priya pandees
Moderator
அத்தியாயம் 1(1)
"ஹரே ராம! ஹரே ராம! ஹரே ராம! ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே!"
என ஒலித்துக் கொண்டிருந்த ஆஞ்சநேயர் கோவில் சன்னதியில் அவர் முன் கைக்கூப்பி நின்றிருந்தான் யாழ்நிலவன். அவன் வாயும் அவர் நாமத்தைத் தான் விடாமல் சொல்லிக் கொண்டிருந்தது.
தீர்த்தமும், ஜடாரியும் கொண்டு வந்த ஐயர், "எப்டி இருக்கேள் தம்பி, போன வாரம் வரலையே? ஊருக்குப் போய்ட்டேளோ?" என்றார், அவனுக்குத் தீர்த்தம் கொடுத்தவாறு.
‘ஆமா’ என லேசாகத் தலையசைத்தான் அவன் பதிலாக, நான்கு வருடங்களாகத் தொடர்ந்து வருவதால் இருவருக்கும் அந்தப் பரிச்சயம்.
"ஊருல எதும் விஷேசமா போனீரோ தம்பி? சீக்கிரம் பொம்மனாட்டியோட வரப் பிராப்பிரஸ்து"
எனக் கூறிச் சிரித்தவர், இவனைப் பார்த்தவாறே அடுத்து நின்றவரிடம் நகர, இவனும் இதழ் பிரியாமல் சிரித்து, அமோதிப்பாகத் தலையசைத்துக் கிளம்பி வெளியே வந்து விட்டான். சுற்றுப் பிரகாரம் வந்து இரண்டு நிமிடம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தவன், கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு எழுந்து கொண்டான்.
அது சென்னையின் ஒரு பகுதியான அண்ணா நகர், கோவிலிருக்கும் தெருவிற்கு பின்னாலிலிருந்த தெருவில் தான் அவன் வீடு என்பதால் நடந்தே வந்து செல்வது தான் அவன் வழக்கம். சனிக்கிழமைகளில் காலையில் தவறாது ஆஞ்சநேயர் தரிசனம் செய்திடுபவனுக்கு அதில் ஒரு திருப்தி. அந்த ஏரியாவில் தான் நான்கு வருடங்களாக இருக்கிறான் என்பதால் அங்கிருந்த அனைவருக்குமே அவன் பரிச்சயம். அவன் ஒரு பேச்சிலர், வாத்தியார் உத்தியோகம், அசலூர்க்காரன், அதிகம் பேசமாட்டான், கொஞ்சம் கறார்பேர்வழியென அவனைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
அவன் வீட்டு தெருமுனையில் திரும்புகையிலேயே, வீட்டின் முன் நின்ற இருவரையும் கவனித்து விட்டான். அதிலும் அப்பாவின் அருகில் பவ்யமாக நின்றவள் மேல் அவன் பார்வை அளவிற்கு அதிகமாகவே படிந்தது. அவர்களை நெருங்கும் முன் அவளை மேலிருந்து கீழ் முழுமையாக ஸ்கேனும் செய்து விட்டான்.
‘எவ்வளவு சொன்னாலும் கேக்றதில்ல.’
பல்லைக் கடித்தவன் முறைத்துப் பார்க்க, அதுவரை அவன் நடந்து வருவதைப் பார்ப்பதும் பார்க்காதது போல் திரும்புவதுமாக ஓர பார்வையில் அவனைத்தான் பார்த்திருந்தாள் அவள். கல்லூரியில் எப்போதும் ஃபுல் ஃபார்மலாக வருபவனுக்கும், இப்போது சாதாரண டீஷர்ட் ட்ராக்கில் இருப்பவனுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவள், அவன் முறைப்பில்,
‘இப்ப என்னத்துக்கு முறைக்கறாங்க, ஒருவேளை நாம சைட்டடிச்சத கண்டுபிடிச்சுட்டாங்களோ அம்மு?’ எனப் புரியாமல் முழித்தாள்.
