மின்தூக்கியில் வீட்டிற்கு வந்த சித்து அழுகுரலில் காவ்யாவிடம், "மம்மி.. கார்த்தி அங்கிள் என்கிட்ட பேசவே இல்லை! இனிமே என்கூட விளையாடவே வரமாட்டாங்களா?" என கேட்டான்.
அவனது கேள்வியிலும் அழுகையிலும் ஒருநொடி அதிர்ந்தவள் 'எங்கே அழுவதால் மறுபடி சித்துவிற்கு உடம்பு சரியில்லாமல் போய்விடுமோ?' என பயந்து,
"அப்படிலாம் இல்லை சித்து. அவங்களுக்கு வேலை அதிகமா இருக்கும் போல? அதான் பார்க் வரல" என தன் துப்பட்டாவால் அவனின் முகத்தை துடைத்தவள், "நீயே பார்த்த தான? இப்ப தான் அவங்க வீட்டுக்கு போறாங்க. டயர்டா இருப்பாங்க தான?" என அவனின் அழுகையை நிறுத்தி சமாதானப்படுத்தினாள்.
"அப்ப நாளைக்கு கார்த்திக் அங்கிள் என்கிட்ட பேசுவாங்க தான மம்மி?" என எதிர்பார்ப்புடன் அவளின் கன்னம் பிடித்துக் கேட்டான்.
ஆவலுடன் கேட்டவனிடம் உண்மையை கூற முடியாமல், "ஆமா சித்து. அடுத்து உன்னை கார்த்திக் அங்கிள் பாக்குறப்ப கண்டிப்பா பேசுவாங்க" என பொய்யுரைத்தாள்.
அவள் பொய்யாகக் கூறியது மெய்யாகப் போகிறது என காவ்யா கொஞ்சமும் நினைக்கவில்லை.
நாட்களோடு சேர்ந்து அனைவரின் ஓட்டமும் ஓய்வில்லாமல் சென்றது. சித்துவை அதன்பிறகு கார்த்திக் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியது.
கார்த்திக், அவனின் அம்மா அவனிடம் திருமணம் பற்றி பேசியது அதை தான் மறுத்து சண்டையிட்டது;
பின் காவ்யா அவனை புறக்கணித்து சித்துவை அழைத்து சென்றது அதை கௌதம் நாசுக்காக கூறியது;
அதன் பின் சித்துவை பார்த்தும் அவனிடம் பேச முடியாத அவனின் நிலை என ஒன்றன் பின் ஒன்றாக நடந்த நிகழ்வுகளில் அவனது மனது உழன்று இறுதியில்,
‘எங்கே? சித்துவை பிரிந்து விடுவோமோ? அந்த கள்ளம் கபடம் இல்லாத குழந்தையை விட்டு விலகி விடுவோமோ?' என்ற பரிதவிப்பின் விளைவால் தன் மனதில் உண்டான காவ்யாவை திருமணம் புரிய முடிவெடுத்த எண்ணம் சரிதான் என திடமாக நம்பினான்.
அந்த நம்பிக்கை உண்டான நொடி சிறிதும் யோசிக்காமல், தன் அக்கா மீனாவின் கணவன் சத்யனுக்கு அழைத்துவிட்டான்.
அவசரமும் அவசியமும் இல்லாமல் கார்த்திக் அழைக்கமாட்டானே என்று எண்ணிக்கொண்டே, "சொல்லு மாப்ள! ஏதாவது பிரச்சனையா?" அழைப்பை ஏற்றதும் வினவினான் சத்யன்.
அவரின் கேள்வியை கிடப்பில் போட்ட கார்த்திக், "வீட்ல எல்லாரும் எப்படி இருக்கீங்க மாமா? அக்கா சந்துருலாம் நல்லாருக்காங்களா?" என அனைவரின் நலத்தையும் விசாரித்தான் கார்த்திக்.
"இங்க எல்லாரும் நல்லாருக்கோம் மாப்ள. நீ சொல்லு நீ எப்படி இருக்க?" என்றவனின் கேள்விக்கு பதில் உரைத்தவன் எப்படி பேச்சினை துவங்க என யோசித்தான்.
