எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூநிஷா வின் " சாய்ந்தேனே நானும் மெல்ல! " - கதை திரி

Status
Not open for further replies.

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 18
வருணா மயக்கத்திலிருந்து தெளிந்து எழுந்ததும் சுற்றிலும் பார்வையிட்டவள். சற்று சுதாரித்து அவசரமாக தன் கழுத்தை குனிந்து தொட்டுப் பார்த்தாள். தாலி எதுவும் இல்லை. அவளுக்கு அப்படியொரு ஆசுவாசம். கையில் தாலியுடன் ஒருவன் அருகில் வந்ததை கண்டே! அதிர்ச்சியில் மயங்கி விட்டாளே!. விழித்தவளுக்கு தாலி எதுவும் கட்டி விட்டானோ? என்ற பயம் இருக்கத்தானே செய்யும்.

மகளின் நடவடிக்கையை பார்த்த கோசலை. "அவங்கெல்லாம் போயிட்டாங்கம்மா. ஈஸ்வர் தம்பி வந்து, தப்பா எதுவும் நடக்காமல் காப்பாத்திடுச்சு. யார் செய்த புண்ணியமோ?. ஈஸ்வர் தம்பி சரியான நேரத்துக்கு வந்திடுச்சு " என்றார் தகவலாக

அவளது பார்வை சுற்றி முற்றியும் ஈஸ்வரை தேடியது. வெளி வராண்டாவில் நின்றபடி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான். ஈஸ்வரை கண்டதில் நிம்மதி. அவன் தான் இவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியதை நினைத்து மனதில் பேரமைதி ஏற்பட! மனம் லேசானது போல் தோன்ற! மூளை அவளை அமைதிபடுத்தும் விதமாக அவளை ஆழ்நிலை தூக்கத்திற்கு இட்டு சென்றது. எழுந்து அறைக்கு சென்றவள். அப்படியே படுத்து உறங்க ஆரம்பித்து விட்டாள்.

பலவித கலவையான எண்ணங்களுடன் வீடு வந்து சேர்ந்திருந்தனர் நால்வரும். ராமன் வேகமாக இறங்கி வீட்டினுள் செல்ல, அவரை பின் தொடர்ந்து மற்றவர்கள் செல்ல, வெளி வராண்டாவில் நின்றிருந்த ஈஸ்வரை கண்டு நின்று விட்டனர். ராமன் பதட்டத்தில் உள்ளே சென்றிருந்தார்.

"என்னாச்சு ஈஸ்வர்?. வருணாவுக்கு தாலி கட்டிட்டேன்னு சொல்றாங்க?" என்றார் கோபால்.

ஈஸ்வர் , அவன் வரும் போது இருந்த சூழல் அப்போது நடந்த பேச்சு வார்த்தைகள், தாலி கட்ட முனைந்தது! அதற்கு ஆதரவாக மற்றவர்களின் பேச்சு என அனைத்தையும் சொல்லி,

"அதனால அந்த சூழ்நிலையை சமாளிக்க, அந்த மாப்பிள்ளை கையில் இருந்த தாலி பிடுங்கி, கட்டுவது போல பாவனை செய்ப வேண்டியதாயிடுச்சு மாமா. ஆனால் நிஜமா நான் தாலி கட்டலை . ஒரு பொண்ணு சுயநினைவு இல்லாமல் இருக்கும்போது கட்டுவது மகா பாவம் தோணுச்சு. அதோடு பெரியவங்களோட விருப்பம் இல்லாம கட்டுறதும் சரியா படலை. அதனால நான் தாலி எதுவும் கட்டலை மாமா" என்றான் தெளிவாக.

ராஜூவுக்கு மகனை நினைத்து பெருமையாக இருந்தது. கோபாலன் அவன் முதுகை ஆதரவாக தட்டிக் கொடுத்தார். விஷ்ணு அவனை கட்டிப்பிடித்துக் கொண்டான். அவன் மனம் நெகிழ்ந்திருந்தது.

"சரி சரி வாங்க உள்ளே போகலாம்" என்றபடி கோபால் உள்ளே செல்ல மூவரும் அவரை பின்தொடர்ந்தனர்.

ராமனுக்கும் விஷயத்தை கோசலை சொல்லி இருக்க அவர் தலையை பிடித்து படி அமர்ந்திருந்தார் . அடுத்து என்ன செய்வது? என்று புரியாத நிலை.

ராஜுதான் முதலில் பேச்சை தொடங்கினார். " இவ்வளவு தூரம் ஆன பிறகு இதை இப்படியே விடுவது சரியில்லை. ஈஸ்வருக்கும் வருணாவுக்கும் திருமணத்தை முடித்து விடுவோம்" என்றார் தெளிவாக

மற்றவர்களுக்கும் அதை மறுக்க முடியாத நிலை!. ஏற்கனவே பேசி வைத்திருந்து திருமணம். இடையில் சில மன வருத்தங்கள் இருந்தாலும்! தற்போது அதையே பிடித்துக் கொண்டு நிற்க முடியாதே!. ஊரார் கண்ணுக்கு தற்போது வருணா ஈஸ்வரன் மனைவி. அதை காலம் தாழ்ந்தாமல் ,திருமணத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தனர்.

அப்போது இடையிட்ட ஈஸ்வர்." ஒரு இக்கட்டில் நடந்த விஷயம். அதற்காக திருமணம் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை" என்றான் கூலாக

"என்ன ஈஸ்வர் இப்படி பேசுற? நீ காப்பாத்துறதுக்காக தான் இந்த இந்த விஷயத்தை செய்திருந்தாலும்! ஊரார் முன்னால் வருணா தான் உன்னுடைய மனைவி. இந்த விஷயத்தை எப்படி அப்படியே விட முடியும்? " என்றார் ராஜூ கோவமாக

"அதற்காக விருப்பமில்லாத பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியுமாப்பா?. மாமா அத்தை வருணா எல்லாருக்கும் விருப்பம் இருக்கணுமே. " என்றான் ராமனை ஓர கண்ணால் பார்த்தபடி ,

"எங்க எல்லாருக்கும் விருப்பம் தான் பா என்றார் " கோசலை முந்திக்கொண்டு,

அப்போதும் விடாமல் "மாமா நீங்க சொல்லுங்க மாமா" என்றான் ராமனை பார்த்து,

வருணாவுக்கு வெளியில் வரன் பார்த்ததை ஈஸ்வரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அதனால் தான் அவரை துருவி துருவி கேட்டுக் கொண்டிருந்தான். பதில் சொல்லாமல் விடமாட்டான் என்பது புரிய,

"எங்க எல்லாருக்கும் பூரண சம்மதம் பா. நீ தான் எனக்கு மாப்பிள்ளையா வரணும்ங்குறது கடவுள் போட்ட முடிச்சு அதை யாராலும் மாற்ற முடியாது " என்ற ராமன். "சீக்கிரமே கல்யாண வேலையை ஆரம்பிச்சிடலாம் சம்பந்தி என்றார் ராஜுவை பார்த்து !. சூழ்நிலை இலகுவாக மற்றவர்களின் முகங்களிலும் சந்தோசம் புன்னகையாக பிரதிபலித்தது. தனது திருமண பற்றி எதையும் அறியாமல்! உள்ளே வருணா உறங்கிக் கொண்டிருந்தாள்.

அடுத்து திருமண பேச்சு வார்த்தைகள் தொடங்க! "ஒரு நிமிசம் பா. எனக்கு கல்யாணம் முடிப்பதற்கு முன்னால், லாவண்யா கல்யாணம் பண்ணணும் . அவளுக்கு கல்யாணம் பண்ணாமல் நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? . அது என்னால முடியது. அதனால அவளுக்கு ஒரு நல்ல வரன் அமையும் வரைக்கும் பொறுத்திருங்க. ஒரு அண்ணணா இது என்னுடைய கடமையும் கூட " என்றான் தெளிவாக.

அனைவருக்கும் அது சரி என்றே தோன்றியது. ஆனால் திருமணம் நடக்கா விட்டாலும் ஈஸ்வருக்கும் வருணாவுக்கும் திருமணம் நடந்து விட்டதாகத்தானே வெளியில் பேச்சு. அப்படியிருக்க, எத்தனை நாட்கள் வருணாவை இங்கே வைத்திருக்க முடியும். உறவுகள், 'ஏன் வருணாவை வாழ அனுப்பி வைக்கவில்லை என்று கேட்பார்களே?. திருமணம் முடியவில்லை என்று தெரிந்தால்! மீண்டும் கோசலையின் அண்ணன் குடும்பம் வம்பு செய்வார்களோ என்ற எண்ணம் வேறு அலைக்கழிக்க,

"ராஜூ, என் பையன் விஷ்ணுவுக்கு உன் பொண்ணு வருணாவை கொடுக்கிறியாப்பா?. இந்த சூழ்நிலைக்காக நான் பெண் கேட்கலை. முன்னமே எனக்கும் வேணிக்கும் இந்த எண்ணம் உண்டு. ஆனால் விஷ்ணு அப்போதைக்கு தொழில் சம்பாத்தியம் இல்லாத நிலை. அதனால் கேட்க தயங்கினேன். இப்போ அப்படி இல்லை. என் மகன் சொந்த தொழில் செய்து சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான். இன்னும் நிறைய சம்பாதிப்பான். என் பையனுக்கு உன் பெண் லாவண்யாவை கல்யாணம் செய்து கொடுக்க விருப்பமா?" என்றார்.

சென்னையில் ராஜூ பேசியதை மறந்தது போன்று! தானே கேட்பது போல பெண் கேட்டிருந்தார் கோபால். அவர் பேசியது உண்மையும் கூட!

"விஷ்ணு? " என்று கேள்வியாக நிறுத்த! அவனது விருப்பத்தை ஈஸ்வர் கேட்கிறான் என்பது புரிய,

" அம்மா அப்பாவுடைய விருப்பம் தான் ஈஸ்வர். உனக்கு என்னை பற்றி தெரியாதா?" என்றான் விஷ்ணு.

"தெரியும் டா. இருந்தாலும் உனக்கு லாவண்யாவை பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லனுமில்லையா?" என்றான் விடாமல்.

