எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 16

அத்தியாயம் 16​

அந்த மாலை வேளையில் ஒரு ஹோட்டலில் கார்த்திக் காவ்யா மற்றும் சித்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.​

வெளியே செல்ல வேண்டும் என்ற சித்துவின் பிடிவாதத்தால் இங்கு வந்திருந்தனர்.​

“ஐஸ் கிரீம் வேணும்! ஐஸ் கிரீம் வேணும்!” என குதித்த சித்துவிடம், “சாப்பாட்டை முழுசா சாப்பிட்டால், ஐஸ் கிரீம் வாங்கித் தரேன்” என கார்த்திக் பேரம் பேசினான்.​

அதனால் அமைதியாக சாப்பிட்டவனுக்கு அவன் கேட்கும் ஐஸ் கிரீமை வாங்கிக் கொடுத்தான்.​

உண்டு முடித்ததும் கிளம்பலாம் என எழுந்தவர்களை,​

"ஹலோ கார்த்திக்!" என்று அழைத்தபடி ஒரு மங்கை கார்த்திக்கை நெருங்கினாள்.​

அவளை பார்த்தவுடன் அவள் யாரென கண்டுகொண்டவன், "வா காவ்யா போகலாம்" என காவ்யா மற்றும் சித்துவை அழைத்துக் கொண்டு சென்றான்.​

அவ்வளவு நேரம் இருந்த இதம் மறைந்து கார்த்திக் இறுக்கமானான்.​

வழி முழுக்க இறுகிய முகத்துடன் வந்தவனை கலவரமாக காவ்யா பார்த்தாலும் அவனிடம் ஒரு வார்த்தை கூட கேட்க முனையவில்லை.​

சித்துவோ வரும் வழியிலே காவ்யாவின் மடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.​

வீடு வரும் வரை காரில் மௌனமே ஆட்சி செய்தது. அவர்களின் அபார்ட்மென்டில் காரை நிறுத்தியவன் சித்துவை தூக்கிக்கொண்டான். காவ்யா அவனை பின் தொடர்ந்தாள்.​

சித்துவை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு கார்த்திக் வெளியே வந்தான்.​

உடை மாற்றி வந்த காவ்யா கண்டது, வராண்டாவில் இருட்டில் விட்டத்தை பார்த்தவாறு சோபாவில் சாய்ந்தமர்ந்திருந்த கார்த்திக்கை தான்.​

அவனிடம் சென்று பேச தயக்கம் இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, "அவங்க யார் கார்த்திக்?" என வினவினாள்.​

நிமிர்ந்து அவளை பார்த்தவனின் கண்கள் சிவந்திருக்க, "சொல்ல கூடாதுன்னா பரவாயில்லை கார்த்திக்.." என்று காவ்யா எழ பார்த்தாள்.​

அவளின் கைபிடித்து அருகில் உட்கார வைத்துக் கொண்டவன் அவளை பற்றி கூற தொடங்கினான்.​

முதலில் அவனுக்கு சரஸ்வதியுடன் முடிவாகிய திருமணத்தையும் அதனின் தோல்வியையும் கூறினான். பின், இரண்டாம் முறை தனக்கு ஏற்பாடாகியதை சொல்வதற்கு மிகவும் தயங்கினான்.​

"ஈசி கார்த்திக்! நீங்க இவ்ளோ கஷ்டப்படணும்னு அவசியமே இல்லை!" என அவனின் கையை அழுத்திக் கூறினாள்.​

ஒரு நீண்ட பெருமூச்சினை எடுத்துவிட்டவன், "இன்னைக்கு பார்த்தவளோட பெயர் கீர்த்தி. அவளை தான் எனக்கு இரண்டாவதாக கல்யாணத்துக்கு பேசியது" என்றான்.​

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்தவள் 'ஏற்கனவே ஒரு இழப்பை அனுபவித்தவர். இந்த திருமணம் எந்த காரணத்தால் நின்றதோ?' என கலக்கமாக கார்த்திக் சொல்வதை கேட்டாள்.​

