செம்பருத்தி பூ 19
இரவே கணபதிக்கு மாரடைப்புக்கான முதலுதவியான, எலக்ஸிம் இன்ஜெக்சன் போடப்பட்டு, சற்று நேரத்தில் ஆன்ஜியோகிராம் செய்யப்பட்டது. அவருக்கு பைபாஸ் சர்ஜரிக்கு பரிந்துரை செய்தார்கள் மருத்துவர்கள். அவருடைய வயதையும், உடல் நிலையையும் கருத்தில் கொண்டு, மதுரையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது என்ற, மருத்துவக் குழுவின் பரிந்துரையின் படி, கணபதியை மறுநாள் மதுரையில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக முடிவு செய்யப்பட்டது.
காலையில் ஒன்பது மணிக்கு ஆம்புலன்ஸ் திருநெல்வேலியில் இருந்து மதுரைக்குக் கிளம்புவதாக இருந்தது. விதுஷி வீட்டினரிடம், கீர்த்தி இரவே விஷயத்தை சொன்னதால் அவர்கள் காலையில் வந்து விடுவதாகக் கூறி இருந்தனர். விதுஷி அதிகாலையிலேயே போன் செய்து, அரிமாவிடம் தன்னை கணபதியைக் காண மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி கூறி விட்டாள்.
அரிமா வீட்டிற்குள் நுழைந்த போது விதுஷியும், கீர்த்தியும் ஹாலில் தான் அமர்ந்திருந்தார்கள். தூக்கமின்றி சிவந்த கண்களுடன் உள்ளே வந்தவனைக் கண்டு விதுஷிக்குக் கவலையாக இருந்தது. ஓடிப் போய் சமையலறை சென்று அவனுக்கு காபி கலக்கி எடுத்துக் கொண்டு அவசரமாக வந்தாள். அவன் சோபாவில் தலையைப் பின்னுக்குச் சாய்ந்தவாறு கண்ணை மூடி இருந்தான்.
அவனருகில் சென்று தோளைத் தொடவும், மெதுவாகக் கண் விழித்தான். அரிமா அங்கு அமரவும், கீர்த்திகா விதுஷியின் அறைக்குச் சென்று விட்டாள்.
விதுஷி, அவனிடம் காபிக் கோப்பையை நீட்டினாள்.
"தேங்க்ஸ்" என்றவாறு வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான்.
அரிமா காபி குடித்துக் கொண்டிருந்த போது, காயத்ரியின் கணவன் விஷ்ணு அங்கு வந்து, தாத்தாவின் உடல் நிலை பற்றி விசாரித்தான். அவன் மகள் விழித்ததும் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வருவதாகக் கூறினான். ஆனால் தன்ஷிகாவும், அனுஷாவும் இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். இரவில் குடும்பத்தினர் மருத்துவமனை கிளம்பும் போது பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். அப்படி இருந்தும் காலையில் சீக்கிரம் எழ வேண்டும். மருத்துவமனையில் கணபதியின் நிலை என்ன? என்று எதைப் பற்றிய கவலையும் இன்றி தூங்கிக் கொண்டிருந்தனர்.
அரிமா காபி குடித்து முடித்ததும், விதுவுடன் கீர்த்தியும் கிளம்பி மருத்துவமனைக்கு சென்றனர்.
அரிமா விதுவை அழைத்துக் கொண்டு வருவதைப் பார்த்த சரஸ்வதி, தன் தாயிடம் திரும்பி "அம்மா, அங்கே பாருங்கள். அப்பாவின் இந்த நிலைக்குக் காரணமானவளை உங்கள் பேரன் கூப்பிட்டுக் கொண்டு வருகிறான்" என்றார்.
இரவு முழுவதும் சரஸ்வதி, விதுவின் ராசி தான் கணபதியின் இந்த நிலைக்குக் காரணம் என்று இந்திராணிக்கு, மற்றவர்கள் அறியாமல் தூபம் இட்டுக் கொண்டிருந்தார்.