"இதுவரை லாவண்யாவை அப்படி பார்த்ததில்லை. ஆனால் மனைவியாக வந்தால் நிச்சயம் பிடிக்கும் " என்றான் மென்னகை புரிந்தபடி

"சரி ராஜூ. நீ வீட்டீல் கலந்து பேசிட்டு சொல்லு. நிச்சயதார்த்தத்தை ஒன்னா செய்திடலாம். விஷ்ணுவுக்கு குலதெய்வ கோவிலில் தான் கல்யாணம் செய்யனும்னு வேண்டுதல் இருக்கு. அதனால இங்கே தான் பா பண்ணணும்" என்றார் கோபால் தெளிவாக

"சரி கோபால். மற்ற விசயங்களை வீட்டில் கலந்து பேசிட்டு வரேன். ஈஸ்வருக்கு சென்னையில் தான் கல்யாணம் வைக்கனும். விஷ்ணுவுக்கு இங்கே தான் என்பதால் கல்யாண தேதி எல்லாத்தையும் பார்க்கனும். தேதி குறிச்சிட்டு சொல்லுங்க. நமக்கு தோதான நாளாக பார்த்துக்கலாம்" என்றார் ராஜூ.
 

Sirajunisha

Moderator
மற்றவர்களும் அதை ஆமோதிக்க, அடுத்து பேச்சு இன்று வந்து கலாட்டா செய்தவர்களின் பக்கம் திரும்பியது. " என் பொண்ணு கல்யாணம் முடியும் முன்னே அந்த சிவா பயலை ஒரு வழி ஆக்கிப்புடனும். இல்லைன்னா அவனால் நமக்கு எப்போதும் இடைஞ்சல் இருந்து கொண்டே இருக்கும்" என்றார் ராமன் கோவமாக

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் மாமா. என் பிரண்டோட அப்பா இங்கே தான் எஸ். பி யா இருக்காரு. அவரிடம் இதை பத்தி பேசிடுறேன். நிச்சயம் நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க " என்றான ஆறுதலாக

"சரி மாப்ள இனி வருணா விஷயம் உங்க பொறுப்பு நீங்க பாத்துக்கோங்க " என்று விட்டார் ராமன்.

அந்த வார்த்தையை கேட்டதும் ஈஸ்வருக்கு ஜிவ்வென்று வானத்தில் பறப்பது போன்று இருந்தது. அதுவரை ராமன் மேல் இருந்த கோபம் கூட போய் விட்டது.தனக்கு பிடித்த பொம்மையை தன்னிடமே திரும்ப கொடுத்தது போன்று மகிழ்ச்சியில் இருந்தான் ஈஸ்வர்.

"சரிங்க மாமா நீங்க கவலைப்படாதீங்க இனி நான் பாத்துக்குறேன்" என்றான் உற்சாகமாக.

அப்போது வேணி வந்து உணவருந்த அழைத்தார். "நேரம் ஆயிடுச்சு சாப்பிட்டு விடுவோம் " என்றார் கோபாலும்!

இலை போட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது. விஷ்ணு தான் முதலில் கவனித்து, " வருணா எங்கே அம்மா ?" என்றான் வேணியிடம் .

"அவ தூங்குறாப்பா. இன்னைக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. கொஞ்சம் அமைதியாகட்டும் னு தூங்க விட்டுட்டோம்" என்றார் தகவலாக. ஈஸ்வர் இதை கண்டு கொண்டது போல கூட தெரியவில்லை அவன் பாட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கோபாலின் வீட்டிலேயே வழக்கம் போல், ராஜூவும் ஈஸ்வரும் தங்கி கொண்டனர்.

இரவு உறங்கு போகும் முன் ராஜுவிடம், நாளை எஸ்பிஐ நேரில் சந்தித்து பேசிவிட்டு அப்படியே சென்னை கிளம்புவதாக சொல்லிய ஈஸ்வர். சொன்னது போலவே மறுநாள் கிளம்பி விட்டான். ராஜூ இரண்டு நாள் கழித்து செல்வதாக முடிவு செய்திருந்தார்.

முந்தைய நாள் அதிர்ச்சியில் அன்றைய நாள் முழுவதும் அமைதியாகவே சுற்றிக் கொண்டிருந்தாள் வருணா. ராஜு அவரிடம் ஆறுதலாக பேசினார். ஆனால் திருமண பற்றி அவளிடம் யாரும் விவரம் தெரிவிக்கவில்லை.

சற்று மனமாற்றத்திற்காக வேலைக்கு செல்வதாக ராமனிடம் போய் நின்றாள். "சரிம்மா பார்த்து பத்திரமா போய்டு வா " என்று அனுப்ப

வருணா நகர்ந்ததும். "ஏங்க அவளை வேலைக்கு போக சொல்றீங்க? . இருக்கிற பிரச்சனை போதாதா?" என்றார் கோசலை கோவமாக

"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது. மாப்ள எஸ். பியிடம் பேசி விட்டாராம். அந்த சிவாவையும் அவன் கூட வந்த ஆட்களையும் விசாரரணைக்கு இன்னைக்கு கூப்பிட்டு இருக்காங்க. கூடவே, போலிஸ் ஸ்டேசனில் மணி கணக்கா உட்கார வைச்சாங்கள்ள அவங்களையும் கூப்பிட்டு விட்டிருக்காங்க. நாமளும் போகனும். அதனால வருணை ஆடிட்டர் அம்மா வீட்டுக்கே போகட்டும். இங்கே தனியே இருக்க வேணாம் " என்று விட்டார்.

"அப்போ சரிங்க. வருணா கூடவே நம்ம கீதாவையும் துணைக்கு அனுப்ப சொல்லி அவ அம்மாட்ட கேட்டு அனுப்பி விடுறேன்" என்றார் கோசலை.

"சரி " என்று விட்டு நகர, சொன்னது போலவே வருணாவுடன் கீதாவையும் அனுப்பி வைத்தனர். கீதா நேற்று நடந்ததை பேச ஆரம்பிக்க, " தயவு செய்து அதை பத்தி பேசாதடி" என்று கடுப்படித்து அவள் வாயை மூடி விட்டாள் வருணா.

ஆனால் விசயம் ஆடிட்டருக்கு தெரிந்திருக்க, " என்னாச்சு வருணா?. உங்க மாமா மகன் வந்து பிரச்சனை பண்ணிட்டான்னு கேள்விபட்டேன்" என்றார்.

"ஆமாம் மேம். நேத்து ஒரே பிரச்சனையா போயிடுச்சு " என்றதோட நிறுத்திக் கொண்டாள்.

ஆனால் அருகிலிருந்த கீதா, " அதை ஏன் கேட்குறீங்க மேடம். என்ன நடந்துச்சு தெரியுமா! " என்று விளா வரியாக இஞ்ச் பை இஞ்சாக விளக்கியவள்.

"இதில் என்ன டிவிஸ்ட்டுன்னா!. அந்த மாப்பிளை கட்டுறதுக்கு வைச்சிருந்த தாலியை பிடிக்கி, ஈஸ்வர் அண்ணன் இவ கட்டினது தான்!" என்றாள் சிரிப்போடு

வருணா அதிர்ந்து போய் அவளை பார்க்க! "என்னடி சொல்லிட்டன்னு அதிர்ச்சியா பாக்குறியா ?. இதுதான் ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே மேடம் தெரிந்தால் என்ன?" என்றாள் கூலாக

"அது எப்படி மயக்கத்திலே இருக்கிற பொண்ணுக்கு தாலி கட்ட முடியும்?" என்றார் ஆடிட்டார் .

"நம்பலைன்னா நீங்க இந்த வீடியோவை பாருங்க நேத்து நடந்த விஷயம் அத்தனையும் அப்படியே யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்தேன்" என்று கீதா அந்த வீடியோவை பிளே செய்து காண்பிக்கவும். ஆடிட்டர் மேடமோடு சேர்ந்து பார்த்த வருணாவுக்குமே இது அதிர்ச்சி தான்.

"இதை அப்படியே என்னுடைய போனுக்கு அனுப்பு" என்றாள் வருணா.

சொன்னது போலவே அதை கீதா அனுப்பி விட, அதை ராமனுக்கும் விஷ்ணுவுக்கும் அனுப்பி விட்டவள். " நான் கிளம்பறேன் மேடம்" என்று உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டாள். இன்று எதற்கு காலர் வைத்த சுடிதாரை கோசலை ஏன் போடச் சொன்னார் என்று புரிவது போல இருந்தது . ஆனால் அவள் படத்தில் தான் தாலி இல்லையே?. என்ன நடந்தது என்று அவளுக்கு தெரிய வேண்டும். வீட்டிற்கு வந்தவள். அப்பா மாமா பெரியப்பா யாரும் வராத வீட்டிற்கு இன்னும் வராத நிலை!

அந்த வீடியோவை ஈஸ்வருக்கு ஃபார்வேர்ட் செய்துவிட்டு, அவன் பார்த்து விட்டது தெரிந்ததும்! அழைப்பு விடுத்து விட்டாள். அழைப்பு இணைக்கப்பட்டதும்.

"நேத்து என்ன நடந்துச்சு? எனக்கு தாலி கட்டுனீங்களா?" என்றாள் கோவமாக

"உன் கழுத்தில் தாலி இருக்கா?"

"இல்லை "

"அப்போ கட்டலன்னு அர்த்தம்!"

"ஆனா இந்த வீடியோவில் கட்டுனது போல தானே இருக்கு? "

" உன் கழுத்தில் தாலி இருக்கா?"

"இல்லை"

"அப்போ கட்டலன்னு அர்த்தம்!"

"ஆனா இந்த வீடியோவில்.. " என்றவள். சற்று சுதாரித்து, " என்ன ரிப்பீட் மோட்ல பேசிட்டு இருக்கீங்களா? இது என் வாழ்க்கை. கொஞ்சம் பொறுப்பா பேசுங்க!" என்றாள் ஏக கடுப்பில்

"நீ கேட்டதுக்கான பதிலை நான் சொல்லிட்டு தான் இருக்கேன் . நீதான் ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டுகிட்டு இருக்க? .வேற ஏதாவது மாத்தி கேளுமா? " என்றான் சுழல் நாற்காலியில் அசைந்தபடியே.

நேற்றிலிருந்து அவளது போனை எதிர்பார்த்தவனுக்கு ,ஒரு நாள் முழுவதும் கடந்து இன்று நாள் முடியும் வேளையில் வந்து கேள்வி கேட்டதில் அவனுக்கு ஏக கடுப்பு!

