எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

8 மார்கண்டேயனின் மனோரஞ்சிதம்!

priya pandees

Moderator
அத்தியாயம் 8

மணி ஏழை நெருங்கியும், மனோ வராததால், சுரேந்தர் மணியையும் மணிகண்டனயும் மாறி மாறி பார்த்தான்.

ஞானம், அவள் சொன்னதை அப்படியே சொல்லாமல், "ஏதோ வேலை இருக்கு போல, ஸ்டாஃப்ஸ் மீட்டிங் மாதிரி வச்சுருக்காங்களாம்" என சமாளித்து கொண்டிருந்தார்.

"என்னங்க?" என ரகசியமாக கேட்ட ஆண்டாளிடம் மட்டும் உண்மையை கூறியிருக்க, "வரவர இவ போக்கே சரியில்லைங்க" என முனங்கியபடி நின்றிருந்தார்.

மீனம்மா டீயை போட்டு கொடுத்துவிட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் ராகி மாவில் புட்டையும் அவித்து கொண்டு வைத்துவிட்டார். வேலை வேலையாக இருந்தாலும் சலசலவென்று அவர் ஒவ்வொன்றாக பேசியபடி இருக்க, அவருக்கு பதில் சொல்லித்தான் களைத்தனர் மார்க்கின் பெற்றோர்கள்.

"எனக்கு எட்டு மணிக்கு பஸ் மாமா. நா கிளம்பணும்" என மணிகண்டனிடம் மெதுவாக கூற,

"சரிங்க மாப்ள. உங்க வீட்ல போய் சொல்லிட்டு கிளம்புங்க நீங்க" என்றுவிட்டார் உடனேயே. மறுநாள் அவன் வேலையையும் அவன் பார்க்க வேண்டுமே என்ற எண்ணம் தோன்றவும், 'வேகமா கிளம்புங்க' என்றுவிட்டார்.

தலையை அசைத்தவன், சிறிது யோசனைக்கு பின், "உங்களுக்கும் லேட்டாகுது, இங்க இருந்து மூணு மணிநேரம் ஆகும் பழூர்(மார்கண்டேயனின் ஊர்) போகணும்ல? இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்" எனவும் சொல்ல,

"வந்த நேரத்துல பார்க்காம போனா எப்படி மாப்ள? ஏற்கனவே வரணும் வரணும்னு நினச்சு எங்களால கிளம்பவும் முடிய மாட்டேன்றுச்சு, இப்ப வந்துட்டு மனோட்ட பேசாம எப்படி போக? இருந்தது தான் இவ்ளோ நேரம் இருந்துட்டோமே?" என்றார் சாம்பவி.

"மாரா பேசாம இங்க எதுவும் சரியாகாது அத்த. முக்கியமா மனோ. அவளுக்கு இப்ப உங்கள பார்க்கறது கூட வருத்ததத்த தான் தரும்" என்ற சுரேந்தருக்கு புரிந்துவிட்டிருந்தது, மனோ தாங்கள் கிளம்பும் வரை வரப்போவதில்லை என்பது.

"இருந்தாலும். இங்க வர வந்துட்டும் பார்க்காம போயிட்டோம்னு நினப்பாள்ல? அவந்தான் பிடிகுடுக்காம இருக்காம்னா நாமளாது நாங்க இருக்கோம், உன் குடும்பம்னு காட்டணும்ல? அதுமட்டுமில்லாம சின்னவனயும் பிறந்தப்ப பார்த்தது" என சொல்ல,

"சின்னவன மாசத்துக்கு ஒருக்கா வந்து பாக்க வேண்டியது தான, உங்கள ஆரு இங்கன தடுத்தா?" என மீனம்மா கேட்க,

"அப்படி துள்ளி ஓடியாருத மாதிரி இருந்தா நா ஏமுத்தா இப்படி தவன்டுட்டு திரிய போறேன்? முட்டி குடைச்சல் எங்குட்டும் நவுர விட மாட்டேங்குதே?" என சாம்பவி சடவாக சொல்ல,

"மருமக ரொம்ப கோவமா இருக்காளோ? வேற ஆரும் எதுவும் பேசிட்டாங்களோ? இப்ப நாங்க வந்துருக்கது தெரிஞ்சு தான் எங்கள பாக்க வரலன்னு எதுவும் சொல்லிட்டாளோ?" என கேட்டார் மணிகண்டன்.