"அன்னைக்கு எங்க என்கேஜ்மென்ட்! ஆனா? அன்னைக்கு காலைல கீர்த்தி கால்ல கொதிக்குற பால் கொட்டிடுச்சி போல. ஏற்கனவே சரோ இறந்ததையும் இதையும் சேர்த்து பேசி.. எ.. எனக்கு தான் ஏதோ தோஷம்! அதான் என்னை கல்யாணம் பண்ணிக்க போறவங்களுக்கு இப்படி நடக்குதுன்னு கல்யாணத்தை நிறுத்திட்டாங்க” என்றவனுக்கு அன்றைய நாளின் நினைவில் முகம் கசங்கியது.​

அதன் பிறகு உற்றத்தார், சுற்றதாரின் தூற்றலில் கார்த்திக் மிகவும் துவண்டு போனான்.​

சொல்லி வைத்தது போல் அனைவரும் கார்த்திக்கின் “ஜாதகம் தான் சரியில்லை!” என கதைக்கட்டி விட்டனர்.​

“தன்னால் தானோ? தன்னால் தான் சரோ இறந்தாளோ?” என்று நினைத்தவன் திருமணம் என்ற சொல்லையே கேட்காத இடத்திற்கு செல்ல முடிவெடுத்தான். அதில் வெற்றியும் கண்டான். அதிலிருந்து தான் தன் வீட்டிற்கு செல்வதையே முழுவதுமாக நிறுத்திக் கொண்டான்.​

அருகில் உள்ள தண்ணீரை காவ்யா கார்த்திக்கிற்கு கொடுத்தாள். அதை வாங்கி பருகியவன், “அதுக்கு அப்புறம் நான் சென்னை வந்துட்டேன். ஒரு ஆறு மாசம் கழிச்சி கீர்த்தியை பார்த்தேன். நான் கண்டுக்காம போய்ட முயற்சி பண்ணேன். ஆனா அவளா என்கிட்ட வந்து பேசினா” என்று இடைவெளிவிட்டவன்,​

“என்கிட்ட வந்து சாரி சொன்னா காவ்யா” என்றான் விரக்தியுடன்.​

‘எதற்கு?’ என்று கேட்காமல் அவனாக சொல்லட்டும் என்று இருந்தாள்.​

“அன்னைக்கு பால் கொட்டுனது தற்செயலா நடந்தது இல்லை. அவளே வேணும்னு தான் பண்ணேன்னு சொன்னா” என்று சொல்லிவிட்டு கசப்புடன் சிரித்தான்.​

“என்ன? ஆனா எதுக்கு கார்த்திக்?” என அதிர்ச்சியில் கேட்டவளிடம்,​

“அவ வேற யாரையோ விரும்பிருக்கா போல. வேற ஜாதின்னு அவங்க வீட்ல ஒத்துக்கலை. என்னை பத்தி அவங்க வீட்ல பேசுனதும் எனக்கு ஏற்கனவே கல்யாணம் நின்னு போய்டுச்சின்னு தெரிஞ்சிக்கிட்டு அத வெச்சே பிளான் பண்ணிருக்கா”​

“அதுக்கு அப்புறம் அவங்க வீட்ல நம்ம பொண்ணு உயிரோட இருந்தாலே போதும்னு அவ விரும்பினவனுக்கே கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்களாம்”​

“இதையெல்லாம் சொல்லி அன்னைக்கு என்கிட்ட மன்னிப்பு கேட்டா. மன்னிக்கிறதுக்கு நான் கடவுள் இல்லையே! அந்த நேரம் என்னால எதுவும் பேசக் கூட முடியல. அப்படியே வீட்டுக்கு வந்துட்டேன். அதுக்கு அப்புறம் இன்னைக்கு தான் அவளை பார்க்கிறேன்” என சொல்லி முடித்தவனின் முகத்தை துடைத்து வைத்தது போல் நிர்மலமாக இருந்தது.​

