செம்பருத்தி பூ 4
கணபதி குடும்பத்தினர் அனைவரும் நெல்லையப்பர் கோவிலின் அன்னதான கூடத்தில் இருந்தனர். அரிமா துரை கையால் அன்னதானம் தொடங்கி வைக்கப்பட்டது. சற்று நேரம் நின்று விட்டு, வீட்டுப் பெண்கள், கணபதி ஆகியோரை காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார் நாச்சியப்பன்.
அரிமாவின் போன் அடித்தது. சற்றுத் தள்ளி வந்து எடுத்துப் பார்த்தான். வெற்றிவேல் தான் அழைத்தான். சிலமணி நேரத்திற்கு முன் நண்பன் சொன்ன வேலையை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டான் அவன். அந்த தகவலை கூறவே இப்போது அழைத்தது.
சற்றுமுன் அரிமா வெற்றியிடம் விதுஷியை சுட்டிக் காட்டி "அந்தப் பெண்ணை பற்றிய தகவல்கள் வேண்டும்'' என்றான்.
வெற்றி திகைத்துப் போய் அப்படியே நின்று விட்டான்.
அரிமா "வெற்றி, வெற்றி" என்று இருமுறை அழைத்த பிறகு தான் வெற்றிவேல் சிலைக்கு உயிர் வந்தது.
வெற்றி "என்ன டா சொல்ற? இது வரை நாம நிறைய கிரிமினல் வேலை எல்லாம் செஞ்சிருக்கோம் டா. ஆனா இது, அந்த கேட்டகரில வராது மச்சான்" என்றான் அழுகுரலில்.
அரிமா "அவளை எனக்கு பிடிச்சிருக்கு வெற்றி" என்றான் ஆழ்ந்த குரலில்.
அவனின் அந்த வார்த்தைக்கு பிறகு வெற்றி வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. "நீ சொல்லிட்டல்ல, இதுக்கு அப்புறம் தங்கச்சிய பத்தி நீ கவலை படாத. நா பாத்துக்குறேன்" என்றான்.
அரிமா சென்றதும், வெற்றி விதுஷிகாவை பின் தொடர்ந்து சென்றான். விதுஷிகா, அவளுடன் வந்தவர்கள் அனைவரும் கோவிலை சுற்றி பார்த்து விட்டு, திருமண மண்டபத்திற்கு சென்று மதிய உணவை முடித்து விட்டு, வேனில் தூத்துக்குடி கிளம்பினர்.
வெற்றி விசாரித்ததில், மணப்பெண் உடன் வங்கியில் வேலை செய்பவள் தான் விதுஷிகா என்பது தெரிந்து விட்டது. அதன் பின் வங்கிக் கிளையை தெரிந்து கொண்டு, தூத்துக்குடியில் அந்த ஏரியாவில் அவனுக்கு தெரிந்தவர்கள் மூலமாக விசாரித்தான். விதுஷிகா தூத்துக்குடியில் அவள் வீட்டிற்கு சென்று சேரும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, அவளைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் வெற்றியின் கைக்கு வந்து சேர்ந்து விட்டது.
வெற்றி கூறிய தகவல்களை கேட்டுக் கொண்டான் அரிமா.
"நாளைக்கு தூத்துக்குடி போகனும் டா" என்றான் அரிமா.
"நாளைக்கு போர்டு மீட்டிங் இருக்கிறதுடா" என்றான் வெற்றி.
"மாலையில் தான்டா போகணும். அவள் பாங்கில் இருந்து கிளம்பும் நேரத்தை கேட்டு வை"
"மச்சான், சூப்பர் டா" வெற்றி சந்தோசமாக கூறித் தன் வேலையை பார்க்க சென்றான்.
அடுத்த நாள் காலை விதுஷிகாவுக்கு எப்போதும் போல் பொழுது விடிந்தது. அன்று அவளுடைய வாழ்வை மாற்றப் போகிறவனை சந்திக்கப் போகிறோம் என்று தெரியாமலே, காலை வேலைகளை செய்தாள். காலை எழுந்ததும் யோகா செய்தாள், தந்தையுடன் சேர்ந்து நியூஸ் பேப்பர் வாசித்து, அதிலிருக்கும் எகனாமிக் செய்திகளை அவருடன் விவாதித்தாள்.
