செம்பருத்தி பூ 10
கணபதி இல்லத்தில் உணவு மேசையில் குடும்பத்தினர் அனைவரும் இரவு உணவுக்காக அமர்ந்திருந்தனர். லட்சுமி வேலைக்காரர்கள் உதவியுடன் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.
வர்ஷா "எனக்கு இட்லி வேண்டாம்மா. பிரைட்ரைஸ் தான் வேணும்" என்றாள்.
காயத்ரி "இட்லி வேண்டாம்னா இடியாப்பம், சப்பாத்தி, பணியாரம் இதுல ஏதாச்சும் சாப்பிடு. அதை விட்டுட்டு இல்லாத பிரைட்ரைஸ் வேணுமோ?" என்றாள்.
இந்திராணி "அவள் கணபதி குடும்பத்து குட்டி இளவரசி. அவள் ஏன் இருப்பதை சாப்பிட வேண்டும்? அவள் விருப்பட்டதை சாப்பிட முடியும் காயு" என்றவர் வேலையாளிடம் திரும்பி "போய் பிரைட் ரைஸ் தயார் பண்ணு" என்றார்.
காயத்ரி "பாட்டி, அவள் உங்கள் இளவரசி தான். அதற்காக ஒவ்வொரு வேளைக்கும், இப்படி அடம்பிடிப்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. இவளை நான் பார்த்துக் கொள்கிறேன் பாட்டி" என்று முடிவாகக் கூறியவள் மகளிடம் திரும்பி "உனக்கு என்ன வேண்டும்?" என்றாள் அதட்டலாக.
காயத்ரியின் கணவன் விஷ்ணு வாயே திறக்கவில்லை. மனைவிக்கும், மகளுக்குமிடையே சென்றால் இருவரும் சேர்ந்து கொண்டு அவனை ஜோக்கர் ஆக்கி விடுவார்கள். அனுபவம் கொடுத்த பாடத்தால், அவன் அவர்களைக் கண்டு கொள்ளாமல், தன்னருகில் அமர்ந்திருந்த அரிமாவிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
விதுஷிக்கு உணவு இறங்க மறுத்தது. புது இடம், புது மனிதர்கள், முக்கியமாக அரிமா. அவனிடமிருந்து அவள் தப்பிக்க செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டது. இனி அவனுடன் அவளுடைய வாழ்க்கை எப்படி இருக்கும். இப்படி பலவித சிந்தனைகளால் அவள் மனம் சோர்ந்து இருந்தது. எனவே உணவில் விருப்பமற்றுத் தட்டில் விரலால் அலைந்து கொண்டிருந்தாள்.
லட்சுமி "விது, என்னடா இடியாப்பம் ருசி இல்லையா? சப்பாத்தி வைக்கட்டுமா?" என்றார்.
சரஸ்வதி "அண்ணி, அவள் வீட்டில் இத்தனை வகைகளை ஒரே நேரத்தில் பார்த்திருக்க மாட்டாள். அதனால் ஒரே நேரத்தில் இவ்வளவு வகையைப் பார்த்ததும் சாப்பிட முடியாமல் முகத்தில் அடித்திருக்கும்" என்றார் விதுஷியை மட்டம் தட்டும் விதமாக.
மற்றவர்கள் பேசும் முன் அவர் கணவர் சேகர் "சரோ, அமைதியாக சாப்பிடு, புது இடம் என்பதால் அந்தப் பெண் சாப்பிட முடியவில்லை. தேவையில்லாமல் பேசாதே" என்றார் கண்டிப்புடன்.
அரிமா கோபத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். விதுஷியின் முகத்தைப் பார்த்தான். அவள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் நீர் இப்போது விழுந்து விடுவேன் என்பது போல் பளபளப்பாக இருந்தது.
அரிமா சட்டென எழுந்து விட்டான். "விது" என்றான்.
அவள் என்ன என்பது போல் பார்க்கவும் "எழுந்திரு" என்றான்.