‘இப்படி கூட செய்வார்களா? யார் எப்படி போனாலும் பரவாயில்லை. தான் காதலித்தவருடன் சேர வேண்டும் என்று அடுத்தவரின் வாழ்க்கையை இப்படி பண்ணுவாங்களா?’ என யோசித்தவள் அதை அப்படியே கார்த்திக்கிடம் கேட்டாள்.​

“என்கிட்ட ஒருவார்த்தை சொல்லிருந்தா? நானே அந்த திருமணத்தை நிறுத்தியிருப்பேன். என்ன? என்னைய வெச்சி அவங்க காரியத்தை சாதிச்சிக்கிட்டாங்க” என்றான் விரக்தியுடன்.​

“விடுங்க கார்த்திக். தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு சொல்லுவாங்க தான? அத மாதிரி நினைச்சிக்கோங்க. ஒருவேளை உங்கள கல்யாணம் பண்ணி உங்க கூட வாழமுடியாம போயிருந்தா என்ன பண்ணிருப்பீங்க?”​

“அதே தான் காவ்யா நானும் கேட்கிறேன்? காதலிச்சவங்க சேர்ந்துட்டாங்கன்னு சொல்லுறாங்களே! ஆனா, மணவறை வரைக்கும் வந்த இன்னொருத்தரோட நிலைமையை இங்க யாரும் யோசிக்கிறதே இல்லையே!”​

“எனக்கு புரியுது. கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் வேற ஒருத்தரோட வாழ முடியாது தான், ஆனா அட்லீஸ்ட் உங்களோட என்னால வாழ முடியாதுன்னு கூட அவங்களால சொல்ல முடியாதா?” என சரமாரியாகக் கேட்டான்.​

அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவளிடம், “கீர்த்தி என்ன சந்திச்சு பேசுன விஷயம் எங்க வீட்ல யாருக்கும் தெரியாது. தெரிஞ்சா எங்க அம்மா வீடு தேடி சண்டை போட கிளம்பிடுவாங்க” என சொல்லி சிரித்தவன்,​

“தப்பி தவறி கூட நீயும் எதுவும் சொல்லிடாத காவ்யா” என்றான்.​

காவ்யாவை தனக்கு நெருக்கமாக நினைத்தான் போல. தன் மனதில் இருந்த அனைத்தையும் அன்று அவளுடன் கார்த்திக் பகிர்ந்து கொண்டான்.​

‘என்ன மாதிரியான மனிதன் இவன்? நிச்சயம் அவளால் இவருக்கு பாதிப்பு அதிகமாகவே இருக்கும். ஆனாலும் இந்த விஷயத்தை அனைவரிடமும் மறைத்து வைத்திருக்கிறானே!’ என அவனின் நிலை அவளிடம் உயரவே செய்தது.​

“மணி பன்னிரண்டு ஆகுது காவ்யா. தூங்கப் போகலாம் வா” என அதுவரை கோபமாகவும் சோகமாகவும் விரக்தியிலும் பேசியவன் தெளிந்துவிட்டான் என்று அவனின் பேச்சில் புரிந்து கொண்டாள்.​

__________​

ஒருவாரம் சென்றிருக்க, அன்று கார்த்திக் வரும் பொழுதே கையில் ஒரு படிவத்தை கொண்டுவந்தான்.​

“இனி சித்து வேற ஸ்கூல் போகட்டும்” என்றான் காவ்யாவிடம்.​

“ஏன்? இந்த ஸ்கூல்ல நல்லா தான சொல்லி கொடுக்குறாங்க? அதுமில்லாம, நான் பக்கத்துல இருக்குறதால நானே பார்த்துக்கிறேனே?” என காவ்யா கேட்டாள்.​

“இந்த புது ஸ்கூல் ரொம்ப பெயர் பெற்றது காவ்யா. உனக்கு தெரியாம இருக்காது. இங்க இப்பவே சேர்த்தா தான் உண்டு. படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லையே! இன்னும் நிறைய கத்துக்கணும். இந்த ஸ்கூல் தான் அதுக்கு சரி வரும்” என்றான் கார்த்திக் முடிவாக.​

