எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 10

priya pandees

Moderator
அத்தியாயம் 10

அதிகாலை பொழுது, பறவைகளின் கீச்கீச் குரல் காதில் ஒலிக்க, குளிருக்கு இதமாக கட்டியிருந்தவனை இன்னும் அழுத்தமாக அண்டி அவனுள் சுருண்டு கொள்ள முயன்று கொண்டிருந்தாள் வருணி.

சிறிய அளவிலான கூடார வீடு, அதனுள் காற்றடைத்த மெத்தை, தலையணை, அருகருகே மனதிற்கு விரும்பிய மனங்கள், வெளியே குவிந்து கிடந்த இயற்கை, பிடித்த வேலை என அந்த நிமிடம் மனதிற்கு நிம்மதியான அமைதியான உறக்கம் தான் யாஷ், வருணி இருவருக்கும். கலைந்த ஓவியமாக இருந்தாலும் அழகான ஓவிய நிலையில் இருந்தனர். இங்கு வந்து பதினைந்து நாட்கள் ஓடியிருந்தது.

வெளியே, "டாக்டர் யாஷ்!" என்ற ஒரு மருத்துவ மாணவனின் அழைப்பில், பட்டென்று கண் திறந்தான் யாஷ்.

"டாக்டர்!" மறுபடியும் அவன் அழைக்க,

"எஸ் லூக்கா!" என சத்தம் கொடுத்தவாறு வேகமாக எழுந்தவன், "வருணி கெட்டப்" என அவளையும் லேசாக தட்டி எழுப்பி விட்டு, தன்மேல் அவள் போட்டிருந்த காலையும் கீழே எடுத்துபோட்டுவிட்டு, அருகில் கிடந்த டீசர்டை எடுத்து மாட்டியவன், "வருணி!" என மறுபடியும் அவளை எழுப்பி பார்த்து அவள் எழவில்லை என்கவும், போர்வையை இழுத்து மூடிவிட்டு எழுந்து கூடாரத்தைத் திறந்து வெளியே வந்தான்.

அங்குள்ள மக்கள் அவரவர் வேலையில் இருக்க, மருத்துவர்கள் காலை நேரத்தை ஆங்காங்கே நின்று செலவழித்து கொண்டிருந்தனர்.

திரும்பி தன்னை அழைத்தவனை தேட, இவனை அழைத்துவிட்டு எங்கோ சென்றிருப்பான் போலும் மறுபடியும் இவனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான்.

"என்ன லூக்கா?" என்றான் யாஷ், அவன் முகத்திலிருந்த பதட்டத்தை ஆராய்ந்து கொண்டு.

"டாக்டர்! மார்னிங் எப்பவும் போல குளிக்க கிளம்பினோம். ஜாகிங் போயிட்டு வரும் போதே வழி மிஸ்ஸாகி மூணு பேர காணோம். எங்க போனாங்கன்னு தெரியல இங்க எல்லா இடமும் போன மன்த் கேம்ப் பண்ண வில்லேஜ் வர தேடிட்டு வந்துட்டோம். எங்கேயும் காணோம்" என பயத்தில் குரல் நடுங்க கூறி நிறுத்தினான்.

"யாரெல்லாம் மிஸ்ஸிங்?" என்றவன் க்ளாடியன், ஜனோமி இருவரையும் அங்கிருந்தே சுற்றித் தேட, எப்போதும் போல் அவர்களே அவன் பார்வையை உணர்ந்து வந்துவிட்டனர்.

"எட்வர்ட், வில்லியம், ஜோஷ்" என்றான் லூக்காஸ்.

"இங்க வேற‌ யாருக்கும் தெரியாதா?" என்றான், அங்கிருந்த மருத்துவர்கள் எந்தவித பதட்டமும் இன்றி இருந்ததால் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என அவனுக்கே புரிந்தது.

"இல்ல இன்னும் சொல்லல" என்றான் அந்த லூக்காஸ் தயங்கி கொண்டு.

"க்ளாடியன் எங்க ஸ்டூடண்ட்ஸ்ல மூணு பேர் மிஸ்ஸிங். ஆவ்ரேஜா ட்வன்டி ஃபோர், ட்வன்டி ஃபைவ் ஏஜஸ் உள்ள மூணு பேர்‌"

"எப்படி மிஸ்ஸாக முடியும்? நாங்க இங்க தானே இருந்தோம்? நீங்க பார்டர தாண்டி எங்கேயும் போனீங்களா?" என்றான் ஜனோமி.

