எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 15

அத்தியாயம் 15​

திருமண வரவேற்பு முடிந்து இருவாரங்கள் ஆகின. கார்த்திக்கும் காவ்யாவும் இந்த வாழ்க்கைக்கு ஓரளவு பழகிக் கொண்டனர்.​

காலையில் எப்பொழுதும் போல் சமையல் வேலையை காவ்யா பார்த்தால் சித்துவை எழுப்பி கார்த்திக் கிளப்புவான்.​

காவ்யாவிடம் அடம் பிடிக்கும் சித்து கார்த்திக்குடன் அமைதியாக கிளம்புவான். அப்படியே கார்த்திக்குடன் நன்றாக ஒட்டிக்கொண்டான் சித்து.​

அவர்களைப் பார்த்த காவ்யாவிற்கு சிறு பொறாமையாகக் கூட இருக்கும். காவ்யாவே சித்துவை பள்ளிக்கு அழைத்து செல்வாள். சில சமயம் சித்துவின் அழுகையால் கார்த்திக் அழைத்து செல்வான்.​

ஏனோ அந்த சமயம் எல்லாம் காவ்யாவிற்கு, ‘தான் தனியாக உள்ளதாக’ உணர்வாள்.​

“ச்ச சித்து குழந்தை. என்ன இருந்தாலும் நானில்லாம அவன் இருக்கமாட்டான். கார்த்திக்கும் சித்துவை என்கிட்ட இருந்து பிரிக்கலாம் பார்க்கமாட்டாரு” என தனக்குள் சொல்லிக் கொள்வாள்.​

அவள் நினைத்ததை போல் சித்து கார்த்திக்குடன் உறவாடினாலும் இரவில் உறக்கத்திற்கு காவ்யாவிடமே வந்துவிடுவான்.​

அவர்கள் இருவரின் உலகத்தில் கார்த்திக் தலையிடமாட்டான். தூரத்தில் இருந்தே அவர்களின் பிணைப்பைப் பார்த்து ரசிப்பான்.​

தொடர்ந்து ஒவ்வொரு வாரயிறுதியிலும் யாராவது அவர்களின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்ததால் ஒரு மாதம் கழித்து தான் பார்க் செல்ல முடிந்தது.​

ஆனால் இம்முறை கார்த்திக், காவ்யா மற்றும் சித்து மூவரும் ஒரே குடும்பமாக சென்றனர்.​

அந்த பார்க் அவர்களுக்கு நிறைய நினைவுகளை அள்ளித் தந்தது. முதலில் அவர்கள் சந்தித்தது, சண்டையிட்டது பின் திருமணத்திற்கு சம்மதித்தது என அனைத்தும் அவர்களின் நினைவில் வந்து சென்றது.​

“வாங்க கார்த்தி அங்கிள். விளையாட போகலாம்” என சித்து கார்த்திக்கை இழுத்துச் சென்றுவிட்டான்.​

காவ்யா அவளின் விருப்பமான இறகு பந்து விளையாடுபவர்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.​

சிறிது நேரம் சித்துவுடன் விளையாடிய கார்த்திக், சித்துவை சிறு குழந்தைகளுடன் பந்து விளையாட அனுப்பிவிட்டு காவ்யாவிடம் சென்றான்.​

"எழுந்துரு காவ்யா.."​

"எ.. என்ன.? என்னாச்சி கார்த்திக்?" என புரியாமல் விழித்துக் கொண்டே எழுந்தவளின் கையை பற்றியவன் அவளிடம் அந்த இறகு பந்து விளையாடும் ராக்கெட்டை கொடுத்தான்.​

கைகள் நடுங்க அதை வாங்கியவள், "இல்லை நான் விளையாடல.." என ஒதுங்கப் பார்த்தாள்.​

"அன்னைக்கு கௌதம் நீ நல்லா விளையாடுவன்னு சொன்னான். அதெல்லாம் பொய் தான் போல?" என வேண்டுமென்றே அவளை சீண்டினான்.​

அவனின் முயற்சியை புரிந்தவள், "எனக்கு நல்லா விளையாட தெரியும். ஆனா இப்ப விளையாட விருப்பம் இல்லை!”​