பின் குளித்து, தாயுடன் பேசி சிரித்து, சாப்பிட்டு அலுவலகம் கிளம்பினாள். பூபதிராஜ் அவருடைய பைக்கிலும், விதுஷி அவளுடைய ஸ்கூட்டியிலும் சென்றனர். திங்கள் கிழமை என்பதால் பேங்க் வழக்கம் போல் பரபரப்பாக இருந்தது, வேலை முடிய வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு, அந்த வளாகத்தை விட்டு வெளியேறினாள்.
அவள் ஸ்கூட்டி அருகில் வந்து, தன்னுடைய ஹாண்ட்பாகில் இருக்கும் சாவியைத் தேடினாள். அப்போது அவளுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டது.
"விதுஷிகா"
அந்த குரலில் இருந்த ஆளுமையிலும், ஆண்மையிலும் விதுஷி சற்று திடுக்கிட்டுத் திரும்பினாள். இது....? இவர்....? அவள் சற்று யோசித்ததுமே அவளுக்கு அவனை நியாபகம் வந்து விட்டது. நேற்று கோவிலில் யானையிடம் ஆசீர்வாதம் வாங்கியவன். ஆனால் தன்னிடம் இவனுக்கு என்ன வேலை? அதிலும் தன் பெயர் கூட இவனுக்கு தெரிந்திருக்கிறது. எப்படி? அவள் முகத்தில் குழப்ப ரேகைகளை கண்டான் அரிமா.
"என் பெயர் அரிமா துரை". என்றான்.
அவள் இபோதும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நின்றாள்.
"விதுஷிகா?" என்றான் அரிமா கேள்வியாக.
அவளுக்கு அவன் உருவமும், குரலுமே சற்று மிரட்சியைக் கொடுத்து விட்டது. தன்னை நினைத்தே வெட்கியவளாக, "சொல்லுங்க சார், என்ன விஷயம்? என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்? என்றாள் முடிந்த வரை நிதானமாக.
அவளை அவதானித்த படியே," எனக்கு உன்னிடம் ஒரு பத்து நிமிடங்கள் பேச வேண்டும்" என்றான்.
"உங்களை எனக்குத் தெரியாது. நான் ஏன் உங்களுடன் பேச வேண்டும்? நான் கிளம்பப் போகிறேன்" என்றவாறு மீண்டும் பாகினுள் சாவியை தேடினாள்.
"இதையா தேடுகிறாய்?" என்றவாறு அவளுடைய ஸ்கூட்டி சாவியை அவள் முகத்திற்கு நேரே ஆட்டி காண்பித்தான். "நான் பேச நினைத்ததை, நீ கேட்காமல் இங்கிருந்து செல்ல முடியாது" என்றான் திமிராகவே.
அரிமா அவளிடம் இப்படி பேச நினைத்து வரவில்லை. ஆனால், அவள் அங்கிருந்து உடனே சென்று விட கூடாது என்று, மதியமே அவளுடைய ஸ்கூட்டி சாவியை கைப்பற்றி வைத்திருந்தான். ஆனால் இதுவரை மறுப்பையம், எதிர்ப்பையும் சந்திக்காதவனால், அவளுடைய சிறு மறுப்பை கூட பொறுக்க முடியாமல் அவனுடைய இயல்பான திமிர் வெளி வந்து விட்டது.
விதுஷிகா அவசரமாக யோசித்தாள். இப்போது அவள் இங்கிருந்து செல்ல வேண்டுமானால் அவளுடைய சாவி வேண்டும். அது கூட வேண்டாம், நடந்து சென்று விடலாம் என்றாலும், இந்த பீமசேனனை மீறி இங்கிருந்து செல்வது கடினம். ஏனெனில் அவளுடைய வங்கி, தனி காம்பௌண்டிற்குள் அமைந்திருந்தது. செக்யூரிட்டி கூட இப்போது வாசலில் இல்லை, வங்கி பூட்டப் போகும் நேரம் என்பதால் அவர் மேனேஜருடன் சேர்ந்து, லாக்கர் அறையை பூட்டுவதற்கு உதவிக் கொண்டிருப்பார். அதனால் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்டு விட முடிவு செய்தாள்.
"சொல்லுங்கள், என்ன பேச வேண்டும்? எதுவாக இருந்தாலும் என்னை நீ, வா என்று மரியாதை இல்லாமல் பேசாதீர்கள்" என்றாள் விதுஷி.
