கூடம் நிறைய ஆட்கள் நிரம்பியிருந்தனர். " ஏன் டி அன்னைக்கு வந்த மாதிரி இன்னைக்கும் வந்து அந்த சிவா பிரச்சனை பண்ணுவானா?" என்று ஊர்வம்பு பேசும் பெண்மணி ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
"அட! நீ வேற ஏன் கா. அன்னைக்கு, அந்த மாப்பிள்ளையா வந்த பையன் சிவா பொண்டாட்டியை இழுத்து வைச்சு பேசினதுல! அந்த பிள்ளை சாகுறேன்னு கிணத்துல குதிச்சிடுச்சு"
"அச்சோ! பொறவு?"
"எல்லாரும் சேர்ந்து காப்பாத்திட்டாக. இதை பார்த்த அந்த பொண்ணோட அப்பன் சும்மா விடவானா?. கையில் வேலறுவா ஒன்னு தான் இல்லை. சாமி ஆடிட்டான்ல சாமி. மருமயன்னு பார்க்காமல் நாலு சாத்து வேற விழுந்திருக்கு"
"பொறவு!" என்றாள் மற்றொருத்தி சுவாரசியமாக
"அவங்க அப்படின்னா!. வருணாவோட வூட்டுக்காரர் இருக்காரே!"
"யாரு இந்த பையனா?" என்றாள் ஒருத்தி, சற்று தள்ளி அமர்ந்திருந்த ஈஸ்வரை சுட்டிக்காட்டி
"அவர் தான்!. இங்கே வந்து பிரச்சனை பண்ண அத்தனை பேரையும் பெரியவங்க சின்னவங்கன்னு பாரபட்சம் இல்லாமல்! ஏன்? துணைக்கு வந்த பொம்பளைகளை கூட போலீஸ் ஸ்டேசன்ல பிராது கொடுத்துட்டாராம்!"
"அடி ஆத்தி!" என்றாள் ஒருத்தி நாடியில் கைவைத்தபடி
"ஆமாக்கா. பொடுசு பொண்டுகன்னு ஒருத்தி பாக்கியில்லாமல் போலீஸ் ஸ்டேசன் ஏறி இறங்கியிருக்காக."
"அதான் அந்த சின்னாத்தா வயித்தால ஓடிப் போய் கெடக்கிறாளா!' என்றாள் ஒருத்தி
"சும்மாவா? இவங்களை விசாரிக்க கூப்பிட்டிருந்த நேரம். யாரையோ தலைகீழா தொங்க விட்டு அடிச்சிட்டு இருந்தாங்களாம்!. அதோட திருட்டு கேசுல எவனோ மாட்டியிருக்கான். அவனை போற வர போலீஸ் அத்தனை பேரும் கேள்வி கூட கேட்காமல், அடிச்சிட்டு போயிருக்காங்க. இதை பார்த்த! ஆம்பளைகளே அலண்டு போய் இருக்காங்க. இதில் பொம்பளை எம்மாத்திரம்" என்று பெண்கள் தங்களுக்கு தெரிந்த விவரங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அப்போது பெரியவர்கள் சபையில் அமர, மணப்பெண்ணை அழைத்து வர சொல்லி, அவளிடம் பட்டுப்புடவை தாம்பூலத்தில் வைத்து கொடுத்தனர். சபையில் விழுந்து வணங்கி எழுந்தவள். தட்டை வாங்கி நிமிரும் போது, பாராதது போன்று எதிரே அமர்ந்திருந்த ஈஸ்வரை பார்த்து விட்டு சென்றாள்.
ஈஸ்வர் அப்போது தான் வெகு சிரத்தையாக, அருகே அமர்ந்திருந்த பெரியவரின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தான். அடுத்த நிச்சயதார்த்த ஒலை வாசிக்கப்பட்டது. பெரியவர்கள் தட்டு மாற்றிக் கொள்ள! கொண்டு வந்த புடவையை அணிய வைத்து மீண்டும் வருணாவை சபையில் அமர வைத்தினர்.
தங்க ஜரிகையிட்ட வாடாமல்லி நிறப்புடவை, அவளுக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. பெரியவர்கள் கன்னத்தில் சந்தனம் தடவி, அட்சதை தூவி ஆசிர்வதித்து சென்றனர். இதை சற்று தள்ளி நின்று லாவி, அனைத்தையும் முகம் மலர பார்த்துக் கொண்டிருந்தாள்.
இதில் இரண்டு மூன்று முறை விஷ்ணு அவளை கடந்து சென்று விட்டான். ஒரு முறை அவள் நின்றிருந்த அறையின் உள்ளே சென்று வந்தான். ஆனால் லாவியோ, அவனை கண்டதாக கூட காட்டிக் கொள்ளவில்லை. இதனால் விஷ்ணு தான் தவிப்புக்கு ஆளானான்.
'என்ன நம்மை கவனிக்கவே மாட்டேங்கிறா?' என்று மனம் புலம்பியது. அடிக்கடி அவளை கவனிப்பதால்! இதுவரை கவனத்தில் வராத அவளது அழகு அவனது கவனத்தை கவர்ந்தது. பொண்ணை பார்த்தால்! மண்ணை பார்க்கும்! குணத்தை கொண்டவன்.
இப்போது தனக்கு உரிமையாகப் போகிறவள் என்று கவனிக்க ஆரம்பிக்க, இதுவரை கவனத்தில் வராத அவளது அழகில் இலயித்து போய் நின்றான்.
