அத்தியாயம் : 11
அப்பாவும் பெரியப்பாவும் பரபரப்பாக வெளியில் செல்வதை கண்டு,
"இரண்டு பேரும் எங்கே மா போறாங்க?" என்றாள் வரு அருகில் நின்றிருந்த கோசலையிடம்
"தெரியலையே மா. எதுவாக இருந்தாலும் வந்து சொல்லுவாங்க" எனும் போதே அங்கே வந்த ராதிகா,
"கோசலை, மாப்பிள்ளையும், அவங்க அப்பா, மாமா எல்லாம் வேறு காரில் வராங்களாம். கொஞ்சம் லேட்டாகும் போல! நாம வந்தவங்களுக்கு டீயும் ஸ்னாக்ஸூம் வைச்சிடலாமா? இல்லை மாப்பிள்ளை வரட்டுமா?" என்றார்.
"வந்தவங்களை முதலில் கவனிப்போம். பிறகு மாப்பிள்ளை வந்ததும் அவங்களுக்கு தனியா கொடுத்திடலாம்" என்றபடியே , அங்கிருந்து இருவரும் நகர்ந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கடந்திருந்தது. ராஜூ, கோபாலுக்கு அழைப்பு விடுத்தார். அவர் அழைப்பை எடுக்கவில்லை. விஷ்ணுவுக்கு ஈஸ்வர் அழைக்க,
"வர லேட்டாகும் டா " என்று பதிலை கூட எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டான் விஷ்ணு.
"ரொம்ப நேரம் ஆச்சே?. மாப்பிள்ளை, அவங்க அப்பா எல்லாம் எப்போ வராங்க மா. கிளம்பிட்டாங்களா?" என்றார் ராஜூ மணிமேகலையிடம்
"போனே எடுக்கலைங்க. வந்துட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்றார்.
தலையாட்டிக் கொண்டவர். அமைதியாக வாயிலுக்கு சென்று நின்றார். அங்கே தான் ஈஸ்வரும் நின்றிருந்தான். தந்தையை கண்டதும்,
" மாமாவுக்கு போன் போட்டேன் வந்துட்டு இருக்காங்களாம். என்ன விசயம்னு கேட்டால்? வந்து சொல்றேன்னு சொல்றாங்க" என்றவன். "மாப்பிள்ளை வீட்டார் எப்போ வராங்களாம்?" என்றான் அடுத்து
"போன் எடுக்கலையாம். வந்துட்டு இருப்பாங்கன்னு சொன்னாங்க" என்றார் ராஜூ, மணிமேகலை சொன்னதையே
நேரம் கடந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்கு முதல் கட்டமாக காபி, டீ, ஸ்னாக்ஸ் என்று கொடுக்கப்பட்டதால்! மற்றவர்களின் வரவை எதிர்பார்த்து தங்களுக்குள் பேசியபடி அமர்ந்திருந்தனர். லாவி, உறவுக்கார பெண்களோடு அறையிலேயே அமர்ந்திருந்தாள். வருணாவும் அவளுடன் தான் இருந்தாள்.
மேலும் அரைமணி நேரம் கடக்க, வாயிலில் ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து வேகமாக இறங்கிய விஷ்ணு, கோவமாக உள்ளே செல்ல, அவனை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் ராமன் பின்னாலேயே செல்ல, ஆட்டோ காசை கொடுத்து விட்டு கோபாலும் அவர்களை பின் தொடர்ந்தார். வாயிலறருகே நின்றிருந்த, ராஜூ மற்றும் ஈஸ்வரை , விஷ்ணு பொருட்படுத்தியதாக தெரியவில்லை. வேகமாக உள்ளே சென்றவன். மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் அமர்ந்திருக்க,
"இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. எல்லாரும் கிளம்புங்க" என்றான் ஆவேசமாக
இதை கேட்ட, லாவியின் முகம் மென்னகை பூத்தது. குரல் கேட்டு மற்ற உறவுகளும் அறையிலிருந்து வெளியே வந்து விட்டனர்.