"ப்ளீஸ் சொல்லுங்க?" என்றாள் அழுவது போல!

"சரி நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு. உன் கழுத்தில் தாலி இருந்திருந்தால் உனக்கு இஷ்டமாக இருந்திருக்குமா? கஷ்டமாக இருந்திருக்குமா? "

"கஷ்டமாகத்தான் இருந்திருக்கும் . ஏனென்றால் அப்போ எனக்கு சுயநினைவே இல்லையே !" என்றாள்.

மறுமுனை அமைதியாக இருந்தது. அவள் ஹலோ என்று கூற, எந்த பிரதிபலிப்பும் இல்லை ஃபோனை அணைத்திருந்தான் ஈஸ்வர். அவளுக்குமே தற்போது கோபம். "போயா" என்று முணுமுணுத்தவள். பெற்றோரின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

இங்கே ஈஸ்வரோ, " இஷ்டம் இல்லையாமில்ல?. போடி, கல்யாணத்துக்குள்ள உன்னை என் பின்னாடி அலைய வைக்கலை நான் ஈஸ்வர் இல்லை. !" என்று முடிவெடுத்தான் தீர்க்கமாக

லாவண்யா படுத்தபடியே, தனது செல்போனிலிருந்த விஷ்ணுவின் போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தாள். ஈஸ்வர் வந்ததுமே அனைத்து விசயத்தையும் சொல்லி விட்டான். விஷ்ணுவுக்கு லாவண்யாவுக்கும் திருமணம் முடிவானது உட்பட, இதை கேட்டதுமே,

" விஷ்ணுவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமா அண்ணா?" என்று தான் கேட்டாள்.

"இதுவரை லாவண்யாவை அப்படி பார்த்ததில்லை. ஆனால் மனைவியாக வந்தால் நிச்சயம் பிடிக்கும் " என்று விஷ்ணு கூறியதை அப்படியே ஈஸ்வர் சொல்ல , காதல் கொண்ட மனம் அடிபட்டு போனது.

'மனைவியாக தானே பிடிக்கும். அப்போ அதுவரை உங்களிடம் நான் பேசப்போவதில்லை. மனைவியான பிறகே நானும் உங்களிடம் பேசிக் கொள்கிறேன்!' என்று முடிவு செய்து விட்டாள்.

அண்ணணும் தங்கையும் அவர்கள் பின்னால் தங்களது இணையை சுற்ற வைக்கும் முடிவை எடுத்திருக்க! இது எதுவும் தெரியாத அவர்களது இணைகள் காதல் பாடம் படிக்கப் போவது தெரியாமல் தற்போது அவரவர் வேலைகளில் மூழ்கி இருந்தனர்.

காதல் கசக்கவா போகிறது?. இல்லை. அவஸ்தையாக்குமே! காதல் அவஸ்தைகளை சமாளிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்..

நலம் விசாரித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி டியர்ஸ் 🙏🙏🙏
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 19
திருமண தேதி முடிவு செய்து விட்டே, ராஜூ சென்னை திரும்பி இருந்தார். இரண்டு வாரங்கள் கழித்து நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டது . முதலில் ஈஸ்வர் மற்றும் வருணாவுக்கு இங்கு சோலையூரில் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஊரில் உள்ளவர்கள் திருமணமே முடிந்த பிறகு, எதற்கு நிச்சயதார்த்தம் என்று கேட்பார்களே?.

அதற்காக திடீரென திருமணம் நடந்து விட்டதால், பெற்றோர்களே எந்த நிகழ்வையும் பார்க்காததால்! முறைப்படியே அனைத்து செய்து பெண்ணை கணவன் வீட்டிற்கு அனுப்பவதாக இருக்கிறோம்' என அதற்கொரு பதிலையும் தயாரித்து வைத்துக் கொண்டனர்.

முதலில் கிராமத்தில் வைப்பதற்கு காரணமே, ராதிகா மற்றவர்களிடம் பேசும் சூழ்நிலையை உருவாக்கவே!. அன்று அனைவரையும் வெளியில் போக சொல்லி விட்டு, இன்று அவர்கள் பையனுக்கே, பெண் கேட்காமல் கொடுப்பார்களா?. அதோடு என்ன தான் ஆண்களா முடிவு செய்தாலும் ஒரு பெண் இல்லாமல் சபை நிறையாதே!

அடுத்த வாரத்தில் சென்னையில் விஷ்ணு மற்றும் லாவண்யாவுக்கு நிச்சயதார்த்தமும் பத்தாவது நாள் திருமணம் சோலையூரில் குல தெய்வ கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அடுத்த ஐந்தாவது நாள் ஈஸ்வர் மற்றும் வருணா திருமணம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு, இரண்டு ஜோடிகளுக்கும் அன்று மாலையே ரிசப்ஷன் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதாவது நிச்சயதார்த்தம் மணப்பெண் வீட்டிலும்,திருமணம் மணமகன் ஊரிலும் ஏற்பாடாகி இருந்தது.

இதையெல்லாம் ராஜூ, ஒரு தகவலாகவே ராதிகா மற்றும் லாவண்யாவிடம் சொன்னார். ஏற்கனவே லாவண்யா நிச்சயதார்த்தத்தில் இவர்கள் செய்து வைத்த செயலை அவரால் மறக்கவோ மன்னிக்கவோ முடியவில்லை.

திருமண நாளும் நிச்சயதார்த்த நாளும் நெருங்கியே இருந்ததால்! இப்போதிருந்தே திருமண வேலைகளை ஆரம்பித்திருந்தனர். நிச்சயதார்த்தம் சோலையூரில் நடைபெறுவதால் நெருங்கிய உறவுகளை மட்டுமே ராஜூ அழைத்திருந்தார்.

இன்று நிச்சயத்துக்கு தேவையான புடவைகளை எடுக்க, ராதிகா மற்றும் லாவண்யாவை ஈஸ்வரை அழைத்து வரும்படி கூறியிருந்தார் ராஜூ. அதன்படி இருவரும் கிளம்பி வந்தனர். ஆனால் வந்த இரு பெண்களின் முகத்தில் மருந்துக்கும் சந்தோஷமில்லை. இதை கவனித்த ஈஸ்வர்,

"என்னம்மா ஏன் ரொம்ப வருத்தமா இருக்கீங்க? . முகத்தில் சந்தோஷமே இல்லையே?." என்றான்.

"அப்படி எல்லாம் ஏதும் இல்லை டா. ஆனால் ஒரு சங்கட்டம்?" என்றார் வார்த்தையை இழுத்து

"என்னது?"

"அன்றைக்கு வேணும்னே அவங்களை வீட்டை விட்டு போகச் சொல்லுங்கன்னு சொல்லலை பா. அங்போது நடந்த சூழலில் என்னையும் அறியாமல் சொல்லிட்டேன். சொன்னது கூட எனக்கு தெரியலை. ராஜூ அண்ணன் அதை எடுத்து சொல்லும் போது தான் எனக்கே தெரிஞ்சுது. என்ன இருந்தாலும் நான் பேசினது தப்பு தான். ஆனால் இப்போ நிச்சயம் செய்ய அவங்க வீட்டுக்கே போக போறோம். பழசை எதுவும் நினைவு வைச்சு ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு கவலையா இருக்கு" என்றார்.

"அப்படி எல்லாம் எதுவும் நடக்காதும்மா. அப்போதிருந்த உங்க மனநிலை அவங்களுக்கும் புரிஞ்சிருக்கும். நானும் இரண்டு மாமாவிடமும் இது பற்றி பேசியிருக்கேன். பெரியவங்க புரிஞ்சிப்பாங்க. ஆனால் விஷ்ணு அப்படியில்லை. அவனுக்கு நிச்சயம் வருத்தம் இருக்கும். நாளைக்கு நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளையா வரப் போறவன். அதனால் அவனிடம் மட்டும் தனியா ஒரு வார்த்தை பேசிடுங்கம்மா" என்றான்.

"அப்போ விஷ்ணுவிடம் அம்மாவை மன்னிப்பு கேட்க சொல்றியாண்ணா?" என்றாள் லாவி இடைபுகுந்து கோவமக

"மன்னிப்பு இல்லடா. வருத்தம் தெரிவிக்க சொன்னேன்"

"ம்க்கும் " என்று அவள் நொடிக்க,
மெல்ல புன்னகைத்து கொண்டவன்.

"நம்ம வீட்டுக்கு வரப் போற மாப்பிள்ளை. உனக்கு அவனோட மரியாதை எவ்வளவு முக்கியமோ அதே போலத்தானே எங்களுக்கும். அதோட என் நண்பனும் கூட, எங்கேயும் அவனை விட்டுக் கொடுக்க முடியாது டா. அதே போலத்தான் அம்மாவையும். அதனாலத்தான் மன்னிப்பு கேட்கனும்னு சொல்லாமல் வருத்தம் தெரிவிக்க சொன்னேன். மன்னிப்பை கேட்பதை விஷ்ணுவும் விரும்ப மாட்டான். அதே போல அம்மா பேசாமல் விஷ்ணு, நம்ம வீட்டுக்கும் வர மாட்டான்" என்றான் விளக்கமாக

அதற்கு மேல் லாவண்யா எதுவும் பேசவில்லை. காரிலேறி தங்களது டெக்ஸ்டைல்ஸ்க்கு வந்து சேர்ந்தனர். பிரத்யேகமாக மணப்பெண்ணுக்கான பட்டுப்புடவைகள் எடுக்குப் பிரிவில் இருவரும் அமர, அவர்களுக்கு புடவை எடுத்து காண்பிக்கப்பட்டது.

என்னதான் அவர்கள் கடையாக இருந்தாலும், புடவை அவர்களுக்கு திருப்தியாக இருக்க வேண்டுமே!. வெகு நேரம் தேடி, ஐந்து புடவைகளை எடுத்து வைத்திருந்தனர். இதில் எதை தேர்வு செய்வது? என்ற குழப்பம்.

