எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இனியவளே! என் இணையிவளே! - கதை திரி

Krishna Tulsi

Moderator
இனியவளே - 1
ஓர் இருண்ட நள்ளிரவு. மேகக்கூட்டங்கள் திரண்டு, செவ்வானமாக காட்சியளித்து மழை வரும் அறிகுறியை உணர்த்தின. சற்று நேரத்தில் ஆயிரம் ஊசிகள் வின்னிலிருந்து தரையிறங்குவதுபோல் கனத்த மழை பெய்யத் துவங்கியது. புயல் மழையிலும் அந்த நீண்ட சாலையில் ஒரு டாக்ஸி வேகமாக சென்றுகொண்டிருந்தது.

அன்று தன்னுடைய கடைசி சவாரியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த ஓட்டுனர் மழையையும் பொருட்படுத்தாமல் மின்னலென வாகனத்தை ஓட்டினார். அப்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பெண் வாகனத்தை நிறுத்துமாறு தன் கையை நீட்டி சைகை செய்தாள். அவளைக் கண்டதும் அந்த ஓட்டுனருக்கு குழப்பமும், பயமும் உண்டாயிற்று. எனினும் அவளுடைய நிலையைக் கண்டு அவளருகே நிறுத்தினார்.

அவள் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் அந்த வண்டியினுள் ஏறினாள். வாகனம் மீண்டும் பயணிக்க அந்த ஓட்டுனர், "நீங்க எங்க போகணும் மேடம்?" என்று கேட்க அவள் ஒரு பிரபலமான நட்சத்திர விடுதி ஒன்றிற்கு செல்லவேண்டும் என்று சுருக்கமாக பதிலளித்தாள். அவளுடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அவர் முன்கண்ணாடியின் மூலமாக கவனித்துக்கொண்டே இருந்தார்.

அவளுடைய கைகால்கள் பதற்றத்தால் நடுங்கின. அந்த டாக்சியின் இரு பக்கங்களிலும் உள்ள கதவுக் கண்ணாடிகளை வேகமாக ஏற்றினாள். அவள் கண்ணாடியின் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே வந்தாள். அப்போது தற்செயலாக அவளுடைய பார்வை முன்கண்ணாடியின் பக்கம் சென்றது. அந்த ஓட்டுனர் தன்னை கவனிக்கிறார் என்பதை அறிந்து பதற்றத்தைக் குறைத்துக்கொண்டு இயல்பாக அமர்ந்தாள். பின் தன்னுடைய கைபேசியில் எதையோ செய்துகொண்டிருந்தாள்.

நட்சத்திர விடுதி வந்ததும் அவசர அவசரமாக டாக்சியிலிருந்து இறங்கினாள். தன் கைக்கு வந்த பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு அந்த ஹோட்டலினுள் நுழைந்தவள் தன் அறைக்குச் செல்ல அந்த லிஃடினுள் புகுந்தாள். அறை இருக்கும் தளத்தின் எண் பொறிக்கப்பட்ட அந்த பொன்னிற பொத்தானை பலமுறை வேகமாக அழுத்தினாள். அடிக்கடி அவளுடைய கண்கள் அந்த லிஃடின் வெளியே பதற்றத்துடன் நோக்கியது. சிறிதுநேரத்தில் அந்த லிஃடின் உலோக கதவுகள் தாமாக மூடிக்கொண்டன.

அவள் தன் தளத்தை அடைந்ததும் விரைந்து வெளியேறி தன்னுடைய அறையை நோக்கிச் சென்று கதவை தாழிட்டாள். உள்ளே வந்தவள் செய்வதறியாது கைகளைப் பிசைந்தவாறு அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். அந்த குளிர்ந்த அறையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

ஏதோ தோன்ற விரைந்து லக்கேஜை எடுத்து தன்னுடைய துணிமணிகளை அதனுள் அவசர அவசரமாக நிரப்பத் துவங்கினாள். அப்போது அந்த அறையின் அழைப்புமணி ஒலித்தது. அதைக் கேட்டவுடன் அவளுடைய நெஞ்சத்தில் குளிர் பரவியது, இதயம் இயல்பைவிட பலமடங்கு வேகமாக துடித்தது.

அந்த கதவையே வெறித்தவண்ணம் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். அழைப்புமணி மூன்றுமுறை ஒலித்துவிட்டு பின் நின்றது. அப்போது அவள் பயத்துடன் மெதுவாக கதவை நோக்கி அடியெடுத்து வைத்தாள். கைப்பிடியை மெல்ல திருகி கதவைத் திறந்தபோது அவளுடைய கண்கள் அதிர்ச்சியால் விரிந்தன.

ஒரு வாரம் கழிந்தது. அன்று காலைப் பொழுதில் அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் வரவேற்புப் பகுதிக்குச் சென்று மானேஜரை அழைக்குமாறு கோபத்துடன் கத்திக்கொண்டிருந்தனர். வரவேற்பில் இருந்த பெண், மானேஜரை அழைக்கவும் அங்கு விரைந்து வந்தவர், "எக்ஸ்கியூஸ்மீ லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்...ஐ ஆம் தி மேனேஜர் ஃப் திஸ் ஹோட்டல். எனி பிராப்லம்" என்று அங்கு இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார்.

அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், "உங்க சர்வீசஸ் இவ்வளவு மட்டமா இருக்கும்னு நான் நினைச்சி பாக்கல. இது தான் நீங்க உங்க கஸ்டமர்ஸ பாத்துக்குற லட்சணமா? இப்படிப்பட்ட மோசமான சர்வீஸ நான் எந்த ஹோட்டல்லயும் பார்த்ததில்ல..." என்று சரமாரியாக மானேஜரை திட்டினார். அவருடைய வசைகளை வாங்கியபோதும் அந்த மானேஜர் தன் முகத்தில் எந்தஒரு சலனமும் காட்டாமல், "ஐ அம் ரியல்லி சாரி ஃர் தி இன்கன்வீணியன்ஸ் சார். என்ன பிரச்சனன்னு சொன்னீங்கன்னா அத உடனே நாங்க சரி செஞ்சிடுவோம்" என்று பதிலுரைத்தார்.

உடனே, "இன்னைக்கு காலைல நான் ஃஸ் வாஷ் பண்ணும்போது தண்ணி ரொம்பவே பேட் ஸ்மெல் அடிச்சது. அத சீக்கிரமா பாத்து சரிபண்ணுங்க" என்று எரிச்சலுடன் கூறவும், "டோன்ட் வொரி சார். நீங்க உங்க ரூம்க்கு போங்க, அத நாங்க இப்பவே பாத்துடறோம்" என்று கூறவும் அங்கிருந்த அனைவரும் கலைந்து தங்களுடைய அறைக்குச் சென்றனர்.

அந்த மானேஜர் தனக்கு கீழ் பணிபுரியும் இருவரை என்னவென்று பார்ப்பதற்காக தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்போது, "ராஜு, இந்த பிரச்சனை எப்பயிருந்து இருக்கு?" என்று அதிகாரக் குரலில் கேட்டவுடன் அவன், "எங்களுக்கே, இப்ப தான் சார் தெரியும்.." என்று தயங்கியவாறே கூறவும் அவனை ஓரக்கண்ணால் முறைத்தார். மூவரும் அந்த ஹோட்டலின் மேற்கூரையை அடைந்தனர்.

அந்த பறந்து விரிந்த மொட்டை மாடியின் ஒரு பகுதியில் பத்திற்கு பத்து அடி உருளை வடிவத்தில் நான்கு தொட்டிகள் இருந்தன. அதிலிருந்து சில அறைகளின் பயன்பாட்டிற்கு நீர் சேகரிக்கப்பட்டிருந்தது. மானேஜர் சைகை செய்ய ராஜு ஒவ்வொரு தொட்டியாக ஏறிப்பார்த்தான். அப்போது ஒரு தொட்டியை திறந்தபோது அவன், 'ஆ' என அலறினான். ஏனென்றால் அதில் பாதி அழுகிய நிலையில் சடலம் ஒன்று மிதந்தது. அது வேறுயாருமல்ல அன்று பதற்றத்துடன் டாக்சியில் ஏறிய அதே பெண்.

வருடங்கள் சில உருண்டோடின. அழகிய காலை பொழுது. கீழ்வானில் ஆதவன் தன்னுடைய கிரணங்களை மெல்ல படரவிட்டுக்கொண்டிருந்தான்.

'கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்...'


என்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய வெங்கடேச சுப்ரபாதம் ஹாலிலுள்ள தொலைக்காட்சியில் ஒலித்துக்கொண்டிப்பது அவளுடைய செவியில் விழுந்தது. கண்கள் மூடியவண்ணம் தன் வலதுகையை நெஞ்சில் வைத்து, 'இறைவா! என்னை எப்போதும் நல்ல வழியில் நடத்திச் செல்வாயாக' என்று வணங்கி உள்ளங்கைகளை தேய்த்து கண்களில் ஒற்றிக்கொண்டு தாமரை மலர்போன்ற தன் நயனங்களை மெல்லத் திறந்தாள் சங்கமித்ரா.

பின் தன்னுடைய படுக்கையிலிருந்தவாறே பூமாதேவியை கைகளால் தொட்டுவணங்கி செந்நிறப் பாதங்களை தரையில் பதித்தாள். பல்துலக்கி முகம் கழுவிவிட்டு தன்னுடைய காலை காப்பிக்காக சமையலறைக்குச் சென்றாள். அவள் வருவது தெரிந்ததும் அதுவரையில் கேட்டுக்கொண்டிருந்த பேச்சுச்சத்தம் அப்படியே நின்றது.

அங்கு நின்றுகொண்டிருந்த தன்னுடைய தந்தை தங்கராஜிற்கும் தாய் வனஜாவிற்கும் காலைவணக்கத்தை தெரிவித்தவள் காப்பி கோப்பையை தாயிடமிருந்து வாங்கிக்கொண்டு ஹாலிலுள்ள சோஃவில் அமர்ந்து மிடறுகளாக அருந்தத்துவங்கினாள். அப்போது சமையலறையில் மீண்டும் பேச்சுச்சத்தம் கேட்க ஆரம்பித்தது.

"அஞ்சு வருஷத்துக்கு முன்னால இன்னைக்கு நம்ம மித்ராவுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கும்" என்று அவளுடைய அன்னை வனஜா சோகத்துடன் கூறவும் மித்ராவின் கண்கள் தாமாகவே எதிரே உள்ள கண்ணன் புகைப்படம் உள்ள நாட்காட்டியின் பக்கம் சென்றது. அதில் ஜூன் ஏழு என்று இருப்பதைக் கண்டதும் அவளுடைய மனம் ஐந்து வருடங்களுக்கு முன் பயணித்தது.

மணமேடையில் கழுத்தில் மாலையும் கண்களில் கண்ணீருமாக நின்றது நினைவிற்கு வந்தது. நிகழ்காலத்திற்கு வந்தவள் தன் கையால் கன்னத்தை தொட்டபோதுதான் அவள் கண்களிலிருந்த கண்ணீர் கன்னத்தை நனைத்திருப்பதை உணர்ந்தாள்.