மாப்பிள்ளை வீட்டாரிடம் சலசலப்பு ஏற்பட, பின்னாடியே வந்த ராமன் தான். " அவசரப்படாதே விஷ்ணு கொஞ்சம் பொறுமையாயிரு" என்று அவனை சமாதானப்படுத்த முயன்றார்.
பின்தொடர்ந்து வந்த ராஜூ மற்றும் ஈஸ்வருக்குமே ஒன்றும் புரியவில்லை. அதிர்ந்து தான் நின்றிருந்தனர்.
"என்னப்பா மரியாதையில்லாமல் பேசுற? என்ன அண்ணா இதெல்லாம்? " என்றார் மணிமேகலை. கேள்வியை விஷ்ணுவிடம் ஆரம்பித்து ராஜூவிடம் முடித்திருந்தார்.
"கொஞ்சம் பொறுமையாய் இரு டா" என்று விஷ்ணுவை அடக்க முயன்றார் ராமன்.
அதே நேரம் மாப்பிள்ளை வசந்தன், துரை மற்றும் அவரது தம்பி வேலு உள்ளே வந்தனர். அவர்களை கண்டதும்,
"என்னங்க இந்த பையன் நம்மளை எல்லாம் வெளியே போக சொல்றான்" என்றார் மணிமேகலை தனது கணவரிடம்.
"ஆமாங்க! எல்லாரும் வெளியே போங்க. இந்த நிச்சயதார்த்தம் நடக்காது" என்றான் மீண்டும் அழுத்தமாக
"அதை பொண்ணோட அப்பா சொல்லட்டும்!. நீ யாருடா அதை சொல்ல?" என்றார் துரை கோவமாக
"மரியாதை கொடுத்து பேசுங்க துரை" என்றார் ராமன் இடையிட்டு,
"என்னடா மரியாதை கொடுத்து பேசுறது. காட்டானுங்க உங்களுக்கெல்லாம் மரியாதை ஒரு கேடா. வெளியில போங்கடா எல்லாரும்" என்றார் துரை
"அதை சொல்ல நீ யாரு டா?" என்றான் விஷ்ணு அதே பாணியில்
"விஷ்ணு, கொஞ்சம் பொறுமையாய் இரு. என்ன விசயம்னு சொல்லாமல் ஆளாளுக்கு இப்படி பேசினால் என்ன அர்த்தம்?" என்றார் ராஜூ இழுத்து பிடித்த பொறுமையுடன்.
"மாமா இந்த சம்பந்தம் வேணாம் மாமா. இந்த வசந்தன் சரியான பொம்பளை பொறுக்கி. பொண்ணு கூட ஹோட்டலில் ரூம் போட்டான்" என்று விஷ்ணு டக்கென்று விசயத்தை போட்டுடைக்க!
"மாட்னான் டா மானஸ்தன்" என்று மெல்ல முணுமுணுத்தாள் லாவி.
வசந்தன் டக்கென்று விஷ்ணுவின் சட்டையை பிடித்து விட்டான். " யாருடா ரூம் போட்டது?. பிரண்ட் வெளிநாட்டிலிருந்த வந்திருந்தாங்க. பார்க்க போனால் தப்பா பேசுவியா?" என்று கேட்க,
விஷ்ணு, வசந்தனை விடுவதாய் இல்லை. அவனும் வசந்தனின் சட்டையை இறுக்கி பிடித்து விட்டான்.
"பிரண்ட்ட ஏன் டா வீட்டுக்கு வர சொல்லாமல் ஹோட்டலுக்கு போய் பார்க்கிற?. அதுவும் பொம்பளை பிரண்ட். போலீஸ் வந்ததும் பொண்டாட்டின்னு எதுக்கு சொன்ன?" என்றான் வார்த்தைகளை கடித்து துப்பி.
