செம்பருத்தி பூ 20
மதுரையிலுள்ள அந்த மருத்துவமனையில், கணபதியை அனுமதிருந்தார்கள். முதல் நாள் அவரை அட்மிட் செய்ய மட்டுமே மற்றவர்கள் வந்தனர். அதன் பின் கணபதியைப் பரிசோதித்த மருத்துவர்கள், இன்னும் மூன்று நாள்கள் கழித்து மருந்து, மாத்திரைகளால் அவருடைய உடல் நிலையை சீர்ப்படுத்திய பின்பே, அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று கூறி விட்டனர். எனவே தர்ஷனுடன், இந்திராணியை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
இந்திராணி லேசில் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, தானும் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறினார். ஆனால் இன்னும் மூன்று நாளுக்குப் பிறகு தான் அறுவை சிகிச்சை, அதன் பிறகும் குறைந்தது ஒரு வாரம் கழித்து தான், கணபதியை வீட்டிற்கு அனுப்புவார்கள். அப்படி இருக்கையில் இந்த வயதில் அவரை, என்ன தான் அது வசதியான மருத்துவமனையாக இருந்தாலும், எப்படி அங்கே தங்க வைப்பது?. எனவே கட்டயப்படுத்தி அவரை தர்ஷனுடன் திருநெல்வேலி அனுப்பி வைத்து விட்டனர். அதன் பின் மருத்துவமனையில் அரிமா, நாச்சியப்பன், விஷ்ணு ஆகியோர் கணபதியுடன் இருந்தார்கள்.
அரிமா விஷ்ணுவையும் போகத்தான் கூறினான். ஆனால் விஷ்ணுவுக்கு சொந்த ஊரே மதுரை என்பதால், இவர்களுக்கு வீட்டிலிருந்து எதுவும் தேவையென்றால், எடுக்க மட்டுமே அவன் சென்று வந்தான். மற்றபடி அவர்களுடன் மருத்துவமனையிலேயே தான் இருந்தான்.
காயத்ரியும் மறுநாள் தன் மகளுடன் புகுந்த வீட்டிற்கு வந்து விட்டாள். தினமும் ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து பார்த்துக் கொண்டாள். தினமும் இருவேளை உணவாவது நாச்சியப்பனுக்கும், அரிமாவுக்கும் காயத்ரியின் வீட்டிலிருந்து வந்து விடும். கணபதிக்கு பத்திய உணவு மருத்துவமனையிலிருந்து அவர்களே தயாரித்துக் கொடுப்பார்கள்.
வியாழனன்று கணபதிக்கு அறுவை சிகிச்சை என்று கூறி இருந்தார்கள். அரிமா நேரம் கிடைக்கும் போதெல்லாம் விதுவிடம் போனில் பேசிக் கொண்டிருந்தான்.
அன்று அவன் போன் செய்த போது விதுஷி "நான் தாத்தாவின், அறுவை சிகிச்சை நாள் அன்று வரட்டுமா'' என்றாள்.
"வேண்டாம் விது. இங்கே இத்தனை பேர் இருக்கிறோமே. போதும். பாட்டியையும், அம்மாவையுமே வர வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்பா" என்றான் அரிமா.
"ஏன் அரி? நீங்கள் என்ன சொன்னாலும் என் அம்மாவும், அப்பாவும் வருவார்கள் என்று தான் நினைக்கிறேன்" என்றாள் விதுஷி யோசனையாக.
"அவர்கள் வரட்டும். நான் மாமாவிடம் பேசிக் கொள்கிறேன். நீ வர வேண்டாம்" என்றான் அரிமா முடிவாக.
"ஏன் அரி? நான் வந்தால் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று தான் கேட்டேன். என்னை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?" என்றாள் விதுஷி மனத் தாங்கலுடன்.
"அடியே! என்ன பேசுகிறாய் நீ? நீ என் குடும்பத்தில் இருப்பவள். உன் அம்மாவும், அப்பாவும் நம் குடும்பத்திற்கு சம்பந்திகள். அதனால் உறவினர் என்ற முறையில் அவர்கள் வரட்டும். நீயும் நானும் வேறு வேறு அல்ல. அதனால் தான் நான் இருப்பதால், உன்னை வர வேண்டாம் என்கிறேன். தாத்தா, திருநெல்வேலி வந்ததும் அவரைக் கவனிக்கும் பொறுப்பை நீயே எடுத்துக் கொள். சரி தானா?" என்று விளக்கமாகக் கூறினான்.