சமையலறையில் தாயின் பேச்சுச்சத்தம் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டு மீண்டும் தன் கவனத்தை அங்கு செலுத்தினாள். "என் பிள்ள வாழ்க்கை இப்படியா ஆகணும்?" என்று அவளுடைய தாய் ஆற்றாமையால் புலம்பிக்கொண்டிருப்பதைக் கேட்டாள். ஐந்து ஆண்டுகள் கடந்தும் தாயின் வேதனை சிறிதும் குறையவில்லை என்பதை உணர்ந்தவள் தன் சோகத்தை மறைத்துக் கொண்டு மீண்டும் சமயலறைக்குச் சென்றாள்.

தன் பெற்றோரை அழைத்து ஹாலிலுள்ள சோஃவில் அமரச்செய்தாள். அவர்களின் முன் மண்டியிட்டு இருவரின் கைகளைப் பற்றிக்கொண்டு, "நீங்க ரெண்டுபேரும் இன்னும் அத மறக்கலையா? முடிஞ்ச விஷயத்தப்பத்தி பேசுறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. அத யாராலும் மாத்த முடியாது; வேதனையும், வலியும் மட்டும் தான் மிஞ்சும். இப்படி உங்கள பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால இனிமேல் பழச மறந்துட்டு நாம எல்லாரும் சந்தோஷமா இருப்போம். சரியா?" என்று கேட்பதைப் பார்த்ததும் அவள் தாய் கண்களிலிருந்து நீர் பெருகியது.

"ஆனாலும் உன் வாழ்க்கைல இப்படி நடந்திருக்க கூடாது மித்ரா" என்று தன் வருத்தத்தை மீண்டும் வெளிப்படுத்த அவளோ, "அம்மா யார் வாழ்க்கைல எப்போ என்ன நடக்கும்னு சொல்லமுடியாது. ஆனா நடக்குறது எல்லாமே நல்லதுக்குதான்…வருத்தப்படாதீங்க" என்று கூறி தாயைத் தேற்றினாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த மித்ராவின் தந்தை தங்கராஜன் தன் மனைவி வனஜாவின் கண்ணீரை துடைத்துவிட்டு, "இனிமேல் யாரும் பழச நினைக்கவும் கூடாது, அழவும் கூடாது. சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும்" என்று கட்டளையிடுவதுபோல் நகைச்சுவையாகக் கூறவும் பெண்கள் இருவரும் புன்னகையுடன் ஒப்புக்கொண்டனர். சமையல் வேலை இருப்பதாகக் கூறிவிட்டு வனஜா சென்றுவிட மித்ராவிடம் அவளுடைய தந்தை, “மித்து இன்னைக்கு ரெண்டு இன்டர்வியூ இருக்குன்னு சொன்னியே. எங்க?" என்று விசாரித்தவாறே தன்னுடைய மகளுடன் சோஃவில் சேர்ந்து அமர்ந்தார்.

அவள் இரண்டு பள்ளிகளின் பெயர்களைக் கூறினாள். சிறு அமைதிக்குப் பின், "மதுரைல அந்த ஸ்கூல்ல வேல பார்த்தமாதிரியே இருந்திருக்கலாம். ஒரு மாசமா இங்க சென்னைல வேல தேடி அலையுற, ஆனா ஒரு வேலகூட கிடைக்கல. ஏன் அந்த வேலைய விட்டுட்ட?" என்று தந்தை மகளைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு, "அப்பா, எனக்கு நீங்க ரெண்டுபேரும்தான் உலகம். லோ-சுகர்னால மயக்கமாகி கீழவிழுந்துட்டீங்கன்னு கேள்விப்பட்டதும் நான் எப்படி பதரீட்டேன் தெரியுமா? அதனால உங்கள பத்திரமா பாத்துக்க இங்க வந்திருக்கேன். கவல படாதீங்கப்பா, நான் கோல்ட் மெடலிஸ்ட். எனக்காக ஒரு வேல கண்டிப்பா காத்திருக்கும். சோ பீ ஸ்ட்ராங், பீ பாசிடிவ்" என்று நம்பிக்கையுடன் கூற தங்கராஜன் புன்னகை புரிந்தார்.

நேர்காணலுக்காக தயாராகியவள் தன்னுடைய தந்தையிடம் ஆசிர்வாதங்களைப் பெற்றாள். பின் தாயைப் பார்ப்பதற்காக சென்றபோது, “இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு சொன்னீல. ஆல் தி பெஸ்ட்" என்று வனஜா தன் மகளை வாழ்த்த, மித்ரா தன் தாயை கட்டியணைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

மாலை ஐந்துமணிக்கு சோர்வு படிந்த முகத்துடன் மித்ரா வீட்டினுள் நுழைந்தாள். தன் அறைக்குச் சென்று முகம் கைகால்களை அலம்பிவிட்டு மீண்டும் ஹாலிலுள்ள சோபாவில் அமர்ந்தாள். அதே சமயம் அவளுடைய தந்தை தங்கராஜனும் அலுவலக வேலையை முடித்துவிட்டு வீடுதிரும்பினார். மகள் சோர்வுடன் அமர்ந்திருப்பதைக் காணவும், "என்னடா ரொம்ப அலைச்சலா?" என்று வினவ மித்ராவோ 'ஆம்' என்று மேலும் கீழுமாக தன் தலையை அசைத்தாள்.

அப்போது தன் கையில் மூன்று காப்பி கோப்பைகளைக் கொண்ட ட்ரேயை ஏந்தியவாறு வனஜாவும் அங்கு வந்தார். ஒவ்வொருவருக்குமான அந்த கோப்பைகளை கொடுத்துவிட்டு தானும் அந்த பேச்சை கவனிக்கத்துவங்கினார். "இன்டர்வியூ என்ன ஆச்சு?" என்று தந்தை வினவ அதற்கு, "இங்க பணத்துக்கும் சிபாரிசுக்கும் இருக்குற மதிப்பு படிப்புக்கும், திறமைக்கும் இல்லவே இல்லப்பா" என்று சிறிது கோபாம்கலந்த வருத்தத்துடன் கூறினாள்.

அவளுடைய மனநிலையை நன்கு உணர்ந்த தங்கராஜன் ஒரு புன்முறுவலுடன், "மித்ரா, உன் திறமைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் நல்ல வேல கண்டிப்பா கிடைக்கும்" என்று பெருமிதத்துடன் கூறவும் மகள் சாந்தமடைந்தாள்.

இரவு உணவுமுடிந்ததும் மித்ரா இணையதளத்தில் வேலை தேடும் வேட்டையில் ஈடுபட்டாள். பலமணி நேரத்திற்குப்பிறகு ஒரு விளம்பரம் அவளுடைய கருத்தை ஈர்த்தது. 'வசுந்தரா இன்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற பள்ளியிலிருந்து 'திறமையான ஆசிரியர்கள் தேவை' என்றும் நாளை மறுநாள் நேர்காணல் நடக்கவிருப்பதாகவும் பெரிதாக விளம்பரம் செய்திருந்தனர். 'திறமையான ஆசிரியர்கள்' என்ற வார்த்தைகளைக் கண்டதும் அங்கு செல்ல தீர்மானித்தாள்.

அப்போது அவளுடைய கைபேசிக்கு அழைப்பு வர யாரென்று பாராமலேயே அதை எடுத்து காதில் வைத்தாள். "மேடம் எங்களை எல்லாம் மறந்துட்டீங்க போல?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. யாரென தெரிந்ததும் மித்ரா ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில், "பானுமதி!" என்று அவளுடைய பெயரைக் அழைக்க மற்றவளோ, "ஓ! என் பெயர்லாம் நியாபகம் இருக்கா?" என்று பொய்கோபத்துடன் கேட்டாள்.

அதற்கு, "நான் சென்னைக்கு வந்தத சொல்லணும்னுதான் இருந்தேன் ஆனா.." என்று பேசியவளை இடைமறித்து, "சரி அதெல்லாம் விடு. நாளைக்கு பார்க் ஹோட்டல் வந்துரு. உன்ன பாத்தே ரொம்ப நாளாச்சி. உன்கூட நிறைய பேசவேண்டியதிருக்கு. ஒழுங்கா வந்துரு" என்று கூறவும் மித்ரா சம்மதித்தாள்.

திட்டமிட்டபடியே தோழியர்கள் இருவரும் பார்க் ஹோட்டலில் சந்தித்தனர். அவள் இளம் மஞ்சள் நிறத்தில் முக்கால் கை சுடிதார் அணிந்திருக்க ஒரு தோள்பட்டையிலிருந்து நீலநிற துப்பட்டா மிதந்தது. இடைவரை இருந்த கார்மேகக் கூந்தல் அவளுடைய நடைக்கேற்றாற்போல் இடமும் வலமுமாக அசைந்தது. காதருகே இருந்த சுருள் கேசங்கள் மாம்பழநிறக் கன்னங்களை அவ்வப்போது வருடின.

பிறை நெற்றியில் வில்லாக வளைந்திருக்கும் இரு புருவங்களுக்கு மத்தியில் வெண்ணிற சாந்துப் பொட்டு வைத்திருந்தாள். அளவாக மைதீட்டப்பட்ட கண்களும், புன்னகை புரிந்தவாறே இதழ்களும் இருந்தது. தான் அணிந்திருந்த உடைக்கு ஏற்றாற்போல் காதுகளில் அழகான ஜிமிக்கியை அணிந்திருந்தாள். தன்னுடைய கைப்பையை ஒரு தோள் சுமக்க நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுடன் அந்த ஹோட்டலினுள் நுழைந்தாள்.

உணவு உண்ணும் பகுதிக்கு வந்தவளின் கண்கள் பானுவைத் தேடின. வெகுநாட்கள் கழித்து தன் தோழியை கண்டதால் பானு வேகமாக இருக்கையிலிருந்து எழுந்து வந்து மித்ராவை அணைத்துக்கொண்டாள். பின் தங்களுடைய இருக்கையில் அமர்ந்து ஐந்து வருட நிகழ்வுகளை பேச ஆரம்பித்தனர்.

தோழிகள் இருவரும் தாங்கள் ஆர்டர் செய்த உணவை உண்டவாறே பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அப்போது தவறுதலாக பானுவின்மீது அவள் வைத்திருந்த பனிக்கூழ் சிந்தியது. அதை சுத்தம் செய்வதற்காக கைகழுவும் இடத்தை நோக்கிச் சென்றாள். வெகு நேரம் ஆகியும் பானு வராத காரணத்தினால் மித்ரா அவளைத் தேடிச் சென்றாள்.

அது மிகப்பெரிய ஹோட்டல் என்பதால் பானுவைத் தேட சற்று நேரம் பிடித்தது. இறுதியில் பானுவைக் கண்டதும் மித்ரா அவளை நோக்கி விரைந்தாள். "இவ்வளவு நேரமாடி உனக்காக வெயிட் பண்றது? நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ எதுவும் பேசாம எங்கயோ பாக்குற?" என்று தானும் அவ்விடத்தை நோக்கியபோது அவளுடைய கண்கள் அதிர்ச்சியால் விரிந்தன.


இனியவளே வருவாள்...


வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடவும்...
https://www.narumugainovels.com/threads/35498/
 
Last edited:
இனியவளே - 2
மறுகணமே மித்ராவின் கண்கள் கோபத்தால் சிவக்க கை முஷ்டியாக இறுகியது. ஏனென்றால் அந்த ஹோட்டலிலுள்ள பெரிய ஹாலில் பானுமதியின் காதலனான லோகேஷுக்கு ஒரு பணக்காரப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக பெரிய பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் நின்றுகொண்டிருந்த பானுவின் கையைப் பற்றி அந்த ஹாலிற்குள் அழைத்துச்சென்றாள். உள்ளே நுழைந்தவள் அந்த ஹாலிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தன் பார்வையைச் சுழலவிட்டாள்.