"அம்மா, அன்றைக்கே குருக்கள் என்ன சொன்னார்கள்? இன்னும் ஒரு மாதம் அவளை அரிமாவுடன் சேரக் கூடாது என்றார். சரியாக இன்று அரிமாவுடன் முதலிரவுக்கு ஏற்பாடு செய்த போது தான், அப்பாவுக்கு இப்படி ஆகி விட்டது. இவளை அரிமாவுடன் சேர விட்டிருந்தால் அப்பாவின் உயிர் போய் இருந்தாலும் ஆச்சரிய படுவதற்கு ஒன்றுமில்லை" என்று பேசிப் பேசியே அவர் மூளையை மழுங்கடித்து, அவரை கணபதிக்கு உடல் நிலை சரி இல்லாமல் போனதற்கு முழுமுதற் காரணமே, விதுஷிகா தான் என்று நம்பும்படி செய்திருந்தார்.
மருத்துவமனையில் கணபதிக்குத் தனியாக ஒரு தளத்தையே அளித்திருந்தனர். அந்த தளத்தில் எக்ஸிகியூடிவ் ரூம்கள் இருந்தன. அதனாலே குடும்பத்தினர் அனைவரும் அங்கே தங்க முடிந்தது. சரஸ்வதி இந்திராணியுடனே இரவு முழுதும் ஒரு அறையில் இருந்தார். அதிகாலை எழுந்து மீண்டும் கணபதி இருந்த அறை வாசலில் வந்து, அனைவரும் அமர்ந்து விட்டனர்.
அரிமாவும், விதுவும் வந்த போது குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர்.
அப்போது இந்திராணி, சரஸ்வதியின் குரோதமும், கோபமும் நிறைந்த பார்வையில் விதுஷியின் நடை தடைப்பட்டது. அவள் அதற்கு மேல் நடக்க முடியாமல் அங்கேயே நிற்கவும், அரிமாவும் கேள்வியாக அவளை நோக்கினான். விதுஷியின் பார்வை இவர்கள் மேல் இருக்கவும் அவர்களை பார்த்தான்.
அதற்குள் இந்திராணி "நீ ஏன் இங்கே வந்தாய்? உன்னால் தான் இத்தனை நாள் எந்த நோயும் இல்லாமல் இருந்த என் கணவருக்கு இப்படி ஒரு நிலை வந்து விட்டது. இங்கிருந்து போய் விடு" என்று கத்த தொடங்கி விட்டார்.
அவர் கத்தியதில் பயந்த விது அரிமாவிடம் நெருங்கி நின்றாள். அவன் ஆதரவாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.
அரிமா "பாட்டி, என்ன பேசுகிறீர்கள்? விதுவுக்கும் தாத்தாவின் நிலைக்கும் என்ன சம்பந்தம்" என்றான் கோபமாக.
"என்ன சம்பந்தமா? அன்றைக்கே குருக்கள் உன்னுடன் அவளைச் சேர விடக் கூடாது என்றார். நேற்று சடங்கு என்று முடிவு செய்த பின், அந்த சமயத்தில் இவருக்கு இப்படி ஆனதற்குக் காரணம் யார்? இவளுடைய ராசி தான். இவள் இந்த குடும்பத்திற்குள் இனிமேல் இருக்கக் கூடாது. இவளை வெளியே அனுப்பு" என்றார் ஆக்ரோஷமாக.
நாச்சியப்பன் "அம்மா, கொஞ்சம் அமைதியாக இருங்கள். அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது. நாம் இத்தனை பேர் இருக்கும் போது அவரைப் பார்த்துக் கொள்ள மாட்டோமா? நீங்கள் தேவை இல்லாமல் இந்த சிறு பெண்ணின் மேல் பாரத்தை சுமத்தாதீர்கள்" என்றார் முடிந்த வரை கோபத்தை அடக்கிக் கொண்டு.
சரஸ்வதி "அண்ணா, அம்மா பெரியவர்கள். அப்பாவுக்கு ஒன்று என்றதும், அவர் வருத்தத்தில் பேசுகிறார். சற்றுப் பொறுத்துப் போனால் என்ன? ஆளாளுக்கு அம்மாவை பேச விடாமல் செய்கிறீர்கள்" என்றார் இந்திராணியை தூண்டி விடும் விதமாக.
சேகர் "சரோ, அமைதியாக இரு. உனக்கு எப்போது என்ன பேச வேண்டும் என்று தெரியாதா?" என்று சரஸ்வதியை அடக்கப் பார்த்தார்.