அவள் பார்வையை உள்வாங்கி, அவளின் கழுத்துக்குக் கீழ் பார்வையைக் கொண்டு சென்றவன் மீண்டும் அவள் முகம் பார்த்து முறைக்க, அதில் அவளும் குனிந்து பார்த்துவிட்டு, 'போச்சு லோ நெக். அதுக்குத்தான் இந்த முறைப்பா? எனக்குன்னே இப்படி அமையுதே முருகா. சும்மாவே துர்வாசருக்கு முறைக்க மட்டுந்தான் தெரியும். இன்னைக்குன்னு பார்த்து இப்படியா வந்து சிக்கணும். செத்தேன் நான்' என முனங்கி வெளிப்படையாகத் தலையில் தட்டிக் கொண்டாள்.
"வாங்க மாப்ள, கோவிலுக்கா?" என்றார் கருப்பையா, அருகில் நின்றவளின் தகப்பனார்.
"ஆமா மாமா, வரேன்னு ஃபோன் பண்ணிருக்கலாமே."
என்றவன் கேட்டைத் திறந்து உள்ளே செல்ல, மாடியிலிருந்து எட்டிப் பார்த்தார் வீட்டின் உரிமையாளர், அம்சா அக்கா.
இவன் அவரை நிமிர்ந்தும் பார்க்காமல் உள்ளே சென்று விட்டான், அவர் பார்ப்பார் நிமிர்ந்தால் விசாரிப்பாரெனத் தெரியுமே அவனுக்கு, அதனால் நிற்காமல் சென்று விட்டான். யாரென்று அவர் கேட்டால் இவனிடமும் பதில் இல்லை. அப்படி நின்று பேசும் கலகலப்பான ஆளும் இல்லையே அவன். அதனால் அம்சா அக்கா இப்போதைக்கு அவர் சந்தேகத்தை அவரே தான் வைத்துக் கொள்ள வேண்டும்.
கருப்பையாவும், அவர் மகளும் கூட அவனைப் பின் தொடர்ந்தனர். இரண்டாம் முறையாக இந்த வீட்டிற்குள் வருகிறாள், ஆனாலும் கவனமாக வலது காலை எடுத்து வைத்து வந்தாள். முதல் முறை இரண்டு வருடத்திற்கு முன் அவன் தாத்தாவுடன் வந்து, வந்த வேகத்தில் சென்றுமிருந்தாள்.
"வந்து பத்து நிமிஷம் தான் ஆகுது மாப்ள, நீங்க ஆஞ்சநேயர் கோவில் போவீங்க, வார நேரந்தாம்னு பிள்ள சொன்னா, அதான் ஃபோன் போட வேணாம்னு அப்படியே நின்னுட்டேன், இதுல என்ன இருக்கு."
திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான், அவளுக்கு அதும் முறைப்பாகத் தான் தெரிந்தது, குனிந்து கொண்டாள்.
'நடிக்கப் போயிருக்கலாம்.'
என நினைத்துக் கொண்டு மீண்டும் கருப்பையாவிடம் திரும்பினான், "எதும் வேலையா வந்தீங்களா மாமா?" என அவரைப் பார்த்துக் கேட்க,
"அம்மு மசமசன்னு நிக்காத, மாப்ள காலைல சாப்டாகளோ என்னவோ, போய்ச் சாப்பாட்டு வேலைய ஆரம்பி, நீ வந்து போற நேரத்துலனாலும் தம்பி நிம்மதியா சாப்பிடணும்ல."
என அவளை விரட்டியவர், "என் மக, மூத்தவளோட சம்மந்தார் வழில ஒருத்தர இங்க ஆஸ்பத்திரியில் வச்சுருக்காங்க மாப்ள, சம்மந்தகாரங்களுக்கு ரொம்ப நெருக்கம், பார்க்காம விட முடியாதுன்னு மூத்தவ மாமனார் கூட வந்தேன், அவங்க ஊருக்குக் கிளம்பிட்டாங்க, நாந்தான் இவளப் பார்த்துட்டு அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். நீங்கச் சாப்டீங்களா மாப்ள?" என்றார் அது தான் முக்கியம் என்பதாக.
"எட்டு மணி தானே மாமா, இனி தான் சாப்டணும், நீங்கச் சாப்டீங்களா?" என்றான், அந்த அதிமுக்கிய மூத்த சம்மந்தார், சாப்பிட வைத்தும் அனுப்பியிருக்க மாட்டாரென அறிந்தவனாக.