மீண்டும் பயந்த லூக்கா யாஷை பார்க்க, "என்ன செஞ்சீங்கன்னு கரெக்டா சொல்லு லூக்கா" என அதட்டவும்,

"நாங்க ஆறு பேர் ஏர்லி மார்னிங் ரன்னிங் கிளம்பினோம். க்ளாடியன் சொல்லிருந்த மாதிரி மரத்துல மார்க் போட்டிருந்த ஏரியாகுள்ள தான் போயிட்ருந்தோம். கொஞ்ச தூரம் ஓடியிருந்தப்ப மனுஷனும் குரங்கும் கலந்த மாதிரி இருந்த ரெண்டு பேர பார்த்தோம்"

"இங்கேயா?" என அதிர்ந்து கேட்டான் ஜனோமி.

"ம்ம் ஒரு ரெண்டு கிலோமீட்டர் குள்ள தான். ஒரு க்யூரியாசிட்டில அவங்கள ஃபாலோ பண்ணி போனோம். அப்ப ரெண்டு காட்டுவாசி பொண்ணுங்க எதிர்ல திடீர்னு வந்தாங்க, எங்கள யாருன்னு கேட்டாங்கன்னு நினைக்கிறேன், லேங்குவேஜ் புரியல, அதுக்குள்ள அந்த குரங்கு மனுஷங்க போயிட்டாங்கன்னு, நாங்களும் அந்த பொண்ணுங்கள்ட்ட சைகைல சொல்லிட்டு திரும்ப போனோம். அப்பதான் பார்டர தாண்டி வந்தது புரிஞ்சுது. சரி அந்த பொண்ணுங்களும் இங்க வர வந்துருக்காங்க தானே அப்ப மிருகங்கள் அட்டாக் பண்ணாதுன்னு நினைச்சு வேகமா நடந்தோம். அதுல எப்ப எங்க அவங்க மூணு பேர் மிஸ்ஸானாங்கனே தெரியல"

"ம்ச் தெரியாத ஏரியால எதுக்கு இந்த தேவையில்லாத வேலைலாம் பாத்தீங்க?" என முறைத்த யாஷ், "என்ன பண்ணலாம் க்ளாடியன்?" என்றான் அவனிடம்.

"கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டம் டாக்டர். காட்டுவாசி பொண்ணுங்க முதல்ல எங்க எல்லை தாண்டவே மாட்டாங்க. இவங்க அவங்கள அங்க பார்த்ததா சொல்றது காட்டுவாசி பொண்ணுங்களே கிடையாது"

"இல்ல இங்க உள்ள பொண்ணுங்க மாதிரி முகத்துல குச்சிலாம் வச்சு மையெல்லாம் பூசியிருந்தாங்க. டாக்டர் நிஜமா அங்க ரெண்டு பொண்ணுங்க நின்னாங்க" என்றான் லூக்கா உறுதியாக,

"ம்ச் நீங்க குரங்கு மனிதர்களா பார்த்தவங்க தான் அவங்க" என்றான் க்ளாடியன்.

"இல்ல முதல்ல நாங்க பார்த்தவங்க ரெண்டு பேரும் ஜென்ட்ஸ், அடுத்து பார்த்தவங்க ரெண்டு பேரும் லேடீஸ்"

"அவங்க வேற வேற கிடையாது. நீங்க முதல்ல பார்த்த ரெண்டு பேரும் தான் பெண்களா மாறி வந்துருப்பாங்க. அவங்க கை கால் விரல் நகங்கள கவனிச்சுருந்தீங்கனா கண்டு பிடிச்சுருப்பீங்க" என்றான் ஜனோமி.

"ஜனோமி ப்ளீஸ் க்ளியரா பேசுங்க. ஒன்னுமே புரியல" என்றான் யாஷ்.

"டாக்டர் யாஷ்! அவங்க மாய மனிதர்கள். இதே காட்டுல மிருகங்களோட மிருகங்களா வாழ்றவங்க"

"அப்படினா?" என யாஷ் கேட்கையில்,

"என்ன டிஸ்கஷன் யாஷ்?" என வந்துவிட்டார் பிஸ்மத்,

"மூணு ஸ்டுடண்ட்ஸ் மிஸ்ஸிங் டாக்டர். அதான் என்ன பண்ணலாம்னு இவங்கள்ட்ட கேட்டுட்ருக்கேன்"

"எப்படி? ஏன் எங்க போனீங்க? அவங்க ரெண்டு பேரும் அத தான் அங்க எல்லார்ட்டையும் பேசிட்ருக்காங்களா?" என்றார் பிஸ்மத், தூரத்தில் மாணவர்கள் மட்டும் கூடி நிற்பதை காண்பித்து.