"அவங்களை தேவையில்லாமல் சிக்கலில் மாட்டி விட சொல்றியா?" என்று வசந்தனும் எகிற
"நிதானமா பேசுங்கப்பா " என்று பெரியவர் ஒருவர் இடையிட்டு பேச, ஈஸ்வர் தான் விஷ்ணுவை தன் பக்கம் இழுத்துக் கொண்டான். விஷ்ணுவும் வசந்தனும் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொள்ள,
பெண்கள் அனைவரும் நடப்பது புரியாமல் திகைத்து போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
" ராஜூ, என் பையன் அவனோட பிரண்ட் இந்தியாவிற்கு வந்ததால் ஹோட்டலில் போய் பார்க்க போயிருக்கான். அப்போ அந்த ஹோட்டலுக்கு போலீஸ் ரெய்ட் வந்திருக்கு! யாருன்னு விசாரிச்சிருக்காங்க. அந்த பொண்ணை காப்பாத்தனும்னு பொண்டாட்டின்னு சொல்லிட்டான். அதை போய் இந்த பையன் தப்பா புரிந்து கொண்டு பேசறான்" என்றார் துரை.
"எது? பிரண்ட் பார்க்க போனவன். ஒரு மணி நேரமா என்ன பண்ணிட்டு இருந்தான். இங்கே நிச்சயதார்த்தம் வைச்சிக்கிட்டு, இன்னொரு பொண்ணுக் கூட என்ன ரூம் போட்டு பேச வேண்டியிருக்கு?" என்று விஷ்ணு பாயிண்டாக பேச,
"அந்த பொண்ணுக்கு பிரச்சனை. என்னோட உதவியை எதிர்பார்த்து வந்திருக்கா. அவ விசயத்தை தான் பேசிட்டு இருந்தோம்" என்றான் வசந்தன்.
"ஆமாமா. போலீஸ் வந்த கதவை தட்டி வெளியில வர வரைக்கும். நீங்க அந்த பொண்ணுக் கூடத்தான் பிரச்சனையை பேசிட்டு இருந்தீங்க! . நீங்க வெளியில வரும் போது எப்படி இருந்தீங்கன்னு தான் பார்த்தேனே!" என்றான் படு நக்கலாக
ஈஸ்வர், திகைத்து விஷ்ணுவை பார்க்க! ஆமோதிப்பாக தலையசைத்தான் விஷ்ணு.
"என்னடா உதவி செய்ய போன என் பிள்ளையை தப்பா பேசுற?. நீ தான் விளக்கு பிடிச்சி பார்த்தியா?" என்று துரை கேவலமாக பேச,
"உன் பையனை பிடித்த போலிஸை கேளு. விளக்க்க மா சொல்லுவாங்க " என்றான் விஷ்ணுவும் விடாமல்
"என்ன டா ரொம்ப பேசுற?" என்றபடியே துரை அடிக்க வர, இடையிட்டு ராமன் அவரை தள்ளி விட்டார். கீழே விழாமல் துரை சமாளித்து நிற்க,
சற்றும் எதிர்பாராத விதமாக, ராதாவின் ஒன்று விட்ட அண்ணன் சிவா,
"எங்க வீட்டு சம்மந்தி மேலே கையை வைக்க, நீ யாரு டா?" என்றபடி ராமனின் கண்ணத்தில் ஒங்கி அறைந்து விட்டார்.
அனைவரும் திகைக்க! "என் சித்தப்பா மேலேயா கை வைச்ச?" என்றபடி அவர் நெஞ்சிலேயே ஓங்கி உதைத்திருந்தான் விஷ்ணு . கீழே விழுந்ததில் அங்கே கிடந்த சேரில் நெற்றி மோதி, இரத்தம் வந்து விட்டது.
"கொலைக்கார பாவி. அவரை அடிச்சு போட்டிட்டியே டா இரத்தம் வருதே!" என்று அவர் மனைவி கத்தி கூச்சலிட
ராஜூவுக்கு ஈஸ்வருக்கும் யாரை சமாளிப்பது என்றே தெரியவில்லை. இரு பக்கமும் கை கலப்பு ஏற்படக் கூடிய சூழல், ராஜூவும் ஈஸ்வரும் தான் இருபக்கமும் அமைதிபடுத்த முயன்றனர்.