"ம். சரிங்க. சாப்பீட்டீர்களா?'' என்றாள் விதுஷி இப்போது தெளிவான மனதுடன்.
"சாப்பிட்டேன் மா. உனக்கு நேரம் போகிறதா?" என்று அவளை விசாரித்தான்.
"ம்ம். டிவி, மொபைல், சின்ன சின்ன சமையல் என்று போகிறது" என்றாள் சலிப்பாக.
அதன் பிறகு அர்த்தமற்ற பேச்சுகள் அவர்களுக்குள் நீண்டது. இருவரின் முதல் பிரிவு இரண்டு பேரையுமே பாதித்தது.
அவள் போனை வைத்த நேரத்தில், கீதா விதுவின் அறைக்கு வந்தார். அவர் முகமே சரியில்லை, சோகமாக இருந்தார்.
"என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?" என்று விசாரித்தாள் விது.
"உன் பெரியப்பா வீட்டிற்குப் போய் இருந்தேன். கீர்த்தி இன்றைக்குத் தான், நாங்கள் அன்று மருத்துவமனை வரும் முன்பு நடந்த விஷயத்தைக் கூறினாள்" என்றார் கீதா மகளை குற்றம் சாட்டும் பார்வையுடன்.
"அக்கா என்ன சொன்னாள்?" என்றாள் விதுஷி தயக்கமாக.
"அவள் சொன்னது இருக்கட்டும். நீ முதலில் சொல். உன் புகுந்த வீட்டில் என்ன நடக்கிறது? ஏன் அந்தம்மா உன்னைப் பேசுகிறது? ராசி இல்லாதவள் என்றதாம்? கேட்க ஆளில்லை என்று நினைக்கிறதா அந்தக் கிழவி? நம்மிடம் அவர்கள் அளவு பணம் தான் இல்லை. மற்றபடி எந்த விதத்திலும் நாம் தரம் இறங்கி விடவில்லை விது. நீ இப்போது அங்கே முதல் நாளிலிருந்து நடந்ததைக் கூற வேண்டும்" என்றார் அதிகாரமாக.
விதுஷிக்கு நெஞ்சம் தளும்பியது. என்னதான் அரிமாவும், நாச்சியப்பனும் அவளுக்காகப் பேசினாலும், பிறந்த வீட்டு ஆதரவு கிடைத்தது அவளுக்கு மனதில் பெரும்பலம் வந்தது போல் இருந்தது.
எத்தனையோ குடும்பத்தில், பெண் வீட்டினர் எவ்வளவு வசதியாக இருந்தாலும், மணமான பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் ஒரு பிரச்சினை என்றால், நாங்கள் எப்போதும் உனக்காக இருப்போம் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதில்லை. என்ன என்றாலும், நீ தான் பொறுத்துப் போக வேண்டும். திருமணம் செய்ததுடன் எங்கள் கடமை முடிந்தது என்பது போல் கைகழுவி விடுகிறார்கள். இத்தனைக்கும் தவறு புகுந்த வீட்டினர் மீது இருந்தாலும், தங்கள் பெண்ணுக்காகப் பேச, இன்றும் பல பெற்றோர் முன் வருவதில்லை என்பதே கசப்பான உண்மை. அந்த வகையில், விதுஷி எவ்வளவோ புண்ணியம் செய்திருக்கிறாள் என்றே கூற வேண்டும்.
அவள் கீதாவிடம் எதையும் மறைக்க நினைக்கவில்லை. அதனால் முதல் நாளில் இருந்து இந்திராணி, சரஸ்வதி, அவர் மகள்கள் ஆகியோர் அவளிடம் ஒதுக்கம் காட்டியது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் அவளை அவமதித்தது, அன்று மருத்துவமனையில் இந்திராணி பேசியது எல்லாம் சொல்லி விட்டாள். அது மட்டுமின்றி அந்த வீட்டில் அவளுக்குத் துணையாக இருக்கும் அவள் கணவன், மாமனார், மாமியார், கணபதி தாத்தா ஆகியோர் அவளுக்கு ஒன்று என்றால் அவளுக்காக நின்றது, கணபதி அவளுக்காகச் செய்தது, தொழிலில் அனுமதித்தது என்று எல்லாமே கூறினாள்.
இருந்தும் கீதாவின் மனம் சமாதானம் அடையவில்லை. "விது, என்ன தான் உனக்கு இத்தனை பேர் ஆறுதலாக இருந்தாலும், எப்போதும் உன்னிடம் எப்படி பிரச்சினை செய்யலாம் என்று இருக்கும் நபர்களுடன், எப்படி நீ ஒரே வீட்டில் இருப்பாய்? மாப்பிள்ளை உனக்கு ஆதரவாக இருந்தாலும், உன்னை நினைத்துக் கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கிறது" என்றார் கீதா.
