"உனக்கு பொறாமை டி " என்று வம்பு வளர்த்தார் ராதிகா.
"பொறாமை பட என்ன இருக்கு ராதிகா. இரண்டு பேருமே தங்க சிலையாட்டம்ல இருக்கிறாங்க" என்றார் கோசலை பரிந்து கொண்டு
"அப்படி சொல்லுங்க அத்தை!" என்றாள் லாவண்யா சலுகையாக
"உங்கம்மா வம்பு வளர்க்கிறா டா. அடிக்கடி பார்த்துட்டே இருக்கிறதால உன் அழகு கண்ணுக்கு தெரியலை . நீ ராஜாத்தியாட்டம் இருக்கிற" என்றார் வேணியும்.
"நல்லா கேட்டுக்கங்க " என்று நொடித்தவள். " வா வரு. எனக்கு தூக்கம் வருது" என்றபடி வருணாவை கையோடு அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
ராஜூ, ராதிகா, கோபாலோட செல்ல, " காலையில இங்கே நம்ம வீட்டுக்கு வந்திடு கோசலை. நாளைக்கு நம்ம வீட்டிலேயே விருந்து வைச்சிடலாம் " என்றார் வேணி.
"சரிக்கா " என்றார் கோசலையும். அவரவர் தத்தமது வீட்டிற்கு சென்று விட்டனர்.
மறுநாள் விஷ்ணுவும் ஈஸ்வரும் பேசியபடியே வாசலுக்கு வர, வழக்கம் போல! விஷ்ணுவின் பைக்கில் பூச்செண்டும் லட்டரும் இருந்தது.
வேகமாக சென்று பிய்த்து எறியாத குறையாக விஷ்ணு எடுத்தான். கூடவே இருந்த 'ஐ லவ் யூ ' என்ற தாளையும் பிரித்து படித்து விட்டு கசக்கி எறிய,
"ஹேய்! யாரு டா அது?. லட்டர் பூவெல்லாம் வைச்சிருக்கா?" என்றான் ஆச்சரியமாக
"ம்ச்ச். தெரியலை டா. ஒரு வாரமா இதான் நடக்குது. யாருன்னும் தெரியலை. அசந்து நேரமா பார்த்து வச்சிடுறாங்க. கையில மட்டும் மாட்டட்டும் சட்னியாக்கிடுவேன்" என்றான் பல்லைக் கடித்து
"சரி கோவப்படாத டா. கண்டு பிடிச்சிடலாம். நான் ஹெல்ப் பண்றேன்" என்றான் அவனை சமாதானப்படுத்தும் விதமாக
"ம்ச்ச். நானும் ரொம்ப டிரை பண்ணிட்டேன் டா. அசற நேரத்தில வைச்சிட்டு போயிடுறாங்க டா " என்றான் ஆதங்கமாக
"அதை இனி நான் பார்த்துக்கிறேன். நீ ஏன் டா கவலைப்படுற?"
"ம்ச்ச். வேலையே ஓட மாட்டேங்குது டா. வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும்?" என்றான் கலக்கமாக
"அது தான் நான் இருக்கேன்ல. கண்டு பிடிச்சிடுறேன்" என்று சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றான்.
அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரும் உறங்கி விட, ஈஸ்வர் மட்டும் எழுந்து வெளியே வந்தான். விஷ்ணுவுடைய கலக்கமான முகம் அவனை உறங்க விடவில்லை. ஏதாவது அவப்பெயர் வந்து விடுமோ என விஷ்ணு பயப்படுவது தெரிந்தது. அதை தீர்க்கும் பொருட்டே, ஈஸ்வர் திண்ணையின் அருகே மறைவாக நின்று இருப்பதும். சுற்றிலும் இருட்டாக இருப்பதால்! ஈஸ்வர் நிற்பது யாருக்கும் தெரியாது.
சுமார் மூன்று மணியளவில், எதிர் வீட்டின் கதவு மெல்ல திறந்தது. தரை நோகாமல், மெல்ல அடி எடுத்து வைத்தபடி வருணா வாசலிலிருந்து இறங்குவது தெரிந்தது.