"நீங்கள் சும்மா இருங்கள். உள்ளே முடியாமல் படுத்திருப்பது என் அப்பா. எனக்குக் கவலை இருக்கக் கூடாதா?" என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் சரஸ்வதி.
சேகர் "இது திருந்தாத ஜென்மம்" என்று நினைத்து, எப்படியும் போ என்பது போல முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
இந்திராணி "நாச்சி இவளை அனுப்புகிறாயா? மாட்டாயா?" என்றார் மீண்டும்.
விதுஷிக்குத் தன்னை அறியாமல் கண்ணீர் வரவா என்றது. அரிமாவும் இது மருத்துவமனை, அதிலும் தாத்தாவின் நிலைமை சரி இல்லாததால் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான்.
சரஸ்வதிக்குத் தான் கொண்டாட்டமாக இருந்தது. விதுஷியை இப்படி அவமானப் படுத்த வேண்டும் என்ற அவருடைய எண்ணம் ஈடேறி விட்டதே!.
கீர்த்திகா தன் மகனை வைத்துக் கொண்டு, விதுவின் மறுபுறம் நின்று கொண்டிருந்தாள். தங்கையின் நிலையைக் கண்டு அவளுக்கும் கலக்கமாக இருந்தது. அடுத்த குடும்பத்தில் வந்து அவள் என்ன பேசுவது? அதுவும் உள்ளே எல்லோருக்கும் பெரியவர், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது? எனவே அவள் மௌனமாகவே நின்றிருந்தாள்.
நாச்சியப்பன் "விதுவை இங்கிருந்து அனுப்பி விட்டால், அப்பா எழுந்து விடுவாராம்மா? அல்லது என் மகனையும் மருமகளையும் இந்த வீட்டை விட்டு நிரந்தரமாக அனுப்ப வேண்டுமா? நீங்கள் பெரியவர்கள் நீங்கள் சொன்னால் சரியாக தான் இருக்கும் அம்மா. ஆனால் ஒன்று இங்கிருந்து போனால் என் மகனும், மருமகளும் ஒன்றாக தான் போவார்கள். அதே போல வீட்டை விட்டுப் போனாலும், இரண்டு பேரையும் ஒன்றாகத் தான் வெளியே அனுப்புவேன். அவன் மனைவியை அவமதித்த இடத்தில், அவன் இருப்பதற்கு நானே சம்மதிக்க மாட்டேன்" என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்திராணி பேச்சற்று நின்றார். அரிமா அவருடைய வாரிசு. அவன் வேண்டும் அவருக்கு. ஆனால் அவன் மனைவி வேண்டாம். இப்படி முரணான மன நிலையில், என்ன பேசுவது என்று விழித்தார் அவர்.
அப்போது மருத்துவர் வரவும், அனைவரின் கவனமும் அவரிடம் திரும்பியது. அவர் உள்ளே சென்று கணபதியைப் பரிசோதித்தார். அப்போது கணபதி கண் விழித்திருந்தார். மருத்துவர் கேட்ட கேள்விகளுக்கு தலையை மட்டும் அசைத்துப் பதில் சொன்னார்.
பின் வெளியில் வந்து "சார், இப்போது அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார். ஆனால் பைபாஸ் சர்ஜரி சீக்கிரம் செய்ய வேண்டும். நாம் ஏற்கனவே முடிவு செய்த படி அவரை இன்று மதுரை அனுப்பி வைத்து விடலாம்" என்றார் மருத்துவர்.
குடும்பத்தினர் சில கேள்விகளைக் கேட்கவும் பதில் கூறியவர் பின் "ஒவ்வொருவராகச் சென்று பார்த்து வாருங்கள். யாரும் அவருடன் பேச முயல வேண்டாம்" என்று கூறி விட்டுச் சென்றார்.
உடனே இந்திராணியும், சரஸ்வதியும் கணபதியைக் காண உள்ளே சென்று விட்டனர்.