"யாரோ ரெண்டு பேர பார்த்தோம் ஆனா திரும்பி வந்துட்டோம் அவங்க தான் எப்டி மிஸ் ஆனாங்கன்னு தெரியலன்னு லூக்கா சொல்றான், க்ளாடியன் அவங்க ஏதோ இல்யூஷன் பீப்பிள்னு சொல்றாரு" என யாஷ் சொல்ல,

"அப்டிலாம் இருக்காங்களா என்ன?" என்றார் பிஸ்மத்தும் புரியாமல்,

"இவங்க அப்படிதான். என்ன உருவம் வேணா எடுத்துப்பாங்க. மறைஞ்சும் போயிடுவாங்க. அதுக்கான மாய வித்தைகள் கத்து வச்சுருக்காங்க. கண்டுபிடிக்குறது ரொம்ப கஷ்டம். குரங்கு மனிதனா மாறின பரிணாம வளர்ச்சில மாறாம இன்னும் மிச்சமிருக்கறவங்க இவங்க மட்டுந்தான்னு எங்க தலைவர் சொல்லிக் கேட்ருக்கோம். அவங்களோட வாழ்நாள் இருநூற்றி ஐம்பது ஆண்டுகள், பழமையானவங்க, ரொம்ப ரொம்ப ஆபத்தானவங்க. இவங்க அவங்கள தாக்க வந்துருக்குறதா நினைச்சு தான் கடத்திட்டு போயிருப்பாங்க. அவங்க மனிதனோட புத்தி கூர்மையும், மிருகங்களோட அரக்க குணமும் கலந்தவங்க. மிருகங்கள் எப்படி ஒருத்தரால ஆபத்தில்லன்னு தெரிஞ்சா ஒதுங்கி போயிடுமோ, அதேமாதிரி அவங்களும் ஒதுங்கி போயிடுவாங்க, ஆனா ஒருத்தரால ஆபத்துன்னு தெரிஞ்சா எப்படி யோசிக்காம பாஞ்சிடுமோ அதேமாதிரி பாய கூடியவங்க"

"காட். இப்ப நம்ம பசங்கள எப்படி காப்பாத்துறது?" என்றான் யாஷ்.

"வாய்ப்பே இல்ல டாக்டர். அதுக்கு தான் இவ்வளவு எக்ஸ்ப்ளைன் பண்ணிட்ருக்கேன்" என க்ளாடியன் சொல்ல,

"நா அப்படி விட முடியாது க்ளாடியன். நா எனக்காக கூட்டிட்டு வந்த பசங்க. என்னோட ரெஸ்பான்ஸிபிலிட்டில வந்தவங்கள எப்படி விட முடியும்? நா தேடி போறேன். எனக்கு கைட்டா எதாவது ஃபாரெஸ்ட் மேப் மட்டும் குடுங்க. எனக்கு போன மாதிரி திரும்ப வர தெரியணுமே?" என கேட்டான்.

"டாக்டர் யாஷ். நீங்க இப்படி போய் அப்படி கூட்டிட்டு வர்ற மாதிரி ஈசியான விஷயம்னா நானே அத பண்ண மாட்டேனா? இது இம்பாஸிபில். ஆக்சுவலி இவ்வளவு நேரம் கூட கடத்தப்பட்ட பசங்க உயிரோட இருக்க மாட்டாங்க. மனித மாமிசம் சாப்பிட கூடியவங்க அந்த மாய மனிதர்கள்"

"நோ நோ நோ! அப்ப லேட் பண்ண வேணாம். நா கிளம்புறேன். ப்ளீஸ் எனக்கு மேப் மட்டும் உங்கட்ட இருக்குறத குடுங்க. ஐ கேன் மேனேஜ். ட்ரையே பண்ணாம அவங்கள போட்டும்னு என்னால விட முடியாது. அவங்களுக்கு நாந்தான் ரெஸ்பான்ஸிபில். டாக்டர் பிஸ்மத் நீங்க இங்க மத்த எல்லாரையும் கோர்டினேட் பண்ணிக்கோங்க"

"டாக்டர் யாஷ்!" என நிறுத்தினார் பிஸ்மத், "கவர்ன்மென்ட்கிட்ட ரிப்போர்ட் பண்ணிடலாம். அவங்க தேடட்டும்"

"அது ரொம்ப பெரிய ப்ராசஸ் இல்லையா பிஸ்மத்?" என இவன் கேட்கவும் அவர் விழித்தார். அவருக்கும் தெரியுமே, ஆனாலும் காணாமல் போனவர்களுக்காக கண் முன் இருப்பவனை எப்படி அனுப்ப முடியும் அவரால்.