தெருவின் இருபுறமும் பார்த்து! யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, பாவாடையை மெல்ல தூக்கி, மெதுவாக அடி எடுத்து வைத்து தெருவை தான்டி எதிர்புறம் வந்தவள். தன் தாவணியில் மறைத்து வைத்திருந்த பூச்செண்டை வெளியே எடுத்து, அதை கைகளில் வைத்து முணுமுணுத்தபடி எதையோ வேண்டிக் கொண்டு, ஹேண்ட் பேரில் வைத்து விட்டு, அதே போல சத்தமிடாமல் திரும்பி இரண்டடி எடுத்து வைக்க,
சட்டென்று அவளது சடை வேகமாக பின்னால் இழுக்கப்பட, பயத்தில் அவள் சத்தமிடும் முன், அவளது வாயை பொத்தி, அவளது இடுப்பையும் ஒரு கை அழுத்தமாக சுற்றியிருந்தது.
அவள் பயத்தில், " ம்ம்.. ம்ம்.. " என்று திமிறினாள் பின்னாலிருந்து அவளை பிடித்திருந்ததால்! அவளால் நகர முடியவில்லை. அவள் வாயிலிருந்து கைகளை எடுக்க போராட,
"ஷ்ஷ்ஷ் . ஏதாவது சத்தம் போட்ட, நீ பண்ண காரியம் எல்லாருக்கும் தெரிய வரும். பரவாயில்லையா?" என்றான் ஈஸ்வர் அவளது காதருகே மிக மெதுவாக
அவளது கைகள் மெல்ல தளர்ந்தன. பிறகு, " யார் இப்படி பூக் கொண்டு வந்து வைக்க சொன்னது?" என அவன் நேரடியாக விசயத்திற்கு வந்து விட்டான்.
எதுவோ சொல்ல ! கை, அவளது வாயை பொத்தியிருந்ததால்! சரியாக கேட்கவில்லை. மெதுவாக தளர்த்தி, " புரியலை. யாருன்னு சொன்ன?" என்றான் மெதுவாகவே
"சாமிக்கு வேண்டிக்கிட்டு பூ வைச்சேன்" என்று சமாளிக்க முயன்றாள்.
"அந்த பூ வை சாமிக்கு வைக்க வேண்டியது தானே!. எதுக்கு என் காதுல வைக்க டிரை பண்ற?. " என்றதும் வருணா அமைதியாக நிற்க,
" சாமி, பூவோடு சேர்த்து லவ் லட்டரையும் வைக்க சொல்லுச்சா?" என்றான் படு நக்கலாக
"அது.. அது.. " என்று தடுமாற
"உண்மையை சொன்னால் பிழைச்சுப்ப!. இல்லை. உன் அண்ணனே கேட்பான். அதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். கூடவே உன் குடும்பமும் இருக்கும்" என்று மிரட்ட!
"அது என் பிரண்ட் தான் வைக்க சொன்னால்!. அண்ணணை அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம்!" என்றாள் எச்சிலை கூட்டி விழுங்கி,
"அதை நேரடியா உன் அண்ணணிடம் சொல்ல வேண்டியது தானே!. பிடிக்கும் பிடிக்கலைன்னு அவன் பதில் சொல்லிட போறான்!. இடையில் நீ என்ன தூது ?"
"அவ அண்ணியா வந்தால் நல்லாயிருக்கும். அதான் ஹெல்ப் பண்ணலாம்னு.. " என்று அவள் இழுக்க!
"உன் பிரண்ட்க்கு அண்ணன் இருக்கானா?".
வருணா எல்லா பக்கமும் தலையை உருட்டி வைத்தாள்.
" உனக்கும் அது போல ஐடியா இருக்கோ!"
"எது போல?"
"அந்த பொண்ணுக்கு ஆசை இருக்கிற மாதிரி!. உனக்கும் அவங்க வீட்டுக்கு அண்ணியாக போக ஆசை இருக்கான்னு கேட்டேன்" என்றதும்!
