சித்துவை மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்துக் கொண்டிருந்தாள் காவ்யா. அவளின் அறைக்கு வந்து அவளின் அருகில் அமர்ந்த தேவிகா, "என்ன காவ்யா? நேத்து உன்னோட மாமியார் சித்துவை அவங்க கூட கூட்டிட்டு போறேன்னு சொல்லுறாங்க? நீயும் அமைதியா இருக்க..?" என காவ்யாவின் மனநிலையை அறியக் கேட்டார்.
தன் மடியிலே உறங்கியவனை பக்கத்தில் கட்டிலில் படுக்கவைத்தவள், "ராஜேஷ்க்கு ரெண்டாவதும் பெண் குழந்தை தான? அதுல இருந்தே அவங்க இப்படி தான் ம்மா சொல்லிட்டு இருக்காங்க.."
"அதுக்கு..? தாயையும் பிள்ளையையும் பிரிக்க பாப்பாங்களா? ஆண் வாரிசு வேணும்னு எப்படி அவங்களால இப்படிலாம் யோசிக்க முடியுது?" என மனதின் ஆற்றாமையை வெளிப்படுத்திய தேவிகா, "நீயும் தூங்கு காவ்யா. பகலெல்லாம் முழிச்சிருந்த வேற?" என்று சொல்லி கதவை லேசாக சாற்றிவிட்டு வெளியேறினார்.
உறக்கத்தில் "ம்மா.." என உளரிய சித்துவிற்கு மீண்டும் தட்டிக்கொடுத்துக் கொண்டே, "என்கிட்ட இருந்து உன்னை கேட்கிறாங்க சித்து? அம்மா எப்படி நீ இல்லாம இருப்பேன்?" என கண்கள் கலங்க மகனின் நெற்றியில் முத்தமிட்டவள் மனதோடு மன்றாடினாள்.
__________
திருமணம் முடிந்து மூன்றாம் மாதம் காவ்யாவிற்கு நாட்கள் தள்ளி போயிருந்தது. மெடிக்கலில் இருந்து கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனத்தை வாங்கி உறுதி செய்தவள், அதனை முதன்முதலில் தன் கணவன் ரமேஷிடம் சந்தோஷத்துடன் பகிர்ந்துக் கொண்டாள்.
பின், வீட்டில் அனைவருக்கும் தெரிவிக்க அனைவருமே ஆனந்தம் அடைந்தனர்.
வேலை செய்ய வீட்டிலும் ஆள் இருக்க, தனிமையில் பொழுதை கழித்தவளுக்கு தன் மகவுடன் பேசுவதே சந்தோசமாக இருந்தது.
அதுவரை காவ்யாவை கண்டுகொள்ளாத அவளின் மாமியார் மங்கலம் கூட காவ்யாவை நன்கு கவனித்தார்.
தன் வயிற்றில் ஜனித்த உயிரின் ஒவ்வொரு அசைவிலும் வளர்ச்சியிலும் தானும் புதிதாய் பிறந்தது போல் உணர்ந்தவளுக்கு அவளின் மேற்படிப்பை தொடர முடியாதது கூட பெரியதாய் தெரியவில்லை.
வளைகாப்பு நன்கு முடிந்து தன் அன்னையின் வீட்டிற்கு சென்றவள் பின் சித்து பிறந்ததும் தான் அவளின் புகுந்த வீட்டிற்கு வந்தாள்.
அதுவரை காவ்யாவை கவனித்து வந்த மங்கலத்தின் கவனம் முழுவதும் பேரனின் புறம் மட்டுமே இருந்தது.
'ஓ பேரப்பிள்ளைக்காக தான் இவ்வளவு நாளும் எனக்கு நல்ல கவனிப்பு கிடைச்சிதா..?' என எண்ணிய காவ்யாவும் எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.
சித்து பிறந்த ஒரு மாதத்தில் ராஜேஷின் கல்யாணம் நடந்தது. அதுவும் மங்கலத்தின் தம்பி பெண்ணை ராஜேஷிற்கு கட்டிவைத்தார்.
காவ்யா நின்றால் குற்றம் நடந்தால் குற்றம் என அனைத்திற்கும் ராஜேஷின் மனைவியான பிரியாவுடன் ஒப்பிட்டு குறை கூறிக்கொண்டே இருந்தார்.
ஒருமுறை பொறுக்க முடியாமல் காவ்யா சண்டையிட, ரமேஷ் தலையிட்டு தன் அன்னையை கடிந்து கொண்டான்.