"அவங்க எங்கன்னு தெரியல, இங்கேயே இருக்கவங்களே இவ்வளவு சொல்லுறாங்க அப்றமு எப்படி உங்கள தெரிஞ்சே நா தொலைக்க முடியும்?"

"நா முடிஞ்சளவுக்கு, அட்லீஸ்ட் லூக்கா சொன்ன ரெண்டு கிலோமீட்டர் தூரத்திலயாவது தேடி பார்த்துட்டு வரேன். உண்மையிலேயே வழி தவறி இருந்தா? எங்கையாவது காப்பாத்த முடியுற சூழ்நிலைல அவங்க இருந்தா?"

"உங்க கூட யாரையாவது ஹெல்ப்புக்கு கூட்டிட்டு போங்க. அந்த மூணு பேரையும் கூட" என்றதும் திரும்பி பார்த்தான் யாஷ், மிரண்டு நின்றான் லூக்காஸ்.

"இவங்களும் தொலைஞ்சுட்டா ரொம்ப கஷ்டமாகிடும். நா மட்டும் போய் பாத்துட்டு வரேன்" என்றவன் அப்போது தான் வருணி ஞாபகம் வந்தவனாக கூடாரத்தை திரும்பி பார்த்தான், அதன் வெளியே ஏற்கனவே அவனை தான் முறைத்து கொண்டு நின்றாள் அவள்.

"அப்படியே போயிருவியோன்னு நினைச்சேன் நல்லவேளை திரும்பி பார்த்து தப்பிச்சுட்ட!" என இன்னும் முறைத்தவளை, சின்ன சிரிப்புடன் வந்து கட்டிக்கொண்டான்.

"போடா! போடா! தள்ளி போ!" என அவனை உதறி தள்ள, இறுக்கி கட்டி கொண்டவன், "ப்ளீஸ்டி உன் ப்ரண்ட்ஸ் தானே அவங்க? நீ ஒருத்தி எங்கூட வரணும்னு அவங்க எல்லாரையும் சேர்த்து இழுத்துட்டு வந்தவன்டி நானு! அவங்கள எப்டி போட்டும் விடமுடியும்? போனப்றம் எனக்கும் சேஃப்டி இல்லன்னு தெரிஞ்ச செகெண்ட் திரும்பி உங்கிட்ட ஓடி வந்துடுவேன். ஆனா ஒன்ஸ் போய் பாத்துட்டு வந்துடுறேன்டி ப்ளீஸ்" என அவள் காதில் அவ்வளவு பொறுமையாக எடுத்து கூறினான்.

"சரி நானும் வரேன்" மிக எளிதாக பதில் கூறினாள் அவள்.

"வாட்!" என தள்ளி நின்று அவள் முகம் பார்த்து அதிர்ந்து, "ட்ரீட்மெண்ட்ட கரெக்டா எடு, அந்த பிள்ளைங்களுக்கு படிப்பு சொல்லி குடுத்துட்ருந்தியே போய் அதை பாரு. நா மேக்ஸிமம் டூ அவர்ஸ்ல திரும்பி வந்திடுவேன்" என்றவன் கூடாரத்திற்குள் சென்று தேவையானவற்றை மட்டும் ஒரு சிறிய பையில் எடுத்து வைத்து தோளில் மாட்டிக்கொண்டு வெளியே வந்தான்.

பின், "க்ளாடியன் மேப்?" என்றான்.

"நானும் உங்க கூட வரேன் டாக்டர்" என க்ளாடியன் சொல்ல, "நான் வரேன். உங்கள தனியா அனுப்ப முடியாது. உங்களுக்கு இங்க எதுவும் தெரியாது. அவங்களுக்கு நீங்க பொறுப்புனா உங்களுக்கு நாங்க பொறுப்பு. அதனால நான் வரேன். க்ளாடியன் இருக்கட்டும்" என்றான் ஜனோமி.

ஜனோமி இங்குள்ளவன் என்பதால் அவன் உடன் வருவது யாஷிற்கும் சரியென்றே பட, "ஆர் யூ சுயர்?" என்றான்.

"ஆமா டாக்டர் வரேன்" என்றான் அவன்.

