எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 29(இறுதி அத்தியாயம்)

kani suresh

Moderator
அதிர்ச்சியில் இருந்து மீண்ட வினோ, "கம்முனு தூங்குடி" என்று அவளது கையைத் தட்டி விட்டு நகர்ந்து படுக்க,

அவள் மீண்டும் லேசான புன்னகையுடன் அவனது உடலில் தனது கைகளைப் படர விட,

அவளது இரண்டு கைகளையும் கெட்டியாகப் பிடித்தவன், "ராகிமா கேட்டானு என்கிட்ட நெருங்கி வரியா? இல்ல, எனக்கு விருப்பம் இருக்கின்றதுக்காக நெருங்கி வரியா?"

அவனை முறைத்துவிட்டு, அவனது கைகளில் இருந்து தன் கைகளை உருவிக் கொண்டவள், அவனது இரு தாடைகளையும் பற்றிக் கொண்டு அவனது கண்களை ஊடுருவிக் கொண்டே, "என்னப் பார்த்தா உங்களுக்கு அப்படி தான் தெரியுதா? ராகிமாவுக்காக, நம்மளச் சுத்தி இருக்கவங்களுக்காக என்று தான் நான் உங்க கையால தாலி கட்டிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்தேன். அதுக்காக நம்ப வாழ்க்கைய ஸ்டார்ட் பண்றதப் பத்தி அன்னைக்கு நீங்க கமலிகிட்டச் சொன்னதுதான்.

எனக்கு விருப்பம் இருந்தா மட்டும்தான், நான் உங்களோட பிஸிக்கல் டச் வச்சுக்க முடியும். அடுத்தவங்களுக்காகக் கிடையாது, புரியுதா? உங்களுக்கு விருப்பம் இருக்கப் போய்தான் என்கிட்ட நெருங்கி வந்தீங்க. ஆனா, நான் இன்னும் அந்த நினைவில் இருந்து வெளியே வரவில்லை என்ற காரணத்தினால் மட்டும்தான், முழுமையாக என்னிடம் நெருங்காமல் என்னை மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கீங்க. உங்களை முழுசா என் மனசாரக் கணவனா ஏத்துக்கணும் என்று நினைச்சு தான் ஒதுங்கி இருக்க நினைக்கிறீங்க. அதுவும் எனக்காக மட்டும் தான்…

நான் முழுசா அந்தக் கசப்பான நினைவில் இருந்து வெளியில் வந்து விட்டேன். இப்போ எனக்கு நீங்க வேணும்னு என் மனசும் சரி, உடம்பும் சரி உங்க நெருக்கத்துக்கு ஏங்கச் செய்யுது. அதனால மட்டும் தான் நான் உங்க கிட்டநெருங்கி வந்து இருக்கேன். என்னோட செயல் எதுவும் அடுத்தவங்களுக்காக என்று ஆகிடாது. சரியா? உங்களுக்கு விருப்பம் இருந்தா வாங்க, இல்லன்னா விடுங்க" என்று விட்டு விலகிப் படுத்தாள்.

அவளது கோவத்தைக் கூட ரசித்தவன், "கோவக்காரி, கோவக்காரக் கிளியே, ரொம்பத் தான்டி உனக்குக் கோவம் வருது" என்று வேகமாக அவளைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவள் திமிற, "கொஞ்ச நேரம் அமைதியா இரு"

"நான் தான் உங்களுக்கு வேணாம் இல்ல. நான் ராகினிக்காக தான உங்ககிட்ட நெருங்குறேன்" என்று கண்ணீர் சிந்தினாள்.

"என் செல்லத்துக்கு கோவத்தைப் பார்த்தியா? மூக்குக்கு மேல வருது.” என்று அவளது மூக்கைப் பிடித்து ஆட்டிவிட்டுத் தாடையில் முத்தமிட்டான்.

அவனது கையைத் தட்டி விட்டு அவனைப் பார்த்து முறைத்து விட்டு நகர,

"மா…" என்று ராகி சிணுங்கினாள். இருவரும் ஒரே நேரத்தில் அவளைத் தட்டிக் கொடுக்க, இருவரது கையும் ஒன்றின் மீது ஒன்றாக இருந்தது.