அப்போது விதுஷியின் வீட்டினர் அங்கு வந்தனர். பூபதி ராஜ், கீதா, தர்மராஜ், வாசவன், தர்ஷன் ஆகியோர் வந்திருந்தனர். அன்னையைப் பார்த்ததும் விதுஷிக்குக் கண்கள் கலங்கியது. ஓடிச் சென்று கீதாவை அணைத்துக் கொண்டாள்.
"என்னம்மா? ஏன் அழுகிறாய்? என்ன?" என்று பதறினார் கீதா.
அதன் பின்பே சுயம் தெளிந்தவள் "இல்லைம்மா, திடீரென்று தாத்தாவுக்கு முடியவில்லை" என்றாள் திணறியவாறு.
"சரி சரி, அழாதே. அம்மா கூட இருக்கிறேன். பெரியவருக்கு ஒன்றும் ஆகாது. சரியா?" என்று சமாதானம் கூறி விதுஷியைத் தேற்ற முயன்றார். அவர் புதிய இடம், புதிய சூழ்நிலை, இதை எல்லாம் மகள் எப்படிச் சமாளித்தாலோ? அதில் தான் அழுகிறாள் என்று கீதா நினைத்து விட்டார்.
சிறிது நேரத்தில் இந்திராணியும், சரஸ்வதியும் வெளியில் வரவும் ஒவ்வொருவராகச் சென்று கணபதியைப் பார்த்து வந்தனர்.
ஏற்கனவே நாச்சியப்பன் கோபப் பட்டிருப்பதால், இந்திராணியும், சரஸ்வதியும் விதுஷி வீட்டினர் வந்த பிறகு எதுவும் பேசவில்லை.
கீதா, லட்சுமியிடம் சென்று விசாரித்து ஆறுதல் சொன்னவர், இந்திராணி மற்றும் சரஸ்வதியிடம் சென்று எதுவும் பேசவில்லை. அவர்கள் முகங்களே, அவர்களுக்கு இவர்களின் வருகை பிடிக்கவில்லை என்பதை எடுத்துக் காட்டியதால், அவர்கள் அருகிலேயே செல்லாமல் இருந்து கொண்டார்.
ஆண்கள் சென்று நாச்சியப்பன், அரிமா, சேகர் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தனர். பிறந்த வீட்டினரின் வருகை விதுஷிக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது.
சற்று நேரம் கழித்து விஷ்ணு தன் மகள் வர்ஷாவுடன் அங்கு வந்தான். அவர்களுடனே தன்ஷிகா, அனுஷா வந்திருந்தனர்.
மதுரைக்கு கணபதியுடன் யார் யார் செல்வது? என்று பேசிக் கொண்டிருந்தனர்.
இந்திராணி, அரிமா, நாச்சியப்பன், விஷ்ணு ஆகியோர் செல்வது என்றும், சேகர் வீட்டில் ஆண் துணையாக இருக்கட்டும், என்றும் முடிவு செய்தார்கள். தர்ஷன் தானும் உடன் வருவதாகத் தெரிவித்தான்.
விது அன்னையுடன் பேசிக் கொண்டிருந்தாலும், அவள் பார்வை அரிமாவைச் சுற்றியே வட்டமிட்டது. அரிமாவும் அதை உணர்ந்தே இருந்தான். நேரம் ஒதுக்கிக் கொண்டு அவளிடம் வந்தான்.
கீதாவிடம் "அத்தை, விதுவுடன் கொஞ்சம் பேசி விட்டு வருகிறேன்" என்று அவரிடம் கூறிவிட்டு, அவளைத் தனியாக அழைத்துச் சென்றான்.
தனி அறைக்குள் சென்றதும் விதுஷி தானாகவே அவனை அணைத்து, அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். அரிமாவுக்குப் புரிந்தது, அவனும் ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டான். அவன் நெஞ்சில் சூடான நீர் பட்டதுமே அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான். அவள் அழுத விழிகளைக் கண்டு அவனுக்கும் நெஞ்சம் வலித்தது.
"அழாதே விது. நான் வருவதற்கு இன்னும் எத்தனை நாள்கள் ஆகும் என்று தெரியவில்லை. கிளம்பும் போது நீ தைரியமாக இருக்க வேண்டாமா?" என்றான் அரிமா.
முயன்று அழுகையை நிறுத்தி அவனை நிமிர்ந்து பார்த்தாள் விதுஷி.