“இப்பன்னா? இன்னைக்கா இல்ல என்னைக்குமே வா?”​

நன்றாக மூச்சை இழுத்துவிட்டவள், “என்னைக்கும் தான்” என்றாள்.​

‘எதுக்கு இப்படி சொல்லுறா?’ என புரியாமல் பார்த்தவன், “ஏன்?” என்றான்.​

“அது.. ர.. ரமேஷ் இறந்ததுல இருந்து இதெல்லாம் விட்டுட்டேன்” என்றாள் உள்ளே போன குரலில்.​

திருமணத்திற்கு பின் துணையை இழந்த பெண்களுக்கே உண்டான கட்டுப்பாடுகள் அது!​

துணையை இழந்த பெண்கள் பிடித்த எதையும் செய்யக் கூட யோசிக்க வேண்டிய நிலை!​

“உன்னோட செயல் அடுத்தவரின் கவனத்தை ஈர்க்காமல் இருக்க வேண்டும்” என காவ்யாவிற்கு அவளின் மாமியார் அறிவுரைகளை வாரி வழங்கி இருக்கிறார்.​

அதனால் வெளியே செல்வதையே குறைத்துக் கொண்டவள், தனியாக வந்ததும் தான் சித்துவிற்காக வெளியே செல்லத் தொடங்கினாள்.​

காவ்யா கூறியதைக் கேட்டவனுக்கு ‘இதெல்லாம் ஒரு காரணமா?’ என்று தோன்றினாலும் வெளியே,​

“இப்ப நீ என்னோட மனைவி தான?” பட்டென கேட்டான்.​

அவன் கேள்வியில் தூக்கிவாரிப் போட நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.​

இருவரின் பார்வையும் இருவரின் விழிகளைத் தீண்டிச் சென்றது.​

“சொல்லு காவ்யா? இப்ப நீ என்னோட மனைவி தான?” மீண்டும் அவளின் கண்களை ஊடுருவிப் பார்த்து அழுத்தத்துடன் கேட்டான்.​

“ஆ.. ஆமா.. ஆனா? சித்துக்காக தான கல்யாணம்..” என அவள் முடிக்கும் முன்,​

“யெஸ் சித்துக்காக தான்! அப்படி இருந்தாலும் நீயும் நானும் இப்ப கணவன் மனைவி தான?” என மீண்டும் கேட்டான்.​

ஆமா என தலையசைத்தவளிடம், “உன்கிட்ட கல்யாணத்துக்கு பேசுறப்பவே.. நீ! நீயா இருக்கலாம்னு சொல்லிருக்கேன். சோ உனக்கு பிடிச்சதை செய்ய யாரும் தடை சொல்ல முடியாது காவ்யா! இனி யார் என்ன சொன்னாலும் நான் பேசிக்கிறேன்” என்று அழுத்தத்துடன் சொன்னான்.​

காவ்யாவிற்கும் விளையாடப் பிடிக்கும். ஆனால், சும்மா இருக்கும் பொழுதே லட்சுமி மாதிரி ஆட்கள் பேசுவதால் ஆசை இருந்தும் மனதிற்குள் மறைத்து வைத்தவள் இன்று கார்த்திக் வலுக்கட்டாயமாக சொன்னதும் “சரி” என்று ஒத்துக் கொண்டாள்.​

காவ்யா, கார்த்திக் இருவரும் எதிரெதிரே ஆடினார்கள். முதலில் திணறியவள் பின் கார்த்திக்கிற்கு ஈடு கொடுத்து ஆடினாள்.​

“நல்ல விளையாடுற காவ்யா! எப்படி இப்படி விளையாடுற?”​

“காலேஜ் சாம்பியன்!” என சொல்லி சிரித்தவள், “தேங்க்ஸ்! கார்த்திக்” என்றாள்.​

“அட இதுல என்ன இருக்கு? எவ்வளவு நாள் தான் சுமாரா விளையாடுற கௌதம் கூட விளையாடுறது? இப்ப தான் ஒரு சாம்பியன் வந்துட்டாங்களே!” என கிண்டலாக கூறினான் கார்த்திக்.​