பின் மங்கலம் காவ்யாவை வசைபாடுவதை குறைத்துக் கொண்டார்.
காவ்யாவும் தானுண்டு தன் பிள்ளை உண்டு என ஒரு கூட்டுக்குள் சுருங்கிக்கொண்டாள்.
சரியாக சித்துவிற்கு ஒரு வயதாகும் பொழுது ராஜேஷிற்கு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் தன் ஆட்டத்தை தொடங்கினார் மங்கலம்.
காவ்யா இவரை போல் வேற்றுமை காட்டாமல் ராஜேஷின் குழந்தையையும் தன் குழந்தையாகவே பாவித்து சித்துவுடன் சேர்த்து பார்த்துக் கொள்வாள்.
காவ்யாவின் அனைத்து செயல்களுக்கும் ரமேஷ் பக்கபலமாக இருப்பான். அவளைப் படிக்க அனுமதிக்கவில்லையே தவிர, அவளை அன்போடும் காதலோடும் பார்த்துக்கொள்வான்.
ஆனால் அவனின் துணை தான் காவ்யாவிற்கு நிலைக்கவில்லை!
__________
மறுநாள் அன்னை ஊட்டிய உணவை வாங்கிக் கொண்டு, "நம்ம வீட்டுக்கு எப்ப மம்மி போவோம்?” என கேட்ட சித்துவிடம்,
"ஏன் சித்து கண்ணா.. பாட்டி வீடு பிடிக்கலையா?" என தேவிகாவின் கேட்டார்.
"எனக்கு கார்த்தி அங்கிள் கூட விளையாடணும் பாட்டி. அன்னைக்கு கூட அம்மா என்னோட கைய பிடிச்சி இழுத்துட்டு வந்துட்டாங்க.. அப்புறம் எனக்கு பிவர் வந்துச்சு!" என மழலை மொழியில் அனைத்தையும் சித்து கூறினான்.
அவர்களின் அருகே அமர்ந்திருந்த கௌதம் தனியாக காவ்யாவை அழைத்து என்னவென்று விசாரித்தான்.
நடந்த அனைத்தையும் கூறிவிட்டு, "அவருக்கு கல்யாணம் இன்னும் ஆகலை. அதனால, என்னால அவருக்கோ இல்லை அவரால எனக்கோ எந்த பிரெச்சனையும் வரக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன் அண்ணா" என்றவள் அப்பார்ட்மென்டின் கூட்டத்தில் லட்சுமி பேசியதை மட்டும் மறைத்துவிட்டாள்.
காவ்யா சொல்வதிலும் தவறொன்றுமில்லை என உணர்ந்த கௌதம், "சரி விடு.." என்றவன்,
"ஆனால் கார்த்திக்கும் சித்துவும் ரொம்ப நெருங்குன மாதிரி இருக்கே? அன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்கு கூட வந்திருந்தாரே?" என குழப்பமாக கூற,
"ஆமா அண்ணா.. அதான் எனக்கும் புரியல? இதுவரை கார்த்திக்கை நாங்க விரல்விட்டு என்ன கூடிய அளவுல தான் சந்திச்சிருக்கோம். ஆனா அவங்களுக்குள்ள எப்படி இப்படி ஒரு பிணைப்பு உருவானதுன்னு தெரியல?" என கையை விரித்தாள்.
சில நேரங்களில், நம் வாழ்வில் வரும் மனிதர்களில் சிலரை பார்த்தவுடன் பிடித்துவிடும். அதற்கு சரியான காரணங்கள் என்று பெரிதாக எதுவும் இருக்காது.
அப்படி ஒரு பிணைப்பு தான் கார்த்திக்கிற்க்கும் சித்துவிற்கும் ஏற்பட்டது.
காவ்யா சொல்லியதை பொறுமையாக கேட்ட கௌதம், "சரி அம்மு. இனி நான் வாரயிறுதில வர பார்க்கிறேன். நான் தர்ஷி குட்டிலாம் வந்தா சித்து கார்த்திக்கை தேடமாட்டான்" என கூறியவன் அறியவில்லை,
இவன் வருகையால் தான் கார்த்திக் மற்றும் சித்துவிடம் உருவாகிய பிணைப்பு அவர்களுள் ஒரு புது உறவை வித்திடப்போகிறது என்று!
அறைக்குள் வந்த கௌதமிடம், "உங்க தங்கச்சி கிட்ட தனியா என்ன பேசிட்டு இருந்தீங்க..?" என காய்ந்த துணிகளை மடித்துக்கொண்டே கண்மணி கேட்டாள்.