அடர்ரோஜா நிற புடவை, தங்கநிற நூலிழையால் நிரம்பியிருக்க, அது அவளது நிறத்துக்கு போட்டி போடுவதாக இருந்தது. மையிட்ட விழிகளை பார்த்தவன். மயக்கவே கண்ணுல மை வைச்சிருப்பா போலிருக்கு என முணுமுணுத்துக் கொண்டான். கழுத்தில் சிறிய இலை போன்ற கல் பதிந்த நெக்லஸ் பொருத்தமாக இருந்தது. நீண்டு தொங்கிய மாலை அவளது நெஞ்சில் பொருந்தியிருக்க!. எதை நினைத்தோ, பெருமூச்சு விட்டுக் கொண்டவனை,
"விஷ்ணு, எல்லாரையும் பந்தியில் உட்கார வைப்பா" என்ற கோபாலின் குரலில் நடப்புக்கு வந்தவன். " இதோ பா " என அங்கிருந்து நகர்ந்தான்.
அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை அப்போது தான் வெளியே விட்டாள் லாவண்யா. பெண்களுக்கே உரிய நுண்ணுர்வு, விஷ்ணு அவளை பார்க்க ஆரம்பிக்கும் போதே! அலட்ர்ட் செய்து விட்டது. கடைசியாக, அவன் பார்வை பதிந்ந இடத்தை உணர்வால் உணர, சற்று திணறி விட்டாள். மனம் படபடக்க தொடங்கி விட்டது. எதுவும் தெரியாதது போன்று! நிற்பது கொடுமையிலும் கொடுமை. நகர்ந்த பிறகே, ஆசுவாச மூச்சு விட்டவள்.பச்சைப்புள்ள மாதிரி முகத்தை வைச்சிக்கிட்டு, பார்க்கிற பார்வையை பாரு! ' என நொடித்தவள். நன்றாக இருந்த மாராப்பை இழுத்து விட்டுக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள்.
நேரம் செல்ல, அனைவரும் சாப்பிட்டு முடித்து வீட்டு ஆட்கள் சாப்பிட அமர்ந்தனர். மூன்று குடும்பங்களும் அமர்ந்திருக்க, பக்கத்து வீட்டினர் பந்தி பரிமாறினர். ஒவ்வொருவராக சாப்பிட்டு முடிக்க, கடைசியாக வருணாவும் ஈஸ்வரும் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
சுற்றிலும் கவனித்தவள். தாங்கள் இருவர் மட்டும் அமர்ந்திருப்பது சங்கோஜமாக இருக்க, அவசரமாக அள்ளி வாயில் திணித்துக் கொண்டு எழுந்து கைகழுவ சென்று விட்டாள்.
சற்று தள்ளி மறைவாக கை கழுவும் இடம் இருக்க, குழாயை திறந்து நீரில் கை கழுவியவள். சிரத்தையாக மூடி விட்டு வர, சற்றும் எதிர்பாராமல் வேகமாக வந்த ஈஸ்வரோட நேருக்கு நேர் மோதி விட்டாள்.
இதில் வருணா அதிர்ந்தாள் என்றால்! ஈஸ்வரோ, " அமௌமா " நெஞ்சை பிடித்துக் கொண்டவன். " ஷ்ஷ்ஷ்... ஆஆ!' என்று மேலும் நீவி வேறு விட்டுக் கொள்ள, வருணா தான் பேந்த பேந்த விழித்து நின்றாள்.
சத்தம் கேட்டு வந்த விஷ்ணு, " என்னாச்சு டா?" என்றான் நெஞ்சை தேய்த்து விட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரிடம்.
"சுவத்தில மோதிக்கிட்டேன் டா. எம்மா வலி தாங்க முடியலையே!' என்று ஓரக்கண்ணால் வருணாவை பார்த்து விட்டு முனக,
"பார்த்து வரக் கூடாதா டா" என்றவன். அங்கேயே நின்றிருந்த வருணாவிடம், "நீ ஏன் அப்படியே நிற்கிற?. போய் ஐஸ்கட்டி எடுத்திட்டு வா. ஒத்தடம் கொடுப்போம்" என்றதும்!
"கொதிக்க கொதிக்க வெந்நீர் எடுத்துட்டு வரேன். ஒத்தடம் கொடுங்க. குளு குளுன்னு இருக்கும்" என்றபடி இருவரையும் முறைத்து விட்டு சென்றாள்.
"கொழுப்பு ரொம்ப கூடிப்போச்சு!' என்று விஷ்ணு கண்டிக்க,
"வெவ்வவ்வே!' என்று அவனுக்கு பழிப்பு காட்டி சென்று விட்டாள். சற்று நேரம் கழித்து இருவரும் உள்ளே வர, வருணாவோ ஈஸ்வரை தான் முறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் உன் பக்கம் திரும்பினேனா பார்! என்பது போல அவள் பக்கம் திரும்பவே இல்லை. ஆனால் அவள் பார்வையின் வீச்சை அவன் நன்கு அறிந்திருந்தான்.
அண்ணணுக்கும் தங்கைக்கும் ஏக குஷி. இதுவரை தங்களை சுற்றலில் விட்டவர்கள் தற்போது தங்களையே பார்வையால் சுற்றி வருவதை கண்டு!. இதுவே தொடர்ந்தால்! தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம் ..