நங்கையின் மறவோன் - 3
கண்களிலிருந்து வழிந்து கொண்டு இருந்த கண்ணீர்த் துளிகளைப் பார்க்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது.
இந்தியா வந்ததுமே தன்னை இந்தளவிற்கு அழச் செய்தவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று கருவிக் கொண்டாள் முக்தா.
தோளில் முகம் புதைந்திருந்த மகளிடம், "என்ன ஆச்சுடா? போலீஸ் ஸ்டேஷன் போகிற அளவுக்கு என்னப் பிரச்சினை?" அவளின் நிலை புரிந்து அழுத்திக் கேட்காமல், அமைதியான முகத்துடன் வினவினார் நீலகண்டன்.
ஏற்கனவே பயத்தில் வெளிறிப் போயிருந்தவள், தந்தையின் இந்தக் கேள்வியில், முற்றிலும் துவண்டு போனாள் முக்தா.
"கேட்கிறேன்ல சொல்லுமா?"
மீண்டும் கேட்டவரைப் பார்த்து,
கண்கள் சிவக்க,
" நான் மஹதனைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு உங்களுக்கே தெரியும்ல அப்பா? ஆசை ஆசையாக கால் செய்து மீட் பண்ணலாமான்னு ஆஃபீஸூக்கு வரவா என்று கேட்டேன். வேணாம்னு சொன்னான்.இருந்தாலும் என்னால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியல. ஆஃபீஸ்ல போய் வெய்ட் பண்ணிப் பாக்கலாம்னு போனேன்ப்பா.அங்கே இருந்த ரிசப்ஷனிஸ்ட் என்கிட்ட ரூட் (Rude - முரட்டுத்தனமாக) நடந்துக்கிட்டா. நான் அதுல எனக்குப் கோபம் வந்துடுச்சு. அவளைத் தள்ளி விட்டுட்டேன்"
தான் கூறியதை நம்பும் பாவனை அவர் முகத்தில் உள்ளதா? என்று தந்தையின் முகத்தை ஆராய்ந்தாள் முக்தா.
நீலகண்டனோ அவள் பேசுவதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டு இருந்தார்.
அசட்டுத் தைரியத்துடன், மேலும் கூறத் தொடங்கினாள்.
"பாவம் தலையில் அடிபட்டு ப்ளட் வந்துடுச்சு. நானும் சாரி கேட்டேன், பணம் தர்றேன்னு சொன்னேன். எதுக்குமே அவ வழிக்கு வரல அப்பா.வேற ஆப்ஷனும் எனக்கு இல்லைப்பா. ஆனால், அவ என் மேல் கம்ப்ளைண்ட் கொடுக்கிற அளவுக்குப் போகப் போறான்னு நினைச்சேப் பார்க்கலப்பா. அது கூட பரவாயில்லை. அவளை இதுக்கு முன்னாடி எனக்குத் தெரியாது. ஆனா…"
அடுத்துச் சொல்வதற்குள் முக்தாவிற்குத் தொண்டை அடைத்தது.
"அழாமல் மேலே சொல்லும்மா" என்று கண்களைத் துடைத்து விட்டார் அவளது தந்தை.
"ஆனால்… மஹத்! அவன் அங்கே வந்ததும், இவளுக்குச் சப்போர்ட் செய்து பேசினான்ப்பா.அவளுக்கு அவ்ளோ இன்ஃப்ளூயன்ஸ் இல்லன்னு, மஹத்தைக் கம்ப்ளைண்ட் கொடுக்கச் சொன்னா. அவன் முடியாதுன்னு தானே மறுத்து இருக்கனும்?" என்று அவரிடம் கேள்வி கேட்டாள்.
'ஆமாம்' என்று சொல்லும் விதமாக தலையசைத்தார்.
"அவனும் அதற்குச் சம்மதிச்சான். உங்களுக்குக் கால் பண்ணனும்னு சொன்ன அப்போ கூட அவனே இன்ஃபார்ம் பண்றேன்னு சொல்லிட்டான்.அதுக்கப்புறம், அவனோட கார்லயே எங்க ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டுப் போனான்.அங்கேயும் என்னைப் பேச விடாமல், கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணி…"
சொல்லி முடித்ததும், கதறி அழுது விட்டாள் முக்தா.