அப்போது மணமகன் அறை என்று எழுதப்பட்ட பலகை அவள் கண்களில் பட விரைந்து பானுவை அந்த அறைக்கு அழைத்துச் சென்றாள். மணமகனான் லோகேஷ் தன் தோழர்களுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவனுடைய கண்கள் அந்த அறையின் நுழைவாயிலை நோக்கின.

அங்கு நின்றுகொண்டிருந்த பானுவைப் பார்த்ததும் அவனுடைய புன்னகை மறைய மெல்ல தன் இருக்கையிலிருந்து எழுந்தான். அவனுடைய செய்கையின் அர்த்தத்தை உணர்ந்த அவன் நண்பர்கள் திகைத்தனர். ஆனால் மறுகணமே அவர்களுள் ஒருவன், "நீ ஏன் இங்க.." என்று பானுவை நோக்கி ஓங்கியவனின் குரல் அருகிலிருந்த மித்ராவின் கனல்கண்களைக் கண்டதும் அப்படியே அடங்கின. லோகேஷ் அங்கிருந்த தன் நண்பர்களை அந்த அறையைவிட்டு வெளியேறுமாறு கூற அவர்கள் வெளியேறினர்.

உடனே பானு, "ஏன்டா இப்படி பண்ண? நான் உன்ன ரொம்ப நம்புனேன், இப்படி ஏமாத்திட்டியே. நீயெல்லாம் மனுஷனா?" என்று அவனுடைய சட்டை காலரைப் பிடித்து கண்களில் கண்ணீருடன் கோபத்தில் உலுக்கினாள். உடனே லோகேஷ் அவளுடைய கையைப் பற்றி தள்ளிவிட்டு, "நான் யாரையும் ஏமாத்தல" என்று கூறவும், "அப்போ என்ன லவ் பண்றேன், கல்யாணம் பண்றேன்னு சொன்னியே. இப்போ, வேற யாரையோ கல்யாணம் பண்ணப்போற?" என்று கேட்கும்போதே அவளுடைய குரல் தழுதழுத்தது.

அவன், "லவ்வா? நான் டைம்பாஸுக்காகத்தான் உன்கூட பழகுன்னேனே தவிர வேற எந்த எண்ணமும் எனக்கு கிடையாது. வேணும்னா ஒண்ணு பண்ணுவோம், எனக்கு கல்யாணமானா என்ன, எப்பவும்போல நம்ம ரிலேஷன்ஷிப் தொடரட்டும். நான் உன்ன நல்லா பாத்துக்கு.." என்று கூறுவதற்கு முன்பே அவனுடைய கன்னத்தில் 'பளார்' என்று ஒரு அரை இடியாக விழுந்தது. அதுவரையில் அவன் கூறியதை பொறுமையை இழுத்துப்பிடித்துக் கேட்டுக்கொண்டிருந்த மித்ரா அவன் இறுதியாக கூறியதில் கோபம் தலைக்கேற அவ்வாறு செய்தாள்.

"உன்ன காதலிச்சாங்குறதுக்காக அவள இவ்வளவு தரைகுறைவா பேசுறது ரொம்ப தப்பு. ஏன்டா பணத்திமிரால பொண்ணுங்கள இவ்வளவு கேவலமா நினைக்கறீங்க? உன்னலாம் ஜெயில்ல தள்ளனும்" என்று கோபத்துடன் கூறவும் லோகேஷுக்கு ஆவேசம் தலைக்கேறியது.

அவன் மித்ராவை நோக்கி அடிப்பதற்காக கையை உயர்த்தியபோது, "ஸ்டாப் இட்!" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டதும் லோகேஷ் அதிர்ச்சியால் உறைந்தான். அதைச் செய்தது அவனை மணக்கவிருந்த பெண்ணான சிந்துஜா. உடனே அவன், "நீ எப்ப வந்த?" என்று அதிர்ச்சியுடன் கேட்க அவளோ, "நீ பேசுன எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான்டா இருந்தேன்...ராஸ்கல் இவ்வளவு கேவலமானவனா நீ? என்ன லவ் பண்றமாதிரி என்னமா நடிச்சிருக்க. ஃராடு.." என்று அவள் கோபத்தால் லோகேஷை பொரிந்து கொட்டினாள்.

அப்போது மித்ரா பானுமதி அங்கு இல்லை என்றதும் அவ்விடத்தைவிட்டு மின்னலென வெளியேறினாள். அங்கு இவையனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த ஒருவன் புன்னகைத்தபடி மித்ரா சென்ற வழியே பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தப் பெரிய ஹோட்டலின் பல இடத்தில் தேடியும் பானுமதி கிடைக்கவில்லை என்றதும் மித்ரா சற்றுப் பதறினாள். இறுதியாக அங்குள்ள சிறுவர் பூங்காவில் பானுமதியைக் கண்டதும் நிம்மதியடைந்து அவளருகே சென்று பார்த்தபோது எந்தஒரு உணர்ச்சியும் இல்லாமல் ஒரு கற்சிலையாக அவள் அமர்ந்திருந்தாள். மித்ரா பேசுவதற்கு முன்பே, "எனக்கு வீட்டுக்குப் போகணும்" என்று மட்டும் இறுக்கமான குரலில் பானு கூறவும் வேறெதுவும் பேசாமல் மித்ரா அவளை தன் இருசக்கர வாகனத்தில் அவளுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

வீடு வந்ததும் எதுவும் பேசாமல் வேகமாக உள்ளே செல்லவிருந்தவளின் கையைப் பற்றி இழுத்து, "பானு இதுமட்டுமே வாழ்க்கை இல்ல. இதைத்தாண்டி நிறைய விஷயம் இருக்கு. நடந்தது எல்லாம் நல்லதுக்குதான். இதுவும் கடந்து போகும். சோ பீ ஸ்ட்ராங், பீ பாசிட்டிவ்" என்று கூறி அவளை ஆதரவாக அணைத்துக்கொள்ள பானுவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதை துடைத்துவிட்டு பானு வீட்டினுள் விரைந்தாள். வீடு திரும்பிய மித்ராவிற்கு இரவு முழுவதும் பானுவைப் பற்றிய நினைப்புதான். பானு எந்தஒரு தவறான முடிவிற்கும் வந்துவிடக்கூடாது என்று கடவுளை பிரார்த்தித்தாள்.

மறுநாள் காலையில் விரைந்து மித்ரா நேர்காணலுக்காக வசுந்தரா இன்டர்நேஷனல் ஸ்கூலை வந்தடைந்தாள். வசுந்தரா இன்டர்நேஷனலில், பிளே ஸ்கூல் முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ளன. மெட்ரிக், சிபிஸ்சி, இங்கிலிஷ் மீடியம் என பல பிரிவுகளில் பள்ளி நடத்தப்பட்டு வருகின்றது. அங்கிருந்து படித்து வெளியேறும் மாணவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை தாங்கி நிற்கக்கூடிய தூண்களாகவே இருப்பார்கள். அதற்குக் காரணம் அங்கு பணிபுரியும் திறமையான மற்றும் மதிநுட்பம் மிகுந்த ஆசிரியர்கள்.

சங்கமித்ரா நேர்காணல் நடக்கவிருந்த இடத்தை அடைந்தபோது நூற்றிற்கும் மேற்பட்டோர் இன்டர்வியூவிற்காக காத்துக்கொண்டிருந்தனர். தன்னுடைய முறைவந்ததும் உள்ளே சென்றவள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தக்கபதிலளித்து தன் திறமையை வெளிப்படுத்தினாள். அதன் முடிவு மின் அஞ்சல் மூலமாக தெரிவிக்கப் படும் என்றதும் தன் வீட்டிற்குக் கிளம்பினாள்.

அதே சமயம் மற்றொரு இடத்தில் ஒரு பெரிய பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தபோது ஒரு ஃபெராரி கார் வேகமாக வழுக்கிக்கொண்டு வந்து நின்றது. அந்த காரிலிருந்து இறங்கிய ஓட்டுநர் வேகமாக கார்கதவை திறந்துவிட அதிலிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கீழே இறங்கினாள்.

அவளை வரவேற்பதற்காக நின்றுகொண்டிருந்த அனைவரும் மாலை மற்றும் பூச்செண்டுகளைக் கொடுத்தனர். கண்களில் ஆணவம் சிறிதும் குறையாமல் உதட்டளவில் மட்டும் லேசான முறுவல் செய்தாள். அனைவரும் இருக்கையில் அமர்ந்தவுடன் விழா துவங்கியது. மேடையில் நின்றுகொண்டிருந்த பெண், "நம் மகளிர் சங்கத் தலைவி அகிலாண்டேஸ்வரி அவர்களின் பாராட்டுவிழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன். மிஸ்ஸஸ் அகிலாண்டேஸ்வரி.." என ஆரம்பித்தவள் இந்த உலகத்திலுள்ள நற்காரியங்கள் அனைத்தையும் அவளைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்பதுபோல் புகழாரம் பாடினாள்.

பின் சால்வையைப் போர்த்தி கெளரவித்து ஒரு விருதும் வழங்கினர். வந்திருந்த அனைவரும் உணவு உண்பதற்காக சென்றுவிட அகிலாண்டேஸ்வரியின் நெருங்கிய சிநேகிதியான காமினி அவளருகில் வந்தாள். அவளைப் பார்த்ததும், "ஈவனிங் நான் சொன்னமாதிரி செஞ்சிரு" எனக் கூறவும் மற்றவள், "எந்த பிரச்னையும் வராதுல?" என ஐயம் கலந்த குரலில் கேட்டாள். உடனே அவளோ, "அவன் என் பையன். எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்கு தெரியும். நான் சொன்னதமட்டும் செய்" என அதிகாரக் குரலில் கூறவும் காமினி நிம்மதியடைந்தாள்.

மேலும் தங்கமுலாம் பூசிய கார்டு ஒன்றை காமினியிடம் நீட்டி, "கேட்கீப்பர்ஸ்ட்ட இத காட்டு. இது இருந்தா தான் உள்ள விடுவாங்க" என்று கூற மற்றவளும் ஒப்புதலாக தலையாட்டினாள். அதில் ஆர்.வி. என அழகாக ஆங்கில எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது . அதை முன்னும் பின்னும் திருப்பிப்பார்த்த காமினியின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை ஏனென்றால் அது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியது.

வீட்டிற்கு விரைந்து சென்ற காமினி தன் மகளை அழைத்து, "அவந்திகா இன்னைக்கு ஈவினிங் எங்கப்போறோம்னு தெரியும்ல? சோ அதுக்கேத்தாப்ல ட்ரெஸ், நெக்லெஸ்ன்னு எல்லாத்தையும் செட்டா எடுத்து வச்சிக்கோ. யூ ஆர் கோயிங் டு பி ய குயின்" என கூறும்போதே மகள் மற்றும் தாயின் மனம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது.

அப்போது, "நீ நினைக்குறது நடக்குமா? இந்த பிசினஸ் உலகத்தையே தன்னோட சாம்ராஜ்யமா மாத்தி அதுல கிங்கா இருக்குற ஆர்.விக்கு மனைவியாகுறது லேசான காரியம்கிடையாது, ஆர்.வி நினைக்கனும். அதோட அவர் கண்டிஷன்ஸ் நியாபகம் இருக்குல?" என கேட்க இருவரும் ஏழனமாகச் சிரித்தனர்.