"அம்மா, அண்ணாவை செலக்ட் பண்ண சொல்லிடலாம்மா " என்றாள் லாவி முடிவாக

"சரி. வரச் சொல்லு" எனும் போதே, ஈஸ்வரும் அந்த தளத்திற்கு வந்திருந்தான். இவர்களை கண்டு அருகே வர,

"அண்ணா, இந்த புடவையில் உனக்கு பிடிச்ச புடவை எதுன்னு சொல்லு. அதையே வருணாவுக்கு எடுத்திடலாம்" என்று கூற,

ஒவ்வொன்றாக எடுத்தவன். "இந்த தாமரை கலர் வருணாக்கிட்ட இருக்கு!. அரக்கும் இருக்கும். ஆரஞ்சும் இருக்கு. சிவப்பும் இருக்கும். பச்சையும் இருக்கு " என்றபடி எடுத்த ஐந்தையுமே ஒரங்கட்டி விட்டான்.

"என்ன அண்ணா இப்படி சொல்ற?. எப்படி பார்த்து பார்த்து எடுத்தோம் தெரியுமா?. இதில் வருணாட்ட அந்த கலர் இருக்கு!. இந்த கலர் இருக்குங்கற?. உனக்கு மட்டும் எப்படி தெரியுமாம்?" என்றாள் ரோசமாக

"வருசா வருசம் திருவிழாவுக்கு போகும் போது அம்மா புடவை எடுத்துட்டு வர சொல்லுவாங்களே!. அதை நான் தானே செலக்ட் பண்ணி உங்க இரண்டு பேருக்கும் கொடுத்து விடுவேன். பிறகு எப்படி எனக்கு கலர் தெரியாமல் போகும்?" என்று அவளிடம் பதில் பேசியபடி புடவைகள் அடுக்கியிருந்த ராக்கைகளை பார்வையிட்டவன். அங்கிருந்த சேல்ஸ்மேனிடம் ஒரு புடவையை கை காட்டினான்.

வாடாமல்லி நிறத்தில் உடல் முழுவதும் தங்க நிற ஜரிகையுடன் அவ்வளவு அழகாக இருந்தது. " ம்ம். இது நல்லாயிருக்கு. இதையே வருணாவுக்கு எடுத்துக்கோங்க" என்றவன். போன் அழைப்பு வர எடுத்து பேசியபடியே அங்கிருந்து சென்று விட்டான்.

"பரவாயில்லை மா. அண்ணணை நல்லாவே வளர்த்திருக்க. பொண்டாட்டிக்கு எது நல்லாயிருக்கும் னு பார்த்து பார்த்து செலக்ட் பண்றார்" என்று கிண்டலாக சொல்லி சிரித்தாலும்,

மனம் என்னவோ?, " நமக்கும் தான் ஒன்னு வாய்க்க போகுது. நாமே லவ் சொன்னாலும் பிடிக்கலைனு தான் சொல்லும்!. இதில் எனக்கு பிடிச்ச மாதிரி புடவையையா பார்த்து பார்த்து செலக்ட் பண்ண போறார். முதலில் எனக்கு என்ன பிடிக்குமான்னாவது தெரியுமா?' என நொடித்துக் கொண்டது.

பிறகு தங்களுக்கும் புடவைகளை தேர்வு செய்து எடுத்துக் கொண்டு கிளம்பினர். திருமண வேலைகள் விரைவிலேயே ஆரம்பித்தனர். லாவண்யாவுக்கு ஏற்கனவே நகைகள் இருந்தாலும்!. புதிதாகவும் நகைகள் வாங்கினார். ராஜூ மகளுக்கு எதிலும் குறை வைக்கவில்லை. அதிக அளவில் நகைகளை வாங்கி குவித்தார். ஈஸ்வர் தன் பங்குக்கென்று நகைகளை வாங்கினான்.

செல்போனின் வழியாகவே திருமண பத்திரிக்கைகளில் யார் யார் பெயர் போட வேண்டும் எப்படி பத்திரிகை அச்சடிக்கப்பட வேண்டும்! டிசைன்கள் என பரிமாறப்பட்டு, அச்சடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. நிச்சயதார்த்தின் போதே, பத்திரிக்கைகளை கொடுத்து விட்டு வந்து விடலாம் என முடிவு செய்தனர்.

நாட்கள் வேகமாக நகர, இதோ இன்று ஈஸ்வர் மற்றும் வருணாவின் நிச்சயதார்த்த நாள். உறவுகளுடன் முதல் நாள் இரவே ராஜூ வந்து விட்டார். அருகேயிருந்த டவுனில் அறை எடுத்து தங்கி, மறுநாள் காலை சோலையூர் செல்வதாக ஏற்பாடு. விஷ்ணுவின் உதவியுடன் ஈஸ்வர் தான் ஹோட்டலில் அறை எடுத்திருந்தான்.

அனைவரும் வந்தவுடன், இரவு உணவுக்கு என்ன மெனு என கேட்டு விஷ்ணு தான் உணவுக்கு ஏற்படும் செய்திருந்தான்.
 

Sirajunisha

Moderator
இதை கண்டு," விஷ்ணு, இதையெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் டா. நீ ஏன் டா?. அன் டைம்ல அங்கேயும் இங்கயும் அழையற?" என்றான் ஆதங்கமாக

"டேய் இது என் தங்கச்சியோட நிச்சயதார்த்தம். கூடவே என் நண்போடதும். இதுக்கு நான் பார்க்காமல் வேற யார் பார்ப்பாங்கலாம்?" என்றான் உரிமையாக

"ஆஹா! அப்போ இது போலத்தான் என் நிச்சயதார்த்தத்துக்கும் நீ வேலை பார்க்கனும்னு சொல்லாமல் சொல்றியா டா?"

"அப்கோர்ஸ்டா" என்றான் விஷ்ணுவும் சிரித்தபடி

அப்போது அங்கே வந்த ராதிகா, "விஷ்ணு " என்றார்.

"சொல்லுங்க அத்தை " என்றவனின் முகம் சிரிப்பை நிறுத்தியிருந்தது.

"உன்னிடம் பேசனும் வா பா " என்றவர். "ஈஸ்வர் அறைக்கு அழைச்சிட்டு வா " என்றபடி முன்னே செல்ல,

"வா விஷ்ணு " என்று அவன் எதுவும் கேட்பதற்கு முன்னே தோளில் கைப்போட்டு அழைத்து சென்றான் ஈஸ்வர்.

ராதிகா தங்கியிருந்த அறைக்கு அழைத்து வந்ததும். "உட்காருப்பா " என்று ஷோபாவை காண்பித்து விட்டு, தானும் மற்றொரு இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

"சொல்லுங்க அத்தை . என்ன விசயம்?" என்றான் ஒட்டாமல்

"முதலில் நான் உனக்கு நன்றி சொல்லனுப்பா. அதற்கு தான் கூப்பிட்டேன். என் பொண்ணோட வாழ்க்கையையே காப்பாத்தியிருக்க!. அன்றைக்கு நீ மட்டும் அவங்களிடம் அவ்வளவு ஸ்ட்ராங் நின்னு பேசலைன்னா!. அந்த ஆட்கள் சொல்றதை நாங்க நம்பியிருப்போம்" என்றார் வருத்தமாக

" தப்பானவன்னு தெரிந்தும் எப்படி பார்த்துட்டு இருக்க முடியும். அதுவும் ராஜூ மாமா குடும்பம்னு வரும்போது சும்மா இருக்க முடியுமா?. அன்றைக்கு நான் செய்த நல்லதினால் தான். இன்னைக்கு என் தங்கச்சி காப்பாத்த பட்டிருக்கா. அதுவும் ஈஸ்வரால்!. அதனால இதில் நன்றி சொல்ல எதுவுமே இல்லை. " என்றான்.

"அப்போ என் தங்கச்சியை நீ நல்லது செய்ததால் தான்!. உன் தங்கச்சியை நான் காப்பாத்தினேன்னு சொல்றியா?" என்றான் ஈஸ்வர் முறைத்தபடி

"டேய் அப்படியில்லை டா. யாரும் எதிர்பார்த்து இந்த உதவியை செய்யறதில்லைனுசொல்ல வந்தேன் டா" என்றான் அவசரமாக

அப்போது இடையிட்ட ராதிகா, " அதோடு, அன்றைக்கு நான் அப்படி உங்க எல்லாரையும் அப்படி சொல்லியிருக்க கூடாது. என் அண்ணன் வேற, உன் பொண்ணுக்கு கல்யாணமே நடக்காது. அவ்வளவு தான்!. அப்படி இப்படின்னு பேசும் போது! நான் ரொம்பவும் பயந்துட்டேன். ஏன்னா! எங்க குடும்பத்திலேயும் ஒரு பொண்ணோட நிச்சயதார்த்தம் நின்றிறுக்கு!

அதன் பிறகும் வேறு மாப்பிள்ளை பார்த்தாங்க. ஆனால் எதுவுமே சரியா அமையலை. அதனால அவளுக்கு அடுத்து உள்ள பசங்களுக்கெல்லாம் கல்யாணம் பேசி முடிச்சாங்க. அவ கல்யாணம் கூடி வராமல் அப்படியே தான் இருந்தாள்.

கொஞ்ச நாளிலேயே மத்தவங்க அவளை ஒதுக்க ஆரம்பிச்சாங்க. நல்லதுக்கு கூப்பிட மாட்டாங்க. ஏன்?எங்கம்மா கூட அவ கூட பேச கூடாது பழகக் கூடாதுன்னு சொல்வாங்க. எனக்கு அவளை பிடிச்சதை விட, அவளுக்கு என்னை அவ்வளவு பிடிக்கும்!. ஈஸ்வர் பிறந்த போது நேரில் வந்து பார்த்துட்டு கூட போனாள்.

பிறகு ஒரு நாள் போன் செய்து, 'எப்படியிருக்க? நல்லாயிருக்கியா?. அப்படின்னு விசாரிச்சா?. ரொம்ப நேரம் பேசினோம். கடைசியா ராதி, ஒரு பொண்ணு கடைசி வரை தனியாக இருந்து வாழ முடியாதிறதில்லைனு சொன்னாள். ஏன் டி அப்படி சொல்றேன்னு கேட்டேன். ஏதோ பேசி சமாளிச்சுட்டா. பிறகு, உடம்பை பார்த்துக்கோ குழந்தையை பார்த்துக்கோன்னு எங்களை பற்றி பேசிட்டு, உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு சொல்லி வைச்சிட்டா. எனக்கு அப்போ அவ பேசினதோட அர்த்தம் புரியலை.