"ஆரு என்ன பேசுனாலும், உங்க மகனோட ஒத்த வார்த்தைக்கு சமமாகிடாது. அவரு மட்டும் நேர்ல வந்து நிக்கட்டும் எங்க புள்ள கோவம் எல்லாம் காத்துல கரைஞ்சு போயிரும்" என்றார் மீனம்மா. இல்லை என்றுமில்லாமல் ஆமாம் என்றுமில்லாமல் அவர் கூறிய பதிலே போதுமாக இருந்தது அவர்களுக்கு.

"அந்த தைரியத்துல தான் அவனும் அங்க இருக்கானோ என்னமோ? நேர்ல வந்து அவன் பொண்டாட்டிய ஈசியா சமாளிச்சுடலாம்னு" என சிரித்தான் சுரேந்தர். சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான்.

"தப்பா எடுக்காதீங்க சம்மந்தி, வேலை இருக்குன்னு தான் ஃபோன்ல சொன்னா, நா போய் நேர்ல பாத்துட்டு வரனும். உங்களுக்கு ஊருக்கு போக லேட்டாகும்னா நீங்க கிளம்புங்க, மனோகிட்ட நா சொல்றேன். இவ்ளோ நேரம் காக்க வச்சதே எங்களுக்கு ஒருமாதிரி தான் இருக்கு" என்றார் ஞானம். அந்த அனுசரிப்பு தான் அவர்களை இன்னும் இன்னும் இளகச் செய்தது.

"மன்னிச்சுக்கங்க சம்மந்தி, இந்த முறை அவன நேர்ல இறுத்திவச்சு பெரியவங்க நாம எல்லாமா சேர்ந்து பேசி என்னன்னு முடிவெடுக்க வச்சுருவோம்" என எழுந்து வந்து ஞானத்திடம் கையை பிடித்தார் மணிகண்டன்.

"நீங்க வேற. இருக்கட்டுங்க. மாப்ள வரவும் பேச சொல்லுங்க" என இலகுவாக முடித்தார் ஞானம்.

அவர்கள் கிளம்பிச் சென்றபின்னர் தான் கண்ணனுடன் வீட்டிற்கு வந்தாள் மனோ.

"ஏன் மனோ இப்படி பண்ற? இவங்கட்ட முகத்த திருப்பி என்னாக போவுது? உன் புருஷன் தான் எனக்கென்னன்னு இருந்து எங்க வயித்துல புளிய கறைக்காரு, நாங்களே அவர பெத்தவங்களாவது இவ்வளவு இறங்கி வர்றாங்களே இல்லனா நம்ம பிள்ள வாழ்க்கை என்னாவும்னு நினைச்சு நிம்மதி ஆவதுக்குள்ள, நீ முறுக்கிக்கிட்டு நிக்க. நாளபின்ன என்னன்னு குடும்பம் பண்ணுவ அங்கன போயி?" என்றார் ஆண்டாள்.

"என்னத்துக்குங்கேன்? முதல்ல உங்க மருமவன வந்து பேச சொல்லு ஆண்டாளம்மா, நம்ம பிள்ளைய மலுங்கி போ, மலுங்கி போன்னு அவுகதான் பேச வர்றாகன்னா நாமளும் அப்படியே சொல்லிட்ருக்க முடியுமா? வந்தா வாழ்க்கை குடுக்கதபத்தி யோசிப்போம் இல்லனா போட்டும். நீ தைரியமா இரு மனோ, ரெண்டு ஆம்பள பிள்ளைகள பெத்துருக்க சும்மா கெத்தா நிக்கணும் நீ" என்றார் மீனம்மா.