"கல்யாணத்துக்கு அப்பறம் பாருங்க, 'கண்டிஷனா? போட்டேனா?'ன்னு ஆர்.வியே கேக்குற அளவுக்கு செஞ்சிருவா நம்ம அவந்தி" என்று பெருமையாகக் கூறவும் மகளோ ஸ்டைலாக தன் தோளைக் குலுக்கினாள். பின், "இவரு எப்பவுமே இப்படிதான். சொல்லவேண்டிய ஆளே சொல்லியாச்சு. வா அவந்தி" என்று கூறி இருவரும் அங்கிருந்து சென்றனர். 'மண்குதிரைய நம்பி இந்த ரெண்டும் ஆத்துல இறங்குது. அவரபத்தி முழுசா தெரியல. கடவுளே! இனி என்ன நடக்க போகுதோ?' என்று மனதிற்குள் நினைத்தவர் பெருமூச்சுவிட்டார்.

மீண்டும் இனியவள் வருவாள்...

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடவும்

https://www.narumugainovels.com/threads/35498/
 
இனியவளே 3

அன்று மாலை தனசேகரன் குடும்பத்தார் அகிலாண்டேஸ்வரி கூறியவாறு 'வீர்'ஸ்' மேன்ஷனுக்கு வந்தனர். அங்குள்ள காவலாளியிடம் கார்டை காட்டவும் அவன் அதைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து அகன்றான். அவன் சென்ற சில வினாடிகளில் அந்த மேன்ஷனின் நீண்ட உயரமான கதவு தாமாக திறக்க தனசேகரன் குடும்பத்தாரின் கார் உள்ளே சென்றது.

நீண்ட நெடிய தார்ச்சாலை அமைக்கப்பட்டிருக்க அதன் இரு புறங்களிலும் ஓங்கி உயர்ந்த மரங்கள் வரிசையாக நின்றன. அவைகள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி அந்த சாலைக்கு நிழற்குடைகள் போல் இருந்தன. அந்த மரங்களுக்குப் பின்னும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரையில் அழகிய மரங்கள் சீராக அணிவகுத்து நின்று அடர்ந்த காடுபோல் காட்சியளித்தன.

அந்த சாலையின் இரு பகுதிகளிலும் ஒவ்வொரு அரை கிலோமீட்டருக்கு செக்யூரிட்டி கார்ட்ஸ் கையில் பெரிய துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருக்க கூடுதல் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமெராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. அவர்கள் பயணித்துக்கொண்டிருந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை அவர்களது கவனத்திற்கு வந்தது.

அதில் அந்த இடத்தின் அமைப்பும், எந்தெந்த இடத்திற்கு எப்படி செல்லவேண்டும் என்ற வழியும் இருந்தது. அதைக் கண்டவுடன் தனசேகரன் குடும்பத்தார் பிரம்மித்துப் போயினர். ஏனென்றால் ரகுவீரின் பங்களா பெரிய மாளிகையாக நடுவே நிற்க அதைச் சுற்றிலும் பெரிய தோட்டம், நூலகம், நீச்சல்குளம், பூங்கா, விருந்தினர் விடுதி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் அந்த அடர்ந்த காடுபோன்ற இடத்தில அமைக்கப்பட்டிருந்தது.

அந்த மாளிகை வீட்டிலிருந்து மட்டுமே அந்த அனைத்து இடத்திற்கும் செல்ல இயலும். இதைக் கண்ட காமினி மற்றும் அவந்திகாவின் மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டு ஓடியது. சுமார் ஒருமணிநேர பயணித்திற்குப் பின் அவர்கள் ரகுவீரின் மாளிகையை அடைந்தனர். உள்ளே சென்றவர்களின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை ஏனென்றால் அங்கு இல்லாதது என்று ஒன்றுமே இல்லை.

அந்த காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் கூட இத்தனை வசதிகளுடனும், ஆடம்பரத்துடனும் வாழ்ந்திருப்பார்களோ என்னவோ! அந்த மாளிகையின் அழகில் பிரமித்திருந்த தனசேகரன் குடும்பத்தாரை அகிலாண்டேஸ்வரி வரவேற்றாள்.

பின் அவர்களை மேகத்தினும் மிருதுவான பஞ்சுஇருக்கையில் அமரச்செய்து அங்கிருந்த பணியாளிடம் அவர்கள் அருந்துவதற்கு பழச்சாற்றை கொண்டுவருமாறு பணித்தாள். அவள் தனசேகரன் குடும்பத்தாருடன் பேசிக்கொண்டிருந்தபோது 'டக் டக்' என சப்தம் கேட்க அனைவரின் கவனமும் அங்கு சென்றது. கைத்தடியை ஊன்றியவாறு நின்றுகொண்டிருந்த அறுபத்தி ஐந்து மதிக்கத்தக்க நபரைக் கண்டதும் அனைவரும் எழுந்து புன்முறுவலுடன் வணங்கினர்.

அவர் வேறுயாருமல்ல ரகுவீரின் தந்தையும், அகிலாண்டேஸ்வரியின் கணவருமான சுந்தரேஸ்வரன். பக்கவாதத்தினால் அவருடைய இடதுகால் லேசாக செயலிழந்து போகவே அவர் கைத்தடியைப் பயன்படுத்தும் நிலை உண்டாகியது. அங்கிருந்த அனைவருக்கும் புன்னகையை பதிலாக தெரிவித்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.

தனசேகரன் குடும்பத்தார் அங்கு வந்த காரணத்தைப் புரியாமல் தன் மனைவியின் பக்கம் நோக்க அகிலாண்டேஸ்வரி, "நம்ம ரகுவ மாப்பிள்ளை பார்க்க வந்திருக்காங்க" என புன்னகையுடன் பதிலளித்தாள். அதைக் கேட்டதும் அவர் முகத்தில் புன்னகை மறைவதை அறிந்த அகிலா, "அவங்க எல்லா கண்டிஷன்ஸ்க்கும் ஒத்துக்கிட்டுதான் வந்திருக்காங்க" என கூறவும் அவருடைய மனதில் பதற்றம் குடிகொண்டது. தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாகக் கூறி அங்கிருந்து அகன்றார்.

அதேநேரத்தில் மாலை வீடுதிரும்பிய சங்கமித்ரா அவசரமாக கிளம்பி தன் தோழியின் வீட்டிற்குச் சென்றபோது பானுவின் தாய் விமலா கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள். மித்ராவைக் கண்டதும், “என்னமா நடந்துச்சு? ஏன் இவா இப்படி இருக்கா?" என்று கூறிமுடிக்கும் முன்பே அவருடைய கண்களில் கண்ணீர் பெருகியது.

உடனே, "அம்மா கவலைப்படாதீங்க, அவா லேசா அப்செட்டா இருக்கா. சீக்கிரம் சரியாயிடுவா. நீங்க அழாதீங்க, நான் பாத்துக்குறேன்" என்று அவருடைய கண்ணீரைத் துடைத்தாள். பானுவை சமாதானம் செய்து அருகேயுள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்று மரத்தடியிலுள்ள பெஞ்சில் இருவரும் அமர்ந்தவுடன் பானு மீண்டும் விசும்பினாள்.

அவள், "என் வாழ்க்கையே முடிஞ்சிருச்சி. எனக்கு வாழவே பிடிக்கல. அவன்.." என்று தன் மனக்குமுறலை மித்ராவிடம் புலம்பித்தள்ளினாள். தன் தோழியின் ஆற்றாமையை பொறுமையாகக் கேட்டவள் பின் பேசத்துவங்கினாள். "உன் வருத்தம் எனக்கு புரியுது. நம்ம ரொம்ப நம்புனவங்க ஏமாத்துனா கஷ்டமாதான் இருக்கும். இந்த உண்மை உனக்கு இப்பவே தெரிஞ்சத நினைச்சி சந்தோஷப்படு. இதவிட ஒரு நல்ல வாழ்க்கை உனக்கு அமையும். உன்ன பத்தி கொஞ்சம்கூட நினைக்காத ஒருத்தன நம்பி, நீயே உலகம்னு இருக்குற உன் அம்மாவ மறந்துறாத" என்று கூறும்போதே பானுவின் கண்களிலிருந்து கண்ணீர் வெளிவரத் துவங்கியது.

மேலும், "'யார் வாழக்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது'. இனிமேல் அதப்பத்தி நினைக்காத. நடக்குறது எல்லாமே நல்லதுக்குதான்" என்று கூறி பானுமதியின் கைகளை ஆறுதலாக பற்றினாள். மித்ரா கூறிய அறிவுரைகள் கலங்கிய குட்டையாக இருந்த பானுவின் மனதில் தெளிவை ஏற்படுத்தியது. அப்போது பானுவின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வர அதை எடுத்து பேசிக்கொண்டிருந்தாள்.

அதேசமயம் மித்ரா தன் கைபேசியில் நேர்காணலுக்கான முடிவுகள் வந்திருக்கிறதா என்று தன் மின்னஞ்சலை திறந்து பார்த்தவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஏனென்றால் வசுந்தரா இன்டர்நேஷனல் ஸ்கூலிலிருந்து வந்த மின்னஞ்சலில் மித்ரா நேர்காணலில் தேர்ச்சி பெற்றதாகவும். வரும் திங்கட்கிழமையிலிருந்து ஆசிரியராக பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தவளுக்கு பானு மேலும் ஓர் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தாள். பானு அவள் வேலை செய்யுமிடத்தில் தான் நினைத்த பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைத்திருப்பதாகக் கூற மித்ரா ஆனந்தமடைந்தாள். இந்த சந்தோஷமான செய்தியை இருவரும் தங்கள் குடும்பத்தினருக்குக் தெரிவிக்க அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். தோழிகள் இருவரும் தங்கள் சந்தோஷத்தைக் கொண்டாட ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றனர் .

அதே சமயம் சென்னையிலுள்ள மற்றொரு தனியார் விமான நிலயத்தில் பிரைவேட் ஜெட் வரிசையாக அணிவகுத்து நின்றுகொண்டிருந்தன. மாலை நேரம் என்பதால் ஓடுபாதையில் நட்சத்திரங்களை வரிசையாக அதன் இருபுறங்களிலும் பதிந்துவைத்திருப்பதுபோல் மின் விளக்குகள் மின்னின. அந்த மொத்த இடத்திற்கும் உரிமையாளன் வேறுயாருமில்லை ‘ஆர்.வீ.’ என்ற ரகுவீர்தான்.

அந்த தனியார் விமானநிலையத்தின் வெளியே பிரபல பத்திரிகைகளாகிய பி.பி.சி, டைம்ஸ் நவ் என பலர் அவனுடன் ஒரு நிமிட நேர்காணலுக்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது வேகவேகமாக ஒரு பிரைவேட் ஜெட் அந்த ஓடுபாதையில் தரையிறங்கியது. அந்த ஜெட் தானாக திறந்துகொள்ள அதிலிருந்து இறங்குவதற்காக அவன்...அந்த ரகுவீர் நின்றுகொண்டிருந்தான்.