அப்போது, " ராஜூ, இந்த சம்மந்தம் வேண்டாம் நிறுத்திடு " என்றார் கோபால். ராமனின் கையை ஆறுதலாக பிடித்தபடி
"நீங்க யாருங்க அதை சொல்ல? பிரண்ட்டுன்னா ஓடி ஆடி வேலை செய்யறதோட நிறுத்திக்கனும். குடும்ப விசயத்துல தலையிடக் கூடாது " என்றார் துரை.
"ஆமாம். என் புருஷன இரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிட்டான். சரியான ரௌடி .இவங்களை வெளியில போ சொல்லுங்க அண்ண " என்றார் சிவாவின் மனைவி
" இந்த ஆளை வெட்டி வீசியிருப்பேன். என் சித்தப்பா மேலேயே கை வைச்சிட்டான். மாமாவுக்காக பொறுமையா போனால்! என்ன ஓவரா பேசிட்டு போறீங்க? " என்று விஷ்ணு கோவமாக நெருங்க
"ஐயோ! இதை கேட்க யாருமே இல்லையா?. தங்கச்சி தங்கச்சி ஓடி வந்தாரே!. அவர அடிவாங்க வைச்சு வேடிக்கை பார்த்துட்டு இருக்கியே ராதா?" என்று அதிர்ந்து நின்று கொண்டிருந்த ராதாவையும் பேச்சில் இழுத்து விட்டார். சிவாவின் மனைவி
"அண்ண!" என்றபடி நெருங்கியவருக்கு, அப்போது தான் நெற்றியிலிருந்து சிவாவுக்கு விடாமல் இரத்தம் வடிவதும் தெரிந்தது.
"ஐயோ!இரத்தம். வா அண்ண ஆஸ்பத்திரி போகலாம்" என்றார் அழுகையோடு
"அவனுங்களை வெளியில போக சொல்லு. அப்போ தான் ஆஸ்பத்திரி வருவேன்" என்றார் வீம்பாக
"நாங்க எதுக்கு போகனும். இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. நீங்க எல்லாம் வெளில போங்க" என்றான் விஷ்ணு விடாமல்
" நீ யாருடா அதை சொல்ல?. நிச்சயதார்த்தத்த நிறுத்திட்டு, நீ மாப்பிள்ளையாகலாம் பார்க்குறியா?" என்றார் சிவா கோவமாக
"ஓ! அதனால் தான் வந்ததிலேருந்தே இல்லாத பழியை போட்டு இந்த நிச்சயத்தை நிறுத்த பார்க்குறானா?" என்றார் துரை நக்கலாக
"அதுக்கு எந்த அவசியமும் இல்லைங்க. உங்க தப்பை மறைக்க, தேவையில்லாமல் பேசாதீங்க " என்றார் கோபால் இடைபுகுந்து
"யாருங்க தப்பா பேசுறது?. சாதாரண விசயத்தை பெரிசு படுத்தி நிச்சயத்தை உங்க பையன் நிறுத்த நினைக்கிறான். அது தான் அப்பட்டமா தெரியுதே!" என்றார் சிவா.
"தேவையில்லாமல் பேசாதீங்க சிவா. விஷ்ணுவை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நான் பார்த்து வளர்ந்த பிள்ளை. அவனை பத்தி தப்பா பேசாதீங்க " என்றார் ராஜூ இடைபுகுந்து
"நண்பன் பிள்ளை என்கிற பாசம் உன் புருசனுக்கு கண்ணை மறைக்குது ராதிகா. அதனாலத்தான் நிச்சயம் நின்னாலும் பரவாயில்லைனு அவனுங்க பேச்சுக்கு ஆடப் பார்க்கிறார் மாப்பிள்ளை. பொண்ணு விசயம். நிச்சயதார்த்தம் நின்னு போச்சுன்னா? நாள பின்னே யாரு பொண்ணு கேட்டு வருவா?" என்று ராதிகாவை தூண்டி விட்டார் சிவா.