ஆனா.. ஆனால்.. ம..மறுநாள் " என்றவருக்கு அழுகையில் தொண்டையடைத்தது. கண்ணிலிருந்து கண்ணீர் கொட்ட! பேச முடியாமல் அவர் திணற, ஈஸ்வர் தான் ! அருகிலிருந்த நீரை பருக கொடுத்து அவர் முதுகை தடவி கொடுத்தான்.

தண்ணீர் குடித்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவர். "மறுநாள் அவர் தற்கொலை செய்து கொண்டாள் என்கிற செய்தி தான் எனக்கு கிடைச்சது " என்றவருக்கு கண்ணீர் நின்றபாடில்லை.

சொல்லும் போதே! விசயத்தை யூகித்திருந்தாலும் கேட்கும் போது ஆண்கள் இருவருக்கும் மனம் பாரமானது.

"ஒரு பெண்ணை எந்த அளவு நோகடித்திருந்தால்! அவ இந்த முடிவுக்கு வந்திருப்பாள்?. எனக்கு பெண் குழந்தை பிறந்த போது, அவ பெயரை தான் வைத்தேன் லாவண்யான்னு. அவ இந்த உலகத்தில் வாழாத வாழ்க்கையை என் பெண் மூலமாக அவ வாழனும்னு நினைச்சேன்.

நிச்சயதார்த்தம் அன்றைக்கு பிரச்சனையாகி நிக்கும் போது, ஒரு நொடி என் தோழி லாவண்யா தான் என் கண் முன்னாடி வந்து போனாள்!" என்றதும்

"அத்தை, இதற்கு மேல நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். உங்க மனநிலை எனக்கு நல்லாவே புரியுது. என்ன டா? நம்ம அத்தை இப்படி பேசிட்டாங்களேன்னு வருத்தம் இருந்துச்சு!. உங்க மனநிலையை யோசிக்கும் போது உங்க மேல எந்த வருத்தமும் இல்லை. நீங்க, இதை நினைச்சு கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க" என்றவன்.

"டைம் ஆச்சு டா. நான் கிளம்பறேன். பார்த்துக்கோ " என்று விட்டு அங்கிருந்து கிளம்பினான். மேலும் அங்கே நின்று, அவர் மனதை சங்கடப்படுத்த விரும்பவில்லை. அதனால உடனே கிளம்பி விட்டான்.

லிப்டில் ஏறி கீழ் தளம் செல்வதற்கு பட்டனை அழுத்த, கதவு மூடுவதற்கு முன், லாவண்யா லிப்டினுள் நுழைந்திருந்தாள். இவளை கண்டு விரைப்பாக நேரே பார்த்து நின்றான். ஆனால் லாவண்யா அவனை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. செல்போனில் சேட்டிங்கில் இருந்தாள்.

அவன் நின்றாலே! அவனையே சுற்றி வரும் கண்கள்!. இப்போது செர்போனில் பதிந்திருப்பது கண்டு, சற்று எரிச்சலாகத்தான் இருந்தது. அதற்குள் கீழ் தளம் வர, டைப் செய்தபபடியே போய் சுவற்றில் முட்டிக் கொள்ள சென்று விட்டாள்.

"ஹேய்!" என்று அவள் சடையை பிடித்து அவளை நிறுத்தியிருந்தான் விஷ்ணு. 'என்ன? ' என்பது போல அவனை பார்க்க!

"சுவற்றில் போய் முட்டிக்கப் போற" என்றான் அதட்டலாக

எதிரிலிருந்த சுவற்றை பார்த்தவள். சுற்றிலும் பார்க்க! தரை தளத்தில் இருப்பது புரிய, உச் கொட்டியவள். மீண்டும் செல்போன் பார்த்தபடியே லிப்டினுள் நுழைந்தவள். மேல் தளத்திற்கு செல்லும் பட்டனை அழுத்தி விட்டு, மீண்டும் செல்போனில் கவனம் பதித்து விட்டாள்.

அவள் காதலை சொல்லும் முன்பே, எப்போது அவனையே சுற்றி வரும் கண்களை கண்டவனுக்கு, தற்போது திருமணம் நிச்சயத்திட்ட விட்ட பிறகு, அவளுடைய பாராமுகம் மனதில் சுணக்கத்தை ஏற்படுத்தியது. தயங்கியபடியே ஹோட்டலை விட்டு, வெளியே வந்தான்.

மறுநாள் காலை, வருணாவின் வீடு களைகட்டியது. பேசி வைத்தது போலவே! 'என்ன தான் திருமணம் நடந்து விட்டாலும் முறைப்படியே பெண்ணை கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்க விரும்புவதாக கேள்வி கேட்டவர்களின் வாயை அடைத்து விட்டனர்.

பதினோறு மணியளவில் மணமகன் வீட்டார் வந்து விட்டனர். என்ன தான் சந்தோஷமாக வந்தாலும்! ராதிகா சற்று தயங்கியபடியே தான் வந்தார். யாரும் எதுவும் கேட்டு விடுவார்களோ? அல்லது முகத்தை திருப்பிக் கொண்டால்! என்ன செய்வது? என்ற மனக்குழப்பத்தில் தான் வந்தார். ஆனால் யாரும் அப்படி நடந்து கொள்ளவில்லை. பல நாட்கள் கழித்து பார்த்ததில் பாசமாகவே அவரை அரவணைத்துக் கொண்டனர். ராமன் கூட தனிப்பட்ட முறையில் விசாரித்து விட்டு சென்றார்.

இதை கவனித்த ஈஸ்வர், அவனை கடந்து சென்ற விஷ்ணுவை பிடித்துக் நிறுத்தி, " என்னடா நேத்து அம்மா சொன்ன விசயத்தை எல்லாரிடமும் சொல்லிட்டியா?" என்றான்.

"ஆமாம் டா. அத்தை பாவம் இல்லையா?. அந்த நேரம் பதட்டத்தில் பேசியிருப்பாங்கன்னு கடந்து வர நினைச்சாலும்! எப்படி பேசலாம்னு மனசு சில நேரம் முரண்டு பிடிக்கும். ஆனால் அத்தை சொன்ன விசயத்தை கேட்ட பிறகு, அவங்க நிலையை நல்லாவே புரிஞ்சிக்க முடிஞ்சுது. என்னை போல எல்லாருக்கும் புரியனுமேன்னு தான் சொன்னேன்" என்றான்.

அவனை தழுவிக் கொண்ட ஈஸ்வர். " தேங்க்ஸ் டா" என்றான் நெகிழ்ந்து.

"சரி வா உள்ளே போகலாம் " என்று அழைத்து சென்றான் விஷ்ணு.
 

Sirajunisha

Moderator
கூடம் நிறைய ஆட்கள் நிரம்பியிருந்தனர். " ஏன் டி அன்னைக்கு வந்த மாதிரி இன்னைக்கும் வந்து அந்த சிவா பிரச்சனை பண்ணுவானா?" என்று ஊர்வம்பு பேசும் பெண்மணி ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

"அட! நீ வேற ஏன் கா. அன்னைக்கு, அந்த மாப்பிள்ளையா வந்த பையன் சிவா பொண்டாட்டியை இழுத்து வைச்சு பேசினதுல! அந்த பிள்ளை சாகுறேன்னு கிணத்துல குதிச்சிடுச்சு"

"அச்சோ! பொறவு?"

"எல்லாரும் சேர்ந்து காப்பாத்திட்டாக. இதை பார்த்த அந்த பொண்ணோட அப்பன் சும்மா விடவானா?. கையில் வேலறுவா ஒன்னு தான் இல்லை. சாமி ஆடிட்டான்ல சாமி. மருமயன்னு பார்க்காமல் நாலு சாத்து வேற விழுந்திருக்கு"

"பொறவு!" என்றாள் மற்றொருத்தி சுவாரசியமாக

"அவங்க அப்படின்னா!. வருணாவோட வூட்டுக்காரர் இருக்காரே!"

"யாரு இந்த பையனா?" என்றாள் ஒருத்தி, சற்று தள்ளி அமர்ந்திருந்த ஈஸ்வரை சுட்டிக்காட்டி

"அவர் தான்!. இங்கே வந்து பிரச்சனை பண்ண அத்தனை பேரையும் பெரியவங்க சின்னவங்கன்னு பாரபட்சம் இல்லாமல்! ஏன்? துணைக்கு வந்த பொம்பளைகளை கூட போலீஸ் ஸ்டேசன்ல பிராது கொடுத்துட்டாராம்!"

"அடி ஆத்தி!" என்றாள் ஒருத்தி நாடியில் கைவைத்தபடி

"ஆமாக்கா. பொடுசு பொண்டுகன்னு ஒருத்தி பாக்கியில்லாமல் போலீஸ் ஸ்டேசன் ஏறி இறங்கியிருக்காக."

"அதான் அந்த சின்னாத்தா வயித்தால ஓடிப் போய் கெடக்கிறாளா!' என்றாள் ஒருத்தி

"சும்மாவா? இவங்களை விசாரிக்க கூப்பிட்டிருந்த நேரம். யாரையோ தலைகீழா தொங்க விட்டு அடிச்சிட்டு இருந்தாங்களாம்!. அதோட திருட்டு கேசுல எவனோ மாட்டியிருக்கான். அவனை போற வர போலீஸ் அத்தனை பேரும் கேள்வி கூட கேட்காமல், அடிச்சிட்டு போயிருக்காங்க. இதை பார்த்த! ஆம்பளைகளே அலண்டு போய் இருக்காங்க. இதில் பொம்பளை எம்மாத்திரம்" என்று பெண்கள் தங்களுக்கு தெரிந்த விவரங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அப்போது பெரியவர்கள் சபையில் அமர, மணப்பெண்ணை அழைத்து வர சொல்லி, அவளிடம் பட்டுப்புடவை தாம்பூலத்தில் வைத்து கொடுத்தனர். சபையில் விழுந்து வணங்கி எழுந்தவள். தட்டை வாங்கி நிமிரும் போது, பாராதது போன்று எதிரே அமர்ந்திருந்த ஈஸ்வரை பார்த்து விட்டு சென்றாள்.