"அம்மா, நான் எப்போதும் அவர்களைப் பார்த்துக் கொண்டு, வீட்டில் இருக்கப் போவதில்லை. அவர்களுக்குச் சமைத்துப் போட்டு சேவகம் செய்யப் போவதும் இல்லை. என்னைப் பற்றிய கவலையை விடுங்கள். என்னை அரி நன்றாகப் பார்த்துக் கொள்வார்" என்றாள் லேசான வெட்கத்தோடு.
கீதாவின் முகம் தெளிந்தது. "சரி விது. உனக்கு என்ன பிரச்சினை என்றாலும் அம்மாவிடம் கண்டிப்பாக சொல்ல வேண்டும். சரியா?" என்றார் அவள் தலையை மென்மையாக வருடியபடி. அவர் மனதுக்குள் இதைப்பற்றி அரிமா, லட்சுமி ஆகியோரிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.
"சரிம்மா. நிச்சயம் சொல்கிறேன்" என்று உறுதி அளித்தாள் விதுஷி.
கணபதிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்திராணி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை அறுவை சிகிச்சையன்று அன்று காரில் அழைத்து வந்து, மறுநாள் கணபதி கண் விழித்ததும், திருநெல்வேலி அனுப்பி வைத்துவிட்டனர். விதுஷி வீட்டினரும், அன்று மதுரை வந்து கணபதியைப் பார்த்துச் சென்றனர்.
அடுத்த வாரத்தில் சனிக்கிழமை அன்று கணபதியை மருத்துவனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். சனியன்று மாலை வேளையில் கணபதி, அரிமா, நாச்சியப்பன் ஆகியோர் மீண்டும் கணபதி இல்லத்திற்குள் பிரவேசித்தனர். லட்சுமி ஆரத்தி எடுத்து மாமனாரை வரவேற்றார். கண்ணீரும், புன்னகையுமாக சில நிமிடங்கள் கழிந்தன.
தற்காலிக பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டு தான் கணபதி அனுப்பி வைக்கப் பட்டிருந்தார். அதை அகற்றும் வரை, அவரைப் பிறந்த குழந்தையைப் போல் தான், பார்த்துக் கொள்ள வேண்டும். பேஸ்மேக்கர் அகற்றும் வரை அவர் பேசவும் கூடாது.
இருந்தும் வந்த உடன் எல்லோரையும் பார்த்து விட்டு, விதுஷியைக் காணாமல், அரிமாவிடம் "பேத்தி எங்கே?" என்றார் செய்கையில்.
அரிமா "அவள் தூத்துக்குடி போய் இருக்கிறாள் தாத்தா. நாளை நான் சென்று அவளை அழைத்து வருகிறேன்" என்றான்.
கணபதியின் முகம் குழப்பத்தைக் காட்டியது. "ஏன் போனாள்?" என்றார் மீண்டும்.
நான் இல்லாத நேரம், என் மனைவியை இங்கே இருக்க விடப் பிடிக்கவில்லை என்றா கூற முடியும்?
"உங்கள் பேத்தி, நான் இல்லாமல் அலுவலகம் செல்லப் பிடிக்கவில்லை என்று விட்டாள் தாத்தா. அதுதான் நான் வந்ததும், சேர்த்து அவளிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம் என்று, விடுமுறை கொடுத்து அனுப்பி விட்டேன்" என்றான் அரிமா விளையாட்டு போல.
கணபதி லேசான சிரிப்புடன் தலை அசைத்துக் கொண்டார். பின்பு அவரை ஓய்வெடுக்க கூறி விட்டு மற்றவர்கள் வெளியேறி விட்டனர். கணபதியைப் பார்த்துக் கொள்ள மருத்துவமனையில் இருந்து ஒரு செவிலியர் வந்திருந்தார்.
அரிமா வந்து சிறிது நேரத்தில் வெற்றி வந்து விட்டான். இத்தனை நாள் தொழிலில் நடந்தது, குடும்பத்தில் நடந்தது என்று நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர்.
"தங்கச்சியை எப்போ கூப்பிட்டு வரப் போற?" என்றான் வெற்றிவேல்.
"பாட்டி அவளைப் பேசியதை நினைத்தால், அவளைக் கூப்பிட்டு வர யோசனையாக இருக்கிறதுடா" என்றான் அரிமா வருத்தமாக.