"அழாத முக்தா.. ஒன்னும் இல்லை.. சரியா!" முடிந்த வரை பலமிழந்து போன மகளைத் தேற்றினார் நீலகண்டன்.
"எனக்கு மஹதன் தான் கால் செய்து, ஸ்டேஷனுக்கு வக்கீலோட வர சொன்னான். ஈவ்னிங் வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொல்றேன் என்றும் சொல்லி இருக்கான்ம்மா" என்று குழப்பமாக கூறினார் தந்தை.
"அவன் எனக்குத் துரோகம் செய்துட்டான் அப்பா! எவ்ளோ கெஞ்சினேன் தெரியுமா? அவ கூட சேர்ந்துட்டு, அவ சொல்றதை எல்லாம் கேட்டுட்டு என்னை இப்படி அழ வச்சுட்டான் அப்பா" என்று புலம்பிக் கண்ணீர் வடித்தாள் முக்தா.
நீலகண்டனுக்கு இன்னும் குழப்பம் நீங்கவில்லை. தன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணிற்காக இவற்றையெல்லாம் செய்தவன், தனக்கு எதற்காக கால் செய்து மகளைப் பற்றிக் கூறினான்?
"அவன் எதுக்கு அந்தப் பொண்ணுக்குச் சப்போர்ட் பண்ணனும் முக்தா? அவனுக்கு அவ்ளோ முக்கியமான பொண்ணா?"
"இல்லைப்பா.அவ இன்றைக்குத் தான் வேலைக்கே சேர்ந்திருக்கா"
நீலகண்டனுக்கோ மகள் எப்போது வெளிநாட்டில் இருந்து வருவாள்? அவளுக்கு மஹதனை மணம் செய்து வைக்கலாம் என்ற எண்ணம் இருந்ததே!
இப்போது அதற்கு வழியே இல்லை என்பது போல், இந்நிகழ்வு நடந்திருக்க,
"வீட்டுக்குப் போகலாம்ப்பா"
சோர்ந்து போயிருந்தவளின் குரல் கேட்டு, மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
தாய் இல்லாதப் பெண் தன் மனப் பாரங்களைத் தந்தையிடம் இறக்கி வைத்து விட்டு, உறக்கத்திற்காக ஏங்கிய விழிகளுக்கு ஓய்வு கொடுத்தாள் முக்தா.
எண்ணங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்த நீலகண்டனோ, மாலை மஹதனின் வரவிற்காகக் காத்திருந்தார்.
அறைக்குள் சென்ற மஹதனும் சரி, வெளியே வரவேற்பில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த மௌனாவும் சரி முந்தைய நிகழ்வை தங்களது மனதிற்குள்ளேயே போட்டு புதைத்து விட்டனர்.
அதன் பிறகு, முக்தாவை இருவரும் மறந்து விட்டனர். அவள் செய்த காரியத்திற்கும் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அவளைப் பற்றி நினைப்பது தவறு என்று உணர்ந்திருந்தனர்.
மாலையில், வேலை நேரம் முடிந்ததும், அங்கிருந்து வெளியேறி,
வீட்டை அடைந்தாள் மௌனா.
அகதாவும் அப்போது தான் வந்திருக்கச் சாவி கொண்டு திறந்த சமயம்,
"அகி! நீயும் வந்துட்டியா?" என்று அவளிடம் பேச்சுக் கொடுத்தாள்.
பூட்டைத் திறந்த அகதா, "வந்துட்டேன் மௌனா.வா உள்ளே போகலாம்" என உள்ளே சென்றவளது கண்களுக்கு மௌனாவின் நெற்றியில் ஒட்டி இருந்த பிளாஸ்திரி தெளிவாகத் தெரிந்தது.
"இதென்னப் பிளாஸ்திரி ஒட்டியிருக்க மௌனா? என்னாச்சு?"
சந்தோஷமாக காலையில் வேலைக்குச் சென்ற தோழிக்குக் காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டு அகதா திடுக்கிட்டாள்.
"இதுவா அகி? நான் எவ்ளோ எக்ஸைட் ஆகி இருந்தேன்னு நீ காலையில் பார்த்தியே! அதே போல, ஆஃபீஸூம் பார்க்க சூப்பரா இருந்துச்சு. கியூரியோசிட்டி வேற! இது நடக்கலை என்றால் தான் ஆச்சரியம் அகி" என்று தோழியிடம் தன் போக்கில் கதைக் கட்டி விட்டாள் மௌனா.
அவள் பொய் தான் சொன்னாள்! ஏனெனில், முக்தா விஷயம் தன்னுடனேயே போகட்டும், அகதாவிற்குத் தெரிய வேண்டாம் என நினைத்தாள் மௌனா.
"நீ இருக்கியே! அப்படி என்ன கண்ணு, மண்ணுத் தெரியாத எக்ஸைட்மெண்ட் மௌனா? இனியும் இப்படி காயத்தைக் கொண்டு வராத"
அகதா திட்டியதைச் சமர்த்தாகக் கேட்டுக் கொண்டாள் மௌனா.
அவளுக்கு எது உண்மை? எது பொய்? என்று தெரியாதல்லவா? அதனால், பத்திரமாக இருக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தினாள் அகதா.
இருவரும் தங்களது உடை மாற்றிக் கொண்டு, தேநீர் பருகினர்.
அதே சமயத்தில், தன் வீட்டிற்குள் நுழைந்ததும், ஆசையாக மகனை வரவேற்றார் கௌசல்யா.
"வா மஹதா!" என்று அவனது சோர்வைக் கண்டு, தலை கோதி விட்டார்.
"ம்மா ! இன்னைக்கு முக்தா ஆஃபீஸூக்கு வந்தா" என்று நடந்தவற்றை விவரித்தான்.
"அச்சோ! இந்த முக்தா ஏன் இப்படி இருக்கா? எவ்ளோ தைரியம் பாரு" என்று முக்தாவைக் கரித்துக் கொட்டினார் கௌசல்யா.
"உன் ஸ்டாஃப் அந்தப் பொண்ணுப் பேர் என்ன சொன்னா?"
"மௌனா. அந்தப் பொண்ணுக்குத் துணிச்சல் அதிகம் தான்" என்று மஹதன் கூறவும்,
"துணிச்சல் இல்லை மஹதா. செல்ஃப் ரெஸ்பெக்ட். வந்த வேலையை மட்டும் பார்க்கனும் என்றும், அதை டிஸ்டர்ப் செய்தா என்னப் பண்ணனும் என்றும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கா" என்று மௌனாவைப் பாராட்டினார் தாய்.
மென் புன்னகை புரிந்தான் மஹதன்.
"நீலகண்டன் சார் என்ன சொல்லப் போறாரோ? மகளுக்கு இப்படி ஆனதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியாதே!" என்று கூறினார் கௌசல்யா.
"அவருக்கு நான் இன்ஃபார்ம் பண்ணிட்டு வந்துட்டேன் மா. அதுக்கப்புறம் கான்டேக்ட் பண்ணல. இப்போ வீட்டுக்குப் போய் எல்லாத்தையும் விவரமாக சொல்லனும்" என்க,
"ஏற்கனவே தாயில்லாதப் பொண்ணுன்னு உருகுவார். இப்போ சொல்லவே வேண்டாம்"
அவரால் மகனுக்கு எதுவும் சங்கடம் நேர்ந்து விடுமோ! என்று தாய் உள்ளம் பதறியது.
"அதுக்காக அவளோட இஷ்டத்துக்கு எல்லாம் என்னால் ஆட முடியாதே அம்மா.அந்தப் பொண்ணுக் கேட்கிறதைச் செய்யாமல் இருந்திருந்தா, ஸ்டாஃப்ஸ் மத்தியில் என் கௌரவம் என்னாகுறது?" என்று பொருமினான் மஹதன்.
"அவர்கிட்ட பொறுமையாகப் பேசு மஹதா" அறிவுரை கூறியதை ஏற்றுக் கொண்டவன்,
"சரி அம்மா. நான் தயாராகிட்டு, நீலகண்டன் சாரைப் பார்த்துட்டு வர்றேன்" என்று எழுந்து சென்றான்.
அவன் போனதும், கௌசல்யா தன் கணவர் திருமூர்த்திக்குக் கால் செய்து அனைத்தையும் ஒப்புவித்தார்.
நீலகண்டனின் பங்களாவின் நுழைவு வாயிலில் தன் காரை நிறுத்தி, இறங்கி உள்ளே வந்தான்.
மஹதன் அவருக்கு நன்றாகத் தெரிந்தவன் என்பதால், காவலாளியும் உள்ளே அனுமதித்து விட்டு, முதலாளியிடம் தகவலும் தெரிவித்தான்.
வீட்டினுள் அடியெடுத்து வைத்தவனை மருந்துக்கும் முகத்தில் புன்னகை இல்லாது, வரவேற்றார் நீலகண்டன்.
"வா மஹத். உட்கார்"
அதிலேயே அவரது
மனநிலையைப் புரிந்து கொண்டான் மஹதன்.
"அங்கிள்! காலையில்…" என்று அவன் விவரிப்பதற்குள்,
கை நீட்டித் தடுத்தவர், "தெரியும் மஹத். பொண்ணு எல்லாம் சொல்லிட்டா" என்றார் நீலகண்டன்.
"நான் செஞ்சது தப்புன்னு நினைக்கிறீங்களா?"
"இல்லைன்னு சொல்ல மாட்டேன் மஹத். ஆனால் அவளை விட உன் ஸ்டாஃப் ரொம்ப முக்கியமாகப் போய்ட்டாளா?" என்று ஆதங்கத்துடன் வினவினார்.
"இதில் முக்கியம்ன்னு எதுவும் இல்லை அங்கிள். முக்தா நடந்துக்கிட்டது அப்படி!" புரிய வைக்க முயன்றான் மஹதன்.
"அப்படி என்னப்பா என் பொண்ணு நடந்துக்கிட்டா? உன்னைப் பார்க்க ஆசையாக வந்தா, அவளை வர விடாமல் தடுத்தது அந்தப் பொண்ணு தான். தெரியாமல் நடந்ததுக்கு என் பொண்ணை இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே!" என்று கொதித்தார் நீலகண்டன்.
"நான் முக்தாவை ஆஃபீஸூக்கு வர வேண்டாம்னு முன்னாடியே சொல்லியிருந்தேன் அங்கிள்"
"நீ வர வேண்டாம்னு சொன்னாலும், அவளுக்கு உன்னைப் பார்க்க அவ்ளோ ஆசை மஹத்! அங்கே இருந்து வர்றதுக்கு முன்னாடி இருந்தே உன்னைப் பார்க்கிறதுக்காக சீக்கிரமாக வர்றேன்னு சொன்னா. அப்படி உன்மேல் இவ்வளவு அன்பு வச்சிருக்கிறப் பொண்ணை அசிங்கப்படுத்திட்டல்ல?"
அவரோ புரியாமல், திரும்பத் திரும்ப மஹதன் அவளை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறிக் கொண்டே இருந்தார்.
"அந்த ஆசையை இனிமேல் வச்சுக்க வேண்டாம்னு சொல்லுங்க அங்கிள்.எனக்கு முக்தா மேல் எந்த காதலும், அபிப்பிராயமும் இல்லை"
என்று சமாதானம் பேச வந்தவனோ, பட்டென்று அவரது முகத்திற்கு நேராகத் தன் மனதிலிருந்ததை வெளிப்படுத்தி விட்டான் மஹதன்.
அப்போது, தன் அறையிலிருந்து வந்த முக்தாவிற்கு இவன் பேசியதாக கேட்டு, இதயம் வெடித்துச் சிதறியது போலானது.
கட்டுக்கடங்காத ஆத்திரம் சூழ்ந்து கொள்ள, ரௌத்திரமாக அவன் முன்னால் போய் நின்றாள்.
அவள் வந்ததைக் கண்டு நீலகண்டனும், மஹதனும் திகைப்படைந்தனர்.
"என்னம்மோ அவ உன் கிட்ட வேலைப் பார்க்குறவ தான், அதுக்கு மேல எந்தப் பர்சனலும் இல்லைன்ற மாதிரி பேசின! இப்போ ஏன்டா அவளோட நடந்தப் பிரச்சினையில் என்னை வேண்டாம்னு சொல்ற?"
ஆங்காரமாக கேட்டவளை, உறுத்து விழித்த மஹதன், "நான் சொன்னதுக்கும், அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவையில்லாமல் அவளை இழுக்காத. நான் எப்பவோ காலையில் நடந்ததை மறந்துட்டேன். உங்க அப்பாவுக்குச் சொல்லித் தெளிவுபடுத்தத் தான் மறுபடியும் ஒரே ஒரு தடவை இதை விவரிச்சேன்.அவர் என்னமோ நீ என்னை நினைச்சு எப்பவும் ஏங்ககிட்டு இருக்கிறா மாதிரி சொல்லவும், தேவையில்லாத ஆசைகளை உருவாக்கிக்க வேண்டாமே என்று தான் அவர்கிட்ட என்னோட விருப்பத்தைச் சொன்னேன். உங்கிட்டயும் சொல்றேன். என்கிட்ட இருந்து தள்ளி இரு முக்தா"
எத்தனை நாட்கள் இதை இப்படியே விட்டு வைத்திருக்க முடியும் என்று, முக்தாவிடம் நேரடியாகத் தன் மனதிலிருந்ததைக் கூறி விட்டான் மஹதன்.
அதைக் கேட்டதும், ஏற்கனவே அதிர்ச்சி பாதி, ஆத்திரம் பாதியில் இருந்தவளோ, இப்போது முழுமையாக கோபத்தில் எரிந்து கொண்டிருந்தாள்.
"ஆமாம்.உன்னை நினைச்சு தினமும் உருகிக் கொண்டு தான் இருக்கேன். இப்போதும் அது மாறாது. அதை உனக்குப் புரிய வைக்கவும் முயற்சி பண்ணேன். ஆனால் நீ என்னைக் கண்டுக்கக் கூட மாட்டேங்குற!"
மகளை அடக்க வழியின்றி, ஸ்தம்பித்துப் போனார் நீலகண்டன்.
அவள் கேட்பதும் நியாயம் தானே? என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது அதனாலேயே அமைதியாக நின்றார்.
"இப்படி பேசாத முக்தா. உனக்குன்னு சுயமரியாதை இருக்கனும். நான் வேண்டாம்னு வெளிப்படையாகச் சொன்ன பிறகும் என்னதிது?" என்று தன்மையாகப் பேச முயற்சித்தான்.
"சுயமரியாதை! ஓஹோ!! காலையில் பார்த்தோமே ! அந்த மௌனாவா? அவ நடந்துக்கிட்டது உனக்குப் பிடிச்சுப் போச்சு போலயே? அவளை மாதிரி நான் மாறனுமா? " என்று உரக்கக் கத்தினாள் முக்தா.
தந்தையின் முன்னால் எவ்வளவோ கட்டுப்பாட்டில் இருந்தவள், கத்திக் கூச்சல் போடவும்,
"இப்படி கத்தாத முகி. உடம்புக்கு ஏதாவது வந்துடப் போகுது" என்று அந்த நிலையிலும் மகளின் மீது பரிவு காட்டினார் நீலகண்டன்.
"மன்னிச்சிருங்க அப்பா" என்று கூறிய முக்தாவிடம்,
"நான் தான் விசாரிச்சிட்டு இருந்தேன்ல! அதுக்குள்ள நீ ஏன் வந்துக் கத்தி உடம்பைக் கெடுத்துக்கிற? போய் அமைதியாக உட்கார்" என்று வலியுறுத்தினார்.
இவர்களது நாடகம் மஹதனுக்கு எரிச்சலைக் கொடுத்தது போலும்!
அவனும் எவ்வளவு தான் பொறுமையாகப் பேசுவான்! அதுவும் அந்தப் பெண்ணை இவனுடன் சேர்த்து வைத்துப் பேசிக் கொண்டு இருக்கிறாள்! தவறு அவள் மீது ஒப்புக் கொள்ளும் மனப்பான்மை கூட இல்லை எனும் போது, வேறென்ன தான் முக்தாவிடம் அவனால் எதிர்பார்க்க முடியும்?
நீள் சாய்விருக்கையில், அமர்ந்த முக்தா உஷ்ணப் பார்வையுடன் மஹதனைப் பார்த்தாள்.
"நீ சொல்லு மஹத்! ஏன் உனக்கு என் பொண்ணைப் பிடிக்கல?" என்று கேட்டார்.
"முதல்ல உங்கப் பொண்ணுக் கேட்டதுக்குப் பதில் சொல்லிடறேன் அங்கிள். அதில் உங்களுக்கும் தெளிவு கிடைக்கும் " என்று முக்தாவிடம் திரும்பி,
"நீ மௌனாவாகவோ, இல்லை வேற யார் மாதிரியும் மாறனும்னு நான் சொல்லல. எனக்கு உன் மேல எந்த காதலும் இல்லை. கல்யாணம் செய்துக்கத் தோணல.அதைத் தான் சொன்னேன்.அந்தப் பிரச்சினை நடக்கிறதுக்கு முன்னாடியே இது தான் என் முடிவாக இருந்துச்சு.இப்போதும் அதே முடிவு தான். இதில் அந்தப் பொண்ணைச் சும்மா, சும்மா உள்ளே இழுக்காத முக்தா"
"அப்போ நீ அந்த மௌனாவை லவ் பண்றியா?"
அவளால் மௌனாவை இழுக்காமல் இருக்கவும் முடியவில்லை. மஹதனுக்கோ பொறுமை எல்லை கடந்திருந்தது.
"உன் கேள்விக்கும், உன்னோட அப்பாவோட கேள்விக்கும் பதில் கிடைச்சிடுச்சு. அத்தோடு இதெல்லாம் முடிஞ்சு போச்சு. வேற பெண்ணை நான் லவ் பண்றதோ, இல்லையோ அது உங்க கவலை இல்லைன்னு நினைக்கிறேன்"
என்று எழுந்தவன்,
"இனிமேலும் உங்கப் பொண்ணுக்காக எங்கிட்ட நியாயம் கேட்டு வராதீங்க அங்கிள்"
நீலகண்டனிடம் அர்த்தத்துடன் கூறி விருட்டென்று வெளியேறி விட்டான் மஹதன்.
சாதாரணமாக நடந்தேறிய விஷயம், அதை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ஊதிப் பெரிதாக்கி வைத்து விட்டாள் முக்தா.
இப்போது மஹதனிடம் கேட்ட கேள்விகளை முற்றும் தவிர்த்து விட்டு, சமரசம் ஆகி இருந்தாலே அவனும் இவளுடனான திருமணத்தை நினைத்துப் பார்த்திருப்பான். ஆனால், முக்தாவே தனக்குக் கேடு வரவழைத்துக் கொண்டாள்.
மஹதனும் பொட்டில் அடித்தாற் போல், அவளை மறுத்து விட்டான்.
"அவன் அந்த மௌனாவைக் கல்யாணம் செய்யப் போறானா அப்பா?"
இந்தக் கேள்வியில், ஒட்டு மொத்தமாக செயலற்றுப் போனது போல் உறைந்து நின்றார் நீலகண்டன்.
அவர் அடுத்து செய்ய நினைத்துக் காரியம் தான் உச்சபட்ச வேண்டாத வேலை!
மணி எட்டு என காட்டவும்,
"வீட்டுக்குக் கால் செய்துட்டு வர்றேன் அகி" என்று செல்பேசியில் தன் தாய்க்கு அழைத்தாள்.
"ஹலோ மௌனா"
அன்னபூரணியின் குரலில் தவிப்பும், உற்சாகமும் ஒருங்கே இருந்தது.
"அம்மா!" இவளும் குதூகலத்துடன் பேசினாள்.
"காலையில் தான் பேசினோம் ஆனாலும் என்னோட பொண்ணை ரொம்ப மிஸ் பண்றேன்டா" என்ற பாசமிகு தாயை நினைத்துப் பெருமிதம் கொண்டாள் மகள்.
"தானும் உங்களை ரொம்பவே மிஸ் பண்றேன்மா"
"சரி டா. வேலைக்குப் போன அனுபவத்தைச் சொல்லு?"
முதல் நாள் இரவே வேலைக்குச் செல்வதைப் பற்றி தாயிடமும், தந்தையிடமும் கூறி இருந்தாள் மௌனா.
அவர்கள் இருவரும் மகளுக்கு ஆசி வழங்கினர்.
அதை இப்போது பகிர்ந்து கொள்ளத் தான் அழைத்து இருந்தாள்.
"சூப்பர் அனுபவம் அம்மா!"
அவளது கை அனிச்சையாக நெற்றியிலிருந்த பிளாஸ்திரியைத் தடவிக் கொண்டது.
தொடர்ந்து, "வேலையும், பிடிச்சிருக்கு. அந்த இடமும் ரொம்ப பிடிச்சிருக்கும்மா" என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.
எங்கே இந்த வேலை மகளுக்கு அமையாதோ! என்று பரிதவித்திருந்தவர் மௌனாவின் பதிலில் சற்றே நிம்மதி அடைந்தார்.
"உங்க முதலாளியை மீட் பண்ணுனியா?"
அன்னபூரணியின் கேள்வியோ மௌனாவிற்கு சிரிப்பை வரவழைத்தது.
தன் முதலாளியைச் சந்தித்த தருணத்தை நினைவு கூர்ந்து விட்டாள் போலும்!
"பார்த்தேன் அம்மா. ரொம்ப நல்ல டைப். தன்னிடம் வேலை பார்க்கிறவங்களுக்கு என்னப் பிரச்சினை என்றாலும் தயங்காமல் உதவி செய்வார்"
தாயிடம் காட்டிக் கொள்ளாதவாறு, சிரிக்க மிகவும் பிரயத்தனப்பட்டாள் மௌனா.
"நல்ல முதலாளி போலவே! இப்போ தான் நிம்மதியாக இருக்கு மௌனா"
அவர் அகமகிழ்ந்து போகவும்,
"நீங்களும், அப்பாவும் இனிமேல் என் வேலையைப் பற்றி கவலையேப்படாதீங்க அம்மா" என்று ஆறுதலாக கூறினாள்.
"அப்பா எங்கே? அவர்கிட்டயும் பேசனுமே?"
"கொஞ்ச நேரம் முன்னாடி தான் வெளியே கிளம்பினார். வர லேட் ஆகும். காலையில் சீக்கிரமாக உனக்குக் கால் செய்து பேச சொல்றேன்"
"சரிங்க அம்மா"
"அகதா என்னப் பண்றா? ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?" என்று விசாரித்தார் அன்னபூரணி.
" அவளும் நானும் இப்போ தான் சமையலை முடிச்சோம் அம்மா. சாப்பிடனும்" என்கவும்,
"அப்படியா? சரிடா. போய் சாப்பிடு.நான் இன்னொரு நாள் கால் பண்றேன்" என்று அவர் அழைப்பை வைக்கவும், அகதாவிடம் சென்றாள் மௌனா.
"அம்மா என்ன சொன்னாங்க?" என உணவுப் பாத்திரங்களை அடுக்கினாள் அகதா.
"வேலையைப் பற்றி விசாரிச்சாங்க. உன்னைப் பத்திக் கேட்டுங்க" என்று பேசிக் கொண்டே உண்டு முடித்தனர்.
மகனுக்காக காத்திருந்த கௌசல்யாவோ, அவன் உள்ளே வந்ததுமே,
" நீலகண்டன் சார் என்ன தான் சொன்னார் மஹதா?" என்று கேட்டார்.
"அவரும், அவர் பொண்ணும் பேசினதைச் சொல்றேன்மா"
என்று மொத்தமாக கொட்டினான் மஹதன்.
கௌசல்யாவிற்கோ முகம் அஷ்ட கோணலானது.
"வெறும் ஒரே நாளில் பார்த்தப் பெண்ணைப் பற்றி என்னவெல்லாம் பேசி இருக்காங்க! நீ சொன்னது தான் சரி மஹதா. அதுக்கப்புறம் முக்தாவோட தலையெழுத்து. நீ வந்து சாப்பிடு" என்று அவரும் நிம்மதியே அடைந்தார்.
"இவ்வளவு நடந்திருக்கு அந்த மௌனா ஆஃபீஸில் சாயங்காலம் வரை வேலைப் பார்த்துட்டுத் தான் போயிருக்கா. அப்போ நாளைக்கும் வேலைக்கு வந்துருவா போலிருக்கு"
அவனுக்குத் தன்னைப் பற்றிய ஆச்சரியங்களை ஆராயத் தந்து விட்டு, நிம்மதியாக நித்திரை கொண்டிருந்தாள் மௌனா.
மறுநாள் காலையோ, அவளுக்குப் பெரும் கலவரத்தையும், தலைவலியையும் கொடுக்கத் தயாராகி இருந்தது.
- தொடரும்