அவனிடமிருந்து திமிறிக் கொண்டே, " அவங்களை சும்மா கொடுத்தால் கூட எனக்கு வேண்டாம் " என்று அவனிடமிருந்து விடுபட முயன்றாள்.
அப்போது வீட்டின் வாசல் கதவை யாரோ திறக்க முயற்சிப்பது போல சத்தம் கேட்க, டக்கென்று இருட்டிற்குள் அவளை மறைத்தபடி தானும் நின்று கொண்டான் ஈஸ்வர்.
இருவருக்கும் இதயத்தின் ஓசை அவ்வளவு வேகமாக கேட்டது. அதுவும் வருணாவுக்கு, டமார் டமார் என்று காதுக்குள் அடிப்பது போன்று அவ்வளவு சத்தமாக பயத்தில் துடிக்க ஆரம்பித்திருந்தது. இருவராலேயுமே நகர முடியா நிலை!. அமைதியாக நிற்க வேண்டிய சூழ்நிலை!
அப்போது தான் வருணாவுக்கே ஒன்று உறைத்தது. ஈஸ்வர், அவளை பின்னிருந்தபடியே, அவளது வயிற்றோடு
வளைத்து பிடித்திருப்பதும்!அவனது வலது கை அவளது கழுத்தை சுற்றியிருப்பதும், இவள் அவன் முன்னுடவோடு சாய்ந்தபடி இடைவெளியில்லாமல் நின்றிருப்பது புரிய, வெடுக்கென அவனை விட்டு நகர, இதை எதிர்பாராதவன். அனிச்சை செயலாக அவளை தன்னோடு இழுத்தான்.
"என்னை விடுங்க லாவி அண்ணா" என்றாள் அழாத குறையாக
"ஷ்ஷ். மெதுவா பேசு. மாமா வர்ற மாதிரி இருக்கு" என்றதும்
வருணாவுக்கு சர்வமும் நடுங்கியது. இவர்கள் இருவரையும் இப்படி பார்த்து விட்டால் என்னாவது?. யாரின் முகத்தில் மீண்டும் விழிக்க முடியும்!' என்று நினைத்து அவளௌ திகிலடைந்தது போல நிற்க,
அவளது நிலையை உணர்ந்தது போல! "ரிலாக்ஸ். மாமா உள்ளே போற மாதிரி இருக்கு. நாம இங்கே நிற்கிறது தெரியாது" என்றான் கிசுகிசுப்பாக
மூளை அதை அங்கீகரிக்க, அவளது உடல் மெல்ல தளர்ந்தது. அவளறியாமல் அவன் மேல் சாய, "மாமா மேல அவ்வளவு பயமா?" என்றான் கிசுகிசுப்பாகவே
காதருகே, அவனது கிசுகிசுப் பேச்சும், மூச்சுக் காற்றும் உடலை எதுவோ செய்ய, அதை மறைக்க முயன்றவலாக,
"ஏன் உங்களுக்கு பயமில்லையா?" என்றபடி வெடுக்கென திரும்பி விட்டாள்.
அவளது வயிற்றை சுற்றியிருந்த கை, இப்போது அவளது இடையை சுற்றியிருந்தது. முன்பாவது யாரும் பார்த்தால்! ஈஸ்வர் தான் அவளை பிடித்து வைத்திருப்பது போல தோன்றும்! இப்போது இவர்கள் இருவரும் அணைத்திருப்பது போல தோற்றமளிக்கும்!.
நேருக்கு நேர் மிக நெருக்கமாக ஆனால் நூலளவு இடைவெளியில் நின்றிருந்தனர். இருட்டில் அவனது முகம் தெரியவில்லை. முகவெட்டின் வரி வடிவம் மட்டும் மற்றவர்களுக்கு தெரிந்தது. ஆனால் மற்றவர்களுக்கான பிரத்யேக மணத்தை அறியக் கூடிய வகையில் நெருங்கி நின்றிருந்தனர்.