அவள் கையை இறுக்கிப் பிடித்த வினோ, “ராகிமா கேட்ட மாதிரி, தம்பிப் பாப்பாவை ரெடி பண்ணலாமா?” என்று கேட்டு அவளைப் பார்த்துக் கண்ணடிக்க, அவனிடமிருந்து தன் கையை உருவிக் கொள்ள முயன்று, "ஒன்னும் வேண்டாம்" என்று முகத்தைத் திருப்பினாள்.

"என்ன வேண்டாம்?" என்று அதரங்களில் மென் புன்னகையுடன் அவளைப் பின் பக்கம் இருந்து கட்டி அணைத்துக் கொண்டு நாவினைக் கொண்டு அவளது முடிக்கற்றைகளைப் பின்பக்க முதுகில் இருந்து ஊதிவிட, கூச்சத்தில் நெளிந்தாள். அவளது செயலில் உள்ளுக்குள் புன்னகை தோன்ற உதட்டில் லேசான புன்னகையைத் தவழ விட்டவன், அவளது மொத்த முடி கற்றைகளையும் முன் பக்கம் தூக்கிப் போட்டுவிட்டு, முதுகில் நாவால் கோலம் போட ஆரம்பித்தான்.

அவள் கூச்சத்தில் நெளிந்து கொண்டே, "வி..வி..வினோ" என்று கூச்சத்தில் முனகச் செய்தாள்.

அவளது உடலில் தன் கைகளை வைத்து ஊர்வலம் நடத்த ஆரம்பித்து இருந்தான். அவள் இதழோடு இதழ் பொருத்திவிட்டு, அவளது உடல் முழுவதும் இதழ் ஊர்வலம் நடத்தினான். குழந்தை அருகில் இருப்பதை உணர்ந்த இருவரும் கீழே பாய் விரித்துப் படுத்துக் கொண்டார்கள்.

சிறு சிறு செல்லத் தீண்டல்களில் அவளை உரைய வைத்தான். அவளை அணு அணுவாக, ரசித்துக் கொண்டே ருசிக்கவும் செய்தான். அவளது விருப்பத்திற்கு ஏற்ப அவளை ஆட்சி செய்ய ஆரம்பித்தான். அவள் முகம் லேசாகச் சுணங்கினால் கூட, "விருப்பம் இல்லையா டி" என்று கேட்க,

"இப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் எவனாவது கேட்டுட்டு இருப்பானா?" என்று முகத்தைத் திருப்பினாள்.

அவள் முகத்தைத் தன்னைப் பார்க்குமாறு செய்துவிட்டு, "நான் என் பொண்டாட்டி கிட்ட கேட்டுக் கேட்டுச் செய்வேன்டி. உனக்கு என்ன? என் பொண்டாட்டி முகம் லேசாகச் சுணங்கினால் கூட எனக்குப் பிடிக்காது." என்று விட்டு அவளது உச்சியில் இதழ் பதித்தான்.

"அவளுக்கு விருப்பம் இல்லாத எதுவும் என்னோட ஆசைக்காகக் கூட நடக்காது" என்று முறுவலித்தான்.

அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு அவனது சட்டைக் காலரைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்து தன் பற்களைக் கொண்டு அவனது மீசையைப் பிடித்து இழுத்தாள்.


அவன் வலியில் முகத்தைச் சுழிக்க, அவனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, "எனக்குப் பிடிக்காத எதையும் என்னோட வினோ செய்ய மாட்டார் என்று எனக்குத் தெரியும்" என்று கூறிவிட்டுக் கண்ணை மூடினாள்.

அவள் நெற்றியோடு நெற்றி முட்டி விட்டு, மூக்கோடு மூக்கு உரசி, அவனது உதட்டுக்கே வலிக்கும் அளவிற்கு, "கண்மணி" என்று வெளிவராத குரலில் அழைக்க,

லேசாகக் கண்களைத் திறந்து அவனைக் கேள்வியாகப் பார்க்க, "உனக்கு ஓகேவா" என்றான் கண்களில் காதல் மின்ன. அவனைப் பார்த்து முத்துப்பற்கள் தெரியச் சிரித்தவள், ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, "வேணா சொன்னா விட்டு விடுவீங்களா?" என்று மென்னகை புரிந்தாள்.