அவள் எழவும் இருவருமாக சென்று கிட்சனில் கை கழுவினார்கள். ஹால் சோபாவில் அவளை உட்கார சொல்லிவிட்டு அவனும் அமர்ந்தான்.
அவன் சென்றதும் கணபதி "சாப்பிட்டுப் போய் எல்லோரும் ஹாலில் இருங்கள். நான் சில விஷயங்கள் பேச வேண்டும்'' என்றார்.
லட்சுமிக்குக் கவலையாக இருந்தது. வந்த முதல் நாளே விதுஷி சரியாக சாப்பிட முடியவில்லை, அரிமாவும் பாதி கூட சாப்பிடவில்லை.
தன்ஷிகாவும் அனுஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
சாப்பிட்டு முடித்து அனைவரும் ஹாலுக்கு வந்ததும், கணபதி "இந்த வீட்டில் இருக்கும் எல்லோரும் ஒரு விசயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அரிமாவின் திருமணம் அவன் விருப்பப்படி, நம்மில் யாருடைய விருப்பமோ கருத்தோ கேட்காமலே முடிந்து விட்டது. அதில் எல்லோருக்குமே வருத்தம் இருக்கலாம். ஆனால், இனி இதை மாற்ற முடியாது. விதுஷிகா தான் இந்த வீட்டின் அடுத்த தலைமுறையின் தலைவி. என் பேத்திக்கு இந்த வீட்டில் இனி எந்த அவ மரியாதையும் நடக்கக் கூடாது" என்று உத்தரவாகக் கூறினார்.
சரஸ்வதி "அப்படி என்றால் நான் இங்கே யார் அப்பா?" என்றார் உருக்கமாக.
"நீ என் மகள் தான்ம்மா. அதற்காக என் பேத்தியை நீ என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியாது. அவள் உன்னிடம் மரியாதைக் குறைவாக நடந்தாலும், அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன், மனதைக் குழப்பிக் கொள்ளதே சரோ" என்றார் தன்மையாகவே.
இந்திராணி "அவள் பாவம்ங்க. அவளுடைய ஆசை நிறைவேறவில்லை என்று வருத்தம் இருக்கும். அது தான் சரோ அப்படிப் பேசுகிறாள். கொஞ்சநாள் பொறுத்துப் போனால் எல்லாம் சரி ஆகி விடும்" என்றார்.
விதுஷிக்கு விசித்திரமாக இருந்தது அவர் நியாயம். அவருக்கு வருத்தம் இருந்தால் அதற்காக என்னை அவர்கள் வருத்தப் படுத்துவார்களாம். நான் பொறுத்துப் போக வேண்டுமாம். இதில் நியாயம் எங்கே இருக்கிறது? இந்த விஷயத்தில், அவளை சரஸ்வதி மட்டம் தட்டியதும், அரிமாவும் சாப்பிடாமல் எழுந்தது தான் மனதுக்கு சற்று இதமாக இருந்தது.
கணபதி "அதற்கு எந்த அவசியமும் இல்லை ராணி. யாரும் யாருக்காகவும் பொறுத்துப் போக வேண்டாம். அவரவர் மனக் காயங்கள் ஆறும் வரை அடுத்தவர்களிடம் இருந்து விலகி இருந்தாலே போதுமானது." என்றவர் மேற்கொண்டு யாரும் பேச்சைத் தொடர முடியாதவாறு, அவரவர் அறைக்குப் போகச் சொல்லிவிட்டு அவரும் தன் அறைக்கு சென்று விட்டார்.
விதுஷிகாவும் யாரிடமும் பேசாமல் அவள் இருந்த விருந்தினர் அறைக்குச் சென்று விட்டாள். அவள் பின்னேயே அரிமாவும் உள்ளே வந்து கதவைத் தாழிடவும் அவள் திகைத்துப் போனாள்.
"என்ன?" என்றாள் திணறலாக.