ஆணழகன். திமிர் மற்றும் கர்வத்தின் மொத்த உருவம். எவருக்கும் அடிபணியாத துணிவு. எந்த பெண்ணின் காதல் வலையிலும் சிக்காத திமிங்கலம். தன் சாதுர்யத்தால் பாலைவனத்தையும் பூஞ்சோலையாக மாற்றக்கூடிய திறமைபடைத்தவன். மொத்த இந்தியாவின் நாற்பது சதவிகித வளர்ச்சியின் பெருமை இவனையும், இவன் நிறுவனத்தையுமே சாரும். விதையென சிறிதாக ஆரம்பித்த நிறுவனத்தை ஆலமரமாக மாற்றி இந்த வர்த்தக உலகையே ஆட்டிப்படைக்கும் முடிசூடா மன்னன்.

அவன் கருப்பு நிற பாண்ட் மற்றும் ஷர்ட் அணிந்து அதன் மீது வெல்வெட்டினாலான நீளமான கருப்பு கோர்ட்டும் அணிந்திருந்தான். அழகான சுருள் கேசமும், நீண்ட நெற்றியும், ஆழமான கண்களும், கூர்மையான நாசியும், அளவான தாடியும் வைத்திருந்தான்.

இந்த வர்த்தக உலகத்தை தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் ஆர்.வி. என்ற ரகுவீர் கண்களில் கூலர்ஸ் அணிந்து ஒரு கையை பாக்கெட்டினுள் ஸ்டைலாக வைத்தவாறு நின்றுகொண்டிருந்தான். எப்படி ஒரு அரசன் தன் பரிவாரங்கள் சூழ கம்பீரமாக நடந்து வருவானோ பிரைவேட் ஜெட்டிலிருந்து இறங்கி ஸ்டைலாக நடக்க செக்ரெட்டரியான அபிஷேக்கும், சில மெய் காப்பாளர்களும் அவனைப் பின்தொடர்ந்தனர்.

அந்தப் பெரிய விமானநிலையத்திலிருந்து வெளியேறியவன் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களைக் கண்டுகொள்ளாமல் தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பணியாட்கள் கதவைத் திறந்துவிட அதில் ஏறிக்கொண்டான். இரண்டுவார பிசினெஸ் ட்ரிப்பில் இரவும் பகலுமாக உறங்காமல் அயராது வேலைசெய்ததால் கண்மூடி அந்த மெதுவான சீட்டில் சாய்ந்தான். அப்போது அவனுடைய கைபேசி ஒலிக்க அதை எடுத்து, "சொல்லுங்கப்பா" என்று மட்டும் கூறினான். அவனை அழைத்தது அவனுடைய தந்தையான சுந்தரேஸ்வரர்.

முதலில் அவனைப் பற்றியும் அவன் பிசினெஸ் ட்ரிப்பைப் பற்றியும் விசாரித்து மெல்ல விஷயத்திற்கு வந்தார். "ரகு நம்ம வீட்டுக்கு மிஸ்டர் தனசேகரன் ப்ரோபோசலோட வந்திருக்காரு" என்று கூறவும் அவன், "நாளைக்கு ஆஃபீஸ்க்கு தான வரச்சொன்னேன். எதுக்கு பிசினஸ் ப்ரோபோசலோட இன்னைக்கே வீட்டுக்கு வந்தாரு?" என்று சந்தேகத்துடன் கேட்டான்.

உடனே அவர், "பிசினெஸ் ப்ரோபோசல் இல்லப்பா மேரேஜ் ப்ரோபோசல்" என்று அவர் பதிலளிக்கவும் இதைச் செய்தது யார் என்று ரகுவீருக்கு நன்றகவே தெரிந்தது. சிறிது மெளனத்திற்குப் பின், "டோன்ட் வொரிபா. நான் பாத்துக்குறேன்" என்று கூறிவிட்டு தன் கைபேசியை வைத்தான்.

தன் பணியை செவ்வனே செய்துவிட்ட திருப்தியில் ஒரு பெருமூச்சுடன் கைப்பேசியைப் பார்த்து நின்றுகொண்டிருந்தபோது, "உங்க உளவாளி வேல முடிஞ்சிருச்சா?" என்ற கேள்வியில் திடுக்கிட்டு திரும்பினார். "உங்களோட எந்த திட்டமும் பலிக்காது. என்னா இவங்க நம்ம ரகுவோட கண்டிஷன்ஸ் தெரிஞ்சிதான் வந்திருக்காங்க. அதனால ரகுவுக்கும் அவந்திகாவுக்கும் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்" என்று உறுதியுடன் கூறி அங்கிருந்து சென்றாள். சுந்தரேஸ்வரர்க்கு தன் மனைவியின் எண்ணம் பலிக்காது என்பதில் சர்வ நிச்சயம். ஆனால் தன் மகன் என்ன செய்யப்போகிறான் என்பதை அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

அங்கு தங்களுடைய சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காக பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு தோழிகள் இருவரும் வந்தனர். அங்குள்ள வேலைப்பாடுகளும், வண்ண விளக்கு அலங்காரங்களும் அவர்களது கண்களைப் பறித்தன. அவற்றைக்கண்டு இருவரும் ரசித்தனர். அவர்கள் சேட்டின் துணியால் மூடப்பட்டிருந்த டேபிளுக்கு அருகேயுள்ள அழகான வேலைப்பாடுகள் அமைந்த தேக்கு இருக்கையில் அமர்ந்தனர். தங்களுக்குப் பிடித்த உணவை மெனுகார்டில் பார்த்தவாறு ஆர்டர் செய்தனர்.

ஆர்டர் செய்த உணவிற்காக காத்துக்கொண்டிருந்தபோது, "மித்து நீ சொன்னதுதான் சரி. நான் அந்த ஃராட நினைச்சு என் வாழ்க்கையை பாழாக்க விரும்பல. இனிமேல் என் அம்மாவையும், கெரியரையும் கான்சன்ட்ரேட் பண்ணப்போறேன். இப்பதான் என் மனசே தெளிவா இருக்கு. தேங்க யூ சோ மச். நான் ரொம்ப லக்கி, உன்னமாதிரி ஃரெண்ட் கிடைக்க" என்று கூற மித்ராவோ புன்முறுவல் பூத்தாள்.

இருபெண்களும் பேசிக்கொண்டிருந்தபோது மித்ராவின் கால் டேபிளின் அடியிலுள்ள ஏதோஒன்றின்மீது தட்டுப்பட்டது. 'அது என்ன?' என்று பார்ப்பதற்காக அந்த நீண்ட சேட்டின் துணியை விலக்கியபோது, 'ஷ்' என்ற சப்தம் கேட்டது. அதைக் கண்டு அவளுடைய கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

மீண்டும் இனியவள் வருவாள்...

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடவும்

https://www.narumugainovels.com/threads/35498/

 
இனியவளே - 4
அங்கு முழங்கால்களை கைகளால் கட்டியவாறு மருண்ட விழிகளுடன் ஒரு நான்குவயது சிறுவன் அமர்ந்திருந்தான். தன் சட்டைக்கு ஏற்றாற்போல், கால்சட்டையும், வெய்ஸ்டகோர்ட் மற்றும் டையை அணிந்திருந்தான். அதில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட அழகான தாமரை புரோச் ஒன்றை அணிந்திருந்தான். அந்த மங்கிய இருளிலும் மிக அழகாக பிரகாசித்தது.

அச்சிறுவனின் எழில் வாய்ந்த முகத்தை ஒருகணம் பார்த்துவிட்டு, "செல்லம் யார் நீங்க? இங்க என்ன பண்றீங்க?" என்று கனிவான குரலில் விசாரித்தாள். அதற்கு அச்சிறுவன், "அவங்க என்ன பார்த்திடுவாங்க" என்று கூறி அந்த டேபிள் கிளாத்தால் மீண்டும் மூடிக்கொண்டான்.

அந்த திரையை விலக்கி, "நீ பயப்படாத, நான் இருக்கேன். யாரு பார்த்திருவா?" என்று மித்ரா கேட்டதற்கு அந்தச் சிறுவன் கையை நீட்டி ஒரு இடத்தை நோக்கி காட்டினான். அந்த இடத்தில் கட்டுமஸ்தான உடலுடன் பார்ப்பதற்கு அடியாட்களைப் போல் தோன்றிய ஐவர் நின்றுகொண்டிருந்தனர். மித்ராவின் மனதில் பல எண்ணங்கள் தோன்ற தன் தோழியைப் பார்த்து, "பானு இவன் பாக்க பணக்கார வீட்டுப் பையன் மாதிரி இருக்கான். அதனாலதான் இந்த ஆட்கள் இவன கடத்தீட்டுப் போக வந்திருக்காங்களோ? அதான் இங்க பயந்து ஒளிஞ்சிருக்கானோ? என்ன பண்றது?" என்று கேட்டாள். அதற்கு மற்றவளோ, "நமக்கு எதுக்கு வம்பு. வா வேற டேபிளுக்குப் போகலாம்" என எழ முயன்றாள்.

ஆனால் மித்ராவோ, "எதுக்கெடுத்தாலும் பயப்படாத. இந்த பையன பார்க்கவே பாவமா இருக்கு. இவனுக்கு கண்டிப்பா உதவி செஞ்சே ஆகணும். உட்காரு" என்றதும் பானு இருக்கையில் அமர்ந்தாள். மீண்டும் அந்தச் சிறுவனிடம் திரும்பி, "நீ இங்கயே இரு" என்று அச்சிறுவனை பானுவின் கண்காணிப்பில் விட்டுச் சென்றாள்.

அந்தச் சிறுவனைப் பற்றிய விவரம் தெரிவிக்க ஹோட்டலின் வரவேர்புப்பகுதிக்கு வேகமாக விரைந்தாள். அங்கு நின்றுகொண்டிருந்த ஐந்து வரவேற்பாளர்களும் ஏதோ ஒரு வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஐவருள் ஒருவன் தன் பதற்றத்தை மறைத்துக்கொண்டு புன்முறுவலுடன் "ஹவ் கேன் ஐ ஹெல்ப் யு மேம்?" என வினவினான். அவள், "அது...ஒரு சின்ன பையன்" என்று தயங்கியவாறு கூறியபோதே அங்குள்ள அனைவரின் பார்வையும் அவள் பக்கம் திரும்பியது.

உடனே, "உங்க டேபிள் எது மேடம்?" என்று கேட்க அவள் அவர்களை அழைத்துச் சென்றாள். அங்கு பானு மட்டும் தலையில் கைவைத்தவாறு அமர்ந்திருந்தாள். "ஏய்! பானு, அந்த பையன எங்க?" என்று வினவ மற்றவளோ, “அவன் அப்பவே சிட்டா பறந்துட்டான்” என்றாள்.

அவள் செய்வதறியாது அவனை திரும்பிப்பார்த்தபோது, "இட்ஸ் ஓகே மேடம்" என்று கூறி அங்கிருந்து சென்றான். "வா நாம கிளம்பலாம்" என்று பானு கூற இரு தோழியர்களும் அங்கிருந்து சென்றனர்.

அதே நேரத்தில் இங்கு தன்னுடைய இரண்டுவார வெளிநாட்டு வணிகப் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய ரகுவீருக்கு என்றும் இல்லாத பலத்த வரவேற்பு நடந்துகொண்டிருந்தது. அதன் காரணம் தெரிந்தும் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் இயல்பாக இருந்தான். அவனுடைய நடவடிக்கை அகிலாண்டேஸ்வரியின் மனதில் லேசான நெருடலைக் கொடுத்தாலும் அதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ரகுவீர் வருவதைக் கண்டதும் தனசேகரன் குடும்பத்தார் இருக்கையிலிருந்து எழுந்து அவனுக்கு தங்களது வணக்கத்தை தெரிவிக்க ஒற்றைக்கையசைவால் அவர்களை அமருமாறு கூறினான். பின் தானும் எதிரே இருந்த நீள்விருக்கையில் ஸ்டைலாக கால்மீது கால்போட்டு, கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டியவாறு லாவகமாக அமர்ந்திருந்தான். அந்த நேரத்தில் சுந்தரேஸ்வரரும் அவனருகே வந்து அமர்ந்தார்.