அவளது செயலில், தான் விட்ட இடத்தில் இருந்து தன்னுடைய வேலையை ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவளுள் புதைய ஆரம்பித்தான். தன்னுடைய மொத்தக் காதலையும், காமத்தையும் திரட்டி தனக்குத் தேவையானதை அவளிடம் இருந்து எடுத்துக் கொண்டு, அவளுக்குத் தேவையானதைக் கொடுக்க ஆரம்பித்தான். அங்கே அழகான தாம்பத்தியம் நடந்தேறியது.

அனைத்தும் நல்லபடியாக முடிய மூச்சு வாங்க அவளது அருகில் படுத்தவன், அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள, நிமிர்ந்து அவன் நெற்றியில் எக்கி இதழ் பதித்து விட்டு, "ஹாப்பியா இருக்கு வினோ, நானும் அதிலிருந்து வெளியே வராம உங்க வாழ்க்கையும் அழித்து விடுவேனோ? என்று லேசான பயம் உள்ளுக்குள்ள இருந்துச்சு. இப்போ தான் மனசு நிறைவடைந்து இருக்கு." என்று அதரங்களில் புன்னகையைத் தவழ விட்டவாறு உதட்டை லேசாகக் கடிக்க,

"நான் இருக்க நீ எதுக்குடி அதுக்குத் தண்டனை தர" என்று ஒற்றை விரல் கொண்டு அவளது உதட்டைப் பிடித்து இழுத்து, "நானும் சந்தோசமா தான் டி இருக்கேன்” என்று சிரித்துவிட்டு அவளது நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவளை லேசாகக் கட்டி அணைத்து விட்டு, "தூங்கு" என்று தட்டிக் கொடுத்தான்.

விடியற்காலை 5 மணிக்கு எழுந்து வேகமாகக் குளித்துவிட்டு வந்து வினோத்தையும் குளிக்கச் சொன்னாள். அவனும் குளித்துவிட்டு வர, ரூமுக்குள்ளேயே இருந்தாள். "ஏன் டி இங்கேயே இருக்க, வெளிய போகலையா?"

"ஒரு மாதிரி இருக்கு"

"நைட் என்னமா அட்டகாசம் பண்ணிட்டு, இப்போ என்ன டி ஒரு மாறி இருக்கு."

"அத்தையைப் பார்க்க ஒரு மாதிரி இருக்கு வினோ" என்று சிணுங்கினாள்.

"நம்ப ரெண்டுபேரும் நம்ப லைஃபை ஸ்டார்ட் பண்ணது தெரிஞ்சா சந்தோஷம் தான் டி படுவாங்க."

"தெரியுது. இருந்தாலும்..."

"ஒன்னும் இல்ல வா" என்று அவள் தோள் மீது கை போட்டு அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான். காலை 6 மணி ஆகி இருந்தது.

பத்மா ஹாலில் உட்கார்ந்து நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார். தன் மகன் தனது மருமகளின் தோளின் மீது கை போட்டுக் கொண்டு வருவதைப் பார்த்தவர், "என்னடா, காலையிலேயே உன் பொண்டாட்டி வாலைப் பிடிச்சிட்டு சுத்துற" என்றார் சிரிப்புடன்.

"எனக்கும் ஆசைதான்" என்று புன்னகைக்க,

கண்மணி அவனைப் பார்த்து முறைத்தாள். அவளுடன் சேர்ந்து பத்மா காலில் விழுந்தவன், "ஆசிர்வாதம் பண்ணுங்க மா" என்று பட்டென்று ஒன்றாகக் கீழே குனிய பத்மாவிற்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.

"அம்மா, உங்களை தான். ஆசிர்வாதம் பண்ணுங்க" என்ற உடன்,

'இருவருக்கும் கல்யாண நாளும் இல்லை, பிறந்த நாளும் இல்லை. இன்று எதுவும் விசேஷ நாளும் இல்லையே' என்று யோசித்தவருக்கு அடுத்த நிமிடம் பொறி தட்ட, கண்கள் கலங்கத் தனது மகன், மருமகள் இருவரையும்,

"இப்பொழுது போல் எப்பொழுதும் இதே சந்தோஷத்துடன் நீடித்து வாழ வேண்டும்" என்று வாழ்த்தியவர் இருவரையும் தூக்கிவிட, கண்மணியின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு, "இப்பதான் மனசுக்கு நிறைவா இருக்கு கண்மணி" என்றார்.