ஆனால் சத்யனே அதற்கு வாய்ப்பளிக்குமாறு, "நீ எப்ப மாப்ள கல்யாணம் பண்ணிக்க போற? அன்னைக்கு சென்னைல இருந்து வந்த அத்தை மீனா கிட்ட நீ சொன்னதை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க.." என்ற சத்யனுக்கு,
"அத பத்தி தான் மாமா பேச கூப்பிட்டேன்" என்றான்.
"நிஜமாவா மாப்ள? கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிட்டியா? அத்தை ஒண்ணுமே சொல்லலேயே!" என்று ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தில் கேட்டான் சத்யன்.
"இன்னும் அம்மாகிட்ட சொல்லல மாமா. முதல்ல உங்க கிட்ட தான் சொல்லுறேன்"
"ஒன்னும் புரியலையே மாப்ள.." என குழப்பத்துடன் சத்யன் கேட்க,
"நான் இங்க சென்னைல ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறேன்.." என ஆரம்பித்தவன் முழுதாகக் கூறி முடித்தான்.
முழுவதும் கேட்ட சத்யன், "என்ன சொல்லுற மாப்ள? குழந்தைக்காக கல்யாணமா? இது சரி வருமா?" என,
"என்ன மாமா படிச்சி பெரிய வேலைல இருக்க நீங்களே இப்படி சொல்லுறீங்க?" என்று கார்த்திக் அவனின் அதிருப்தியைக் காட்டினான்.
"இங்க பாரு மாப்ள.. நான் மருமணத்திற்கு எதிரானவன்லாம் கிடையாது. ரெண்டு பேர் மனமும் ஒத்துப்போய் மறுமணம் நடந்தா பரவாயில்லை. ஆனா? நீ அந்த சின்ன பையனுக்காக திருமணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுறியே..? அதான்.." என்ற சத்யன் தொடர்ந்து,
"எனக்கு நீ கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழனும் மாப்ள அவ்ளோ தான்! அது இந்த திருமணத்துல தான் உனக்கு கிடைக்கும்னா? எனக்கு சம்மதம் தான்! ஆனா அத்தையை எப்படி சம்மதிக்க வைக்கிறது?" என்றான்.
"என்ன மாமா? எனக்காக இத கூட நீங்க செய்ய மாட்டீங்களா..?" என்ற கார்த்தியின் கிடுக்குப்பிடியில் விரும்பியே சிக்கிய சத்யன்,
"நீ மொதல்ல அந்த பொண்ணோட அண்ணா கிட்ட, அந்த பொண்ணு கிட்டலாம் பேசிட்டு சொல்லு மாப்ள. கடைசியா இங்க பார்க்கலாம். அந்த பொண்ணோட சம்மதம் தான் இங்க ரொம்ப முக்கியம்" என கார்த்திக்கிற்கு தெளிவான வழியை காட்டிவிட்டு இணைப்பை துண்டித்தான் சத்யன்.
அடுத்த வாரம் கௌதமை சந்தித்த கார்த்திக் தன்னுடைய விருப்பத்தைக் கூறினான்.
அவன் கூறியதை கேட்டு அதிர்ந்த கௌதம், "என்ன..?" என்று அதிர்ச்சி மாறாமல் கேட்டான்.
"நானும் உங்க தங்கச்சி காவ்யாவும் ரெண்டு மூணு முறை தான் பேசியிருக்கோம். சோ இந்த கல்யாணம் கண்டிப்பா சித்துக்காக தான்!" என உண்மையை ஒத்துக் கொண்டவன்,
மேலும் "நீங்க சித்துவை விலக சொன்னதும் தான் எனக்கு அவன்கிட்ட பழகணும்னு தீவிரமா தோணுது. சோ அதுக்காக தான் காவ்யாவை கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்தேன்" என்றான்.