அங்கிருந்த தனசேகரன் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறவும், "என்னோட மேரேஜ் கண்டிஷன்ஸ் உங்களுக்கு தெரியும்னு நினைக்குறேன். அது என்னங்குறத மிஸ் அவந்திகா எல்லார் முன்னாடியும் சொன்னா நல்லாயிருக்கும்" என்று ரகுவீர் கூற அவந்திகா தன் தாய் காமினியைப் பார்த்தாள். 'இதில் என்ன இருக்கிறது' என்று நினைத்த காமினி தன் மகள் அவந்திகாவைப் பார்த்து கூறுமாறு சைகை செய்தாள்.

உடனே மற்றவளோ, "கல்யாணத்துக்கு அப்புறம் குழந்தையே வேண்டாம்னு.." என்று அவள் கூறிமுடிப்பதற்குள், "எக்ஸாக்ட்லி, கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு குழந்தைக்குற கமிட்மெண்ட்டே வேண்டாம். அதோட என் கண்டிஷன்ஸ்ல இப்போ புதுசா ஒன்ன சேர்த்திருக்கேன்" என்று தன் எண்ணத்தை அனைவருக்கும் தெரிவித்தான்.

'அது என்னவாக இருக்கும்?' என்ற கேள்வி அனைவர் மனத்திலும் ஓடிக்கொண்டிருக்க, சுந்தரேஸ்வரர் மட்டும், 'ரகு என்ன செய்யப்போகிறான்?' என்ற ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவன் தன்னுடைய இரண்டாவது நிபந்தனையைக் கூறினான்.

மேலும், "என்னோட இந்த ரெண்டு கண்டிஷன்ஸையும் ஓத்துக்கிட்டு இப்பவே இந்த பேப்பர்ஸ்ல சைன் போடுறதா இருந்தா நாளைக்கே எனக்கும் மிஸ் அவந்திகாவுக்கும் கல்யாணம் நடக்கும். இல்லைனா நீங்க இப்பவே இங்கிருந்து போகலாம். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்" என்று தன் முடிவைக்கூற சுந்தரேஸ்வரர் உட்பட அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் உறைந்தனர். தன் செக்ரட்டரி அபிஷேக்கிடமிருந்து ஒரு கோப்பை வாங்கி தன் முன்னே இருந்த கண்ணாடி டேபிளில் வீசினான்.
WhatsApp Image 2026-01-13 at 7.53.35 PM.jpeg
மேலும், "இப்போதைக்கு ஒத்துக்கிட்டு என் அக்ரிமெண்ட்ல இருந்து பின்வாங்கினா என்ன ஆகும்னு மிஸ்டர் தனசேகரனுக்கு நல்லாவே தெரியும்" என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவாறு எச்சரிக்கும் தோணியில் அவன் கூறவும் தனசேகரன் குடும்பத்தார் அதிர்ந்தனர். ஆம், அவனுடன் ஒப்பந்தத்தில் நுழைந்து அதிலிருந்து பின்வாங்கிய குருமூர்த்தி குரூப் ஆஃ கம்பெனிஸ் இன்று பிசினஸ் உலகத்திலேயே இல்லை என்பது பிசினஸ் உலகத்திலுள்ள அனைவரும் அறிந்த ஒன்று.

இப்படி ஒரு திருப்பத்தை தன் மகன் இந்த விஷயத்தில் வைப்பான் என்று சற்றும் எதிர்பாராத அகிலாண்டேஸ்வரி திகைத்து நின்றாள். ரகுவீருடன் வணிகரீதியாக நல்ல நட்புறவில் இருந்த தனசேகரன் மனைவி மற்றும் மகளின் ஆசைக்காக தன் கம்பெனி சீர்குலைந்து போவதை விரும்பவில்லை. அதனால், "இதப்பத்தி யோசிக்க கொஞ்சம் டைம் வேணும் மிஸ்டர் ஆர்.வி. நாங்க இப்போ கிளம்புறோம்" என்று தனசேகரன் படபடத்த குரலில் கூறினார்.


உடனே ஆர்.வி. 'நீங்கள் செல்லலாம்' என்பதுபோல் ஸ்டைலாக கையசைக்க தனசேகரன் குடும்பத்தார் அங்கிருந்து கிளம்பினர். தான் நினைத்த காரியம் செவ்வனே முடிந்துவிட்ட திருப்தியில் நெட்டி முறித்துவிட்டு தன் அறைக்குச் செல்வதற்காக தன் வீட்டில் அமைக்கப் பட்டிருந்த மின்தூக்கியை நோக்கி நடந்தான்.

அப்போது "நில் ரகு" என்ற அகிலாண்டேஸ்வரியின் கோபமான வார்த்தைகள் அவனை நிறுத்தின. "நான் உனக்கு ஒவ்வொரு தடவையும் பொண்ணு பார்த்தா இப்படி ஏதாவது ஒரு அக்ரீமெண்ட் போட்டு அவங்கள விரட்டிவிட்டுற. உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா? ஏன் இப்படி பண்ற?" என்று தன் கண்களில் இருந்து வரவிருந்த கண்ணீரை அடக்கியவாறு தழு தழுத்தக் குரலில் கேட்டாள்.

ஆனால் அவனோ, “இந்த டிராமாவ நிறைய தடவை பாத்துட்டேன் பா. இது தான் கடைசி தடவை, மறுபடியும் மிஸ்ஸஸ் அகிலாண்டேஸ்வரி இப்படி ஏதாவது செஞ்சா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று எரிச்சல் கலந்த கோபத்துடன் கத்திவிட்டு லிப்டில் ஏறி தன் அறைக்குச் சென்றான். தன் மகன் சென்ற இடத்தையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்த அகிலாண்டேஸ்வரியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“பத்து மாசம் சுமந்து பெத்த பையன் அம்மான்னு கூப்பிடாம மூணாவது மனுஷி மாதிரி கூப்பிடுறான். இதை கேட்கும் போது மனசு வலிக்குதுங்க. ஒரு அம்மாவா என் மகனுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறது தப்பா?” என்று தன் மன வேதனையை கணவனிடம் புலம்பினாள். உடனே அவர் தன் மனைவியின் கண்ணீரை துடைத்து விட்டு, “உன் வேதனை எனக்கு நல்லாவே புரியுது அகிலா. அவன் ஏன் அப்படி செய்யுறான்னு உனக்கு நல்லாவே தெரியும். பின்னே ஏன் இப்படி செஞ்சு நீயே உன்ன காயப்படுத்திகிற? சரியான நேரம் வரும்போது அவனே கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பான். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு” என்று தேற்றினார்.

ஆனால் அகிலாண்டேஸ்வரியோ, “நான் சொல்றத யாருதான் கேக்குறா? அப்பாவும் மகனும் சேர்ந்து என்னவாவது பண்ணுங்க?” என்று கோபத்துடன் கத்திவிட்டு அங்கிருந்து சென்ற தன் மனைவியை பெருமூச்சுடன் சுந்தரேஸ்வரர் பார்த்தார்.

இங்கு சங்கமித்ரா மூன்ணூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளை இந்தியா முழுவதும் கொண்டுள்ள வசுந்தரா இன்டர்நேஷனல் ஸ்கூலில் ஆசிரியையாக பணிபுரியப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள். புது இடம், புது வேலை செல்வதால் வழக்கத்தை விட வேகமாக கிளம்பினாள். மித்ரா அலுவலக அறையை நோக்கி சென்று தன் வருகையை பதிவு செய்துவிட்டு தான் செல்ல வேண்டிய இடத்தை கேட்டு அறிந்து கொண்டாள்.

பின் மழலையர் பிரிவு ஆசிரியர்கள் பணிபுரியும் இடத்திற்குச் சென்றபோது அங்கு மட்டுமே இருபதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்தனர். தலைமை ஆசிரியர் அங்குள்ள அனைவருக்கும் அவரவர் செய்யவேண்டிய காரியங்களையும் செல்லவேண்டிய வகுப்புகளையும் அறிவித்தார்.

பள்ளிக்குத் தாமதமாக வரும் குழந்தைகளை பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு மித்ராவிடம் வழங்கப்பட்டது. தாமதமாக வந்த சிறுவர்கள் அனைவரும் அவளருகில் நின்றுகொண்டிருக்க ஒரு சிறுவன் மட்டும் சாவகாசமாக தன்னுடைய கையை வீசியவாறு நடந்து உள்ளே சென்றுகொண்டிருந்தான். அச்சிறுவனை உள்ளே விடாமல் நிறுத்திய மித்ரா அவனைக் கண்டதும் திகைத்தாள். ஏனென்றால் அவன் வேறுயாருமல்ல, அன்று அவள் நட்சத்திர விடுதியில் கண்ட அதே சிறுவன்.

உடனே அவனுடைய கையைப்பற்றி ஓரமாக இழுத்துவந்து, "நீ அன்னைக்கு டேபிளுக்கு அடில ஒளிஞ்சிருந்தவன் தான?" என்று வினவ, "ஆமா" என்று விட்டேற்றியாக பதிலளித்தான். "நான் வர்றதுக்குள்ள எங்கடா போன? அந்த அஞ்சு தடியனுங்க கையில மாட்டியிருந்தா என்ன ஆகியிருக்கும்? உன் அம்மாவும் அப்பாவும் உன்ன நினைச்சி எவ்வளவு கவலைப்பட்டிருப்பாங்க?" என்று அக்கறையுடன் கேட்டாள்.

அதற்கு அவன், "நான் ஆதித்தியா! எனக்கு எதுவும் நடக்காது, ஏன்னா அது எங்க ஹோட்டல். அந்த அஞ்சு தடியனுங்களும் என் பாடிகார்ட்ஸ்" என்று கூறவும் அவள் ஆச்சரியமடைந்தாள். அவனை ஏற இறங்கப் பார்த்தவள், "இந்த பாடிக்கு பாடிகாட்ஸா?" என்று கிண்டலாகச் சிரிக்க அச்சிறுவன் அவளை பார்த்து முறைத்தான்.

பின், "நாளைக்கு ஸ்கூலுக்கு வரும்போது உன் பேரண்ட்ஸ கூட்டிட்டு வா" என கூறவும் அங்கிருந்த காரினருகே கைபேசியில் பேசிக்கொண்டிருந்த நபரை ஆதித்யா பார்த்தான். "அவர்தான் உன் அப்பாவா?" என அந்த நபரை மித்ரா சுட்டிக்காட்ட, சிறு யோசனைக்குப் பின் 'ஆம்' என்பதுபோல் தலையசைத்தான்.

ஒல்லியான தேகமும், மாநிறமும், ஸ்டைலாக வெட்டப்பட்ட கேசமும் உடைய அந்த நபர் கைபேசியை வைத்தவுடன் மித்ரா அவனருகே சென்று, "எக்ஸ்கியூஸ்மீ சார்" என அழைத்தாள். திரும்பியவன் மித்ராவைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியடைந்தான். அவள் அன்று நட்சத்திர விடுதியில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறிக்கொண்டிருக்க அவனோ ஒரு புன்முறுவலுடன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். அவள் பேசி முடித்ததும், "உங்களுக்கு என்ன நியாபகம் இருக்கா?" என ஆவலுடன் கேட்டன்.