அவள் கூச்சப்பட்டு நெளிய, "இதுல என்ன கண்மணி இருக்கு. உங்க வாழ்க்கையை, நீங்க ஆரம்பிச்சு இருக்கீங்க… இது உங்களுக்கான வாழ்க்கை, சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான். முதல்ல கமலிக்கு போன் பண்ணிச் சொல்லு, சந்தோஷப்படுவா" என்றார் கண்கள் மின்ன.

"சரி அத்தை" என்று தலையசைக்க, அப்பொழுது தான் ராகி எழுந்து சிணுங்கிக் கொண்டே வர, "என்ன மூணு பேரும் பேசிட்டு இருக்கீங்க?"

"ஒன்னும் இல்லடா தங்கம், நீங்க மூணு பேரும் போயி கமலி அத்தையும் குட்டிப் பாப்பாவையும் பார்த்துட்டு வருவீங்கன்னு அப்பா கிட்டயும், அம்மா கிட்டயும் சொல்லிட்டு இருக்கேன். நேர்ல போய் பார்த்துட்டு வாங்க மூணு பேரும்"

"சரி" என்று ராகி ஆனந்தத்தில் குதூகலிக்க, கண்மணி ராகினியைத் தூக்கிச் சென்று குளிக்க வைத்து, காலை உணவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் ஒன்றாகக் கோவிலுக்குச் சென்று சாமியைத் தரிசனம் செய்துவிட்டு கமலியைப் பார்க்கச் சென்றார்கள். கமலி குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டு தூக்கச் சோர்வில் இருந்தாள்.

கண்மணியைப் பார்த்தவுடன், "என்ன டி இங்கு வந்து நிற்கிற, என்னைப் பாக்காம இருக்க முடியலையா? இல்ல, உன் மருமகளைப் பார்க்காமல் இருக்க முடியலையா?" என்று மெலிதாகப் புன்னகைத்தாள்.

கவின், "ஐ அத்தை!" என்று சந்தோஷக் கூச்சலுடன் வந்து கண்மணியைக் கட்டிக் கொள்ள, வினோத் சிரித்துவிட்டு அமைதியாகக் கவினைட் தூக்கிக் கொஞ்சி விட்டு அடுத்தபடியாக குட்டிக் கமலியைத் தூக்கிக் கொஞ்ச,

"அண்ணா, நான் மாட்டும் கேட்டுட்டு இருக்கேன். உங்க பொண்டாட்டி அமைதியா நிக்கிறா, என்ன விஷயம்?"

"எனக்கு என்ன தெரியும், என்னைக் கேட்கி?"

"உனக்கு எப்படி இருக்கு இப்போ, தூங்கணும்னா தூங்கு. நான் பாப்பா வச்சு இருக்கேன்" என்று கண்மணியை அமைதியாகப் பார்த்து விட்டு வினோத் குழந்தையைத் தூக்கி கொண்டு கவின், ராகினியையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்ல,

அவர்கள் சென்ற பின் கமலி தான், "என்னடி ஆச்சு? ஏன் முகம் ஒரு மாறி இருக்கு" என்க,

கண்மணி வேகமாகக் கமலியைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

"ஏய் மணி, என்ன ஆச்சு? நீ ஏன் இப்படி இருக்க..."

"எனக்குப் புரியலடி, பயமா இருக்கு… உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது"

"என்ன ஆச்சு? அண்ணா உன்கிட்ட எதுவும்" என்று வேகமாக அவள் தோளில் கை வைக்க,

அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்த கண்மணி, "இல்லை" என்பது போல் தலை ஆட்டி விட்டு அமைதியாக இருந்தாள்.

"சொல்லுடி"

"என்னைப் பார்த்தா நான் பீல் பண்ற மாதிரியா தெரியுது?"