"நீ வேற மீனம்மா! சும்மா அவள கொம்பு சீவி விடாத. இப்படித்தான் பேசி பேசியே அவள வேலைக்கு போக வச்சுட்ட, வேலையயும் பார்த்து வீட்டையும் பார்த்துன்னு அல்லாடிக்கிட்டு வர்றா அவ. இன்னும் அவ நினப்புல என்ன இருக்குன்னு வேற தெரியல. வந்தா வாழ்க்கை குடுப்பீகளா? தனிமரமா நிக்கவா கட்டி குடுத்தோம்?"

"பின்ன அவரு எப்ப வாழ்க்கை தருவாருன்னு கையேந்தி நிக்கணுமோ? வேலைக்கு போனா வீட்ட பாக்க முடியாதுன்னு யார் சொன்னது? மனசுல வைராக்கியம் வேணும் அது இருந்தா போதும் ஒத்த கைல பிள்ளைய வச்சுகிட்டு கப்பலே ஓட்டலாம்"

"நீ வாயிலயே ஓட்டுவத்தா எல்லாத்தையும்" இவர்கள் இருவரும் பேசியபடி இருக்க, ஞானம் பள்ளி கணக்கை தூக்கி கொண்டு உட்கார்ந்தவர் அதில் மூழ்கிவிட, மனோ இரு பிள்ளைகளையும் மேல்கழுவ வைத்து, வீட்டுடை மாற்றி, அவளும் குளித்து உடை மாற்றி வந்து, பாலை அடுப்பில் ஏற்றினாள்.

கிருஷ்ணாவிற்கும், அவளுக்கும் இஞ்சி டீயை கலக்கியவள், கண்ணனுக்கு ஜுனியர் ஹார்லிக்ஸை கலக்கி எடுத்து வந்தாள்.

பெண்கள் இருவரும் இன்னுமே வாக்குவாதத்தில் தான் இருந்தனர். இதற்குள் கிருஷ்ணா, வந்தவர்கள் பேசியது, கொஞ்சியது, கேட்டது என அனைத்தையும் ஒப்பித்து முடித்திருந்தான்.

"ஏன்டி? உன் மாமியார் வந்திருக்க நேரத்துல இப்படி பண்ணிட்ட?" என மறுபடியும் ஆண்டாள் கேட்க,

"இவங்கட்ட என்னம்மா பேச சொல்ற? கொஞ்சம் பொறுமையா இரும்மான்றத தவிர வேற என்ன புதுசா சொல்ல வந்துருக்க போறாங்க?"

"அவங்கள விடு. உங்க மகன வர சொல்லுங்கன்னு நீ சொல்லலாம்ல?"

"ஏன் அத நீ சொல்லலயா?"

"உன்ன பாக்கணும்னு தானே இருந்தாக?"

"அதுக்காகலாம் நானும் இறங்கி பேசிட முடியாது. நா முறுக்கிட்டு இருக்குறதால தான் இவ்வளவு இளக்கம் அங்க. பயந்து பணிஞ்சி மரியாதை அதிதுன்னு இறங்கி வந்துட்டேன்னு வை, அவ்வளவு தான்னு இருப்பாங்க"

"இல்லடி அவங்களும் வருத்தப்பட்டு தான் பேசுறாங்க"

"வருத்தப்பட்டா? ம்கூம் பயத்துல பேசுறாங்க. அவங்க பையன் இப்படியே தனியா இருந்துருவானோ? அவங்க வீட்டு வாரிசு அவங்களுக்கு இல்லாமையே போயிடுமோன்னு பயத்துல வந்துருக்காங்க" என்றாள் பட்டென்று.

"சரி அப்படியாவது பிள்ளை குடும்பம் சரியாகணும்னு நினைக்குறாகள்ல?" என்றார் ஆண்டாள்.