அவன் பதில் பேசாமல் அவளை இறுக்கி அணைத்து, கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். அவள் அவனை விலக்க முயன்றாள். அவன் உருவத்தை அவளால் மில்லிமீட்டர் அளவில் கூட அசைக்க முடியாமல் போனது. சற்றுநேரத்தில் அவனாகவே அவளை விட்டு விலகி, அந்த அறையை விட்டும் சென்றுவிட்டான்.
அவன் போனதும் லட்சுமி வந்தார். வந்தவர் அவள் முகத்தைப் பார்த்துவிட்டு "என்னம்மா? முகம் ஏன் இப்படி வெளுத்துப் போய் இருக்கிறது?" என்றார்.
விதுஷி "ஒன்றுமில்லை" என்று முனுமுனுத்தாள்.
"ஒன்றுமில்லை அத்தை என்று சேர்த்து சொல்லவேண்டும்" என்றார் லட்சுமி சிரித்துக் கொண்டே.
அப்போது காயத்ரியும் அங்கே வந்தாள். அவள் கையில் ஒரு கிளாசில் பால் இருந்தது.
"பிடி விது. முதலில் இதைக் குடி" என்று உரிமையாக கிளாசை அவள் கையில் கொடுத்தாள். அவள் குடித்த பிறகு தான் தாயும், மகளும் அவளை விட்டனர்.
சற்றுநேரம் பேசிப்பேசி விதுஷியை சகஜமாக்கி விட்டுத் தான் காயத்ரி அவள் அறைக்குச் சென்றாள். அப்போது விதுஷியின் போன் அடித்தது. அரிமா மாலை கடைக்குப் போய்விட்டு வரும் போது, விதுஷிக்கு புதிய மொபைல் ஒன்றும் வாங்கிக் கொடுத்திருந்தான். கீதா தான் அழைத்தார், அவள் பேசிவிட்டு, லட்சுமியிடம் கொடுத்தாள். மறுநாள் மறுவீட்டிற்கு எப்போது வருகிறார்கள்? என்பது போன்ற விஷயங்களைப் பேசிவிட்டு, மீண்டும் விதுஷியிடம் போனை கொடுத்துவிட்டு, அவர் அறையை விட்டு சென்றுவிட்டார்.
மாமியாரின் இங்கிதத்தை மனதுக்குள் மெச்சிய படி, அன்னையிடம் பேச்சைத் தொடர்ந்தாள் விதுஷி. இளையவர்களும் விதுஷி வீட்டில் தான் இருந்தார்கள். வருணும், ராகவனும், ப்ரியாவும் மாறிமாறிப் பேசி அவளுடைய உற்சாகத்தை ஓரளவு மீட்டு விட்டனர். வெகு நேரம் பேசிவிட்டு போனை வைத்த போது விதுஷியின் முகம் தெளிந்திருந்தது.
மணியைப் பார்த்தாள் இரவு பத்தரை. இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றாள். மாலை சேலையை மாற்றிவிட்டு, அரிமா வாங்கி வந்திருந்த ரெடிமேட் சுடிதாரில் தான் இவ்வளவு நேரம் இருந்தாள். உடைகள், உள்ளாடைகள் எல்லாமே சரியான அளவாக வாங்கி வந்திருந்தான். அதுவே அவளுக்கு அவன் வாங்கித் தந்ததை அணிய ஒரு கூச்சத்தைக் கொடுத்தது.
அவள் குளியலறையிலிருந்து வெளிவந்த போது, லட்சுமி அந்த அறையில் இருந்தார்.
"நான் இன்று உன்னுடன் தங்கிக் கொள்கிறேன் விது'' என்றார் அவர்.
"நான் தனியாக இருந்து கொள்வேன் அத்தை. உங்களுக்கு ஏன் சிரமம்?"