"சத்தியமா என்னால முடியல கண்மணி. ஏற்கனவே பாப்பா தூங்காம தூக்கம் கண்ணுல நிக்குது. இப்போ நீ வேற இப்படி வந்து நிக்கற. நீ வாய் திறந்து சொல்லாமல் நான் என்னன்னு புரிஞ்சுக்க?" என்று லேசான அழுகையுடன் கேட்க,

ராகினியையும், கவினையும் வெளியில் விட்டுவிட்டு, குட்டிக் கமலியை மட்டும் ரூமுக்குள் தூக்கிக் கொண்டு வந்த வினோத், சிரித்துக் கொண்டே கமலியிடம், "பாப்பா பசிக்கு அழுவுறா பாரு. ஃபர்ஸ்ட் பாப்பாவைப் பாரு. உன் பிரண்டு எங்கேயும் ஓடிட மாட்டா" என்று விட்டு வெளியில் சென்றான்.

குழந்தைக்குப் பசியாற்றிவிட்டு, கண்மணி கையில் குழந்தையைக் கொடுக்க, குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு கமலியின் அருகில் வந்த கண்மணி, அவளின் கையைப் பிடித்துக் கொண்டு, "நான் என்னோட வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டேன் கமலி" என்று அவளது முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

கமலிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு நிமிடம் அமைதியாக அவளைப் பார்த்துவிட்டு அவளது முகத்தில் உள்ள சந்தோஷத்தைத் தாண்டிய ஒரு உணர்வைப் பார்த்தவள், "உண்மையாவாடி" என்று அதிர்ச்சி விலகாமல் கேட்க,

"ஏன்? உனக்கு என் மேல நம்பிக்கையே வராதா?" என்று எதிர்கேள்வி எழுப்ப,

அவளை வேகமாக இழுத்து அணைத்து நெற்றியில் இதழ் பதித்த கமலி, "நீ சந்தோஷமா வாழ்ந்தா எனக்கும் சந்தோஷம் தான் டி" என்று விட்டு அமைதியாகி விட்டாள். அதன் பிறகு, மாலை வரை அங்கு இருந்து சாப்பிட்டுவிட்டுக் கமலியிடமும் கண்மணி பல கதைகள் பேசிவிட்டுக் கிளம்ப,

"அப்போ சீக்கிரம் எனக்கு ஒரு மருமகனையோ, மருமகளையோ எதிர்பார்க்கலாம் இல்லையா?" என்று அவளது முகத்தைப் பார்க்க,

"எனக்கும் சீக்கிரமா குட்டிப் பாப்பா வந்துருமே, அம்மா சொன்னாங்க" என்று ராகி குதூகலிக்க,

"என்னன்னு சொன்னாங்க உங்க அம்மா" என்று கமலி சிரித்துக் கொண்டே ராகினியைத் தன் பக்கம் இழுத்துக் கொஞ்சிக் கேட்க,

"நான் கேட்டேனா அம்மாகிட்ட. அம்மா தான் சொன்னாங்க. நீங்க இங்க வீட்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆகுதாமே, அம்மா இப்போ தான அங்க நம்ம வீட்டுக்கு வந்தாங்க, அதனால இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுக் குட்டிப் பாப்பா வந்துரும்னு சொன்னாங்களே" என்று சந்தோஷத்துடன் சொல்ல,

"குழந்தைகிட்ட என்னென்ன சொல்லி வச்சிருக்கா பாரு" என்று சிரித்துவிட்டு கமலி கண்மணியைப் பார்க்க,

கண்மணி கூச்சத்தில் வேறுபக்கம் திரும்பினாள். கண்மணியின் அப்பா, அம்மா ரகுபதி, காந்திமதிக்கும் சந்தோஷம். உடன்பிறந்தவனாக சங்கருக்கும் சந்தோசம் தான். தங்கள் மகள் வாழ்க்கையில் இனி வசந்தம் வீசட்டும் என்று எண்ணினார்கள்.

நாள்கள் அழகாகச் சென்றது. ஊடலும், கூடலுமாக கண்மணி, வினோத் வாழ்க்கை சென்றது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, கமலியின் பெண் குழந்தை கவிநயாவை அழைத்துக் கொண்டு குலதெய்வக் கோவிலில் சென்று பொங்கல் வைக்கச் சென்றார்கள் குடும்பத்துடன். அனைவரும் பொங்கல் வைத்துக் கொண்டு இருக்க, அப்பொழுது கண்மணிக்கு ஒரு மாதிரி இருக்கவே வினோத் அருகில் வந்தாள்.