"இல்லனா ஊர்ல ஆளாளுக்கு பேசுவாங்களே? இங்க நா ஊர் வாயில பேச்சு வாங்குற மாதிரி அங்க இந்த பெரிய மனுஷங்க தானே பேச்சு வாங்கிட்டு சமாளிக்க திணறிட்டு இருக்காங்க. விடும்மா பாத்துக்கலாம்" என்றவள், "கிருஷ்ணா டைரி எடுத்துட்டு வா" என அழைக்க,

"சாப்பிட்டுட்டு எழுதுவேன்" என்றவன் இன்னும் டீயை கூட குடித்து முடிக்காமல் வைத்துக்கொண்டிருந்தான்.

"ம்கூம் படிக்குறது எழுதுறது முடிச்சுட்டு சாப்டுக்கலாம். வா"

"ம்மா கொஞ்ச நேரம் விளையாண்டுட்டு வந்து படிக்கிறேன்" என்றவன், டீ க்ளாஸுடன் எழுந்து வாசலுக்கு ஓட,

"நோ கிருஷ்ணா. ஒழுங்கா வந்துரு, எனக்கு கெட்ட எரிச்சல் வரும். அஞ்சு மணில இருந்து விளையாண்டுட்டு தான இருந்துருக்க. எழுதி முடிச்சு தூங்கத்தான் டைம் சரியா இருக்கும் வா" என விரல் நீட்டி எச்சரித்தாள்.

"போம்மா எப்ப பாத்தாலும் திட்டிகிட்டே இருக்க. அவனும் தான ஸ்கூல் போறான் முதல்ல அவன எழுத வை" என்றவன் இன்னும் வாசலில் தான் நின்றான். கண்ணன் உறிஞ்சு பாட்டில் பாலை வாயில் வைத்தவாறு தரையில் வட்டமடித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.

"கண்ணா குடிச்சு முடிச்சிட்டு உன் பேக் எடுத்துட்டு வா" என மிரட்டியவள், "நீயும் வா, ரெண்டு பேருக்கும் தான் இது ஸ்டடி டைம். வா" என சொல்லியும் கண்ணனை தான் பார்த்து நின்றான் கிருஷ்ணன். அவளுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது, ஆனாலும் இழுத்துபிடித்த பொறுமையுடன் இருவரையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

ஆண்டாளும், மீனம்மாவும் இரவு உணவில் இறங்கிவிட, மல்லிகா வந்து இரவு உணவை மட்டும் எடுத்துக்கொண்டு மறுபடியும் அறைக்குள் முடங்கிவிட்டாள். மனோ இருவரையும் இழுத்துபிடித்து அமர வைத்து பாடத்தை எழுத வைக்க ஆரம்பித்தாள். இரண்டு மணிநேரம் அதில் கழிய இரவு உணவை இருவருக்கும் கொடுத்து, அம்மாவிடம் தான் படுப்பேன் என சண்டையிட்ட இருவரையும் இரண்டு அடிபோட்டு தூங்க வைத்த அடுத்த நொடி அவளும் கண்ணயர்ந்திருந்தாள்.

தினமும் நடப்பது தான் இவை, நாள் முழுவதும் ஓடும் களைப்பில் படுத்த உடன் தூங்கிவிடுவாள், பாதி ராத்திரியில் விழிப்பு வராதவரை அன்றைய இரவு அவளுக்கு நிம்மதியான தூக்கம் கிட்டும். ஆனால் ஏதோ காரணத்தால் இடையில் விழித்துவிட்டாள் என்றால், விடியும்வரை தூக்கமின்றி போராடி விடுவாள், மொத்த தூக்கத்தையும் பறித்துக் கொள்வான் அவள் நாயகன், மறுநாள் முழுவதும் அந்த நாயகனால் வந்த தலைவலி அதன் வேலையை காட்டிவிடும்.