"நானும் வரேன். முடிஞ்சளவுக்கு சீக்கிரம் தேடி பாக்கலாம். டூ அவர்ஸ்ல முடியிற விஷயம் இல்ல. எப்படியும் டூ டேய்ஸ் தாண்டும். நீங்க அதுக்கு தக்கன திங்க்ஸ் எடுத்துட்டு வாங்க. நாங்களும் போய் எங்களுக்கு தேவையானத எடுத்துட்டு வரோம்" என்ற க்ளாடியன், ஜனோமியை இழுத்துக் கொண்டு சென்றான்.

இதற்குள் மற்ற மருத்துவர்களையும் அழைத்து பிஸ்மத் விஷயத்தை பகிர்ந்திருக்க, அவர்களும், யாஷிடம் 'வேண்டாம்!' என்றே மறுத்தனர். மறுபடியும் எடுத்துச் சொல்லி இவன் கிளம்ப முயல, தானும் ஒரு தோள் பையுடன் கிளம்பி நின்றாள் வருணி.

"சொன்னா கேட்கமாட்டியாடி?" என பல்லைக் கடித்தான் யாஷ்.

"டைம் வேஸ்ட் பண்ணாத. நடக்க வேற செய்யணும் எனர்ஜி சேஃப் பண்ணு"

"போற இடத்துல நீயும் தொலைஞ்சு போயிட்டனா உன்ன தேடுவேனா அவனுங்கள தேடுவேனா‌‌. சொல்லு நா என்ன பண்ண முடியும்?"

"கவலையே படாத, நா எந்த மிருகம் வாய்லயாவது மாட்டுனா, என்ன விழுங்கினா இவனும் இலவசம், சேர்த்து முழுங்குன்னு ரெகமென்ட் பண்ணிடுறேன். நாம அது வயித்துக்குள்ள மிச்ச குடும்பத்த நடத்திக்கலாம்"

"கடுப்பேத்தாத வருணி"

"நானும் வருவேன்டா"

"போலாமா டாக்டர்?" என க்ளாடியன், ஜனோமி இருவரும் வர, கூடவே க்ளாடியன் மனைவி மற்றும் அவள் தோழி என அந்த பிரசவித்த பெண்ணை தவிர்த்து மற்ற இரு பெண்களும் வந்தனர்.

"உன் வைஃப்ட்ட சொல்லிட்டியா க்ளாடியன்?" என்றான் யாஷ்.

"அவங்களும் வர்றாங்க டாக்டர்" என்றான் அவன்.

"ஹே நீங்களும் வர்றீங்களா?" என வருணி உடனே சந்தோஷமாக,

"நாம ரொம்ப தூரம் போக வேணாம் க்ளாடியன். மேக்ஸிமம் பாக்கலாம் இல்லைனா நைட்டுக்குள்ள திரும்பிடலாம், லேடீஸ்லாம் வேணாம். அதுவும் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சின்ன பொண்ணுங்க"

"எங்க எல்லைய தாண்டிட்டா எதுவுமே சாத்தியம் இல்லை டாக்டர். உயிரோட திரும்பிருவோம்னு நம்பிக்கை இருந்தாலும் அது எவ்வளவு சாத்தியம்னு தெரியாது. என் வைஃப்ப நா திரும்ப வராட்டியும் அவளுக்கு மரணம் தான் தண்டனையா குடுப்பாங்க. அதனால அவ எங்கூடவே வரட்டும்"

"ம்ச் யாருமே வேணாம் நா மட்டும் போய்ட்டு எப்படியாவது வரேன்" என எரிச்சலாக மொழிந்தான் யாஷ்.

"நீங்க போனா நாங்களும்‌ வருவோம். அவங்க மூணு பேரும் அவங்களா தப்பிச்சு வரட்டும் நம்ம எல்லைக்குள்ள வந்துட்டா அவங்க மாய வித்தைகள் வேலை செய்யாது. எங்க பிடாரி அம்மன் கட்டுப்பாட்டுல வந்துருவாங்க. அவங்களா வரட்டும்னு விடுங்க" என்றான் க்ளாடியன்.

"நா கிளம்புறேன் டாக்டர் பிஸ்மத். இங்க நீங்க பாத்துக்கோங்க. நா வர லேட்டானா கவர்ன்மென்ட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க" என பையை மாட்டிக் கொண்டு யாஷ் நடந்து விட,

"பை கைஸ். இன் கேஸ் இங்க எதுவும் ஹெல்ப் கிடைக்கலனா, இது எங்கப்பா இந்தியா கான்டெக்ட் நம்பர். அவர்ட்ட சொல்லிடுங்க இம்மிடியட் ரியாக்ஷன் கிடைக்கும்" என சிரித்துக் கொண்டே சொல்லி, "டேய் தடிமாடு" என யாஷை அழைத்து கொண்டு அவன் பின் ஓடினாள் வருணி.