காவ்யா கூறியதையே யோசித்துக் கொண்டிருந்தவன், "அது எதுக்கு உனக்கு..? இங்க வீட்ல இருந்தவளை நீயும் உங்க அம்மாவும் சேர்ந்து தான ஏதோ பேசி தனியா போற மாதிரி பண்ணீங்க..?" கோபமாக கண்மணியிடம் கொட்டினான்.
"இங்க பாருங்க கௌதம். வீட்ல என்ன நடந்ததுன்னு ஒன்னு விடாம நான் சொல்லிட்டேன். என்ன(னை) நம்புறதும் நம்பாம இருக்குறதும் உங்க விருப்பம்" என சொல்லிவிட்டு தர்ஷினியை தூக்கிக்கொண்டு கண்மணி வெளியேறினாள்.
காவ்யா அவளின் வீட்டிற்கு வந்து இன்றுடன் ஒருவாரம் ஆகிவிட்டது. வந்ததில் இருந்து 'பார்க் போகணும்' என அடம் பண்ணியவனிடம், "அடுத்த வாரம் கௌதம் மாமா வருவாங்க சித்து. அவங்க வரப்ப பார்க் போய் விளையாடலாம்.." என சித்துவை சமாதான படுத்தி வைத்திருந்தாள்.
காவ்யா சொன்னபடியே அந்த வார இறுதியில் இரண்டு நாட்கள் தங்குவதற்கு கௌதம், கண்மணி, தர்ஷினி வந்திருந்தனர். காவ்யாவின் தாய் தேவிகாவும் தந்தை ராமமூர்த்தியும் உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தனர்.
மாலை வேளையில் பார்க்கிற்கு கௌதமும் சித்துவும் சென்றனர். சித்துவிற்கு சுடு தண்ணி, ஸ்வெட்டர் என அனைத்தையும் தயார் செய்த காவ்யா, அன்றைக்கு முகத்தில் அறைந்ததை போல் பேசியதால் கார்த்திக்கை எதிர்கொள்ளத் தயங்கி கௌதமிடம் கொடுத்து பார்த்துக்கொள்ள சொன்னாள்.
தர்ஷி உறங்கிக்கொண்டு இருக்க, "இப்ப உனக்கு வேலையெல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு காவ்யா..?" என கண்மணி விசாரித்தாள்.
"ம்ம் ஓகே அண்ணி" என பதிலளித்தவள் அந்த புறம் நகர பார்த்தாள்.
“இன்னும் எங்க அம்மா பேசுனதை நினைச்சிகிட்டே இருக்கியா காவ்யா?” என்றாள் காவ்யாவை கூர்ந்து பார்த்து, அதற்கு காவ்யா அமைதியையே பதிலாக கொடுத்தாள்.
நீண்ட மூச்சை இழுத்துவிட்ட கண்மணி, “எங்க அம்மா அன்னைக்கு ரொம்பவே அதிகமா பேசிட்டாங்க தான். ஆனா நான் பதிலுக்கு ஏதாவது சொன்னா ரொம்ப பேசுவங்கன்னு தான் அமைதியா இருந்தேன்” என தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
“ஐயோ! அண்ணி என்ன இப்படி பேசுறீங்க? எனக்கு யாரு மேலயும் எந்த வருத்தமும் இல்லை. யாருக்கும் தொந்தரவா இருக்க கூடாதுன்னு தான் நானும் சித்துவும் தனியா வந்துட்டோம். தனியா வந்ததுல இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன்”
கண்மணிக்கும் அது தெரிந்தே இருந்தது. சோகத்தில் தனக்குள்ளே உழன்றவள் இப்பொழுது சற்று தெளிந்து காணப்பட்டாள். கண்மணிக்கு இதுவே போதுமானதாக இருந்தது. ‘சீக்கிரமே கௌதம் கிட்ட சொல்லி காவ்யாக்கு இன்னொரு வாழ்க்கை அமைத்து கொடுக்கணும்’ என்றும் நினைத்துக் கொண்டாள்.
இங்கு பார்க்கிற்கு வந்த சித்து கார்த்திக்கை பார்த்துவிட்டு துள்ளிக் குதித்து அவனிடம் ஓடினான். அவன் செல்வதை யோசனையாகவே பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.
'அன்று தன்னிடம் பேசியதால் தான் காவ்யா அழைத்து சென்றார்களா..?' என்ற குழப்பம் இன்றும் தீராமல் இருந்த கார்த்திக் சித்துவிடம் சென்று நலம் விசாரித்தான்.