அவனுக்கு எப்படியோ! இப்போதும் அவளுக்கு அவன் நாயகன் தான். கல்லூரி முடிக்கும்வரை ஆண் நண்பர்கள் கூட கிடையாது அவளுக்கு. அப்பாவின் அரவனைப்பிலும் அண்ணனின் கண்டிப்பிலும் ஆண்டாளின் அன்பிலும் மீனம்மாவின் துணையிலும் சுகபோகமாக வாழ்ந்தவள். அதுவரை எதற்கும் தனித்து இயங்க விட்டதில்லை அவளை. அவர்கள் எல்லோருமாக அவள் முன் கொண்டு நிறுத்திய முதல் ஆண் தோழனே மார்கண்டேயன் தான்.

ஆம் அவளுக்கு அவன் முதலில் தோழன் தான், பின் கணவனானவன், காதலனாகி இப்போது கனவு நாயகனாக எட்டா தூரத்தில் இருக்கிறான். முதலில் எல்லாம் அவனிடம் பேச்சே வரவில்லை அவளுக்கு அவ்வளவு கூச்சம் கொண்டாள். மனது நிறைய பேச ஆசை இருந்தும் அவன் பேசுகையில், 'காத்து தான் வருது!' என்ற நிலை தான் அவளுக்கு.

அவன் வெளிநாட்டிலிருந்து ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்திருக்க அதில் தான் அவளை வந்து நேரில் பார்த்ததும், ராதாகிருஷ்ணனை பரிசளித்ததும், அடுத்த பத்து தினங்களில் திருமணம் என்றிருக்கையில் அவளின் நம்பரை பெற்றுச் சென்ற வேகத்தில் அழைத்ததும்.

அவர்களின் முதல் கலந்துரையாடல்,

"மனோ!"

"சொ" மட்டுமே, 'சொல்லுங்க'வில் அவனை சென்றடைந்தது,

"மனோ ரொம்ப அமைதியோ?"

"ம்ம்!"

"பேசவே மாட்டாங்களோ?"

"ம்ம்"

"அவ்ளோ லக்கியா நான்?"

"ஆமா!" என்றவள் உதட்டை மடித்து வாய்க்குள் சிரித்து கொண்டாள்.

"ஹம்! கிஃப்ட் எப்படி இருக்கு?"

"நல்லாருக்கு. தேங்க்ஸ்"

"சரி. நீ எனக்கு கிஃப்ட் எதுவும் தரலையேம்மா?"

"தரணும்"

"எப்போ?"

"நெக்ஸ்ட் மீட்டிங்ல?"

"என்ன தருவீங்க?" என்றான் சின்ன சிரிப்புடன், அவனுக்கும் இது முதல் அனுபவம் தான். பள்ளி, கல்லூரி, வேலை இடத்தில் யாரையும் காதலிக்கும் வாய்ப்பு அமையாமல் போயிருந்தது, அவன் தான் தனிமை விரும்பியாகிற்றே, காதலி எல்லாம் வைத்துக்கொண்டு அந்த அமைதி சாத்தியமே இல்லை என்பதாலேயே பெண்களிடமிருந்து நான்கடி தள்ளியிருந்து கொள்வான். கல்யாணத்தையும் அதனாலேயே தள்ளிப்போட்டு கொண்டிருந்தவன் அவன்.

"நீயா பொண்ணு பாக்க ஒத்துவர மாட்டேங்குற, அதனால நாங்களே பார்த்தாச்சு, பொண்ணு பேரு மனோரஞ்சிதம், எம்.எ கடைசி வருஷம் படிச்சுட்ருக்கு, ஃபோட்டோவ கிஷோர்ட்ட உனக்கு அனுப்ப சொல்லிருக்கேன்" என சாம்பவி கூறியபோது,

"உங்களுக்கு நா நிம்மதியா இங்கன இருக்குறது தான் உறுத்தும்ல?" என கத்திவிட்டு தான் ஃபோனை வைத்திருந்தான், ஆனால் என்னவோ ஃபோட்டோவில் மனோ அவனை கவரவே செய்தாள். அவளின் மிக சாந்தமான முகம், அவனுக்கு பிடித்த அமைதி அவள் முகத்திலேயே தெரிய, சரி என்றுவிட்டான். அப்படி ஒத்துக்கொண்டவனை விட்டுவிட கூடாதென்றே, கப்பென்று பிடித்து திருமணத்தை முடித்திருந்தார் சாம்பவி.