'இது எந்த மாதிரியான பந்தம்? குழந்தைக்காக திருமணமா? எவ்வளவு நாட்கள் நிலைக்கும்? சித்துக்காக கல்யாணம் பண்ண முடிவெடுக்கும் அளவுக்கு சித்துவின் மீது பிரியமா?' என பல கேள்விகளின் விளைவால் குழப்பத்தின் ரேகைகள் கௌதமின் முகத்தில் தோன்றியது.
அதனை சரியாக படித்த கார்த்திக், "என்ன பத்தி எவ்வளவு வேணுமோ விசாரிச்சிக்கோங்க கௌதம். அடுத்து உங்க சிஸ்டர் காவ்யா கிட்ட தான் பேச போறேன். அதுக்குதான் சரியான சந்தர்ப்பம் அமையல.." என்று அடுத்த குண்டை போட்டான்.
"ஏதே! காவ்யா கிட்ட பேச போறீங்களா..?" என்று மீண்டும் வந்த அதிர்ச்சியில் வாயைத் திறந்தவனைப் பார்த்த கார்த்திக்,
"கல்யாணம்னா அவங்க கிட்ட பேசித்தான ஆகணும்? அவங்க முடிவும் முக்கியம் தான?" என ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டான்.
'வேண்டாம்னா விடவா போறாரு? இவரே காவ்யாகிட்ட கிட்ட பேசி வாங்கி கட்டிக்கட்டும்' என மனதில் நினைத்தவன், "பேசி பாருங்க கார்த்திக்" என்றான்.
கௌதம் முதலில் அதிர்ந்தாலும் பின் அவன் மனதிலும் மகிழ்வு உண்டானது.
ஏற்கனவே கார்த்திக்கிடம் அவன் வேலை செய்யும் கம்பெனி மற்றும் இடம் என அடிப்படையை தெரிந்திருந்தவனுக்கு அவனைப் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் தோன்றியது.
முப்பத்தி இரண்டு வயதுவரை திருமணம் செய்யாமல் இருப்பதால் அதையும் விசாரிக்க வேண்டும்; அனைத்திற்கும் மேல் காவ்யாவிடம் நாமும் பேச வேண்டும் என அவன் மனது வேகமாக அனைத்தையும் பட்டியலிடத் தொடங்கியது.
அன்று சித்துவும் காவ்யாவும் பார்க்கில் இருந்த பொழுது வந்த கார்த்திக் இம்முறை மாறாக சித்துவிடம் இல்லாமல் அங்கிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்த காவ்யாவிடம் சென்றான்.
அவனைப் பார்த்தவள் சித்துவின் புறம் பார்த்தாள். அதனை கவனித்த கார்த்திக், "சித்து நான் வந்ததை கவனிக்கல" என்றவன்,
"நான் உங்ககிட்ட தான் பேசணும் காவ்யா" என்றான் பூடகமாக.
'என்கிட்டயா? ஒருவேளை அன்னைக்கு நாம கடுமையா பேசுனதுக்கு ஏதாவது சொல்ல போறாங்களா? ஆனா கௌதம் அண்ணா தான் அத பத்தி ஏற்கனவே பேசிட்டாங்களே..' என மனதிற்குள் நினைத்தவள், "என்ன?" என்பது போல் பார்த்தாள்.
இன்று தான் மிக அருகில் அவளை பார்ப்பதால் 'அப்படியே இவங்கள மாதிரியே தான் சித்து' என நினைத்துக் கொண்டவன்,
"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" சுற்றி வளைக்காமல் தைரியமாக கேட்டுவிட்டான்.
வேறேதோ கேட்பான் என சாதாரணமாக இருந்தவள், "என்.. என்ன? என்ன கேட்டீங்க?" என அதிர்ச்சியுடன் எழுந்தேவிட்டாள்.
"நீங்க கேட்டது சரி தான். நாம கல்யாணம் பண்ணிக்கலாமானு தான் கேட்டேன்" என்றவன்,
"சித்துக்காக தான்" என முடித்தான்.