"இல்ல மாப்ள அஞ்சு மணிக்கு வந்திறங்கிட்டோம், அப்ப டீக்குடிச்சேன், அப்படியே அவுங்களோட ஆஸ்பத்திரி போய் அவங்கள நலம் விசாரிச்சுட்டு, நேரா புள்ளைய பார்க்க வந்துட்டேன், பிள்ள சாப்பிட தான் போவோம்னு கூப்பிட்டா, நாந்தான் மாப்ளைய பார்த்துட்டு அங்கன சாப்ட்டு கிளம்புதேன்னு கூட்டிட்டு வந்தேன்." என்றார் வெள்ளந்தியாக,
"அப்ப நீங்க குளிச்சு ஃப்ரஷாகி வாங்க மாமா, சாப்டலாம்." என அவன் எழுந்து கொள்ள,
"இல்ல மாப்ள இருக்கட்டும்." எனப் பதறித் தடுத்தார்,
அவனுக்குத் தெரியும் அவராக ஒரு உரிமையும் அவனிடமோ அவன் இடத்திலோ எடுத்துக் கொள்ள மாட்டார் என்று. சற்று முன் சாப்பிட்டுக் கொள்வதாக வந்ததாகக் கூறியது கூட மகளை அந்த வீட்டில் ஒன்றச் செய்து அதை மனம் குளிர பார்த்துவிடும் ஒரு ஆசையில் மட்டுமே, அதற்கும் எத்தனை முறை ஒத்திகைப் பார்த்துவிட்டுக் கிளம்பி வந்திருப்பார் என்ற யூகமும் உண்டு அவனுக்கு.
"வாங்க மாமா, ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துருக்கீங்க தானே? குளிச்சா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்."
என்றவன், அந்த இரண்டு படுக்கை அறை வீட்டில், அவன் படுக்கை அறைக்கு அடுத்திருந்த மற்றொரு படுக்கை அறையைக் காண்பித்தான்.
திரும்பியவர் அப்போது தான் மகள் இன்னும் அதே இடத்தில் நிற்பதைக் கண்டு, "இதழு புள்ள, நாச்சொல்லி எம்புட்டு நேராமாவுது இன்னுமு அப்படியே நிக்குறவ, போய் அடுப்ப பத்த வைப்புள்ள." என அதட்ட, அவள் அவனைத் தான் அப்போதும் பார்த்தாள். அவன் அனுமதி வேண்டுமே, அவன் வாழ்க்கைக்குள் நுழையவும் அவன் அனுமதி தர வேண்டும், அவன் வீட்டு அடுப்படிக்குள் நுழையவும் அவனல்லவா அனுமதி தர வேண்டும், அதனால் பார்த்து நின்றாள்.
திரும்பித் தானும் அவளைப் பார்த்தான், அவள் அப்படியே நிற்பதன் காரணம் புரிந்தது அவனுக்கு, "அவ செய்யட்டும் நீங்கப் போங்க மாமா." என அவன் அவளைப் பார்த்தே தகப்பனிடம் சொன்னது போதுமானதாக இருக்க, கடமைக் கண்ணாயிரமாகச் சமைக்கத் திரும்பி விட்டாள்.
கிச்சன் கார்னரில் தொங்கிக் கொண்டிருந்த ஏப்ரனை பார்த்தாள், அவன் கட்டி சமைப்பது தான், குனிந்து தன் உடையைப் பார்த்து விட்டு, "திட்டுனாலும் பரவால்ல, வொயிட் கலர் டாப்ப நாறடிச்சுக்க முடியாது." என்றவள் வேகமாக அவன் ஏப்ரனை எடுத்துத் தன்னைச் சுற்றி கட்டிக் கெள்ளும்போது என்ன முயன்றும் அவள் கைகள் நடுங்கவே செய்தது. மனதிற்குள் ஒரு பரவசம் எழுவதையும் தடுக்க முடியவில்லை.