"அதை இப்படி நடு வழியில் நின்று கொண்டு பேச முடியாது. எதிரில் இருக்கும் காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம். அடுத்த விஷயம் உன்னை, நீ என்று சொல்ல தான் என்னால் முடியும். அதை மாற்றிக் கொள்கிற விருப்பம் எனக்கில்லை. என்ன? போகலாமா?"
முகம் கடுகடுக்க பதில் சொல்லாமல் முன்னால் திரும்பி நடந்தாள், விதுஷி. அவனும் தோளை குலுக்கி விட்டு அவள் பின்னால் சென்றான். ஒரு டேபிளில் இருவரும் அமர்ந்தனர்.
"காபி ஓர் டீ?" என்று கேட்டான் அரிமா.
"நான் எதுவும் குடிக்க வரவில்லை"
அவள் பேசவே இல்லாதது போல பாவித்து, வெயிட்டரை அழைத்து இரண்டு காபிக்குச் சொன்னான்.
பின் அவள் விழிகளை நேராக சந்தித்து, "எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது விது. உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறேன்" என்றான் அரிமா ஆழ்ந்த குரலில்.
விதுஷி சற்று நேரம் பேச்சு வராமல், மூளை மரத்துப் போய் அமர்ந்திருந்தாள். அவள் சுதாரிக்க சற்று அவகாசம் கொடுத்து, அரிமா அமைதியாக அவள் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். அவள் அசைவதாகக் காணோம். அதற்குள் வெயிட்டர் வந்து காபி வைத்துவிட்டு சென்றார். அந்த அசைவில் தான் விதுஷி தெளிந்தாள்.
ஒரு பெரிய மூச்சை எடுத்துவிட்டு பேச ஆரம்பித்தாள். "நான்.."
அவள் தொடங்குமுன் அரிமா, "வேண்டாம், முதலில் காபியை குடி. அப்புறம் பேசலாம்" என்று தடுத்தான்.
காபி காலியாகும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பின்பும் அரிமாவே தொடங்கினான்.
"நான் என்னைப் பற்றி கூறி முடித்த பிறகு, உன் பதிலை சொல்" என்று தொடங்கி தன்னுடைய குடும்பம், தொழில்கள், தன் குணம், விருப்பு வெறுப்பு, இத்தனை நாள் பெண்களிடம் விருப்பமற்று இருந்தது எல்லாவற்றையும் கூறி, அவளைப் பார்த்து பிடித்தது, விசாரித்தது எல்லாம் கூறி முடித்தான்.
அவன் பேசும்போதே விதுஷியின் மூளை அவசர ஆலோசனை நடத்தியது. அவளுக்கு கணபதி குரூப்ஸ் அதன் செல்வாக்கு எல்லாமே நன்றாகவே தெரியும். அவள் பாங்கில் வேலை செய்வதால் பெரிய நிறுவனங்கள் அவற்றின் பங்குகள் எல்லாமே அவளுக்கு அத்துப்படி. அப்படிப் பார்த்தால், கணபதி குரூப்ஸ் தென்னிந்தியாவின் முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்று. அதற்கு ஒற்றை வாரிசு என்றால் இவனை எதிர்ப்பது அவளால், அவள் குடும்பத்தால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் இவன் உடல்மொழி, உருவம், நிறம், குரல் முக்கியமாக அவனுடைய கர்வம், திமிர், கோபம் எதுவும் அவள் மென்மையான குணத்திற்கு சற்றும் பொருந்தாது. அவளைப் பொறுத்தவரை திருமணம் என்பது, ஒத்த குணங்களையுடைய இருவர் வாழ்க்கை முழுக்க ஒன்றாக பயணம் செய்வது தான். இதில் இவளும் அரிமாவும், வெவ்வேறு துருவங்கள்.
இவனிடம் அவளுடைய சிறு மறுப்பு ஏற்படுத்திய மாற்றத்தை நேரிலேயே இப்போது தான் கண்டாள். பேச மறுத்து விடுவாள் என்ற சந்தேகித்ததற்கே சாவியை கைப்பற்றி வைத்திருக்கிறான். இவனிடம், இவனையே மறுத்தால், நிச்சயம் இங்கிருந்து தான் உருப்படியாக வீட்டிற்கு செல்ல முடியாது என்பது அவளுக்கு புரிந்தது.
எனவே "எனக்கு இப்போது திருமணத்தைப் பற்றிய எண்ணமே இல்லை'' என்றாள் விதுஷிகா.
"ஏன்?" ஒற்றை வார்த்தை கூர்மையாக வந்தது அரிமாவிடமிருந்து.