அவ்வளவு தான் பொங்கிவிட்டாள் காவ்யா, "என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? என்னபத்தி என்ன தெரியும் உங்களுக்கு? சித்து எதோ விளையாட உங்கள தேடினா? உடனே என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனுக்கு அப்பாவாக பார்க்கலாம்னு நினைக்கிறீர்களா?" என கேள்வியால் விலாசியவள்,
"தயவு செய்து இந்த மாதிரி எண்ணத்தோட மறுபடி என்கிட்ட வராதீங்க" என அவள் முடிக்கும் முன்,
"கார்த்தி அங்கிள்" என சித்து ஓடி வந்தான்.
இழப்பின் வழியை உணர்ந்த கார்த்திக்கிற்கு காவ்யாவின் நிலை புரியவே செய்தது. ஆகையால் அவள் திட்டியதற்கு எந்த எதிர்வினையும் காட்டாமல் சித்துவிடம், "அங்கிள்க்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு சித்து. அதையெல்லாம் முடிச்சிட்டு இனிமே நாம சேர்ந்தே விளையாடலாம்" என காவ்யாவைப் பார்த்துக் கொண்டே கூறினான்.
அவனின் பார்வையில்
சித்துவின் முன் எதுவும் பேச விரும்பாதவள் அவனை தீப்பார்வை பார்த்துவைத்தாள். அவளின் பார்வையை உணர்ந்தாலும் அவளை சட்டை செய்யாமல் சித்துவிடம் பேசிவிட்டு சென்றுவிட்டான்.
தெளிந்த நீரோடையாக இருந்த காவ்யாவின் மனதில் சிறு கல்லை வீசி சென்றுவிட்டான். அது சில அதிர்வுகளை அவளுக்குள் கிளப்பியது. அந்த அதிர்வுகளின் விடை இருவருக்கும் சாதகமாகவே அமையப் போகிறது.
ஒருநாள் நல்ல மழை பெய்துக் கொண்டிருக்க காவ்யாவால் அவளது இருசக்கர வாகனத்தை எடுக்க முடியவில்லை. சித்துவிற்கும் பள்ளியில் விடுமுறை விட்டிருக்க அவனையும் அவள் பணியிடத்திற்கே அழைத்துச் செல்ல முடிவெடுத்திருந்தாள்.
அதனால் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் ஒரு ஆட்டோவை பிடித்து வருமாறு கூறியவள் அந்த அப்பார்ட்மென்டின் நுழைவாயிலில் ஓரமாக சித்துவுடன் நின்றிருந்தாள்.
அப்பொழுது தான் அலுவலகத்திற்கு செல்ல தயாராக காரில் வந்து கொண்டிருந்த கார்த்திக் அவர்களைப் பார்த்தவன், அவர்களின் அருகில் வண்டியை நிறுத்தினான்.
அன்று திருமணத்தை பற்றி பேசிய கார்த்திக் அதன் பிறகு காவ்யாவிடம் எதுவும் பேச முயற்சி செய்யாததால் அவனைப் பற்றிய சிந்தனை இன்றி இருந்தவள் இன்று அவனைப் பார்த்ததும் சித்துவின் கையை பிடித்துக்கொண்டு திரும்பி நின்றாள்.
அதற்குள் ஆட்டோவை பிடிக்க சென்ற செக்யூரிட்டி வந்து மழையால் எந்த ஆட்டோவும் கிடைக்கவில்லை என கையை விரித்தவன், "கார்த்திக் சார் இவங்கள கொஞ்சம் அவங்க கம்பெனில விடமுடியுமா? நீங்க போற ஏரியா பக்கத்துல தான் இவங்க ஆபீஸ் இருக்கு" என கார்த்திக்கிடம் சிபாரிசு செய்தான்.
தலையை மட்டும் அசைத்தவனிடம் நன்றி உரைத்த செக்யூரிட்டி, "இவரை நம்பி போகலாம் காவ்யா மேடம். மழை இப்போதைக்கு விடாது போல.. பார்த்து போய்ட்டு வாங்க" என காவ்யாவிடம் கூறியவன் தன் வேலையை பார்க்க சென்றான்.