"எனக்கு காய்ச்சல் போய்டுச்சி கார்த்தி அங்கிள். அதான் கௌதம் மாமா கூட விளையாட வந்திருக்கேன்" என கார்த்திக்கின் கையை பிடித்து கூறினான். சித்துவின் முடியைக் கோதிய கார்த்திக்கிடம் வந்த கௌதம்,
"ஹலோ கார்த்திக்.." என,
"ஹாய் கௌதம்" என்றான்.
கௌதம் சித்துவிடம், "நீ போய் அந்த குட்டி பசங்க கூட விளையாடு சித்து" என சொல்லி அனுப்பியவன் கார்திக்கிடம்,
அவன் கேட்க வருவதை புரிந்துக் கொண்ட கார்த்திக், "சித்துவிற்கு மட்டுமில்லை எனக்கும் அவனை பிடிக்கும்" என்றான்.
"ஆனா? அவன் என்கிட்ட, அவனோட ராஜேஷ் சித்தப்பா கிட்ட கூட இவ்வளவு க்ளோஸ் இல்லையே?" குழப்பமாக கேட்டவனை பார்த்த கார்த்திக்,
"எனக்கு சொல்ல தெரியல! அவனை முதல்ல லிஃட்ல பார்த்துல இருந்தே எனக்கு அவன்கிட்ட பேசணும், அவன் கூட விளையாடனும்னு தோணுச்சு. மே பீ அவனுக்கும் அது தோனிருக்கு போல. இவங்க கூட பேசணும் இவங்க கூட பேச கூடாதுன்னு வேற்றுமை பார்க்காம எல்லார்கிட்டயும் அன்பா பழகுறது தான குழந்தைங்களோட வழக்கம்?" என்றான்.
‘ஆம்’ என தலையசைத்த கௌதம் ‘சித்துவை பற்றி இவ்வளவு புரிந்து வெச்சிருக்கவரு கிட்ட இருந்து எப்படி காவ்யா சித்துவை விலக வைக்க போகிறாள்? இவருக்கு மேல சித்துவும் இவரை தேடுறானே?’ என்றும் எண்ணினான்.
யோசனையுடன் இருந்த கௌதமை பேட்மிடன் விளையாட கார்த்திக் அழைத்தான்.
சரி என்று ஒத்துக்கொண்டவன் அன்று போல் இல்லாமல் ஒரு ஆட்டத்துடன் முடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
அவனிடம் வந்த கார்த்திக், "எதாவது பிரச்சனையா..?" என கேட்டு அன்று காவ்யா நடந்து கொண்ட முறையைப் பற்றி கூறினான்.
காவ்யாவின் பக்கம் கேட்ட கௌதமிற்கு அவள் செய்தது சரி என்று பட்டது. ஆனால் இப்பொழுது கார்த்திக்கின் பக்கம் இருந்து யோசிக்கும் பொழுது காவ்யா நடந்துகொண்டது அதிகமாகவே தெரிந்தது.
ஒரு ஒருவரின் கோணத்தை பொறுத்து தான் அவரவரின் நியாயங்களும் என கௌதம் உணர்ந்தான். கார்த்திக் வருந்துவான் என நினைத்தவன்,
"யாராவது எதாவது சொல்லிடுவாங்கன்னு காவ்யா பயப்படுறா? உங்கள பத்தி தப்பாலாம் யோசிக்கலை! நீங்க கொஞ்சம் சித்துவை விட்டு விலக முடியுமா?" என கௌதம் கேட்டதற்கு,
மனதிற்குள் வலி இருந்தாலும் இதழ் பிரியா புன்னகையை மட்டும் சிந்திவிட்டு அமைதியுடன் விடைபெற்றான் கார்த்திக்.
பின் வீட்டிற்கு வந்த சித்து, "நான் கார்த்தி அங்கிள் கூட விளையடினேனே! மாமா கூட விளையாடினாங்க" என கௌதமையும் காவ்யாவிடம் கோர்த்துவிட்டான்.
அதனைக் கேட்ட காவ்யா கௌதமை பார்க்க, அவளிடம் நடந்ததை சொல்லிவிட்டு, "இனி கார்த்திக் உங்க பக்கம் வர மாட்டாரு அம்மு. நீ நிம்மதியா இருக்கலாம்" என உறுதியளித்தான்.
பாவம் கௌதம் அவனின் உறுதிக்கு ஆயுசு மிகக் குறைவு என உணரவில்லை.