"என்ன ஆச்சு கண்மணி?" என்று கேட்க, "தெரியல வினோ, ஆனா, ஏதோ ஒரு மாதிரி இருக்கு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குமட்டிக் கொண்டு வர வாந்தி எடுத்துவிட்டு அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

"என்னடி பண்ணுது?" என்று தோளில் தட்ட அனைவரும் கூடி இருந்தார்கள்.

"என்னடா பண்ண, என் மருமகளை" என்றார் பத்மா.

"ஆமாம், நான் தான் ஏதோ பண்ணிட்டேன், உன் மருமகளை" என்று தன் தாயை முறைத்தான்.

"அவளே மயக்கம் போட்டு விழுந்துட்டா. காலைலருந்து ஒரு மாதிரி இருக்கா".

அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்போது அவளது அருகில் வந்த கமலி தான், "கண்மணி, உனக்கு நாள் தள்ளிப் போயிருக்கா?" என்று கேட்க,

அவளுக்கு ஒன்றும் புரியாமல் முழிக்க,

‘விளங்கிடும், இவளை வச்சுக்கிட்டு’ என்று எண்ணி விட்டு, "அண்ணா, நீங்க இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போங்க"

"ஒன்னும் இல்ல கமலி, வீட்டுக்குப் போயிட்டுப் பாத்துக்கலாம். எல்லாரும் ஒன்னாவே பொங்கல் வச்சுட்டுப் போலாம்." என்றான்.

"அண்ணா, சொன்னா கேளுங்க. இது குலதெய்வக் கோவில். எனக்கும் கன்ஃபார்ம் தெரியல. ஆனா, நீங்க இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வீட்டுக்குப் போங்க. அம்மாவையும், பாப்பாவையும் நாங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடறோம். நீங்க அவளக் கூட்டிட்டுப் போங்க" என்று சொல்ல,

அவனுக்கும் அவள் சொன்ன பிறகு, 'அப்படி ஒன்று இருக்குமோ? இருந்தால்…’ என்று யோசிக்கும்போதே அவன் உடல் சிலிர்த்து அடங்கியது. அதைக் கண்மணியும் உணர்ந்தாள்.

கண்மணியைத் தோளோடு அணைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்குச் சென்று செக்கப் செய்ய, அவளது கர்ப்பம் உறுதியானது. இதை இருவரும் எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவளுக்கு நாள் தள்ளிப் போய் இருக்கிறது, என்பதைக் கூட கண்மணி உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருவருக்கும் அப்படி ஒரு ஆனந்தம். ஆனால், இருவருக்கும் தங்களது சந்தோஷத்தைக் கூடப் பரிமாறிக் கொள்ளத் தோன்றவில்லை. வேறொரு உலகத்தில் இருவரும் சஞ்சரித்தார்கள்.

நேராகக் கண்மணி வீட்டிற்கு தான் சென்றிருந்தார்கள். அனைவரும் மாலை போல் பொங்கல் வைத்துவிட்டுச் சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்க, கமலி பொங்கல் வைத்த பானையைச் சாமி ரூமில் வைத்துவிட்டு, அனைவரிடமும் சாமி கும்பிடுமாறு சொல்லிவிட்டு, கண்மணி அருகில் வந்து உட்கார்ந்த கமலி, "ஹாஸ்பிடல் போனியா, என்ன சொன்னாங்க?"

ஹாஸ்பிடலில் எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுத்து கமலியிடம் நீட்ட, அதைப் பார்த்த கமலிக்குக் கண்கள் கலங்க, அவளைக் கட்டிக் கொண்டு நெற்றியில் இதழ் பதிக்க, சங்கர் தான் "என்னதான் ஆச்சு, அவங்க ஹாஸ்பிடல் போனாங்களா இல்லையா? என்னன்னு நான் போன் பண்ணிக் கேட்கிறேன் என்று சொன்னதற்கும், போன் பண்ண வேணான்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்த… இங்கயும் அமைதியா இருங்கன்னு சொல்லிட்ட, எனக்கு ஒன்னும் புரியல" என்று புலம்பினான்.