ஈஸ்வர் அப்போது தான் வெகு சிரத்தையாக, அருகே அமர்ந்திருந்த பெரியவரின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தான். அடுத்த நிச்சயதார்த்த ஒலை வாசிக்கப்பட்டது. பெரியவர்கள் தட்டு மாற்றிக் கொள்ள! கொண்டு வந்த புடவையை அணிய வைத்து மீண்டும் வருணாவை சபையில் அமர வைத்தினர்.

தங்க ஜரிகையிட்ட வாடாமல்லி நிறப்புடவை, அவளுக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. பெரியவர்கள் கன்னத்தில் சந்தனம் தடவி, அட்சதை தூவி ஆசிர்வதித்து சென்றனர். இதை சற்று தள்ளி நின்று லாவி, அனைத்தையும் முகம் மலர பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதில் இரண்டு மூன்று முறை விஷ்ணு அவளை கடந்து சென்று விட்டான். ஒரு முறை அவள் நின்றிருந்த அறையின் உள்ளே சென்று வந்தான். ஆனால் லாவியோ, அவனை கண்டதாக கூட காட்டிக் கொள்ளவில்லை. இதனால் விஷ்ணு தான் தவிப்புக்கு ஆளானான்.

'என்ன நம்மை கவனிக்கவே மாட்டேங்கிறா?' என்று மனம் புலம்பியது. அடிக்கடி அவளை கவனிப்பதால்! இதுவரை கவனத்தில் வராத அவளது அழகு அவனது கவனத்தை கவர்ந்தது. பொண்ணை பார்த்தால்! மண்ணை பார்க்கும்! குணத்தை கொண்டவன்.

இப்போது தனக்கு உரிமையாகப் போகிறவள் என்று கவனிக்க ஆரம்பிக்க, இதுவரை கவனத்தில் வராத அவளது அழகில் இலயித்து போய் நின்றான்.

அடர்ரோஜா நிற புடவை, தங்கநிற நூலிழையால் நிரம்பியிருக்க, அது அவளது நிறத்துக்கு போட்டி போடுவதாக இருந்தது. மையிட்ட விழிகளை பார்த்தவன். மயக்கவே கண்ணுல மை வைச்சிருப்பா போலிருக்கு என முணுமுணுத்துக் கொண்டான். கழுத்தில் சிறிய இலை போன்ற கல் பதிந்த நெக்லஸ் பொருத்தமாக இருந்தது. நீண்டு தொங்கிய மாலை அவளது நெஞ்சில் பொருந்தியிருக்க!. எதை நினைத்தோ, பெருமூச்சு விட்டுக் கொண்டவனை,

"விஷ்ணு, எல்லாரையும் பந்தியில் உட்கார வைப்பா" என்ற கோபாலின் குரலில் நடப்புக்கு வந்தவன். " இதோ பா " என அங்கிருந்து நகர்ந்தான்.

அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை அப்போது தான் வெளியே விட்டாள் லாவண்யா. பெண்களுக்கே உரிய நுண்ணுர்வு, விஷ்ணு அவளை பார்க்க ஆரம்பிக்கும் போதே! அலட்ர்ட் செய்து விட்டது. கடைசியாக, அவன் பார்வை பதிந்ந இடத்தை உணர்வால் உணர, சற்று திணறி விட்டாள். மனம் படபடக்க தொடங்கி விட்டது. எதுவும் தெரியாதது போன்று! நிற்பது கொடுமையிலும் கொடுமை. நகர்ந்த பிறகே, ஆசுவாச மூச்சு விட்டவள்.பச்சைப்புள்ள மாதிரி முகத்தை வைச்சிக்கிட்டு, பார்க்கிற பார்வையை பாரு! ' என நொடித்தவள். நன்றாக இருந்த மாராப்பை இழுத்து விட்டுக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள்.

நேரம் செல்ல, அனைவரும் சாப்பிட்டு முடித்து வீட்டு ஆட்கள் சாப்பிட அமர்ந்தனர். மூன்று குடும்பங்களும் அமர்ந்திருக்க, பக்கத்து வீட்டினர் பந்தி பரிமாறினர். ஒவ்வொருவராக சாப்பிட்டு முடிக்க, கடைசியாக வருணாவும் ஈஸ்வரும் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

சுற்றிலும் கவனித்தவள். தாங்கள் இருவர் மட்டும் அமர்ந்திருப்பது சங்கோஜமாக இருக்க, அவசரமாக அள்ளி வாயில் திணித்துக் கொண்டு எழுந்து கைகழுவ சென்று விட்டாள்.

சற்று தள்ளி மறைவாக கை கழுவும் இடம் இருக்க, குழாயை திறந்து நீரில் கை கழுவியவள். சிரத்தையாக மூடி விட்டு வர, சற்றும் எதிர்பாராமல் வேகமாக வந்த ஈஸ்வரோட நேருக்கு நேர் மோதி விட்டாள்.

இதில் வருணா அதிர்ந்தாள் என்றால்! ஈஸ்வரோ, " அமௌமா " நெஞ்சை பிடித்துக் கொண்டவன். " ஷ்ஷ்ஷ்... ஆஆ!' என்று மேலும் நீவி வேறு விட்டுக் கொள்ள, வருணா தான் பேந்த பேந்த விழித்து நின்றாள்.

சத்தம் கேட்டு வந்த விஷ்ணு, " என்னாச்சு டா?" என்றான் நெஞ்சை தேய்த்து விட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரிடம்.

"சுவத்தில மோதிக்கிட்டேன் டா. எம்மா வலி தாங்க முடியலையே!' என்று ஓரக்கண்ணால் வருணாவை பார்த்து விட்டு முனக,

"பார்த்து வரக் கூடாதா டா" என்றவன். அங்கேயே நின்றிருந்த வருணாவிடம், "நீ ஏன் அப்படியே நிற்கிற?. போய் ஐஸ்கட்டி எடுத்திட்டு வா. ஒத்தடம் கொடுப்போம்" என்றதும்!

"கொதிக்க கொதிக்க வெந்நீர் எடுத்துட்டு வரேன். ஒத்தடம் கொடுங்க. குளு குளுன்னு இருக்கும்" என்றபடி இருவரையும் முறைத்து விட்டு சென்றாள்.

"கொழுப்பு ரொம்ப கூடிப்போச்சு!' என்று விஷ்ணு கண்டிக்க,

"வெவ்வவ்வே!' என்று அவனுக்கு பழிப்பு காட்டி சென்று விட்டாள். சற்று நேரம் கழித்து இருவரும் உள்ளே வர, வருணாவோ ஈஸ்வரை தான் முறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் உன் பக்கம் திரும்பினேனா பார்! என்பது போல அவள் பக்கம் திரும்பவே இல்லை. ஆனால் அவள் பார்வையின் வீச்சை அவன் நன்கு அறிந்திருந்தான்.

அண்ணணுக்கும் தங்கைக்கும் ஏக குஷி. இதுவரை தங்களை சுற்றலில் விட்டவர்கள் தற்போது தங்களையே பார்வையால் சுற்றி வருவதை கண்டு!. இதுவே தொடர்ந்தால்! தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம் ..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 20
ஈஸ்வரை திட்டியபடியே அறைக்குள் வர,

"என்ன வருணா? ஏதோ முணுமுணுத்துட்டே வர?" என்றாள் லாவி கட்டிலில் அமர்ந்திருந்தபடி

வேகமாக அவள் முன் போய் நின்றவள். " என்னைய பார்த்தால் உங்க அண்ணணுக்கு எப்படி தெரியுதாம்?" என்றாள் ஆதங்கமாக

"தெரியலையே?" என்றாள் புரியாமல்

இடுப்பில் கைவைத்து முறைத்து நின்றவள். " என்ன லொள்ளா?" என்றாள் ஏக கடுப்பில்

"நெஜமாலுமே தெரியலை டி" என்றவள். வருணாவை முறைப்பை கண்டு, " என்ன விசயம்னு தெளிவா சொல்லு டி " என்று சமாளிக்க முயன்றாள்.

"உங்க அண்ணன் வர்றது தெரியாமல், அவங்க மேல போய் மோதிட்டேன். அதுக்கு நெஞ்ச பிடிச்சிட்டு அலர்றாங்க!. எங்க அண்ணன் பதறி போய் என்னென்னு கேட்டால்! சுவத்தில் முட்டிக்கிட்டேன்னு சொல்றாங்க!. என்னை பார்த்தால் எப்படி தெரியுதாம்? ஹாங்?" என்றாள் கோவமாக

"எங்கே? அந்த கை கழுவுற இடத்துக்கிட்டேயா?"

"ஆமாம்!" என்றாள் உர்ரென்று

"அது திரும்புற இடமா இருக்கிறதால! அண்ணனுக்கூ தெரியலை போல! நீ கோவிச்சுக்காத! " என வருணாவை தாடையை பிடித்து சமாதானப்படுத்த,

லாவியின் கையை தள்ளி விட்டவள். "எது தெரியாது?. உங்க அண்ணனுக்கு பொண்ணுக்கும் கல்லுக்கும் கூட வித்தியாசம் தெரியாதா?" என எகிறினாள்.

"அதானே! அது எப்படி தெரியாமல் போகும்?. ரொம்ப ஓவராத்தான் பேசியிருக்கு?. அதுவும் உன்னை பார்த்து! இரக்கமே இல்லாமல் பேசியிருக்கு! இதை இப்படியே சும்மா விடக் கூடாது. வா மாமாவிடம் சொல்லலாம்" என்றாள் ஒரக்கண்ணால் பார்த்தபடி

"ம்ச்ச்" என்று உச் கொட்டியவள். "அதெல்லாம் வேணாம்" என்றாள் உள்ளே போன குரலில்

"ஏன்?ஏன்? ஏன்? ஏன் வேணாம்?. அதெல்லாம் சொல்லனும். இப்பவே மிரட்டி வைச்சா தான். பிறகு இது போலெல்லாம் பேச மாட்டாங்க. நீ வா. உங்கப்பாவிட போய் விசயத்தை சொல்லுவோம். அவர் நல்ல தீர்ப்பா ஒன்னு சொல்லட்டும்!" என்று லாவி எகிற

"ஹேய்! அதெல்லாம் வேண்டாம். நான் திட்டி விட்டுத்தான் வந்தேன். இதை இப்படியே விடு!" என்றாள் வருணா அவசரமாக

"உன்னை கல்லுன்னு சொன்னவர விட சொல்றியா?"