அவள் தன் பக்கம் திரும்புவாள் என்பதை எதிர்பாராதவன். பின்பு சுதாரித்து, " எனக்கெதுக்கு பயம்?. திருடன்னு நினைச்சு பிடிச்சேன்னு சொல்லிடுவேன் " என்றான் மெதுவாக
அதில் ரோசம் வர, "நான் போறேன்" என்று வேகமாக அவனிடமிருந்து விடுபட, அவனும் அவளை தடுக்கவில்லை. வாசல் பக்கம் வந்தவள். கதவு தாழிடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டு, வேகமாக தன் வீட்டுக்கு ஓடி விட்டாள்.
வருணா போகும் வரை அங்கிருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தவன். " ப்பூபூ " என்று ஆசுவாச மூச்சு விட்டபடியே ஒரு அடி எடுத்து வைக்க, காலில் எதுவோ குத்தியது. சற்றே நகர்ந்து பார்க்க! நிலவு வெளிச்சத்தில் பளபளப்பது போல தோன்ற! செல்போன் லைட்டை எடூத்து ஆன் செய்து பார்த்தான். கொலுசு ஒன்று கிடந்தது. வருணாவினுடையதாய் இருக்க வேண்டும் என்று தோன்ற! அதை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
மறுநாள் காலையிலிருந்தே சுப்ரபாதமாக, கோசலை வருணாவை திட்டிக் கொண்டிருந்தார். ஒரு பொருளை ஒழுங்கா வைச்சுக்க தெரியுதா?. பொறுப்பே இல்லை என்று விடாமல் திட்டிக் கொண்டே இருந்தாள்.
வருணாவும் தேடி பார்த்து விட்டாள். கிடைக்கவில்லை. நேற்று ஒழிந்திருந்த இடத்திலும் சென்று பார்த்து விட்டாள் கிடைக்கவில்லை. அவளும் என்ன தான் செய்வாள். அதுவும் ராதா, ராஜூ முன்பு திட்டுவதை கூட, அவள் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் விடாமல் கோசலையின் எப்.எம் ஒலித்துக் கொண்டிருந்தால்! லாவி அண்ணன் வந்து விடுவாங்களே!. அவங்க முன்னாடி திட்டு விழுமோ என்று தான் அவளுக்கு பெரும் கவலையே!.
"விடுங்க அத்தை. அவ என்ன வேணுமென்றே வா தொலைச்சா?. தெரியாமல் விழுந்ததற்கு அவள் என்ன செய்வாள்?. இப்படியே திட்டிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?. அப்பா, மாமா எல்லாரும் வந்துட்டாங்க!. டிபன் வைங்க. நாங்க போய் எடுத்து வைக்கிறோம்" என்று அவர் பேச்சை திசை திருப்ப முயன்றாள்.
"ஆமாம் கோசலை. நேரமாச்சு பாரு" என்று ராதிகாவும் கூற, வேணியுடன் இணைந்து பொங்கல், இட்லி என எடுத்து வைத்துக் கொண்டார்.
ஈஸ்வரின் குரல் கூடத்தில் கேட்டது. 'அச்சச்சோ வந்துட்டாங்க போல' என்று மனம் பதற, அந்த பதட்டத்தில் கையில் வைத்திருந்த சட்னியை சிந்தி விட்டாள்.
அதை கண்டு, " கண்ணை எங்கே வைச்சிருக்க?.ஒழுங்கா எடுத்துப் போக தெரியாது?" என்று சட்னியை வாங்கி வைத்தவர். மீண்டும் திட்ட ஆரம்பிக்கவும், அதே சமயம் ஈஸ்வர் இவர்களை பார்த்தபடியே கொல்லைப்புறம் செல்வதும் தெரிந்தது.
அவ்வளவு தான்!. 'மானம் போச்சு! மரியாதை போச்சு' என்று மனம் கொந்தளிக்க அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல், கைகளால் முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.
இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. கோசலை, மகளின் அழுகை கண்டு திகைத்து விட்டார். அவள் இது போல அழுது அவள் பார்த்ததே இல்லை. அதிகமாக திட்டி விட்டோமோ? என மனம் பரிதவிக்க தொடங்கியது.