"இதுவரை திருமணத்தைப் பற்றி யோசித்தது இல்லை. வீட்டிலும் யாரும் அதைப்பற்றி பேசியதில்லை. அதனால் எனக்கும் தோன்றவில்லை."
"இருக்கட்டும். இப்போது தான் உனக்கு இருபத்து மூன்று ஆகிறதே. இது திருமணத்திற்கு பொருத்தமான வயது தான். யோசித்துப் பார்" என்றான் அதிகாரமாக.
விதுஷிகா மனதில் அவனை வறுத்து எடுத்தாள். இவனைப் போய் கஜேந்திரனை மாதிரி கம்பீரம் என்று நினைத்தேனே. ச்சை, இவன் ஒரு காண்டாமிருகம், அப்புறம்... இவனைத் திட்ட கூட ஒரு வார்த்தை அவசரத்திற்கு கிடைக்கவில்லையே…
"ம்க்கும்.." அரிமா சற்று செருமி அவளை நடப்புக்கு அழைத்தான்.
நல்லவேளை ஒருவர் மனதில் நினைப்பது இன்னொருவருக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு நல்லது. முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டு "நான்.. நாளைக்கு பதில் சொல்லட்டுமா?" பணிவு போல் கேட்டாள்.
அரிமாவின் முகம் சற்றுத் தெளிந்தது. "சரி விது, நீ நாளைக்கே பதில் சொல்" என்றான் அவன்.
"என்னை விது என்று கூப்பிடாதீர்கள், ப்ளீஸ்."
"எனக்கு இப்போதைக்கு அப்படி கூப்பிடுவது தான் பிடிக்கிறது. கல்யாணத்திற்கு பிறகு உனக்கு பிடிக்கிற மாதிரி சொல். மாற்றிக் கொள்கிறேன்"
தன் பேச்சில் தன்னைத் தானே நொந்து கொண்டு அவனிடம் சொல்லிவிட்டு சாவியையும் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள் விதுஷிகா.
செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு சற்றுநேரம் நின்று விட்டு தன்னுடைய காருக்கு சென்றான் அரிமா துரை. காரில் அமர்ந்து இங்கே நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான் வெற்றி வேல்.
அரிமா காரில் ஏறியதும் வெற்றி "மச்சான், தங்கச்சி என்னடா சொல்லுச்சு?" என்றான்.
"அவள் நாளைக்கு பதில் சொல்லுகிறாளாம்டா மாப்பு" அரிமா நல்ல மனநிலையில் இருந்தால் தான் இப்படிப்பட்ட வார்த்தை எல்லாம் வரும்.
அவன் உற்சாகம் வெற்றிக்கும் தொற்றிக் கொண்டது. அவன் உடனே "நாளைக்கு தங்கச்சி நல்ல பதில் தான்டா சொல்லும். எனக்கு வைரமாளிகை ஹோட்டலில் ட்ரீட் வேணும் டா" என்றான்.
"அது என்ன டா நாளைக்கு, இப்போவே போகலாம்டா" என்றான் அரிமா.
வீட்டிற்கு சென்ற விதுஷிகா மிகுந்த மனஉளைச்சலில் இருந்தாள். கவனித்துக் கேட்ட தாயிடமும் தலைவலி என்று பொய் கூறி விட்டு, அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.
அவனை எப்படி சமாளிப்பது? வீட்டில் சொல்லி விடலாமா? அவனுடைய செல்வ நிலைக்கும், செல்வாக்கிற்கும் தன் குடும்பத்தின் அனுமதியோ, தன்னுடைய அனுமதியோ கூட அவனுக்குத் தேவைப் படாது. அதனால் வீட்டில் சொல்லுவதால் அவர்களையும் கவலைப்பட வைப்பதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது. அதனால் வீட்டில் சொல்ல கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.
நேர்மையாக இருந்தால், நிச்சயம் அவனிடம் இருந்து தப்ப முடியாது. பலவாறு யோசித்து அவனிடம் பொய் கூறினால் மட்டுமே, தன்னால் இந்த பிரச்சினையிலிருந்து வெளிவர முடியும் என்று தோன்றியது அவளுக்கு. என்ன சொல்வது? எப்படி சொல்வது? என்று யோசித்து முடிவு செய்த பிறகு நள்ளிரவுக்கு மேல் ஒரு வழியாக தூங்கத் தொடங்கினாள் விதுஷி.
- தொடரும்…