ரிப்போர்ட்டை அவன் கையில் திணித்தவள், "உங்க தங்கச்சி மாசமா இருக்கா, நீங்க மாமா ஆகப் போறீங்க. நான் அத்தை ஆகிட்டேன். பத்மா அம்மா பாட்டி ஆகிட்டாங்க… நம்ப வீட்டுக்கு இன்னொரு குட்டிப் பாப்பா வரப்போகுது." என்று ராகியையும், கவினையும் ஆளுக்கு ஒரு பக்கத் தாடையில் முத்தம் வைத்துச் சொல்ல,

குழந்தைகள் இருவருக்கும் அப்படி ஒரு சந்தோஷம். குதூகலமாகக் குதித்து விட்டு இருவரும் கண்மணியிடம் சென்று "அப்படியா?" என்று கேட்க,

அவள் "ஆமாம்" என்று தலையாட்டிச் சிரிக்க, இருவரும் அவளது வயிற்றில் முத்தமிட்டு விட்டு, “சீக்கிரம் இன்னொரு குட்டிப் பாப்பா வீட்டுக்கு வரப்போகுது.” என்று சிரித்தார்கள்.

வினோத்திற்கு கண்கள் கலங்கியது. கமலி சங்கரிடம் வினோத்தைக் கண் காட்ட,

"மச்சான், ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? .சந்தோஷமான விஷயம் தானே" என்று அவன் தோளில் கை போட, அவனை வேகமாகக் கட்டி அணைத்த வினோ, "சந்தோஷமான விஷயம் தான் மச்சான். ஆனா, இப்படி ஒரு விஷயத்தை நானும் சரி, கண்மணியும் சரி, எதிர்பார்க்கல. நாங்க இதப்பத்தி யோசிக்கக் கூட இல்லைன்னு சொல்லணும். இது எங்களுக்குக் கிடைச்ச பெரிய வரம்" என்று சிலாகித்துக் கூற,

"இனி எல்லாமே நல்லதா நடக்கும். வாங்க சாமி கும்பிடலாம்" என்று விட்டு வீட்டில் சாமி கும்பிட்டு விட்டு வர,

"அப்பா, என்னைத் தூக்கு" என்று ராகி சொல்ல, "நம்ம வீட்டுக்கும் குட்டிப் பாப்பா வரப் போதே" என்று தன் அப்பாவின் கன்னத்தில் முத்தம் வைக்க,

"ஆமாம் டா தங்கம். எல்லாம் உங்களால மட்டும் தான்" என்று சொல்லி அவளது நெற்றியோடு நெற்றி முட்டிவிட்டு, மூக்கோடு மூக்கு உரச, "ஓ! அப்போ ராகிமா அப்பா செல்லம் தானா?" என்று கண்மணி முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்க,

"இல்லையே, அம்மா செல்லமும் தான், வாங்க" என்று கைவிரிக்க, அவளைக் கண்களால் வினோ அருகில் அழைக்க, மகளைக் கையில் ஏந்திக் கொண்டு, மனைவியைத் தோளோடு அணைத்து, அவளது தலையோடு தலை முட்டிச் சிரிக்க, "அத்தை நானு…” என்றான் கவின்.

அவனையும், “வாடா" என்று மூவரும் ஒரே போல் அழைக்க, அவனைக் கண்மணி தூக்கிக் கொள்ள மொத்தக் குடும்பமும் இவர்கள் குடும்பமாக சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தவர்கள், இவர்களின் சந்தோஷம் எப்பொழுதும் நீடித்திருக்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணி விட்டு அவர்களைப் பார்த்துக் குடும்பத்துடன் ஆனந்தமாக மகிழ்ந்தார்கள்.

அவர்களைப் போல நாமும் கண்மணி, வினோத் இருவரது வாழ்வும் இப்பொழுது போல் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்றும், இவர்கள் வீட்டிற்கு வரவிருக்கும் புதுவரவோடு சேர்த்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் வாழ்த்தி அவர்களிடம் இருந்து விடை பெறுவோம்.

….……………………………..சுபம்……………………………….
 
Top