"நான் நீங்கள் வரும் வரை தூத்துக்குடி போய் வரவா?" என்றாள்.
"ஏன்?" என்றான் அரிமா ஒரு மாதிரிக் குரலில்.
அவள் பதிலின்றி தலை குனிந்தாள்.
அவன் ஒரு பெருமூச்சுடன் "இன்னும் நீ உன் மனதில் நினைப்பதை தயக்கமின்றி, என்னிடம் பேச முடியவில்லையா விது?" என்றான் வேதனையாக.
"அப்படி இல்லை. இன்று பாட்டி நடந்து கொண்ட விதம் எனக்கு வருத்தமாக இருக்கிறதுங்க. அதனால் தான்" என்றாள் தயக்கத்துடன்.
"நீ அப்படி சென்றால் அவர்கள் சொல்வதை நாம் ஒத்துக் கொண்டது போல் ஆகி விடாதா?" என்றான் அரிமா சற்றுக் கோபத்துடன்.
"இல்லை அரி, எனக்கு ஒரு வாரமாகவே மன உளைச்சலாக தான் இருக்கிறது. அது உங்களுக்கும் தெரியுமே. ப்ளீஸ், இந்த ஒரு முறை மட்டும் போய் வருகிறேனே" என்றாள் விது கெஞ்சலாக.
"என்ன மன உளைச்சல் உனக்கு?" என்றான் அரிமா கோபமாக.
"ஏன்? என்னவென்று உங்களுக்குத் தெரியும். என் வாயைக் கிளறாதீர்கள்" என்றாள் அவளும் பதிலுக்கு.
"என்னடி தெரியும்? நான் உன்னிடம் கணவன் உரிமையை தானே எடுத்துக் கொண்டேன்? என்னவோ உலகத்தில் நடக்காத விஷயம் மாதிரி சோக கீதம் வாசித்துக் கொண்டிருக்கிறாய்? நான் தான் நீ இப்படிக் கவலைப் படுவதற்கு உன் மீது கோபப்பட வேண்டும். தெரியுமா?" என்று சீறினான் அரிமா.
அவனுடைய சீற்றத்தில் வழக்கம் போல் அவளுக்குப் பேச்சு மறந்துவிட்டது. அவளுடைய அதிர்ந்த தோற்றத்தை பார்த்தவனால் அதற்கு மேல் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. அவனே அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.
"இங்கே பார் விது. நாம் இருவரும் கணவன், மனைவி. நமக்குள் நடந்ததற்கு நாம் யாருக்கும் விளக்கம் கொடுக்கத் தேவை இல்லை. புரிகிறதா? ஒன்றுமில்லாத விஷயத்தை நீயே எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாக்கி விடாதே" என்றான் கண்டிப்பான குரலில்.
அவள் தலையசைக்கவும் "மாமா, உன் மீது கோபமாக இருக்கிறேன். அப்புறம் தாத்தாவை நினைத்துக் கவலையிலும் இருக்கிறேன். உனக்கு என் மீது அக்கறை இருந்தால் நீ இப்படிப் பேசாமல் எனக்கென்ன என்று இருப்பாயா?" என்றான் அரிமா கேலியும் தாபமுமாக.
அவள் தயக்கத்துடன் முகம் சிவக்க, அவன் இதழை நெருங்கவும், அவளுக்குக் கஷ்டம் கொடுக்காமல் அவனே அவளை எடுத்துக் கொண்டான்.
சற்றுப் பொறுத்து "சரிடி, நீ உன் அம்மாவுடன் போ. நான் திருநெல்வேலி வந்ததும் உன்னை வந்து அழைத்துக் கொள்கிறேன்" என்றான்.
அவள் ஆச்சரியமாகப் பார்க்கவும் "உன்னுடைய பெர்பாமன்ஸ் இன்றைக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் தான்" என்று கண்ணடித்தான்.
அதன் பின் கணபதியுடன் அரிமா மற்றும் மற்றவர்கள் செல்லவும், விதுஷி லட்சுமி, காயத்ரியிடம் மட்டும் சொல்லிவிட்டு தன் வீட்டாருடன் தூத்துக்குடி சென்று விட்டாள்.
-தொடரும்......