எப்பொழுதும் போல் காவ்யா சித்துவை அழைத்து பார்க்கிற்கு சென்று வந்தாள். கார்த்திக் கூறியதை போல் அவர்களிடம் பேசவில்லை. பேசுவதற்கு அவன் அவர்களை சந்தித்தாக வேண்டுமே?
ஆம்! கார்த்திக் பார்க்கிற்கு போவதை குறைத்து கொண்டான். இல்லை காவ்யாவும் சித்துவும் சென்றுவந்த பிறகு இரவு வேளையில் சொல்லுவான்.
கார்த்திக்கிற்கு தான் என்னவோ? எதையோ? இழந்ததுபோல் இருந்தது. "இவ்வளவு நாள் சித்து உன்கூடயா இருந்தான் கார்த்திக்? இவ்வளவு வருத்தப்படுற?" என்ற மனதின் கேள்விக்கு பதில் தான் அவனிடம் இல்லை.
ஒருநாள் மின்தூக்கியில் சித்துவையும் காவ்யாவையும் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது பார்த்து இவர்கள் மூவர் மட்டுமே அங்கிருந்தனர்.
"ஹே கார்த்திக் அங்கிள்!" என காவ்யாவின் கையை விட்டுவிட்டு அவனிடம் சென்றான்.
"எதுக்கு நீங்க பார்க் வரல அங்கிள்?" என கள்ளம் கபடம் இல்லாத குழந்தை மனது கேட்டது.
அமைதியான சிரிப்புடன் அவனின் தலையை களைத்துவிட்டான் கார்த்திக்.
"சொல்லுங்க அங்கிள்? இந்த வீக் வருவீங்களா..?" என எதிர்பார்ப்புடன் கண்களை விரித்துக் கேட்டான்.
அவன் செய்கையில் அவனை கொஞ்சி மகிழ கூட முடியாத நிலையில் இருந்த தன்னை அறவே வெறுத்த கார்த்திக் எந்த பதிலும் கூறாமல் காவ்யாவைப் பார்த்தான்.
அவனின் பார்வையை உணர்ந்தவளுக்கு மனதில் குற்றவுணர்வு எழ, குனிந்து சித்துவிடம் "நம்ம மாடி வந்துடுச்சி சித்து. வா.." என அவனின் கைபிடித்து அழைத்து வெளியேறினாள்.
தன் வீட்டிற்கு வந்த கார்த்திக்கிற்கு காவ்யாவின் செயல் கோபத்தை கொடுத்தாலும் அவளின் எண்ணம் ஓரளவு புரிந்து தான் இருந்தது.
‘ஒன்றும் இல்லாததற்கே..? அந்த லட்சுமி ஆன்ட்டி அவ்வளவு பேசினாங்க? இது எல்லாம் பார்த்தா? கண்டிப்பா எதாவது நினைப்பாங்கன்னு தான் காவ்யா ஒதுங்கி போறாங்க போல?' என்று அவனின் ஒரு மனம் எண்ணியது.
அதற்கு எதிராக அவனின் மற்றொரு மனமோ, 'யார் என்ன நினைத்தால் என்ன கார்த்திக்? இதனால நீ சித்துவை விட்டு விலகும்படி தான ஆகியது?' என்று எடுத்துக் கொடுத்தது.
"எதுவுமே எனக்கு நிரந்தரம் இல்லையா..? வாழ்க்கைல வர்றவங்க எல்லாரும் பாதிலையே விட்டுட்டு போய்டுறாங்க?" என கண்ணாடியைப் பார்த்து தன்னைத் தானே கேட்டுக் கொண்டவன் மனதில்
'பாதியில வந்தவங்களை உன்னோட சொந்தமா மாத்திகிட்டா? சித்துவும் உன்ன விட்டு பிரியாம நிரந்தரமா உன்கூடவே இருப்பானே கார்த்திக்?' என்ற யோசனை தோன்ற, அதிர்ச்சியுடன் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தையே வெறித்தான்.
அதன் பிறகு இது சாத்தியமா? நடக்குமா? என்று மனம் அதனின் பயணத்தை அந்த வழியிலே தொடர்ந்தது.
ஒரு காடு பற்றி எரிய, சிறு தீப்பொறி போதுமே!
அந்த சிறு தீப்பொறிபோல் அவனின் மனதில் ஒர் எண்ணம் உதிர்த்தது. அந்த எண்ணம் அவனை முழுவதுமாக வியாபித்து அவ்வெண்ணம் நடக்கக்கூடிய சாத்திய கூறுகளை அலசத் தொடங்கியது!