கருப்பையாவை விட்டுவிட்டு மீண்டும் வந்தவன் கண்டது, ஏப்ரனை கட்டிக் கொண்டிருந்தவளை தான். மறுபடியும் அவள் உடை நியாபகம் வரச் சுர்ரென்று கோபம் ஏறியது. ஆனால் எதுவும் பேசாமல் சென்று டிவியைப் போட்டு சேஃபாவில் அமர்ந்து கொண்டான்.
எட்டிப் பார்த்தாள், 'நம்ம இருக்க திசை பக்கமே திரும்பக் கூடாதுன்னு வேண்டுதலா இருக்குமோ? இருக்கும்.' என முனங்கிக் கொண்டே, பாலைத் தேடி எடுத்து, காபி தூள், சக்கரைத் தூள் என அனைத்தும் பார்த்து எடுத்து வைத்தாள்,
‘ஒருவேளை மறுபடியும் வர்ற மாதிரி இருந்தா தேடக் கூடாது அம்மு, மைண்ட்ல ஏத்து.’ எனப் பேசிக் கொண்டே பாலைக் காய்ச்சிக் காபிப் பொடியைக் கலந்து நுரை ததும்ப ஆத்தியவள், எடுத்து வந்து, அவன் முன்னிருந்த டீபாயில் வைத்தாள். குனிந்து நிமிரும்போது கவனமாகக் கழுத்துடையை கீழே இறங்காமல் பிடித்துக் கொண்டாள்.
"ஃப்ரண்ட்ஸோட மால் போற ப்ளான் அதான் இந்த ட்ரஸ் போட்டேன், அப்பா வராங்கன்னும் தெரியாது, இங்க கூட்டிட்டு வருவாங்கன்னும் தெரியாது." என்றாள் மெதுவாக.
எட்டி காஃபியை எடுத்துக் கொண்டவன், சுவற்றில் தொங்கிய கடிகாரத்தைப் பார்க்க, "எட்டு மணிக்கு எந்த மாலும் திறந்திருக்காது தான், வடபழனி கோவில் போய்ட்டு அங்க இருந்து மால் போற ப்ளான்." என்றாள் அதற்கும் பதிலாக. அவன் பார்வையில் பதில் சொல்லக் கற்றுத் தந்திருந்தான், கடந்த ஒரு வருடத்தில்.
"காலைலயே கோவிலுக்கு? எப்பயிருந்து இந்த நல்ல பழக்கம்?யாருக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்கப் ப்ளானா?" என்றான் கூர்மையாக.
'அவ்வளவுக்கா நாம வொர்த்தா இருக்கோம்? என்ன நல்லெண்ணம் பாரேன் இந்த மூன்க்கு(நிலவன்)' என நினைத்தவள், "லாஸ்ட் செமஸ்டர் இன்கம் டேக்ஸ்ல அரியர் விழுந்திட கூடாதுன்னு நானும், அபியும் வேண்டிகிட்டோம் அதுக்காக அங்கப் போயிட்டு மால் போலாம்ன்ற ப்ளான். மத்தவங்க எல்லாம் அப்படியே அங்க வந்திடுவாங்க."
"இப்ப என்ன நீ போணுமா? கிளம்பு." என்றுவிட்டான் பட்டென,
கலங்கி தான் விட்டாள், "இல்ல ட்ரஸ்காகத் தான் சொன்னேன். இன்னைக்கு அபினவி பேர்த்டே, நா, அபி, வெண்பா, வாணி நாலுபேருக்கும் ஒன்னுபோல அவ தான் எடுத்துத் தந்தா, சைஸ் சரியா தான் இருக்கும்னு ஆல்டர் பண்ணல."
போ என்றுவிட்டானே என்ற கலக்கத்தில் அத்தனையையும் ஒப்பித்தாள், அவளையேப் பார்த்திருந்தான் யாழ்நிலவன்.
"இப்படி போடாதன்னா நீ எங்கையுமே இப்படிப் போடக் கூடாதுன்னு தான் அர்த்தம், என் முன்ன ஒரு மாதிரியும் மத்தவங்க முன்ன ஒருமாதிரியும் இருக்கறதுக்கு பேரு நடிக்கிறது. அத இனி செய்யாத. கஷ்டபட்டு நாச்சொன்னேன்னு நீ எதையும் மாத்திக்க வேணாம்."