அவளுடைய அத்தை என்ற உரிமையான அழைப்பில் லட்சுமிக்கு சந்தோசமாக இருந்தது. "இருக்கட்டும் மா. நீ இதுவரை அப்பா அம்மா உடன் இருந்திருப்பாய். இது புது இடம் வேறு. அதனால் இன்று ஒரு நாள் உன்னுடன் இருக்கிறேன். நாளைக்கு மறுவீடு சென்று விடுவீர்கள்" என்றவர் மேலும் சிறிது நேரம் அவளிடம் அவளுடைய வேலை, பொழுதுபோக்கு போன்ற பொதுவான விஷயங்களையும் பேசி நல்ல, மனநிலை உடனே அவளை தூங்கச் செய்தார்.
விதுஷி இங்கே நன்றாக தூங்க, அரிமாவோ அவன் அறையில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒன்றும், இன்றே அவன் மனைவியுடன் கூடிக்கலக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் நேற்று அவளுடன் ஒரே அறையில், அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தது போல், இன்றும் அவள் அவனுக்கருகில் வேண்டும் என்று தோன்றியது. அதிலும், காலையில் அவளை அவன் எதிர்பாராமல் அணைத்தது, அதை இப்போது நினைத்தாலும் அவன் மூச்சுக்காற்று சூடாகியது. அவன் அணைத்த போது, அவள் உடலின் பாகங்கள் அவனுடன் அழுந்தும் போது, அவன் உணர்ந்த அவளின் மென்மைகள், அவளுடைய மூச்சுக்காற்றின் வாசம், இப்படி அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டு, அந்த இரவை சுகமான நரகமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.
காலையில் மறு வீட்டிற்கு மணமக்களை அழைக்க தர்ஷனும், வருணும் வந்திருந்தனர். லட்சுமி அவர்களை வரவேற்று அமர வைத்துவிட்டு, குடிக்க காபி கொடுத்தார். கணபதி, நாச்சியப்பன் இருவரும் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மாடியில் இருந்து அரிமா இறங்கி வந்தான். அவன் வந்ததைப் பார்த்த இருவரும், அவனுடைய கம்பீரத்தில் கவரப்பட்டு விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவன் அவர்களிடம் வந்து நின்று, "வாங்க, வந்து நேரம் ஆகி விட்டதா?" என்று விசாரித்த போது தான் சுயம் தெளிந்து, ஒருவரை ஒருவர் பாத்துக் கொண்டனர். வருண் அப்போது கூட மோனநிலை கலையாமல் இருக்க,
தர்ஷன் "கொஞ்சம் முன்பு தான் வந்தோம்" என்றான்.
நாச்சியப்பன் "முறை சொல்லிக் கூப்பிட வேண்டும்ப்பா. அவன் உனக்கு அண்ணன் முறை தானே? அப்படியே கூப்பிடு" என்றார் தர்ஷனிடம்.
அரிமா சிரிப்பை உதட்டுக்குள் ஒளித்துக் கொண்டான்.
தர்ஷன் சங்கடமாக "சரி சார்... சாரி சாரி... பெரியப்பா'' என்றான் திணறலாக.
வருணுக்கும் சிரிப்பு வந்தது. கணபதி வருணிடம் "இன்னும் எத்தனை நாள்கள் இருக்கிறது தம்பி பரீட்சைக்கு?" என்றார்.
"இன்னும் ஒரு வாரத்தில் தாத்தா".
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது விதுஷி, அங்கே வந்தாள். வருணையும், தர்ஷனையும் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது.
கணபதி, "உன் அறைக்கு அவர்களை அழைத்துப் போம்மா" என்றார்.
மனதில் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு "வா வருண், வாங்க அத்தான்" என்று இருவரையும் அவள் அறைக்கு அழைத்துப் போனாள். அருகில் அவ்வளவு பெரிய உருவமாக நின்ற அவள் கணவனை, அவள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
அரிமா அவள் செயலில் மனதில் பல்லைக் கடித்தான். இரவு முழுவதும் அவளை நினைத்து தூங்காமல் இருந்தவனை, ஒரு பார்வை கூடப் பார்க்கவில்லை. அவளுடைய அலட்சியத்தில் கூட அவனுக்கு, அவள் மீதிருந்தப் பார்வையைத் திருப்ப முடியவில்லை. நேற்று அவன் வாங்கி வந்திருந்த மெஜந்தா கலர் புடவை, ரெடிமேட் பிளவுஸ், ஜாதி மல்லி பூ, சிறு ஒப்பனை, லட்சுமி கொடுத்த நகைகள் என்று, அவன் கண்ணுக்கு இன்றும் அவள் தேவதையாக தான் தெரிந்தாள்.