அவள் முறைப்பதை பார்த்து, “சும்மா..” என்றவன் நகர்ந்ததும்,​

“மம்மி சூப்பரா விளையாடுனீங்க” என ஓடி வந்தான் சித்தார்த்.​

“சித்து குட்டி இவ்வளவு நேரம் என்ன பண்ணீங்க?”​

“நான் சினேகா கூட விளையாடினேன்” என்றவனிற்கு தண்ணீர் கொடுத்தாள். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய மூவரும் மனநிறைவுடன் இருந்தனர்.​

அன்றிரவு உணவு முடித்து உறங்க செல்லும் பொழுது, “மம்மி இனிமே நான் கார்த்தி அங்கில அப்பான்னு கூப்பிடணுமா?” என கேட்ட சித்துவின் கேள்விக்கு இருவரும் அதிர்ந்தனர்.​

கார்த்திக், “உன்கிட்ட அப்படி யாரு சொன்னா சித்து?”​

“சினேகா தான் சொன்னா..”​

‘குழந்தைகள் என்ன பேசினரோ இவன் இப்படி வந்து கேட்கிறானே?’ என யோசித்த கார்த்திக்,​

“உனக்கு என்னை எப்படி கூப்பிட பிடிக்குதோ அப்படியே கூப்பிடு” என்று சித்துவிடம் சொல்லிவிட்டு காவ்யாவைப் பார்த்தான்.​

காவ்யா, ‘சித்து என்ன சொல்ல போகிறானோ?’ என பீதியுடன் சித்துவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.​

தாடையில் விரல் வைத்து யோசித்தவன், “கார்த்திப்பான்னு கூப்பிடவா?” என்றான் கண்கள் மின்ன.​

அவன் சொல்வதை கேட்டதும் கார்த்திக்கின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பெற்றால் தான் பிள்ளையா? இங்கே தன் முன் இருப்பவன் தன்னை அப்பா என்று அழைத்ததும் தாய்மையை உணர்ந்தானே கார்த்திக்!​

கண்கள் கலங்க உணர்ச்சிவசப்பட்ட கார்த்திக் கரகரப்பான குரலில், “மறுபடி சொல்லு சித்து” என்றான்.​

“கார்த்திப்பா! கார்த்திப்பா! கார்த்திப்பா!” என கத்திவிட்டு அறைக்குள் ஓடிவிட்டான்.​

சித்து கூறியதும் சிலையாக நின்றவளிடம் “அவன் அப்படி சொன்னது உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையே காவ்யா?” எனக் கேட்டான்.​

என்றாவது இதுபோல் நடக்கும் என நினைத்திருந்தாள். ஆனால் இவ்வளவு விரைவாக நடக்கும் என எதிர்பாராதவள் இல்லை என்னும் விதமாக தலையை அசைத்துவிட்டு அறைக்குத் திரும்பினாள்.​

மறுநாள் காவ்யாவின் வண்டியில் பிரச்சனையாக இருக்க கார்த்திக்குடனே காவ்யாவும் சித்துவும் கிளம்பினர். இம்முறை முன்னாடி சித்து அமர்ந்துக்கொள்ள காவ்யா மட்டும் பின்னாடி அமர்ந்து கொண்டாள்.​

சித்துவின் பள்ளி வந்ததும் காவ்யாவும் சித்துவும் இறங்கிக் கொண்டார்கள். அவன் கீழே இறங்கியதும் அவனை நோக்கி அவனுடன் பயிலும் ஒரு குழந்தை ஓடி வந்தான்.​

அவனிடம் சித்து, “இது தான் என்னோட கார்த்திப்பா. எனக்கும் இப்ப டாடி வந்துட்டாங்க” என மகிழ்வுடன் சொன்னவன் அந்த சிறுவனுடனே உள்ளே சென்றுவிட்டான்.​

அவன் சொல்லிவிட்டு சென்றதையே காவ்யா யோசித்தாள். ‘சித்து மனதளவில் தந்தையை தேடியிருக்கிறான்!’ என்று தெரிந்துக் கொண்டவளுக்கு தன் மகனை தான் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ? என்று குற்றவுணர்வு வந்தது. அது அவளின் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது.​

அவளின் நிலையை உணர்ந்த கார்த்திக், “சின்ன பசங்க இப்படி தான் ஏதாவது பேசிப்பாங்க காவ்யா. நீ எதையும் யோசிக்காம வேலைக்கு போ” என ஆறுதலாய் கூறிவிட்டு சென்றான்.​