"அதற்காக என்ன செய்ய முடியும்? நீ தான் அவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்"
"புரிய வைக்க இதில் ஒன்றும் இல்லை வெற்றி. அவர்களுக்கு தன்ஷிகாவை நான் திருமணம் செய்யாதது கோபம். அதன் காரணகர்த்தா விது என்று நினைக்கிறார். இத்தனைக்கும் விதுவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை, இது கட்டாயக் கல்யாணம் என்று வீட்டில் எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும் அவள் மீது வெறுப்பைக் காட்டுவதை, என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான் இப்போது பாட்டி, அத்தை யாரிடமும் பேசுவது கூட இல்லை".
"பேசாமல் இருப்பது போதாது அரி. நான் சொல்வதை நீ தவறாக எடுத்தாலும் பரவாயில்லை. இனியும் விதுவை விருந்தினரை அறையில், மற்றவர்கள் பேச்சைக் கேட்டு இருக்க விடாதே. இருவரும் ஒரு அறையில் இருப்பது தான், அவளை உன் சரிபாதியாக காட்டும். வீட்டில் எல்லா உரிமையும் அவளுக்கு இருக்கிறது என்று, நீ தான் எல்லோருக்கும் உணர்த்த வேண்டும். இன்னும் விருந்தினர் அறையில் இருந்தால், அவளை ஒரு விருந்தாளி மாதிரி தான் மற்றவர்கள் நடத்துவார்கள்" என்றான் வெற்றி காட்டமாகவே.
"சரிடா. ஏற்கனவே விதுவிடம் நாளை வந்து அழைத்து வருவதாகக் கூறி விட்டேன். பார்க்கலாம். ஆனால், யாருக்காகவும் அவளை நான் எப்போதும் வீட்டுக் கொடுக்க மாட்டேன்" என்றான் அரிமா உள்ளத்திலிருந்து.
அதன் பின் சிறிது நேரம் பேசிவிட்டு வெற்றி கிளம்பிச் சென்று விட்டான்.
அரிமா மறுநாள் காலை உணவு முடிந்ததும், லட்சுமியிடம் மட்டும் தூத்துக்குடி சென்று வருவதாக தனியாக கூறி விட்டு, மனைவியை அழைத்து வரச் சென்று விட்டான்.
இவன் சென்ற போது ஹாலிலேயே இவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் விதுஷிகா. கீதா தர்ஷன் வீட்டிற்குச் சென்றிருந்தார். பூபதிராஜ் மார்க்கெட் சென்றிருந்தார்.
மெரூன் நிற பிளைன் காட்டன் சேலையில், டிசைனர் பிளவுஸ் அணிந்து, தாலிக்கொடியோடு, சிறிய டாலர் வைத்த கழுத்தை ஒட்டிய சிறு செயின், தோளைத் தொட்டவாறு ஜாதிமல்லி வைத்து முகமெல்லாம் அவனுக்கான ஏக்கமும், சிரிப்புமாக வரவேற்ற மனைவியை அவன் விழிகள் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தது.
விதுஷியின் கண்களும் கணவனை விட்டுப் பிரியவில்லை. நார்மல் ஃபுல்ஹாண்ட் செக்ட் ஷர்ட், பென்சில் கட் ஜீன்ஸ் அணிந்து கம்பீரம் குறையாமல் நின்ற கணவன் அவளுக்கு அத்தனை நிறைவை அளித்தான். இப்போதே அவன் கைகளுக்குள் புகுந்து கொள்ள வேண்டும் போல் அவள் மனம் தவித்தது. இப்படி அவள் மாறுவாள் என்று அவளே எதிர் பார்த்திருக்கவில்லை. அந்த அளவில் அரிமா மேல் அவள் பித்தாகிப் போய் இருந்தாள்
"அத்தை மாமா எங்கே?" என்று கேட்டான் அரிமா, வீட்டைக் கண்களால் துழாவியவாறு.
"அம்மா அத்தை வீட்டில், அப்பா மார்க்கெட்" என்றாள் விதுஷி.
அடுத்த நொடி அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டு அவள் அறைக்குச் சென்று விட்டான் அரிமா. யார் யாரை அதிகம் தேடினார்கள் என்று, அவர்களுக்குள் போட்டி வைத்துக் கொண்டனர். அந்த போட்டி முடிவில் இருவருமே வெற்றி பெற்றுக் கொண்டதாக, அவர்களுக்கு அவர்களே அறிவித்தும் கொண்டார்கள்.
- தொடரும்.....