எனக் காபி குடித்த டம்ப்ளரை கீழே வைத்தவன், ரிமோட்டை கையிலெடுத்து டீவியில் கவனம் வைக்க, அப்பா வரும் அரவத்தில், ஒரு பெரூ மூச்சுடன் சமையலறை சென்றாள்.
அவள் அப்படி ஒன்றும் அவன் முகம் சுழித்து கூறுவது போல நவ நாகரீகமான உடை அணிந்திருக்கவில்லை, வெள்ளை நிற கையில்லா குர்தி மாடல் உடை. கொஞ்சம் கழுத்திறக்கம் மட்டுமே அதிகப்படி, அதும் அதை உற்றுப் பார்ப்பவர்களுக்குத் தான் அநாகரிகமாகத் தெரியும், இங்கும் அவன் பார்ப்பதால் தானே அவனுக்குத் தெரிகிறது. ஆனால் அதை அவளால் அவனிடம் சொல்லிவிட முடியாது. "ஏன் பார்த்தாய்?" என கேட்கவும் முடியாது. அப்படிப்பட்ட பந்தத்தில் அவனிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறாள்.
மாவிருக்க, தோசை ஊற்றி, சாம்பாருக்கு குக்கரில் வைத்து விசிலுக்கு ஏற்றிவிட்டு, தேங்காய் சட்னியும் அரைத்தெடுத்தாள். அவள் அப்பா வெளிவந்து அவனிடம் பேசிக்கொண்டிருப்பதும் கேட்டது. அப்பாவின் ஆசையும் புரியாமல் இல்லை, அவன் வீட்டின் நிலைமையும் தெரியாமல் இல்லை, அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது மட்டுமே அவளின் மிகப் பெரிய கேள்விக் குறி.
‘அம்மு, இதென்ன புதுசா உனக்கு? சமாளிக்கலாம்டி, இன்னும் ஒரு வருஷம் இருக்கே, எதுவா இருந்தாலும் சமாளிக்கலாம், ஃப்ரியா விடு, வந்தா வாழ வைப்போம் இல்லன்னா வாழ்த்திட்டு போவோம்டி.’ என அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு, சாம்பாரையும் சட்னியையும் தாளித்து இறக்கி, தோசை சுட்டு வைத்த ஹாட்பாக்ஸையும் கொண்டு குட்டியாக நால்வர் மட்டுமே அமருமாறு இருந்த சாப்பாட்டு மேசையில் வைத்தாள்,
"சாப்பாடு செஞ்சுட்டியாம்மா?" என அங்கிருந்தே கேட்டார் கருப்பையா,
"ஆமா ப்பா."
"மாப்ளய கூப்டு, ஒரு மணிநேரம் ஓடிப் போச்சு, காலேசு கிளம்பும்போது இப்படி நிதானமா செஞ்சா மதியத்துக்கும் எப்படி குடுத்தனுப்புவ?" எனக் கேட்டவரைப் பார்க்கப் பார்க்க, அவளுக்கு அழுகையைக் கட்டுபடுத்த வேண்டியிருந்தது.
"சாப்ட வாங்கப்பா நீங்க." என்றாள் இயல்பாக முயன்று,
"இதழு! மாப்ளய கூப்ட்டு சாப்ட வை, எனக்கு இப்ப அவசரமில்ல." என்றார் அவர், அவனுக்கும் அவர் பேச்சு ஒரு மாதிரியாக இருக்க,
"சேர்ந்தே சாப்பிடலாம் மாமா, வாங்க." என எழுந்து வந்துவிட்டான். அவன் அழைத்துவிட்டு அவர் மறுக்கும் முன் நடந்துவிட அவரும் வேறு வழியின்றி அவனைத் தொடர்ந்து வந்து சாப்பிட அமர்ந்தார்.
