அவன் பேசிட,

அவன் முகம் முன் கைகளில் ஐஸ்கீரிமுடன் நீண்டது அவளது விரல்கள்.

அவளது விரல்களையும், சுற்றியிருப்பவர்களையும் பார்த்துவிட்டு அழுத்தமாய் அவளை அவன் பார்க்க,

அவனின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவள்,
“ப்ளீஸ்ங்க, இப்போ மட்டும் தான் இந்த மாதிரி விசயத்தை எல்லாம் என்ஜாய் பண்ண முடியும். கொஞ்ச மாசாமாகிடுச்சுன்னா நம்மளே இதையெல்லாம் அவாய்ட் பண்ணிடுவோம்.” என,

“ப்ச்! இது என்ன சின்னபுள்ளைத்தனமா வருணாக்ஷி!” லேசாய் அவன் அதட்டிட,

“எனக்காக, பீளீஸ் இந்த ஒருவாட்டி மட்டும்.” அவள் கெஞ்சிட, இரக்கமின்றி மறுத்தவன்,

“பொது இடத்துல இருக்கோம் வருணாக்ஷி, அதுக்கேத்த மாதிரி நடந்துக்கனும். யாரோட பார்வையும் நம்ம‌ மேல ரசனையாவே, நக்கலாவோ பதிய கூடாது. தேவையில்லாம நம்மை வச்சு ஒரே சீன் உருவாகுறதை நான் விரும்பலை. நீ சாப்பிடு.” என கட்டளையாய் அவன் கூறிவிட்டு அவனதை அவன் உண்ண ஆர்மபிக்க,

‘ஏன், கொஞ்ச நேரத்துக்கு முன்ன என் கையை பிடிச்சுப்போ தெரியலையா இது பப்ளிக் ப்ளேஸ்னு’ என உள்ளுக்குள் சுணங்கிட,

“இயல்பா கையை பிடிக்கிறதுக்கும், ஊட்டி விடுறதுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு வருணாக்ஷி!” அவனது எண்ணவோட்டத்தை கணித்து அவன் கூற,

அவனது கூற்றில் இருந்து உண்மையில் வாய்மூடி மெளனியானாள் அவள்.

இருவரும் கிளம்பும் நேரம்,
“சாத்வி குட்டிக்கும் வாங்கிட்டு போகலாம்.” என அவள் கூற,

“சரி நீ போய் வெளியே இரு, நான் பில் கட்டிட்டு வாங்கிட்டு வரேன்.” என அவளை அனுப்பியவனுக்கு, வீட்டில் நடந்த விசயம் நினைவு வர, அதனை பற்றி வருணாவிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

மீண்டும் வெளியே வந்து பைக்கை எடுத்தவன், அவள் அமரும் வரை காத்திருந்து,
“வருணா, வீட்டு விசயத்துல குறிப்பா அண்ணி, பரணி விசயத்துல நீ அதிகமா தலையிட்டுக்காத.” என்றவனின் திடீர் பேச்சில் அவள் புரியாது விழிக்க,

அவளது நிலை உணர்ந்தவன்,
“வீட்டுல அண்ணிக்கிட்ட நகை பத்தி பேசுன இல்லையா, அதை சொன்னேன்.” கூற,

“நான் எதார்த்தமா தானேங்க கேட்டேன்.”

“சில விசயங்கள் நம்ம எதார்த்தமா பேசுறது, கேட்குறது, எதிர்ல இருக்குறவங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கலாம் வருணா, இதை நான் ஏற்கனவே உனக்கு சொல்லிருக்கேன் தானே.”

“சரிங்க, ஆனா இப்போ நான் கேட்டதுல என்ன தப்பிருக்கு?”

“தப்புன்னு இல்லைடா, பரணியோடது லவ் மேரேஜ் உனக்கு தெரியும்தானே.”

“ம்ம்ம் ஆமா!”

“இதுல அண்ணியோட நகை பத்தின விசயம் எல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது, நாங்க எதுவும் கேட்டுக்கிட்டதும் இல்லை. அது அவங்களோட பெர்சனல். உங்க வீட்டுல போட்ட நகைகளை தான் நம்ம இப்போ வைக்க வந்திருக்கோம். அப்புடி இருக்கும் போது, நீ இயல்பா கேட்ட விசயம் அண்ணிக்கு வருத்தத்தை கொடுத்திருக்கலாம் இல்லையா.” என்றவனின் விளக்கத்தில், அவளுக்கு புரிந்து விட,

“சாரிங்க, நான் இதை யோசிக்க
லை.”

“இனி யோசிச்சுக்கோ வருணா, அம்மாக்கிட்ட நீ பேசுறது வேற, அண்ணிக்கிட்ட பேசுறது வேற, அதை மட்டும் புரிஞ்சுக்கோ போதும்.” என்றவன் வண்டியை கிளப்பியிருக்க,
இவளது முகம் யோசனையில் விழுந்தது.

 
Top