க்ளாடியன் அவன் மனைவி, ஜனோமி மற்றும் அவன் வருங்கால மனைவி நால்வரும் அவளை பின் தொடர்ந்தனர். க்ளாடியனும், ஜனோமியும் அவர்கள் இடத்தில் வேறு இருவரை மருத்துவர்களுக்கு உதவ என இருத்திவிட்டே கிளம்பியிருந்தனர். அவர்கள் மூலம் பிஸ்மத் முதல் வேலையாக அவர்கள் அரசாங்கத்திற்கும், மருத்துவமனைக்கும் தகவல் அனுப்பினார்.

காட்டிற்குள் இந்த திசை தான் என்றில்லாமல், அந்த லூக்காஸ் சொன்ன திசையில் தான் யாஷ் நடந்துச் சென்றான்.

"மாமா நில்லு" என ஓடி ஓடி வேகமாக நடந்து எப்படியோ அவனை பிடித்து விட்டாள் வருணி.

"டேய் மாமா!"

"போடி!"

"எனக்கு மிருகங்கள அட்டாக் பண்ற மெத்தட் தெரியும், கராத்தே ஸ்டைல்ல அட்டாக் பண்ணிடுவேன். உனக்கு தான் ஒன்னுந்தெரியாது. ஆக்சுவலி உனக்காக தான் நா வர்றதே"

"எங்க உன் லெஃப்ட்ல போகுதே பாம்பு அதுட்ட உன் கராத்தே அடி ஒன்ன காட்டு" என முறைக்க,

"பாம்பா?" என்றவள் அவனுக்கு மறுபக்கம் தாவி குதித்து எட்டி பார்த்தாள்.

"அது ஒன்னும் செய்யாது, நம்ம பாதைக்கும் வராது நீங்க நடங்க" என்றான் பின்னே வந்த க்ளாடியன்.

"ஏன் ஒன்னும் செய்யாது?"

"இது குப்பைமேனி இலை, இதுல இருக்க வாடை நம்ம வாடைய மிருகங்களுக்கு இனம் காட்டாது. அதனால நம்மள அதுங்களால சென்ஸ் பண்ண முடியாது"

"நேரா பாத்துட்டா?"

"பாத்துட்டா முடிஞ்சு" என்றான் ஜனோமி.

"இப்ப நாம எங்க தேடணும்னு ஐடியா இருக்கா ஜனோமி?" என்றான் யாஷ்.

"இல்ல டாக்டர். நாம இந்த காடு முழுக்க சுத்தவும் முடியாது. அப்படி சுத்தினாலும் அவங்கள கண்டுபிடிக்க முடியாது. மனிதகுரங்குகள் இனம் வாழும் வாழ்விடம்னு எங்க மூதாதையர் குடுத்த ஒரு வரைபடம் இருக்கு. அவங்க உங்க ஸ்டூடண்ட்ஸ அங்கதான் கொண்டு போயிருப்பாங்க. நாமளும் அங்கேயே போகலாம். வேற வழியும் கிடையாது"

"அங்க போக எவ்வளவு நேரம் ஆகும்?"

"தெரியாது நாங்களும் இதுவரை போனதில்ல. ஆனா காட்டின் நடுவில்னு கதையா சொல்லி கேட்ருக்கோம். அப்படி பார்க்கும் போது பல மிருகங்கள தாண்டி தான் நாம போக வேண்டிய இருக்கும்"

"சரி வேகமா நடக்கலாம்" என வேகமாக நடக்க, பெண்களுக்காக மட்டுமே அங்கங்கு ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. மிருகங்கள் கண்ணில் படாமல் பதுங்கி தான் செல்ல வேண்டியிருந்தது. அந்த இரு பெண்களிடமும் வருணி தான் பேசிக் கொண்டு வந்தாள். ஆண்கள் கண்டு கொள்ளவில்லை. படிப்பு சொல்லி கொடுக்க துவங்கிய ஆரம்பத்தில் அவர்களுடன் சைகையில் பேசியவள் இந்த பதினைந்து நாட்களில் அவள் பேசுவதை அவர்களுக்கு புரியுமளவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டாள்.