"நானே பெருசா எடுத்துக்கலை. விடு டி " என்றாள் கூலாக

"இவ்வளவு நேரம் ஆவேசமா பேசினாயே டி?"

"அப்போ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். இப்போ சரியாகிட்டேன் "

"ம்ஹூம். அதெல்லாம் ஒத்துக்க முடியாது. திரும்பவும் நீ உணர்ச்சி வசப்பட்டால்?"

"அதெல்லாம் பட மாட்டேன். நீ பேசாமல் இரு. நான் போய் அம்மாவை பார்த்துட்டு வரேன்!" என்று அங்கிருந்து வெளியேறியவள். "எப்பா! அண்ணன் ஒரு வார்த்தையில் கோவத்தை வர வைக்கிறார்னா!. தங்கச்சி பேசிப் பேசியே இரத்த கொதிப்பு வர வைக்கிறாள்!" என புலம்பியபடி அடுக்களைக்கு சென்றாள் வருணா.

வருணா சென்றதை ஊர்ஜிதம் செய்தவள். " ஹா! யாருக்கிட்ட?
எங்க அண்ணணை பத்தி எங்கிட்டேயே எகிறுவாளா?. இனி ஏதாவது பேசுவ!" என்று கிண்டலடித்தபடியே ஹாயாக கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

காற்றோட்டமாக வாசலில் நின்றபடி, விஷ்ணுவும் ஈஸ்வரும் பேசிக் கொண்டிருந்தனர்.

"நாம நினைச்சே பார்க்கலை இல்லை ஈஸ்வர்!"

"என்னது?"

"ப்ரண்ட்டா இருந்த நாம , இப்படி மச்சினன் ஆவோம்னு!" என்றான்

"ம்ம்? " என்று புருவத்தை சுருக்கி யோசனையாக பார்த்தவன். " உனக்கு இதில் விருப்பமில்லையா?" என்றான். நண்பனின் மனம் அறிய

"அப்படியெல்லாம் எதுவும் இல்லை" என்று அவசரமாக மறுத்தவன். "நான் தான் அன்றைக்கே சொன்னேனே பெரியவங்க முடிவு பண்றது தான்னு" என்று அதற்கு விளக்கமும் கொடுத்தான்.

"அதுதான் முடிவு பண்ணிட்டாங்களே டா. இப்போ உனக்கு விருப்பம் தானே?" என்றான் ஈஸ்வர் விடாமல்

"நிச்சயமா!" என்றான் தலையை அழுத்த கோதி, மெல்ல சிரித்தபடி

"அதெப்படி டா. இத்தனை நாள் வராத விருப்பம். பெரியவங்க நிச்சயம் பண்ன உடனே வந்திடுது?" என்றான் ஈஸ்வர் கிண்டலாக

"ஏனென்றால்! இதுவரை நமக்கானவங்க அப்படிங்கிற கண்ணோட்டத்தில் பார்த்திருக்க மாட்டோம். இப்போ பார்க்கும் போது அப்படியில்லை ல" என்றான் விஷ்ணு விளக்கமாக

"அப்போ! பெரியவங்க வேணாம்னு சொன்னால்! நமக்கானவங்க இல்லைனு ஆகிடும். பிறகு, வேறொருத்தர் வரும் போது நமக்கானவங்க ஆகிடுவாங்க. அப்போ அவங்களை பிடிக்கும். அப்படித்தானே?" என்றான் வார்த்தையில் அழுத்தம் கொடுத்து

விஷ்ணு புரியாமல் பார்க்க!

"உனக்கு புரியலை ல. இப்போ டெமோ காட்டுறேன் பார்" என்றதும்

"எப்படி?" என்றான் விஷ்ணு அப்போதும் புரியாமல்

"நான் அப்பாட்ட போய், விஷ்ணுவுக்கு பெரிசா லாவண்யா மேல விருப்பம் இல்லை. பெரியவங்க வேற யாரையும் கல்பாணம் பண்ண சொன்னாலும் பண்ணிப்பான். அதனால, நாம வேற இடம் பார்த்துக்கலாம்னு சொல்றேன்!" என்றான் தீவிரமாக

"டேய்! அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாத டா" என்றான் விஷ்ணு பதட்டமாக

"பெரியவங்க, என்னடா சரின்னு சொல்லிட்டு இப்போ வேணாம்னு சொல்றான்னு நினைப்பாங்கன்னு தானே நினைக்கிற! அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். உன் மேல் யாரும் வருத்தப்படாத மாதிரி விசயத்தை சொல்லிறேன்" என்றான் கூலாக

"டேய்! " என்றபடி, ஈஸ்வரின் கையை பிடித்து நிறுத்தியவன். ஏதேர்ச்சையாக நிமிர, அங்கே லாவண்யா கைகளை கட்டிக் கொண்டு, இருவரையும் தான் பார்த்தபடி நின்றிருந்தாள். முகம் நிர்மலமாக இருந்தது. அதுவே விஷ்ணுவுக்கு கலக்கத்தை கொடுக்க,

"நான் எதுவும் சொல்லலை!" என்று மறுப்பாக தலையசைத்தான் லாவண்யாவிடம்,

இருவர் முன்பும் வந்தவள். "அண்ணா, அப்பா கூப்பிடுறாங்க கிளம்பனுமாம். எதுவாக இருந்தாலும் சென்னைக்கு போன பிறகு, அப்பாவிடம் பேசு " என்று விட்டு அவள் நகர, ஈஸ்வர் தனது அப்பாவை பார்க்க சென்று விட்டான். இங்கே, விஷ்ணு தான் பரிதவித்து போய் நின்றிருந்தான். எங்கே! ஏதாவது பேசி திருமணத்தை நிறுத்தி விடுவானோ! என்று நெஞ்சம் பதறியது.

அனைவரும் கிளம்ப ராஜூ, ராதிகா, லாவண்யா மூவரும் வருணாவிடம் சொல்லி விட்டு வாசலில் நின்றிருந்த காரில் ஏற தயாராக நின்றிருந்தனர். இரு குடும்ப பெரியவர்களும் வழியனுப்ப அங்கேயே நின்றிருக்க! ஈஸ்வர் போன் பேசிவிட்டு வந்தவன். " கிளம்பலாம் பா " என்றான் போனை பாக்கெட்டில் வைத்தபடி

"நீ, வருணாவிடம் கிளம்பறோம்னு சொல்லிட்டு வந்தியா?" என்றார் ராஜூ

"இல்லை பா. அதான் நீங்களெல்லாம் சொல்லிட்டீங்களே!"

"அப்படி சொல்லக் கூடாதுப்பா. போய் சொல்லிட்டு வா. நாங்க வெயிட் பண்றோம் " என்று விட்டு, ராமனிடமும் கோபாலிடமும் விட்ட பேச்சை தொடர்ந்தார்.
 

Sirajunisha

Moderator
ஜன்னல் பக்கம் நின்று இவர்கள் கிளம்புவதை பார்த்தபடி நின்றிருந்தவள்.ராஜூ, ஈஸ்வரிடம் சொல்லி விட்டு வருமாறு கூறியதை கேட்டு, முகம் புன்னகையில் விகசிக்க, அவசரமாக கண்ணாடியில் ஒரு முறை தன்னை சரிபார்த்துக் கொண்டு, எதுவும் தெரியாதது போன்று அமர்ந்திருந்தாள்.

ஈஸ்வர், அறைக்கதவை நாசுக்காக தட்டி விட்டு உள்ளே வந்தவன். கண்களால் அவளை ரசித்தாலும், குரலில் எதுவும் காட்டாமல்!

"நாங்க கிளம்பறோம் " என்றான் தகவலாக

"ம்ம் " என்று தலையை மட்டும் உருட்டினாள் வருணா.

"உன் போன் வந்திடுச்சா?" என்றான் அடுத்து

"ம்ம். அண்ணன் வாங்கிட்டு வந்து கொடுத்திடுச்சு " என்றாள் தலை நிமிராமல்

"சரி. எதாவது வேணும்னா லாவி உனக்கு கால் பண்ணுவா. அதுக்கு தான் கேட்டேன்" என்றவன். " உன்னுடைய ஆதார் கார்ட், .ரேஷன் கார்ட், உன்னுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வேணும். எடுத்துக் கொடு " என்றான்.

"ஆதார் கார்ட், ரேஷன் கார்ட் எல்லாம் அப்பாவிடம் இருக்கு. போட்டோ என்னிடம் இல்லையே" என்றவள். "எதற்காக வேணும்?" என்றாள்.

"கல்யாணம் முடிஞ்சு அதை ரிஜிஸ்டர் பண்ண, இதெல்லாம் கொடுக்கனும். மத்ததெல்லாம் மமாமாவிடம் வாங்கிக்கிறேன். போட்டோ உன்னிடம் இல்லையா?

"இல்லையே!"

"சரி. அப்படி நேரா நில்லு! ஒரு போட்டோ எடுத்துக்கிறேன். அதை டெவலப் பண்ணி கொடுத்திடலாம்!" என்றவன். அவள் யோசிக்கும் முன், "சீக்கிரம் நில்லு டைம் ஆச்சு. எல்லாரும் வெயிட் பண்றாங்க " என்று அவசரப்படுத்தினான்.

"ம்ம். சரி " என்றவள். அட்டென்ஷன் பொசிசனில் நிற்க,

"இங்கே என்ன தேசிய கீதமா பாடுறாங்க. வெரப்பா நிற்கிற. நார்மலா நில்லு" என்றான் அதட்டலாக

அவனை முறைத்தபடி.நிற்க, "கொஞ்சம் சிரியேன். பார்க்கிறவங்க கட்டாய கல்யாணம் நினைக்க போறாங்க!" என்றான் அதற்கும்!

"நான் நல்லாத்தானே நிற்கிறேன்" என்றாள் சிணுங்களாக

அவள் அருகே வந்தவன். " கொஞ்சம் நிமிரு. இப்படி! " என்று அவள் நாடியை சற்றே நிமிர்த்தியவன். அவள் முதுகில் கிடந்த பூக்களை முன்னே போட்டு விட, அவனது அருகாமையில் வருணா தான் படபடத்து நின்றாள்.

அவளது அவஸ்தையை மேலும் அதிகரிப்பது போல! " இந்த புடவை கலர் உனக்கு ஒ.கே வா. பிடிச்சிருக்கா"

"ம்ம் " என்றாள் தலையை குனிந்தபடி

மீண்டும் முகத்தை நிமிர்த்தியவன். "போட்டோ எடுக்க போறேன். நேரா என்னை பார்" என்றவன்.