கணபதியிடம் திரும்பி "எப்போது கிளம்ப வேண்டும் தாத்தா? என்று கேட்டான்.
"முதல் முறை பேத்தி வீட்டிற்கு போகிறோம். அதனால் எல்லோரும் போகவேண்டும். பெண்கள் கிளம்ப நேரத்தை சொல்லவா வேண்டும்? அனைவரும் வந்ததும் கிளம்பிவிட வேண்டியது தான்" என்றார் தாத்தா.
அப்போது தான் கவனித்தான், அங்கே இந்திராணி இல்லை. அவர் இருந்தால் எல்லோரையும் இதற்குள் கிளப்பி இருப்பார்.
பாட்டி எங்கே தாத்தா?" என்றான் ஆச்சரியமாக.
"அவளுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. நேற்றிலிருந்து எதிலும் பட்டுக் கொள்ளாமல் இருக்கிறாள்" என்றார் வருத்தமாக.
நாச்சியப்பன் "அம்மா சீக்கிரம் சரியாகி விடுவார்கள்" என்றார். பின் அவர் சென்று எல்லோரையும் விரட்டி கிளம்பச் செய்து, ஒரு வழியாகக் கணபதி குடும்பத்தினர் தூத்துக்குடி வந்தடைந்தனர்.
விதுஷிகா வீட்டிற்கு அவர்கள் சென்ற போது, அவர்கள் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து, வாசலுக்கே வந்து கணபதி குடும்பத்தினரை வரவேற்று அழைத்துச் சென்றனர். அரிமா, விதுஷிகாவுக்கு இங்கும் ஆரத்தி எடுக்கப் பட்டது. பிரியாவின் அக்கா கீர்த்திகா, முதல் நாள் இரவே மதுரையிலிருந்து வந்து விட்டாள். அவள் தான் இவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள்.
கீர்த்திகா "மாப்பிள்ளை, வீட்டிற்குள் செல்ல வேண்டுமானால், தட்டில் கனமாக விழ வேண்டும். இல்லாவிட்டால் உள்ளே செல்ல முடியாது" என்றாள் அரிமாவிடம்.
அதற்கு காயத்ரி "என் தம்பி கனமாகப் போட்டால் உங்களால் பிடிக்க முடியுமா?" என்றாள் கேலியாக.
கீர்த்திகா "போட சொல்லுங்களேன். பிடிக்க முடிகிறதா என்று பார்த்து விடலாம்" என்றாள் சவாலாக.
கீர்த்தியின் அம்மா ரேணுகா "போதும் கீர்த்தி, மாப்பிள்ளைக்கு வழி விடு" என்றார். அவருக்கு அரிமா வீட்டினர் இதை தவறாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்று தோன்றியது.
அரிமா "இருக்கட்டும் அத்தை, என்னிடம் தானே பேச முடியும்?" என்றான் சிரித்த முகமாக. அவன் வீட்டினருக்கு மயக்கம் வராத குறை தான். இவனுக்கு இப்படிக் கூடப் பேசத் தெரியுமா என்பது போல் இருந்தது அவர்கள் பார்வை.
அரிமா பக்கத்தில் இருந்த வெற்றியைத் திரும்பிப் பார்க்கவும், அவன் ஐநூறு ரூபாய் கட்டு ஒன்றைக் கையில் கொடுத்தான். அதை ஆரத்தி தட்டில் வைத்தான் அரிமா. இரு வீட்டாரும் திகைப்பில் இருக்கும் போதே புதுமணத் தம்பதியினர் வீட்டிற்குள் சென்று விட்டனர்.
-தொடரும்....