மாலை வரை மரங்களில் கிடைப்பதை உண்டும் இருக்கும் தண்ணீரைப் பருகியும் நடந்து கொண்டே இருந்தனர். இருட்ட துவங்கியதும் பாதை இல்லாமல் மரங்களைக் கடந்து செல்வது மிகவும் கடினமாக இருந்தது. க்ளாடியனும் ஜனோமியும் வேகமாக நடந்தனர்.

"ரெஸ்ட் எடுத்திடலாமே க்ளாடியன்?" என நிறுத்தினான் யாஷ்.

"இங்க எங்கேயுமே தங்க முடியாது டாக்டர். மரத்து மேல கீழன்னு எல்லாமே ஆபத்து தான். கொஞ்சம் நடங்க. மலை ஏத்தம் இருக்கு. மலைல இங்க விட ஆபத்து கொஞ்சம் கம்மியா இருக்கும். எந்த சத்தமும் குடுக்காம நைட்டு முழுக்க கழிச்சுட்டு கிளம்பிடணும்" என மெதுவாகவே பேசினான்.

"நடுகாட்ல வந்து மாட்டிக்கிட்டோமா?" என்றாள் வருணி.

"தெரிஞ்சு தானே டாக்டர் வந்தோம்?" என்றான் ஜனோமி.

"உன்னால தான்டா மாமா"

"உன்ன வரவேணாம்னு சொன்னேன்ல நீ ஏன் வந்த?" என்றான் அவனும் பதிலுக்கு.

"பேசாதீங்க டாக்டர்" என்ற க்ளாடியன், அடுத்த கொஞ்ச நேர நடை பயணத்தில் சொன்னது போலவே ஒரு மலைக்குன்றைக் காட்டியிருந்தான். அதில் அடர்ந்த மரங்கள் இல்லாமல் சிறிய செடிகளே அதிகம் இருந்தது. அதனால் நிலா வெளிச்சம் பட மெல்ல அதில் ஏறி வரிசையாக அமர்ந்து கொண்டனர். படுக்கவும் பயமாக தான் இருந்தது.

"நீ என் பொண்டாட்டி, அந்த சின்ன பொண்ணு க்ளாடியன் பொண்டாட்டி, நீங்க ரெண்டு பேரும் வந்தீங்க சரி. அந்த பொண்ணையும் ஏன் கூட்டிட்டு வந்துருக்கீங்க? அவங்க அப்பா அம்மாட்ட சொல்லாம கூட்டிட்டு வந்துருக்கீங்க?" என யாஷ் அதட்ட,

"அவளுக்கு க்ளாடியன் வைஃபும், ஜனோமியும் தான் க்ளோஸ் அப்றம் எப்டி ரெண்டு பேரையும் விட்டுட்டு இருப்பா"

"பதினொரு வயசு பொண்ணு ஜனோமிக்கு க்ளோஸா?"

"அவங்க அப்படிதான கட்டிக்கிறாங்க?"

"பிக்னிக் வந்த மாதிரி வந்துட்டு பேசு நீ!" என முறைத்தான்.

"பேச வேணாம் டாக்டர். நாம எந்தவித அசைவும் குடுக்காம இருந்தா தான் எது வந்தாலும் அதுபாட்டுக்கு போயிடும்" என ஜனோமி சொல்ல, அமைதியாக இருக்க முயன்றனர்.

அமைதியாகவே இருந்தது அடுத்ததாக தூக்கத்திற்கு அழைக்க, முதுகில் இருந்த பையை கழட்டி தலைக்கு வைத்து வரிசையாக படுத்துக் கொண்டனர். அடுத்த நொடி தூங்கியுமிருக்க, விடியலின் வெளிச்சம் முகத்தில் பட்டபின்னரே எழுந்தனர்.
 

priya pandees

Moderator
"நடக்கலாம்" என மறுபடியும் நடக்க துவங்கினர், மிருகங்கள் வந்தாலும் அதை தாக்கும் முனைப்புடன் தான் நடந்தனர். ஆனால் அவர்களின் நல்ல நேரம் தான் போலும் அவர்கள் அங்கு சென்று சேரும் வரை எதுவும் இவர்கள் மேல் பாயவில்லை. சற்று தூரத்தில் அதனை பார்த்தாலும் அதன் கண்ணில் படாமல் பதுங்கி வந்திருந்தனர்.

சற்று தொலைவில் சிலபல சத்தம் கேட்டது. இவர்கள் அப்படியே நின்றுவிட்டனர். அந்த மனிதகுரங்குகள் இனம் வாழும் இடத்தை அடைந்திருந்தனர்.