"அப்படியொரு நிச்சயதார்த்தம் நடக்கவேண்டிய அவசியமில்லை" என்றான் விஷ்ணு இடைப்புகுந்து பேச ஆரம்பிக்கும் போதே!
"பேசாமல் இரு விஷ்ணு. இது என் பொண்ணு விசயம். நீ தலையிடாதே!" என்றார் ராதிகா ஆவேசமாக
அனைவரும் திகைத்து போய் நிற்க,
"அத்தை! இவன் நல்லவனே இல்லை" என்ற விஷ்ணுவை இடையிட்டு,
"என்ன டா நல்லவர் இல்லை. இதோ இப்போ நினைச்சா கூட, என் பொண்ணுக்கு இந்த பையனை பேசி முடிப்பேன். ஏதோ தங்கச்சி பொண்ணாச்சேன்னு பொறுத்து போறேன்" என்றார் சிவா.
"பொறுக்கிக்கு பொண்ணு கொடுக்கறேன்னா கொடு. யார் வேணாம்னா!. . உன் பொண்ணு தலையெழுத்த நீ தான் தப்பா எழுதுற" என்றான் விஷ்ணு.
இந்த நிச்சயம் நின்று விட்டால்! தன் பெண்ணுக்கு கல்யாணம் கூடி வராதோ?' என்று பயந்த ராதிகா,
"என்னங்க, இவங்களை வெளியில போக சொல்லுங்க. இங்கேயே இருந்து என் பொண்ணு வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறாங்க" என்றார் ராதிகா தன்னிலை இழந்து
"அம்மா!. என்ன பேசுறீங்க? " என்றான் ஈஸ்வர் அதிர்ந்து
" போதும்!. நாம இங்கே இருந்து கிளம்புறது தான் நமக்கு மரியாதை" என்ற ராமன். வருணா, அம்மாவையும் பெரியம்மாவையும் அழைச்சிட்டு சீக்கிரம் கிளம்புங்க" என்று விட்டு அவர் வாயிலை நோக்கி செல்ல,
ஈஸ்வர் அதிர்ந்து போய், வருணாவை பார்க்க! அவள் முகம் கலக்கத்தை சுமந்து இருந்தது.
கோசலை பைகளை எடுத்து கொண்டு வெளியே செல்ல, வருவும் வேணியும் அவரை பின் தொடர்ந்து வெளியே வந்து விட்டனர். விஷ்ணு, மற்றும் கோபாலின் கையை பிடித்துக் கொண்டு ராமன் முன்பே வந்து விட்டார்.
பின்னாலேயே வந்த ஈஸ்வர், " அம்மா ஏதோ குழப்பத்தில் பேசிட்டாங்க மாமா. நீங்க தவறா எடுத்துக்காதீங்க " என்றான் பொதுவாக
"பொண்ணோட வாழ்க்கைக்காக பேசறாங்கன்னு புரியுது மாப்.. ஈஸ்வர். ஆனால் அந்த பொண்ணோட நல்லதுக்காக தான் நாங்க பேசறோம்னு கொஞ்சம் கூடவா யோசிக்க முடியலை" என்றார் ராமன் ஆதங்கமாக
அவர் மாப்பிள்ளை என சொல்ல வந்து பிறகு ஈஸ்வர் என மாற்றியதை நினைத்து வேறு மனம் பிசைய ஆரம்பித்தது ஈஸ்வருக்கு
"அந்த சிவா என் தம்பி மேலே கையை வைச்சிட்டான். ஊருக்குள்ள எங்களுடைய மரியாதை என்னென்னு நாங்க சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்லை. லாவண்யாவுக்காகத்தான் அவ்வளவு நேரமும் பல்லைக்கடிச்சிட்டு பொறுமை காத்துட்டு நின்னோம்!.