"என்ன அத்தை? எப்படி அழறா பாருங்க?. காணாமல் போச்சுன்னா என்ன செய்ய முடியும்?. வேணும்னே தொலைப்பாங்களா?" என்று கடிந்து கொண்டாள் லாவண்யா.
"நல்ல நாளும் அதுவுமா இப்படி பிள்ளையை அழ வைச்சிட்டியே கோசலை?" என்றார் ராதிகாவும்
"ஒரு விசயத்தை விடுன்னா கேட்கிறியா?.இப்போ பாரு எப்படி அழ வைச்சிருக்க?. அண்ணன் தம்பிங்க ஏன் அழறான்னு கேட்டால் என்ன சொல்வ?. அவங்க நீ திட்டினதுக்கு மேல உன்னை கண்டிப்பாங்க" என்றார் வேணியும்
கோசலை அதற்கு மேல் வாயே திறக்கவில்லை. ஒரு வழியாக லாவண்யா, ராதா, வேணி தான் பேசி, வருணாவை சமாதானம் செய்தனர்.
"அம்மா, சாப்பாடு வைங்க " என்ற விஷ்ணுவின் குரலில் அனைவரும் சாப்பிட வந்து விட்டது புரிய, உணவை வருணாவும், லாவண்யாவும் எடுத்துக் கொடுக்க, மற்ற பெண்கள் மூவரும் பரிமாற சென்று விட்டனர்.
கொல்லைப்புறத்திலிருந்து வந்த ஈஸ்வர், லாவண்யா அடுப்பங்கரையில் நிற்பதை கண்டு, " எனக்கொரு காபி போடு லாவண்யா?" என்றபடி சுவாதீனமாக உள்ளே நுழைந்தான். ஈஸ்வரை கண்டதும், அங்கிருந்த அலமாறியின் அருகே நின்று கொண்டாள் வருணா. இவன் பார்வையை விட்டு மறைந்தது போன்று!
லாவண்யா, காபி தூளை டம்ளரில் போட, "ரொம்ப அதிகமா போட்டுடாத " என்றபடியே, வருணாவின் அருகே வந்தவன். லாவண்யா கவனிக்காத நேரமாக, அவளை மறைத்தால் போல் நின்றபடி, வருணாவின் இடது கையை லேசாக பிடிக்க, அவள் உணரும் முன்பே, கொலுசை அவள் கையில் கொடுத்து விட்டு, தன் தங்கையின் அருகே நின்று கொண்டான்.
வருணா, அவசரமாக கொலுசை தாவணியில் சுருட்டி வைத்துக் கொண்டாள். திடீரென காண்பிக்க முடியாதே!.
"எல்லாரும் சாப்பிடுறாங்க. நீனும் சாப்பிட்டுட்டு காபி குடிக்கலாமே ண " என்றதும்!
"அப்படியா? சரி. நானும் சாப்பிட போறேன். நீ காபி எடுத்துட்டு வந்துடு" என்றபடி, வருணா என்கிற ஒரு பெண் அங்கே நிற்பதையே பார்க்காதது போல! அவளை கடந்து சென்று விட்டான்.
"நான் போய் குளிச்சிட்டு வரேன் லாவி. வந்து சாப்பிட்டுக்கிறேன்" என்று பதிலை எதிர்பார்க்காமல் தங்கள் வீட்டுக்கு வேறு வழியாக ஓடி விட்டாள். வீட்டுக்கு போய் கொலுசை காலில் மாட்டிய பிறகு தான் ஆசுவாசமானது.
லாவி அண்ணனுக்கு தேங்க்ஸ் சொல்லிடனும்!. அதோட காதலுக்கு தூது போற வேலை எல்லாம் நம்மால் முடியாதுன்னு அவ கிட்ட தெளிவா சொல்லிடனும்!. அவளுக்கு ஹெல்ப் பண்ண போய்! நான் காதலிக்கிறேன்னு பேர் வந்திருக்கும்!. எப்பா! தப்பிச்சேன் டா சாமி! என ஆசுவாச மூச்சு விட்டாள்.
அண்ணன் காதலிக்கும் பெண் யார்?. புது வரவா? பொறுத்திருந்து பார்ப்போம்..