அந்த படிவத்தில் இருந்த பள்ளியின் பெயரை பார்த்ததுமே அங்கு வாங்கும் கட்டணத்தை தெரிந்துக் கொண்டாள்.​

கார்த்திக்கை திருமணம் முடித்தத்தில் இருந்து காவ்யா ராஜேஷ் கொடுக்கும் கடையின் வருமானத்தைத் தொடக்கூட இல்லை. அனைத்தையும் கார்த்திக்கே பார்த்துக்கொண்டான்.​

ஆனால் இப்பொழுது பள்ளி மாற்ற வேண்டுமென்றால், கண்டிப்பாக அதிகமாகவே செலவாகும் என யோசித்தவள் தயக்கத்துடன்,​

“அது.. சித்து பெயர்ல இருக்க கடைல இருந்து வர காசுல பீஸ் கட்டிடலாமா? இங்க பீஸ் அதிகமா இருக்குமே?” என்றாள்.​

அதில் வெகுண்டவன், “என்ன பேசுற? சித்து எனக்கும் பையன் தான். அவனுக்கு செலவு பண்ணுறத நான் எதுக்கு கணக்கு பார்க்கணும்? கல்யாணம் முடிந்ததுமே இனி நீங்க ரெண்டு பேரும் என்னோட பொறுப்புன்னு சொல்லிருக்கேன் தான?” என குரலை உயர்த்தினான்.​

அதில் சற்று மிரண்டவள் ‘ஆமா’ என தலையை மட்டும் ஆட்டினாள்.​

“எல்லாத்துக்கும் மண்டையை மட்டும் ஆட்டு. நான் தான் உங்கள என்னோட குடும்பமா பார்க்குறேன் போல ஆனா நீ அப்படி பார்க்கல..” என வேதனையுடன் சொன்னான்.​

ஏனோ! காவ்யாவால் சட்டென்று அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சித்துவிற்காகவாது ஏற்றுக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்த பின் கார்த்திக்கிடம் சென்று, “அந்த ஸ்கூல்லயே சேருங்க. நீங்களே பீஸ் கூட கட்டுங்க. நான் எதுவும் தடுக்கமாட்டேன்” என அவனின் முகம் பார்த்து சொல்லிவிட்டாள்.​

அப்பொழுது தான் கார்த்திக்கிற்கு நிம்மதியே வந்தது. ‘எங்கே காவ்யா மறுப்பு தெரிவிப்பாளோ?’ என்று தான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தான்.​

வாழ்க்கை இப்படியே செல்வதில்லையே!​

ஒருவித அமைதி கலந்த நிம்மதியுடன் சென்ற அவர்களின் வாழ்க்கையில் புயலாக காவ்யாவின் முன்னாள் மாமியார் மங்கலம் வந்தார்.​

அன்று ஃபோன் போட்டு காவ்யாவிடம் பேசினார். அவர் கூறியதைக் கேட்டவள் உறைநிலைக்கே செல்ல, கார்த்திக் தான் அவளை நிகழ்வுக்கு கொண்டுவந்தான்.​

பின் அவளிடம் என்ன ஏதென்று கேட்க அவர் கூறியதை முழுவதாக சொன்னவள், "எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது கார்த்திக்..?" என அவனின் கைபிடித்து அழுகையில் வெடித்தாள்.​

இப்படி அழுது புலம்பியவளைப் பார்க்க பார்க்க அவனின் மனது ஏதோ செய்தது. அவளின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் செய்யத் துடித்த கரங்களை முயன்று கட்டிப்படுத்திக் கொண்டான்.​

அவளின் துடிப்பைப் பார்த்து இவன் மனது வேகமாகத் துடித்தது!​

‘நிச்சயமா இதுக்கு நாம தான் ஏதாவது செய்யணும்’ என திடமாக முடிவெடுத்தான்.​

அதன் விளைவு மறுநாளே மூவரும் மங்கலத்தின் வீட்டிற்குச் சென்றனர்.​

 
Top