உடனே அவள், 'நான் ஒண்ணு கேட்டா இவன் ஏதோ சொல்றான்' என நினைத்தவள் மீண்டும் அச்சிறுவனை பற்றி பேசத்துவங்கினாள். ஆனால் அவனோ, "அதெல்லாம் விடுங்க. உங்களுக்கு என்ன நியாபகம் இருக்கா?" என்று மீண்டும் கேட்க மித்ரா எரிச்சலடைந்தாள்.

‘யார்ரா இவன்? மென்டல் மாதிரி பேசுறான். சரியான ஃளேர்ட் டைப்பா இருப்பானோ?' என நினைத்தவள் வேறுஎதுவும் பேசாமல் அவ்விடத்தைவிட்டு அகன்றாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், “மீண்டும் சந்திப்போம்” என்று அவள் காதில் விழும்படி கத்திக் கூறவே அவள் ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். அதைப் பார்த்து சிரித்தவன் தன் காரில் எரிச் சென்றான்.

அன்று மாலை ரகுவீர் தன்னுடைய ஆர்.வி. மேன்ஷனின் மூன்றாவது தளமான அலுவலக தளத்தில் சில கோப்புகளை தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
WhatsApp Image 2026-01-13 at 8.01.43 PM.jpeg
மாலை சூரியனின் கதிர்கள் அவ்விடத்திலுள்ள அனைத்து இடங்களிலும் பரவி நின்று தங்கநிறமாக காட்சியளித்தது. அப்போது அந்த அறையின் கதவு சட்டென திறந்தது. தன் முழு கவனத்தையும் அந்த கோப்புகளில் செலுத்தியிருந்தவன் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து வாயிலைப் பார்த்தான். வேலை பளுவினால் தீவிரமாக இருந்தபோதிலும் அவன் முகம் வாயிலில் நின்ற அந்த நபரைக்கண்டதும் சூரியனைக் கண்ட தாமரையைப் போல மலர்ந்தது.

மீண்டும் இனியவள் வருவாள்...

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

 
இனியவளே - 5

ஏனென்றால் அங்கு அச்சிறுவன் ஆதித்யா அன்று மலர்ந்த மலர்போல சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தான். உடனே ரகுவீர் தன் இருக்கையிலிருந்து வேகமாக எழ ஆதித்யா, “டாடா!” என அழைத்தவாறு ஓடி அவனை கட்டித் தழுவினான். ஆம், ஆதித்யா வேறு யாரும் அல்ல தி கிரேட் ஆர்.வி.யின் ஒரே செல்ல மகன்.

தன் திருமணத்திற்கு ரகுவீர் வினோதமான ஒப்பந்தங்களை போடுவதற்கு ஒரே காரணம் ஆதித்யா மீது கொண்டுள்ள அளவு கடந்த பாசத்தின் வெளிப்பாடே ஆகும். ரகுவீர் ஆதித்யாவை எப்போதும் பிரியாமல் தன் கண் பார்வையிலே வைத்திருப்பான். ஆனால் இந்த இரண்டு வார பிசினஸ் ட்ரிப்பின் பிரிவு அவனை வெகுவாக பாதித்தது. ஓரிரண்டு நாட்களில் முடிய வேண்டிய வேலை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கவும் தவித்துப் போனான்.

அனைவரிடமும் கடுமையாக நடந்து கொள்ளும் ரகுவீர் ஆதித்யாவிடம் அன்பு மற்றும் பாச மழையைப் பொழிந்தான். அதே நிலைதான் ஆதித்யாவிற்கும், யாருடைய சொல்லுக்கும் அடங்காதவன் ரகுவீரின் ஒற்றை பார்வைக்கு அடங்கி விடுவான். அவன் எது கூறினாலும் மறுப்பு தெரிவிக்காமல் அதை அப்படியே செய்வான்.

ரகுவீர் ஆதித்யாவுக்கு தாயும், தந்தையுமாக இருந்தான். அவர்கள் ஈருடல் ஓருயிராக வாழ்ந்தனர். தன் உயிருக்கும் மேலான மகனை கட்டி அணைத்தவன் அவனை தூக்கிக்கொண்டு அந்த பெரிய அறையில் போடப்பட்டிருந்த அழகான வேலைப்பாடுகள் கொண்ட சோபாவில் அமர்ந்தான்.

தன் மகனை மடிமீது அமர்த்தி, “ஹவ் வாஸ் யுவர் ஃபர்ஸ்ட் டே இன் ஸ்கூல் ஆதி?” என ஸ்டைலாக ஆங்கிலத்தில் கேட்க மகனும், “வித்தவுட் யூ ரொம்ப போரிங் டாடா” என்று சோகத்துடன் தன் அழகான செவ்விதழ்களை பிதுக்கினான். ஒரு சிறு புன்னகையுடன், “யூ நாட்டி பாய்” என்று தன் மகனின் கன்னத்தை செல்லமாகத் தட்டினான்.

அப்போது “அட! அட! என்ன ஒரு கண்கொள்ளா காட்சி. பாச மழைல நான் நனைஞ்சிட்டேன்” என்று பொய்யான மழையில் நனைந்தார் போல் பாவலா காட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ருத்ரா. “அந்த பிசினஸ் டீல பைனல் பண்ணீட்டீங்க போல கில்லாடிணா நீங்க” என்று கூறியவாறு எதிரே உள்ள சோபாவில் சாவகாசமாக அமர்ந்தான். ரகுவீரின் பார்வைக்கு அர்த்தம் புரிந்திருந்தால் சிங்கத்தின் பிடியில் சிக்காமல் ருத்ரா அப்போதே தப்பியோடியிருப்பான்.

அவன் பேசிக் கொண்டே இருக்க ரகுவீர் ஆதித்யாவை வெளியே செல்லுமாறு சைகைசெய்தான். அவன் சென்ற மறுநொடியே ரகுவீரின் முகம் கோபக்கனலில் சிவக்க அதைக் கண்ட ருத்ராவுக்கு பயம் தொற்றிக் கொண்டது. “ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?” என்று கறாரான குரலில் கேட்க முதலில் மலங்க விழித்த ருத்ரா பின் ஹோட்டலில் ஆதியை தவறவிட்டது பற்றிக் கேட்கிறான் என்று தெரிந்ததும் அவன் மனதில் குளிர் பரவியது.

“அது...அது வந்து அண்ணா...ஆதி என்கூடத்தான்…பட் எப்போ எப்படி போனான்னு தெரியல” என்று கூறுவதற்கு முன்பே, “ஆதி சின்ன பையன். அப்படித்தான் செய்வான். நீ தான் அவன பாத்துக்கணும். உன்னை நம்பி ஒப்படைச்சா இப்படித்தான் பொறுப்பே இல்லாம பதில் சொல்லுவியா? இது முதல் தடவ இல்ல ருத்ரா. ஒரு சின்ன பையன சமாளிக்க தெரியல நீயெல்லாம் எப்படி பெரிய பிசினஸ் ஹேண்டில் பண்ணுவ” என சரமாரியாக திட்ட ஆரம்பித்தான்.

அவனுடைய வசை மொழியை வாங்கிக் கொண்டிருந்த ருத்ராவின் மனதில் ‘இத யார் சொல்லியிருப்பா? அவனா இருக்குமோ’ என்று எண்ணியபோதே, "எக்ஸ்கியூஸ் மீ சார்" என்று ரகுவீரின் செக்ரட்டரியான அபிஷேக் உள்ளே நுழைந்ததும், ‘இவனே தான்’ என்று உறுதிபப்டுத்தினான். “போ” என்று ரகு கூறவும் ருத்ரா அங்கிருந்து வெளியேறினான்.

வெளியே வந்தவனிடம், "நல்லா டோஸ் வாங்குனியா?" என்ற ஆதியின் குரல் தடுத்து நிறுத்தியது. ஓரக்கண்ணால் ஆதியை முறைத்து பார்த்தவன், "உன்னால தாண்டா எல்லாம்" என்றதும் மற்றவனோ விஷமமாகச் சிரித்தான். மித்ராவின் கேலிப் பேச்சு நினைவுக்கு வர, "என் பின்னால பாடி கார்ட்ஸ் வர்ரது எனக்கு பிடிக்கல. எல்லாரும் கிண்டலடிக்கிறாங்க" என்று ஆதித்யா சோகமான முகபாவனையுடன் கூறினான். அதைக் கேட்ட ருத்ரா அவன் அருகே வந்து, "யாருடா அது?" என்று ஆர்வமாக கேட்க, "டாடாட்ட சொல்லட்டா" என ஆதி பயமுறுத்தவும் ருத்ரா அங்கிருந்து கீழ்தளத்திற்கு வேகமாக சென்றான்.

ருத்ராவைக் கண்டதும், “என்ன ரொம்ப திட்டீட்டானா?” என்று சுந்தரேஸ்வரர் வினவினார். அதற்கு அவனோ, "அண்ணா திட்டினதுகூட கவலையில்லை மாமா. இந்த வாண்ட தான் சமாளிக்க முடியல” என்றான். அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு அங்கு வந்த அகிலாண்டேஸ்வரி, “என் அருமை அண்ணன் மகனே ரகு உனக்கு அண்ணன் இல்லடா, மச்சான்” என்று உறவு முறையை திருத்தினாள்.

ருத்ரா அகிலாண்டேஸ்வரியின் சொந்த சகோதரனான தயானந்தனின் மூத்த புதல்வன். அத்தை தன்னை குறை கூறுகிறாள் என்றதும், “எனக்கு அவர் ரகு அண்ணன் தான். மச்சான்னு கூப்பிடமாட்டேன்…அதோட ரகு அண்ணாவ பார்த்து எனக்கு பயமில்ல” என்று கூறினான். அப்போது “ருத்ரா!” என ரகுவின் குரல் ஓங்காரமாக ஒலிக்க, “வந்துட்டேண்ணா” என்று வேகமாக அவன் எழுந்து சென்றதை கண்டதும் பெரியவர்கள் இருவரும் நகைத்தனர்.

ரகுவீர் மற்றும் ருத்ரா அண்ணன் தம்பியாகவே பழகினர். அவ்வப்போது ருத்ராவின் கவனக்குறைவினால் ஏற்படும் தவறுகளுக்காக ரகுவீர் திட்டுவது வழக்கம். ஆனால் மறுபடியும் அதை மறந்து இருவரும் இயல்பாகவே பேசுவர்.

மாதங்கள் சில கடந்தன. மித்ரா தன் ஆசிரியைப் பணியை செவ்வனே செய்து வந்தாள். அங்குள்ள அனைவரிடமும் அன்பாகவும், கனிவாகவும் நடந்துகொள்வதால் எல்லோருக்கும் பிடித்தமானவளானாள். அங்கு மாதவி என்ற சக ஆசிரியை அவளுக்கு நெருங்கிய தோழியானாள். ஒற்றை வயதை உடையவர்கள் என்பதால் அவர்களுக்கு இடையே கருத்தொற்றுமை நிறையவே இருந்தது.