யாழ்நிலவன் அவனே எடுத்து வைத்துக் கொள்ளத் தொடங்க, "ஒன்னு ஒன்னையும் உனக்குச் சொல்லணுமாமா அம்மு? சமைக்கவும் நாந்தான் சொல்ல வேண்டி இருக்கு, சாப்பாட எடுத்து வைன்னு கூட நானே சொல்லணும்? உன் வீடு உன் புருஷன் இவருன்னு கொஞ்சமாது உறுத்தா எதையாது எடுத்துச் செய்றியா நீ? அதான் மாப்ளையும் உனக்கு விவரமே இல்லன்னு விலகியே நிக்றாரு." படபடவென்று பொரிந்து விட்டார். அவர் பயம் அவருக்குத் தானே தெரியும்.
"ப்பா ஏன் ப்பா." என அவள் சங்கடமாக நெளிந்து கொண்டு, முகம் கசங்க அவனைப் பார்க்க, சாப்பாட்டை எடுத்துக் கொண்டிருந்த கையை அப்படியே நிறுத்தி விட்டு இருவரையும் பார்த்தான் அவன். அவனுக்கு அவருக்குள் எதுவோ உள்ளது என உறுதியானது.
"என்ன ஏன்ப்பா, அவரே எடுத்து வச்சு சாப்பிட நீ எப்படி நிக்கன்னு பாரு." என்றார் அவர்.
"மாமா, சாப்ட உக்காருங்க, எங்க வீட்ல அம்மா, பெரியம்மா, பாட்டின்னு அத்தன லேடிஸ் இருந்தாலும் எனக்கு நானே வச்சு சாப்பிடுவேன், எனக்கு அது பெரிய விஷயமில்ல, நீங்க எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாம உக்காந்து சாப்டுங்க மொத." என்றவன் அவன் தட்டை வைத்துவிட்டு அவருக்குப் பரிமாற வர,
"மாப்ள." என அவர் பதறிப்போய் தட்டை வாங்கி தானே எடுத்து வைத்துச் சாப்பிட அமர்ந்து விட்டார்.
"உனக்கு." என அவன் இன்னொரு தட்டில் வைக்கப் போக,
"நானே வச்சுக்குறேன் சார்." என்றவள் தகப்பன் நிமிரவும் வேகமாகத் தனக்கும் வைத்துக் கொண்டு அவன் எதிரில் அமர்ந்து விட்டாள். இப்படித் தான் அவளைக் குழப்பி விடுவான், ஒருநேரம் சிக்ஸ்டீஸை சார்ந்தவனாகவும் ஒருநேரம் டூகேவை சார்ந்தவனாகவும் இருந்தால் அவளால் எப்படி அவனைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர முடியும்.
'கஷ்டம்டி அம்மு, சீக்கிரம் சாப்ட்டு அப்பாவ இங்க இருந்து கிளப்பிட்டு எஸ்கேப் ஆகிடு' என நினைத்துக் கொண்டு வேகமாகச் சாப்பிடத் தொடங்கினாள்.
அவன் பேச்சில் குனிந்த தலையை நிமிர்த்தாமல் வேகமாகச் சாப்பாட்டை விழுங்கும் இருவரையும் பார்த்தவனுக்கு இதழோரம் சிரிப்பு தான், அதனோடே அவனும் சாப்பாட்டில் கவனமானான்.
சாப்பிட்டு முடித்ததும், எல்லாவற்றையும் எடுத்து ஒதுக்கி வைத்தவள், அப்பா சொல்லுக்கும் அவன் அனுமதிக்கும் காத்திராமல் மதிய சமையலுக்கு தேவையான காய்கறிகளை எடுத்து அடுக்கினாள், பத்து நிமிட யோசனையில், செல்லைப் பார்த்து இருக்கும் காய்கறிகளை வைத்து என்னென்ன செய்யலாம் என்ற பட்டியலில் சுருக்கமான ஒன்றாக வெஜிடபிள் பிரியாணியையும் ரய்தாவையும் முடிவு செய்து வேகமாக அதைச் செய்யத் துவங்கினாள்.
அங்கு மாமனாரும், மருமகனும் மூவர் அமரும் சோஃபாவில் இந்த ஓரத்தில் அவன் அமர்ந்திருக்க, அவர் அந்த ஓரத்தில் முன்னால் தள்ளி அவன் அருகே அமர்ந்திருப்பது ஏதோ அசௌகரியம் போல் அமர்ந்திருந்தார், ஏதோ சொல்ல முயன்று தயங்கிக் கொண்டிருப்பதும் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
"சொல்லுங்க மாமா, ஏதும் பிரச்சனையா?" என்றான் அவனாகவே,
"இல்ல இல்ல மாப்ள, சும்மா பேசத்தான்."