ஞானம், "மனோ படிப்பு முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கு, இப்ப பேசி வச்சுப்போம் கல்யாணம் ஆறு மாசம் கழிச்சு வச்சுப்போம்" என்றவரை, நெருக்கி யோசிக்கவிடாமல், பிடித்து வைத்தனர்.

அதில் முக்கிய காரணமாக, சாம்பவி சொன்னது, "இந்த ஆறு மாசத்துல, அவங்க கல்யாண செர்டிபிகேட் காமிச்சு, மருமகளுக்கு விசா எடுத்துடலாம், நீங்க பாஸ்போர்ட் அப்ளை பண்ணுங்க, எல்லாம் சரியா இருக்கும். படிப்ப முடிச்சதும் அவ கிளம்ப சரியா இருக்கும்" என்றதெல்லாம் இப்போது நினைத்தாலே, மீனம்மா பொறிந்து தள்ளிவிடுவார்.

திருமணம் வரை பேச யோசித்தவளுக்கு, முதலிரவுக்கு பின் கொஞ்சம் பேச்சு வர, அடுத்த பத்து நாட்கள் அவனோடு ஊரைச் சுற்றி வந்ததில் இன்னும் பேச வந்தது. பேச வைத்ததே அவன்தான் என்றும் சொல்லலாம். ஏதோ ஒன்றைபற்றி ஆரம்பித்து கேள்வியாக கேட்டு அவளை பேச வைத்தபடி இருந்ததும் அவன்தான்.

விடுமுறை முடியவும், அவன் அமெரிக்கா கிளம்ப, இவள் கல்லூரி கிளம்பி விட்டாள். ஃபோனில் தான் அதன்பின்னான குடித்தனம் எல்லாம். மறுமாதத்தில் உமட்டல் லேசாக வர துவங்கவுமே, முடிவு செய்துவிட்டனர் பிள்ளை தான் என்று. அறுபது நாள் தாண்டும் வரை சாதாரணமாக காத்திருந்து அதை உறுதி செய்தபோது, அதை காணொளி அழைப்பில் தான் அவனிடம் பகிர்ந்து கொண்டாள்.

"எனக்கு கங்கிராட்ஸ் சொல்லணும் மனோ நீ!" என சிரித்தவனை கண்டு தானும் சிரித்தவள், "அப்பாவாகிட்டீங்க வாழ்த்துக்கள்" என்றிருந்தாள்.

"உனக்கு என்ன வேணும் மனோ?"

"நீங்க எப்ப வருவீங்க?" அவள் இந்த கேள்வியை முதன் முதலில் கேட்டபோது, இது அவளின் தொடர் கேள்வியாக தங்கிவிடும் என யோசித்திருக்கவில்லை, அதன்பின் அவனிடம் அவள் பேசிய அதிக வார்த்தைகளின் வடிவம் அந்த மூன்று வார்த்தைகளை கொண்டு தானிருக்கிறது இன்றுவரை. அமைதியானவள் என அவன் கணித்தது சரிதான் என்பதுபோல தான், கடந்த மூன்று வருடங்களாக அமைதியாகவே அவனை விட்டு வைத்திருக்கிறாள்.

இவ்வாறு அவனை பற்றிய எண்ணங்களோடே, அவளின் பாதி விழிப்பு வரும் ராத்திரிகள், கண்ணீரோடு கழிந்துவிடும். நினைக்க நினைக்க இன்னும் ஆழமாக தான் இறங்கி வலிக்கச்செய்து கொண்டிருந்தான் அந்த மார்க்கானவன்.

இதோ இப்போதும் அவள் அவன் பெற்றோர் வந்த அன்று வீட்டிற்கு வராமல் அவர்களை புறக்கணித்திருக்க, அது அவன் காதுக்கு லதா மூலம் சென்றடைந்துவிட்டிருந்தது.
 
Top