"இங்கேயே இருந்து பாக்கலாம். விவசாயம் பண்ண வந்துருக்காங்க. என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு பாக்கலாம்" என க்ளாடியன் சொல்லவும், பெரிய மரத்தின் பின் பதுங்கி கொண்டனர்.

மனித உடல் அமைப்பில் குரங்கின் முக அமைப்பில் உடம்பெல்லாம் முடி அடர்ந்திருக்க, நன்கு உயரமான தோற்றத்தோடு இலைதழை ஆடைகளோடு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர் அந்த மக்கள்.

"என்னா ஹைட்டா இருக்காங்க இவங்க!" என வருணி ஆச்சரியமாக கேட்க,

"நாங்களும் கதையா கேட்ட மனிதர்கள நேர்ல இன்னைக்கு தான் பாக்குறோம்" என்றாள் க்ளாடியனின் மனைவி, ஒரிரு வார்த்தைகள் ஆங்கிலம் கலந்து. க்ளாடியன் அந்த இரு வார்த்தைக்கே ஆச்சரியமாக பார்த்தான்.

கஷ்டப்பட்டு செய்ய வேண்டிய வேலையை மிக எளிதாக செய்து கொண்டிருந்தனர் அந்த மக்கள், அவர்கள் வெட்டில் மரங்கள் சாதாரணமாக சாய்ந்து கொண்டிருந்தது.

இன்னொரு பக்கம் ஆடு, மாடுகளை வயல்களில் மேயவிட்டு கொண்டிருந்தனர் சிலர்.

"நேற்று தூக்கி வந்த நரன்களை எப்போது பூஜையில் வைத்து படையிலிட போகிறதாக பேச்சாம்?" என ஒருவர் தூய தமிழில் கேட்டதில், யாஷ், வருணி இருவரும் அதிர்ந்து மரத்தை விட்டு ஓரடி விலகி நின்றனர்.

மற்ற நால்வருக்கும் அவர்கள் மொழி புரியவில்லை, ஆனால் யாஷ், வருணி இருவருக்கும் நன்கு புரிந்தது அவர்கள் இவர்கள் தேடிவந்த மாணவர்களை பற்றித்தான் பேசுகின்றனர் என்று.

ஆனால் அதைவிட, 'ஹே ஹே சாமி நம்ம மொழி பேசுது! நம்ம மொழி பேசுதுடோய்' என தான் அதிர்ந்து நின்றனர்.

காரண காரியமின்றி இவ்வுலகில் எதுவும் படைக்கப்படுவதில்லை. எங்கோ பிறந்த யாஷும், வருணியும் அமெரிக்காவில் வேலைக்கு வரவேண்டும், காட்டிற்குள் வாழும் மக்களுக்கு சேவை செய்ய வரவேண்டும், இப்புடி ஒரு மனித இனத்தை இனம் காண வேண்டும் என்பது முன்பே வரையருக்க பட்டிருக்கலாம்.

(மாய மனிதர்கள், மனித குரங்குகள் என்பதெல்லாம் கற்பனைக்கு மட்டுமே. அவர்கள் தமிழ் மொழியில் பேசுவதும் முழு கற்பனைக்கு மட்டுமே! பண்டைய தமிழ் பழங்குடியினர் பல நாடுகளுக்கு கடல் வழியாகவும், காடு வழியாகவும் இடம்பெயர்ந்திருக்கின்றனர் என்பதற்கு சான்று இருந்தாலும், அமேசான் காட்டில் தமிழ் பேசும் மக்கள் வாழ்வதற்கான எந்த சான்றுகளும் இல்லை. நமது முந்தைய அத்தியாயங்களில் சொல்லபட்ட மக்கள் இனம் வாழ்வது மட்டுமே உண்மையானது. மற்ற எல்லாம் கற்பனை மட்டுமே)
 

NomerSt

New member
Здравствуйте!
Сейчас самое время купить виртуальный номер для смс навсегда без лишних документов. купить виртуальный номер для смс навсегда — это надёжность и стабильность на долгие годы. купить виртуальный номер для смс навсегда — это цифровая свобода и приватность. Выбирайте наш сервис, чтобы купить виртуальный номер для смс навсегда с удобством. Если хотите остаться на связи, лучше купить виртуальный номер для смс навсегда уже сегодня.
Полная информация по ссылке - виртуальный номер навсегда купить
постоянный виртуальный номер для смс, Виртуальный номер, купить номер телефона навсегда
постоянный виртуальный номер, постоянный виртуальный номер для смс, купить постоянный виртуальный номер
Удачи и комфорта в общении!!
 
Top