"கல்யாணத்துக்கான புடவையை லாவண்யா நிச்சயம் முடிந்த பிறகு, இரண்டு பேருக்கும் சேர்ந்து எடுத்துக்கலாம்னு அம்மா சொல்லிட்டாங்க. பால் காய்ச்ச அதற்கும் அப்பவே எடுத்துப்பாங்க. ரிசப்ஷனுக்கு தனியா ரெடி பண்ண சொல்லியாச்சு " என்று விசயத்தை சொல்லியபடியே இருந்தவன்.

"நம்ம பர்ஸ்ட் நைட்டுக்கு மட்டும் நானே செலக்ட் பண்ணிட்டேன்!" என்றவுடன், அவளது முகம் குப்பென்று சிவந்து விட,

அதை மிக அழகாக அவனது அலைபேசியில் படப்பிடித்துக் கொண்டான். "அழகி டி " என்று முணுமுணுத்துக் கொண்டவன்.

"பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தானே!" என்று பொய்யாக அலுத்துக் கொண்டவன். " நான் வரேன். எதாவது என்னிடம் கேட்கனும்னா லாவண்யாவுக்கு போன் பண்ணு. அவ என்னிடம் கேட்டு சொல்லுவாள்" என்று போனை பார்த்தபடியே அறையை விட்டு வெளியில் வந்தவனின் உதடுகள் புன்னகையை துடித்தது.

"ஏன்? இவருக்கு போன் பண்ணா ஆகாதாமா!" என்று நொடிப்பது அவன் காதில் விழ, பெரும்பாடுபட்டு சிரிப்பை அடக்கியவன்.

அவள் புறம் திரும்பி, "எதாவது சொன்னியா?" என்றான் ஒன்றும் தெரியாதது போல!

அவள் அவசரமாக மறுப்பாக தலையசைக்க,

"சரி வரேன்" என்று விட்டு இதழ் விரிந்த புன்னகையுடன் வந்தவன். பெரியவர்களை கண்டதும், சாதாரணமாக முகத்தை வைத்தபபடி,

"சொல்லிட்டேன் பா. கிளம்பலாம்" என்றவன். மற்றவர்களிடமும் முறையாக விடைபெற்று கிளம்பி விட்டான்.

கார் புறப்பட, இங்கே விஷ்ணு தான் திக் திக் மனநிவையோடு இருந்தான். எதற்காக இப்படி பதட்டப்படுகிறோம் என்று தோன்றினாலும்! தனது திருமணம் நின்றால்! எங்கே வருணாவின் திருமணத்திலும் பிரச்சனை வர வாய்ப்புள்ளதாக! தனக்கு தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

அவர்கள் சென்னை செல்லும் நேரத்தை கணக்கிட்டு, அதன் பிறகு இரண்டு மணி நேரங்கள் கழித்து ஈஸ்வருக்கு அழைப்பு விடுத்தான். அழைப்பை இணைத்தவன்.

"சொல்லு டா" என்றான் சாவகாசமாக

"ஈஸ்வர், மாமாவிடம் ஏதும் பேசலையே?" என்றான் பதட்டமாக

"இன்னும் இல்லை டா. பேசிட்டு சொல்றேன்" என்றவன். "ஸ்டாக் வந்திருக்கு, செக் பண்ண போறேன். பிறகு பேசறேன் டா " என்று அழைப்பை துண்டித்து விட்டான்.

பிஸியாக இருப்பவனிடம் எப்படி பேசுவது?. இப்போது பேசவே பயமாக வேறு இருந்தது. ஏதாவது ராஜூவிடம் சொல்லி விடுவானோ? என்று

இந்த அலைக்கழிப்பில் தூக்கம் எட்டாக்கனியாக, பொறுமையிழந்தவன் லாவண்யாவுக்கு அழைப்பு விடுத்து விட்டான்.

செல்போனில் விஷ்ணுவின் புகைப்படத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள். அவனிடமிருந்தே அழைப்பு என்றதும்! அதை முறைத்துப் பார்த்தாள்.

வெகு நேர ரிங்கிக்கு பின்பே அழைப்பை இணைத்தவள். " ஹலோ " என்றாள் சாவகாசமாக

"உங்க அண்ண என்ன வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிட்டு இருக்கான்?" என்று எடுத்தவுடனேயே எகிறினான்.

"முதலில் நீங்க யாரு?. அன்டைம்ல போன் பேசறதும் இல்லாமல்! மரியாதை இல்லாமல் வேறு பேசறீங்க? " என்றாள் அவளும் விடாமல்

"நான் விஷ்ணு பேசறேன்" என்றவன். "நான் பேசவுடனே உனக்கு தெரிந்திருக்கும். அப்படி இல்லைனா கூட, என் நம்பரை வைத்தே என்னை கண்டு பிடிச்சிருப்பே!. இல்லைன்னு மட்டும் சொல்லாத!" என்றான் விஷ்ணுவும்.

"ஓ! உங்க கூட ரொம்ப பேசி எனக்கு பழக்கம் இல்லை. அதாவது போனில்!. அதனால டக்குன்னு புரியலை. இன்னொன்னு உங்க போன் நம்பரை எப்பவோ டெலிட் பண்ணிட்டேன். அதனால எனக்கு தெரியலை. போதுமா விளக்கம். இப்போ சொல்லுங்க!. என்ன விசயமா கால் பண்ணீங்க? " என்றாள் சாவகாசமாக

"உங்க அண்ண, நம்ப கல்யாணத்தை நிறுத்தறதை பத்தி உங்க அப்பாவிடம் பேசப் போறேன் சொல்றான். அதெல்லாம் வேணாம்னு சொல்லு!" என்றான் அதட்டலாக

"அண்ணணா சொல்லுச்சு. அவர் அப்படி சொன்னால் நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். அதில் நான் தலையிட மாட்டேன்!" என்றாள் கூலாக

மறுமுனையில் பேச்சே இல்லை. அதிர்ச்சியில் இருந்தான். "சரி வைச்சிடுறேன்" என்ற குரலில் சுயத்துக்கு வந்தவன்.

"லூசா டி நீ?. இதனால் வரும் பின் விளைவுகள் பத்தி யோசிச்சியா?" என்று ஏகத்துக்கும் எகிறினான்.
 

Sirajunisha

Moderator
"என்ன பின் விளைவு?. வருணா கல்யாணத்தை பத்தி சொல்றீங்களா?. அதெல்லாம் கண்டிப்பா நடக்கும். எப்படி பேசி சமாளிக்கனும்னு தெரியும். அதனால நீங்க கவலைப்படாதீங்க" என்றாள் கூலாக

"உங்க அம்மாவை பத்தி யோசிச்சியா?.திரும்பவும் நிச்சயதார்த்தம் நின்னால்! அவங்க வருத்தப்பட மாட்டாங்களா?" என்றான்.

" நிச்சயதார்த்தம் நின்னால்! ஒரு பொண்ணோட லைப்பே போயிடுச்சா என்ன?. அதற்கெல்லாம் வருத்தப்படற ஆள் நானில்லை. அப்படி நின்னால்! எனக்கானவர் இல்லைனு தான் யோசிப்பேன். எங்க அம்மாவை அப்படித்தான் யோசிக்க வைப்பேன். அதனால அதை பத்தி கவலைப்படாதீங்க " என்றாள் சாதரணமாக

"அ.. அப்போ நீ என்னை காதலிக்கிறேன்னு சொன்னது?" என்றான் உள்ளே போன குரலில்

"காதலிச்சவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறாங்களா என்ன?. அதோட, என்னை மத்தவங்க வருத்தத்தை நினைச்சு, கல்யாணம் பண்ற நீங்க வேணவே வேணாம்!" என்றாள் அழுத்தமாக

"மத்தவங்களுக்காக கல்யாணம் பண்றேனா?"

"ஆமாம். ஏதோ எங்க அம்மாவை காரணம் சொன்னீங்களே?"

"அவங்க வருத்தப்படுவாங்கன்னு சொன்னேன். ஆனால் அதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்கலை" என்றான் தன்னிலை விளக்கமாக

"இதை நான் நம்பனுமா?"

"அந்த நிச்சயத்தை நிறுத்தினே நான் தான். அதில் சம அளவு என் பங்கும் இருக்கு!. அப்போ வருத்தப்படாத நான் இப்போ மட்டும் வருத்தப்பட போறேனா?. அதுக்காக எல்லாம் நான் சம்மதம் சொல்லலை" என்று தன்னை விளக்க முயன்றான்.

"நீங்க பெரியவங்க சொன்னதுக்காக சம்மதிச்சீங்க. அதே தான் நானும்!. எங்க அண்ணன் எது சொன்னாலும்! நானும் சம்மதிப்பேன்" என்றவள். "எனக்கு தூக்கம் வருது. போனை வைக்கிறேன்" என்று துண்டிக்க முயல,

"ஹேய்! கட் பண்ணிடாத!" என்றான் அவசரமாக

"என்ன சொல்லுங்க?" என்றாள் அலுத்துக் கொண்டு,

"உங்க அண்ணன் நம்ம கல்யாணத்தை நிறுத்தறேன்னு ஏதாவது பண்ணாண். உன்னை தூக்கிட்டு போய் எப்படி கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியும்!" என்றவன். " இவ்வளவு நேரம் முழிச்சு உடம்ப கெடுத்துக்காத!. இப்போ தூங்கு!" என்று அழைப்பை துண்டித்தான்.

"ரொம்பத்தான்!" என்றவளின் உதடுகள் சிரிப்பில் விகசித்தது.

மவனே! என்னையா வேணாம்னு சொல்ற? கடைசி நிமிசம் வரை உன்னை கதற விடுறோமா இல்லையான்னு பாரு!" என்றபடி நிம்மதியாக உறங்க சென்றாள்.

சொன்னது போலவே! அண்ணன் தங்கைகள் ஆட்டத்தை நடத்துகின்றனர். விழி பிதுங்கி நிற்கும் மற்றொரு அண்ணன் தங்கைகள் நிலை என்னவாகுமோ? பொறுத்திருந்து பார்ப்போம்..
 
Status
Not open for further replies.
Top