"எதும் கேட்கணுமா?" என்றான் நிறுத்தி நிதானமாக, பணம் எதும் தேவையோ, அப்படி தேவை இருந்தாலும் இவனிடம் வந்து நிற்கமாட்டார் என்பதும் அவனுக்கு நிச்சயம் தான். அதனால் அதைக் கேட்டு அவரைக் கஷ்டபடுத்த விரும்பவில்லை அவன்.
"இதழ பத்தி தான் மாப்ள."
"ஏன் அவளுக்கென்ன? காலேஜ்ல இருந்து எதும் ஃபோன் இல்ல ரிப்போர்ட் வந்ததா? கொஞ்சம் சேட்டை பண்ணாலும் படிப்புல ப்ராப்ளம் இல்லையே அவகிட்ட." என்றான் யோசனையுடன், இவனைத் தாண்டிப் போயிருக்க வாய்ப்பில்லையே எனவும் உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.
"இப்ப அவரு நாச்சேட்டை பண்றேனான்னு கேட்டாரா இந்த மூன்ட்ட? வாத்தியார் புத்தி ஃப்ளோல போட்டுக் குடுக்கறத பாரேன்." எனக் கடுப்பில் முனங்கிக்கொண்டிருந்தாள் உள்ளிருந்த நனியிதழ்.
"நல்லா படிக்குறா தானே மாப்ள?" என்றார் அவர்.
"அப்பாக்கு வேற டென்ஷன் அதான் இவர் போட்டுக் குடுத்தது மனசுல ஆகல." அவளுக்கு மொத்த கவனமும் இவர்களிடம் தான்.
"ம்ம் எயிட்டி சிக்ஸ் பெர்சென்டேஜ் வச்சுருக்கா மாமா, கேம்பஸ்ல வேலையே கிடைக்கும்."
"அது எம்புட்டுன்னுலாம் எனக்குப் புரியவரல மாப்ள, படிப்பு இன்னும் ஒரு வருஷம் தான் இருக்கு, வயசும் இருபத்தி மூணு தாண்டிப் போச்சு, இன்னுமே ஏன் நீங்கத் தனித் தனியா இருந்துகிட்டுன்னு தான் பேச நினைச்சேன்." என்றார் அவ்வளவு தயக்கமாக.
அவனிடம் நேரடியாகப் பேசும் விஷயம் இல்லையே இது என விறைத்தவன், நொடியில் தோன்றிய யோசனையுடன், "அங்க எங்க வீட்ல போய்ப் பேசுனீங்களா மாமா?" என்றான் வேகமாக.
பயந்தாலும், "ஆமா மாப்ள, எனக்கு வேற என்ன செய்யன்னு தெரியல, பொம்பள புள்ளய பெத்துட்டேனே ரொம்ப பயமா இருக்கு மாப்ள, அதான் பேசப் போனேன்."
"எப்ப போனீங்க? என்ன சொன்னாங்க?" என்றவனின் குரலே மாறிவிட்டிருந்தது. அவருக்கும் இது வேறுவகையில் பிரச்சினையைக் கிளப்பி விடுமோ எனப் பயமாகத் தான் இருந்தது.
அவர் முகம் பயத்தில் வெளிருவதைப் பார்த்தவன் திரும்பி அவர் மகளைப் பார்த்தான், அடுப்படி வாசலில் நின்று அவள் அப்பாவைத் தான் பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். வேலையாக இருந்தாலும் கவனம் இவர்கள் பேச்சில் இருக்க, அவன் குரல் உயரவும் ஓடி வந்து விட்டாள்.
"கொஞ்சம் தண்ணி கொண்டு வா மாமாக்கு." அவன் கூறவும் படக்கென அவனைப் பார்த்தவள், அவன் சொன்னதை கிரகித்து தண்ணீரைக் கொண்டு வந்து கருப்பையாவிடம் நீட்டினாள்.
"என் பொண்ணு மாப்ள." என்றவருக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது.