அத்தியாயம் : 5
அன்று திருவிழா என்பதாலும், கால் கொலுசு கிடைத்ததில் சமாதானம் ஆனதாலும் விரைவிலேயே தெளிந்து விட்டாள் வருணா. அதோடு, அருகேயிருந்த அவளது தோழிகளும் விழாவுக்கு கூப்பிட, லாவண்யாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
திருவிழாவுக்கென்று போடப்பட்டிருந்த சாமான் கடைகள், இராட்டினம், தள்ளி வண்டி உணவுக்கடைகள் என மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆங்காங்கே கேட்கும் பீப்பீ என்ற பலூன்கடைகாரர் ஊதும் சத்தமும், நீர் மோர் பந்தல்களும், கலவையான மனிதர்களின் பேச்சையும் பார்வையிட்டபடி, கடைகளில் நுழைந்தனர்.
பொருட்களை வாங்குகிறார்களோ இல்லையோ ஆனால் ஒவ்வொரு கடைகளிலும் அரைமணி நேரமாவது செலவளித்தனர். ஆங்காங்கே இரண்டு, மூன்று பெண்களாக பிரிந்து ஒவ்வொரு கடைகளிலும் நுழைந்து விட்டிருந்தனர். பதினோரு மணி போல கிளம்பியவர்கள் மணி மாலை ஐந்தாகியும் வரவில்லை.
"காலையில போனவங்க மணி ஐந்தாச்சு இன்னும் காணும்!" என்று கோசலை புலம்ப ஆரம்பித்தார்.
"பக்கத்தில உள்ள அவ பிரண்ட்ஸோட தான் சித்தி போயிருக்காங்க. சேர்ந்து வருவாங்க. திருவிழா போது தானே கடைத்தெருவுன்னு போக முடியுது. வரும் போது வரட்டும் " என்று சமாதானப்படுத்தினான் விஷ்ணு
அது உண்மை என்பதால் கோசலையாலும் எதுவும் சொல்ல முடியவில்லை. " வந்து சாப்பிட்டு போயிருக்கலாம் தான் பா சொன்னேன் " என்று மளுப்பலாக சமாளித்தார்.
"வந்து சாப்பிட்டு போறாங்க" என்று அவர் வாயை அடைத்து விட்டான்.
" ஈஸ்வர் எங்கே பா?" என்றார் வேணி
"அவன் பிரண்ட் யாரோ பக்கத்து ஊருக்கு வந்திருக்காராம். நம்ம ஊருக்கும் வரேன்னு சொன்னாராம். பார்க்க போயிருக்கான்" என்று தகவல் சொன்னான்.
அந்தி மாலை நேரம், வருணாவும் லாவண்யாவும் வீடு நோக்கி வந்து கொண்டிருக்க, " அச்சசோ! வாங்கின பொருளை அங்கேயே வைச்சிட்டு வந்துட்டேன் வரு. நீ இங்கேயே நில்லு நான் போய் எடுத்துட்டு வந்திடுறேன்" என்று பதிலை கூட எதிர்பாராமல் ஓடி விட்டாள்.
"சீக்கிரம் வா லாவி. எனக்கு பசிக்குது " என்று சொல்ல, மற்றவள் அதை காதில் வாங்கியதாக தெரியவில்லை.
"ம்ச்ச். இன்னும் அரைமணி நேரம் இழுத்திடுவாளே!. பசிக்குது. சாப்பிட முன்னாடியே போனாலும்! இவளை விட்டுட்டு ஏன் வந்தேன்னு எங்கம்மா சோறு போடாது" என்று புலம்பியபடி எதேர்ச்சையாக திரும்ப,
அங்கே ஈஸ்வரும் கூடவே மற்றொருவனும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அருகிலிருக்கும் போது நிமிர்ந்து பார்த்து பேச முடிவதில்லை. கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலோடும், அவனது மிரட்டல் மற்றும் நக்கலோடும் நகர்ந்து விடுவர்.
சற்று தூரத்திலிருந்து நடந்து வருவதால்! அவளது கண்கள் அவனை நிறுத்தி நிதானமாக அளவிட்டது. நல்ல உயரம். அதற்கேற்ப உடற்பயிற்சியால் உடலை திருத்தமாக வைத்திருந்தான். அலையலையான கேசம்!. காற்றில் கலைய, அதை அனிச்சையாக அவன் கோதி விடுவது ரசனைக்குறியதாக இருந்தது.
தீட்சண்யமான கண்கள் தான்!. அவன் குத்திட்டீயான பார்வையை அவளால் எதிர்கொள்ள முடிவதில்லை. கூர் மூக்கு, அழுத்ததான சிவந்த உதடுகள்! அளவான மீசை! என்று அவனை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனை விட்டு பார்வையை சற்றும் நகர்த்தவே முடியவில்லை.
அதோடு, அதிகாலையில் அவன் பின்னோடு அணைத்தப்படி நின்றிருந்தது ஞாபகம் வர, அதுவரை அவள் உணர தவறிய விசயங்களை மூளை அவசரமாக பட்டியலிட்டு காட்டியது.
இடை வளைத்திருந்தது அவனது கைகளின் அழுத்தம்! காதோடு பேசும் போது லேசாக உரசிய அவனது உதடுகளின் ஸ்பரிசம்!. அவனுக்கே உரிய மணம்!. அவளறியாமல் அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த போது, பாந்தமாக பொருந்திய அவளது உடல்! என வரிசைப்படுத்திக் கொடுக்க,
வருணாவுக்கு வயிற்றில் பட்டாப்பூச்சி பறப்பது போல இருந்தது. எப்போதும் மிரட்டலான அவனது பேச்சை திரும்ப எண்ணிப் பார்த்து ரசிக்க தோன்றியது. காலம் முழுவதும் அவனுடைய அணைப்பிலேயே இருந்து விடக் கூடாதா? என்று ஏக்கமாக தோன்ற!
"டம் " என்ற வெடிச்சத்தத்தில் சுயவுணர்வு வந்தாள். அப்போது தான் அவள் தன்னிலை மறந்து ஈஸ்வர் பற்றிய நினைவோடு இப்படி ரோட்டோரம் நிற்பதே உறைக்க! தன்னை நினைத்தே அரண்டு விட்டாள்.
'நானா? நானா! இப்படி?. தன்னிலை இழந்து ஈஸ்வரை பார்த்துக் கொண்டிருந்தது. நான் இப்படி அவர் பற்றிய சிந்தனையோட நிற்பது மட்டும் தெரிந்தால் என்னவாகும்?. ஏற்கனவே உன்னை கண்டாளே விரட்டுவதும், மட்டம் தட்டுவதாக இருப்பவர். இந்த விசயம் தெரிந்தால் அவ்வளவு தான்!. உனக்கு , என் மேல் காதல் என்ன வேண்டியிருக்கு? 'என்று கேட்க மாட்டாரா?.
அவளது மனதின் பதிலில் திகைத்தவள். ' க.. க.. காதல்!. ஆமாம் காதல். நான் ஈஸ்வரை காதலிக்கிறேனா!. இது மட்டும் அவருக்கு தெரிந்தால் என்னை பற்றி என்ன நினைப்பார்? என்று மனது பரிதவிக்க தொடங்கியது. பெற்றார்களையோ உறவுகளை பற்றிக் கூட, அவள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஈஸ்வர் தன்னை மட்டமாக நினைத்து விடுவானோ?' என்று தான் கவலையாக இருந்தது.
இல்லை. என் காதலை பற்றி அவருக்கு தெரியப் போவதில்லை.' துளிர்விட்ட காதலை அப்படியே மறைத்து விட எண்ணியவள். அவனை விட்டு பார்வையை மறுபுறம் திருப்பிக் கொண்டாள். ஏனோ! அழுகையாக வந்தது. கலங்கும் கண்களை சிமிட்டி சிமிட்டி கண்ணீர் வருவதை தடை செய்ய முயன்றாள்.
அப்போது, " இங்கே ஏன் நிற்கிற?" என்று ஈஸ்வரின் குரலில் சட்டென்று திரும்பியவள். அவன், அவளது கண்களை கூர்ந்து பார்ப்பதை கண்டு,
அவன் பார்வையை தவிர்த்தபடி, "லாவி, கடையிலேயே வாங்கின பொருளை மறந்து வைச்சிட்டு வந்துட்டா!. அதை எடுக்க போனாள். அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்றவள். மீண்டும் லாவண்யா வரும் வழியை பார்த்தாள்.
"அவளுக்கு தான் வழி தெரியுமே?. நீ வீட்டுக்கு போக வேண்டியது தானே!'
"இல்லை. இரண்டு பேரும் சேர்ந்து தானே வந்தோம். அதான் சேர்ந்தே போயிடுறோம்" என்றாள் முணுமுணுப்பாக
அதற்குள், அருகில் நின்றிருந்த அவனது நண்பன், " மச்சான் யாருடா இது?" என்றான் ஆவலாக அவளை பார்த்தபடி
"ம்ம். உன் தங்கச்சி " என்றான் அழுத்தமாக
"லாவண்யா மாதிரியா?" என்றான் புரியாமல்
"ம்ஹூம்!. லாவண்யா நம்ம இரண்டு பேருக்கும் தங்கச்சி. ஆனால் இந்த பொண்ணு உனக்கு மட்டும் தங்கச்சி" என்றான் வார்த்தைகளில் அவ்வளவு அழுத்தம்.
"என்ன டா சொல்ற?" என்றான் அவன் மீண்டும் புரியாமல்
"அத்தை பொண்ணுடா " என்றான் விளக்கமாக
வருணாவுக்கும் அவர்கள் பேசுவது காதில் விழுந்தான். 'உன் தங்கச்சி ' என்று சொல்லும் போது வார்த்தைகளில் கொடுத்த அழுத்தம். மற்றவனை, உன் எல்லைக் கோட்டிற்குள் நில் என்று எச்சரிப்பதற்காவே சொன்னது போல தோன்றியது. உண்மையும் அது தான்!.
"ஓ!" என்றதும்.
வருணா பக்கம் திரும்பி, "லாவண்யாவை பாரத்தால் உன்னை வீட்டுக்கு போகச் சொன்னேன்னு சொல்றேன். நீ கிளம்பு " என்றான்.
"இல்லை. லாவி " என்று அவள் ஏதோ சொல்ல வர,
'போ ' என்றான் வார்த்தைகளை உச்சரிக்காமல், அவனது உதட்டசைவில்
தலையை உருட்டியவள். மெல்ல நகர, "வரு " என்ற லாவண்யாவின் குரல் கேட்டது
வருணா திரும்பிப் பார்க்க! லாவண்யா தான்!. வந்து கொண்டிருந்தாள். ஈஸ்வரை கண்டு விட்டு, லாவண்யா பேசுவதற்கு முன்பே,
"இப்படித்தான் அந்த பொண்ணை. நடுரோட்டில் நிற்க வைச்சிட்டு போவியா?. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க" என்றான் கோவமாக
"இல்லை. மறந்து வைச்சிட்டு .. " என்றவளை இடையிட்டவன்.
"அதற்கு, அந்த பொண்ணையும் கூட அழைச்சிட்டு போயிருக்கனும். இல்லையா! வீட்டுக்கு அனுப்பி வைச்சிருக்கனும். இப்படியா நடுவழியிலேயே நிற்க வைக்கிறது?" என்று கண்டிக்க,
"சாரி அண்ணா " என்றவள். அப்போது தான் அருகே நின்றிருந்தவனை கண்டு, " ஹேய்! சுமார் மூஞ்சி குமாரு!. நீ எங்கே இங்கே?" என்றாள் ஆச்சரியமாக
வருணா, அவளது பேச்சில் சிரிப்பை மறைத்தபடி முகத்தை திருப்புவது தெரிந்தது. அதை கண்டு நொந்தவன்.
"பாரு டா! " என்றான் அழாத குறையாக
"உன் தங்கச்சி தானே டா " என்று ஈஸ்வர் சமாதானப்படுத்த
"ஆமாம் டா. ஊர்ல உள்ள எல்லாப் பொண்ணுகளும் எனக்கு மட்டும் தங்கச்சியா?" என்று அங்கலாய்க்க!
"ச்சே.. ச்சே.. இவங்க இரண்டு பேர் மட்டும் உனக்கு தங்கச்சி" என்று சமாதானப்படுத்தினான் ஈஸ்வர்.
"என்ன பேசுறீங்க? ஒன்னும் புரியலை!" என்றாள் லாவண்யா இடையிட்டு,
"சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புன்னு சொல்றான். கிளம்பு முதல்ல!" என்று ஈஸ்வர் கண்டிக்கும் விதமாக கூற,
"சரி சரி கிளம்பறேன்" என்றவள். "வரேன் டா அண்ணன்களா!" என்று வம்பு வளர்த்தபடி ஓடி விட்டாள்.
"இவளை பெத்தாங்களா? செஞ்சாங்களா டா?. எப்படி சமாளிக்கிறீங்க வீட்டில?" என்று அங்கலாய்த்தான் குமார்.
"வேற வழி!" என்று பேசியபடியே இருவரும் நடையை கட்டினர்.
லாவண்யாவிடம் பேசும் போது கூட, அந்த பொண்ணு என்று குறிப்பிட்டதை உணர்ந்தவளுக்கு, கசப்பான புன்னகை தான் தோன்றியது. பெயரை கூட சொல்ல விரும்பலை போல! .'என்ன தான் பெயருக்கு உறவு முறை வைத்து அழைத்தாலும்! அவர்கள் உண்மையில் சொந்தமில்லையே!. பெரியப்பாவும், ராஜூ மாமாவும் தானே பிரண்ட்ஸ். நாங்க எந்த விதத்திலேயும் உறவோ நட்போ இல்லையே!. லாவண்யா விகல்பமில்லாமல் பழகுகிறாள். அதே போன்று அவங்களும் நினைக்கனும்னு அவசியமில்லையே!' என யோசித்தபடி மனம் கனக்க வீடு நோக்கி வந்தனர். வழியில், லாவண்யா தான் வாங்கிய பொருள்களை பற்றி கூறியதை கூட முழுதாக காதில் வாங்கவில்லை. பெயருக்கு தலையாட்டி வைத்தாள்.
வந்தவுடன் சாப்பிட்டு முடித்து, தலைவலிப்பதாக கூறி படுத்து விட்டாள். ஏனோ! மனம் ஈஸ்வரிடம் போய் நின்றது. அவன் பேசுவது, அவனுடைய மேனரிசம், அவன் பைக்கில் அமர்ந்திருந்த தோரணை! என புத்தகத்தில், மயிலிறகை மறைத்து வைத்து அது குட்டி போடுகிறதா? என்று அடிக்கடி திறந்து பார்க்கும் மனநிலை போல தான். ஈஸ்வரை பற்றிய நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
தூக்கமும் வரவில்லை. மணியை பார்க்க! இரவு பதினொன்று!. அதிர்ந்து விட்டாள். இவ்வளவு நேரமா?அவங்களை பற்றியே யோசித்திருக்கிறோம்! என்று தோன்ற! கடினப்பட்டு உறங்க முயன்றாள். காலையிலிருந்து அலைந்ததால் வந்த சோர்வு, கிடைத்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு, அவளை நித்ரா தேவியின் வசம் ஒப்படைந்தது.
மறுநாள் காலையில் அவள் எழுந்த போது, ஈஸ்வர் இல்லை. டெக்ஸ்டைல் கடையிலிருந்து மேனேஜர் அவசர வேலையாக போன் செய்ததால் கிளம்பி விட்டான் என்ற செய்தி தான் கிடைத்தது. வருணாவுக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது. வந்து இருந்த ஒரு நாளிலேயே மிக பெரிய தாக்கத்தை அவளிடம் ஏற்படுத்தியிருந்தான். மற! மனமே மற! என்று திரும்ப திரும்ப சொல்லி, வீட்டு வேலைகளில் கவனத்தை செலுத்தி மனதை சமன்படுத்திக் கொண்டாள்.
அன்று கோசலை வீட்டில் தான் அனைவருக்கும் உணவு. ராஜூ, கோபால், ராதா, வேணி என அனைவரும் வந்து விட, விஷ்ணு மட்டும் இன்னும் வரவில்லை.
அனைவருக்கும் சாப்பிட்டும் முடித்து விட, " வருணா, அண்ணணை சாப்பிட அழைச்சிட்டு வா " என்றார் கோசலை.
"சரி மா " என்றபடி நகர, " அப்படியே வாழையிலையும் அறுத்து வந்திடு" என்றார் வேணியும்.
"சரி பெரியம்மா" என்றபடி இருவரும் கிளம்ப,
"இரு வருணா. நானும் வரேன் " என்று லாவண்யாவும் உடன் இணைந்து கொண்டாள்.
வீட்டிற்குள் நுழையும் போதே, விஷ்ணு போன் பேசியபடி நிற்பது தெரிந்தது. இருவரையும் கண்டு, 'என்ன?' என்பது போல பார்க்க!
"அண்ண, உன்னை அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க. அப்படியே வாழையிலையும் வேணுமாம். நான் அறுத்துட்டு வரேன்" என்றபடி வருணா கொல்லைப்புறமாக செல்ல,
விஷ்ணு தலையசைத்து விட்டு பேச்சை தொடர்ந்தான். சிறிது நேரத்தில் பேச்சை முடித்து விட்டு திரும்ப, லாவண்யா அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.
ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக, " நீங்களெல்லாம் சாப்பிட்டீங்களா?" என்றான். போனை சட்டை பாக்கெட்டில் வைத்தபடி
"ம்ம். சாப்பிட்டாச்சு. நீங்க ஏன் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் உடம்பை கெடுத்துக்கிறீங்க அத்து?" என்றாள்.
"அத்து?"
"அத்தை பையன்.. அதனால அத்து"
"அப்போ மாமா பையனா இருந்தால் 'மத்து' னு கூப்பிடுவியா?. இந்த அத்து எல்லாம் வேணாம் தாயே!. நீ அதுக்கு விஷ்ணு நு பேர் சொல்லி கூட கூப்பிடு" என்றபடி நகர,
"பேர் சொல்லிலாம் கூப்பிட முடியாது. வேணும்னா 'ஃபியான்சி'னு கூப்பிடுறேன்" என்றதும்
டக்கென்று திரும்பி பார்த்தான். அவனது புருவங்கள் யோசனையிலும் கோவத்திலும் நெறிந்தன.
"அப்போ! அந்த பூச்செண்டு வைச்சது நீயா?" என்றான். டக்கென்று விசயத்தை பிடித்து விட்டான்.
"ஆமாம். ஆள் வைச்சு வைச்சேன்."
"யாரு? வருணா ஹெல்ப் பண்ணாளா?" என்றான் பல்லைக்கடித்து
"ச்சே.. ச்சே.. உங்க தங்கச்சி அதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாள். உங்க தங்கச்சியோட பிரண்ட்ஸ் அத்தனை பேரும் எனக்கும் பிரண்ட்ஸ் தான். அதில் கொஞ்சம் பேர் எனக்கு ஹெல்ப் பண்ணாங்க" என்றாள் வருணாவை காட்டிக் கொடுக்க விரும்பாமல்
" சந்தோஷம் " என்றபடி நகர முயல
"நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலையே?"
"எனக்கு இதெல்லாம் செட்டாகாது. நீ வேற ஆளை பாரு" என்றான் எரிச்சலாக
"வேற ஆளை பத்தி நீங்க பேச கூடாது. நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க!"
"என்ன சொல்லனும்?. உன் வருங்கால கணவர் நான் இல்லை போதுமா!" என்றான் அழுத்தமாக
"ஏன்?கல்யாணம் பண்ணிக்காமலேயே இருக்க போறீங்களா? " என்றாள் கிண்டலாக
" எங்க அப்பா அம்மா பார்க்கிற பொண்ணை கல்யாணம் பண்ணி பிறகு என் பொண்டாட்டியா வரவலை தான் லவ் பண்ணவேன். உன்னை மாதிரி மூன்றாவது ஆளை வருங்கால கணவர்னு சொல்ற பேச்சோ புத்தியோ நமக்கு செட்டாகாது. நீ இடத்தை காலி பண்ணு" என்றான் முகத்தை சுளித்து
"யோசிக்லாமே! " என்றாள் மீண்டும்.
"அங்கே சிட்டியில நிறைய பசங்க இருப்பாங்களே. அவங்களை யாரையாவது பார்த்து லவ் பண்ணு. இந்த ஆட்டத்துக்கு நான் வரலை"
" எனக்கு உங்களை தான் பிடிச்சிருக்கு!. ஏன்? உங்களுக்கு என்னை பிடிக்கலையா?"
"ஈஸ்வரோட தங்கச்சியா, ராஜூ மாமாவோட பொண்ணா பிடிச்சது. ஆனால் இப்போ சுத்தமா பிடிக்கலை" என்றான் முகத்தை திருப்பிக் கொண்டு,
" பெண், நானாக வந்து விருப்பத்தை சொன்னதால் பிடிக்கலையா?" என்றாள் விடாமல்
"விருப்பத்தை யார் வேணும்னாலும் சொல்லாம். ஆண், பெண் என்கிற பாகுபாடெல்லாம் இல்லை. ஆனால் விருப்பமில்லைனு சொன்ன பிறகும் திரும்ப திரும்ப அதையே பேசிட்டு இருக்க?. நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு சொல்வாங்க. மாட்டுக்கே அப்படின்னா! மனுசி நீ இன்னுமா புரியலை" என்றான் முகத்தில் வெறுப்பை காட்டி,
அவனது உடல் மொழியும், முகச்சுளிப்பும் ஏனோ அறுவறுப்பை பார்த்தது போல! அதற்கு எதிர்வினையாற்றுவது போல இருந்தது.
'இதுவரை அப்படி இல்லையென்றால் என்ன?. இனி என் மேல் காதல் வரலாமே?' என்று கேட்க துடித்த நாவை அவனது உடல் மொழியை கண்டு கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
வருணா, கொல்லைப்புறத்திலிருந்து வருவதை கண்டவன். " வருணா வரா. அவளுக்கு இதெல்லாம் தெரிய வேணாம். காதல், கத்திரிக்காய்னு பேசி அவ மனசையும் கெடுத்திட வேண்டும். இந்த வயசில கண்ட ஆசையும் வரும், அதற்கு நாம இடம் கொடுக்க கூடாதுன்னு நல்லது கெட்டது சொல்லித் தான் வளர்க்கிறோம். நீ தேவையில்லாததை பேசி, அவ மனசையும் கெடுத்திடாத! " என்று சொல்லி முடிக்கவும். வருணா உள்ளே வரவும் சரியாக இருந்தது.
"என்ன அண்ண ரொம்ப முக்கியமா எதும் பேசிட்டு இருக்கீங்களா?. முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு லாவி?" என்று அண்ணணிடம் ஆரம்பித்து லாவண்யாவிடம் கேள்வியோடு முடித்தாள் வருணா.
"என் காதில் ஏதும் இரத்தம் வருதா பாரு?" என்றாள் லாவி
"இல்லையே? ஏன்?"
"உங்க அண்ணன் ஓவர் அட்வைஸ். இதுக்கு மேல பாடி தாங்காது. வா போகலாம் " என்றவள்.
விஷ்ணுவிடம், "சாரி " என்று விட்டு வருணாவுடன் கிளம்பி விட்டாள்.
என்ன தான்! சிரித்த முகமாய் இருந்தாலும் குரல் பிசிறடித்ததோ!
அதன் பிறகு, லாவண்யா வெகு இயல்பாகவே இருந்தாள். காதலை சொல்லி, அதை மறுத்ததால் ஏற்பட்ட வருத்தம் துளி கூட அவள் முகத்தில் இல்லை.
ஒருத்தர் தன்னை விரும்பியதாக கூறினால்! என்ன தான் அதை மறுத்தாலும்!,தம்மை அறியாமல் மனம் அவர்களை நோட்டமிடும். விஷ்ணுவும் அனிச்சை செயலாக லாவண்யாவை கவனித்தான்.
ம்ஹூம் .. லாவண்யா அவனை திரும்பியும் பார்க்கவில்லை. 'சொன்னது புரிந்து விட்டது போல!' என்று நினைத்துக் கொண்டான்.