இவ்வாறாக மித்ராவின் வாழ்க்கை, பள்ளி மற்றும் வீடு என எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. அன்று பள்ளி விடுமுறை என்பதால் மித்ரா சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றாள். தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிவிட்டு ஸ்கூட்டியில் வெளியே வந்தாள். எப்போதும் மாஸ்க் அணியும் பழக்கத்தை கொண்ட மித்ரா, அன்று தாமரை மலர் எம்ராய்டரி செய்திருந்த மாஸ்க்கை அணிந்திருந்தாள்.

அவள் சாலையைக் கடக்கும்போது, ‘ஆ’ என யாரோ வலியால் கத்தும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தவளுக்கு வயதான பெண்மணியின் மீது கார் ஒன்று லேசாக மோதியிருப்பது தெரிந்தவுடன் அவ்விடம் விரைந்தாள். பலத்த காயங்கள் இல்லை என்றாலும் ஆங்காங்கே சிராய்த்து லேசான காயங்கள் அந்தப் பெண்மணிக்கு ஏற்பட்டிருந்தது.

அச்சமயம் கார் ஓட்டுனர் வேகமாக இறங்கி அந்தப் பெண்மணியின் அருகே வந்த போது, “பார்த்து ஓட்ட மாட்டீங்களா?” என்று கோபத்துடன் கத்தினாள் மித்ரா. உடனே அவன், “தெரியாம இப்படி ஆயிருச்சு மேடம்” என்று பதற்றத்துடன் பதில் அளித்தான். “தெரியாமையா! என்ன இப்படி பொறுப்பே இல்லாம பதில் சொல்றீங்க நல்லவேள இவங்களுக்கு ஒண்ணும் ஆகல. முதல்ல ஹாஸ்பிடலுக்கு கூட்டீட்டு போங்க” என்று சொன்னாள். அப்போது காரின் உள்ளே இருந்து, “சரவணா!” என்று ஒரு குரல் கேட்க அந்த ஓட்டுநர் தன் முதலாளியான ஆர்.வி.யிடம் விரைந்தார்.

ரகுவீருக்கு அன்று காலை ஒரு முக்கியமான மீட்டிங் இருந்ததால் ஓட்டுநரை வேகமாக செல்லுமாறு ஆணையிட்டான். அதன் விளைவு தான் இந்த விபத்து. தன் கார்க் கண்ணாடியை லேசாக இறக்கியவன் “என்ன ஆச்சு?” என்று வினவ மற்றவனோ, “சார் ஒரு சின்ன ஆக்சிடென்ட்” என்று பதற்றத்துடன் கூறினான். உடனே, “ஒழுங்கா ஓட்டமாட்ட” என்று எரிச்சலுடன் கூறியவன் சிறிது பணத்தை அவன் கையில் கொடுத்து, “இத கொடுத்துட்டு வா” என்று கூறி மீண்டும் கண்ணாடியை ஏற்றிவிட்டான்.

உடனே அந்த ஓட்டுனர் அவர்களின் அருகே வந்து, “இந்தாங்கமா இத வைத்து ஆஸ்பத்திரிக்கு போங்க” என்று கூறவும் மித்ராவுக்கு ‘சுளீரென’ கோபம் வந்தது. அதை வாங்கிக் கொண்டு காரை நோக்கி வேகமாக நடந்தாள். ஏற்றி இருந்த கண்ணாடிக் கதவை தட்ட அது மெல்ல கீழே இறக்கிறது.

உள்ளே அமர்ந்திருந்த ரகுவீருக்கு முதலில் தெரிந்தது அவளுடைய பிறை போன்ற நெற்றி. பின் கண்ணாடி மேலும் கீழே இறங்க கருப்பு வானவில்லாக அவளுடைய இரண்டு புருவங்கள் தெரிந்தன. அதற்கு கீழே பாண்டிய நாட்டுச் சின்னமான மீன் போன்ற கண்கள் தென்பட்டன. மித்ராவின்மாஸ்க் அவளுடைய அழகான முகத்தை மேலும் காணவிடாமல் அவனது பார்வைக்கு தடை விதித்தது.
WhatsApp Image 2026-01-14 at 7.30.34 PM.jpeg

ஒரு நிமிடம் அப்படியே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன் மறுகணமே நிதானத்திற்கு வந்தான். அப்போது மித்ரா தன் கையில் இருந்த பணத்தை ரகுவீரின் முகத்தில் வீசி எறிந்தாள். மேலும் அவள், “தப்பு செஞ்சா மன்னிப்பு கேட்கணும். உங்க பணத்தையும் அதிகாரத்தையும் வச்சி எல்லாரையும் விலைக்கு வாங்க முடியாது” என்று கோபத்துடன் அவனைப் பார்த்து கத்திவிட்டு அந்த பெண்மணியைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள். அவள் செய்த செயலால் அதிர்ச்சியில் உறைந்த ரகுவீர் அப்படியே அமர்ந்திருந்தான்.

இவையனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த அந்த ஓட்டுனர் ஒரு நிமிடம் அப்படியே திகைத்து நின்றான். ஏனென்றால் இதுவரை ஆர்.வி.யை யாரும் நேருக்கு நேர் எதிர்த்து துணிச்சலாக இப்படி நடந்தது கிடையாது. ஆர். வி.க்கு கோபம் தலைக்கேற அவன் கை முஷ்டியாக இறுகியது. தன்னை அவமானப்படுத்தியவளை கண்டுபிடித்து பதிலடி கொடுக்கவேண்டும் என்று மனதில் நினைத்தான்.

மறுநாள் காலை பள்ளிக்குச் சென்ற மித்ரா தன்னுடைய தோழியான மாதவியிடம் முந்தைய தினம் நடந்த நிகழ்வை கோபத்துடன் கூறினாள். உடனே மாதவி, “பாரதி கண்ட புதுமைப் பெண் நீதான் மித்ரா" என்று தன் தோழியை வாழ்த்தினாள். பின் ஏதோ நினைவுக்கு வர, “மித்து உன்னிடம் சொல்ல மறந்துட்டேன், நம்ம ஸ்கூல் ஸ்போர்ட்ஸ்டேக்கு எல்லாரோட ஐடியாவையும் விட உன்னோடது நல்லா இருந்ததால கரஸ்பாண்டன்டே உன்ன பாக்கணும்னு சொன்னாரு” என்று கூறினாள். உடனே, “கரஸ்பாண்டன் சாரையா!” என்று ஆச்சரியத்துடன் கேட்ட மித்ராவிடம், “கவலைப்படாத அவர் ரொம்ப நல்ல டைப்” என்று தைரியம் கொடுத்தாள்.

கரஸ்பாண்ட்டை பார்ப்பதற்காக அறையின் வெளியே நின்று கொண்டிருந்த போது, “பேபி வாக் ஸ்லோலி. இல்லாட்டி உன் கால் வலிக்கும்” என்று ஒரு கொஞ்சம் குரலில் ஆண் பேசுவதை கேட்க அவ்விடம் திரும்பி பார்த்தாள். அங்கு முழங்கால் வரை மட்டுமே ஷார்ட்ஸ்கர்ட் போட்டுக் கொண்டு காலில் ஹை ஹீல்ஸும், முகத்துக்கு பொங்கல் பானைக்கு வெள்ளை அடித்தால் போல் மேக்கப்பும், ரத்த சிவப்பில் உதட்டுச் சாயமும் போட்டு ஸ்டைலாக ஒருத்தி நடந்து வந்தாள்.

அவளருகே நாகரீகம் என்ற பெயரில் ஜீன்ஸ்பாண்டில் ஒரு பெருச்சாளையே போகும் அளவிற்கு ஓட்டையும், சட்டையில் ஆங்காங்கே சில கிளிசல்களும், பரட்டை தலையுடன் கையில் கூஜாவை தூக்குவது போல் அவளுடைய கைப்பையை தூக்கியவாறு ஒருவன் பின் தொடர்ந்தான். அவளைக் கண்டதும் அங்கிருந்த சில ஆசிரியர்கள் வணக்கம் தெரிவித்தனர்.

ஆனால் அவளோ திமிரான பார்வையுடன் யாருக்கும் மரியாதை செலுத்தாமல் நடந்து வந்தாள். கரஸ்பாண்டன்டின் அறையினுள் நுழையவிருந்தவளை அங்கு நின்ற செக்ரட்டரி, “இப்போதைக்கு சார் யாரையும் உள்ள விட வேண்டாம்னு சொன்னாங்க மேடம்” என்று அவளை தடுத்து நிறுத்தினான். அவனை முறைத்து விட்டு அங்கிருந்து இருக்கையில் அமர்ந்தாள். அவர் கோபத்தால் பெருமூச்சு விட அங்கிருந்தவன், “பேபி காம் டவுன்” என்று அவளை சமாதானம் செய்யும் சாக்கில் அவளருகே நெருக்கமாக அமர்ந்தான்.

அங்கிருந்த இரண்டு மாணவர்களும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் நெருக்கம் எல்லை மீற மித்ராவின் பொறுமை முற்றிலுமாக கலைந்தது. அவள், “எக்ஸ்கியூஸ் மீ இது ஸ்கூல். பார்க் இல்ல இது எல்லாத்தையும் ஸ்கூலுக்கு வெளியில வச்சுக்கங்க” என்று மித்ரா கூறவும் மற்றவளுக்கு கோபம் தலைக்கேறியது. உடனே, “ஹொவ் டேர் யு டாக் டு மீ லைக் தாட்? நான் யார் தெரியுமா?” என்று கோபம் கலந்த அதிகார தோணியில் அவள் கேட்க மித்ராவோ, “நீ யாருன்னு உனக்கே தெரியாதா? பரவால்ல, ஐ டோன்ட் கேர். இது ஸ்கூல். உங்க கொஞ்சல்ஸ வேறஎங்கயாவது வச்சிக்கோங்க” என்று அவளுக்கு சற்றும் சளைக்காதவளாகவே மித்ரா பதில் அளித்தால்.

உடனே, “யூ!” என்று கோபத்துடன் அரைவதற்காக கையை ஓங்க, மித்ரா லாவகமாக அங்கிருந்து நகர்ந்தாள். அவளுடைய ஹை ஹீல்ஸ் காலை இடற கீழே விழுந்தாள். அதை கண்டதும் அங்கிருந்து இரண்டு மாணவர்களும் சிரிக்க அந்தப் பெண்ணிற்கு அவமானமாக இருந்தது. மித்ராவோ ‘ஷ்’ என்று கூற அவ்விரண்டு மாணவர்களும் தங்கள் சிரிப்பை நிறுத்தினர். உடனே பெண்ணுடன் வந்தவன் அவளை மெதுவாக அங்கிருந்து அழைத்துச் சென்றான். அவள் ‘ஒரு நாள் என்கிட்ட வசமா மாட்டுவடி’ என்று எண்ணியவாறு மித்ராவை பார்த்து கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினாள்.

அங்கு வந்த செக்கரட்டரி, “மேடம் சார் உங்கள உள்ள வரச் சொன்னாரு” என்று கூற மித்ரா அனுமதி பெற்றுக்கொண்டு அந்த அறையினுள் நுழைந்தாள். “குட் மார்னிங் சார்” என்று தன் காலை வணக்கத்தை தெரிவிக்க அந்த கரஸ்பாண்டன்ட் சுழற் நாற்காலி அவள் இருந்த திசையை நோக்கி திரும்பியது. அதில் அமர்ந்திருந்த நபரைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்தாள்.

மீண்டும் இனியவள் வருவாள்...

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

 
Top