காவ்யா எதுவும் சொல்லாமல் நிற்க! கண்ணாடியை இறக்கியவன், "இதனாலலாம் என்னைய கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கட்டாயப்படுத்த மாட்டேன் காவ்யா மேடம். நம்பி வரலாம்" என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
கார்த்திக்கை பார்த்ததில் இருந்து தன் கையைவிட்டு ஓடுவதிலே குறியாக இருந்த தன் மகனை கட்டுக்குள் வைப்பதற்கு அவள் பெரும்பாடு பட, இதில் இவனுடன் செல்ல வேண்டுமா? எனவும் யோசித்தாள்.
அவள் யோசனையின் தீவிரத்தை விட மழையின் தீவிரம் வலுக்க ஆரம்பிக்க, அவனுடன் செல்வது என முடிவெடுத்தாள். கார்த்திக்கின் காரை நோக்கிச் சென்றவள் பின்புற கதவை திறந்து ஏறிவிட்டு முன்னே செல்ல முயன்ற சித்துவையும் உடன் வைத்துக் கொண்டாள்.
அவளின் செயலில் சிரிப்பு வந்தாலும் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டான். பின் தனது அலுவலகத்தின் பெயரை காவ்யா குறிப்பிட, "தெரியும்" என ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான்.
என்றைக்கு காவ்யாவை சித்துவிற்காக திருமணம் புரிய தயாராகினானோ? அன்றே காவ்யா மற்றும் அவளின் குடும்பத்தை பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டான்.
காவ்யாவின் பக்கம் அமர்ந்திருந்த சித்து காரைப் பற்றி கேள்வி எழுப்பிக்கொண்டே வர, அவனின் அனைத்து கேள்விக்கும் பொறுமையாக பதிலளித்துக்கொண்டே கார்த்திக்கும் காரை ஓட்டினான்.
சில சமயம் சித்துவின் அதி புத்திசாலியான கேள்விக்கு காவ்யாவே எரிச்சலடைவாள். ஆனால் அவனின் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் கூறிய கார்த்திக்கை நினைத்து மனத்திற்குள்ளே ஆச்சர்யமடைந்தாள்.
பயணம் முழுவதும் அவர்கள் இருவர் மட்டுமே பேசிக்கொண்டு வர காவ்யா அமைதியையே கடைபிடித்தாள்.
அரை மணிநேரம் கடந்து காவ்யாவின் அலுவலகம் வர, "தேங்க்ஸ்" என கார்த்திக்கின் முகத்தை பார்க்காமல் கூறிவிட்டு இறங்கியவள் சித்து இறங்குவதற்கு கைகொடுத்தாள்.
அவனோ முன்னே சென்று கார்த்திக்கின் கன்னத்தில் முத்தமிட்டு "பை கார்த்தி அங்கிள்" என சிரிப்புடன் காவ்யாவின் கைபிடித்து இறங்கினான்.
அதனை பார்த்த காவ்யாவிற்கும் முத்தத்தை பெற்ற கார்த்திக்கிற்குமே அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் தான்!
"அம்மா யார்க்கும் கிஸ் கொடுக்க கூடாதுன்னு சொல்லிருக்கேன் தான சித்து?" என காவ்யா கண்டிப்புடன் கேட்க,
"கார்த்தி அங்கிள் நம்ம பிரின்ட் தான மம்மி" என கூறி அவளை வாயடைக்க வைத்தான்.
பின் காரை ஓட்டிச் சென்ற கார்த்திக்கிற்கு மனதெல்லாம் மத்தாப்பு தான். ‘அரைமணி நேரம் அவர்களுடன் இருந்ததே இவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறதென்றால் வாழ்க்கை முழுவதும் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம்’ என எண்ணிக்கொண்டான்.
காவ்யாவின் மீது காதல் இருக்கா? என்ற கேள்விக்கு இல்லை! என்று பதில் கூறிவிடுவான். ஆனால் அவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுது தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் நங்கூரமிட்டிருந்தது.