எத்தனை தடவை எத்தனை பேரு, என் பிள்ளையையும் எங்களையும் வீட்டை விட்டு வெளியில போ வெளியில போன்னு சொன்னாங்க" என்ற கோபாலின் தொண்டை அடைத்தது.
தந்தையின் நிலைக் கண்டு, " அப்பா " என்றான் விஷ்ணு பரிதவிப்பாக. பெண்கள் வரும் அழுகையை மறைக்க போராடிக் கொண்டிருந்தனர்.
"அதெல்லாம் பொறுத்துட்டு யாருக்காக நின்னோம்?. அதை யாரும் புரிஞ்சுக்கலை " என்றவர். " சரி. நீ போய் பாரு பா. அவன் நல்லவன் கிடையாது. வெளிநாட்டில ஒரு பொண்ணு கூட தொடர்புல இருந்திருக்கான். அவசரப்பட்டு எதும் முடிவெடுத்திட போறாங்க. நீ உள்ளே போ. ராஜூ தனியா இருக்கான். கொஞ்ச நாள் போகட்டும். நானே பேசறேன்" என்றவர்
"வாங்க போகலாம்" என வாயிலை நோக்கி நடந்தார். அனைவரும் அவரை பின் தொடர, ஈஸ்வரது பார்வை முழுக்க, வருணாவின் மீதே இருந்தது. அவன் கண் மறையும் வரை அவள் ஈஸ்வரை திரும்பியும் பார்க்கவில்லை.
மனம் இரணமானது. இருந்தாலும்! உள்ளே இருந்த சூழ்நிலை உரைக்க, அவசரமாக வீட்டினுள் சென்றான்.
மறுநாள் அதிகாலை, அனைவரும் சோலையூர் வந்து சேர்ந்து விட்டனர். இரண்டு நாட்கள் ஏதோ யோசனையிலேயே சுழன்று கொண்டிருந்தவர்கள் மூன்றாம் நாள் தன் போல் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.
ஈஸ்வர், வருணாவின் எண்ணுக்கு பலமுறை அழைத்து விட்டான். சுவிட்ச் ஆப் என்றே வந்தது. விஷ்ணுவோ அழைப்பை எடுக்கவில்லை. கோபால் பேச சொல்லாத வரை யாரும் அவனிடம் பேசப் போவதில்லை.
ஈஸ்வர், கைப்பொருளை தொலைத்தது போல! சுரத்தேயில்லாமல் வேலையில் மட்டுமே கவனமாக இருந்தான். அறைக்குள் நுழைந்தாலே! அன்று வருணாவுடன் நெருக்கமாக நின்றிருந்த தோற்றமே மனக்கண்ணில் வந்து கொண்டிருந்தது.
அன்று விஷ்ணு, வேலையை முடித்து இரவு வீட்டுக்கு வந்த போது வாயிலிலேயே அண்ணனும் தம்பியும் அமர்ந்திருந்தனர்.
"விஷ்ணு இங்கே வா பா " என்றார் கோபால்
"என்னப்பா? "
"அன்றைக்கு நீ எதுக்கு அந்த லாட்ஜ்க்கு போன?. உனக்கு அந்த வசந்தனை பத்தி எப்படி தெரியும்?" என்றார்.
இந்த கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. லாவண்யா சொன்னதால் சென்றேன் என்று சொன்னால்! என்னவாகும்?. நிறைய விசயங்களை சொல்ல வேண்டியிருக்குமே!. அப்படியே சொன்னாலும், ஈஸ்வரிடமோ ராஜூவிடமோ சொல்லாமல் உன்னிடம் ஏன் சொல்ல வேண்டும்?என கேள்வி எழுமே? என பல யோசனைகள் ஓட அப்படியே நின்றிருந்தான்.
எப்படியிருந்தாலும் உண்மையை சொல்லத்தானே வேண்டும்!. அன்று சொல்ல மறந்த கதை என்னவோ? சொன்னால் பெற்றவர் என்ன நினைப்பாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்..