நாட்கள் செல்ல செல்ல சித்து மற்றும் கார்த்திக்கின் நெருக்கம் மேலும் அதிகமாகியது.​

கார்த்திக் அலுவலகத்தில் இருந்து வந்ததும் அவனையே வால் பிடித்துக்கொண்டு சுற்றுவான் சித்து.​

காவ்யாகூட “அவங்கள தொந்தரவு பண்ணாத சித்து” என கண்டித்திருக்கிறாள்.​

ஆனால் சித்து தான் கேட்டதாய் இல்லை. கார்த்திக்கிற்கு அவனது வாழ்க்கையில் திடீரென்று பல வண்ணங்கள் நிறைந்த வானவில் தோன்றியதைப் போல் இருந்தது. தினமும் சித்துவின் முகத்தில் விழிப்பவன், காவ்யா சித்துவிற்கு சொல்லும் கதையில் உறக்கம் கொள்வான்.​

ஒவ்வொரு நாளும் சித்துவின் சேட்டையில் தன்னையே தொலைத்தான்.​

சித்துவிற்கு பள்ளி முடிந்து முழுஆண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. காவ்யா தினமும் அவனையும் அவளுடன் அழைத்துச் சென்றுவிடுவாள்.​

கோடை விடுமுறை என கார்த்திக்கின் அக்கா பையன் சந்துரு மற்றும் கார்த்திக்கின் அன்னை விசாலாட்சி, தந்தை சுந்தரம் கார்த்திக்குடன் தங்குவதற்கு வந்தனர்.​

ஒருநாள் கூடத்தில் ஃபோனில் உள்ள கேமில் விளையாடிக் கொண்டிருந்த சந்துருவின் அருகில் சென்று அவன் விளையாடுவதைப் பார்க்க முற்பட்டான் சித்தார்த்.​

காவ்யா இதுவரை ஃபோனை சித்துவிற்கு பழக்கப்படுத்தியதில்லை. டிவியில் மட்டுமே அவன் பார்க்கும் கார்டூனை காட்டுபவள் அவனை ஃபோனில் கேம் விளையாட அனுமதித்ததில்லை.​

எனவே சந்துருவை பார்த்ததும் அவனிடம் ஓடிவிட்டான் சித்தார்த்.​

ஆனால் சந்துரு சித்துவிற்கு காட்டாமல் “பாட்டி..” என விசாலாட்சியை அழைத்து குறை சொன்னான்.​

விசாலாட்சி, “நீ உள்ள போய் விளையாடு போ..” என சித்துவை துரத்திவிட்டார்.​

கிச்சனில் இருந்தவாறே அனைத்தையும் கேட்ட காவ்யா, “சித்து! மம்மி கிட்ட வா” என அவனை அழைத்தாள்.​

ஆனால் சித்துவின் கையில் கார்த்திக் அவனது ஃபோனை கொடுத்து “நீ இதுல விளையாடு” என்றான்.​

உடனே வெளியே வந்த காவ்யா, “என்ன பண்ணுறீங்க கார்த்திக்? அவனுக்கு இப்பவே எதுக்கு ஃபோன்?”​

“சும்மா கொஞ்ச நேரம் பார்த்துட்டு வாங்கிடுவேன் காவ்யா” என்றான்.​

சித்துவின் கையில் இருந்த ஃபோனை பார்த்த சந்துரு அவனிடம் வந்து எப்படி விளையாடுவது என சொல்லிக் கொடுத்தான்.​

அதுவரை சித்துவை கண்டுகொள்ளாத சந்துரு, இப்பொழுது அவனே வந்து சித்துவுடன் விளையாடுவதைப் பார்த்த காவ்யா உள்ளே சென்றாள்.​

கார்த்திக், “இவ்வளவு தான்மா சின்ன பசங்க உலகம். இதுல நம்மள மாதிரி பெரியவங்க போய் தேவையில்லாத சண்டையை கிளப்ப கூடாது!” என விசாலாட்சியை கடிந்து கொண்டவன்,​

அதன் பிறகு அங்கிருந்தவரை சந்துருவை ஃபோன் உபயோகப்படுத்தாதளவுக்கு அவனையும் சித்துவையும் பார்த்துக் கொண்டான் கார்த்திக்.​

 
Top